Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

print
சென்ற மாதம் நமது உழவாரப்பணி செலவுகளுக்கு குறிப்பாக உழவாரப்பணியில் பங்கு பெறும் நண்பர்களின் உணவு செலவுக்கு என்று நண்பர் ஒருவர் பணம் அனுப்பியிருந்தார். கூடவே அந்த தொகையில் வருவாய் குறைவாக உள்ள  கோவில்களில் விளக்குகளுக்கு எண்ணை தேவைப்பட்டால் வாங்கி தரும்படியும் கூறியிருந்தார். பணி முடிந்த தருவாயில் தான் அந்த பணம் கிடைத்தது. எனவே அப்போது பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து “நீங்கள் கூறியவாரே நிச்சயம் செய்கிறோம். ஆனால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்” என்று அவருக்கு பதில் அனுப்பியிருந்தேன்.

நாட்கள் சென்றன. நண்பர் அதற்கு பிறகு அது பற்றி கேட்கவில்லை. ஆனால் என்னை நான்  மறந்தாலும் என் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை ஒரு போதும் மறப்பதில்லை. மிக சரியான இடத்தில் தேவையான நேரத்தில் அதை செய்வேன். நண்பரின் கோரிக்கையை மிக கவனமாக குறித்து வைத்துக்கொண்டேன்.

நம் உழவாரப்பணிகளுக்கான செலவை நாம் தனிப்பட்ட முறையிலும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து மனமுவந்து ஏற்று செய்து வருகிறோம். இருப்பினும் பணம் அனுப்பிய நண்பரின் பங்கும் இதில் சிறிது இருக்கட்டுமே என்று கருதி அவர் அனுப்பிய தொகையில் ஒரு சிறு பகுதியை இந்த முறை உழவாரப்பணிகளுக்குண்டான உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்திக்கொண்டோம்.

மீதமுள்ள தொகையில் நலிந்த ஆலயங்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை வாங்கி தந்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

இந்நிலையில் நரசிம்மர் எங்களை பேரம்பாக்கம் கோவிலில் பணி செய்யுமாறு பணிக்க இம்முறை உழவாரப்பணிக்கு பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) முடிவானது.

பேரம்பாக்கம் மற்றும் அதற்கு செல்லும் வழிகளில் தொன்மையான பல சிவாலயங்கள் உண்டு. எனவே பேரம்பாக்கம் உழவாரப்பணிக்கு செல்லும்போது மேற்படி ஆலயங்கள் ஒன்றிரண்டை தேர்ந்தெடுத்து நண்பர் கேட்டுக்கொண்டபடி எண்ணை வாங்கி தந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.

சனிக்கிழமை உழவாரப்பணி தொடர்பான பொருட்களை வாங்க மார்கெட் சென்ற போது, தீப எண்ணை இரண்டு டின்கள் – தலா 15 லிட்டர் – வாங்கிக்கொண்டேன். (ஒரு டின் ரூ.1100/-. இரண்டு டின்கள் வாங்கியதால் ஒரு டின்னுக்கு ரூ.50/- டிஸ்கவுன்ட் கிடைத்தது!).

“சுமை கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்” என்ற கூற்றிற்கு ஏற்ப, அந்த டின்களை வீட்டிற்கு கொண்டு வர படாத பாடு பட்டுவிட்டேன். (அது ஒரு பெரிய கதை).

எந்த கோவிலுக்கு எண்ணை கொடுக்கலாம் என்று யோசித்தபோது மப்பேடு சிங்கீஸ்வரர் நினைவுக்கு வந்தார்.

இரண்டு டின்னில் ஒன்றை பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் கொடுத்துவிடலாம் என்று கருதி அந்த ஆலயத்தின் குருக்களை தொடர்புகொண்டு நரசிங்கபுரம் வருவதாகவும் அப்படியே சிங்கீஸ்வரரை தரிசித்துவிட்டு எண்ணை டின் தரவிரும்பதாகவும் சொன்னபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலை உழவாரப்பணிக்காக நரசிங்கபுரம் கிளம்பியபோது வேனில் உழவாரப்பணி பொருட்கள் மற்றும் கருவிகளுடன் இந்த இரு எண்ணை டின்களையும் ஏற்றிக்கொண்டேன்.

முன்னதாக திருவள்ளூரிலிருந்து டூ-வீலரில் நேரடியாக பேரம்பாக்கம் வந்துவிடுவதாக நண்பர் மனோகரன் சொல்லியிருந்தார். எனவே புறப்படும் போது அவரை தொடர்புகொண்டு சிங்கீஸ்வரருக்கு எண்ணை டின் வழங்கும் விஷயத்தை கூறி மப்பேடு வந்துவிடும்படி கூறினேன்.

இங்கு நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து எங்கள் வேன் புறப்பட 6.30 AM  ஆகிவிட்டது. சரியாக 7.15க்கு மப்பேடு அடைந்துவிட்டோம். நமக்கு முன்பே நண்பர் மனோகரனும் திருவள்ளூரிலிருந்து திரு.ராமநாதன் தம்பதியினரும் வந்துவிட்டனர்.

நாம் ஏற்கனவே இந்த ஆலயத்திற்கு ஜனவரி 1 அன்று சென்றுள்ளோம். நண்பர்கள் சிலரும் நம்முடன் வந்துள்ளார்கள். ஆனால் இங்கு எங்களுடன் வந்திருந்த மற்றவர்களுக்கு இந்த ஆலயம் வருவது முதன்முறை. அதன் பழமையிலும் அழகிலும் சொக்கிப் போய்விட்டார்கள்.

ஆலயத்தை பார்த்தபோது நமது உழவாரப்பணி இங்கு தேவை போல ஆகையால் தான் சிவபெருமான் நரசிங்கபுரம் செல்லும் வழியில் இங்கு நம்மை வரவழைத்திருக்கிறார் என்று தோன்றிற்று. நண்பர்களும் அதை ஆமோதித்தனர்.

நண்பர் மனோகரன் ஏற்கனவே நமக்கு முன்பாகவே வந்து குருக்களை சந்தித்து நாம் நண்பர்களுடன் வந்துகொண்டிருக்கும் விபரத்தையும் எண்ணை தருவது பற்றியும் சொல்லி வைத்துவிட்டு தயாராக இருந்தார்.

நாம் சென்றவுடன் குருக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். இரண்டு எண்ணை டின்களில் ஒன்றை நடராஜர் சன்னதி முன்பு தள நண்பர்கள் அவரிடம் ஒப்படைத்தனர்.

நம் தளம் சார்பாக வாசகர் வாங்கித் தந்த தீப எண்ணை வழங்கப்படுகிறது

டின் காலியாவதற்கு முன்னர் தகவல் தெரிவிக்கும்படியும் அடுத்து இன்னொரு டின் வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறோம். மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார் குருக்கள்.

கோவிலில் உழவாரப்பணி செய்ய விரும்பும் விஷயத்தை கூறியதும் தாரளமாக செய்யுங்க. அப்படி செய்றதா இருந்தா உங்களுக்கு இங்கு நிறைய வேலை இருக்கிறது என்றார். நாங்கள் அதைத் தான் எதிர்பார்க்கிறோம் என்றேன்.

என்னதான் அரசாங்கமும் கோவில் நிர்வாகமும் கோவிலை பராமரித்தாலும் ஆலயங்களை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமையல்லவா?

பின்னர் அனைவருக்கும் விஷேட தரிசனம் செய்விக்கப்பட்டது. மூலவரை பார்த்து அந்த அழகில் அனைவரும் உருகிப் போய்விட்டோம்.

உருவத்துடன் இருக்கும் தெய்வங்கள் அழகாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அருவமே ஒரு உருவமாகி அழகாகக் காணப்படுவது இங்கு தான்.

பொன்னிற நாகாபரணத்துடன் தகதகவென அந்த காலை வேளையில் சிங்கீஸ்வரர் ஜொலித்த அழகு இருக்கிறதே காணக் கண் கோடி வேண்டும்.

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே

என்று அப்பர் பெருமான் எந்த நிலையில் பாடியிருப்பார் என்று எங்களால் யூகிக்க முடிந்தது.

நரசிம்மனை பார்க்க செல்லும் வழியில், இந்த எளியோர்களை வரவழைத்து தரிசனம் கொடுத்த சிங்கீஸ்வரரின் கருணையை என்னவென்று சொல்வது? பிறவிப் பயனை அடைந்தோம் என்று தான் சொல்லவேண்டும்.

நம் பரவச அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை என்பதே உண்மை.

நம்முடன் வந்திருந்த நண்பர்கள் அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் நம்மை பார்த்தது “உங்களால் தான் எங்களுக்கு இன்று இங்கு இப்படி ஒரு தரிசனம் கிடைத்தது. நன்றி…. நன்றி…” என்று கண்களிலேயே நன்றி கூறினர். பதிலுக்கு கண்களாலேயே “எல்லாம் அவன் செயல்” என்றேன்.

மூல நட்சத்திர பரிகாரத் தலம் இது என்பதால் வந்திருந்த நண்பர்களில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவராவது இருக்கின்றனரா என்று கேட்டார் குருக்கள். நண்பர் சந்திரமௌலி தான் மூல நட்சத்திரம் என்றார்.

அவரிடம் ஐந்து விளக்குகளை தந்து அதை ஏற்றச் சொல்லி மூலவருக்கு வெளியே அதை வைக்கச் சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார்.

பின்னர் அனைவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது.

நமது தள வாசகர்களுக்காகவும், நலம் விரும்பிகளுக்காகவும், இதுவரை நமது பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று கோரிக்கைகளை சமர்பித்தவர்களுக்காகவும், எல்லாவற்றுக்கும் மேல் இந்த கைங்கரியத்திற்கு உதவிய அந்த நண்பருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டோம்.

தீபாராதனை முடிந்து அனைவரும் ஜோதியை ஒற்றிக்கொண்டு விபூதி பிரசாதம் பெறும்போது தான் கவனித்தோம்…

“டியூப் லைட்டெல்லாம் எரியாதா?” என்று சந்தேகத்தோடு குருக்களை கேட்க, “பாதி லைட்டுக்கு மேல ரிப்பேரா போய்டுச்சு சார். மீதி லைட் ப்யூஸ் போயிடுச்சு. பிட்டிங்க்ஸை மாட்ட ஆளில்லை. ஒரு எலக்ட்ரீசியனை வைத்து இதெல்லாம் ரிப்பேர் பார்க்கனும். யாராச்சும் செஞ்சாங்கன்னா நல்லா இருக்கும்” என்றார்.

அனுமன் நின்று இறைவனை தரிசித்த இடம் – கீழே பதிக்கப்பட்டுள்ளது

 

அடுத்தநொடி, “நாங்கள் இருக்கிறோம் சார். என்ன செய்யனும் சொல்லுங்கள்…  உடனே அதுக்கு ஏற்பாடு செய்கிறோம்” என்றேன். சொன்னது நாம் தான் என்றாலும் நண்பர்கள் அனைவரின் உள்ளமும் அதையே சொன்னது தான் வியப்பு.

“ஒண்ணுமில்லே சார்… ரெண்டு லைட் பிட்டிங்க்ஸ் வாங்கி மாட்டி கொடுத்தீங்கன்னா போதும்… அதே போல கோவில்ல ஏற்கனவே ஒரு நாலஞ்சு பிட்டிங்க்ஸ் இருக்கு. அதையும் ரெடி பண்ணி மாட்டி தரனும்…” என்றார்.

அடுத்து அம்பாள் சன்னதி சென்றோம். அங்கும் இப்படித் தான். அர்ச்சகர் காட்டிய தீபாராதனையில் தான் அன்னையின் முகம் பார்க்க முடிந்தது.

“அம்மா…கோடி சூரியன் ஒன்றாக வந்தாலும் உன் மூக்குத்தியின் ஒளிக்கு நிகராக முடியுமா?” மனம் தவித்தது.

அர்ச்சகரிடம் சன்னதிகளில் தேவையான அனைத்து டியூப் லைட்டுகளையும் தகுந்த நபரை வைத்து பொருத்தி தருவதாக சொன்னோம்.

“வர்ற சனிக்கிழமை… சனிப் பிரதோஷம். கோவிலுக்கு கூட்டம் நிறைய வரும். அதுக்குள்ளே செஞ்சு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்….” என்றார்.

“எவ்வளவு சீக்கிரம் செஞ்சி தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செஞ்சி தர்றோம்” என்றோம்.

நமது விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து வேறு ஏதாவது அவசரம் என்றால் உடனே அழைக்கும்படி கேட்டுக்கொண்டு விடைபெற்றோம்.

அடுத்து எங்கள் பயணம் நேரே பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில். அங்கு பணிதுவக்கி அது பாட்டுக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நண்பர்கள் பம்பரமாக சுழன்று பனி செய்துகொண்டிருந்தார்கள்.

மீதம் இருக்கும் ஒரு டின் எண்ணையையும் கொடுக்கவேண்டுமே…. எனவே இடையில், நாம், நண்பர் மனோகரன், சந்திரசேகர் ஆகியோர் மட்டும் பேரம்பாக்கம் எல்லையில் உள்ள கூவம் என்னும் ஊரில் உள்ள தொன்மையான திரிபுராந்தகர் கோவிலுக்கு சென்றோம்.

கூவம் திரிபுராந்தகர் கோவில் … அழகிய தோற்றம்

1000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. அங்கு சென்று சிவாச்சாரியாரை சந்தித்து நம் தளத்தை பற்றியும் நன்கொடை அளித்த நண்பர் பற்றியும் கூறி அந்த டின்னையும் ஒப்படைத்தோம்.

கோவில் குளத்தில் ஏதோ விழா நடைபெற்றுகொண்டிருந்தது. கோவிலின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அதில் பிஸியாக இருந்தார்கள்.

“நீங்கள் அவசியம் இருந்து கோவிலின் அறங்காவலர்களை பார்த்துவிட்டு செல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் சிவாச்சாரியார்.

ஆனால் நாம் நரசிம்மர் கோவில் உழாவராப்பணியின் இடையே வந்திருக்கும் விபரத்தை சொல்லி மற்றொரு நாள் வரும்போது பார்ப்பதாகவும் தற்போது அவசரமாக கிளம்பவேண்டியுள்ளது என்றும் கூறி சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.

அதற்குள் அறங்காவலர் வந்துவிட்டார். பைக்கை ஸ்டார்ட் செய்ய எத்தனித்த சமயம் நம்மை நோக்கி ஓடிவந்தார்.

“நீங்க வந்த விஷயத்தை இப்போ தான் கோவில்ல சொன்னாங்க.. இப்போ தான் விழா முடிஞ்சுது. அவசியம் இருந்து பிராசாதம் சாப்பிட்டு போகணும்” என்றார் உரிமையுடன்.

உழவாரப்பணியின் இடையே நாம் வந்திருப்பதாக அவரிடம் எடுத்துக் கூறி “போகும்போது வேண்டுமானால் வருகிறோம்” என்று கூறிவிட்டு கிளம்பினோம்.

ஒரு வழியாக இரண்டு சிவாலயங்களுக்கு எண்ணை வாங்கி தந்தாகிவிட்டது. நண்பர் நம்மிடம் ஒப்படைத்த ஒரு மாபெரும் பணியை முடித்துவிட்டோம் என்று சற்று நிம்மதியாக இருந்தது.

இதனிடையே நரசிம்மர் கோவிலில் உழவாரப்பணி முடித்து மதியம் வீடு திரும்பினோம். (அந்த அனுபவங்கள் தனி பதிவாக வருகிறது.)

ஆனால் திரும்பியதிலிருந்து சிங்கீஸ்வரர் கோவிலில் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் மின் விளக்குகள் எரிய வைக்கவேண்டும் என்று மனம் துடித்தது.

நண்பர் மனோகரனும் சந்திரசேகரனும் தாங்கள் இடையில் ஒரு நாள் வந்து அதை பார்த்துக்கொள்வதாக கூறினர். இருப்பினும் ஒரு இறுதியான முடிவுக்கு எங்களால் வரமுடியவில்லை. ஏனெனில் வேலை நாளில் வந்து முடித்துவிட்டு செல்லவேண்டும். மப்பேடு வந்து சென்றால் எப்படியும் அரை நாள் போய்விடும். என்ன செய்வது யாரை வைத்து செய்வது ஒரே குழப்பமாக இருந்தது.

உடனே ஏதாவது செய்யவேண்டும் என்று மனது அரித்துக்கொண்டே இருந்தது. ஃபிட்டிங்க்ஸ் மற்றும் எலக்ட்ரீசியன் கூலி என அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.2000/- பட்ஜெட் என்று நாங்கள் மதிப்பீடு செய்தோம். நண்பர்களிடம் பேசுகையில் ஆளுக்கு சிறு தொகை போட்டு உடனே அந்த பணியை முடித்துவிடுவது என்று முடிவானது. நண்பர் முத்துகுமார் அந்த தொகையை தாமே முழுவதும் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்.

சனிக்கிழமைக்குள் இந்த வேலையை முடித்துவிடவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்தது.

இதற்கிடையே திங்கள் காலை என் தந்தையை நேரே மப்பேடு அனுப்பி, மொத்த கோவிலின் மின்விளக்குகள் மற்றும் ஃபிட்டிங்க்ஸ் தேவை குறித்து ஆய்வு செய்து ஒரு முழு பட்டியலை தயார் செய்து அதற்கு கொட்டேஷனை பெற்று கொண்டு வரும்படி சொன்னேன். அங்கேயே சில கி.மீ. தள்ளி உள்ள மப்பேடு டவுனில் உள்ள எலக்ட்ரிகல் ஷாப்பில் அதற்குரிய கொட்டேஷனை பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னேன்.

ஒரு முழுமையான பட்டியல் தயாரிக்கும்படியும் ஒரு சன்னதியை கூட விடவேண்டாம் என்றும் கூறினேன்.

கோவில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து என் தந்தை வரும் விபரத்தை கூறி அவருடன் சேர்ந்து ஆய்வில் உதவும்படி கேட்டுக்கொண்டேன்.

திங்கள் மதியம் மப்பேடு சென்ற என் தந்தை அங்கு கோவிலில் சுமார் ஒன்றரை மணிநேரம் செலவிட்டு அனைத்து சன்னதிகளையும் சுற்றிப் பார்த்து எங்கெங்கு என்னென்ன விளக்குகள் தேவை ஃபிட்டிங்க்ஸ் தேவை என்று குறிப்பெடுத்துக்கொண்டார்.

இது போன்ற சமயங்களில் ஃபிட்டிங்க்ஸ் மற்றும் பொருட்கள் வாங்குவதை அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல்…. அதை ட்ரான்ஸ்போர்ட் செய்து பணி இடத்திற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல், பொருட்செலவு ஏற்படும்.

விளக்குக்களின் தேவை குறித்து கணக்கெடுக்கும்போது தான் கோவில் ராஜகோபுரத்தில் மின்விளக்குகள் இயங்காதது தெரியவந்தது. அதற்கும் சேர்த்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.

மப்பேடு சந்திப்பில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் பொருட்களை வாங்க கொட்டேஷன் கேட்க சென்றபோது, கோவிலுக்கு என்பதால் லாப நோக்கு எதுவும் இன்றி வாங்கிய மொத்த விலைக்கே பொருட்களை தருவதாக அந்த கடையின் சேட்டு பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு கோவில் கோபுரத்தில் அமைக்க FOCUS LIGHTS அவர் கடையில் தான்  கொடுத்ததாகவும் இரவு நேரத்தில் ஊருக்குள் திருட வரும் திருடர்கள் அதை தொல்லையாக கருதி கோபுரத்தில் கீழ்மாடங்களில் உள்ள மீதமுள்ள லைட்டுகளையும் உடைத்துவிடுவதாகவும் சொன்னார்.

அடுத்து இந்த பணிகளை செய்ய கைதேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் வேண்டுமே. இங்கிருந்து அழைத்து சென்று… பஸ் பயணத்திற்கே நேரம் போய்விடும். வேலை எப்போது பார்ப்பது? ப்ராக்டிகலாக அது சரிப்பட்டும் வராது.

தொடர்ந்து விசாரித்ததில் அந்த கோவிலை நன்கு அறிந்த இதற்கு முன்பு அங்கு எலக்ட்ரிக்கல்  வேலை பார்த்த நபரையே கடைசியில் பிடித்துவிட்டார் அப்பா.

அவரிடம் பேசுகையில் ஒரு ஃபிட்டிங் மாட்ட ரூ.50/- கேட்க… அனைத்து விபரங்களையும் சொன்னபிறகு, சிவனுக்கு செய்யும் தொண்டில் தனது பங்கும் இருக்கட்டும் என்று கடைசீயில் தனது கூலியை குறைத்துக்கொண்டு ரூ.30/- க்கு ஒப்புக்கொண்டார்.

கோவிலுக்கு தேவையான கோபுர போகஸ் லைட்டுகள், மூலவர் சன்னதி மற்றும் அம்பாள் சன்னதி முன் போடவேண்டிய ஃபோகஸ் லைட் மற்றும் இதர பிட்டிங்குகள் மற்றும் வெளிப் பிரகார சன்னதியில் போடவேண்டிய லைட்டுகள், சுவிட்ச் என அனைத்தும் சேர்த்து ரூ.7200/-  என்று எலக்ட்ரிக்கல் கடையில் கொட்டேஷன் கொடுத்தார்கள். (எலக்ட்ரீசியன் லேபர் தனி.)

ரூ.2000/- ஆகும் என்று நினைத்த இடத்தில் ரூ.8000/- க்கு மேல் போகவே .. எங்கு போவது யாரிடம் போய் கேட்பது… என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என்ன ஆனாலும் சரி செய்தே தீருவது என்ற உறுதி மட்டும் குறையவில்லை.அதிகபட்சம் என்னால் 1000/- பர்சனலாக போடமுடியும். முத்துக்குமார் ரூ.2000/- தருவதாக சொல்லியிருந்தார். மீதமுள்ள ரூ.5000/- க்கு என்ன செய்வது? உழவாரப்பணி செலவுகளுக்கு என்று நண்பர்கள் கொடுத்துள்ள தொகையை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம் என்று கருதிய நேரம்…. பழனியப்பன் என்னும் நண்பர் தெய்வீக குழந்தை சபரி வெங்கட் பற்றிய பதிவை பார்த்துவிட்டு நமக்கு ஃபோன் செய்தார்.

சபரி வெங்கட் பற்றி நம்மிடம் சிலாகித்துவிட்டு நரசிங்கபுரத்தில் உழவாரப்பணி எப்படி போயிற்று என்று விசாரித்தார். நரசிம்மர் கோவிலுக்கு சென்ற விஷயத்தையும் போகும் வழியில் மப்பேடு சென்று வந்த விஷயத்தையும் கூறினேன்.  உடனே அவர் “கவலையை விடுங்க சார்…. முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்…. நாளை மாலைக்குள் உங்களை சந்தித்து முழு தொகையையும் அளித்துவிடுகிறேன்…. நீங்க PROCEED செய்யுங்கள்” என்று க்ரீன் சிக்னல் கொடுத்தார்.

சொன்னபடியே நேற்று மாலை நம்மை தேடி வந்து முழு பணத்தையும் (ரூ.8000/-) தந்துவிட்டார். அவரது நண்பர் திரு.பாலச்சந்தர் என்பவர் இது பற்றி கேள்விப்பட்டு தொகையில் சரி பாதி நான் தருகிறேன் என்று ரூ.4000/- கொடுத்துவிட்டாராம். மீத தொகை ரூ.4000/- போட்டு ரூ.8000/- மாக நம்மிடம் கொண்டு வந்து தந்தார் பழனியப்பன்.

என்னை ‘நன்றி’ என்று சொல்லக்கூட விடாமல் உடனே கிளம்பிபோய்விட்டார்.

(இவர் ஏற்கனவே ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வினோதினியின் தந்தையை நேரில் சந்தித்து பொருளதவி தந்து உதவியவர். தவிர பிரேமவாசம் குழந்தைகளுக்கு நாம் சமீபத்தில் சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் வாங்கி தந்தபோது அதில் பெருமளவு உதவியர்!)

பழனியப்பன் முழு தொகையை தருவதாக நம்மிடம் ஏற்கனவே உறுதியளித்திருந்தபடியால் மப்பேட்டில் அனைத்து ஏற்பாடுகளும் நேற்றே செய்யப்பட்டு இதோ இன்று காலை 6.30 க்கெல்லாம் என் அப்பா கிளம்பி மப்பேடு போய்விட்டார்.

இன்று முழுக்க கோவிலில் இருந்து எலக்ட்ரீசியனை அருகே வைத்து முழு எலக்ட்ரிகல் பணிகளும் முடிக்கப்படும்.

நாளை முதல் சிங்கீஸ்வரர் ஜொலிக்க போகிறார் என்பதை எண்ணும்போது மனம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது.

இந்த அரும்பணியில் உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது அடுத்த உழாவாரப்பணி மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் தான் நடைபெறவிருக்கிறது.

மெயின் ரோட்டிலிருந்து மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலின் தோற்றம் – பின்புறம்

இங்கு உழவாரப்பணி செய்யும் யோசைனையே முதலில் இல்லை. எங்கோ நரசிங்கபுரம் செல்பவர்களை தன்னிடம் முதலில் வரவழைத்து தனது ஆலயத்தின் விளக்குகள் தேவையை பூர்த்தி செய்துகொண்டு “இங்கும் உழவாரப்பணியின் தேவை இருக்கிறது. இங்கேயும் கொஞ்சம் கவனி” என்று கட்டளை பிரப்பித்திருக்கிறான் ஈசன்.

அவன் நினைத்தால் மன்னாதி மன்னர்களையும் தன்பால் திருப்பி தனக்கு பணி செய்ய வைக்க முடியும். அப்படி இருக்கும்போது நம்மை நமது தளத்தை நமது நண்பர்களை இந்த பணிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறான் என்பதை என்னும்போது காதலாகி கண்கள் கசிந்துருகிகிறது.

என்ன ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியமோ இந்த கைங்கரியம் நடைபெற அவன் எங்களை தேர்ந்தெடுத்தது.

யோசித்து பாருங்கள்… ஓரிரு லைட்டுகளை மட்டுமே மாட்டவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது ராஜகோபுரத்தின் மாட விளக்குகள் வரை சென்றுவிட்டது.

அவனுக்கு பணி செய்யவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் போதும். அடுத்த கணம் உங்களை கருவியாக்கி அதை பூர்த்தி செய்துகொள்வான் அவன்.

இறைவனை நோக்கி நீங்கள் ஓரடி வைத்தால் அவன் உங்களை நோக்கி நூறடி வைப்பான் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?

=======================================
சுந்தரகாண்டம் UPDATE

சுந்தரகாண்டம் புத்தகங்களை இரண்டாம் ஷெட்யூலில் ஒரு சிலருக்கு மட்டுமே அனுப்ப முடிந்தது. மீதமுள்ள அனைவருக்கும் நாளை நிச்சயம் அனுப்பட்டுவிடும். தாமதத்திற்கு மன்னிக்கவும். மூன்று தொகுப்புகளில் ஒன்று கிடைக்க பெரும்பாடாகிவிட்டது. ஆனால் இனி நூல் அனுப்புகிறவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத ஒரு சிறிய இன்ப அதிர்ச்சி நூல்களுடன் ஒரு எளிய பரிசாக அனுப்பப்படும்.

முதல்கட்ட நூலில் வந்த தொகை முழுவதும் பேரம்பாக்கம் உழவாரப்பணி சென்றபோது கோவில் பசுக்களுக்கு தீவனம் வாங்கி தந்தாகிவிட்டது. விபரங்கள் விரைவில்.

=======================================

======================================
Also check :
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
=======================================

[END]

10 thoughts on “ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

  1. சுந்தர்ஜி,

    படித்ததும் ஈசன் அருள் சிலிர்க்க வைக்கிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல் அவன் அருளாலே அவனுக்கு வேண்டியதை தங்கள் மூலம் பெற்று விட்டார். தங்களால் மட்டுமே (பல பணிகளுக்கு இடையிலும்) சரிவர செய்ய முடியும் என ஈசனுக்கு தெரிந்து இருக்கிறது. உங்கள் பெற்றோர்க்கும் முதலில் நன்றி சொல்லவேண்டும். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும் உங்களுக்கு உதவுவதற்கும். எங்களுக்கும் இதுமாதிரி பணி செய்ய தூண்டுதலாக உள்ளது இப்பதிவு. நன்றி

  2. அப்பப்பா, வேலையும் பார்த்து கொண்டு, இந்த பணிகளையும் செய்து கொண்டு, உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம் சுந்தர் அவர்களே!!!

    ////////இரவு நேரத்தில் திருட வரும் திருடர்கள் அதை தொல்லையாக கருதி கோபுரத்தில் கீழ்மாடங்களில் உள்ள மீதமுள்ள லைட்டுகளையும் உடைத்துவிடுவதாகவும் சொன்னார்.///////////////

    இனிமேல் திருடர்களால் உடைக்கப்படாமல் இருக்க எதாவது பாது காப்பு செய்ய இயலாதா?

  3. காலை வீட்டில் இருந்து கிளம்பி நேராக பேரம்பாக்கம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் உழவாரப்பணிக்கு சென்றுகொண்டு இருந்தோம். சுந்தர்ஜி ஃபோன் செய்து மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் வரச் சொன்னார்.

    அங்கு தரிசனம் இரண்டுமுறை கிடைத்தது .எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விரைவில் நமது உழவாரப்பணி அங்கு நடைபெறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    நல்லவர்களுடன் நட்பு இறைவன் சித்தம் .

    புதிய விளக்கில் ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் அனைவரும் நேரம் கிடைக்கும்போது சென்று தரிசித்து அருள்பெருங்கள் .
    நன்றி.
    -மனோகர்

  4. சுந்தர்ஜி,

    படிக்கும்போதே மெய் சிலிர்கின்றது.

    இந்த தள வாசகர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். மப்பேடு உழவார பணிக்காக காத்திரிகின்றோம்.

    நன்றி.

  5. நந்தியை பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது.
    எனக்கு இந்த முறை கொடுப்பினை இல்லை.
    சுந்தர் சார் அந்த எசன் அருள் அளவிடமுடியாத அளவுக்கு உங்களுக்கு இருக்கு என்று எனக்கு தெரிகிறது.
    அப்பாவுக்கு என் நன்றியை சொல்லுங்கள்.
    இப்படி ஒரு மகனை பெற்ற அவர் ஒரு பாக்கியசாலி
    பெருமாளை பார்க்க போன உங்களை என்னையும் கொஞ்சம் கவனி என்று எசன் கூப்பிட்டு அவர் பணி செய்ய வைத்த அவர் கருணையை என்னவென்று சொல்வது.

  6. ///”என்னை நான் மறந்தாலும் என் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை ஒரு போதும் மறப்பதில்லை. மிக சரியான இடத்தில் தேவையான நேரத்தில் அதை செய்வேன்.”///

    உங்கள் இந்த குணத்திற்கு கடவுள் சரியான சமயத்தில் பொருத்தமான பரிசு கொடுப்பான்.
    இரண்டு கோவில்களில் குறைந்தது ஒரு மாதம் எல்லா சன்னதியிலும் எண்ணெய் விளக்கு எரிய எண்ணெய் வாங்கி கொடுத்த நம் வாசகருக்கு நம் தளம் சார்பாக மிக்க நன்றி.

  7. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது வழக்கம். அந்த மக்களையே மகேசனுக்கு சேவை செய்ய வைப்பது சுந்தரின் பழக்கம். 8000 செலவாகும் எப்படி செய்யப்போகிறோம் என்று நினைக்கும்போது நம் தள வாசகர் பழனியப்பன் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டது அந்த ஈசனின் அருள்தான். அதுவும் சுந்தரை தேடிவந்து பணத்தை கொடுத்திருக்கிறார். யார் சார் இப்படி செய்கிறார்கள் இந்த காலத்தில். எல்லாம் அவன் செயல்.

  8. அவனுக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தாலும், அவன் மனது வைக்கவேண்டுமே…..பாருங்கள் நாம் என்னதான் செய்யவேண்டும் என்றாலும்….நமக்கு முன்னால் நண்பர் செய்துவிட்டார்…….
    .

    மாரீஸ் கண்ணன்

  9. சூப்பர் சர்வீஸ்
    இதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன்
    நன்றி

  10. 2000 தேவை என்று நினைத்தீர்கள் உடனே ஒரு நண்பர் முழுவதும் நானே தருகிறேன் என்றார் ,அடுத்து அது 8000 ஆகி விட்டது,பார்த்தால் அந்த பணமும் உடனே ஒருவர் மூலம் கிடைத்து விட்டது இது தான் சிவனின் திருவிளையாடல் ,அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது ,சிவன் நினைத்து இருந்தால் எவ்வளவோ பணக்காரர்கள் மூலம் இதை நிறைவேற்றி இருக்கலாம் ஆனால் நம் தல வாசகர்கள் மூலம் நம் தளம் மூலம் நிறைவேற்றி உள்ளார் என்றால் நாம் செய்த பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *