(Check : மாற்றமும் ஏற்றமும் தரும் மார்கழி – என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ?)
நேற்று முன்தினம், புதன்கிழமை திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் மார்கழி தரிசனம் செய்ய முடிவு செய்தோம். செவ்வாய் மாலையே திருமதி.வெங்கட் அவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். புதன் காலை 5.00 மணிக்கு சரியாக நாம் கோவிலை அடைந்துவிட, அடுத்த சில நிமிடங்களில் தாமரை வெங்கட் அவர்களும் தம் கணவர் திரு.வெங்கட்டுடன் கோவிலுக்கு வந்துவிட்டார். திரு.வெங்கட் போக்குவரத்து காவலராக இருக்கிறார். நமது சமீபத்திய பாரதி விழாவுக்கு குடும்பத்தினர் அனைவருடனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதபுரீஸ்வரரையும் பாலாம்பிகையையும் அனைவரும் விஸ்வரூப தரிசனம் செய்தோம். பின்னர் தம்பதிகளுக்கு நாம் கொண்டு சென்ற தஞ்சை பெரியகோவில் மற்றும் இதர கோவில்களின் பிரசாதத்தை பாலாம்பிகையின் பாதத்தில் வைத்துவிட்டு அங்கே சன்னதியிலேயே கொடுத்தோம்.
அனைத்தும் முடிந்ததும் விடைபெற்றுக்கொண்டு வெங்கட் தம்பதியினர் புறப்பட்டு சென்றுவிட, நாம் புறப்பட்டு சிறிது தூரம் சென்றுவிட்டோம் அப்போது கோவில் மைக்கில் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒலிக்கத் துவங்கியது. அது ரெக்கார்டட் வாய்ஸோ, சி.டி.யோ அல்ல. நேரடி குரல் என்பது தெளிவாக புரிந்தது. அதன் வசீகரம் நம்மை மிகவும் ஈர்த்தது.
இத்தனை காலை வந்து மைக்கில் பள்ளியெழுச்சி பாடுறது யாரா இருக்கும்? இந்த கோவிலின் ஓதுவாரை நமக்கு தெரியும். அவர் குரல் இப்படி இருக்காது. இது வேறு யாராக இருக்கும்? ஒரு எட்டு யார் பாடுவது என்று பார்த்துவிட்டு அவருடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி படித்துவிட்டு கிளம்பினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நாம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பினோம்.
உள்ளே சென்று பார்த்ததில் அங்கே இடது ஓரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் முதல் அறையில் ஒருவர் மைக்கில் தனியாக பாடிக்கொண்டிருந்தார்.
அருகே சென்ற நாம், அவருக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் முன்பாக அமர்ந்தோம். அவருடன் சேர்ந்து நாமும் நாம் வைத்திருந்த புத்தகத்தை பார்த்து திருப்பள்ளியெழுச்சி படிக்க ஆரம்பித்தோம்.
திருப்பள்ளியெழுச்சி முடிந்ததும், “ரொம்ப அருமையா பாடினீங்க… வாழ்த்துக்கள்… இதை என்னுடைய சிறிய காணிக்கையா வெச்சிக்கோங்க…” என்று கூறி ஒரு சிறு தொகையை அவருக்கு அளித்தோம். நன்றியுடன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.
“உங்களை இந்த கோவில்ல இதுக்கு முன்னால பார்த்ததில்லையே? ஓதுவாரா இருக்கீங்களா??”
“இல்லை சார்… ஓதுவார் ஆறு மணிக்கு வருவார். நான் தினமும் இங்கே சன்னதியில உட்கார்ந்து பாடுவேன். குரல் நல்லாயிருக்கே… மைக்கில் பாடவைப்போம்னு சொல்லி இந்த வாய்ப்பை கோவில்ல எனக்கு கொடுத்தாங்க”
“ஓ… ரொம்ப சந்தோஷம்…”
“ஓதுவார் வர்றவரைக்கும் நான் பாடிகிட்டு இருப்பேன். அவர் வந்தவுடனே அவர் கண்டின்யூ பண்ணுவார். இதோ கொஞ்ச நேரத்துல அவர் வந்துவிடுவார்”
“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும். திருவெம்பாவை முடிச்சு ப்ரீயானவுடனே உங்க கிட்டே பேசுறேன். நான் அதுவரைக்கும் நீங்க பாடுறதை கேட்டபடி பிரதட்சிணம் பண்ணிட்டு இருக்கேன்!” என்று கூறிவிட்டு நாம் பிரகாரத்தை சுற்றிவர ஆரம்பித்தோம்.
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்
திருவெம்பாவையின் இரண்டாம் பாடலை பாடிக்கொண்டிருந்தார் அவர். அவர் குரலின் இனிமையில் நாம் மெய்மறந்து கேட்டபடி பிரதட்சிணம் வந்துகொண்டிருந்தோம்.
(இந்த பாடலின் பொருள் என்ன தெரியுமா? தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.)
மனிதர்கள் நாம் உண்மையில் தேவர்களை விட பன்மடங்கு கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், நினைத்தவுடன் தேவாதி தேவர்களால் கூட சிவபெருமானை நேரில் சென்று தரிசிக்க முடியாது. சிவனை விடுங்கள் நந்தி பகவானைக் கூட பார்க்க முடியாது. அதற்கு அவர்கள் பல யுகங்கள் காத்திருக்க வேண்டும். சூரபன்மனின் கொடுமை தாங்காமல் சிவபெருமானிடம் முறையிடச் சென்ற தேவேந்திரன் தலைமையிலான கூட்டத்திடம், இறைவன் மோன நிலையில் இருப்பதாகவும் சற்று காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார் நந்தி பகவான். ஆனால் அதற்குள் பல யுகங்கள் முடிந்திருந்தன. (* அது தான் தக்ஷிணாமூர்த்தி கோலம்). கந்த புராணத்தில் இது மிக தெளிவாக கூறப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு நினைத்தவுடன் ஏதாவது சிவாலயம் செல்ல எத்தனை எத்தனை வாய்ப்புக்கள்… ஆனால் அதை பயன்படுத்திகொள்கிறோமா? சிந்திப்பீர்!
திருவெம்பாவை பாடல்களை அவர் பாடுவதை மைக்கில் கேட்டபடியே பிரகாரத்தை வலம் வந்தோம். பிரகாரத்தில் இடிபாடுகள், குப்பைகள் எதுவும் இல்லாமல் பளீச் என்று இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
(திருவேற்காடு சிவன் கோவில், மிக மிக அருமையாக அதன் பழமையை சிறிதும் சிதைக்காமல் புனரமைக்கப்பட்டிருக்கிறது. கோவில் இப்போது அத்தனை அழகு. அவசியம் ஒரு முறை குடும்பத்தோடு சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.)
ஒரு சில முறை வலம் வந்தவுடன் அவர் திருவெம்பாவையை பாடி முடித்துவிட்டார். அதற்குள் ஓதுவார் முருகேச தேசிகர் வந்துவிட, இவர் எழுந்துவிட்டார்.
அவரை தனியே அழைத்து பேசினோம். பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.
இவர் பெயர் ஏழுமலை. இவர் ஒரு கட்டிட மேஸ்திரி. தினமும் சிவன் கோவிலுக்கு வரும் இவர், வெளியே பிரகாரத்தில் அமர்ந்து உரக்கப் பாடுவது வழக்கம். இவரது குரல் வளத்தை கேட்ட பலர், இவரை மைக்கில் பாடவைத்தால் நன்றாக இருக்குமே என்று கருதி, கோவில் நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர். திருவேற்காடு கோவில் இ.ஒ.வாக இருக்கும் காவேரி அவர்கள் கவனத்திற்கு இவரது தொண்டு பற்றி தகவல் சென்றவுடன், அவர் இவர் மைக்கில் பாடுவதற்கு ஏற்பாடு செய்து தந்துவிட்டார்.
தினமும் காலை திருப்பள்ளியெழுச்சி, இரவு பள்ளியறை பாடல்களை திருவேற்காட்டில் பாடுவது இவர் தான். அதாவது இறைவனை எழுப்புவதும் உறங்கச் செய்வதும் இவர் தான். எப்பேற்ப்பட்ட பாக்கியம்…!
தான் செய்யும் இந்த தொண்டுக்கு பணம் எதுவும் இவர் பெற்றுக்கொள்வதில்லை. காலையும் மாலையும் கோவிலில் பதிகங்கள் பாடுவதை மிகப் பெரிய சேவையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறார்.
பணம் இருந்தால் தான் சிவத்தொண்டு செய்ய முடியும் என்றில்லை, மனம் இருந்தால் போதும் என்று நிரூபித்திருக்கிறார் திரு.ஏழுமலை. புறப்பட்டு சென்ற நாம் இவரை மீண்டும் வந்து பார்க்க நேர்ந்ததும் இவரிடம் சில வார்த்தைகள் பேச நேர்ந்ததும் நிச்சயம் சிவனின் திருவிளையாடல் தான். நம் தளம் மூலம் தன் தொண்டனின் புகழை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டு நம்மை இந்த அடியவரை சந்திக்க வைத்திருக்கிறான் என்றே கருதுகிறோம்.
சிவபெருமானின் அருளைப் பெற, அவனை தொழவேண்டும், கடுமையான விரதங்கள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவனின் மெய்த்தொன்டர்கள் மனம் குளிரும் வகையில் நடந்துகொண்டு, அவர்களுக்கு சேவை செய்தாலே போதும் சிவன் மனம் தானாக குளிரும்.
இவருக்கு மைக்கில் பாட அனுமதி கிடைத்தவுடன், அங்கு ஏற்கனவே ஓதுவாராக இருக்கும் பெரியவர் திரு.முருகேச தேசிகரை சமாளிப்பது பெரிய பாடாகிவிட்டது.
“ஐயா… நான் பணத்துக்காகவோ பேருக்காகவோ பாடலை. சிவனுக்காக பாடுறேன். என்னோட ஆத்ம திருப்திக்கு பாடுறேன். உங்கள் சம்பளத்தை நான் தட்டி பறிக்கலை. உங்க வேலையில குறுக்கிடலை… நீங்க வர்றதுக்கு முன்னாள் ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னால வந்து நான் பாட்டுக்கு பாடிட்டு போறேனே…. அதுல உங்களுக்கு என்ன நஷ்டம்” என்று அவருக்கு பலவாறாக எடுத்துக்கூறி தற்போது இந்த தொண்டை செய்துவருகிறார் திரு.ஏழுமலை.
ஒரு கட்டிட மேஸ்திரிக்கு எப்படி இந்த சிவபக்தி அதுவும் தினமும் காலையும் மாலையும் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பாடும் அளவு பக்தி ஏற்பட்டது?
“சின்ன வயசுல இருந்தே எனக்கு சிவபக்தி உண்டு சார். எங்க ஊர் திண்டிவனம் பகத்துல அனந்தமங்கலம். அங்கே மலை மேல சிவலிங்கம் ஒன்னு இருக்கும். மாடு மேய்க்கப்போகும் நான், அப்படியே சிவலிங்கத்துக்கு தண்ணியில அபிஷேகம் பண்ணி, மஞ்சள் குங்குமம் வெச்சிட்டு வருவேன். சிவன் அப்படியே என்னை ஈர்த்துவிட்டார். அப்புறம் அப்படியே கொஞ்ச கொஞ்சமாக நிறைய சிவன் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன். இங்கே சென்னையை சுத்தியிருக்குற பல சிவன் கோவில்கள்ல நான் சன்னதியிலே நின்னு பாடியிருக்கேன். இங்கே திருவேற்காடு பக்கத்துல வீடு இருக்குறதால இங்கே அடிக்கடி வந்து பாடுவேன்.”
முறைப்படி கர்நாடக சங்கீதமோ அல்லது இசையோ இவர் கற்றவர் அல்ல. ஆனாலும் மிகப் பிரமாதமான ஆலாபனைகளோடு ஏற்றத் தாழ்வுகளோடும் இவர் பாடுவதை கேட்கும்போது வியப்பாக இருக்கிறது.
நிச்சயம் திரு.ஏழுமலை அவர்களின் குரலில் உள்ள அந்த வசீகரம் சிவபெருமானின் அருள் தான்.
[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். 🙁 ]
“அதென்ன சார்… தலையில ஜடாமுடி மாதிரி? பார்க்க ஒரு சாமியார் மாதிரி இருக்கே… அப்படி தெரியனும்னே வெச்சிருக்கீங்களா?”
“நான் இப்படித் தான் இருக்கனும்னெல்லாம் நினைக்கலே. அது தானா அமைஞ்சிடுச்சு சார். எப்பவும் நமக்கு சிவசிந்தனை இருக்கட்டும்னு ஒரு அடையாளமா நானும் அதை விட்டுட்டேன். கோவிலுக்கு வரும்போது இப்படி வருவேன். வெளியே எங்கேயாச்சும் போகும்போது, வேட்டி சட்டை தான் நம்ம காஸ்ட்யூம்.”
ஏழுமலைக்கு இருக்கும் மற்றொரு லட்சியம் கோவிலுக்கு வரும் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தேவாரம் படிக்க சொல்லிக்கொடுத்து அவற்றை பாட ஆர்வத்தை தூண்டவேண்டும் என்பதே. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பல குழந்தைகளுக்கு பதிகங்கள் படிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார். சைவம் பரவவேண்டும் தழைக்கவேண்டும் என்பதே இவர் ஆசை.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல கோவில்களில் சன்னதியில் நின்று பாடியிருக்கும் ஏழுமலை, கடந்த சில மாதங்களாகத் தான் மைக்கில் பாடுகிறார்.
யார் கேட்கிறார்கள் என்ன ஏது என்று தெரியாத நிலையில் தனியாக பாடுகிறீர்களே… அது பற்றி எப்போதாவது ஃபீல் செய்ததுண்டா?
“சார்… நான் பாடுறதை யார் கேட்கிறாங்களோ இல்லையோ… இதோ இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் என் அம்மையும் அப்பனும் நிச்சயம் கேப்பாங்க. அதுவும் சில சமயம் வேதபுரீஸ்வரர் பக்கத்துலேயே உட்கார்ந்து கேட்குற மாதிரி எனக்கு தோணும். எனக்கு அது போதும்!”
திருக்கழுக்குன்றம் திருவாசக புகழ் தாமோதரன் ஐயா அவர்கள் திருவேற்காட்டுக்கு ஒரு முறை வந்தபோது, சன்னதியில் சற்று ஒதுக்குப்புறமாக நின்று இவர் பாடியதை தற்செயலாக கேட்க நேர்ந்ததாம். “யார் இவர்? இத்தனை இனிமையாக பாடுகிறாரே…” என்று இவரைப் பற்றி விசாரித்து, இவரது பின்புலம் தெரிந்து வியந்து போய் இவரை “இறைவனை இங்கு தினமும் சந்தோஷப்படுத்தும் தொண்டு உங்கள் தொண்டு!” என்று பாராட்டியதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறார்.
