Wednesday, December 12, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?

புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?

print
பூஜையின் போது கோவிலில் மணியடிப்பது போய் தற்போது மின்சார மங்கல வாத்தியம் என்ற பெயரில், மனிதர்கள் செய்ய வேண்டிய ஒரு அரும்பணியை ஒரு இயந்திரத்தை வைத்து, செய்து வருகிறோம். அதே போல, அபிஷேக ஆராதனையின் போது வாசிக்கப்படும் நாதஸ்வரம் மற்றும் தவில் கூட ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த அச்சம் யதார்த்தமானதே.

பல தலைமுறைகளாக திருக்கோவில்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்துவந்தவர்கள் தற்போது தங்கள் வாரிசுகளை அதில் ஈடுபடுத்துவதில்லை. அவர்களுக்கு அந்த கலையை கற்றுத் தருவதில்லை. காரணம், குறைந்த வருவாய் மற்றும் மாறிவரும் சமூக சூழ்நிலைகள் & திருமண சந்தையின் எதிர்பார்ப்புக்கள்.

DSCN1351
சமீபத்தில் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில்…

இன்றும் பல திருக்கோயில்களில் அபிஷேக ஆராதனையின் போது நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது.

ஆலயம் சார்ந்த அருங்கலையாக, நாதஸ்வரம் தவில் கலையாகிய மேளம் திகழ்கிறது. (நாதஸ்வரம் மற்றும் தவில் இரண்டையும் சேர்த்து தான் மேளம் என்று அழைப்பார்கள்!) ஆலயங்களில் அன்றாட வழிபாட்டிற்கு தேவையான ஒரு கலையாகவும், விழாக்காலங்களில் முக்கியமானதோர் இடத்தையும் மேளம் வகிக்கிறது.

DSCN1305

சிவாலயமாக இருந்தாலும் வைணவ ஆலயமாக இருந்தாலும் கோவில் அர்ச்சகர், மேளக்காரர் இருவரும் நிச்சயம் அங்கு இருக்கவேண்டும். ஆனால் இன்று எத்தனை கோவில்களில் இருக்கிறார்கள்? மேளக்காரர்கள் இல்லாத பாரமபரியக் கோவில்கள் பல தமிழ் நாட்டில் உண்டு.

 குன்றத்தூர் முருகன் கோவிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணத்தில்...

குன்றத்தூர் முருகன் கோவிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணத்தில்…

மேளக்காரர்கள் எனப்படும் இந்த நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்களின் வாழ்க்கை ஆலய வழிபாடு, பணி போன்றவற்றை மையமாகக் கொண்டே அமையும். அதனால் இக்குடும்பத்தார் ஓர் ஊரில் பல குடும்பங்கள் சேர்ந்து தங்குவதற்கு வழியில்லை, ஆலயங்களை மையமாகக் கொண்டே இவர்களின் குடியேற்றம் அமைந்திருக்கும். ஆலயத்தையும் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களையும் மையமிட்டே இவர்களின் பொருளாதார நிலையும் வாழ்வியல் நிலையும் அமையும். இவர்களில் மிகச்சிறந்த மேதைகளாக விளங்குபவர் வெளியில் சென்று கச்சேரி செய்து பொருள் ஈட்டுவர்.

DSCN0843
திருவள்ளுவர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி திருக்கல்யாணத்தில்…

நாதஸ்வர மற்றும் தவில் இசையை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நாதஸ்வரம் & தவில் மிகவும் அழகான ஒரு வாத்தியம். வாசிக்கும் இடத்தில் ஒரு மங்கலமான சூழல் உண்டாகிறது. அங்கிருக்கும் துர்தேவதைகளை விரட்டுகிறது. கர்ப்பிணிகள் இந்த இசையை கேட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த வித உடல் குறைபாடுமின்றியும் பிறக்கும். மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகள் கேட்க கேட்க அவர்களின் குறைபாடு மெல்ல மெல்ல நீங்கும்.

புல்லுக்கு இறைக்கும் நீரை நெல்லுக்கும் கொஞ்சம் இறைக்கலாமே?

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள பலர் முன்வரவேண்டும். அவர்களை அறநிலையத் துறை ஊழியர்களாக நியமித்து கோவில்களில் பூஜைகளின் போது வாசிக்கும்படி செய்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த அற்புதமான கலை காப்பாற்றப்படும். ஓட்டு வங்கி அரசியலுக்கும் இலவசங்களுக்கும் பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் சூழ்நிலையில் இதற்கென சில கோடிகள் தாரளாமாக ஒதுக்கலாமே? சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளின் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 47,968 கோடி ரூபாய்! (கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டாயிரம் கோடிகள்!!) நாம் எங்கே போகிறோம்?

மேலும் கோவில்களில் தற்போது வாசிக்கும் வித்துவான்களுக்கு நல்ல ஊதியம் / சலுகைகள் கொடுக்க வேண்டும். இசைக்கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு பல சலுகைகளை வழங்கவேண்டும். புல்லுக்கு இறைக்கும் ஆற்று வெள்ளத்தை நெல்லுக்கு கொஞ்சமேனும் இறைக்கலாமே?

DSCN0414
சுவாமி திருவீதி உலா வரும்போது….

நாதஸ்வர & தவில் கலை அழியாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை. இதில் சராசரி மனிதர்கள் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்ய முடியும்?

நிச்சயம் முடியும். நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த அருங்கலை அழிவதை ஓரளவு ஒத்திப்போட இயலும்.

DSCN0434

வருங்காலத்தில் நாதஸ்வர தவில் கலைஞர்களை பார்ப்பதே அபூர்வமாகிவிடும். எனவே எங்காவது கோவில்களில் சுப நிகழ்சிகளில் நாதஸ்வர தவில் கலைஞர்களை பார்த்தால் அவர்களிடம் பரிவுடன் பேசுங்கள். அந்த கலையின் மேன்மையை அவர்களது பணியின் மேன்மையை எடுத்து கூறி நான்கு நல்ல வார்த்தைகள் பேசுங்கள். அவர்கள் தேவைகளை விசாரித்தறிந்து உங்களால் இயன்ற பொருளுதவி செய்யுங்கள்.  அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தேவைகள் ஏதேனும் இருப்பின் அதை செய்ய முயற்சியுங்கள்.

திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலில்...
திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலில்…

இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் இப்படி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். எந்திரத்தனமான மின்சார மங்கள வாத்தியம் போல, பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர தவில் இசையைத் தான் நாம் எதிர்காலத்தில் கேட்போம். நம் சந்ததியினரும் கேட்பார்கள். திருக்கோவில்களிலும் பதிவு செய்யப்பட்ட இசையை தான் கேட்க நேரிடும். எனவே தற்போது நாம் அவர்களை நேருக்கு நேர் பார்த்து அந்த இசையை கேட்கும் பாக்கியம் பெற்றுள்ள சூழ்நிலையில் அந்த அரும்பணியை செய்து வருபவர்களை, அவர்களின் அருமை உணர்ந்து போற்றுவோம்.

B2-431
ஒரு சுப நிகழ்ச்சியில்…

நாதஸ்வர & தவில் வாசிப்பவர்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால் இந்த தெய்வீகக் கலை அழிந்து வருகிறது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். கல்யாணம் முதலான சுப நிகழ்சிகளில் தற்போதெல்லாம் காதை கிழிக்கும் சினிமா பாடல்களுக்கும் வெஸ்டர்ன் மியூசிக்கிற்கும் தான் பலர் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதை எவரும் கேட்பது கூட இல்லை. அதற்கு பதில் நாதஸ்வர கச்சேரியை அவர்கள் வைக்க முன்வரவேண்டும். அதனால் சுப மங்களம் பொங்கி பல்கிப் பெருகும். நமது பாரம்பரியத்தை காக்கவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கௌரவிக்கவும் ஒரு பொன்னான வாய்ப்பு. மேலும் நாதஸ்வர தவில் இசைக்கிடையே திருமணம், மற்றும் வரவேற்பு நிகழ்சிகள் நடைபெறுவதைவிட சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்?

