முதுமை மற்றும் உடல் குறைபாடு காரணமாக மலைக்கோவில்களில் குடிகொண்டுள்ள இறைவனை படியேறி சென்று சென்று தரிசிக்க இயலாதவர்களின் மனக்குறையை தீர்க்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டதே இந்த பரணி தீபம்.
திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்….விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். காரணம் கார்த்திகை தீபத்தன்று ஜோதியை தரிசிப்பது, சாட்சாத் அந்த பரமேஸ்வரனையே பிரத்யட்சமாக தரிசிப்பது போல.
நம்முடைய பணிச் சூழல் மற்றும் பல்வேறு கமிட்மெண்ட்கள் காரணமாக திருக்கார்த்திகை தீபத்திற்காக திருவண்ணாமலை செல்ல முடியாவிட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக நாம் கார்த்திகை தீபத்தன்று குன்றத்தூர் முருகன் கோவில் சென்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
சென்ற ஆண்டு திருக்கார்த்திகை அன்று குன்றத்தூர் மலையில் தீபம் ஏற்ற நமது தளம் சார்பாக வழங்கப்பட்ட எண்ணை தான் உபயோகப்படுத்தப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நீங்கள் அறிவீர்கள். எனவே இந்த ஆண்டும் அந்த பாக்கியத்தை நாம் தவற விட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.
அன்று காலை கோவில் தரப்பில் குருக்களிடம் பேசி, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபத்திற்கு எண்ணை டின் நாம் வாங்கி வருவதாக சொன்னவுடன், “தீபத்திற்கு எண்ணை இருக்கு. சன்னதிக்கு தான் வேணும். நீங்கள் இங்கே சன்னதியில் கொடுத்துடுங்க!” என்றார்.
யாரோ முந்திக்கொண்டுவிட்டார்கள் போல… நம்மை நொந்துகொண்டோம். எல்லாம் ஒன்று தான் என்றாலும் சன்னதிக்கு எண்ணை தரும் வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் நமக்கு கிடைக்கும். கிடைத்தும் வருகிறது. ஆனால் பரணி ஜோதிக்கு எண்ணை வழங்கும் வாய்ப்பு அரிதினும் அரிது. ஊரில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் விளக்கேற்றுவதற்கு ஒப்பானது அது. எனவே நமது விருப்பம் பரணி தீபத்திற்கு எண்ணை தரவேண்டும் என்பதே..!
ஆனாலும் அவரிடம் ஒன்றும் பேசமுடியவில்லை. பேசவும் முடியாது.
தளத்தில் நாம் குன்றத்தூர் கோவிலுக்கு கார்த்திகை தீப தரிசனத்திற்கு செல்வது பற்றியும் விருப்பமுள்ளவர்கள் நம்முடன் இணைந்து கொள்ளலாம் எனவும் தகவலை வெளியிட்டோம். ஆனால் அதற்கு எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை.
யார் வந்தாலும் வராவிட்டாலும், எத்தனை பேர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் நமது பணிகள் அது பாட்டுக்கு தொடர்ந்து கொண்டேயிருக்கும். போகிற போக்கில் புண்ணியம் சேர்த்துக்கொள்ள பலருக்கு வாய்ப்பு தருகிறோம். பயன்படுத்திக்கொண்டு பலனடைவது அவரவர் விருப்பம்.
கார்த்திகை தீபத்தன்று வெள்ளிக்கிழமை நமக்கு வேலை நாள் என்பதால், ஜோதி தரிசனத்திற்கு மாலை சரியான நேரத்தில் (6.00 PM) குன்றத்தூரில் இருக்கமுடியுமா என்பதில் நமக்கு சந்தேகம் இருந்தது. அலுவலகத்தில் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை பர்மிஷன் போட்டுகொள்ளலாம் என்றாலும் பல்வேறு பணிகள் காரணமாக நமது பர்மிஷன் கோட்டா முடிவடைந்து மைனஸில் இருப்பது வழக்கம். நாம் ஏதாவது ஒரு பிளான் போட்டுக்கொண்டு அலுவலகத்தில் பர்மிஷன் கேட்டால், அவர்கள் ஏதாவது ஒரு பிளான் போட்டு நம்மை அங்கு இருக்கும்படி செய்துவிடுகிறார்கள். எனவே சரியாக தீபத்தன்று ஜோதியை நினைத்தபடி குன்றத்தூரில் தரிசிக்க முடியுமா என்கிற பதைபதைப்பு இருந்தது.
அது மட்டுமில்லாமல் வேறு ஒரு டென்ஷன் நமக்கு. எண்ணை டின்னை வாங்கினால் அதை எப்படி கொண்டு போவது? யாராவது ஒருவர் நம்முடன் கூட பைக்கில் அமர்ந்து வந்தால் தான் எண்ணை டின்னை எடுத்துச் செல்லமுடியும்.
இது போன்ற ஆலய தரிசனங்களில் நம்முடன் வரக்கூடிய நண்பர்கள் ஒரு சிலர் திருவண்ணாமலைக்கு செல்ல பிளான் செய்துவிட்டனர். நாம் என்ன செய்வது? யாரை அழைப்பது ?
அப்போது தான் சென்ற ஆண்டு நம்முடன் ஜோதி தரிசனத்திற்கு வந்த நம் வாசகி உமா அவர்களின் மகன் ஹரீஷ் நினைவுக்கு வந்தார். நேரமும் சூழ்நிலையும் ஒத்துவந்தால் நமது உழவாரப்பணிக்கோ ஆலய தரிசனத்திற்கோ சாதனையாளர் சந்திப்புக்கோ தயங்காமல் வந்துவிடுவார் ஹரீஷ்.
அவரை அலைபேசியில் அழைத்தோம். “போன வருஷம் போல இந்த தடவையும் தீப தரிசனத்திற்கு குன்றத்தூர் வாங்க. வடபழனியில் மீட் பண்ணலாம். ஆனா உங்க பைக் எடுத்துட்டு வராதீங்க. கோவிலுக்கு எண்ணை டின் கொண்டு போகணும். ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலை. நீங்க தான் கூட உட்கார்ந்து எடுத்துட்டு வரணும்” என்றோம்.
“ஜி…. நான் என்னோட பைக்கில் என் கஸினை கூட்டிகிட்டு வர்றேன். அவன் பின்னால் உட்கார்ந்து டின்னை பிடிச்சுக்குவான். போன வருஷம் நம்ம கூட வந்தானே அவன் தான்” என்றார்.
சென்ற ஆண்டு அவர் தன் உறவினர் ஒருவரை அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது. “ஓ… ரொம்ப நல்லதாக போச்சு1” என்று கூறி வடபழனியில் உள்ள ஒரு ஆயில் ஸ்டோர்ஸ் முகவரியை கூறி அங்கு மாலை 4.30க்குள் வந்துவிடுமாறு கூறினோம். நாமும் சரியாக அங்கு 4.30க்கு அங்கு இருப்பதாக கூறினோம்.
இதையடுத்து அலுவலகத்தில் வேலைகளை மளமளவென முடித்துவிட்டு, சரியாக 4.15 க்கு நம்மை பிய்த்துக்கொண்டு வெளியே வந்தோம்.
நாம் புறப்பட்டுவிட்ட விஷயத்தை ஹரீஷ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்துவிட்டு வடபழனி விரைந்தோம். அங்கு சென்று இலுப்பை எண்ணை ஒரு டின் வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். (போன முறை நல்லெண்ணெய் தான் வாங்கித் தந்தோம். ஆனால் மகா பெரியவா திருவாக்கின் மூலம் முருகனுக்கு உகந்தது இலுப்பை எண்ணை என்பதும் கார்த்திகை தீபத்தை அதைக் கொண்டு ஏற்றினால் மிகவும் விசேஷம் என்பதும் தெரியவந்தது. எனவே லுப்பை எண்ணை வாங்கிக்கொண்டோம்.)
நேரம் அப்போது 5.10 pm
காலை குருக்களிடம் பேசியதில் சரியாக 6.00 மணிக்கு ஜோதி ஏற்றப்படும் என்று கூறியதால் 6.00 மணிக்குள் குன்றத்தூரில் இருக்கவேண்டும் என்கிற பதட்டம் தொற்றிக்கொண்டது நமக்கு.
