இந்த ஒரு மாதம் முழுதும் இறை வழிபாட்டிற்கு என்றே ஒதுக்க வேண்டும் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் முதலான சுப காரியங்களை செய்ய மாட்டார்கள்.
மகத்துவம் மிக்க இந்த காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அனைவரும் இறைவனின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்பதாலேயே இந்த வழக்கம் உண்டாயிற்று. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு விடியற்காலை. விடியற்காலை பொழுது சாஸ்திரங்களில் மிக மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.

நந்தம்பாக்கம் கோதண்டராமர் ஆலயம் – ஒரு மார்கழி காலையில்
மார்கழி மாதம் முழுக்க ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும்.
சென்ற வருடம் மார்கழி மாதத்தின் சிறப்பை பற்றி நாம் பதிவளித்துவிட்டு நாமும் நண்பர் மாரீஸ் கண்ணனும் மார்கழி மாதம் முழுதும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் இறைவனை விஸ்வரூப தரிசனத்தில் தரிசித்து ஆனந்தம் கண்டோம்.
அதாவது தொடர்ந்து ஒரு மாதம் இறைவன் எங்களை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.
மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வேறு பாடு உங்களுக்கு தெரியும் தானே? (விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?)

இந்த மார்கழியும் தொடர்ந்து இறைவனை விஸ்வரூப தரிசனத்தில் தரிசிக்க விருக்கிறோம். அடுத்தடுத்து பிரச்னைகள், சோதனைகள், கிரக தோஷங்கள் இவற்றில் சிக்கி தவிக்கும் அன்பர்கள் இந்த மார்கழி மாதத்தை பயன்படுத்திக்கொண்டு பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மார்கழி மாதம் ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் படிப்பது சிறப்பு.
படிக்க படிக்கவே மார்கழியின் பெருமை சுகம் தரும் என்றால் மார்கழி முழுதும் இறைவனை தரிசித்தால் ?
‘அம்மன் தரிசனம்’ இதழில் நாம் கண்ட மார்கழி பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை இங்கே உங்களுக்காக தருகிறோம்.
==============================================================
படிக்கவே சுகம் தரும் மார்கழியின் பெருமை!
“மாதங்களில் நான் மார்கழி” எனக் கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். மார்கழிமாதம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கருதப்பட்டு பெண்கள் பாவை நோன்பு நோற்பதிலும், ஆண்கள் பஜனை செய்வதிலும் ஈடுபடுவர். மார்கழி மாதம் தனுர்மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் பெண்கள் விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு அதன் நடுவில் சாணப்பிள்ளையார் பிடித்து வைத்து அதன்மீது பூசணிப் பூவைச் செருகிவைப்பர். ஆன்மிக மார்க்கத்துக்கு இட்டுச் செல்லும் மாதம் மார்கழி என்பதையே இது உணர்த்துகிறது.
மார்கழி மாதம் தேவர்களின் விடிகாலைப் பொழுது. பகவான் விழித்தெழக்கூடிய இம்மாதத்தில் அவர் கண் விழிக்கும் நேரம் அவருடைய அருட்பார்வை தங்கள் மேல் விழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இம்மாதத்தில் இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி தெய்விகப் பாவையைக் குறித்து பாவை நோன்பு நோற்பதன் மூலம் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைவர். திருமணமான பெண்களின் கணவர் தீர்க்காயுசுடன் வாழ்வார். நாட்டில் மழை வளமும் பெருகும்.
கோகுலத்தின் கோபியர்கள் மார்கழி மாதம் முழுவதும் யமுனையில் நீராடி கண்ணனையே தங்கள் கணவனாக அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் பாவை நோன்பு நோற்றதை அறிந்து கொண்ட ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனை மணாளனாக அடைய மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றாள். நோன்பின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவற்றை எடுத்துக்கூறி நோன்பு நோற்கும் போது பாடும் பாடல்களாக முப்பது பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை திருப்பாவைப் பாடல்கள் எனப்படுகின்றன.
மாணிக்கவாசகர் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைத் தரிசித்துபின், அவர் அருளிச் செய்தவை திருவெம்பாவைப் பாடல்கள். மார்கழி மாதத்தில் துயில் நீங்கி எழுந்த பெண்கள் நீராடி ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்ட நிகழ்வை பதி, பசு, பாச தத்துவமாகக் கண்டு அப்பெண்கள் பாடியதாகப் பாவித்து மாணிக்கவாசகர் இருபது பாடல்களைப் பாடியுள்ளார். அவை திருவெம்பாவைப் பாடல்கள் எனப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் பக்தர்கள் விடியற்காலையில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி மற்றும் பிற நாம சங்கீர்த்தனங்களைப் பாடி பஜனை செய்தபடி வீதிவலம் வந்து ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடுவதும் இம்மாதத்தின் சிறப்பு.
மார்கழி மாதத்தில் சிவபெருமானைக் கொண்டாடும் திருவாதிரையும், விஷ்ணு பகவானைக் கொண்டாடும் ஏகாதசித் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளிய முக்கோடி ஏகாதசி எனப்படும் வைகுண்ட ஏகாதசி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் அனுஷ்டிப்பவர்கள் பாபங்கள் அகலப்பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெறுவர். அவர்களுக்கு மோட்சமும் கிட்டும்.
மார்கழித் திருவாதிரை நாளில் ஸ்ரீநடராஜப் பெருமானை வழிபடவேண்டும். திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ சிவபெருமான் திருநடனம் ஆடிக் காட்டினார். அதனை நாமும் கண்டு களித்து வழிபட்டு இன்புறுவதே திருவாதிரை வழிபாட்டின் உட்பொருள்.
ஸ்ரீமந் நாராயணனின் நாமங்கள் பன்னிரண்டு. பன்னிரண்டு நாமங்களும் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன. அவற்றுள் கேசவன் என்னும் முதல் நாமம் மாதங்களின் மகுடமாகத் திகழும் மார்கழியாக விளங்குகிறது.
கீதை அருளப்பட்டது மார்கழி வளர்பிறை 11ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில்தான். அன்றைய தினத்தை கீதாஜயந்தி எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மார்கழிப் பௌர்ணமியன்று தத்தாத்ரேயர் அவதரித்த தினம். அன்று தத்தாத்ரேயரைத் தரிசிப்பது மும்மூர்த்திகளையும் வழிபடுவதாக அமையும். அரங்கனைப் பாடுவதைவிடத் தாழ்வாக இந்திர லோகம் ஆளும் பதவியை நினைத்த தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதம் மார்கழி.
தேவர்களுக்கு அதிகாலை நேரமாக மார்கழி விளங்குவதால் அந்நேரத்தில் இறைவன் தன் ஞான சக்தியைக் கொண்டு ஐந்தொழில்களையும் செய்தருள்கிறான்.
மகாபாரத யுத்தம் நடந்தது மார்கழி மாதத்தில் தான். யுத்தத்தில் மாண்டவர்கள் வீடுகளை கௌரவர்கள் தாக்காதிருக்க அடையாளம் காட்டுவதற்காகவே அவர்கள் வீடுகளில் முன் கோலமிடும் வழக்கம் கிருஷ்ண பகவானின் ஆலோசனைப்படி ஏற்படுத்தப்பட்டது. அதனைப் பின்பற்றியே கோலமிடும் பழக்கம் ஏற்பட்டதாக ஒருகருத்து கூறப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களில் திருஅத்யயன உற்சவம் என்றழைக்கப்படும் பகல்பத்து, இராப்பத்து உற்சவம் இம்மாதத்தில் இருபது நாள்கள் நடைபெறும். பெருமாளுடன் ஆழ்வார்களையும் எழுந்தருளச் செய்து அரையர் சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் எம்பெருமானுக்கு நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து ‘கூடாரைவல்லி’ என்று விசேஷமாகக் கொண்டாடுவார்கள். மதுரையில் பெருமாள் பெரியாழ்வாருக்குக் கருடவாகனத்தில் காட்சி கொடுத்ததைக் கொண்டாடும் விதமாக பெரிய பெருமாளைக் கருட வாகனத்திலும், பெரியாழ்வாரை வெள்ளை யானை வாகனத்திலும் எழுந்தருளச் செய்து ஆழ்வார் சார்பாக அரையர் திருப்பல்லாண்டு பாசுரம் பாடுவார்.
ஆண்டாள் நோன்பு நோற்றதன் பலனாக ஸ்ரீரங்கநாதரே ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வணங்கி நாகணையை மிதித்தேறி பெருமாளுடன் சேர்ந்து என்றும் பிரியாதவள் ஆயினள்.
திருப்பதியில் வெள்ளிப் பரமபதவாசல் திறப்பும் ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பும், தில்லையில் ஸ்ரீநடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தின் சிறப்பு ஆன்மிக அம்சங்களாகும்.
பிரளயத்தில் அழிந்த உலகை மீண்டும் தோற்றுவிக்க விரும்பிய திருமால் பிரம்மனைப் படைத்தபோது இரண்டு அசுரர்கள் அவரை அழிக்க முயன்றனர். திருமால் அவர்களைச் சம்ஹரித்த போது ஞானம் பெற்ற அசுரர்கள் “தங்களால் அழிக்கப்படும் பேறு பெற்ற எங்களை பரமபதம் அனுப்பி வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டனர். பகவான் அதனை ஏற்று அன்றைய தினம் ஆலயங்களில் சொர்க்கவாசல் வழியாக தான் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களுக்கு மோட்சம் அளிப்பதாகக் கூறி அருள் புரிந்தார். ஆகவேதான் அன்று சொர்க்க வாசல் திறப்பு சிறப்பு பெறுகிறது.
வழிபாட்டுக்குரிய மார்கழி மாதத்தில் இறைவனை வழிபட்டு நாமும் வளம் பெறுவோம்.
(நன்றி : கே-சுவர்ணா | அம்மன் தரிசனம்)
==============================================================
Also check :
அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ
மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?
==============================================================
உங்கள் பதிவு மிக அற்புதம். இந்த பதிவை படித்தவுடன் மார்கழி மாதம் முழுவதும் விஸ்வரூப தரிசனம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கடவுள் அருள் இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும்
உங்கள் பதிவிற்கு நன்றி
உமா
மார்கழி மாதத்தின் சிறப்பு பற்றிய பதிவு.
போன வருடம் படித்த பதிவை விட இந்த வருடம் படிக்கும் போது இன்னும் அதன் சிறப்பு தெரிகிறது. அது நம் மனம் பக்குவப்பட்டு இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
அம்மன் தரிசனம் இதழில் படித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ள தகவல்கள்.
மார்கழி மாதத்தின் முழு சிறப்பும் விரிவாக எடுத்து காட்டி எங்களுக்கு தெரியாத பல விபரங்களை தொகுத்து கொடுதுள்ளதற்க்கு மிகவும் நன்றி.
திருவாதிரையின் சிறப்பும் வைகுண்ட ஏகாதிசியின் சிறப்பும் அதை கடைபிடிக்க தூண்டுகிறது.
ஆகவே வழிபாட்டுக்குரிய மார்கழி மாதத்தில் இறைவனை வழிபட்டு நாமும் வளம் பெறுவோம்.
எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடமாட்டோம்
பதிவிற்கு நன்றி
சுந்தர்ஜி
.
போன வருடம் மார்கழி மாதம் முழுவதும் விஸ்வரூப தரிசனம் செய்தோம். அதை போல் இந்த வருடமும் மார்கழி மாதம் முழுவதும் விஸ்வரூப தரிசனம் செய்து இறை அருள் பெறுவோம்.