Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

print
ண்டவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்திலும் நிச்சயம் ஏதேனும் நீதி ஒளிந்திருக்கும். சற்று சிந்தித்து பார்த்தால் அது புரியும். ஆனால் ஒரு நிகழ்வு அதிக பட்ச நீதிகளை நமக்கு உணர்த்தியது என்றால் அது இந்த பதிவில் நீங்கள் படிக்கப்போகும் நிகழ்வாகத் தான் இருக்க முடியும். படித்தவுடன் என்னையுமறியாமல் அழுதேவிட்டேன். நீங்களும் கண் கலங்குவீர்கள் என்பது உறுதி.

இந்த சம்பவத்தில் வருபவர்களை போன்று நமக்கும் ஆத்யந்த பக்தி இருக்குமானால் நிச்சயம் நாமும் ஒருநாள் அவனருள் பெறுவோம்.

இறைவன் மேல் உங்களுக்கு தன்னலமற்ற பக்தியும் அன்பும் இருந்தால் நீங்கள் கேட்காமலே உங்கள் கோரிக்கைகளை அவன் நிறைவேற்றுவான் என்பது உறுதி.

நண்பர் பால் ஹனுமான் அவர்களின் தளத்தில் நான் படித்த, சிலிர்த்த, கண்கலங்கிய ஒரு நிகழ்வை அவரின் அனுமதி பெற்று இங்கு தருகிறேன்.

நன்றி!!

=======================================================

In GOD we trust!

தொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் என்றால் விருதுநகர் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். விருதுநகர் என்ன, தமிழ்நாடு முழுவதுமே சமீபகாலமாக அவர் பிரபலமடைந்து வருகிறாரே! வாரப் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி, தொலைக்காட்சிகளில் நேரடிப் பேட்டி என, பொதுஜனங்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைப்பதில் போட்டாபோட்டிதான். சமையல் எண்ணெய், பருப்புவகைகள், உயர் ரக மளிகைச் சாமான்கள் என அவரது நிறுவனத் தயாரிப்புகள் பலரது சமையலறைகளுக்குள் நுழைந்து, அவரது புகழையும் மணம் கமழச் செய்கின்றன.

சங்கரகிருஷ்ணன் பரம்பரைப் பணக்காரர் அல்ல. அதற்காக தடாலடியாகப் பணம் சேர்த்த, தாதாத்தனங்கள் கொண்ட திடீர் பணக்காரரும் அல்ல. செங்கற்களை அடுக்கி, கட்டடம் எழுப்புவதுபோல் படிப்படியாக உழைப்பினாலும், திறமையினாலும் முன்னுக்கு வந்தவர். அவருக்குத் தனது உழைப்பு, திறமை இவற்றைவிட வேறு ஒரு விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அது, திருப்பதி பாலாஜி.

Lord Srinivasa

திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும் என்று பெருமாள் பக்தர்கள் கூறுவது, சங்கரகிருஷ்ணன் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு நிஜம். அவரது மறைந்த நண்பன் கோவிந்தசாமிதான் 15 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக அவரைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவன். கூட்டிச் சென்ற கோவிந்தசாமிக்கு கோவிந்தா சாமி கொட்டிக் கொடுத்தாரோ இல்லையோ, கூடச் சென்ற சங்கரகிருஷ்ணனுக்கு திருப்திகரமான திருப்பங்களைக் கொடுத்தார். அதற்குப் பிரதி நடவடிக்கையாக, அவர் ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை திருப்பதி உண்டியலில் சேர்ப்பது வழக்கம்.

இப்போதும் தனக்கு ஏற்றம் தரும் ஏழுமலையானைத் தரிசித்து அவருக்கு காணிக்கையைச் செலுத்துவதற்காக காரில் பயணமானார் சங்கரகிருஷ்ணன். டிரைவர் பல முறை சாரி கேட்டு, அவசர வேலையாக ஊருக்குச் சென்றுவிட்டதால், காரை அவரது நண்பனும் கம்பெனி ஆடிட்டருமான ராமபத்ரன் ஓட்டிவந்தார். ராமபத்ரன் கிண்டல் பேர்வழி. ஆரம்பகாலத்தில் திருப்பதிக்குக் கூட வரும்போது, “ஏம்பா உன் ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு டிவிடெண்ட் கொடுக்கவா?” என சங்கரகிருஷ்ணனிடம் கேலி செய்வார். இல்லையேல், “என்னப்பா, ‘உயர்’ அதிகாரிக்கு கமிஷன் கொடுக்கப் போலாமா?” எனச் சீண்டுவார். இதற்கெல்லாம் சங்கரகிருஷ்ணன் அசைந்துகொடுப்பதில்லை. “எனது வளமான வாழ்க்கைக்கு வெங்கடேசப் பெருமாள்தான் காரணம். யார் கேலி பேசினாலும் நான் ஏற்கெனவே அவர்கிட்ட பிரார்த்தனை செய்த மாதிரி வருஷாவருஷம் எனது காணிக்கையைக் கொடுத்துட்டேதான் இருப்பேன்” என்று கூலாக பதிலளிப்பார்.

சென்னை மாநகரைத் தாண்டி ஆந்திர எல்லையைத் தொட இருந்தபோது, கார் திடீரென மக்கர் செய்தது. புஸ் புஸ் என்று சப்தத்துடன் ஏதோ ஒரு கிராமப்பகுதியில் நின்றுவிட்டது. சங்கரகிருஷ்ணனின் டிரைவர், தான் இந்த முறை திருப்பதி வரவில்லை என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் காரை சர்வீஸுக்கு விட்டு, பெட்ரோலை நிரப்பி, எல்லாவற்றையும் சரிபார்த்துதான் ஒப்படைத்தான். பிறகு எப்படி?

பேச்சு சுவாரஸ்யத்தில் திருப்பதிக்குச் செல்லும் சரியான பாதையை விட்டு, வேறு எங்கோ கார் வந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. பக்கத்தில் மெக்கானிக் ஷாப் ஏதும் இருக்குமா? சரியான நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது? சங்கரகிருஷ்ணனுக்கு சென்டிமென்டாக, தான் முதன்முதலாக திருப்பதிக்குப்போன ஜூலை மாதம் 2-ம் தேதி பாலாஜியை தரிசித்தாக வேண்டும். இதுவரை வழியில் எந்த இடைஞ்சலும் வந்ததில்லை. சொகுசாகத்தான் வருவார். தரிசனத்துக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியும் பிரமாதமாக இருக்கும்.

சே! இந்தமுறை இப்படி நடுவழியில் மாட்டிக் கொண்டோமே என சங்கரகிருஷ்ணனுக்கு அவரது இயல்பை மீறி ஆத்திரமும் ஏமாற்றமும் பொங்கி வந்தது. “அந்த முட்டா டிரைவருக்கு லீவு கொடுக்காம, வாடான்னு சொல்லியிருக்கணும். அவன் கூட வந்திருந்தா வழியும் தப்பியிருக்காது. ஏதாவது சரிபண்ணி கூட்டிப்போயிருப்பான். இப்போ ஒரு மணி நேரமா சும்மா நிக்கறோமே” என்று புலம்பினார்.

“கோபப்படாதே சங்கரகிருஷ்ணா, எல்லாம் உன் பெருமாள் விளையாட்டுதான்” என்று அப்போதும் கிண்டலடித்தார் ராமபத்ரன். “சரி, சரி, பக்கத்துல எங்காவது விசாரிப்போம்” என்று கூறி சங்கரகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு அவர் சற்று நடந்துவந்தபோது பக்கவாட்டில் பழமையான, சற்று சிதிலமடைந்த கோவில் ஒன்று தென்பட்டது. “வாப்பா, இந்த சாமிட்ட பிரார்த்தனை செஞ்சுட்டு, அந்த சாமியைப் பாக்கறதுக்கு உபாயம் தேடுவோம்” என்றார் ராமபத்ரன். சங்கரகிருஷ்ணனால் தட்ட முடியவில்லை. ஏதாவது வழி கிடைக்குமே என்ற எண்ணத்தோடு, ஏதோ ஒன்று அந்தக் கோவில்பால் அவரை ஈர்த்தது.

அருகே சென்றபோது சிதிலமடையத் தொடங்கியுள்ள அந்தக் கோவில் சிவன் கோவில் எனத் தெரிந்தது. வாசலிலேயே பட்டர், இவர்களுக்காகக் காத்திருந்தவர்போல் நின்றிருந்தார். “வாங்கோ, வாங்கோ” என வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார். “என்னமோ தெரியலை, வழக்கமா பத்து மணிக்கு நடை சாத்திருவேன். ஏன்னா பெரிசா ஒண்ணும் ஆள் வரமாட்டா. உங்களைப்போல பெரிய மனுசா இங்க வரதே அபூர்வம். இன்னைக்கு எம்பையனோட காலேஜ் அட்மிஷன் விஷயமா பெரிய மனுஷா ஒருத்தரைப் பார்க்கணும். என் பையன் வர்ரதுக்காக காத்துண்டுருக்கும்போதுதான் உங்களைப் பார்க்க முடிஞ்சது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். வாங்கோ, உள்ளபோய் சுவாமியை தரிசிக்கலாம்” என்றார் பட்டர்.

நல்ல அருமையான கோவில்தான். ஆனால் அங்கங்கே புதர் மண்டிக் கிடந்தது. ஏதாவது சோழனோ, பல்லவனோ கட்டியிருக்கணும். அது சரிதான் என்பதைப்போல, “சார்! இது ஆந்திராவை ஒட்டி தொண்டை மண்டலமா இருந்தாலும், இதைக் கட்டினவன் சோழ மன்னன். குலோத்துங்கச் சோழன்னு சொல்றா. ஆனா, கல்வெட்டு எதுவும் அகப்படலை” என்றார் பட்டர்.

“புராணப்படி பார்த்தா, இது விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தபோது இங்க லிங்கப் பிரதிஷ்டை செஞ்சு, ஈஸ்வரனை வழிபட்டதா சொல்றா. சுவாமி பேரு கூட கூர்மேஸ்வரர்தான். இதைப்போல சென்னைல கச்சாலீஸ்வரர் கோவிலும், சிங்கப் பெருமாள் கோவில் பக்கத்துல திருக்கச்சூர்ல கச்சபேஸ்வரர் கோவிலும் இருக்கு. கூர்மம், கச்சாலம், கச்சபம் எல்லாமே ஆமையோட சம்ஸ்கிருதப் பேரு. விஷ்ணு கூர்ம அவதாரத்துல சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்கறதுனால இந்த இடத்துக்கு கூர்மேஸ்வரம்னு ஒரு பேரு இருக்கு” என்று மேலும் தொடர்ந்தார் பட்டர்.

அப்போது, சங்கரகிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்தார் ராமபத்ரன். பார்த்தியா நீ, உன்னுடைய பெருமாளே இங்கே பார்த்தால் சிவனைக் கும்பிடுகிறார்…

கேலி செய்வதுபோல் இருந்தது அவரது சிரிப்பு. இதற்கும் பட்டரின் வார்த்தைகள் மூலமே பதில் வந்தது. “எல்லா பகவானும் சமம்னு சொல்றதே தப்பு. ஏன்னா, பகவான் ஒருத்தர்தான். அவர்தான் நமக்காக பல ரூபங்கள்ல காட்சி தரார். அவா அவா கும்படற சாமி மேல நல்ல பக்தியும் நம்பிக்கையும் வேணும்கிறதுக்காக பெருமாள் சிவனைக் கும்பிட்டார்னும், சிவன் சில இடங்கள்ல பெருமாளைக் கும்பிட்டார்னும் புராணங்கள் சொல்றது. பேதங்களெல்லாம் மனுஷா மனசுலதான். பகவான் ஒருத்தரேதான். அதோட நாம செய்யற நல்ல செயல்களுக்கும், நம்பிக்கைக்கும் ஏத்தாப்பலதான், நம்ம உழைப்புக்கும் தகுந்தபடி பகவான் அருளறார்” என்றார் பட்டர். சங்கரகிருஷ்ணனுக்கு மட்டுமின்றி ராமபத்ரன் மனதிலும் பட்டரைப் பற்றி உயர்ந்த எண்ணம் எழுந்தது.

தரிசனம் முடிந்ததும் ஆரத்தித் தட்டில் 1000 ரூபாய் போட்டார் சங்கரகிருஷ்ணன். ஆரத்தி ஜோதியை விட அதிகமாக, பட்டரின் கண்கள் ஜொலித்தன. கோவில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் ஈஸ்வரன் சன்னதி நோக்கி சங்கரகிருஷ்ணனும், ராமபத்ரனும் வந்தனர். அப்போது, பட்டருடன் யாரோ பேசும் சப்தம் கேட்டது.

“அப்பா, இந்த முறையாவது நாம பார்க்கப்போற மாமா, கடன் கொடுத்துடுவாரா? இதுவரை நாலு முறை போயாச்சு!” என்று பட்டரிடம், அருகில் நின்றுகொண்டிருந்த பையன் கேட்டதன் மூலம் அவன், பட்டரின் பையன் என்பது புரிந்தது. “நம்பிக்கையை விடாதப்பா. எப்படியும் ஈஸ்வரன் கைகொடுப்பான். நமக்குக் கொடுப்பினை இருந்தா எப்படியும் 5 லட்சம் கிடைச்சுரும். நீ ஆசைப்பட்டபடி என்ஜினீயரிங் காலேஜ் சேர்ந்திரலாம்” என்றார் பட்டர்.

“எனக்காக வேணாம்பா, நியாயம், நேர்மை, பக்தி, பகவான் கைங்கர்யம்னு இருக்கற உங்களுக்காகவாவது நமக்குத் தேவைப்படறபோது பகவான் பணம் கொடுத்து உதவ வேண்டாமா? நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு?” என்றான் படபடப்புடன் பையன்.

“அப்படிப் பேசாதப்பா, பகவான் எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுருப்பான். அவனண்ட நம்ம பாரத்தை போட்டுட்டு அவனே கதின்னு இருப்போம். நல்லது நடக்கும்” என்றார் பட்டர்.

இருவரின் உரையாடலையும் கேட்டபடியே சங்கரகிருஷ்ணனும் ராமபத்ரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். “இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்குமா?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். “சார் அப்போ அங்க நிக்கறது உங்க காரா கவலைப்படாதீங்க சார். பக்கத்துலதான் மெக்கானிக் ஒருத்தர் இருக்கார். நான் சைக்கிள்ல போய் கூட்டிண்டு வரேன்” என்று கூறி பதிலுக்குக்கூட காத்திராமல் சிட்டாய் பறந்தான் பையன்.

OLYMPUS DIGITAL CAMERA

சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்தபடி, ஒரு விண்ணப்பம் என்று இழுத்தார் பட்டர்.

“அடடா, ஆயிரம் ரூபாயை தட்டுல போட்டதும் பட்டருக்கு பணத்தாசை வந்துவிட்டதா, அவர் பையனுக்குக்கூட காலேஜ் அட்மிஷன் அது இது என்றாரே!” என்ற எண்ணம் சற்று அசூயையுடன் சங்கரகிருஷ்ணன் மனத்தில் எழுந்தது. ஆனால், பட்டர் கேட்ட உதவி, சங்கரகிருஷ்ணனை அசரவைத்தது.

“நீங்களே பார்த்திருப்பேள். இந்தப் புராதனக் கோவில் கம்பீரமா இருந்தாலும், ரொம்ப சிதிலமாயி்ட்டது. நல்ல வருமானமுள்ள கோவில்னா கவர்ன்மென்ட் எடுத்துப்பா, கல்வெட்டு, புதைபொருள்னு ஏதாவது கிடைச்சதுன்னா ஆர்க்கியாலஜியாவது எடுத்துப்பா. ஆனா இது ரெண்டுக்கும் வழியில்லாத கோவில். நீங்க பெரிய மனசோட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கேள்..” என்று சொல்லி தொண்டையைச் செருமிக்கொண்டார் பட்டர்.

“உங்களப் பார்த்தா பெரிய கம்பெனி ஓனர் மாதிரி இருக்கு. நீங்க சொந்தமாவோ இல்ல உங்க கம்பெனி மூலமாவோ இந்தக் கோவிலுக்கு மராமத்து செய்து திருப்பணி செய்யலாம். முடியுமா?” என்று கேட்டார் பட்டர்.

பட்டரின் பண்பான வார்த்தைகள், அவரது சுயநலமில்லாத பொதுநலம் எல்லாம் சங்கரகிருஷ்ணனைக் கவர்ந்தன. “செய்துடலாம் சாமி, கோவில் சுவரைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிக்க ஒரு லட்சம் ஆகும்ணு நெனக்கறேன். என் கம்பெனி நன்கொடையா அதைப் பண்ணிடறேன். கோவில் திருப்பணி உபயம் – பெருமாள் பிரசாதம் அன் கோ-ன்னு ஒரு போர்டு மட்டும் வெச்சுக்க அனுமதி கொடுங்க” என்றார் சங்கரகிருஷ்ணன், சற்று விளம்பர உத்தியையும் மனத்தில் வைத்தபடி.

“ஆகா, பேஷ் பேஷ்! சிவன் கோவிலுக்கு உபயம் பெருமாள் பிரசாதம். ரொம்ப அருமை. அண்ணா பேரு என்ன?” என்று கேட்டார் பட்டர். ‘சங்கரகிருஷ்ணன்’ என்று பதில் வந்ததும் “பார்த்தேளா? உங்க பெயரே, அரியும் சிவனும் ஒண்ணுங்கற பெரியவா வாக்குக்கு ஏத்த மாதிரி இருக்கு” என்று மகிழ்ந்தார்.

இந்த மனிதரிடம்தான் எத்தனை ஞானம், பண்பு என்று வியந்தபடி, “சாமீ, திரும்ப ஒரு தர ஆரத்தி காட்ட முடியுமா?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். ‘ஓ காட்டிடலாமே’ என்று அவர், சுவாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு, இருவர் பக்கமும் தட்டை நீட்ட, அதில் கட்டுக் கட்டாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைப் போட்டார் சங்கரகிருஷ்ணன். “அடடா நீங்கதான் கம்பெனி செலவுல திருப்பணி செய்யறேன்னு சொன்னேளே? இப்போ இந்தப் பணத்தை தட்டுல போட்டிருக்கேளே? இதை எப்படி நான் காபந்து பண்ணுவேன்? நீங்களே வெச்சிருந்து திருப்பணி செய்யுங்கோ!” என்று பதறினார் பட்டர்.

“இருக்கட்டும். இருக்கட்டும். திருப்பணியை என் கம்பெனி செலவுல செஞ்சுடறேன். இது உங்க பையன் என்ஜினீயரிங் காலேஜ்ல சேர நான் உங்களுக்குக் கொடுக்கற காணிக்கை” என்றார் சங்கரகிருஷ்ணன். கண்ணில் நீர்க்கோர்க்க நன்றிகூட சொல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த பட்டரிடம், “சாமி உங்க பையன் பேரு என்ன?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன்.

“பாலாஜி” என்று பதில் கூறினார் அந்தக் கோவிலின் பட்டர் பரமேஸ்வர குருக்கள்.

[Courtesy : balhanuman.wordpress.com]

============================================

என்ன நண்பர்களே, சொன்னது போல கண்கள் கலங்கிவிட்டதா ?

அவன் நடத்தும் நாடகங்களுக்கான காரணத்தை அவன் ஒருவனே அறிவான் என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?

சரி… இந்த சம்பவத்தில் பட்டருக்கு உதவியது சிவபெருமானா அல்லது எழுமலையானா?

பட்டருக்கு பொருளுதவி கிடைக்க செய்தது நிச்சயம் தில்லையம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கும் அந்த ஆடல்வல்லான் தான். தன்னையே நம்பி தனக்கு தொண்டு செய்து கொண்டிருப்பவருக்காக அவன் நிகழ்த்திய நாடகம் இது.

இந்த நாடகத்துக்கு ஒப்புக்கொண்டு தனது பக்தரிடமிருந்து தனக்கு வர வேண்டிய காணிக்கையை பட்டருக்கு திருப்பிவிட்டு மெளனமாக புன்னகைத்தபடி நடந்ததை ரசித்தவன் வேங்கடமுடையான்.

மொத்தத்தில் ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் இது!!

========================================

நாளை (அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகத் திருநாள்!

நாளை அன்னாபிஷேகத் திருநாள். சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும். நாளை சிவபெருமானை தரிசித்தால் கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நாம் செய்யவேண்டியது என்ன, மற்றும் அன்னாபிஷேகத்தின் சிறப்புக்களை விளக்கி சென்ற ஆண்டு நாம் வெளியிட்ட பதிவை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!
http://rightmantra.com/?p=1043

நன்றி!

========================================

[END]

 

 

18 thoughts on “ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

  1. சுந்தர்ஜி வெகு அருமையான தலைப்பு. போன வாரம் தான் மகாபெரியவா சைட்டில் பார்த்தேன். நானும் படித்து விட்டு மிகவும் உனார்ச்சிவசபட்டேன்.

    மொத்தத்தில் ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் இது!! – 100% உண்மை

  2. ஆண்டவனின் அற்புதமான் திருவிளையாடல் அருமையான சம்பவம் உண்மையாகவே கண்கள் கலங்கித்தான் போனது சார் நன்றி நன்றி

  3. இந்த மாதிரி கட்டுரை படிக்கும் பொழுது நம் தெய்வ நம்பிக்கை இன்னும் வலுபெறும். மிக்க நன்றி

  4. பரமன் பல அவதாரங்கள் எடுத்தாலும், ஒர் உண்மையான பக்தனக்கு உதவ, பல நேரங்களில் மனித அவதாரங்கள் எடுப்பார் என்பதற்கு இதுவொரு நிகழ்கால இறைவிளையாடல்.

  5. //நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு?” //

    One Story – Multiple messages.
    Thank you for your service.

    -Srirangam Radhu

  6. //இந்த சம்பவத்தில் வருபவர்களை போன்று நமக்கும் ஆத்யந்த பக்தி இருக்குமானால் நிச்சயம் நாமும் ஒருநாள் அவனருள் பெறுவோம்.

    இறைவன் மேல் உங்களுக்கு தன்னலமற்ற பக்தியும் அன்பும் இருந்தால் நீங்கள் கேட்காமலே உங்கள் கோரிக்கைகளை அவன் நிறைவேற்றுவான் என்பது உறுதி.//

    Yes true sir.

  7. அற்புதமான பதிவு சுந்தர் சார்.
    “இறைவன் மேல் உங்களுக்கு தன்னலமற்ற பக்தியும் அன்பும் இருந்தால் நீங்கள் கேட்காமலே உங்கள் கோரிக்கைகளை அவன் நிறைவேற்றுவான் என்பது உறுதி.” – சத்தியமான வார்த்தைகள்.

    இறைவன் நமது கோரிக்கைகளை சில சமையம் மனித ரூபத்திலே பெரிய மனம் படைத்தவர்கள் மூலம் (தொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் போன்று) நிறைவேற்றுகிறார்.
    நமது கோரிக்கையை இறைவனிடம் விடுவோம்.
    கேட்டால்தான் உதவி கிடைக்கும்.. பிறர் நலம் சிறக்க உரியவரிடம் / உள்ளவரிடம் உதவி கேட்க என்றுமே தயங்காதீர்கள்.

    இறைவன் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் மூலம் நிறைய கோரிக்கைகளை நிறைவேற்றுவான். உங்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவான்.

    நன்றி.

  8. ஜி. உண்மையிலே கண்கள் பணித்தது. இறையின் அற்புதத்தினை உணர முடிந்தது.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  9. படித்தேன் ..நெகிழ்ந்தேன்…

    HE IS A MASTER DESIGNER… HE KNOWS WHOM TO GIVE – WHAT TO GIVE – HOW TO GIVE – WHEN TO GIVE

  10. ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் அருமை
    தில்லையம்பதியிலும், மதுரையிலும் அவர் நடத்திய விளையாடல் போல ஆடிட்டரை வைத்து சங்கரனுக்கும் பாலாஜிக்கும் நடுவில் நடத்திய விளையாடல்.
    கொடுத்தவர் சங்கரன் பெற்றவர் பாலாஜி.
    அவர் நினைத்ததை அவன் நிறைவேற்றுவான் என்பதற்கு ஒரு சாட்சி
    காரணம் இன்றி காரியம் இல்லை என்பதற்கு மற்றுமோர் உதாரணம்.
    படித்ததும் கண்கள் கலங்கி விட்டது.

  11. “இறைவன் மேல் உங்களுக்கு தன்னலமற்ற பக்தியும் அன்பும் இருந்தால் நீங்கள் கேட்காமலே உங்கள் கோரிக்கைகளை அவன் நிறைவேற்றுவான் என்பது உறுதி.”
    இந்த மாதிரி கட்டுரை படிக்கும் பொழுது நம் தெய்வ நம்பிக்கை இன்னும் வலுபெறும். மிக்க நன்றி

  12. கடவுளை நம்பினோர் கைவிடபடார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம். இதை படிக்கும் போது எனக்கு பகவன் இடத்தில் நம்பிக்கை மேலும் வலுக்கிறது. நன்றி.

  13. கண்கள் மனமும் கலங்கியது நமசிவாய…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *