ஒரு வழியாக 17 ஆம் தேதி சனிக்கிழமை அரை நாள் விடுப்பு கிடைத்தவுடன் சீர்காழி நோக்கி பயணமானேன். சீர்காழியில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை பிரம்மபுரீஸ்வரரை தரிசித்துவிட்டு அப்படியே முற்றோதலில் கலந்துகொள்ளவதாக திட்டம்.
மதுரையில் இருந்து திருவாசகம் பிச்சையா அவர்கள் நமக்காக முயற்சிகள் மேற்கொண்டு சீர்காழியில் நாம் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார். அதே சமயம் தினமலர் முதன்மை நிருபர் திரு.முருகராஜ் அவர்களும் சீர்காழி வருவதாக நம்மிடம் சொல்லியிருந்தார்.
திரு.முருகராஜ் அவர்கள் தினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் எழுதிய சில மனித நேயக்கட்டுரைகளை நம் தளத்தில் நாம் ஏற்கனவே பகிர்ந்திருந்தபடியால் (பழனி அம்மா, சபரி வெங்கட்) அவருடன் நமக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அது சமயம் நம் தளத்தை பார்த்துவிட்டு நமது தளத்தையும் நமது பணிகளையும் பாராட்டியிருந்தார் திரு.முருகராஜ். அலைபேசியில் தான் எங்கள் உரையாடல் இருந்தபடியால் இருவருக்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க பேராவல் இருந்தது. இந்த நேரம் பார்த்து சீர்காழி திருவாசகம் முற்றோதல் வரவே, நம்மைப் போலவே அவரும் அதில் கலந்துகொள்ள விரும்பினார்.
இதையடுத்து நானும் நண்பர் முருகராஜ் அவர்களும் சென்னையிலிருந்து ஒன்றாக சீர்காழி கிளம்புவதாக பிளான். ஆனால் நம் சீர்காழி பயணம் கடைசி வரை நிச்சயமற்றதாக இருக்கவே, “நீங்கள் உங்கள் திட்டப்படி பயணம் செய்யுங்கள். ஒருவேளை நானும் சீர்காழி வந்தால் அங்கே உங்களை சந்திக்கிறேன்!” என்று அவரிடம் கூறிவிட்டேன். இதையடுத்து அவர் 17 ஆம் தேதி காலையே சென்னையிலிருந்து ட்ரெயினில் புறப்பட்டு சீர்காழி சென்றுவிட்டார்.
ஆனால் எனக்கு விடுமுறை சாங்க்ஷன் ஆகி நான் கோயம்பேட்டிலிருந்து கிளம்புவதற்கே பிற்பகல் 3.00 pm ஆகிவிட்டது. சிதம்பரம் சென்று அங்கிருந்து பேருந்து மாறி சீர்காழியை அடையும்போது இரவு 10.00 மணியாகிவிட்டது.
இதற்கிடையே மாலை நாம் பேருந்தில் இருக்கும் போது நண்பர் முருகராஜ் நமக்கு ஃபோன் செய்து நாம் சீர்காழி வருவது குறித்து உறுதிபடுத்திக்கொண்டவுடன் சீர்காழியில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையிலேயே நம்மையும் தங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இருவரும் அளவளாவுவதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பதால் அவருடனே அன்று இரவு தங்கிவிட்டேன்.
இருவரும் பரஸ்பரம் அவரவர் கடந்துவந்த பாதையை பகிர்ந்துகொண்டோம். பேரம்பாக்கம் நரசிம்மரையடுத்து என் நிஜ ப்ளாஷ்பேக் அறிந்துள்ள வெகு சிலருள் ஒருவராக முருகராஜ் மாறினார்.
மறுநாள் காலை இருவரும் எழுந்து குளித்துவிட்டு தாமோதரன் ஐயாவின் திருவாசகத் தேன் பருக பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிளம்பினோம். காலை 6 மணியளவிலேயே சீர்காழி அதகளப்பட்டது. மேல தாளம் முழங்க பன்னிரு திருமுறையுடன் தாமோதரன் ஐயா ஊர்வலம் வரும் சப்தம் கேட்டது.
கோவிலுக்கு சென்று பிரம்மபுரீஸ்வரரையும் தோணியப்பரையும் சட்டைநாதரையும் தரிசித்துவிட்டு நேரே குளக்கரை அருகே உள்ள விசாலமான பிரகாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முற்றோதல் பந்தலை நோக்கி நடந்தோம்.
கோவிலில் நல்ல கூட்டம். முற்றோதல் பந்தல் நிரம்பி வழிந்தது.
சரியாக குளக்கரையில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய இடத்தில் சற்று நேரம் நின்றோம். அந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்தோம். ஜென்ம சாபல்யம் பெற்றது போன்ற ஒரு உணர்வு. இங்கேயே இந்த உயிர் போய்விடக்கூடாதா என்று ஒரு கணம் தோன்றியது. தேவாரம் பாடிய சம்பந்தருக்கு, அன்னை உமையவள் காட்சி தந்த இடமல்லவா அது?
நண்பர் முருகராஜும் அந்த இடத்தின் தெய்வீக ஸ்பரிசத்தை உணர்ந்து சில கணங்கள் அங்கிருந்து நகரமுடியாது நின்றார்.
அப்போது கழுத்து நிறைய எண்ணற்ற ருத்திராட்ச மாலைகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் அங்கு ஒரு பெண்மணி வருவோர் போவோர் அனைவருக்கும் திருநீறு கொடுத்தபடி நின்று கொண்டிருந்தார்.
“பார்க்கிறதுக்கே வித்தியாசமா இருக்காங்களே… கழுத்து நிறைய இத்தனை ருத்திராட்ச மாலைகளோட இப்படி ஒருத்தரை பார்த்ததில்லையே… யாருன்னு விசாரிப்போம்” என்று கூறிய நண்பர் முருகராஜ் அந்த அம்மாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை பற்றி விசாரித்தார்.
தனது பெயர் பாண்டிய லதா என்றும் தாம் ஒரு துறவி என்றும் திருவண்ணாமலையில் தாம் வசிப்பதாகவும் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள தாம் வந்திருப்பதாகவும், கூறினார். தொடர்ந்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
முருகராஜ் பாண்டிய லதா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க நான் பாண்டிய லதா அம்மாவை புகைப்படமெடுத்த பின்னர் குளத்து படியில் ஏறுவதும் இறங்குவதும், நீரை அள்ளி அள்ளி அருந்துவதும், “சம்பந்தர் இங்கே தான் தவழ்ந்திருப்பார்…. இதோ இந்த இடத்தில் தான் பால் அருந்தி இருப்பார்… அன்னை உமாதேவி இங்கே தான் தோன்றியிருப்பார்….” அப்படி இப்படி என்று குத்து மதிப்பாக ஒரு இடத்தை யூகித்து அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
சற்று நேரம் கழித்து விடைபெறும்போது எங்கள் இருவருக்கும் நெற்றி நிறைய திருநீறை பூசிவிட்டார் பாண்டிய லதா அம்மா. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவதாக கூறி அவரது அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார் முருகராஜ். அங்கிருந்து வந்த பிறகும் சற்று நேரம் பாண்டிய லதா அவர்களை பற்றியே எங்கள் பேச்சு இருந்தது.
பின்னர் முற்றோதலில் இருவரும் ஐக்கியமானோம்.
சென்னை திரும்பிய பின்னர் சரியாக இரண்டு வாரங்கள் கழித்து முருகராஜ் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. தினமலர் ‘நிஜக்கதை’ பகுதியில் பாண்டிய லதா அம்மா அவர்களை பற்றி கட்டுரை எழுதியிருப்பதாக சொன்னார்.
“பெண் துறவி பாண்டிய லதா அம்மா அவர்களைப் பற்றி உங்களிடம் கேட்பதைவிட, நீங்கள் எழுதவதை படித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் தான் நான் அவர்களை பற்றி உங்களிடம் கேட்கவில்லை சார்… படித்துவிட்டு நாளை உங்களை கூப்பிடுகிறேன்…!!” என்றேன்.
சொன்னது போலவே அடுத்த நாள் கட்டுரையை படித்தேன். அப்ப்ப்ப்பா…. பாண்டிய லதா அம்மா அவர்களின் பின்னால் இத்தனை பெரிய வைராக்கிய வரலாறா என்று வியப்பு மேலிட்டது. ஆனால் முருகராஜ் அவர்களிடம் பேசுவதற்கு நேரம் கிட்டவில்லை.
அன்று இரவு மதுரையை சேர்ந்த திருவாசகம் பிச்சையா அவர்கள் எதேச்சையாக என்னை அலைபேசியில் அழைக்க, அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
சீர்காழியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய இடத்தில் பெண் துறவி பாண்டிய லதா அவர்களை நானும் நண்பர் முருகராஜும் சந்தித்ததை பற்றியும், தொடர்ந்து அவரை பற்றிய கட்டுரை ஒன்று தினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் முருகராஜ் அவர்கள் எழுதியிருப்பதையும் கூறினேன்.
“நானும் அதை பார்த்தேன் சுந்தர் சார்… ஆனா… உங்களுக்கு விஷயம் தெரியுமா?” சற்று புதிருடன் என்னை கேட்க….
“என்ன சார்?”
“பாண்டிய லதா அம்மா நேற்றைக்கு சிவனடி சேர்ந்துட்டாங்க…!” என்றார்.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “என்ன சார் சொல்றீங்க?”
“ஆமாம்…. அந்த தினமலர் கட்டுரையில் கமெண்ட் பகுதியில் ஒருத்தரு சொல்லியிருக்கார்… ‘பாண்டிய லதா அம்மா நேற்று இறைவனடி சேர்ந்தார்’ அப்படின்னு.”
“சார்… இருக்கவே இருக்காது… கமெண்ட் பகுதியில் யாரோ சொல்றதெல்லாம் எப்படி நாம உண்மையா எடுத்துக்கிறது?”
“இல்லே… அப்படி சொன்னவர் அவரோட உறவினர்னு சொல்லியிருக்கார். தவிர ஃபோன் நம்பர்லாம் வேற கொடுத்திருக்காங்க….” என்றார்.
நான் நம்ப மறுத்தேன்.
“நீங்க வேணும்னா எதுக்கும் முருகராஜ் சார் கிட்டே கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க. நான் கூட அவர்கிட்டே பேசலாம்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்…” என்றார்.
அடுத்து உடனே முருகராஜ் அவர்களை தொடர்புகொண்டேன். “பாண்டிய லதா அம்மா அவர்களை பற்றி இப்படி ஒரு செய்தி வந்திருக்கே… அதுவும் சொல்றது திருவாசகம் பிச்சையா. நம்பாம இருக்க முடியலே….உண்மையா சார்?”
“ஆமாம்… சுந்தர் சார்… உங்க கிட்டே அப்டேட் பண்ண முடியலே…. நேத்துல இருந்து ரெண்டு நாளா நான் சென்னையில இல்லே. ஓசூர்ல சோமேஸ்வரர் கோவில்ல நடக்கும் தாமோதரன் ஐயாவோட திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில கலந்துக்க திருவண்ணாமலையில இருந்து நேற்று ஓசூர் வந்த பாண்டிய லதா அம்மா சாலையை கடக்கும்போது அரசு பேருந்து மோதி, சம்பவ இடத்துலேயே இறந்துட்டாங்க… விஷயம் கேள்விப்பட்டு கிளம்பினவன் தான். இன்றைக்கு மாலை தான் திருவண்ணாமலையில் அவங்களோட ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு பண்ணிட்டு என் வீட்டுக்குள்ளேயே நுழையுறேன்…”
என் இதயத் துடிப்பு அதிகரித்தது.
“என்ன …என்ன ….சார் சொல்றீங்க????? நேற்றைக்கு முன் தினம் தான் அவங்களை பற்றிய கட்டுரையை தினமலர் வெப்சைட்டுல அப்டேட் செஞ்சீங்க. இன்னைக்கு அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னா நம்பவே முடியலே… என்ன சார் நடந்துச்சு ???”
(என் குரல் உடைந்துவிட்டது. கிட்டத்தட்ட அழுதே விட்டேன். பாண்டிய லதா அம்மா அவர்களை சீர்காழி குளக்கரையில் சந்தித்ததும், அவர்களிடம் திருநீறு பூசிக்கொண்டு ஆசிபெற்றதும் மனதில் நிழலாடியது.)
பேருந்து மோதி அகாலமரணமடைந்தார் அவர் என்று தெரிந்தவுடன் நெஞ்சம் துடித்துப்போனது.
மனம் சிவனிடம் நீதி கேட்டது.
“இறைவா… உன் பக்தையின் உயிரை நீ பறித்துக்கொண்டாய்… அது உன் விருப்பம்… ஆனால் உன்னையே கதி என்று கருதி அனைத்தையும் உதறிவிட்டு வந்த ஒரு ஆத்மாவுக்கு நீ ஏன் இப்படி ஒரு துர்மரணத்தை தரவேண்டும்? மரணம் நிச்சயம் என்றாகிவிட்டபோது அந்த ஜீவனுக்கு ஒரு நல்ல மரணத்தை தந்திருக்க கூடாதா? இது தான் உன் நீதியோ?? சிவனை சிந்தையில் வைத்து ஜெபிப்போரை பிடிக்க காலனுக்கு எப்படி மனம் வந்தது ? அதுவும் துர்மரணம் மூலம்?”
மனம் தவித்தது. பாண்டிய லதா அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகமும் நிழலாடியது.
நிஜக்கதை பகுதியில் வந்துள்ள கட்டுரையை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொண்டு, “இதோ இவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கையால் திருநீறு பூசப்பெற்றிருக்கிறேன்” என்று பெருமிதம் பொங்க கூறவேண்டும் என்றல்லாவா நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே… நெஞ்சில் இடி விழுந்தது போலிருந்தது எனக்கு.
சிவனையே நினைத்து உருகிக்கொண்டிருந்த ஒரு பரம பக்தைக்கு ஏற்பட்ட கதி என்னை பாடாய்படுத்தியது. விடை தெரியாத கேள்விகளுடன் நாட்களை கடத்தினேன். உங்களிடமும் சொல்ல முடியவில்லை. காரணமும் புரியவில்லை.
சில கேள்விகளுக்கு பதில் அவன் ஒருவனுக்கு மட்டும் தானே தெரியும்.
இதோ மறுபடியும் தினமலர் இணையத்தில் திரு.முருகராஜ், பாண்டிய லதா அம்மா அவர்களின் இறுதிப் பயணம் குறித்து இரண்டாம் பகுதி அளித்திருந்தார். அதில் நடந்தவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார்.
பாண்டிய லதா அவர்களின் சடலம் ஓசூர் அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்தது என்றும், அனாதை பிணம் என்று கருதி அவரை ஒதுக்கிவிட நினைத்த நேரத்தில், முந்தைய நாள் தினமலர் இணையத்தில் பாண்டிய லதா அவர்களை பற்றிய கட்டுரையை அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்ததாகவும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் தினமலர் அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தியதாகவும் அதன் பின்னர் தினமலர் மூலம் திரு.முருகராஜ் அவர்கள் களமிறங்க அவரது உடல் முழு மரியாதையுடன் திருவண்ணாமலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவரது ஈமக்கிரியைகள் நடந்தது என்றும் கூறியிருக்கிறார் முருகராஜ்.
இரண்டாம் பகுதியை முழுமையாக படித்த பின்னர் கடைசியில் புரிந்துகொண்டேன். காரணமில்லாமல் காரியங்கள் நடப்பதில்லை என்று.
மரணத்திற்கு முன்னர் தனது பக்தைக்கு அந்த ஈசன் உலகம் தழுவிய புகழை கொடுத்திருக்கிறான். ஆகவே தான் சீர்காழி வந்த பாண்டிய லதா அம்மா முருகராஜ் அவர்களின் பார்வையில் பட்டிருக்கிறார். திரு.முருகராஜ் அவர்கள் ‘சீர்காழியில் ஒரு சிவபக்தை’ என்ற தலைப்பில் பாண்டிய லதா அம்மாவை பற்றி நிஜக்கதை பகுதியில் கட்டுரை வெளியிட்டார். கட்டுரை பாண்டிய லதா அவர்களின் மொபைல் எண்ணுடன் வெளியானதால் அவருக்கு உலகம் முழுவதுமிலிருந்து அழைப்புக்கள் வந்தன. ஒரே நாளில் அவரது புகழ் உலகம் முழுதும் பரவியது. உலகெங்கிலும் இருந்து பல சிவபக்தர்கள் அவரை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
அன்று மாலை விபத்தில் சிக்கி அவர் இறந்துவிடுகிறார். பாண்டிய லதா அம்மா அவர்களின் மரணத்திற்கு முன்னர் அவரை பற்றிய தினமலர் கட்டுரை வெளியானதால் தான் அவர் யார் என்றே தெரிந்தது. அது அவரை நல்லடக்கம் செய்ய உதவியது. இல்லையெனில் ஒரு அனாதைப் பிணம் என்ற அளவிலேயே அவர்கள் பூதவுடல் போயிருக்கும்.
தன் பக்தைக்கு அப்படி ஒரு முடிவு நிகழக்கூடாது.. அவருக்கு இந்த உலகில் உரிய முறையில் இறுதி விடை கொடுக்கப்படவேண்டும் என்றே அவர் மரணத்திற்கு முன்னர் இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறான் இறைவன்.
அவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?
சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது?
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள் 336)
பொருள் : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
=============================================================
தினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் இடம்பெற்ற அந்த இரண்டு கட்டுரைகள்
1) சீர்காழியில் ஒரு சிவபக்தை…
சில தினங்களுக்கு முன்னால் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் கூட்டம். அந்த கூட்டத்தில் ஒரு பெண் துறவி கழுத்து கொள்ளாத அளவிற்கு ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு தன்னை வந்து வணங்குவோர் நெற்றியில் பட்டை, பட்டையாக திருநீறு பூசிக்கொண்டிருந்தார்.
வாய் கொள்ளாத சிரிப்புடனும், சிவாய நம உச்சரிப்புடனும், ருத்ராட்ச “மாலைகளுக்குள்’ காணப்பட்ட அவர் யார் என்பதில் அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.
என் பெயர் பாண்டிய லதா என்று ஆரம்பித்தவர்.
என் பூர்வீகம் எல்லாம் எதுக்கு, அதெல்லாம் வேண்டாம் என்றுதானே இந்தக்கோலம் பூண்டுள்ளேன் என்றவர் பழைய விஷயங்களை பற்றி குறிப்பிடும் போது, கணவர், குழந்தைகள், பெற்றோர், உற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள், இப்போது என்னைப் பொறுத்தவரை “இருந்தார்கள்’ அவ்வளவுதான்.
காதறுந்த ஊசியைக்கூட இந்த உலகத்தைவிட்டு போகும்போது எடுத்துக்கொண்டு போகமுடியாது என்ற பொருளில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட ” காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே ‘ என்ற ஒரே ஒரு வார்த்தைதானே பெரும்பணக்காரராக வாழ்ந்த பட்டினத்தாரை, வெறும் கோவணம் மட்டுமே கட்டிய துறவியாக்கியது.
அப்படி ஒரு சம்பவம்தான் என்னையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது, எல்லாம் அருணகிரிநாதரின் அருள்.
நான் தற்போது திருவண்ணாமலையில் அடியார் ஒருவர் கொடுத்த அறையில் தங்கியிருக்கிறேன். என் சொத்து என்பது இந்த ருத்ராட்சத மாலைகளும் சில உடைகளும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களும்தான். என்னிடம் பொருள் இருந்தபோது இல்லாத அருள் பொருளில்லாதபோது நிறைய இருக்கிறது. வீடு, வாசல், நிலம், நகை, வாகனம், வசதிகள் என்று ஓடும் மனிதர்களைப் பார்த்தால் இப்போது எனக்கு பாவமாக இருக்கிறது. எதுவுமேயில்லாமல் சும்மாயிருப்பது என்பது எவ்வளவு சுகமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அரசனுக்குதான் ஆயிரம் கவலை என்னைப் போல ஆண்டிக்கு ஏது அந்த நிலை என்று பேசிக்கொண்டே இருக்கிறார், பேச்சுக்கு பேச்சு என்னங்கய்யா நான் சொல்றது என்று கேட்டு சிரிக்கிறார்.
நிறைய சிவன் பாட்டு கேட்கலாம் என்று என்மீது அன்பு கொண்ட ஓருவர் சிவன் பாடல்களை நிரப்பி ஒரு மொபைல் போனை கொடுத்தார். இதில் பேசவும் முடியும் என்றாலும், நான் யாரிடமும் பேசப் போகிறேன் என்னிடம் யார் பேசப் போகிறார்கள். இந்த மொபைல் வாங்கிய பிறகு இதன் எண் என்ன? என்று கேட்டு பேசியவர் நீங்கள்தான்.
திருவண்ணாமலையில் இருந்தால் நாள்தவறாமல் அண்ணாமலையார் கோயிலுக்கு போய் அங்குள்ள முருகன் சன்னதியருகே சிவமே தவம், தவமே சிவம் என்ற நிலையை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்திருப்பேன், இரவில் பள்ளியறை பூஜையின் போது சிவனை தரிசிப்பேன்.
உணவு உடைக்காக பெரிய தேடுதல் கிடையாது கோவிலுக்கு வரும் பக்தர்களே கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள், என் செலவிற்கு வேண்டிய பணத்தையும் அண்ணாமலையார் யார் மூலமாவது கொடுத்து விடுகிறார்.
நினைத்தபோதெல்லாம் கிரிவலம் வருவேன், ஏழு முறை காசிக்கு போய்விட்டு வந்துவிட்டேன் ஒரு முறை அமர்நாத்தும் போய்விட்டுவந்துவிட்டேன், வெள்ளியங்கிரி, சதுரகிரி மலை, கொல்லி மலையெல்லாம் நினைத்தபோதெல்லாம் போய்விட்டு வருவேன். அதிலும் சதுரகிரி மலையில் பதஞ்சலி சித்தரின் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம்.
இவ்வளவு ருத்ராட்ச மாலைகள் போடவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல எப்படியோ அது நிகழ்ந்து விட்டது. இப்போது அது நிலைத்துவிட்டது. தூங்கும்போது குளிக்கும் போதும் தவிர மற்றபடி எப்போதும் இந்த மாலைகள் என் கழுத்தில்தான் இருக்கும் இதனால் எனக்கு எதுவும் பிரச்னை இல்லை பஸ், ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் நடத்துனர் மற்றும் சில பயணிகள் வித்தியாசமாக பார்ப்பார்கள். யார் பார்க்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் நினைத்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் நிலயை நான் கடந்துவிட்டேன், எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.
நாட்டில் உள்ள அனைத்து சிவ தலத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன், பாதி வரை பார்த்தும் விட்டேன் மீதியை பார்க்கவும் நினைத்துள்ளேன், நான் நினைத்து என்ன செய்ய அந்த சிவன் நினைக்கவேண்டும். என் நினைப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும்.
தியானம், மவுனம், போன்றவைகள் எல்லாம் இன்னும் எனக்கு நான் நினைத்தபடி கைகூடவில்லை, மரணமாவது நான் நினைத்தபடி கூடிவர வேண்டும்.
தன் உடம்பின் பாதியை கரையான் அரித்தது கூட தெரியாமல் தியானத்தில் இருந்த ரமணர் நடனமாடிய புண்ணிய திருவண்ணாமலையில் அவரைப்போல இல்லாவிட்டாலும் அவருக்கு ஒரு துளி நெருக்கமாகவேனும் எனக்கு தியானம் கைகூடவேண்டும், அந்த தியானத்தின் போதே காம்பில் இருந்து பூ உதிர்வது போல என் உயிர் போய்விட வேண்டும். இது என் வேண்டுகோள் மட்டுமல்ல வேண்டுதலும்கூட.
முக்கிய குறிப்பு: சீர்காழி வந்த சிவ பக்தை பாண்டியலதா கொடுத்த முதல் பேட்டியே அவரது முடிவான பேட்டியாகி விட்டது.திருவண்ணாமலை வாழ் பெண் துறவியான இவர் மவுனம்,தியானம் போல மரணமும் இனிதாய் வரவேண்டும், அதற்கு இறைவன் அருளவேண்டும் என்று சொல்லியிருந்தார்,பேட்டி பிரசுரமான மறுநாள் வாசகர்களிடம் மகிழ்ச்சியாக பேசி சந்தோஷமாக இருந்தார். நேற்று (01/09/2013)காலை ஓசூரில் நடைபெற்ற முற்றோதுதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.அவரது உடலை பெற்று திருவண்ணாமலை ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது.
– எல்.முருகராஜ்
=============================================================
2) அந்த ஒரு நாள்…
கடந்த வார நிஜக்கதை பகுதியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது.
முதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
திருவண்ணாமலை சிவ பக்தையும், பெண் துறவியுமான பாண்டிய லதாவின் மறைவு அனைவரையும் உலுக்கியெடுத்துவிட்டது, ஆனால் ஆதரவில்லாமல் அநாதை பிணம் என்று எரிக்கப்பட இருந்தவர் வாசகர்கள் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாக திருவண்ணாமலையில் துறவியருக்கான சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
அந்த ஒரு நாள் நடந்தது என்ன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
தேனியைச் சேர்ந்தபாண்டியலதா, சிவன் மீது கொண்ட பக்தி காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு திருவண்ணாமலை வந்தடைந்தார்.
இங்கு இருந்தபடி காசி, அமர்நாத் யாத்திரைகள் போய் வந்தவர் பெரும்பாலான சிவத்தலங்களை தரிசித்து விட்டார், திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் இவர் ஆஜராகிவிடுவார்.
சீர்காழியில் கடந்த மாதம் நடந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி வந்திருந்த இவரை பேட்டி எடுத்து பிரசுரித்தோம். கட்டுரையின் முடிவில் இவரது போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தோம்.
கட்டுரை கடந்த சனிக்கிழமை (31ம் தேதி) காலை 8 மணியளவில் வெளியானது.அதுவரை அவரிடம் நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன், கட்டுரை வெளியானதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரிடம் வாசகர்கள் அன்பொழுக போனில் பேசியிருக்கின்றனர்.
நம் மீது அன்பு பராட்டவும், விசாரிக்கவும் இவ்வளவு பேரா என்று வியந்து போய் இந்த நாள் என் வாழ்க்கையின் இனிய நாள் மறக்கவே முடியாத நாள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒசூர் சந்திரசூடர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஒரு இடத்தில் ரோட்டைக் கடக்கும் போது வேகமாக வந்த பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் கிடத்தப்பட்ட அவரைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாத போலீசார் இரண்டு நாள் பார்ப்போம் யாரும் கேட்டுவராவிட்டால் அநாதை பிணம் கணக்கில் சேர்த்து எரித்துவிடுவோம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.
பிணமான நிலையில் இவரை ஆஸ்பத்திரியில் பார்த்த ஊழியர் ஒருவர் இணையதளத்தில் இவரைப் பற்றி முதல் நாள் வந்த செய்தியை படித்துள்ளார்.உடனடியாக கட்டுரையில் குறிப்பிட்ட பாண்டிய லதாவின் போன் எண்ணுக்கு அடித்துள்ளார்.
யாரோ ஒரு அடியார் கொடுத்த மொபைல் போன் அது,அந்த போனை அவர் பொருட்டாக மதிப்பது கிடையாது பெரும்பாலும் தெரிந்த திருவண்ணாமலை டீ கடைக்காரரிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். போனை எடுத்த டீகடைக்காரர் ஆறுமுகம் என்பவர் பாண்டியலதா ஒசூருக்கு போய் இருக்கும் விவரத்தை கூறியிருக்கிறார்.
இதன் மூலம் இறந்து போனது பாண்டியலதா என்பது உறுதியானதும் டீகடைகாரர் ஆறுமுகத்திடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார் பிறகு தினமலர் இணையதளம் பிரிவிற்கும் போன் செய்து கூறியுள்ளார். தகவல் எனக்கும் வந்து சேர்ந்தது, அதிர்ந்து போனேன்.
பிறகு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். இதற்குள் பாண்டியலதா உபயோகித்த போன் அவர் அடிக்கடி செல்லக்கூடிய திரு அருட்பால் குகைஆஸ்ரமத்தின் நிர்வாகியான சிவ சீனிவாசசுவாமிகளிடம் போய்ச் சேசர்ந்தது. அவர் அவரது உதவியாளர் பிரபுவிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இறந்து போனது பெண் அடியார் அவரை உரிய முறையில் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் நான் அவர்களுடன் பேசினேன்.
பெண துறவியின் உடலை எந்தவித பிரச்னையும் இல்லாமல் பெற்று ஆம்புலன்சில் ஏற்றி விடுகிறோம் நீங்கள் அடக்கம் செய்வதற்கான வேலைகளை பாருங்கள் என்றதும் ஒரு பத்திரிகை நிறுவனம் ஒரு அடியவர்க்கு பின்புலமாக நிற்பதை அறிந்ததும் அவர்களும் புதுதெம்பு வரப்பெற்றவர்களானார்கள்.
தர்மபுரி நிருபரின் உதவியுடன் மாவட்ட போலீஸ் எஸ்பியுடன் பேசி விவரம் சொன்னதும் பிறகு காரியங்கள் மடமடவென்று நடந்தது. இலவசமாக ஆம்புலன்சில் அவரது உடலை திருவண்ணாமலை கொண்டு போய் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் நடந்தது. ஓசூர் பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு ஆஸ்பத்திரி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் இறந்தவர் நாம் நினைத்தது போல யாருமில்லாத ஆதரவில்லாதவர் அல்ல, மிக முக்கியமானவர் என்பதை உணர்ந்து அதற்கேற்ற மரியாதை கொடுத்தனர்.
ஆஸ்ரம நண்பர் கிருஷ்ணன் என்பவர் உடலை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை வந்தார். இதற்குள் அவர் பேட்டியின் போது ஒரு இடத்தில் எனது பூர்வீகம் பெரியகுளம் என்றும் கணவர் குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் சொல்லியிருந்தார்.அந்த ஒரு வரியை வைத்து தேடி இறந்த பாண்டிய லதாவின் கணவர், இரண்டு பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் தரப்பட்டு காரில் திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.
இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை இடுகாட்டிற்கு பாண்டியலதாவின் உடல் கொண்டு வரப்பட்ட போது சிவனடியார்கள் கூட்டம் திரண்டு இருந்தது. எண்பது கிலோவிற்கு பூவாங்கி அதில் படுக்கவைக்கப்பட்டார், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் காசி தீர்த்தம், கபில தீர்த்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டார். சுற்றிலும் சூடம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த அவரது குடும்பத்தினரும் தங்களது சார்பில் இறுதி மரியாதை வழங்கினர்.
பின்னர் அனைவரது கண்களும் கலங்க பூவால் நிரப்பட்ட குழியினுள் அடக்கம் செய்யப்பட்டார்.
அதுவரை அமைதியாக சூழ்ந்திருந்த மழை மேகம் இப்போது பன்னீராய் மழையை தெளித்தது.
அந்த ஒரு நாள் அவரோடு பேசி அவரை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றதுடன் இறந்ததும் அந்த ஆன்மா அமைதியடைய பதிவும் போட்டு அன்பே சிவம் என்பதை உணர செய்த வாசகர்கள் அனைவருக்கும் கண்ணில் நீர் பெருக நன்றி கூறிக்கொள்கிறோம்.
– எல்.முருகராஜ்
(செய்தி & இறுதிச் சடங்கு புகைப்படங்கள் உதவி : தினமலர்)
[END]
சுந்தர் சார்
நம் தளம் செய்த புண்யம் சிவனடியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கு சார்… கண்ணீர் மட்டும் தா சார் வருகிறது
கண்ணீர் அஞ்சலியுடன் நன்றி சார்
திரு முருகராஜ் அவர்களக்கு கோடான கோடி புண்ணியங்கள்
சீர்காழியில் ஆரமித்து திருவண்ணாமலை பெண் துறவியின் அடக்கம்வரை, பதிவை நிறைவு செய்ய மிகுந்த சிரத்தை எடுத்தது தெரிகிறது .
ஜி தசுந்தர் ங்களின் மனதில் உள்ளதை வெளிகாட்டாமல்,{மகிழ்ச்சியும்,துயரமுமும்} தங்கள் மனதை கட்டுக்குள் எப்படி வைத்திருக்க முடிகிறது.
\\\\“சம்பந்தர் இங்கே தான் தவழ்ந்திருப்பார்…. இதோ இந்த இடத்தில் தான் பால் அருந்தி இருப்பார்… அன்னை உமாதேவி இங்கே தான் தோன்றியிருப்பார்….” அப்படி இப்படி என்று குத்து மதிப்பாக ஒரு இடத்தை யூகித்து அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.\\\
தங்களின் என்னஅலைகள் என்னால் உணரமுடிகிறது .கூடவே நாங்களும் உணரமுடிந்தது .
\\ பாண்டிய லதா அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகமும் நிழலாடியது.
நிஜக்கதை பகுதியில் வந்துள்ள கட்டுரையை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொண்டு, “இதோ இவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர்கள் கையால் திருநீறு பூசப்பெற்றிருக்கிறேன்” என்று பெருமிதம் பொங்க கூறவேண்டும் என்றல்லாவா நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே… நெஞ்சில் இடி விழுந்தது போலிருந்தது எனக்கு.\\
படிக்கும் எங்களுக்கு சிலிர்க்கிறது….எழுதும் போது வாக்கியத்தை பயன்படுத்த எவ்வளவு சிரமம் எடுத்திருபீர் .கண்கள் குளமாகிறது .
\\\முதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.\\
தங்களின் நண்பர் தினமலர்நிருபர் எல்.முருகராஜ் அவர்களின் சேவை மகத்தானது .
பெண் துறவியின் ஆசி சுந்தர் ஜி தங்களுக்கும் ,தினமலர்நிருபர் எல்.முருகராஜ்,பதிவினை படிக்கும் எங்களுக்கும் கிடைக்கப்பெற்றதாக உணர்கிறேன் .
-மனோகர் .
திரு.சுந்தர் அவர்களுக்கு
முருகராஜ் தெரிவிப்பது
மூன்றாவது முறையாக கண்கலங்கவைத்துவிட்டீர்கள்,
ஒரு பத்திரிகையாளனாக நான் செய்த பதிவைவிட ஒரு பார்வையாளனாக,ஒரு பக்தனாக நீங்கள் செய்த பதிவு உள்ளபூர்வமாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது<.
எழுத்தால் நீங்கள் செய்துள்ள இதயபூர்வமான அஞ்சலி இது
திரு முருகராஜ், நீங்கள் மிக பெரிய புண்ணியவான். எனது மனமார்ந்த வணக்கங்கள்.
///சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது?///
இது என்ன சோதனை இரைவா!!!!!!!!!!!!
இதுதான் உன் திருவிலையாடலா?????
சுந்தர்ஜி,
கண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. என்ன புண்ணியம் செய்தோமோ தங்கள் மேன்மையான இந்த பதிவினை படிப்பதற்கு? அதுவும் இன்று மஹா பெரியாவாவின் இந்த மாத அனுஷ ஜெயந்தி. அந்த அன்னைக்கு என் கண்ணீர் அஞ்சலி.
அன்னையின் உடல் மறைந்துவிட்டாலும் அவரது கள்ளமில்லா சிரிப்பும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலைகளும் கை நிறைய திருநீறும் நம் மனதைவிட்டு என்றும் நீங்காது. எல்லாம் வல்ல ஈசன் இந்த அம்மையார் மூலம் நமக்கு அருள் பாலித்திருக்கிறார்.
அப்பப்போ இப்படி நெஞ்சை நெகிழ வச்சுர்றீன்களே. மனசு என்னவோ போல ஆயிடுது .
“//அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது?”//
உங்களுக்கே உண்டான பஞ்ச்
சுந்தர்,
நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா !
நன்றி முருகராஜ்.
திரு முருகராஜ், மற்றும் திரு. சுந்தர் அவர்களுக்கு
மனமார்ந்த வணக்கங்கள்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!
எல்லாம் இறைவன் செயல் … சிவ மயம் எங்கும் பரவட்டும்
நெகிழ வைத்த பதிவு!
திரு. முருகராஜ் எடுத்துக் கொண்ட அக்கறைக்கும் மற்றும் முழுமையாக பதிவிட்ட திரு. சுந்தர் அவர்களுக்கும்
மனமார்ந்த வணக்கங்கள்.நன்றிகள்!
சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது?/// –
என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் .
சிவத்தொண்டு செய்வதற்கென்றே பிறந்த சிவனடியார் அருள்மிகு பாண்டிய லதா அம்மா அவர்களின் வரலாறு படிக்கும் போது நெஞ்சே உருகுகிறது.
இந்தப் பதிவின் மூலம் திரு சுந்தர்ஜியும் ஒர் சிவத்தொண்டனாகி விட்டார் என்றால் மிகையாகாது
சார்
கண்ணீர் மட்டும் than சார் வருகிறது
சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது?///
கண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. என்ன புண்ணியம் செய்தோமோ தங்கள் மேன்மையான இந்த பதிவினை படிப்பதற்கு?
நிச்சயமாக சிவனின் அருள் என்றும் உங்களு உண்டு
திரு முருகராஜ், சுந்தர் சார் நீங்கள் மிக பெரிய புண்ணியவான்
selvi
பாண்டி லதா இறைவனடி அடைந்தார் என்பதை தெரியபடுத்ததியமைக்கு முருகராஜ் அவர்களூக்கு மிக நன்றி ………
நிச்சயமாக சிவனின் அருள் என்றும் உங்களு உண்டு .சிவத்தொண்டு செய்வதற்கென்றே பிறந்த சிவனடியார் அருள்மிகு பாண்டிய லதா அம்மா அவர்களின் வரலாறு படிக்கும் போது நெஞ்சே உருகுகிறது .
கண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை ……
சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை……….
சுந்தர் சார்,
நீங்கள் திரு முருகராஜ் அவர்களை சீர்கழில் சந்தித்தது. அங்கு நீங்கள் சம்பந்தர் தவழ்ந்த குளக்கரை அருகே சிவனடியார் பாண்டிய லதா அம்மாவை சந்தித்தது எல்லாம் அவனின் திருவிளையாடல்… ஆனால் அதன் பின் நடந்த சம்பவம் நினைத்து பார்க்க முடியவில்லை….
மனம் கனக்கிறது
அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் காரைக்கால் அம்மையார்
குறித்துஒராண்டுக்குபின்பேசவாய்பளித்ததின்காரணம்தெரியவில்லை
அமர்நாத்தில் பேசியதையா,காசியில் பேசியதையா,எமதுஇல்லம் தங்கி,
எளியஉணவருந்தி,எம்மனைவி,மக்களோடு சிவமாய் வாழ்ந்ததையா,
எதைச்சொன்னாலும் இப்போதைக்கு மிகையாகிவிடுமே.
அவர்களின்ஆன்மாஇறைவனின்நிழலில்இளைப்பாறும் செய்தி
அறிந்து,தங்களிடம்விசாரித்தபலரில் அடியனும்அடக்கம்.
இங்ஙனம்
சிவதில்லை ராமசாமி,நிறுவனர்.
வாருங்கள் புனித யாத்திரைக்கு