வடபழனி – குன்றத்தூர் – ஐம்பது நிமிடத்திலா? அதுவும் இந்த போக்குவரத்து நெரிசலில்…நடக்கூடியக் காரியமா அது?
பாரத்தை முருகன் மீது போட்டுவிட்டு புறப்பட்டோம்.
கடுமையான டிராஃபிக்கில் பைக்கை விரட்டிக்கொண்டு நாங்கள் குன்றத்தூர் அடிவாரம் செல்லும்போது மணி சரியாக 5.55.
“ஹரீஷ்… .நேரமில்லை.. அஞ்சு நிமிஷத்துல ஜோதி ஏத்திடுவாங்க. நான் முதல்ல போய் குருக்கள் கிட்டே பேசி இந்த எண்ணையை கொப்பரையில விடுறதுக்கு ஏற்பாடு செய்றேன்… நீங்க பின்னாடி டின்னை எடுத்துகிட்டு வேகமா வாங்க…. ” என்று கூறிவிட்டு அவர் பதிலுக்கு கூட காத்திராமல் படிகளில் விடுவிடுவென ஏறினோம்.
மேலே நாம் போய் சேரும்போது… பிரகாரத்தில் மங்கள வாத்தியம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. “ஆஹா.. முருகனோட சன்னதியில இருந்து மலைக்கு ஜோதி கிளம்பிடுச்சு….” என்ன செய்வது?
நாம் நினைத்தது சரி தான். அர்ச்சகர்களில் ஒருவர் கையில் பெரிய அகல் விளக்குடன் ஜோதியை ஏந்திக்கொண்டு மேள தாளத்துடன் பிரகாரத்தை வலம் வந்துகொண்டிருந்தார்.
“ஹரீஷை இன்னும் காணோமே….” பதட்டத்தில் ஓடிச்சென்று பார்த்தோம். ஒற்றை ஆளாக எண்ணை டின்னை சுமந்துகொண்டு படியேறிக் கொண்டிருந்தார் ஹரீஷ். (அது எவ்ளோ வெயிட் இருக்கும் தெரியுமா…?)
(இத்தனை களேபரத்தில் அவசரத்தில் இவற்றையெல்லாம் நம்மால் எப்படி படம்பிடிக்க முடிந்தது என்று இன்னமும் நமக்கு விளங்கவில்லை.)
ஹரீஷ் மேலே வந்து சேரவும் அர்ச்சகர் ஜோதியை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
“உள்ளே போய் கேக்கிறதுக்கு நேரமில்லை. டின்னை இங்கே வெச்சிட்டு போக முடியாது. எவனாவது தூக்கிட்டு போய்டுவான். பேசாம டின்னை கூடவே எடுத்துட்டு போய்டலாம்… தீபம் ஏத்தி முடிஞ்சதும் சன்னதியில ஒப்படைக்கலாம். நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான்” என்று ஹரீஷிடம் கூறிவிட்டு அனைவரின் முன்பாகவும் ஓடிச் சென்று ‘அரோகரா’ கோஷம் போட்டுக்கொண்டே பின்னோக்கி ஓடியபடி நம் காமிராவில் படங்கள் கிளிக்க ஆரம்பித்தோம்.
மேள தாளங்கள் முழங்க,,, பரணி தீப குழுவினர் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்களை புகைப்படம் எடுப்பதன் பொருட்டு நாம் குன்றின் உச்சிக்கு செல்லும் கரடு முரடான பாதையில் செருப்பின்றி பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். (கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை).
குன்றின் உச்சியில் ஜோதி ஏற்றப்படுவதை தரிசிக்க ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது.
தீபம் ஏற்றுவதற்கு ஸ்தூபி வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
நமது கையளவு பருமனுள்ள மிகப் பெரிய திரியுடன் (பார்க்க புகைப்படம்) மேலே பெரிய வாணலி போன்ற கொப்பரை தயாராக இருந்தது.
நாங்கள் கொண்டு சென்ற எண்ணை டின்னை ஒரு ஓரமாக இறக்கி வைத்தோம்.
ஜோதி மலையுச்சிக்கு வந்து சேர்ந்தவுடன், தீபம் ஏற்றப்படும் அந்த (ஸ்தூபி) தூணுக்கு பூஜை நடைபெற்றது. மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கின.
கோவில் ஊழியர் உயரமான ஸ்டாண்ட் மீது நின்றுகொண்டு, “எண்ணை கொண்டுவந்தவங்க எல்லாம் எண்ணையை கொடுங்க” என்று கூறி, அவரவர் கொண்டு வந்த எண்ணை பாக்கெட்டுகள் மற்றும் சிறு சிறு குப்பிகளில் இருந்த எண்ணை இவற்றை வாங்கி கொப்பரையில் ஊற்றிக்கொண்டிருந்தார்.
“எல்லாரும் கொடுத்தாச்சா?” என்று கேட்டுக்கொண்டார்.
அந்த பெரிய கொப்பரைக்குள் இதுவரை ஊற்றிய எண்ணை அத்தனையும் துளியூண்டு தான்.
அடுத்து “எண்ணை டின் எடுங்க.. எண்ணை டின் எடுங்க…” என்று உரக்க கூவினார்.
“எண்ணை டின் எங்கே?”
“நீ எடுத்துட்டு வந்தியாடா?”
“நான் எடுத்துட்டு வரலே..”
“நான் கீழேயே வெச்சிட்டு வந்துட்டேன்டா”
“என்னடா இப்படி பண்ணிட்டே… இப்போ போய் எடுத்துட்டு வர்றதுக்குள்ளே நேரமாயிடுமே.. இப்போ தீபத்தை ஏத்தனுமேடா…”
இவ்வாறு அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தான் புரிந்தது. அவர்கள் கொண்டு வர வேண்டிய எண்ணை டின்னை கொண்டு வர மறந்துவிட்டனர் என்பது.
உடனே நாம் சுதாரித்துக்கொண்டோம்.
“இந்தாங்க எங்க கிட்டே இலுப்பை எண்ணை ஒரு டின் இருக்கு. இதுக்கு தான் எடுத்துட்டு வந்தோம்… உடைச்சி கொப்பறையில ஊத்துங்க” என்றோம்.
அவர்களுக்கு யோசிப்பதற்கு கூட நேரமிருக்கவில்லை. முஹூர்த்தம் வேறு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவசரத்திற்கு பரவாயில்லை என்று கூறி, நமது டின்னை வாங்கி அதை உடைத்து கொப்பரையில் ஊற்றினர்.
“நாம் காண்பது கனவா அல்ல நனவா? அட….அட…. நாம் வாங்கிச் சென்ற எண்ணை ஊற்றப்படுகிறது. முருகா உன் கருணையே கருணை” என்று எண்ணி சந்தோஷப்பட்டோம்.
எண்ணை ஊற்றப்பட்டு கொப்பரை அடுத்த சில வினாடிகளில் தயாரானவுடன், “வடிவேல் முருகனுக்கு அரோகரா… குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா” போன்ற கோஷங்களுக்கிடையே ஜோதி ஏற்றப்பட்டது.
சென்னை புறநகரும் குன்றத்தூர் நகரமும் மலை உச்சியிலிருந்து பார்ப்பதற்கு அத்தனை ரம்மியமாக காட்சியளித்தது. பகலும் இரவும் சந்திக்கும் அந்த சந்தியாவேலையில் வானின் நிறம் அத்தனை அழகு. குல்றிந்த காற்று நாசியை வருட.. நாம் வேறு ஒரு உலகில் இருந்தோம்.
தீபம் ஏற்றப்படும் காட்சியை பரவசத்துடன் புகைப்படம் எடுத்தபடி பார்த்துக்கொண்டிருந்தோம்.
சற்று நேரத்திற்க்கெல்லாம் வாணவேடிக்கைகள் துவங்கின. குன்றத்தூர் மலையே குலுங்குமளவுக்கு அதிர்வேட்டுக்கள், முழங்கின.
வானை கிழித்துக்கொண்டு பட்டாசுகள் பறந்து சென்று வெடித்தன.
ஊருக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே ஒளியேற்றிவிட்டான் குமரன்.
மங்கள வாத்திய கலைஞர்களை எங்கே பார்த்தாலும் கௌரவிப்பதை பற்றி கூறியிருக்கிறோம் அல்லவா? இங்கேயும் அவர்களை கௌரவிக்க தவறவில்லை. நாம் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்த நொடி அவர்கள் கண்களில் தெரிந்த அந்த நன்றி + ஒருவித நெகிழ்ச்சியான உணர்வு… வார்த்தைகளில் விளக்கமுடியாது.
“சரி… நேரா போய் முருகனை உடனே தரிசனம் பண்ணனும். நேரம் போக போக கூட்டம் அதிகமாயிட்டே போகும்” என்றோம் ஹரீஷை நோக்கி.
சன்னதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்றால் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. சிறப்பு தரிசன டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.
நண்பர் ரகு அய்யர் தான் உற்சவர் சன்னதியில் இருந்தார். வரவேற்று உபசரித்தார்.
“ஜோதி தரிசனம் ஆச்சா?” அக்கறையுடன் விசாரித்தார்.
“பிரமாதமா ஆச்சு” என்று கூறி தீபத்திற்கு நாம் கொண்டு வந்த எண்ணை பயன்பட்ட கதையை சுருக்கமாக சொன்னோம்.
“எல்லாம் அவன் விருப்பம். சந்தோஷம் சந்தோஷம்” என்றார்.
முருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
முருகனின் அழகை சொல்லவேண்டுமா என்ன?
அழகென்ற சொல்லுக்கே பொருள் அவன் தானே….
அழகென்ற சொல்லுக்கு முருகா – உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா
முருகன் மேனி தீண்டிய மாலைகள் எங்களுக்கு அணிவிக்கப்பட்டது.
அங்கே இன்னும் சற்று நேரம் இருக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நீண்ட நேரம் சன்னதியில் நிற்கவில்லை. பிரார்த்தனையை முடித்துவிட்டு ரகு ஐயரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். பிரகாரத்தை வலம் வந்துவிட்டு கொடிமரம் அருகே நமஸ்கரித்துவிட்டு புறப்பட்டோம்.
(பாகம் 1) – முற்றும்
================================================================
பதிவு சற்று நீளமாக இருப்பதால் இரண்டு பாகமாக போடலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், ‘தொடரும்’ என்று போட்ட பல பதிவுகள் தொடரவேயில்லை என்று சில வாசகர்கள் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். நமக்கும் அதற்கு பிறகு அதை நிறைவு செய்ய நேரம் கிடைப்பதில்லை. எனவே இதன் அடுத்த பாகத்தையும் இங்கேயே தந்துவிட்டோம். ஆகையால் தான் நேற்று பதிவு எதையும் அளிக்க முடியவில்லை.
இன்று இரண்டு பதிவுகள்!
ஒ.கே.?
================================================================
மாலைக்கு கிடைத்த மரியாதை!
ஆனால் இதற்கு பிறகு நடந்தது தான் சுவாரஸ்யமே…..
நாம் அடிவாரத்தில் நின்று சற்று அலைபேசியை செக் செய்துகொண்டிருந்தோம். முகநூல் மற்றும் மெயிலை செக் செய்துகொண்டிருந்தோம். ஹரீஷ் புறப்பட்டு சென்றுவிட்டார்.
நாம் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினோம்.
அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவிலை தாண்டும்போது மைக் மூலம் யாரோ சொற்பொழிவு (மிகப் பெரிய பழமையான சிவாலயம் இது) செய்துகொண்டிருப்பது காதில் விழுந்தது.
திருக்கார்த்திகை தீபத்தின் பெருமையை சொற்பொழிவாளர் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பைக்கை சிவன் கோவில் நோக்கி திருப்பினோம்.
கோவிலுக்கு வெளியே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். “சார்…. உள்ளே எதாச்சும் சொற்பொழிவு நடக்குதா? இல்லே சி.டி.ல இருந்து ரெக்கார்டட் வாய்ஸ் போட்டிருக்காங்களா??” நம் சந்தேகத்தை கேட்டோம்.
“சொற்பொழிவு தான் சார். கூட்டமில்லே. ஒருத்தர் ரெண்டு பேர் தான் உட்கார்ந்து கேட்டுகிட்டு இருக்காங்க…. .முடியப்போகுது… சீக்கிரம் போங்க…” என்றார்.
நாம் பைக்கை கிடைத்த இடத்தில் சொருகிவிட்டு ஓடினோம்.
அங்கே வெளியே ஒரு ஓரமாக பிள்ளையார் சன்னதி என்று நினைக்கிறோம். அதன் முன்னே ஒருவர் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். அவர் சொற்பொழிவு செய்துகொண்டிருக்க,யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை. ஒரு பக்கம் இவர் தனியாக சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். மறுபக்கம் கூட்டம் அது பாட்டுக்கு வந்துபோய்கொண்டு இருந்தது. இவரை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இவர் பேசும் கருத்துக்களின் அருமையை உணர்ந்துகொண்டதாகவும் தெரியவில்லை.
நமக்கு என்னவோ போல இருந்தது. இறைவனை பெருமையை கூறும் சொற்பொழிவை கேட்பதைவிட சிறந்த வழிபாடு இருக்கிறதா என்ன ? (இது பற்றி விரிவான கருத்துக்களை பின்னர் பகிர்ந்துகொள்கிறோம்.)
நாம் போய் அவர் முன்பு அமர்ந்தோம். சுவாரஸ்யமாக அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தோம்.
சற்றைக்கெல்லாம் சொற்பொழிவு முடிந்தது.
இவரை ஏதாவது ஒரு வகையில் உற்சாகப்படுத்த முடிவு செய்தோம். கையில் சால்வை எதுவும் இல்லை.
முருகன் சன்னதியில் நமக்கு இட்ட மாலை மட்டும் பையில் இருந்தது. அதை கையில் எடுத்தோம்.
“சார்… உங்க சொற்பொழிவை கொஞ்ச நேரம் தான் கேட்குற பாக்கியம் எனக்கு கிடைச்சது. ரொம்ப நல்லா இருந்தது. அருமையான சொற்பொழிவு. உங்களை ஏதாவது ஒருவிதத்துல ஹானர் பண்ணனும்னு ஆசைப்படுறேன். ஆனா இப்போ என்கிட்டே இருக்கிறது இந்த மாலை தான். இந்த மாலைக்கு விலை மதிப்பு கிடையாது. மேலே முருகன் சன்னதியில எனக்கு கிடைச்ச மாலை இது. அதை உங்களுக்கு போடுறேன். தப்பா நினைக்காம ஏத்துக்கணும்!” என்று கூறி அவர் ரெஸ்பான்ஸ் என்ன என்று தெரிந்துகொள்ள சற்று நிறுத்தினோம்….
பின்னர் நாமே தொடர்ந்தோம்… “இது நான் ஒருத்தன் போடுற மாலை இல்லை. சுமார் 4000 பேர் போடும் மாலை…” என்று கூறி… நம்மையும் நமது தளத்தையும் அறிமுகப்படுத்திக்கொண்டு, “என் வாசகர்கள் சார்பாக இந்த மாலையை உங்களுக்கு அணிவிக்கிறேன்…” என்று கூறி அந்த மாலையை அவருக்கு சூட்டினோம்.
முருகன் திருமேனி மீது அமர்ந்த அந்த மாலை நம் மீதும் பட்டு அதன் பெருமை குன்றியது. ஆனால் திருக்கார்த்திகை பெருமை பற்றி சொற்பொழிவாற்றிய அந்த அடியவரை அது சென்று சேர்ந்ததில் பன்மடங்கு பவித்திரம் பெற்றது. இது அந்த மாலைக்கு கிடைத்த மரியாதை!
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உள்ளம் நெகிழ்ச்சியில் அழுதது நமக்கு புரிந்தது. “ரொம்ப நன்றி சார்…” என்று கூறியபடி கையை கூப்பினார். மாலையுடன் அவர் நிற்கும் காட்சியை புகைப்படம் எடுக்க முற்பட்டபோது அங்கே இருந்த அந்த சொற்பொழிவு ஏற்பாட்டாளர் மற்றும் அவர் நண்பர்களை “ஒரு நிமிஷம் சீக்கிரம் இங்கே வாங்க… சார் வந்திருக்காரு பாருங்க….” என்று அனைவரையும் வேக வேகமாக அழைத்து வந்து நமக்கு அறிமுகப்படுத்தினார்.
ஏற்பாட்டாளரிடம் நமது பாராட்டுக்களை தெரிவித்தோம்.
“ரொம்ப நல்ல விஷயத்தை ஏற்பாடு செய்திருக்கீங்க சார்…. தொடர்ந்து இது போன்ற சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யுங்க. எத்தனை பேர் வருவாங்க.. உட்கார்ந்து கேப்பாங்க… அது இதுன்னெல்லாம் கவலைப்படாதீங்க…. ஒருத்தர் வந்து கேட்டாக் கூட போதும். அதுவே மிக பெரிய .விஷயம்…. சிவனுக்கு நீங்க செய்யும் மிகப் பெரிய சேவை!” என்றோம்.
“நிச்சயம் சார்…”
சொற்பொழிவு செய்த அந்த நபரை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவர் ஒரு சித்தா டாக்டராம். சொற்பொழிவுக்கு புதியவராம். இது இரண்டாம் சொற்பொழிவாம். சமீபத்தில் தான் முதல் சொற்பொழிவை செய்தாராம்.
இரண்டாம் சொற்பொழிவிலேயே சுமார் 4000-5000 பார்வையாளர்கள் கொண்ட ஒரு வலைத் தளத்தின் பிரதிநிதியின் கைகளால் கௌரவம் கிடைத்தது அவர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
“சார்… உள்ளே வாங்க.. சுவாமியை தரிசனம் பண்ணலாம்” என்று கூறி, உள்ளே அவர்களுடன் அழைத்துச் சென்றார்கள். அர்ச்சகரிடம் ஏதோ கூறினார்கள்.
கந்தழீஸ்வரர் முன்னாள் நின்றுகொண்டிருந்தோம். கந்தழீஸ்வரர் மிகப் பெரிய திருமேனி. பார்க்கவே பிரமாதமாக இருக்கும். திருக்கார்த்திகை தீபம் என்பதால் பிரமாதமான அலங்காரம் வேறு. கேட்கவேண்டுமா அழகனின் அப்பன் அழகை…?
இங்கும் அர்ச்சனை + தீபாராதனை முடிந்தவுடன் அர்ச்சகர் சிவலிங்கத்தின் மீதிருந்த ஒரு பெரிய மாலையை கொண்டு வந்து நமக்கு போட்டு விபூதி பிரசாதம் தந்தார். சொற்பொழிவாளருக்கும் ஒரு பெரிய மாலையை அணிவித்தார்.
நமக்கு முருகன் சன்னதியில ஒரு மாலை + சிவன் சன்னதியில ஒரு மாலை என டபுள் ட்ரீட் சந்தோஷம்! இதிலிருந்து ஒன்று மட்டும் புரிந்தது. முருகன் சன்னதியில் நமக்கு கிடைத்த மாலையை அந்த தொண்டருக்கு அணிவித்து நாம் உற்சாகப்படுத்த அதை பார்த்துக்கொண்டிருந்த ஈசனோ தன் திருமேனி மாலையை நமக்கு சூட்டி நம்மை உற்சாகப்படுத்திவிட்டான். (ஏனுங்க…. நான் சரியாத் தான் பேசுறேனா?)
கூடவே அன்னையின் தரிசனம் வேறு. தொடர்ந்து அம்பாள் நகைமுகைவல்லி சன்னதியிலும் தரிசனம். அம்பாள் மிகப் பெரிய திருமேனி. மங்கள ரூபிணி. இங்கு குங்குமப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
நம்மை பற்றி சற்று விரிவாக விசாரித்தார்கள். வருடா வருடம் திருக்கார்த்திகை தீபத்தை காண குன்றத்தூர் வரும் தகவலை சொல்லி நமது பிர பணிகளை விளக்கினோம். “உங்க ஆதரவு எங்களுக்கு எப்பவும் வேணும் சார்…” என்றார்கள் வாஞ்சையுடன்.
“நிச்சயம்…! சாரோட சொற்பொழிவு எப்பெல்லாம் இருக்கோ அப்போல்லாம் மறக்காம தகவல் அனுப்புங்க… கூடியமட்டும் கலந்துக்க முயற்சி பண்றேன்!” என்று கூறி நமது விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு விடைபெற்றோம்.
(திருக்கார்த்திகை அன்னைக்கு தனயனை பார்க்கப் போனா அப்பா, அம்மான்னு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நல்ல தொண்டரை உற்சாகப்படுத்தவும் வாய்ப்பு கிடைச்சது. மொத்தத்தில் அர்த்தமுள்ள திருக்கார்த்திகை!!!)
=====================================================
Also check :
கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்? வழிகாட்டுகிறார் மகா பெரியவா!
கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்!
கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!
=====================================================
[END]
மிக நல்ல சுவாரசியம் ஊட்டும் பதிவு.
அழகனை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தையே தரிசித்த பாக்கியம் உங்களுக்கு.
அதை உங்கள் எழுத்தின் மூலம் படித்து பெற்ற அனுபவ பாக்கியம் எங்களுக்கு.
பதிவு நீண்டதாக இருந்தாலும் படிக்க சுவாரசியம் நீங்காமல் இருந்த்தது.
நீங்கள் சொன்னது போல தொடரும் போட்டால் அது வருவதில்லை என்று சொன்ன வாசகிக்கு என் நன்றி
திருவருள் உங்களுக்கு பல மடங்கு மரியாதையை பெற்று தரும்
நன்றி.
மிகவும் அருமையான தத்ரூபமான pathivirku. திரு கார்த்திகை தீபத்தில் thangaludan கலந்து கொண்ட என் மகனுக்கும், என் அக்கா பையனுக்கும் கடுகளவு புண்ணியமாவது கிடைத்து இருக்கும். பதிவு ஜொலிக்கிறது தங்கள் கை வண்ணத்தில் .
கோவிலில் முருகனிடம் சரியான நேரத்தில் எண்ணெய் சென்று சென்று சேர்ந்தது mikka மகிழ்ச்சி . தீபத்திற்கு சேர வேண்டிய எண்ணையை முருகன் தங்களிடமிருந்து பெற்று கொள்ள வேண்டும் என்பது முருகன் விருப்பம்.
சொற்பொழிவு ஆற்றுபவரை சிறப்பித்தது மிக்க magimagilchi.
குன்றத்தூர் முருகன் துணை
நன்றி
உமா
சிறப்பு சகோதரரே!…………………..திரைப்படங்களில் எதிர்பாராத திருப்பம் வைக்க இயக்குநர்கள் படாதபாடு படுகிறார்கள்…………………….இறைவன் எவ்வளவு எளிதாக ஒரு திருப்பத்தைக் கொடுத்து தங்களை நெகிழ்ச்சிப் படுத்தியுள்ளார். உங்கள் மூலமாக, இறைவனின் கருணையை நிணைத்து எங்களின் கண்களும் பணித்தது. நாங்களாக இருந்திருந்தால் இந்தப் பரவசத்திலேயே, அடுத்த வேலை எதுவும் செய்யத் தோன்றாமல் மனமகிழ்ந்து உறைந்துபோயிருப்போம். ஆனால், அடுத்து அடுத்து என நீங்கள் செயல்படும் வேகம் பிரமிக்கவைக்கிறது. இதே போல் என்றென்றைக்கும் நீங்கள் செயல்பட இறைவன் துணையிருப்பார். தங்களுக்கு உதவி செய்த தம்பி ஹரீஷ்க்கும் அவரது உறவினருக்கும் நன்றியுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எண்ணை டினில் இருப்பதும் திரு முருகர் படமே. அவர் உங்களுடன் வந்தே உங்களை ஆட்கொண்டுள்ளார்.
வேலனுக்கு அரோகரா
ப. சங்கரநாராயணன்
கார்த்திகை தீப தரிசன பதிவு அருமை………நமது தளம் சார்பாக வழங்கப்பட்ட எண்ணெயை குன்றத்தூர் குமரன் இவ்வாண்டும் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி தருகிறது. என்றும் அவனது அருளும், அவன் குடும்பத்தினரின் அருளும் நிச்சயம் இருக்கும்………
சொற்பொழிவாளருக்கு நமது தளத்தின் மூலம் மரியாதை கிடைத்தது இறைவனின் விருப்பம் என்று தோன்றுகிறது………..நிச்சயம் அவர் மனமும், கந்தழீஸ்வரர் மனமும் குளிர்ந்திருக்கும்……..