தேவாரம் பாடும் தொண்டை தவிர, தனி நபராக கோவில்களில் உழவாரப்பணி கூட அவ்வப்போது செய்துவருகிறார் ஏழுமலை. கோடம்பாக்கம் அருகே டிரஸ்ட்புரத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் ஆலயத்தில் ஒருமுறை, தனியாளாக இவர் கோவிலின் கோமுகத் தீர்த்தம் வடியும் பாதையில் உள்ள அடைப்பை நீக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, யாரோ ஒரு முதியவர் இவருக்கு ஒத்தாசையாக வந்தாராம். வந்த முதியவர் அடுத்த சில வினாடிகளில் காணவில்லையாம். வந்தவர் சாட்சாத் அந்த சிவபெருமான் தான் என்று கருதுகிறார் ஏழுமலை.
சுமார் ஐம்பத்தைந்து வயதாகும் திரு.ஏழுமலைக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடித்துவிட்டார். மகன் கல்லூரியில் படித்து வருகிறான். இல்லறத்தை மிகவும் சிறப்பாக கவனித்துக்கொண்டு இவர் சிவத் தொண்டுக்கு உற்ற துணையாக இருக்கிறார் இவர் மனைவி திருமதி.சந்திரா என்பவர்.
“நாளைக்கு காலைல நான் திரும்பவும் உங்களை பார்க்க வர்றேன். உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கணும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றோம்.
அடுத்த நாள் (வியாழன் காலை), நம் வாசகர் ஈரோடு இசைப்பள்ளி ஆசிரியர் திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் சி.டி.யை கொண்டு போய் அவருக்கு கொடுத்தோம்.
“பார்வையற்ற கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ‘சிவஞான தேனிசைப் பாமாலை’ என்னும் சி.டி இது. இதை பாடியிருக்கும் திரு.ஞானப்பிரகாசம் பார்வையற்றவர். ஈரோடு இசைப்பள்ளியில் தேவாரம், மற்றும் திருப்புகழ் ஆசிரியராக இருக்கிறார். நீங்கள் மிக நன்றாக பாடுவதால், இதை கேட்டு இதில் உள்ள பாடல்களையும் பாடுங்கள். இன்னும் உங்களை மேம்படுத்திக்கொள்ளமுடியும்” என்று கூறி அது சமயம் அங்கு வந்திருந்த பக்தர் ஒருவர் கரங்கள் மூலம் அந்த சி.டி.யை அருணகிரிநாதர் சன்னதிக்கு முன்பாக வைத்து திரு.ஏழுமலை அவர்களுக்கு பரிசளித்தோம்.
ஏழுமலை போன்று தன்னலமின்றி சிவத்தொண்டு செய்து வரும் எத்தனையோ பக்தர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு உலகறியச் செய்வோம். இறைவன் அதற்குரிய ஆற்றலையும் சூழலையும் நமக்கு வழங்கவேண்டும்.
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
================================================================
தவிர்க்க இயலாத காரணங்களினால் இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்ற வார பிரார்த்தனையே இந்த வாரமும் ரிப்பீட் செய்யப்படுகிறது. வாசகர்கள் சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அடுத்த வாரம் முதல் வழக்கம் போல பிரார்த்தனை பதிவு இடம்பெறும்.
பிரார்த்தனை நாள் & நேரம் : டிசம்பர் 28, 2014 மாலை 5.30 pm – 5.45 pm
பிரார்த்தனை பதிவுக்கு : பக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club
================================================================
Also check from our archives…
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ
திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!
வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
================================================================
[END]
வணக்கம் சார்
தலைப்பு மிக அருமை.
பக்தனின் தாலாட்டு பாடலை கேட்க காத்திருக்கும் நம் ஈசன்.
எழுமலை அவர்களின் இசை பாமாலை மூலம் செய்யும் சிவதொண்டு கடவுளுக்கு மிகவும் பிடித்தது.
இந்த மாதிரி கடவுளின் அருள் பெற்றவர்களை எல்லாம் உங்கள் எழுத்தின் மூலம் தான் நாங்கள் பார்க்கும் பாக்கியம் பெற்றுளோம்.
வளர்க அவர் சிவ தொண்டு.
நன்றி
திரு ஏழுமலையின் இசை ஞானத்தை பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. சங்கீதமே கற்றுகொள்ளாமல் இறைவானின் மேல் கேட்பதற்கு இனிமையான வகையில் பாடுகிறார் என்றால் எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். அவனின் விருப்பம் இல்லை என்றால் இது சாத்தியப்படுமா ? ஒரு சரியான தொண்டரை இறைவன் தங்களுக்கு அறிமுக படுத்தி இருக்கிறார். உண்மையான சிவதொண்டனை கௌரவப் படுத்தி, சிவனின் அன்பிற்கு பாத்திரமாகி விட்டீர்கள்.
//[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் – //
நல்லவேளை, நாங்கள் கேட்கவில்லை …..
அருமையான பதிவிற்கு நன்றிகள் பல
நன்றி
உமா
வணக்கம்…….
பாலாம்பிகை உடனமர் வேதபுரீஸ்வரரின் விஸ்வரூப தரிசனத்தை முதன் முதலாக தங்களுடன் இணைந்து பெற்றதை எங்கள் பாக்யமாகக் கருதுகிறோம்……..
எங்களை அனுப்பிவிட்டு இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள்… தெரிந்திருந்தால் நாங்களும் திருவெம்பாவை கேட்டிருக்கலாம்……
இதற்காகவே இன்னொரு முறை செல்லத் தோன்றுகிறது……..
திரு.ஏழுமலை அவர்கள் மலைக்கோயிலில் வழிபாடு செய்தது, கண்ணப்ப நாயனாரை நினைவூட்டுகிறது……..திரு.ஏழுமலை அவர்களின் பாடல்களை முக்கிய நாட்களில் உடனிருந்து பலமுறை கேட்டிருக்கிறோம்…….அப்போதெல்லாம் சிவ பெருமான் இப்படித்தான் சடாமுடியுடன் இருப்பாரோ என்று நினைத்தது உண்டு……… தம் அடியவர்களும், தம்மை பற்றி சொற்பொழிவு செய்பவர்களும் ரைட் மந்த்ரா தளம் மூலம் கவுரவிக்கப்பட வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டுள்ளார் போலும்……..வாழ்க வளர்க அடியவரின் தொண்டும், அடியார்க்கடியவரின் தொண்டும்………..
சுந்தர்ஜி,
இறைவனை தங்கள் வசம் வைத்து கொண்டு உள்ளீர்கள் .
எங்கு சென்றாலும் அவர் எதாவது ஒரு திருவிளையாடலை தங்களுடன் நிகழ்த்தி விடுகின்றார்.
எல்லாம் சிவ மயம். எங்கள் பக்கம் எதாவது கோயில் தரிசனம் இருந்தால் தெரிவிக்கவும். நாங்களும் கலந்து
கொள்கின்றோம். தங்களுடைய ஒவ்வொரு அனுபமும் எங்களுக்கு இனிய பாடமாக உள்ளது. வளரட்டும் உங்கள் தொண்டு.
//[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.]//
முற்று புள்ளி வைக்காதீர்கள். முயற்சி திருவினை ஆக்கும். சுந்தரால் முடியாதது என்பதே கிடையாது.
நன்றி
ஏழுமலை அவர்களைப் பற்றி படிக்கும் பொழுது கண்ணப்பநாயனாரே நினைவிற்கு வந்தார், சிறந்த சிவச்செல்வரைக் குறித்து அறியத் தந்துள்ளீர்கள். அவரின் கைகளில் சிவஞானத்தேனிசை பாமாலைத் தவழச்செய்தமைக்கு நன்றிகள்.
வணக்கம் கோயம்பேடு கேமராவில் வராத அடியார்யும் சந்திக்கவும்.