Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

print
டிக்கடி குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்வது குடும்பஸ்தர்களின் மிகப் பெரிய கடமைகளில் (?!) ஒன்றாகிவிட்டது. சும்மா பீச், பார்க்குன்னு கூட்டிகிட்டு போய் எத்தனை முறை அவங்களை ஏமாத்துறது சார் என்று பலர் என்னிடம் புலம்புவதுண்டு. அவர்களுக்கு இது போன்ற பக்திச் சுற்றுலா பற்றிய பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்பவர்களின் பெரும்பாலான தேர்வு சினிமா அல்லது AMUSEMENT PARK என்றழைக்கப்படும் கேளிக்கை பூங்காக்களாகத் தான் இருக்கின்றன. இவற்றுக்கு செல்லும்போது சராசரி 4 உறுப்பினர்கள் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் குறைந்தது ஒவ்வொரு முறையும் ரூ.2000/- செலவழிக்க வேண்டியுள்ளது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் என்றால் ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காடு இது தான் பலரது சாய்ஸ். அதற்கு மேல் சிந்திக்க இன்றைய நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.

ஒரு சேஞ்சுக்காக குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பக்திச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாமே…? ஒரு அரைநாளில் போய்விட்டு வரக்கூடிய அளவில் சென்னையை சுற்றிலும் பல அற்புதமான தொன்மை வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் பரிகாரத் தலங்களும் பல இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைக்குபோது அவரவர் சௌகரியப்படியோ வார இறுதியிலோ அல்லது அரசு விடுமுறை நாளிலோ சென்று வரலாமே? குழந்தைகளுக்கு பக்தியை ஊட்டியது போலவும் ஆச்சு. புண்ணியத்துக்கு  புண்ணியமும் தேடின மாதிரி ஆச்சு.

பக்திச் சுற்றுலாவில் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒரு பரிகார ஷேத்ரம். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம். மற்றவர்களும் தரிசிக்கலாம்.

சென்னையிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில், அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள மப்பேடு என்னும்  ஊரில் இந்த கோவில் உள்ளது.

பேரம்பாக்கம் நரசிங்கபுரம் போற வழியில இந்த கோவில் இருக்கு. இதுக்கு முன்னாடி பேரம்பாக்கம் பல முறை போயிருக்கேன். ஒவ்வொரு முறையும் இந்தக் கோவிலோட அழகுல மயங்கி ஒரு சில வினாடிகள் பைக்கை நிறுத்திவிட்டு ரசித்துவிட்டு தான் போவேன். “என்னக் கோவில்னு தெரியலியே…? அடுத்த தடவை வரும்போது நிச்சயம் போய்டணும்… அடுத்த தடவை வரும்போது நிச்சயம் போய்டணும்…” அப்படின்னு ஒவ்வொரு முறையும் சொல்லிக்குவேன். ஆனா போறதுக்கு நேரமிருக்காது. உன்னை எப்படியும் வர வெச்சிடுவேன்னு பரமசிவன் முடிவு பண்ணிட்டாரு போல. புத்தாண்டு அன்னைக்கு நரசிங்கபுரத்துல நரசிம்மரை தரிசனம் பண்ணின பிறகு ரிட்டர்ன் வரும்போது இந்த கோவிலுக்கு போனோம்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லால் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு செல்வதே ஒரு தனி அனுபவம். அதென்னவோ தெரியலேங்க.. இந்த மாதிரி கோவிலுக்கு போகும்போது உள்ள காலடி எடுத்து வைக்கும்போதே ஒரு தனி வைப்ரேஷனை உணர முடியுது. அதுவும் இந்த சிங்கீஸ்வரர் ஆலயம்…. அதன் சுற்றுப்புறம், அதன் பசுமை… அப்பப்பா.. பேரழகு!

கோவிலை ஆற அமர ரசிச்சு ஒவ்வொரு சன்னதியும் போய் சேவிச்சோம். மூலவர் சிங்கீஸ்வரர் நாகாபரண அலங்காரதுல என்ன அழகு தெரியுமா? மத்தவங்க தரிசனம் பண்ணட்டுமேன்னு வெளியே வந்தேன். இல்லேன்னா ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க மாட்டேன்.

வெளியே வந்தா சுடச் சுட தயிர் சாதம் பிரசாதம் கொடுத்தாங்க. (அதோட டேஸ்ட்  பத்தி நான் தனியா சொல்லனுமா என்ன?)

அப்புறம் லக்ஷார்ச்சனை நடந்துக்கிட்டுருந்தது. உடனே வெளியே வந்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வினோதினி அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி அவங்க ராசி நட்சத்திரம் கேட்டுக்கிட்டோம். அவங்க பேர்ல அப்புறம் அர்ச்சனை பண்ணினோம். கோவில் அலுவலத்துல கொஞ்ச நேரம் பேசிக்கிட்டுருந்துட்டு புறப்பட தயாரானோம். கிளம்ப மனசில்லே… இருந்தாலும் வினோதினி அப்பாவை பார்த்து DD  கொடுக்கனும்கிறதால கிளம்பிட்டோம். ஏற்கனவே நாங்க லேட்.

இப்போ கோவிலை பத்தியும் அதோட வரலாறு சிறப்பு பத்தியும் பார்ப்போமா?

தல வரலாறு :

திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார். இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள் மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.

நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்மாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிறப்பம்சம்:

ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்கநாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள்.

இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.  மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்.

வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்:

சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது, இந்த தளத்திற்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வரட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு இப்பகுதி மக்கள் வேண்டிக்கொண்டதாகவும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்படுகிறது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள்.

கோவிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது.

சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது, இந்த தளத்திற்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வரட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு இப்பகுதி மக்கள் வேண்டிக்கொண்டதாகவும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்படுகிறது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள்.

பிரார்த்தனை :

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஒவ்வொரு மாதத்திலும் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய தினத்தன்று இந்த கோவிலுக்கு வந்து இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் துன்பகங்கள் யாவும் விலகி இன்பம் பெருகும். தொடர்ந்து இது போன்று ஐந்து முறை (ஐந்து மாதங்கள்) செய்யவேண்டும்).

தல சிறப்பு :

கோவிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரன கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும். இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள்.42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு:

பிரகாரத்தில் ஆஸ்தான் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர் வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

சிவன் சன்னதியில் பெருமாள் காணப்படுவது மிகவும் அபூர்வம். தவிர, மூலவரின் பக்கவாட்டு சுவரில் பிரம்மாவின் சிலை காணப்படுகிறது. வியாழக்கிழமை தோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது.

சோழர் கால கோயில்:

வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார்.

பஸ் ரூட் :

சென்னை பூவிருந்தவல்லி, தி.நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து நேரடி பேருந்து வசதி இருக்கிறது.  591, 591A, 591B, பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி மப்பேடு என்ற ஸ்டாப்பில் இறங்கவேண்டும்.

திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம வழியே செல்லும் காஞ்சிபுரம் பேருந்திலும் செல்லலாம்.

சுங்குவார் சத்திரத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் பேருந்தில், காட்டு கூட் ரோடு என்ற நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வரலாம். ட்ரெயினில் வருபவர்கள் அரக்கோணம் – சென்ட்ரல் மார்க்கத்தில் உள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறினால் இங்கு வரலாம்.

கால் டாக்சியில் செல்ல விரும்பினாலும் ஓகே. பூவிருந்தவல்லியில் இருந்து சுமார் 40 கி.மீ  தொலைவில் மப்பேடு உள்ளது.

சென்னை-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சவீதா மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அரக்கோணம் சாலையில் திரும்பவேண்டும். அங்கிருந்து ஒரே நேர் சாலையில் சென்றால் மப்பேட்டை அடைந்துவிடலாம்.

மூல நட்சத்திரக்காரர்கள் தான் போகணும்னு எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் போகலாம். ஈசன் அருளை பெறலாம்.

இன்னும் என்ன யோசிக்கிறீங்க? ஒரு விடுமுறை நாள்ல கிளம்புங்க. வீட்டிலேயே தயிர் சாதமோ அல்லது புளியோதரையோ தயார் செஞ்சி எடுத்துகிட்டு போங்க. தரிசனம் முடிச்சவுடனே கோவிலின் புல்வெளியில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுங்கள். அந்த அனுபவமே தனி. (அந்த இடத்தை அசுத்தம் செய்யமா நடந்துக்கோங்க).

முகவரி : அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில்,  மப்பேடு – 631 403 (பேரம்பாக்கம் வழி), திருவள்ளூர் மாவட்டம்

திறக்கும் நேரம்: காலை 6.00 – 9.00 AM  மாலை 5.30 – 7.30 PM . ஃபோன்: 94447 70579,94432 25093

கொஞ்சம் பெரிசா பிளான் பண்றவங்களுக்கு பக்கத்துல இருக்குற இன்னொரு கோவில் பத்தியும் சொல்றேன்.  அடுத்த பதிவில் : இதன் அருகே இருக்கும் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) லக்ஷ்மி நரசிம்மர்.

[END]

8 thoughts on “சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

  1. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது கோவில் தரிசனமும் கோடி புண்ணியம் உங்கள் தயவால் புது புது கோவில்களை தரிசனம் செய்து வருகிறோம் ,தரிசனம் மட்டும் அல்லாமல் தல வரலாறு அறிவது அதை விட சிறப்பாக இருக்கிறது

  2. அருமையான தகவல் சுந்தர் ஜி !!!
    கோவிலை நேரில் தரிசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் !!!
    நேரம் கிடைக்கையில் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் !!!
    எல்லாம் வல்ல அந்த ஈசன் எல்லோரும் இன்புற்றிருக்க அருள் புரிவாராக !!!

  3. நல்ல தகவல். உங்கள் பழைய தகவல் படி புதுபக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில்கு சென்று வந்த்தோம். குடும்பத்தில் எல்லாரும் மன நிறைவு. நன்றி.

    ————————————————
    மிக்க மகிழ்ச்சி!
    – சுந்தர்

  4. அருமையான பதிவு சுந்தர் . கண்டிப்பாக ஒரு முறை அங்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும். செல்வேன். புராதன சிவாலயங்கள் பக்தி புகட்டுவது மட்டுமின்றி நம் வரலாறு , கலாச்சாரம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கையை கோடிட்டு காட்டும். தஞ்சை பெரிய கோவில் ஒன்று போதும் ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து நிற்க.
    பதிவுக்கு மிக்க நன்றி.

    ஒரு குறிப்பு —

    நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் ஆதித்த கரிகாலன் , ராஜ ராஜ சோழனின் தந்தை அல்ல , தமயன்.
    பராந்தக சுந்தர சோழர் க்கு பிறந்தது மூன்று பேர் – முதலாவது ஆதித்த கரிகாலன் , இரண்டாவது குந்தவை தேவி , மூன்றாவது அருள்மொழிவர்மன் என்கிற ராஜ ராஜ சோழன். ஆதித்த கரிகாலன் சிறு வயதிலேயே ( வீர பாண்டியனை கொன்ற பின்பு ) அகால மரணம் அடைந்தான் — அதன் காரணம் இன்று வரை ஒரு புதிர் தான்.
    அமரர் கல்கி தன் பொன்னியின் செல்வன் ல் இதை பற்றி சொல்லி இருப்பார்.

    தமிழ் வரலாறு படிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – அதுவும் குறிப்பாக சோழர்கள் மீதும் சோழ சாம்ராஜ்யத்தின் மீது எனக்கு அதிக பற்று உள்ள காரணத்தால் அவர்களை பற்றி நிறைய படித்துள்ளேன் , அதனால் எனக்கு இது தெரிய வந்தது.

    —————————————————————-
    வருகை தந்தமைக்கும் தகவலுக்கும் நன்றி !
    கோவிலுக்கு போய்விட்டு வந்து சொல்லுங்கள்!!
    – சுந்தர்

  5. ” அமரர் கல்கி தன் பொன்னியின் செல்வன் ல் …..அவர்களை பற்றி நிறைய படித்துள்ளேன்” உள்ளதை நானும் வழி மொழிகிறேன் …எங்கள் ஊருப்பா … மேலும் விரைவில் கோவிலுக்கு போய்விட்டு வந்து தொடருகிறோம் நாகராணி chennai

  6. After so many days today only the site opened in my office. all these days it was blocked. Nice article.
    I dont know whether you had covered about Padi Thiruvalidhayam (exact spelling i dont know) . It is very famous & old shiva temple & its a gurustalam….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *