நங்கநல்லூர் நிலாச்சாரல் ராதாகிருஷ்ணன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு வசதியற்ற பெண்ணின் திருமணத்திற்கு உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரு ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுவது நமது நீண்ட நாள் விருப்பம் என்பதால் நாம் திரு.ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு அந்த பெண்ணிற்கு என் தனிப்பட்ட முறையிலும், நம் தளம் சார்பாகவும் ஏதேனும் செய்ய விரும்புவதாக கூறினோம்.
“நீங்கள் என்ன வாங்கித் தர விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபோது ‘கட்டில் அல்லது பீரோ’ போன்ற அத்தியாவசிய திருமணத் தேவைகள் ஏதேனும் வாங்கித் தருவதாகவும், என் தனிப்பட்ட முறையில் அந்த பெண் விளக்கேற்ற விளக்கு வாங்கித் தர விரும்புவதாகவும் சொன்னோம்.
பெண் வீட்டாரிடம் பேசியதில், பெண் வீட்டார் சார்பாக வாங்க வேண்டிய மெத்தை, தலையணை, பெட்ஷீட் மற்றும் ஜமுக்காளம் தேவைப்படுவதாக சொன்னார்கள். “நீங்களே கூட அவற்றை சௌகரியப்பட்ட இடத்தில் வாங்கிக்கொடுத்தால் போதும்” என்றார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். “நீங்களே உங்களுக்கு பிடித்த மாதிரி பிடித்த கடையில் பெண்ணை வைத்து செலக்ட் செய்துகொள்ளுங்கள். கடையின் பெயருக்கு நான் செக்கோ அல்லது டி.டி.யோ கொடுத்து விடுகிறேன். முதலில் எனக்கு கொட்டேஷன் மட்டும் ஒன்று வாங்கி கொடுங்கள்” என்றேன்.
இதையடுத்து நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பி இது தொடர்பாக ஏதேனும் உதவ முடியுமா என்று கேட்டபோது அடுத்த நொடி அவர் தன்னால் இயன்ற தொகையை அனுப்பிவிட்டார். அவர் அனுப்பிய தொகையுடன் வேறு ஒரு செலவுக்கு வைத்திருந்ததில் கொஞ்சம் சேர்த்து ஒரு வழியாக பணத்தை ரெடி செய்துவிட்டேன்.
நான் எதிர்பார்த்தது டபுள் காட் மெத்தை, 4 தலையணை, 2 பெட்ஷீட், 1 ஜமுக்காளம் அனைத்தும் சேர்த்து ரூ.6000/- வரும் என்று. ஆனால் ரூ.9000/- வரவே, ராதாகிருஷ்ணன் அவர்களிடம் விஷயத்தை கூறினேன். “ஒன்றும் பிரச்னையில்லே… நீங்க ரூ.6000/- கொடுங்க. மீதி பணத்தை நிலாச்சாரல் சார்பாக போட்டு வாங்கிடலாம்” என்றார்.
ஒரு விஷயம் முடிச்சாச்சு. அடுத்து விளக்கை என்று வாங்கி தருவது? திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளபடியால் உடனே வாங்கித் தந்தாகவேண்டுமே…! அந்நேரம் பார்த்து கார்த்திகை திருநாள் வர, ஒரு ஏழைப் பெண்ணிற்கு விளக்கை தானம் செய்ய இதைவிட அருமையான நாள் கிடைக்குமா? மேலும் அன்று அதை செய்ய முடிந்தால் அது தானே உண்மையான் கார்த்திகை தீபத் திருவிழாவாக இருக்க முடியும்?
இதையடுத்து நங்கநல்லூரில் வசிக்கும் நம் வாசகர் & நண்பர் திரு.மோகன் அவர்களிடம் விஷயத்தை கூறி அவரை நிலாச்சாரல் அலுவலகம் வரச் சொன்னேன்.
ஞாயிறு மாலை 4.30 ராகுகாலத்திற்கு முன்பு அவற்றை பெண் வீட்டாரிடம் ஒப்படைக்க விரும்பினோம். நங்கநல்லூரில் இதை முடித்துவிட்டு மாலை 5.30க்கு குன்றத்தூர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு அங்கு ஏற்றப்படும் தீபத்தை பார்ப்பதாக பிளான். எனவே நான் இங்கு என் வீட்டில் இருந்து சரியாக மதியம் 3.00 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன்.
நண்பர் மோகனும் வந்துவிட சரியாக 3.45க்கெல்லாம் நிலாச்சாரலில் மணப்பெண்ணின் சகோதரரிடம் மெத்தை தலையனை செட்டுக்கான நம் தளத்தின் காசோலையும் + நிலாச்சாரல் சார்பாக காசோலையும் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து நம் தனிப்பட்ட முறையில் வெள்ளி விளக்குகள் இரண்டு ஒப்படைக்கப்பட்டது.
உண்மையில் கார்த்திகை தீபத்தன்று விளக்கு தானம் செய்யும் பாக்கியம் நம்மை நாடி வரும் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் குன்றத்தூர் முருகனின் திருவுள்ளம் தான்.
நியாயமாக பார்க்கப் போனால் இதை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. இருப்பினும் நமது செயல் இது போன்ற எளிய சேவைகளில் தர்ம காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு தூண்டுகோலாக இருக்குமே என்று தான் பகிர்ந்துகொள்கிறேன்.
இதையடுத்து அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு நேரே குன்றத்தூர் பயணம்.
முந்தைய நாள் நம் வாசகி உமா அவர்களின் மகன் திரு.ஹரீஷ் நம்மை தொடர்புகொண்டு, நமது கார்த்திகை தீப பிளான் என்ன என்று கேட்டபோது, குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை கூறியிருந்தேன்.
இதையடுத்து அவர் தானும் நம்முடன் வரவிரும்புவதாக கூறினார். “நீங்கள் வருவதாக இருந்தால் சரியாக 5.15 pm க்கு அங்கே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நாம் பிரார்த்தனையை முடித்துவிட்டு தீபம் ஏற்றுவதை பார்த்துவிட்டு முருகனை பின்னர் தரிசித்துவிட்டு திரும்பலாம்” என்றேன்.
நங்கநல்லூரில் இருந்து நாம் குன்றத்தூர் செல்லும்போது கிட்டத்தட்ட பிரார்த்தனை நேரம் நெருங்கிவிட்டது. கோவிலில் சரியான கூட்டம். அலை அலையாக மக்கள் வந்தவண்ணமிருந்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பைக்கை அடிவாரத்தில் பார்க்க செய்துவிட்டு வேகமாக படியேறினேன். ஹரீஷ் தனது உறவினர் ஒருவருடன் வந்து காத்திருந்தார்.
முருகனை விரைந்து தரிசிக்க முடியுமா என்று பார்த்தால் கூடியிருந்த கூட்டத்தில் அது சாத்தியமில்லை என்று தோன்றியது. தீபம் ஏற்றும் நேரம் நெருங்கிவிட, தீபத்தை தரிசிக்க முடிவு செய்தோம்.
கோவிலின் அருகே உள்ள ஒரு குன்றில் தீபம் ஏற்றப்படவிருக்கிறது என்று அறிந்துகொண்டோம். இதையடுத்து அந்த இடத்திற்கு விரைந்தோம். செருப்பில்லாத காலில் கல்லும் முள்ளும் நிறைந்த மலையில் ஏறுவது சிரமாக இருந்தது. கூர்மையான கற்கள் கால்களை பதம் பார்த்தன. இருப்பினும் அதிலும் ஒரு சுகம் இருந்தது. இன்றைக்கு இந்த கால்கள் புண்ணியம் செய்தன என்று நினைத்துக்கொண்டேன்.
குன்றின் மீது உள்ள தூணின் உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்கள். நாம் போகும் பொது முன்னே நமக்கு முன்னே, ஆலய ஊழியர் ஒருவர் விளக்கிற்கு ஊற்ற எண்ணை டின்னை சுமந்துகொண்டு சென்றார். சற்று உற்றுப் பார்த்தால், அட நாம் வாங்கி தந்த டின். எனக்கு ஒரே சந்தோஷம்.
கார்த்திகை தீபம் ஏற்ற நாம் வாங்கி தந்த எண்ணையை தான் ஊற்றப்போகிறார்கள் என்று ஹரீஷ்ஷிடம் சொன்னபோது அவருக்கும் சந்தோஷம்.
மேலே தீபம் ஏற்றப்படும் ஸ்தூபத்திற்கு அருகே காத்திருந்தோம். சற்று நேரத்தில் மேள தாளத்துடன் ஆலயத்திலிருந்து ஜோதி வந்தது.
தீபத்திற்கு நாம் அளித்த எண்ணையை ஊற்றியபோது கண்களில் நீர் வழிந்தது. அந்த நெகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஏனெனில், நாம் எண்ணை வாங்கித் தந்தது கோவிலில் விளக்கேற்ற. ஆனால் அது கார்த்திகை தீபத்திற்க்கே பயன்படுகிறது என்றால் அந்த பாக்கியத்தை என்னவென்று சொல்ல.
தூணிற்கு பூஜைகள் செய்த பிறகு அரோகரா கோஷத்துடன் ஜோதி ஏற்றப்பட்டது. நமது பிரார்த்தனை கிளப்பிற்க்கான பிரார்த்தனையை அந்த மகோன்னதமான நேரத்தில் செய்தேன். நம் வாசகர்கள் அனைவருக்கும், அன்று பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியவர்களுக்கும் இதற்கு முன் சமர்பித்த அனைவருக்கும், தீபம் ஏற்றப்படும்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.
(இதில் என்ன அதிசயம் என்றால், காலை வரை பயமுறுத்திக்கொண்ட மழை, பின்னர் படிப்படியாக குறைந்து சரியாக தீபம் ஏற்றும் நேரம் வானம் பௌர்ணமி நிலவுடன் அழகாக காட்சியளித்தது என்பதே! வருணபகவான் எங்கள் அண்ணாமலையாரின் ஜோதிக்கு வழிவிட்டு ஒதுங்கினான். அவ்வளவே.)
குன்றின் மீது வீசிய குளிர்ந்த காற்று நம்மை வருட, பரவசத்துடன் குன்றத்தூர் முருகனுக்கு நன்றி சொன்னேன். இப்படி ஒரு சந்தோஷத்தை, மனநிறைவை என் வாழ்வில் இது வரை அனுபவித்ததில்லை. இப்படியெல்லாம் கூட ஒரு மகிழ்ச்சி இருக்கிறது என்று தெரியாமலே காலங்கழித்தவன் நான்.
ரைட்மந்த்ரா என்ற ஒன்றை நான் நடத்திக்கொண்டிருக்கவில்லை என்றால் இந்நேரம் இங்கே நின்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தரிசித்துக்கொண்டிருப்பேனா என்று தெரியாது. நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் செல்வதை போல, உங்களுக்காக பணி செய்ய, உங்களுக்காக எழுத களமிறங்கி இன்று இது போன்ற மகத்துவம் வாய்ந்த விஷயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. எனவே இறைவனுக்கடுத்து இதுபோன்ற விஷயங்களுக்கு ஊக்கமளித்து அவற்றை படித்து மகிழும் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும்.
ஜோதி ஏற்றப்பட்டதையடுத்து வாணவேடிக்கைகள் நடைபெற்றது கண்கொள்ளா காட்சி. ஜோதி ஏற்றப்பட்ட நேரம் அந்தி சாயும் பொழுது என்பதால் கருநீல நிற வானமும், பின்னணியில் தெரிந்த கோவிலும் பார்க்க அத்தனை அழகு. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து பார்த்தபோது குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் கருப்பு போர்வையில் மொய்த்திருக்கும் மின்மினி பூச்சிகள் போல மிக அழகாக தெரிந்தன.
ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து பெறப்பட்ட ஜோதியை கைகாளால் ஒற்றி வணங்கிவிட்டு திருநீறு பூசிக்கொண்டு கீழே கோவிலுக்கு சென்றோம். கட்டுங்கடாத கூட்டம். கூட்டத்தை பார்த்தபோதே தெரிந்துவிட்டது ரகு குருக்கள் எந்தளவு பிசியாக இருப்பார் என்று. எனவே அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் மூலவர் சன்னதியில் தான் இருப்பார். அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று வரிசையில் நின்றோம். ஆனால் ரகு குருக்கள், உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உற்சவர் முன்பாக நின்றுகொண்டிருந்தார்.
நம்மை பார்த்தவுடன், நாம் இருக்கும் இடம் நோக்கி வந்தார். “பிரார்த்தனை நேரமாயிடுச்சே சாரை இன்னும் காணோமேன்னு நினைச்சேன். எப்படியும் வந்திருப்பீங்க. தீபம் ஏத்துறதை பார்க்க போயிருப்பீங்கன்னு தெரியும்.”
“ஆமாம் சுவாமி.. அற்புதமான அனுபவம். திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை இத்தனை அருகில் இருந்து இதுவரை நான் பார்த்ததில்லை. தன்னை நாடி வந்த சில நாட்களிலேயே முருகன் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு தருவான் என்று நினைச்சுக் கூட பார்க்கலை.. தீபத்துக்கு கூட நம்ம எண்ணை தான் போயிருக்கு போல?”
“ஆமாம்… தீபம் ஏற்ற எண்ணை கேட்டாங்க… லிட்டர் கணக்குல ஊற்றவேண்டியிருக்கும் என்பதால நீங்க வாங்கித் தந்த டிண்ணை அப்படியே கொடுத்துட்டேன்” என்றார்.
“மிகப் பெரிய பாக்கியம் சார் எங்களுக்கு!”
“எல்லாம் முருகனோட திருவுள்ளம் தான். அப்புறம் பிரார்த்தனை நேரத்துல கரெக்டா நீங்க கொடுத்த பிரிண்ட்-அவுட்டை வெச்சி பிரார்த்தனை பண்ணிட்டேன்” என்று அந்த நகல்கள் முருகனின் திருப்பாதத்தில் – மூலவர் சன்னதியில்- வைக்கப்பட்ட விஷயத்தை சொன்னார். (நாம் முன்தினமே பிரிண்ட்-அவுட்டை கொடுத்துவிட்டு வந்திருந்தோம்.)
“ரொம்ப சந்தோஷம் சுவாமி. ரொம்ப நன்றி.”
“உள்ளே போய் சுவாமியை தரிசனம் பண்ணிட்டு வாங்க” என்றார்.
தொடர்ந்து மூலவரை தரிசிக்க சென்றோம். சுப்ரமணிசுவாமிக்கு சந்தனக்காப்பில் பிரமாதமான அலங்காரம். ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்ற வரியின் பொருள் மற்றொரு முறை புரிந்தது.
தரிசனம் முடித்து பிரார்த்தித்துவிட்டு வெளியே வந்தோம்… ரகு ஐயர் மீண்டும் அழைத்தார். எங்கள் மூவருக்கும் பிரசாதம் கொடுத்து முருகனின் திருமேனியில் இருந்து சிறிய மாலைகளை எடுத்து ஆளுக்கு ஒன்றை அணிவித்தார்.
உடல் ஒரு கணம் சிலிர்த்தது.
ஹரீஷ் இயல்பிலேயே முருக பக்தர் என்பதால் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை.
“ரொம்ப நன்றி சுந்தர் சார். இப்படி ஒரு அனுபவம், இப்படி ஒரு தரிசனம் அதுவும் கார்த்திகை அன்னைக்கு எதிர்பார்க்கவே இல்லை” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“நீங்க வரணும்னு நினைச்சீங்க. முருகன் நடத்தி வெச்சிட்டான். THAT’S ALL”
வேண்டுவார் வேண்டுவது ஈவது ஈசன் மட்டுமல்ல. அவன் மைந்தன் முருகனும் தான்.
பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, கொடி மரத்தை தாண்டி நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.
கீழே அடிவாரம் வந்து ஒரு சில புகைப்படங்கள் எடுத்தபிறகு புறப்பட்டோம்.
நான் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பும்போது, மணப்பெண்ணின் அம்மாவிடம் இருந்து ஃபோன்.
“விளக்குகள் ரொம்ப நல்லாயிருக்குப்பா. ரொம்ப தேங்க்ஸ். மெத்தை, தலையணைக்கு கூட பணம் கொடுத்துட்டதா பையன் சொன்னான். ரொம்ப ரொம்ப நன்றி. கொஞ்சம் இருங்க என் டாட்டர் பேசணும்னு சொல்றா…”
அடுத்த நொடி அந்த பெண்ணே லைனுக்கு வந்தார்…. “ரொம்ப தேங்க்ஸ் சார்… இத்தனை சுலபமா இது முடியும்னு நான் நினைச்சு கூட பார்க்கலே!” என்றார்.
“உங்க நன்றியை குன்றத்தூர் முருகனுக்கும் மஹா பெரியவாவுக்கும் சொல்லுங்க. அவங்க தான் இந்த எண்ணம் எங்களுக்கு தோன்றியதற்கு காரணம். திருமணம் சிறப்பாக நடைபெற எங்கள் வாழ்த்துக்கள். கல்யாணத்துக்கு பிறகு உங்க கணவரோட சேர்ந்து நீங்களும் உங்களால முடிஞ்ச உதவிகளை அடுத்தவங்களுக்கு செய்யனும்” என்று கேட்டுக்கொண்டேன்.
(தலைப்பில் ஏன் மூன்று விளக்குகள் என்று சொல்லியிருக்கிறேன் என்று புரிகிறதா?)
மெத்தை வாங்குவதற்கு உதவிட்ட பெயர் வெளியிட விரும்பாத நம் நண்பருக்கும் இத்துடன் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவனை வணங்குவதைவிட அவன் உண்மையில் மனம் குளிரும்படி அவனுக்கு உகந்த ஒரு நாளை கழித்ததே எனக்கு திருப்தி தான்! அந்த வகையில் இந்த வருட திருக்கார்த்திகை என்னால் மறக்கமுடியாத ஒன்று!!
[END]
பதிவை படிக்க படிக்க எங்களுக்கும் ஒரே சந்தோசம். தீபம் ஏற்றும் போது அண்ணாமலை தீபத்தை பார்த்த திருப்தி எங்கள் மனதிலும் வந்தது.
உங்களுடன் சேர்ந்து நம் நண்பர்களும், ஹரீஷும் புண்ணியம் செய்துள்ளான். எல்லோரும் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறோம்
வேண்டுவார் வேண்டுவது ஈவது ஈசன் மட்டுமல்ல. அவன் மைந்தன் முருகனும் தான். அண்ணாமலை தீபமும் குன்றத்தூர் தீபமும் ஒன்று போல தெரிகிறது .
தீபத்தன்று விளக்கு தானம் கொடுத்த உங்களுக்கு என்ன தரவேண்டும் என்று முருகனுக்கு தெரியும்.
அழகென்ற சொல்லுக்கு முருகா’ சொல்லுக்கு மட்டுமல்ல வேண்டியவர் வேண்டிய உள்ளத்திற்கும், அதை நிறைவேற்றுவதிலும் தான்.
முருக பக்தர்கள் மூவர் கூடி குன்றத்தூர் தீபம் பார்த்தது நாங்கள் அனைவரும் பார்த்த திருப்தி.
உங்கள் எல்லோருக்கு அவரவர் ஆசையை முருகன் நிறைவேற்றுவான்.
நன்றிகள் பல.
அன்பார்ந்த ரைட் மந்த்ரா சுந்தர் அவர்களுக்கு,
ஒரு வசதிகுறைவான பெண்ணின் திருமணத்திற்காக தாங்கள் செய்த உதவி குறித்த செய்தியையும், (ரைட்மந்த்ரா வாயிலாக) குன்றத்து}ர் முருகனின் தரிசினங் குறித்து எழுதிய சேதிகளும், உண்மையிலேயே என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது .
டியர் சுந்தர்ஜி
தங்கள் பதிவை படித்து மிகவும் பரவசமானேன். ஒரு பெண் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறீர்கள். நிச்சயமாக முருகன் உங்களுக்கு அருள் புரிவார்.
எனது மகன் ஹரிஷிற்கும் எனது அக்கா மகன் ஹரிக்கும் உங்களின் மூலம் முருகனை தரிசித்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சி.
உங்களது ஆன்மிக பயணம் உங்களது துணை உடன் தொடர ரைட் மந்த்ரா சார்பாக வாழ்த்துகிறேன்
நன்றி
UMA
கார்த்திகை அன்று முன்று விளக்குகள் ஏற்றிய திரு.சுந்தர் அவர்கள் இல்லத்தில் விரைவில் மங்கள ஓசை முழங்க எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவார்
ஓம் சரவண பவ
திருசெந்தூர் முருகன் துணை
கொடுத்து வைத்தவர்கள் மிக்க மகிழ்ச்சி. வாழ்க ரைட் மந்த்ரா!!!!! வளர்க உங்கள் தொண்டு!!!!!