இணையத்தில் தேடியதில் திருப்திகரமாக எந்த படமும் கிடைக்கவில்லை. சற்று சீக்கிரம் கிளம்பினால் நாமே குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு அப்படியே புகைப்படமும் எடுத்துவிடலாமே என்று தோன்ற உடனே கோயம்பேடு புறப்பட்டுவிட்டோம். ஃபோட்டோ எடுத்தது போலவும் ஆச்சு… அப்படியே நமது ஆலய தரிசன பதிவுக்கு செய்தி + படங்கள் தயார் செய்தது போலவும் ஆச்சு.
நமது பதிவுகளில் கூடுமானவரை கோவில் கோபுரங்களின் படங்கள் இடம்பெற செய்வது ஏன் தெரியுமா?
எத்தனையோ பிரச்சனைகளில் சிக்கி உழன்று ஆறுதலுக்காக இங்கு வருபவர்கள் கோபுரத்தின் படங்களை பார்க்கும்போது உடனடி பலன் பெறுவார்கள் அல்லவா?
ஏனெனில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு தூரத்தில் நேரே இருக்கிறது கோயில். கோவிலின் வெகு அருகே வைகுண்டவாச பெருமாள் கோயில். சைவமும் வைணவமும் ஒன்றே என்பது போன்ற ஒரு தோற்றம் பார்க்க கண்கொள்ளா காட்சி.
கோவிலின் கம்பீரமான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ராஜகோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிடுகிறோம்.
தூண்களில் ராமாயணக் காட்சிகள்!
ஆலயத்துக்கு முன் உள்ள மண்டபத் தூண்களில் ராமாயணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார். சமீப காலமாக ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு இங்கு பிரபலம் ஆகியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் அவரை வழிபடுவதற்குக் கூட்டம் அதிகமாகக் கூடுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.
மூக்கணாங்கயிறுடன் நந்திதேவர்
கொடிமரம். பலிபீடம். நான்கு கால் மண்டபத்தில் நந்திதேவர். ஒரு முறை சித்தம் கலங்கி, சிவபெருமானின் அருளால் தெளிவடைந்த நந்திதேவர், இங்கு கட்டுப்படும் கோலத்தில் மூக்கணாங்கயிறுடன் அமர்ந்திருப்பது சிறப்பு. (அதானே பார்த்தேன்.. தலைவர் இவரையும் படாதபாடு படுத்துவார் போல அடிக்கடி. Mr.நந்தி don’t worry we are with you!!)
குருங்காலீஸ்வரர் சன்னத்க்குள் நுழையும் முன், இடப் பக்கம் காணப்படும் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரையும் வலப்பக்கம் காணப்படும் பாலசுப்ரமணிரையும் வணங்குகிறோம். மேலே பார்த்தால்… அட மஹா பெரியவா!!!! அவர் இல்லாத இடம் தான் எது? மஹா பெரியவாவை பார்த்தவுடன் மனதில் ஒரு இனம் புரியாத பரவசம் + நம்பிக்கை. (உண்மையிலேயே அப்படியா இல்லை நமது கற்பனையா என்று தெரியாது…. மஹா பெரியவாவின் படத்தை பார்த்தவுடன் அவர் ஏதோ நம்முடன் கூடவே இருந்து நம்மை வழிநடத்துவதாக தோன்றியது.)
எத்தனை கடுமையான அலுவல்கள் இருந்தாலும் பரபரப்புக்கிடையே நாம் வாழ்ந்து வந்தாலும், நேரம் இல்லாது தவித்து வந்தாலும், நினைத்தவுடன் நாம் விரும்பும் கோவிலுக்கு செல்ல முடிகிறது என்பது நிச்சயம் திருவருள் தான். அந்த வகையில் நாம் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
இந்த வாழ்க்கையே ஒரு விசித்திரம் தான். பொதுவாக ஆலயங்கள், ஆலய தரிசனங்கள், மற்றும் அதன் மகத்துவம் பற்றி அறியாத/புரியாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழும்போது நேரம் அபரிமிதமாக இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அற்ப விஷயங்களில் மனம் ஊறி லயித்துக்கொண்டிருக்கும். ஆனால் அடிபட்டு, மிதிபட்டு, வஞ்சிக்கப்பட்டு, போவோர் வருவோரிடமெல்லாம் முதுகில் குத்து வாங்கி இறுதியில் ஞானோதயம் ஏற்பட்ட பிறகு, இறைவன் மீது நம் கவனம் திரும்பும். (யாரையுமே நம்பமுடியலே என்ற நிலையில், ஒருவருக்கு ஆறுதலளிப்பது இறைவன் ஒருவன் தானே?) நித்தம் ஒரு கோவிலுக்கு சென்று வர மனம் துடிக்கும். பார்க்கும் கேள்விப்படும் கோவிலுக்கெல்லாம் சென்று வர மனம் ஆசைப்படும். ஆனால் நேரம் தான் இருக்காது.
முந்தைய தினம் மாலை வரை ஏன் மறுநாள் காலை வரை கோயம்பேடு சென்று குறுங்காலீஸ்வரரை தரிசிக்கும் எண்ணம் நமக்கு இல்லை. தாமோதரன் ஐயாவின் முற்றோதல் பற்றி அளிக்க நாம் கணினியில் அமர்ந்தபோது தான், திடீரெனெ குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஐயனை தரிசிக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே செயல்படுத்திவிட்டோம்.
நாம் சென்ற நேரம் கோவிலில் கூட்டம் அதிகமில்லை. துவாரபாலகர்களைக் கடந்து குறுங்காலீஸ்வரரை தரிசிக்கச் செல்கிறோம். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் நான்கு அங்குல உயரம் கொண்ட பாணம். குச- லவர் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அற்புதமான தரிசனம். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, அர்ச்சகரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கோவிலின் சிறப்பு படியும் எந்த வித பரிகாரத்துக்கு இந்த கோவில் விசேஷம் என்பதை பற்றியும் அவர் கூறிய தகவல் தனியே இடம்பெற்றுள்ளது.
சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு, அடுத்து ஆறம் வளர்த்த நாயகியை தரிசிக்க சென்றோம். பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார்.
முன்னதாக அர்ச்சகரிடம் பேசிக்கொண்டிருந்தோம். கோவிலை பற்றியும் இதர விஷயங்கள் பரிகாரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். நமது தளத்தை பற்றி கூறியதும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் முற்றோதலுக்கு வரவிருக்கும் விபரத்தையும் தெரிவித்தோம்.
அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, நம் அனைவரது ஷேமத்திற்காகவும் பிரார்த்தித்துக் கொண்டோம். குங்குமப் பிரசாதம் பெறும்போது நம்முடைய கோரிக்கை ஒன்றை சொன்னோம்.தட்டில் நாம் போட்ட ரூபாயையே நம்மிடம் திருப்பித் தந்து “விளக்கு வாங்கி அம்பாளுக்கு ஏத்துங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றார்.
தட்டில் போட்ட தொகையை நம்மிடமே கொடுத்து விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னது நமக்கு ஒரு புது அனுபவம்.
இத்தலத்தில் அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்ய, காட்சி தருவது சிறப்பம்சம். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். அம்பிகையை வணங்கினால், திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. திருமண வரம் வேண்டுவோர் இந்த அம்பிகையை வணங்கி திருமணத் தடை நீங்கப் பெறலாம்.
அம்பாளை வலம் வந்து மீண்டும் வணங்கிவிட்டு வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்தோம்.
நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை, அவரது சாரதியான அருணன் ஓட்ட, மனைவியருடன் பவனி வருகிறார் சூரியபகவான்.
இதன் வலப் பக்கம் வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர் சந்நிதி. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகன் இவர். எனவே, சந்நிதியின் உள்ளேயே அருணகிரிநாதருக்கும் ஒரு சிலா விக்கிரகம் இருக்கிறது. இதன் அருகில் அண்ணாமலையார் சந்நிதி.
அன்னதானக்கூடம் தனியே இருந்தது. சுமார் 50-100 பேர் வரை தாரளமாக அமர்ந்து சாப்பிடலாம். இங்கு பித்ரு தோஷம் பரிகாரம் செய்பவர்கள்,. அன்னதானத்திர்க்கும் உபயம் செய்து அவர்கள் கைகளால் பரிமாறினால் பித்ருக்கள் மனம் குளிர்வார்கள். திருக்கோவில்களில் அன்னதானம் பெறுபவர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம் ஏற்கனவே ஓரிரு பதிவுகளில் கூறியிருக்கிறோம்.
கோவிலின் அழகில் மெய்மறந்தபடி, “ஓம் நம சிவாய” என்று நொடிக்கொருமுறை உச்சரித்துக்கொண்டே பிரகாரத்தில் நடந்தோம். கோவிலின் நேர் பின்னே பசுகொட்டில் உள்ளது. எத்தனை பசுக்கள் இருக்கிறது என்று தெரியாது. நாம் சென்ற நேரம் ஒரு காளையும் பசுவும் மட்டும் இருந்தன.
பசு, மஞ்சள் குங்குமம் மற்றும் அலங்காரத்துடன் நின்றுகொண்டிருந்ததை பார்த்தபோது, தினசரி இக்கோவிலில் கோ-பூஜை நடைபெறுவது புரிந்தது. பசுவை தொட்டு நமஸ்கரித்துவிட்டு அடுத்து வலது ஓரம் இருந்த கணபதி சன்னதிக்கு வந்து தும்பிக்கையானை வணங்கி விட்டு வெளியே வருகிறோம்.
கோவிலின் அழைகை காணக் காண “இப்படி ஒரு கோவிலை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டோமே..” என்று மனம் அடித்துக்கொண்டது. BETTER LATE THAN NEVER என்று கூறி மனம் ஆறுதல்பட்டது.
================================================================
பித்ரு தோஷம் நீக்கும் அற்புதமான தலம் – பெற்றோர்கள் மறைந்த திதி தெரியாதவர்கள் இங்கு திதி கொடுக்கலாம்
இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப் பணம் செய்யலாம்.
‘‘காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான பெருமை உடையது. ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அதேபோல் அவர் மைந்தர்களான குசன், லவன் இங்கு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டதால், ராமேஸ்வரத்தைத் தரிசித்த புண்ணியமும் இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு உண்டு!’’ என்று கூறுகிறார்கள்.
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
பித்ரு தோஷ பரிகாரம் / தர்ப்பணம் செய்ய விரும்புகிறவர்கள், ஆலயத்திற்கு வந்து குருக்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் அவர்களே அதற்கு ஒரு வேதியரையும் ஏற்பாடு செய்து தருவார்கள். குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்து முடித்துவிட்டு, பின்னர் ஆலயத்திற்கு வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, முடிந்தால் அன்னதானத்திற்கு உபயம் செய்யலாம்.
(கோவிலில் வேதியரை ஏற்பாடு செய்து உதவுவார்கள். அல்லதுநீங்களே அழைத்து வருவதானாலும் சரி!)
இங்கு ஒரு சனிப் பிரதோஷம் = ஒரு கோடி பிரதோஷம்
கோயம்பேடு குறுங்கலீஸ்வரர் கோயிலில் தான் முதன் முதலாக பிரதோஷ வழிபாடு ஆரம்பித்ததாக கூறுவார்கள். ‘‘இந்தத் தலத்தில் பிரதோஷம் விசேஷம். இதை ‘ஆதி பிரதோஷத் தலம்’ என்பார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் இங்குள்ள குறுங்காலீஸ்வரரை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தின வேளையில் தரிசித்த பலன் கிடைக்கும். ஒரு சனிப் பிரதோஷத்தன்று ஈஸ்வரனை தரிசித்தால், ஒரு கோடி பிரதோஷத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுவது உண்டு!’’ என்று கூறப்படுகிறது.இக்கோயில் கி.பி. 10-ம் நூற்றாண்டில் முதல் இராஜராஜன் என்ற ஜெயங்கொண்ட சோழனால் கட்டப்பட்டது.
வெளிப் பிராகாரம் உண்டு. இங்கு நந்தவனம், வில்வ விநாயகர், மடப்பள்ளி, யாக சாலை, தல மரமான பலா போன்றவை காணப்படுகின்றன.
================================================================
தல வரலாறு
ராமபுத்திரரகள் பூஜித்த சிவலிங்கம்!
இராமாயண காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர் என்பதை நாமறிவோம். இராமாயண நிகழ்வோடு தொடர்புடைய பல தலங்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. முதன் முதலில் இராமாயண காவியத்தை இராமன் திருமுன்பே பாடியவர்கள்- அவரின் திருக் குமாரர்களான லவனும் குசனுமே. இராமாயண மகாகாவியத்தை எழுதிய வால்மீகியே சீதாராமனை ஒன்று சேர்த்தார் என்ற பெருமையையும் கொண்டதாக அமைந்து விட்டது.
அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது.
சீதையை விட்டுவிட்டு வருமாறு ராமர் ஆணையிட லட்சுமணர் சீதையை அழைத்துக்கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர் அது சமயம் தர்ப்பை சேகரிக்க வந்தார். சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார்.
வால்மீகி சீதாதேவியைத் தன் ஆசிரமத்தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க்கப்பட்டு, சிறந்த கல்விமான்களாகவும் வில் வித்தையில் சிறந்தும் விளங்கினர். இராமர் தன் தந்தை எனத் தெரியாமலேயே, லவ-குசர் வளர்ந்தனர்.
இந்நேரத்தில் சீதை வெளியேறியதால் அயோத்தியில் பஞ்சம் பீடித்தது. மழையின்றி மக்கள் தவித்தார்கள். எனவே இராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவ-குசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவைக் காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்ததும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.
லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார்.
ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது.
(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார்.
அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர்.
அதற்கு வால்மீகி முனிவர், “சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்” என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர்.
இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு “குசலவபுரீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. இனி இந்த ஆலயத்தின் அமைப்பையும், இறை மூர்த்தங்களின் மகிமைகளையும் காணலாம்.
குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது.
அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 – 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
தந்தையை எதிர்த்ததால் லவ-குசருக்கு பித்ருதோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.
தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர், வால்மீகியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட வைகுண்டவாசப் பெருமாளின் அருளாணைப்படி ஈஸ்வரப் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே இராமாயண காவியத் தொடர்புடையதாகவும், வால்மீகி ஆசிரமமாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்குவதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக்கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது. இரண்டு ஆலயங்களுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு.
குளக்கரையை ஒட்டி ஆஞ்சேநேயர் சன்னதியும் உள்ளது. சனிப்பிரதோஷத்துக்கு வந்தால் அப்படியே அனுமனையும் தரிசிக்கலாம்.
ஆலய முகவரி : அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு-600107 சென்னை. (கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே) தொலைபேசி : 044 – 2479 6237
அது சரி…. நீங்க எப்போ இந்த கோவிலுக்கு போகப்போறீங்க?
(ஆக்கத்தில் உதவி : Dinamalar.com, Sakthi Vikatan)
[END]
டியர் சுந்தர்ஜி
குறுங்காலீஸ்வரர் கோயிலை பற்றிய நீண்ட பதிவு மிக அருமை. லைவ் ஆகா உள்ளது. நாங்கள் கோயிலுக்குச் சென்று தர்சன் செய்தது போல் உள்ளது. உங்களது பதிவு உயிரோட்டமுள்ள ஓவியமாக இருக்கிறது. ராஜ கோபுரம் and other photos are excellant.
நீங்கள் நினைத்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் அந்த மகா பெரியவர் அருளால் உங்களுக்கு கிடைகிறது.
வெகு விரைவில் கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிவை படித்த உடன் தோன்றியது. நீங்கள் தொகுத்து அளித்த கோயம்பேடு பெயர் காரணம் எங்களுக்குத் தெரியாத ஒன்று. இங்குள்ள ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம்
இவ்வளவு அழகிய பதிவை அளித்த Right mantra.com ற்கு மிக்க நன்றி.
Regards
Uma
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
அருள்மிகு குருங்கலீஸ்வரர் திருக்கோவில்
பரபரப்பான சென்னை நகரின் மையத்தில் இப்படி ஒரு பழமையான கோயில் இதுவரை நம் கருத்திற்கு தெரியாத பல கோயில்களில் இதுவும் ஒன்று.
அனைத்து படங்களும் அருமை. கொடிமரமும் கோபுரமும் மண்டபமும் பார்க்கும் போதே சிலிர்க்க வைக்கிறது.
கோவிலை பற்றிய வரலாறும் மற்றும் பிற செய்திகளும் கோவிலின் பழமையை எடுத்து காட்டுகிறது
இங்கு ஒரு சனிப் பிரதோஷம் பார்த்தால் அது நமக்கு ஒரு கோடி பிரதோஷம் பார்த்த புண்ணியம் கிடைக்கும்.
பக்கத்திலேயே பெருமாள் கோயில். படங்களும் கட்டுரைகளும் படிக்கும் போதே கோவில் பார்க்கு ஆவலை உண்டாக்குகிறது.
விரைவில் கடவுள் வழி காட்டுவராக.
நான் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். தங்களின் பதிவை படித்த பின்பு தான் எவ்வளவு விசயங்களை மிஸ் பண்ணி இருக்கிறேன் என்று தெரிந்தது. தேங்க்ஸ் சுந்தர் சார்.
பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா -பாரதி
பார்க்கும் இடங்களிலெல்லாம் மஹாபெரியவா – சுந்தர்
அருமையான நேரடி பதிவு … வாழ்த்துக்கள்