அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் விழாவில் நாம் உரையாற்றும்போது, இடையே 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் கதையை கூறினோம். பாரதி விழாவில் இந்த கதையை கூறவேண்டும் என்று நாம் திட்டமிடவில்லை. அன்றைக்கிருந்த சூழ்நிலையில் நாம் அந்த கதை கூறவேண்டியிருந்தது.
கதைக்கு செல்வோமா?
சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தி!
கி.பி. ஏழாம் நூற்றாண்டு. தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகில் உள்ளது திருச்சாத்தமங்கை என்னும் ஊர். அங்குள்ள கோவில் கொண்டிருக்கும் இறைவனுக்கு அவயந்தினாதர் என்று பெயர்.
இங்கு அந்தணர் குலத்தில் பிறந்து, ஆகம விதிகளின்படி அவயந்தி நாதருக்கு பூஜைகள் செய்து வந்தார் திருநீல நக்கநாயனார் என்பவர். நீதி நூல்களில் சொல்லப்பட்டதைப் போன்று வாழ்ந்த உத்தம அடியார் இவர். இவர் செய்யும் சிவபூஜைகளுக்கு, இவரது துணைவியார் மங்கையர்க்கரசி என்பவர் உதவியாக இருப்பார்.
ஒரு நாள் அவயந்தி நாதருக்கு பூஜை செய்ய வழக்கம் போல கோவிலுக்கு கிளம்பினார் திருநீல நக்கர். பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கணவரின் பின்னே சென்றார் அவரது துணைவியார்.
அவயந்தி நாதருக்கு பூஜை செய்துகொண்டிருக்கும்போது இறைவனின் லிங்கத் திருமேனியின்மேல், ஒரு சிலந்திப் பூச்சி விழுவதை மங்கையர்க்கரசியார் கண்டார். தாயுள்ளம் பதறியது. சின்னஞ்சிறு மழலையின் மேல் ஒரு சிலந்தி விழுந்துவிட்டால், தாய் எவ்வாறு தன் வாயால் ஊதி, அதனை உடனடியாக அப்புறப்படுத்துவாளோ, அதுபோலவே ஈசனின் திருமேனியின்மேல் விழுந்த சிலந்தியை, சட்டென தன் வாயினால் ஊதி விலக்கினார் நாயனாரின் மனைவியார். அந்த முயற்சியில் இறைவனின் திருமேனியில் அவரின் ஒரு சிறுதுளி எச்சில் பட்டுவிட்டது.
இனி உன்னோடு வாழ முடியாது
மனைவியின் இந்த செயலைக்கண்ட நாயனார் மிகவும் சினம் கொண்டார். “என்ன ஒரு அபச்சாரம் செய்துவிட்டாய்… நம் உயிரினும் மேலான இறைவனின் மேல் உன் எச்சில் பட்டுவிட்டது. இது மன்னிக்க முடியாத குற்றம்… எனக்கும், உனக்கும் இனி ஒத்து வராது. சிவாபச்சாரம் செய்த நீ இனி என்னோடு வாழ தகுதியற்றவள்! உன்னோடு நாம் இனி வாழ முடியாது!” என்று சொல்லிவிட்டு மனைவியை கோவிலிலேயே விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்.
கணவன் சொல்லே வேதம் என்று பெண்கள் வாழ்ந்த காலம் அது. இறைவனின் சன்னதியில் அதுவும் பலருக்கு மத்தியில், “நீ எனக்கு வேண்டாம்” என்று உதறி தள்ளிவிட்டு சென்று விட்ட கணவருடன் எப்படி மீண்டும் சேர்வது? இனி நம்முடைய வாழ்க்கை என்ன வாகும்? என்று மனக்கலகத்துடன் துடிதுடித்துப்போன நாயனாரின் மனைவி, அவயந்தி நாதரிடம் கண்ணீர் விட்டு அழுதார்.
“ஐயனே… உன் மேலுள்ள அன்பினால் நான் செய்த செய்கையால் ஏதேனும் அபச்சாரம் நேர்ந்திருந்தால் அடியவளை மன்னித்தருள வேண்டும். என் வாழ்க்கையே இப்போது கேள்விக்குறியாகிவிட்டதே… இனி நான் என் செய்வேன்? எங்கே போவேன்?” என்று பலவாறு இறைவனிடம் முறையிட்டாள். அன்றிரவு கோவிலிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.
திருநீலநக்கரின் கனவில் தோன்றிய இறைவன்
மனைவியை துறந்து வீட்டிற்கு சென்ற திருநீலநக்கநாயனாரின் கனவில் இறைவன் தோன்றினான். ‘‘அன்பனே…. உன் மனைவியின் வாயிலிருந்து வந்த எச்சில் எம்மீது பட்டுவிட்டதென்று அவளை துறந்துவிட்டு வந்தனை. ஆனால் என் முகத்தை பார்.. உன் மனைவி ஊதிய இடத்தை தவிர மற்றைய இடங்களில் யாவும் கொப்புளங்கள் தோன்றியுள்ளன!” என்று தன் திருமுகத்தை காண்பிக்க, பதறிப்போனார் திருநீலநக்கர்.
எத்தனையோ நாள் சிவபூசை செய்தும் தோன்றாத இறைவன், இன்று தன் கனவில் தோன்றியதை எண்ணி மகிழ்ந்தாலும் இறைவனின் முகம் முழுவதும் கொப்புளங்கள் தோன்றியிருப்பதை பார்த்து துடித்துப்போனார்.
“ஐயனே இது என்ன கொடுமை…!” அதிர்ச்சியில் அவருக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.
“உன் மனைவியை நீ மீண்டும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த கொப்புளங்கள் மறையும்!” என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார் அவயந்தி நாதர்.
பொழுது புலர்ந்ததும் ஆலயத்திற்கு விரைந்து சென்ற நீலநக்கர், மனைவியிடம் இறைவன் கனவில் தோன்றிய விஷயத்தை கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
இறைவன் தம்பொருட்டு தன் கணவரின் கனவில் தோன்றி நிகழ்த்திய திருவிளையாடலை எண்ணி மெய்சிலிர்த்தார் மங்கையர்க்கரசியார். இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் மல்க நன்றி கூறினார். அதன் பின்பு தம்பதியினர் வழக்கம் போல சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தனர்.
வேடன் கண்ணப்பரின் உமிழ் நீரையே அபிஷேக நீராக ஏற்றுக்கொண்டு அருள்பாலித்தவன், தாயுள்ளத்தோடு தன் தொண்டனின் மனைவி ஊதியதால் தெறித்த எச்சிலை பொருட்படுத்துவானா?
இந்த சம்பவம் காரணம் அல்ல
திருநீலநக்க நாயனாரின் வாழ்வில் நடைபெற்ற மிக முக்கிய சம்பவம் இது. ஆனால் பலர் நினைப்பது போல நாயன்மார்களில் ஒருவராக அவர் இடம்பெற இந்த சம்பவம் காரணம் அல்ல. ஏனெனில், இந்த சம்பவம் உணர்த்துவது நமது இறைவனின் பெருந்தன்மையையும் பக்தர்கள் பால் அவன் கொண்டுள்ள அன்பையும் தானே தவிர, திருநீல நக்கரின் சிறப்பை அல்ல.
பின்னர் அவரை நாயன்மாராக உயர்த்தியது எது?
திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சிவனாடியார்களுக்கு திருநீல நக்க நாயனார் செய்த தொண்டு.
ஆம்… ஆளுடையப்பிள்ளையின் அருந்தொண்டர் இவர்.
பார்க்கவேயில்லை என்றாலும் திருநாவுக்கரசர் மீது அப்பூதி அடிகள் எப்படி பக்தி செலுத்தி வந்தாரோ அதே போல திருஞானசம்பந்தர் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநீலநக்கர், அவர் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டு ஒழுகினார். அவரை காணவேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தார். ஒரு முறை அவயந்திநாதரை தரிசிக்க திருச்சாத்தமங்கை வந்த திருஞானசம்பந்தரை வரவேற்க திரு நீலநக்கர் வழிநெடுகிலும் வாழை மரங்களையும், தோரணங்களையும் கட்டி, மிகுந்த மரியாதையுடனும், பக்தியுடனும் சம்பந்தப் பெருமானை வரவேற்றார். அவருடன் வந்த நீலகண்ட யாழ்ப்பாணரை அன்பு கலந்த மனத்துடன் வரவேற்றார்.
தடபுடலாக, அனைத்து சிவபக்தர்களுக்கும் விருந்து நடந்தது. அன்றிரவு அனைவருக்கும் தன் வீட்டிலேயே தங்க இடம் தந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரை, மற்ற குலத்தை சார்ந்தவர் என்று நினைக்காமல், தன் வீட்டின் யாகச்சாலையில் தங்க அனுமதித்தார். இதையெல்லாம் கவனித்த திருஞானசம்பந்தர், நீதி நூல்களில் சொல்கின்றபடி வாழ்கின்றவர் திருநீலநக்கநாயனார் என்பதை கண்கூடாக கண்டு உணர்ந்தார்.
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல்லவர் (குறள் 973)
மேல்சாதி, கீழ்சாதி என்று பார்க்காமல், மேன்மையான குணங்கள் இருப்பவர் மேலானவர்கள்தான் என்று சொல்லும் உலகத்திற்கு பொதுவாக நீதி நூலான திருக்குறளின் கருத்தின்படி வாழ்ந்த திருநீலநக்க நாயனாரை, தன்னுடைய திருமணத்தின் போது நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தலைமை யேற்று நடத்தும் பொறுப்பை திருஞான சம்பந்தர் தந்தார்.
இப்படி சிவபக்தியில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு, சிவனடியார்களுக்கு பணிவிடை செய்வதும், ஆகம விதிகளின்படி சிவபூசை செய்வதுமாக வாழ்ந்து வந்த திருநீல நக்கநாயனார் நாயன்மார்களுள் ஒருவராக இடம்பெற்றதில் வியப்பென்ன?
=========================================================
அவயந்தி நாதருக்கு தெரியும்!
திருநீலநக்க நாயனாரின் சரிதையை குறிப்பாக மங்கையர்க்கரசியார் இறைவன் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி விரட்டிய நிகழ்வையும் தொடர்ந்து இறைவன் திருநீலநக்கரின் கனவில் தோன்றிய நிகழ்வையும் நாம் பாரதி விழாவில் கூறி, “தயவு செய்து எங்கள் இறைவனையும் அவன் இயக்கத்தையும் யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம்!” என்று கூறி முடித்தோம். சற்று உஷ்ணமாகவே.
அது சரி… இந்த கதைக்கும் பாரதி விழாவுக்கும் என்ன தொடர்பு? இதை நாம் ஏன் பாரதி விழாவில் கூறினோம்? இந்த பதிவின் தலைப்பில் கூறப்பட்டிருப்பதற்கு பொருள் என்ன?
இந்த கேள்விகளுக்கான விடை அந்த அவயந்தி நாதருக்கு தெரியும்!
=========================================================
[END]
ஓம்.
ியர் சார்
திரு நீல நக்க நாயனார் கதை மிக அருமை. இதை படிப்பதை விட விழா மேடையில் நீங்கள் உணர்ச்சி பிழம்பாக சொன்னீர்கள். photos மிக அருமை.
“தயவு செய்து எங்கள் இறைவனையும் அவன் இயக்கத்தையும் யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம்!” அப்படி செய்தால் அவர்களுக்கு தான் நஷ்டம்’
நன்றி
உமா
இறைவன் என்றும் பெரியவர்.
அவர் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் காரணம் இருக்கும்.
திரு நீலநக்க நாயனார் கதை பாரதி விழாவில் கேட்கும் போதே நன்றாக இருந்தது.
சிவதொண்டிர்க்கும் சிவபூஜைக்கும் என்றும் இறைவன் சந்தோசபடுவார்.
அவர் திருவிளையாடல்களை நாம் படிக்கும் போது நமக்கும் ஏற்படும் மன அமைதி அளவில்லாதது.
இதைபோல எறிபத்தர் என்ற சிவபக்தர் கதையை எழுதுங்களேன்.
மிகவும் நன்றி சார்.
சுந்தர் சார் வணக்கம் மிக அருமையான பதிவு சிவராத்திரி முன்னிட்டு நல்ல கதையை நினைவு கூறியமைக்கு நன்றி …..தனலட்சுமி