DSC05649

DSCN0428

திருமணம் மற்றும் சுப நிகழ்சிகளின் போது கூடுமானவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு அர்த்தமுள்ள வகையில் பணத்தை செலவு செய்யவேண்டும். வசதிமிக்கவர்கள் தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளில் நலிவடைந்த நாதஸ்வர & தவில் கலைஞர்களை அழைத்து கௌரவிக்கலாம். அதை விட பெரிய ஆசி மணமக்களுக்கு கிடைக்க முடியுமா என்ன?

ஒரு திருமணத்தின் பெருமை அதில் ஏற்பாடு செய்யப்படும் லைட் மியூசிக், பஃப்பே  உள்ளிட்ட ஆடம்பர செலவுகளில் இல்லை. திருமணத்திற்கு பின்னர் அந்த மணமக்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது!!

[END]

7 thoughts on “புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?

 1. உன்னதமான ஒரு பதிவு .
  அழிந்து வருவது கலை மட்டுமல்ல , கூடவே நமது பண்பாடும் நாகரிகமும்தான்

 2. நெத்தியடி பதிவுக்கு நன்றி சுந்தர்.

  எப்போது தமிழ்நாட்டை சினிமா மோகம் பிடித்து ஆட்டதுவங்கியதோ, அப்போதே மக்கள் இந்த நல்ல கலையை தெய்வீகமான இசையை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பதிவிட்டார்கள். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதுபோல் திருமண வரவேற்பு மற்றும் சுப நிகழ்சிகளில் காதையும் மனதையும் கிழிக்கும் இன்றைய சினிமா பாடல்களை கச்சேரி என்ற பெயரில் அதிக செலவு செய்து, நாம் பேசுவது மற்றவர்களுக்கு கேட்க முடியாத அளவுக்கு பேரிரைச்சல், இதில் பல குழுக்களாக சேர்ந்து தமிழ்நாட்டு குத்தாட்டம் வேறு. மணமக்களுக்கு பெரியவர்கள் வாயார ஆசிர்வாதம் செய்வதுகூட அவர்கள் காதில் விழாத அளவுக்கு இசை என்கிற பெயரில் வெறும் இரைச்சல்.

  இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் சுந்தரைப்போல் ஒருசிலராவது மக்களுக்கு தேவையான இதுபோன்ற நல்ல விஷயங்களை ஊடகங்களில் எழுதுவது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல்.

 3. டியர் சுந்தர்ஜி

  தலைப்பு மிக அருமை. இப்பொழுதெல்லாம் சுப நிகழ்சிகளில் கூட Orchestra அண்ட் லைட் மியூசிக் தான் முக்கியத்துவம் பெறுகிறது

  நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எல்லோரும் முன் வர வேண்டும்

  //ஒரு திருமணத்தின் பெருமை அதில் ஏற்பாடு செய்யப்படும் லைட் மியூசிக், பஃப்பே உள்ளிட்ட ஆடம்பர செலவுகளில் இல்லை. திருமணத்திற்கு பின்னர் அந்த மணமக்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது!!//

  100% உண்மை

  நன்றி
  உமா

 4. சுந்தர் சார் வணக்கம் …..மிக அருமையான பதிவு …..உண்மையில் நம் பாரம்பரியம் மற்றும் நாகரீகம் அழிந்து வருகிறது ….. நம் பாரம்பரியம் கலை அழிந்து கொண்டு இருப்பது நமக்கு புரியாமல் நம் கலையை அழித்து வருகின்றோம் …..நம் கலை அழியாமல் இருக்க வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள பலர் முன்வரவேண்டும்…… நன்றி தனலட்சுமி…..

 5. excellent article ti protect our trational music உன்னதமான ஒரு பதிவு .
  அழிந்து வருவது கலை மட்டுமல்ல , கூடவே நமது பண்பாடும் நாகரிகமும்தான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *