நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.
இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள் முதல் நாள் இரவே கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்துப் பாருங்கள், மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.
இறை வழிப்பட்டுக்கென்றே முழுமையாக ஒதுக்க வேண்டிய இந்த புனிதமான மாதத்தில் நமது சொந்தக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.
நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா ஸ்வாமிகள் மார்கழி பற்றி கூறும்போது : “இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், பெருமாள் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும். அதி காலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மன சுத்தம் ஏற்படும். திருப்பாவையும் திருவெம்பாவையும் ஓதுவது பலவித நலன்களை நல்கும்!”
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஹிந்துக்கள் அனைவரும் நிச்சயம் தினசரி ஆலய தரிசனம் செய்யவேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் வாரம் ஒரு முறையேனும் ஆலயம் செல்லவேண்டும். அப்படி வாரம் ஒரு முறையேனும் செல்ல முடியாதவர்கள், முக்கிய விரத, பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் செல்லவேண்டும். அப்படியும் இயலாதவர்களுக்கு இன்னும் கூட கிரேஸ் பீரியட் இருக்கிறது. அது தான் இந்த மார்கழி மாதம். இந்த ஒரு மாதம் தினமும் விடியற்காலை ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். கிரகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
காற்று சாதகமாக வீசும் போது இலக்கை நோக்கி படகை வேகமாக செலுத்தி கரைசேரும் படகோட்டியைப் போல இந்த மாதத்தை பயன்படுத்திக்கொண்டு பரம்பொருளின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும்.
மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்து நீராடி அவரவருக்குரிய சின்னங்களைத் தரித்துக்கொண்டு அருகாமையில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, இறைவன் நாமாக்களைச் சொல்லி நற்பலன்கள் பெறுவோமாக!
நாம் கடந்த சில ஆண்டுகளாக மார்கழி அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வருவது நீங்கள் அறிந்ததே. முதல் ஆண்டு நந்தம்பாக்கம் கோதண்ட ராமர் ஆலயம். அடுத்த ஆண்டு போரூர் இராமநாதீஸ்வரர். இந்த ஆண்டு பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி கோவில் துவங்கி நம் சுற்றுபுறத்தில் உள்ள அனைத்து ஆலயங்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சென்று தரிசிக்க முடிவு செய்திருக்கிறோம். (இன்று நாளையும் போரூர் இராமநாதீஸ்வரர் ஆலயம். நாளை மறுநாள் குன்றத்தூர், அடுத்த நாள் திருவேற்காடு இப்படி!)
இரவு உறங்கச் செல்வதை பொறுத்து காலை விழிப்பது நம் வழக்கம். ஆனால் நேற்று முதல் இரவு விரைவில் உறங்கச் சென்று காலை சீக்கிரம் கண் விழித்து குளித்து ஆலயம் சென்று வருகிறோம். இதன் பயனை கண்கூடாக இன்று உணர்ந்தோம். நீண்ட நாட்களாக முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த ஒரு பிரச்னை குறித்த தெளிவு ஒன்று இன்று நமக்கு ஏற்பட்டது. இது ஏன் இத்தனை நாள் நமக்கு தோணலை என்று ஆச்சரியப்பட்டோம். மார்கழியின் மகத்துவம் அப்படி. மார்கழி அதிகாலை துயிலெழுந்து நீராடி ஆலயத்திற்கு செல்லும்போது மனதில் தோன்றும் அந்த பரவசம்… வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அதை அனுபவித்தால் தான் புரியும். (அனுபவித்தவர்கள் சொல்லுங்களேன்!) ஓரிரு நாள் காலை குளிரில் கண்விழிப்பது சிரமமாக இருக்கும். அதற்கு பிறகு அது ஒரு இனிமையான அனுபவமாக மாறிவிடும்.
விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. (பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.)
அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறணிந்து சிவன் சன்னதியில் அமர்ந்து மேள தாள மங்கள முழங்க சிவபெருமானுக்கு நடக்கும் அந்த அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும்.
நீண்டநாள் தீர்க்கமுடியாத பிரச்சனை, வேண்டுதல், சுமை இப்படி ஏதாவது உங்களை வருத்துகிறதா? இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். விடியற்காலை எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை உடுத்தி, சமயச் சின்னங்கள் அணிந்து அருகில் உள்ள தொன்மையான ஆலயம் ஏதாவது ஒன்றுக்கு சென்று திருப்பாவை, திருவெம்பாவை, கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், இப்படி ஏதேனும் ஒன்றை படித்து வாருங்கள். நீங்கள் விஸ்வரூப தரிசனம் செய்வது மிகவும் முக்கியம். அதாவது சன்னதி திறந்தவுடன் முதல் தரிசனம். (பெண்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தாலே போதும்.) தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். எப்பேற்ப்பட்ட பிரச்சனைகளும் பஞ்சாய் பறந்து போகும். இது நிதர்சனமான உண்மை. பலன்பெற்றுவிட்டு சொல்லுங்களேன்…!
மார்கழி மாதம் என்ன செய்யலாம் ?
1) சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட ஆண்டுநிறைவு
2) பெண் பார்த்தல்
என்ன செய்யக்கூடாது ?
1) கிரகப்பிரவேசம்
2) திருமணம்
3) தம்பதிகள் தாம்பத்திய உறவு. (ஜீவாதார சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கருவுறுவதற்கு இது ஏற்ற சமயம் அல்ல.)
Also check:
=============================================================
சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ
மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!
எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்!
மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!
=============================================================
[END]
இந்த பதிவின் மூலம் மார்கழி மாதத்தின் மகத்துவம் தெளிவாக புரிந்தது. போன வருடம் ரைட்மந்த்ராவில் விஸ்வரூப தரிசனம் பற்றிய பதிவை படித்துவிட்டு மார்கழி மாதம் 4.30 மணிக்கு வடபழனி முருகன் கோவில் விஸ்வரூப தரிசனம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.
போரூர் ராமநாதீச்வர கோயில் புகை படம் அருமை. சரியான நேரத்தில் சரியான பதிவு
நன்றி
உமா
சுந்தர்ஜி ,
சென்ற ஆண்டு நானும் என் அம்மாவும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று
விஸ்வரூப தரிசனம் செய்தோம்.
மிகவும் அற்புதம் .
ஹரிஷ் வ
சார்
போன வருடம் நன் மட்டும் சங்கர நாராயணர் கோயில் போனான் ஒரு பிரச்னை உடம்பில் அது இந்த வருடம் இல்லை நல்ல படியாக உடம்பு ullathau
இந்த வரதும் என் பையனும் என்டுன் கோயிலுக்கு வருகிறான் கடவுள் அருளால் 3 நாட்கள் வந்து விட்டான் கட்யுள் கண்டிப்பாக அவனுக்கு ஒரு நல்ல வழி கட்ட வேண்டும்
செல்வி