உயர்குடியில் பிறந்திருந்தும் எந்த வித லட்சியமும் இன்றி பரத்தையர் வீட்டுக்கு செல்வதையே ஆனந்தமாக கருதி அருணகிரி வாழ்ந்து வந்தார். அவரிடம் செல்வம் வற்றி, உடலில் ரோகம் பீடித்த பின்னர், ‘அற்ற குளத்து அறுநீர் பறவை’ போல அனைவரும் விலகிச் சென்றுவிட, ஊரார் வெறுத்து ஒதுக்க, திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார் அருணகிரி. முருகப் பெருமான் அதுசமயம் ஓடிவந்து அவரை தடுத்தாட்கொண்டு, பெறுதர்க்கரிய இந்த மானிடப் பிறவியை இப்படி வீணாக்கலாமா? என்று கூறி பிரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார்.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை மோட்சம் வேண்டி இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லி அவர் நாவில் ஷடாக்ஷர மந்திரத்தை எழுதுகிறான். முருகனின் வேல், நாவில் பட்டவுடன், அருணகிரி அருணகிரிநாதராக மாறுகிறார். “முத்தைத் தரு பத்தித் திருநகை” என முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான் கந்தன்.
அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
இது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதனாக இருந்த சம்பந்தாண்டான் என்பவனுக்கு தெரிய வந்தது. தேவி உபாசகனான அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் அதை தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் சாட்சாத் காளி தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் தோன்ற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். பந்தயத்திற்கு முந்தைய தினம் இரவு, பலவித யாகங்கள் செய்து காளியை தோன்றச் செய்து மறுநாள் சபையில் அவள் மைந்தன் முருகன் அருணகிரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தோன்றக்கூடாது என்றும் வரம் பெற்றான்.
மறுநாள் மன்னன் தலைமையில் ஊற மக்கள் சபை கூடியது.
முதலில் அருணகிரி முருகனை தோன்றச் செய்யட்டும் என்று சவால்விட, அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார்.
ஏற்கனவே சம்பந்தாண்டனுக்கு காளி வரம் கொடுத்தபடியால் முருகனை தேவி விடவில்லை. இதை ஞானதிருஷ்டியில் உணர்ந்த அருணகிரிநாதர், மயில்விருத்தத்தை பாடி மயிலை ஆடவைத்து அதன் மூலம் தேவியை மயங்கவைத்து மயிலைக் கொண்டு முருகனை தோன்றச் செய்தார்.
செங்கேழ் அடுத்த சின வடிவேலும் என்று துவங்கும் அந்த பாடல் மிக மிக அற்புதமான பாடலாகும்.
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே
அருணகிரிநாதர் பாடி முடித்ததுதான் தாமதம், மயில்வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தூணைப் பிளந்து தோன்றினான். கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.
மேற்படி சம்பவம் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த ‘அருணகிரிநாதர்’ படத்தில் பாடலுடன் இடம்பெற்றிருக்கும். சம்பந்தாண்டானாக நடிகவேள் எம்.ஆர். ராதா நடித்திருப்பார். கேட்கவேண்டுமா சுவாரஸ்யத்துக்கு…. பட்டையை கிளப்பும் அதன் வீடியோவை இணைத்திருக்கிறோம். இயன்றவர்கள் பாருங்கள் இன்பத்தேன் பருகுங்கள்.
(டி.எம்.எஸ். அவர்களை நாம் பேட்டிக்காக இரண்டாண்டுகளுக்கு முன்னர் சந்தித்தபோது இது பற்றி பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது!)
அருணகிரிநாதருக்காக பலர் முன்பு முருகன் தோன்றும் காட்சி – வீடியோ
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் தவில் வித்வானாக இருக்கும் திரு.தண்டபாணி அவர்கள்.
போரூர் இராமாநாதீஸ்வரர் ஆலயத்தை பொருத்தவரை இந்த ஆலயத்தில் மங்கள வாத்தியக் கலைஞர்களாக இருப்பது திரு.துரை (நாதஸ்வரம்) மற்றும் திரு.தண்டபாணி (தவில்) அவர்கள். இவர்களில் திரு.துரை ஏற்கனவே நமது பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியிருக்கிறார். (எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்)
ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளின் போது மங்கள வாத்தியங்கள் வாசிப்பர். இறைவனுக்கு புரியும் தொண்டுகளில் மிக உன்னதமான தொண்டு அது.
நம் இசை மரபில் எத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. அவற்றுக்கு எல்லாம் மங்கல வாத்தியம் என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்த பெருமை உண்டு. ரிக் வேத காலத்திலேயே இக்கருவிகளுக்கு முக்கியத்துவம் இருந்துள்ளது. ‘உத்திரவேணு’ என்ற நாதஸ்வரம் கருவியும், வீணையும் யாகம் செய்யும் போது இசைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த இசையை நம்பி வாழ்ந்து வந்த பல கலைஞர்கள் நலிவடைந்து வறுமையில் உள்ளனர். திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கூட இன்றைக்கு நாதஸ்வர இசைக்கு முக்கியத்துவம் இல்லை. நமது பண்பாட்டு இசை மரபின் வேராக இருக்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்
நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம், மங்கள வாத்திய கலைஞர்களை எங்கே பார்க்க நேர்ந்தாலும் அவர்களை கௌரவிக்கும் வழக்கத்தை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆலயங்களில், மற்றும் இதர இடங்களில் அவர்களை பார்த்தால் அவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளுதவி செய்து இன்ப அதிர்ச்சி அளிப்பது நம் வழக்கம்.
இந்த ஆண்டு மார்கழி தரிசனத்திற்கு தினசரி அதிகாலை இராமநாதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வருகிறோம். அப்போது திரு.தண்டபாணி அவர்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோகண்டி என்னும் கிராமத்தை சேர்ந்த திரு.தண்டபாணி (62) தனது 15 வது வயது முதலே தவில் வாசித்து வருகிறார். அவரது தந்தை தான் அவருக்கு குரு. இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளிலும், வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட கோவில்களிலும் தவில் வாசித்துள்ளார்.
இவர் குடும்பத்தினர் வழி வழியாக கற்று வாசித்து வந்த இந்த அருங்கலை போதிய வருவாய் மற்றும் ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது இவருடனேயே நின்றுவிட்டது. தகுதியற்றவர்களை எல்லாம் அரவணைத்து கஜானாவை காலி செய்யும் நம் அரசுகள் இவர்களைப் போன்ற திருக்கோவில் தொண்டு புரியும் இசைக் கலைஞர்களுக்கு மானியம் அளித்து இந்த கலையை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
நமது தளம் சார்பாக வரும் ஜனவரி 1 அன்று இவரும் இவருடன் நாதஸ்வரம் இசைத்து வரும் திரு.துரை அவர்களும் கௌரவிக்கப்படுவார்கள்.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்தக் கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்பக்கொண்டார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
Also check :
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
==================================================================
ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
நம் நெருங்கிய நண்பரும் சங்கர நேத்ராலயாவில் மருத்துவ சமூகவியலாளர் மற்றும் மேலாளராகவும் இருக்கும் திரு.இருங்கோவேள் அவர்களின் சகோகரியுமான திருமதி.அருந்ததி மாலா (59) அவர்கள் சென்ற வாரம் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார்.
சகோதரியை இழந்து வாடும் திரு.இருங்கோவேள் அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தேவையான ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் வழங்கவேண்டும். அன்னாரது ஆன்மா சாந்தியடைந்து சிவபதத்தில் நிலைத்திட எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை வேண்டுவோம்.
திரு.இருங்கோவேள் நமது நிகழ்சிக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த சூழலால் அவரால் வர இயலவில்லை. நேற்றைக்கு நம்மை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கிய பின்னர் தான் நமக்கு விஷயம் தெரியும்.
==================================================================
ஜெயராமன் குணம்பெறவேண்டும்; உழவாரத் தொண்டு சிறக்கவேண்டும்!!
இருகால்கள் இழந்த நிலையிலும் உழவாரப்பணியில் தவறாமல் கலந்துகொண்டு இறைத் தொண்டு செய்து வரும் திரு.ஜெயராமன் அவர்கள் சிறந்த உழவாரப்பணிக்கான நமது அப்பர் திருநாவுக்கரசர் விருதை சென்ற வார விழாவில் பெற்றது நினைவிருக்கலாம்.
தற்போது திரு.ஜெயராமன் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று நாடும் வீடும் போற்ற நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்து தனது அருந்தொண்டை தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
நமது நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பரும் தினமலர் இணைய ஆசிரியருமான திரு.முருகராஜ், ஜெயராமன் அவர்களின் அவர்களின் தொண்டை உலகறியச் செய்யும் பொருட்டு தினமலர் – நிஜக்கதை அவரைப் பற்றிய பதிவையும் புகைப்படங்களையும் அளித்து அவரை கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள் 618)
(பொருள் : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.)
தினமலரில் இடம்பெற்றுள்ள செய்தி :
ஜெயராமா…ஜெயராமா!
-எல்.முருகராஜ்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்னையில் ரைட் மந்திரா நடத்திய விழாவின் மத்தியில் ஒரு அறிவிப்பு.
இந்த வருடம் கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப்பணியில் சிறப்பாக செயல்பட்ட ஜெயராமன் என்பவருக்கு அப்பர் திருநாவுக்கரசர் விருது வழங்கப்படுகிறது என்று.
அந்த அறிவிப்பை தொடர்ந்து சபையின் நடுவில் பார்வையாளர் பார்க்கும்படியாக ஒரு நாற்காலி கொண்டுவந்து போடப்பட்டது.
தொடர்ந்து ஒருவர் கைக்குழந்தையை துாக்கிக்கொண்டு வருவது போல மார்போடு இறுக அணைத்தபடி ஒருவரை துாக்கிக்கொண்டுவந்து நாற்காலியில் உட்காரவைத்தார்.
அதற்குபிறகுதான் தெரிந்தது விருது பெற இருக்கும் ஜெயராமன் இடுப்புக்கு கிழே இரண்டு கால்களும் இல்லாமல் இருப்பதை.அரங்கம் முழுவதுமே அப்படியொரு அமைதி. எப்படி இவரால் இந்த நிலமையில் உழவாரப்பணியில் ஈடுபட முடிந்தது என்று அனைவருக்குமே ஆச்சர்யம்.
இப்போது ஐம்பத்தைந்து வயதைத்தொட்டுள்ள ஜெயராமன் சென்னையில் உள்ள கனரா பாங்கில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார்.
வெளியூர் போய்விட்டு திரும்பும் போது எதிர்பாரமல் ஏற்பட்ட மின்சார ரயில் விபத்தில் சிக்கி தனது இரண்டு கால்களையும் இழந்தார்.
இரண்டு வருட மருத்துவ போராட்டத்திற்கு பிறகு உயிர்பிழைத்தார். கார் ஒட்டுவதற்கு தேவையான கால்கள் இல்லாமல் வாழ என்ன வழி என்ற நிலையில் பாங்க் நிர்வாகம் கருணையோடு ஜெயராமனுக்கு அவரால் என்ன வேலை செய்யமுடியும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வேலை கொடுத்துள்ளது.
கே.கே.நகரில் உள்ள வீட்டைவிட்டு மூன்று சக்கர சைக்கிளில் கிளம்பி பாங்க் வேலை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையார் அறப்பணிக்குழு ராமச்சந்திரன் என்பவருடன் தொடர்பு கிடைத்தது.
இந்த அறப்பணி குழுவானது எந்தவித எதிர்பார்ப்புமின்றி உழவாரப்பணிகளை செய்துவருகிறது.இதுவரை 86 நாட்களில் 60 கோவில்களில் உழவாரப்பணியினை மேற்கொண்டுள்ளது.
கடலுாரில் உள்ள ஒரு கோவிலுக்கு உழவாரப்பணியினை மேற்கொள்ள செல்லும் போது ஜெயராமன் தானும் கோவிலை சுத்தம் செய்யும் பணிக்கு வருவதாக சொல்லியுள்ளார்.
உனக்கு நடந்து போக கால் இல்லையேப்பா எப்படிப்பா? என்று கேட்டபோது சுத்தம் செய்ய இரண்டு கைகள் இருக்குங்களேய்யா என்று சொன்னதும் நிச்சயம் நீ எங்ககூட வர்ரே என்று சொல்லி காரில் கடலுார் கோயிலில் கொண்டு போய் இறக்கிவிட்டதும், அங்கு இருந்தவர்கள் ஜெயராமனைப்பார்த்துவிட்டு இவருக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லி வியந்திருக்கின்றனர்.
அப்போது துவங்கிய ஜெயராமனின் உழவாரப்பணி மாதத்தில் ஒரு நாள் என்று இப்போது வரை தொடர்கிறது.
துாண்களை சுத்தம் செய்வது, பெயிண்ட் அடிப்பது, தண்ணீர் போக்கு கால்வாரய் அடைப்பை நீக்குவது என்று ஜெயராமன் தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டு இருப்பார்.மழை காரணமாக கோவிலுக்குள் சேறு நிறைந்து இருக்கும் சமயங்களில் இவரால் ‘உட்கார’முடியாத போது உழவாரப்பணிக்கு தேவையான பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்.
இதுதான் ஜெயராமன் கதை இந்த கதையை உருக்கமாக சொல்லிமுடித்து விருதினை வழங்க சிறப்பு விருந்தினர் ஆடுதுறை அழகு பன்னீர் செல்வத்தை அழைத்தனர். அவரோ இவரது பாதம் இருந்த பக்கம் நோக்கி ஆயிரம் முறை வணங்கி இந்த விருதினை வழங்குகிறேன் என்று தளுதளுத்த குரலில் சொன்ன போது அவையில் இருந்தோர் அனைவரது கண்களிலும் கண்ணீர்.
தற்போது ஜெயராமன் உடல்நிலை சரியில்லாமல் பேசமுடியாமல் இருக்கிறார் அவரது எண்ணை(9444773186)எண்ணை தொடர்பு கொண்டால் அவரை பார்த்து கொள்ளும் அவரது மகன் கண்ணன்தான் பேசுவார்.உங்கள் அன்பும் ஆசி காரணமாக விரைவில் உடல் நலம் பெற்று பின்னர் உங்களுடன் பேசுவார்.
நன்றி: தினமலர்.காம் / நிஜக்கதை
==================================================================
பொது பிரார்த்தனை
மதத்தின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனம் முடிவுக்கு வரவேண்டும்!
சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் இந்த சம்பவம் நிலைகுலையவைத்துள்ளது. குழந்தையும் தெய்வமும் ஒன்று கூறுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை கொன்று குவித்து அதற்கு புனிதப் போர் என்று வேறு பெயர் சூட்டி அழைக்கின்றனர் இந்த ரத்தக் காட்டேறிகள்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அமெரிக்க நாட்டிற்கு உதவியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த தாக்குதல் நடைபெற்றதாக சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். மதத்தின் பெயரால் நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் வேரறுக்கப்படவேண்டியவை. வன்முறைச் செயல்களின் மூலம் தமது மதத்தையும், கொள்கைகளையும் நிலைநாட்ட போராடுபவர்களை இறைவன் தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
உலகில் தீவிரவாதம் வேரோடு அழிய வேண்டும். சகோதரத்துவம் மலர வேண்டும். இதுவரை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பலியான அனைவரின் ஆத்மாவும் இறைவனின் திருவடியில் இளைப்பாற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
இதுவே இந்த வார பொதுப் பிரார்த்தனை!
==================================================================
மனைவி மக்களை பிரிந்து வாடும் திரு.மனோஹரன் அவர்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழவும், நண்பர் இருங்கோவேள் அவர்களின் சகோதரி அருந்ததி மாலா அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து சிவ பதத்தில் நிலைபெறவும், உழவாரப்பணி அருந்தொண்டர் திரு.ஜெயராமன் அவர்கள் விரைந்து நலம் பெற்று அவர் தொண்டு மேன்மேலும் சிறக்கவும், பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் பலியான குழந்தைகள் ஆன்மா சாந்தியடையவும் உலகில் தீவிரவாதம் அடியோடு களையப்பட்டு அமைதி ஓங்கவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.தண்டபாணி எல்லா வளமும் நலனும் பெற்று வாழவும் இறைவனை வேண்டுவோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : டிசம்பர் 21, 2014 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனத்தில் கோ-சாலையை பராமரித்துவரும் திரு. ராஜேந்திரன்.
[END]
அருணகியாரை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருசெந்தூர் முருகன் துணை…
/ஓம் தத்புருஷாய வித்மகே மகா சேனா ய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத் //
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு தண்டபாணி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
திரு மனோகரன் தன் மனைவியுடன் மீண்டும் சேர்த்து வாழவும், திரு ஜெயராமன் உடல் நலம் மீண்டும் தேறி உழவார பணிகளில் பங்கு கொள்ளவும் , திரு.இருங்கோவேள் அவர்களின் சகோகரியுமான திருமதி.அருந்ததி மாலா (59) அவர்கள் ஆன்ம சாந்தி அடையவும் , தாக்குதலில் ஈடுபட்ட குழந்தைகளுக்க்காகவும் , லோக ஷேமத்திர்க்க்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
திரு ஜெயராமன் பற்றி படிக்கும் பொழுது மனம் கலங்குகிறது. அவர் விரைவில் குணம் அடைய மகா பெரியவா அருள் புரிய வேண்டும்
/குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்//
//தில்லைத்தல கோமகனாம் அதிரூப நடராஜன்
திருத்தாளில் மேவி அருள் ஆசியினைத் தாம் கூட்டும்
குஞ்சித பாதமுடை குருநாதர் தரிசனத்தை
ஓர் கணமும் தியானித்தால் அகம் விலகும் ரோகமுமே //
மகா பெரியவா….. சரணம் ……………..
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
நன்றி
உமா வெங்கட்
திரு சுந்தர் மற்றும் பிரார்த்தினை நிறைவேற விண்ணப்பம் செய்திருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் அவர்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டுகிறேன்.
சங்கர்
ஜெயராமா ஜெயராமா
இவருடைய தொண்டை படிக்கும் பொழுது நம் தொண்டை கண்ணீரால் பேச மறுக்கிறது.
இவருடைய உழவார பணித்தொண்டை மனமார ஏற்றுக்கொண்டு ஆட்கொண்ட இறைவன் ஜெயராமன் அவர்களின் இன்னல்களையும் களைந்து சுகமளிப்பான் என்று உறுதியாக நம்புவோம்.
its alway a suprise to me when read ur experiences. I dont know how u r always notice people who r important in the divine service. We also goto many temples meet so many people, but u always in a thirst to meet divine souls. Hatsoff to ur service ti our society. May god bless u and all our readers & followers to shower his blessings for a happy, wealthy and healthy life.