Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 21, 2024
Please specify the group
Home > Featured > ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி — Rightmantra Prayer Club

ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி — Rightmantra Prayer Club

print
ரு ஊரில் சதாசிவம் என்கிற ஒரு மாணவர் பாடசாலை ஒன்றில் வேத சாஸ்திரம் பயின்று வந்தார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை உபசரிப்பதில் அவர் தாய் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அவருக்கு அன்று உணவு கிடைக்க தாமதமானது. அவருக்கோ அகோரப் பசி.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் பசி பொறுக்க முடியாமல் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் அப்படியே சந்நியாசியாகப் போய்விட்டார்.

ஞானம் அவருக்கு ஒரு கணத்தில் வந்தது. பின்னாளில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்வார். நம்மைப் போலதானே எல்லாருக்கும் சந்தேகமிருக்கும் என்றெண்ணிய அவர், எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லித் தருவார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள திருப்புவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம்
மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள திருப்புவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம்

அவரது அக்கறையைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் அனைவரும் குருநாதரிடம் போய், “குருநாதா, இந்த சதாசிவம் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கிறார். சற்றுநேரமும் வாய் ஓய்வதில்லை. அவரை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்கவேண்டும்” என்றார்கள்.

குருநாதருக்கு வருத்தம். ரொம்பவும் நல்ல பையன் சதாசிவம். அவனைப் பற்றி குறைகூறுகிறார்களே என்று சற்று கோபமும் வந்தது. சதாசிவத்தைக் கூப்பிட்டார். “ஏண்டா சதாசிவம்… தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கியாமே, உன் வாய் மூடாதா?” என்றார்.

அன்றைக்கு வாயை மூடியவர்தான்; இறுதிவரை அவர் வாயே திறக்கவில்லை. மௌனியாகிவிட்டார்.

குருநாதரின் உத்தரவையேற்று சதாசிவம் வாழ்நாள் முடியும்வரை பேசவேயில்லை. குருநாதரே அவரிடம், “உன் பெருமை தெரியாமல் பேசிவிட்டேன். வாய் திறந்து பேசு” எனக் கூறினார். ஆனால் அவர் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

சதாசிவம் சுவாமிகள் நாளாக ஆக ஒவ்வொன்றாகத் துறந்துவந்தார். பேச்சைத் துறந்தார். பின் ஒருநாள் உடையைத் துறந்து திகம்பரராகிவிட்டார். கடைசியில் உணவையும் துறந்தார். நாளைக்கு ஒருவேளைதான் உணவு. யார் வீட்டு வாசலிலாவது போய் நிற்பார். அவர் நிற்பதைப் பார்த்து யாராவது உணவிட்டால் மட்டும் சாப்பிடுவார்.

அதுவும் மூன்று கவளம் உணவு மட்டுமே.

அத்தகைய சதாசிவம் சுவாமிகளுக்கு ஒரு சந்தேகம். நமக்கு அடுத்த பிறவி உண்டா, இல்லையா- இதுதான் அவரது சந்தேகம். யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரைவிட பெரிய ஞானிகளும் அங்கில்லை. தன் கேள்விக்கு விடைதெரியாமல் கடவுளிடம் முறையிட்டார்.

ஒருநாள் அவர் ஒரு வீதிவழியாக வந்தார். அந்த வீதியில் அவர் பெயருள்ள குடும்பஸ்தர்- அதாவது சதாசிவம் என்பவர் இருந்தார். அவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். சதாசிவத்தை தூரத்திலேயே பார்த்த அவர் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் “”அம்மா, சதாசிவம் தெருமுனை திரும்பிட்டது. ஆகாரம் கொண்டா”.

அவரது மனைவியும் வெள்ளிக் கும்பாவில் பச்சரிசி சோறிட்டு, பருப்பு ஊற்றி, நெய்யிட்டுப் பிசைந்து உருட்டிக்கொண்டு வாசல் வந்தாள். அன்றைக்கு சதாசிவம் அவள் வீட்டு வாசலிலேயே வந்துநின்றார். அவள் அவரை வணங்கி, உணவுருண்டையை அவர் கையில் எடுத்துவைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று….

வழக்கம்போல மூன்றாவது கவளத்துடன் கையைத் துடைக்கப்போனார். சாப்பிட்டபின் கையை அவர் தன்மேலேயே துடைத்துக்கொள்வதுதான் வழக்கம். அந்தப் பெண்மணி, “நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுறீங்க. அதுவும் என்னைக்கு, எங்க சாப்பிடுறீங்களோ தெரியாது. இன்னைக்கு எனக்காக இன்னுமொரு உருண்டை சாப்பிடுங்க” என்றபடி இன்னொரு கவளம் சோற்றை வைத்தாள். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.

அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் கணவன், “டேய் சதாசிவம், உனக்கு அடுத்த ஜென்மம் இருக்கு, போடா” என்று சொன்னார்.

சந்நியாசி சதாசிவம் அவரைப் பார்த்தார். “என்னடா பார்க்கிற? ஏன் இன்னொரு ஜென்மானுதானே? உன் கணக்கு மூணுதானே. முடிஞ்சதும் கிளம்பிப் போகவேண்டியதுதானே. அவளுக்காக ஒரு உருண்டைச் சோறு ஏன் வாங்கிச் சாப்பிட்ட? இந்த ஒரு உருண்டைக்கு அவளுக்கு நீ கணக்கு சொல்லணும். அதனால உனக்கு இன்னொரு ஜென்மா இருக்குடா” என்றார்.

அனைத்தையும் துறந்த ஒரு திகம்பர சந்நியாசி பிச்சையில் கூடுதலாக பெற்ற ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

– திருமதி.தேசமங்கையர்க்கரசி ஒரு சொற்பொழிவில் கூறியது.

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைப் பணியாளர் திரு.கீர்த்தி அவர்கள்.

பத்தொன்பது வயதாகும் திரு.கீர்த்தி, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ- சாலையில் ஒரு VOLUNTEER. (பாலாஜி, திருவேங்கடம், ஆகியோர் மற்றவர்கள்). அங்கு கோ-சாலையை பார்த்துக்கொள்ளும் பாலாஜி அவர்களுக்கு கோ-சாலை பரமாரிப்பில் உதவியாக இருக்கிறார் இவர். பசுக்களை குளிப்பாட்டுவது, கொட்டகையை கழுவிவிடுவது, சாணத்தை அப்புறப்படுத்துவது, தீவனம் வைப்பது என்று பல சேவைகளை இவர் அங்கு செய்துவருகிறார். தனது வருவாய்க்காக ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றும் இவர், கடந்த ஒரு வருடமாக தனது பணி நேரம் போக இந்த சேவையை இங்கு செய்துவருகிறார். இதற்காக இவர் ஊதியம் எதுவும் பெறுவதில்லை.

“எப்படிப்பா உன்னால பணம் எதுவும் வாங்கிக்காம வேலை செய்ய முடியுது?” என்று கேட்டோம்.

“பாலாஜி அண்ணனை சின்ன வயசுலே இருந்து தெரியும். அவர் கேட்டுக்கிட்டாருங்கிறதுக்காக செய்றேன். தவிர இதுவும் ஒரு புண்ணிய காரியம் தானே?” என்கிறார் தெளிவாக.

பேசுவதற்கு மிகவும் கூச்சப்படும் கீர்த்தியிடம் வார்த்தைகளை பெறுவதற்கு பதில் பேசாமல் நாம் போய் புலிப்பால் கறந்து வந்துவிடலாம். ம்ம்ம்ம்….

Keerthi

அவர் தான் செய்யும் சேவையை எந்தளவு மனநிறைவுடன் லயித்து செய்கிறார் என்பது அவரது உடைகளையும் நெற்றியில் கமழும் திருநீறையும் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். (நேற்று அன்னாபிஷேக தரிசனத்திற்கு நாம் சென்றிருந்தபோது, எடுத்த படம் இது!)

பான்பராக் வாயும், கறை படிந்த பற்களும், மதுக்கடை வாசலுமே கதி என்று இந்த வயதில் உள்ள பல இளைஞர்கள் தங்கள் ஒய்வு நேரத்தை கழிக்கையில், பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் கோ-சேவை செய்யும் திரு.கீர்த்தி போற்றுதலுக்குரியவர்.

ஒரு அரைமணிநேரம் கூடுதலாக கிடைத்தால் முட்டுச் சந்தில் அல்லது முகநூலில் வெட்டிப்பேச்சு, கேளிக்கை, அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் ஆடும் டி.வி.ரியாலிட்டி ஷோ என அற்ப விஷயங்களில் லயிக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க… ஒரு மணிநேரம் கூடுதலாக கிடைத்தால் அதில் ஏதாவது சம்பாதிக்க முடியுமா என்று யோசித்து ஒய்வு நேரத்தை கூட, உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு சம்பாதிக்க ஓடி பிறகு அதை மருத்துவரிடம் கொண்டு போய் கொட்டும் கூட்டம் மற்றொருபுறம் இருக்க… இது தான் இங்கு தினசரி காட்சி. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் கீர்த்தி எங்கே? நாம் எங்கே?

கடந்த தீபாவளியையொட்டி இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு வஸ்திரங்களும் இனிப்புக்களும் நம் தளம் சார்பாக அளித்தபோது கீர்த்தியும் அதில் பலனடைந்தர் என்று உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். (தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய பதிவு இன்னும் ஒரு பாகம் பாக்கியிருக்கிறது. அதில் இது குறித்த தகவல் விரிவாக இடம்பெறும்!)

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அது பற்றி புரியாமல் தயங்கினார். பின்னர் விரிவாக எடுத்துக்கூறினோம். யாருக்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அலைபேசியில் சொல்வதாக உறுதியளித்திருக்கிறோம். இந்த வார பிரார்த்தனையை கோ-சாலையிலேயே செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும் இதுவரை பிரார்த்தனைகளுக்கு கோரிக்கை சமர்பித்துள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். நிச்சயம் பிரார்த்தனை செய்வதாக உறுதியளித்திருக்கிறார். திரு.கீர்த்தி அவர்களுக்கு நம் நன்றி!

(ஏற்கனவே திரு. பாலாஜியும் மற்றொரு கோ-சாலை பணியாளர் திரு.திருவேங்கடமும் நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்றது உங்களுக்கு தெரிந்திருக்கும்!!)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் !

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் என் வணக்கம்.

பெருந்துறையில் உள்ள என் உறவினர் சண்முகநாதன் இந்த பிரார்த்தனை கிளப் பற்றி கூறி என் வேண்டுகோளை இங்கு சமர்பிக்குமாறு கூறினார்.

என் மகன் கே. சுப்ரமணிய தீபக் (26) என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். வேறு ஒரு மிகப் பெரிய நிறுவனத்திற்கு அப்ளை செய்து, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் செலக்ட் ஆகிவிட்டான். ஆனால், பணி நியமன ஆணை இன்னும் அவனுக்கு கிடைக்கவில்லை. இதோ அதோ என்று மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. எத்தனை நாள் தான் காத்திருப்பது. அவனுக்கு விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கவேண்டும். அவனுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டும்.

செண்பகப் பிரேம் & காளியப்பன்
கோவில்பட்டி

==================================================================

மனைவிக்கு விஷ காய்ச்சல் நீங்க வேண்டும்!

நம் முகநூல் நண்பர் நெல்லையை சேர்ந்த திரு.ஹாலாஸ்ய சுந்தரம் அவர்கள். பல உபயோகமான தகவல்களை முகநூலில் பதிந்து வருபவர். மஹா பெரியவா அவர்களின் தீவிர பக்தர். சென்ற மாதம் இவரது முயற்சியின் பேரில் மாங்காட்டில் உள்ள பாடசாலைக்கு பொருளாதார உதவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவருடைய மனைவி திருமதி. சுஜாதா (36) அவர்கள் கடந்த சில நாட்களாக VIRAL FEVER & WHEEZING ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். முறைப்படி சிகிச்சை எடுத்து வரும் அவர் வெகு சீக்கிரம் பரிபூரண குணம் பெற்று வீட்டுப் பணிகளில் எப்போதும் போல சுறுசுறுப்பாக ஈடுபட, இறைவனை பிரார்த்திப்போம்..

– சுந்தர், ரைட்மந்த்ரா.காம்

==================================================================

நண்பர் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் தன் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தி அவசரம் கருதி சேர்க்கப்பட்டுள்ளது.

அன்புடையீர்,

நமஸ்காரம்.

ஒரு சில நிமிடங்களுக்கு முன் ஒரு சகோதரி போனில் (சென்னையில் இருந்துதான்) பேசினார். மகா பெரியவா பக்தரான அந்த சகோதரி, கண்ணீருடன் பேசியதன் சாராம்சம்…

ஒன்பது வயதாகும் அவரது மகளுக்கு கடந்த சில காலமாகவே ஜுரம் உள்ளிட்ட உபத்திரவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் உரிய மருத்துவத் தீர்வு கிடைக்காமல் சிரமப்படுவதாகத் தெரிவித்தார். நாளை (8.11.2014) சனிக்கிழமை அன்று ஒரு முக்கிய பரிசோதனைக்காக மகளைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனை செல்ல இருப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

‘‘எனது மகளுக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை என்ற நல்ல செய்தி நாளைய மருத்துவப் பரிசோதனைக்குப் பின் என் காதுக்கு வந்து சேர வேண்டும்… மகா பெரியவாளிடம் நான் பிரார்த்தித்துக் கொண்டேன். நீங்களும் இதற்காகப் பிரார்த்தியுங்கள்’’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.

என் பிரார்த்தனையோடு உங்களது பிரார்த்தனையும் சேர்ந்தால், ஒன்பது வயது மகள் இன்னும் உற்சாகம் அடைவாளே!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

==================================================================

பொது பிரார்த்தனை

விஷம் போல ஏறும் விலைவாசி!

அத்தியாவசியப் பொருளான பால் விலை தமிழகத்தில் ஒரேயடியாக திடீரென பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, நடுத்தர ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு பால் விலை உயர்த்தியதையடுத்து, ஏற்கனவே நன்கு லாபம் சம்பாதித்து வந்த எது தான் சாக்கு என்று காத்திருந்த தனியார் பால் உற்பத்தியாளர்களும் பால் விலையை உயர்த்திவிட்டார்கள். இதையடுத்து டீக்கடைகளில், ஓட்டல்களில் காபி, டீ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பசிக்கும்போது காபி, டீ குடித்தே பசியாறும் பாட்டாளிகளும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பலர் உண்டு. இங்கு தெருவுக்கு நான்கு டீக்கடைகள் இல்லையெனில் ஏற்படக்கூடிய உணவுப் பஞ்சத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அவர்களால விலையேற்றத்தை தாங்க முடியுமா?

யாருக்கும் தெரியாமல் பட்ஜெட்டில் மிச்சம் பிடித்து பிள்ளைகளோ கணவன்மார்களோ ஆபத்துக்கு பணமின்றி தவிக்கும் காலத்தில் “என் கிட்டே இருக்கு… நான் தர்றேன் கவலைப்படாதீங்க…!” என்று அதை அவர்களுக்கு தந்து இன்ப அதிர்ச்சி அளிக்கும் தாய்மார்கள் அநேகம் பேர் இங்கு உண்டு. அவர்கள் இனி என்ன செய்வார்கள்?

அரசியல் ரீதியிலான கருத்துக்களை நம் தளத்தில் வெளியிடுவதை நாம் கூடுமானவரையில் தவிர்த்து வருகிறோம். இல்லையெனில் பிரித்து மேய்ந்துவிடுவோம்.

இந்த நாட்டையும் மக்களையும் அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படி ஒரு சூழ்நிலையில் நாம் என்ன செய்யமுடியும்?

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்

என்று சூளுரைப்போம்!

நம் நாட்டில் பசுமை தழைக்கவும், கால்நடை வளங்கள் பெருகவும், விலைவாசியானது கட்டுக்குள் இருக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகோவில்பட்டியை சேர்ந்த திருமதி.செண்பகப் பிரேம் & காளியப்பன் தம்பதிகளின் மகன் திரு.சுப்ரமணிய தீபக் அவர்களுக்கு அவர் விண்ணப்பித்திருந்த நிறுவனத்திலிருந்து பணி நியமன ஆணை உடனே  கிடைக்கவும், அக்குடும்பம் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், நெல்லையை சேர்ந்த நண்பர் திரு.ஹாலாஸ்ய சுந்தரம் அவர்களின் இல்லத்தரசி திருமதி.சுஜாதா அவர்கள் வைரஸ் காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பிலிருந்து விடுபட்டு பரிபூரண நலம் பெறவும், பெயர் தெரியாத அந்த சகோதரியின் மகள் எந்த வித நோயும் குறையும் இல்லாமல் பரிபூரண குணம் பெறவும் பிரார்த்திப்போம். மேலும் விஷம் போல ஏறிவரும் விலைவாசி கட்டுக்குள் இருக்கவும், பசுமை  செழிக்கவும், நாட்டில் கால்நடை வளம் பெருகவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் கோ-சாலைப் பணியாளர் திரு.கீர்த்தி அவர்கள் நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 9, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : விதி முடக்கிபோட்டுவிட்டபோதும் ஒன் மேன் ஆர்மியாக ஜெயித்துக் காட்டியிருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி சூரியா அவர்கள்.

[END]

13 thoughts on “ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி — Rightmantra Prayer Club

 1. நாம் இந்த ஜன்மத்தில் பட்ட கடனை அடுத்த ஜன்மம் எடுத்தாலும் அடைக்க வேண்டும் என்பதை இந்த கதை மிகவும் அழகாக உணர்த்தியது.

  கோவில் கோபுரம் மிக அருமை. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

  இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு கீர்த்திக்கு என் வாழ்த்துக்கள். கோ சேவை செய்யும் அவருக்கு இறைவன் வாழ்வில் மேலும் மேலும் உயர அருள் புரிவார்

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்காகவும் , விலைவாசி கட்டுக்குள் இருக்கவும் பிரார்த்தனை செய்வோம்.

  லோக சமஸ்தா சுகினோ பவந்து
  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா

 2. பதிவு அருமை.
  கோவில்பட்டியை சேர்ந்த திருமதி.செண்பகப் பிரேம் & காளியப்பன் தம்பதிகளின் மகன் திரு.சுப்ரமணிய தீபக் அவர்களுக்கு அவர் விண்ணப்பித்திருந்த நிறுவனத்திலிருந்து பணி நியமன ஆணை உடனே கிடைக்கவும், அக்குடும்பம் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், நெல்லையை சேர்ந்த நண்பர் திரு.ஹாலஸ்ய சுந்தரம் அவர்களின் இல்லத்தரசி திருமதி.சுஜாதா அவர்கள் வைரஸ் காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பிலிருந்து விடுபட்டு பரிபூரண நலம் பெறவும், விஷம் போல ஏறிவரும் விலைவாசி கட்டுக்குள் இருக்கவும், பசுமை செழிக்கவும், நாட்டில் கால்நடை வளம் பெருகவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் கோ-சாலைப் பணியாளர் திரு.கீர்த்தி அவர்கள் நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.

 3. அற்புதமான கதை. அபாரமான கருத்து. பதிவில் கூறப்பட்டுள்ளது போல் ஒரு உருண்டை சோற்றுக்கே ஒரு பிறவி என்றால்… நமக்கெல்லாம்…?? நினைத்தாலே தலை சுற்றுகிறது.

  பணமே பிரதானம் என்று அலையும் உலகில் கீர்த்தி அவர்களின் சேவை நிச்சயம் பாராட்டுக்குரியது தான். பசுவுடன் நிற்கும் அவர் படமே ஆயிரம் கதை சொல்லும். பார்த்தாலே இனம் புரியாத ஒரு அமைதி ஏற்படுகிறது. நம்பிக்கையும் ஏற்படுகிறது.

  இந்த வாரம் பிரார்த்தனைக்கு விண்ணப்பித்துள்ள அனைவர் வேண்டுதலும் நிறைவேறிட பிரார்த்திப்போம்.

  பால் விலை உயர்வு உண்மையில் எங்களைப் போன்றவர்களுக்கு பேரிடிதான். எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை..

  நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இறைவன் தான் நம்மை காப்பாற்றவேண்டும்.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

 4. கதை உணர்த்துவது – “போதும் என்ற மனமே பொன் போன்ற மனது”.

  அருமை அருமை.

 5. ஒரு கவளம் அதிகம் உண்டத்திற்கே ஒரு ஜென்மம் என்றால், எனக்கு இன்னமுமெத்தனை ஜெமங்களோ என நினைத்தால் மலைப்பாக உள்ளது. இவ்வாரப் பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் நன்முறையில் நிறைவேற நானும் மகாபெரியவா பொற்பாதத்தை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு கீர்த்திக்கு என் வாழ்த்துக்கள். கோ சேவை செய்யும் அவருக்கு இறைவன் வாழ்வில் மேலும் மேலும் உயர அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.

 6. இந்த கதையை எங்களது குருநாதரும் கூறக் கேட்டிருக்கிறேன் …இந்த மாதிரி கதையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் … நெரூர் சதாசிவ சுவாமிகள்.. குடும்பஸ்தர் ஸ்ரீதர் அய்யா வாள் என்று கூறியதாக நினைவு .

  நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
  சி .இராஜேந்திரன் of http://www.voiceofvalluvar.org ,

 7. பிரார்த்தனையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கோரிக்கைகளும் வெகு விரைவில் நிறைவேறி எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்
  என பிரார்த்திப்போம் ………….
  ஓம் சாய் ராம்

 8. வணக்கம்……….

  கோபுர தரிசனம் செய்வித்து கோடி புண்ணியம் பெற்று கொடுத்துள்ளீர்கள்………..

  குருவருளாலும், திருவருளாலும் அனைவரும் நலம் வாழ பிரார்த்திப்போம்………..

 9. லேட்டாக தான் இந்த பிரார்த்தனை பதிவை பார்த்தேன். பிரார்த்தனை செய்து கொண்டேன். அனைவரும் வாழ்க வளமுடன்.

 10. எல்லோரும் இன்புற்றுரிப்பதுவே அல்லாமல் யமொன்றுமஅறியோம் paraparame.

 11. வாரியார் சுவாமிகள் முன்பே கூறிய கதை இது . நான் ஒளி நாடாவில் கேட்டிருக்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *