Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

print
“கோவில், குளம், பீச், பார்க், உணவகங்கள் என எங்கெங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் தென்படுகிறார்களே? எங்கு சென்றாலும் அவர்கள் தொல்லை தாள முடியவில்லை. கோவிலில் பிச்சைகாரர்களுக்கு பிச்சை தரக்கூடாது என்று சொல்கிறார்களே? பிச்சைக்காரர்களுக்கு உண்மையில் பிச்சை இடலாமா கூடாதா?” என்று நம் நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார்.

அவர் கேட்டதும் அது குறித்த நம் கருத்துக்களை பதிவாக அளித்தோம். (Check : யார் பெரிய பிச்சைக்காரர்கள்?) மேற்படி கேள்விகளுக்கு மிக மிக தெளிவாக அதில் பதில் கூறியிருக்கிறோம்.

நம்மை பொருத்தவரை நம்மிடம் யாரேனும் யாசகம் கேட்டால் அவர்களுக்கு கூடுமானவரை – சூழலை பொறுத்து – பணத்தை கொடுப்பதை தவிர்த்து உணவாக வாங்கிகொடுப்பது வழக்கம். இயன்றவரை வியாதியஸ்தர்கள், வயோதிகர்களுக்கே பிச்சை அளிப்பது வழக்கம். உணவு கொடுக்க முடியவில்லை என்றால் பணம் கொடுப்பது வழக்கம்.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) கோவில்
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) கோவில்

அதுவும் கோவிலுக்கு சென்றால், போகும்போதோ வரும்போதோ பிச்சை அளிக்காமல் வருவதில்லை. நாமே இறைவனிடம் பிச்சை கேட்கத் தானே போகிறோம்? அப்புறம் என்ன…??

மார்கழி மாதத்தை முன்னிட்டு போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு தினசரி சென்ற போது அங்கு கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் இரண்டு மூதாட்டிகளுக்கு சில்லறைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம். பக்தர்கள் அவர்களிடம் காலணிகளை போட்டுவிட்டு செல்வார்கள். திரும்ப வரும்போது அவர்களுக்கு சில்லறை கொடுப்பார்கள்.

DSC06709

நண்பர் மாரீஸ் இதை கவனித்து வந்தார். ஒரு நாள், “டெய்லி அவங்களுக்கு சில்லறை கொடுக்குறீங்க போலிருக்கே?” என்றார்.

“இல்லே… அவங்க கிட்டே வாங்கிக்கிறேன்!”

“என்ன சொல்றீங்க? வாங்கிக்கிறீங்களா?”

“ஆமாம்… தினமும் அவங்க தான் எனக்கு ஒரு அரும்பொருளை கொடுத்து உதவுறாங்க!”

“புரியலியே?”

DSCN0012

“முதல் நாளே இவங்களை பார்த்தேன் மாரீஸ். நாம வந்த விடியற்காலை நேரத்துல கூட இவங்க வந்து உட்கார்ந்திருந்தாங்க. ரெண்டு நாள் நான் எதுவும் பிச்சை போடலை. உண்மையை சொல்லனும்னா… பிச்சைக்காரர்கள் மேல் ஒரு சலிப்பு. இருந்தாலும் அவங்க “ஐயா…சாமின்னு…” யாசகம் கேட்கும்போது அதை காதுல வாங்காத மாதிரி போறது என்னால முடியாத விஷயம். வயசானவுங்க. என்ன மிஞ்சி கிஞ்சி போனா ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ கொடுக்கப்போறோம்… அதுனால நாம என்ன குறைஞ்சிடப் போறோம்னு நினைச்சி ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டேன். போடும்போது, ‘சிவாய நம’ அப்படின்னு சொன்னாங்க. அடுத்த நாள் சில்லறை போடும்போதும் ரெண்டு பேரும் ‘சிவாய நம’ ன்னு சொன்னாங்க.

மனமுவந்து அன்போட ஒரு முறை ‘சிவாய நம’ன்னு சொன்னாலே தெய்வாம்சம் வந்துடும்னு சொல்வாங்க. ஆனா இவங்க யார் பிச்சை போட்டாலும் ‘சிவாய நம’ என்கிற அந்த மஹா மந்திரத்தை சொல்றதை கவனிச்சேன். அப்போ ஒரு நாளைக்கு எத்தனை தடவை சொல்லுவாங்க நினைச்சிப் பாருங்க. அதுவும் இப்போ மகத்துவமான மார்கழி வேற.”

சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தோம்.

“கொஞ்சம் யோசிச்சி பாருங்க. நாம ஒரு நாளைக்கு எத்தனை முறை ‘சிவாய நம’ன்னு சொல்றோம்? எவ்ளோ நேரம் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்குது? கோவில்ல இருக்குற கொஞ்சம் நேரம் அபிஷேகம் நடக்கும்போது ஆரத்தி காட்டும்போது ஏதோ பேருக்கு சொல்லிட்டு போய்டுறோம். அதுக்கப்புறம் ஆண்டவனை சிந்திக்க ஏது நேரம்? நாம தான் பணம் சம்பாதிக்க போய்டுவோமில்லே? எனவே எந்த வகையில் பார்த்தாலும் நம்மளை விட இவங்க தானே உயர்ந்தவங்க?

அட்லீஸ்ட் இவங்களுக்கு சில்லறை போடும் அந்த ஒரு கணமாவது அந்த மந்திரத்தை ஒரு முறை நாம எக்ஸ்ட்ரா கேக்குற பாக்கியம் இவங்களாலே கிடைக்குதேன்னு தான் தினமும் சில்லறை போடுறேன். இப்போ சொல்லுங்க நான் கொடுக்குற சில்லறை பெரிசா? பதிலுக்கு அவங்க சொல்லி எனக்கு கேட்க கிடைக்கும் சிவ நாமம் பெரிசா? யாருக்கு யார் கொடுக்குறாங்க? இங்கே ஏற்பது இகழ்ச்சியல்ல – புண்ணியம்!”

“பிரமாதம் சுந்தர். இதுல இவ்ளோ விஷயம் இருக்கா… இனிமே நானும் அவங்களுக்கு டெய்லி சில்லறை போடுறேன்!” என்று கூறி அதன்படி செய்தும் வந்தார்.

DSCN0008 copy
நமக்கு பிச்சை போட்ட கோடீஸ்வரர்கள்!

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எனச் சிவகதி தானே.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

சிவாய நம என்று சிந்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை என்பது ஔவையின் வாக்கு!

===================================================================

சிவ நாம மகிமை பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது. எனவே சிவ நாமத்தின் மகிமையை பற்றி ஒரு மினி தொடரே அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.

விரைவில் ‘சிவ நாம மகிமை’ – குறுந்தொடர் ஆரம்பம்!

ஆனால் அதற்கு முன்பு சுவாமி விவேகானந்தர் பிச்சை போடுவதை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துகொள்வோம். பின்னர் குறுந்தொடர் ஆரம்பமாகும். (சுவாமிஜி எப்படி சிந்திக்கிற ஆள் தெரியுமில்லே?)

Next : பிச்சை இடலாமா? கூடாதா? – சுவாமி விவேகானந்தர்

===================================================================

உழவாரப்பணி அறிவிப்பு : மகாசிவராத்திரியை முன்னிட்டு அடுத்த மாதம் மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிறு உழவாரப்பணி நடைபெறும். விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

[END]

5 thoughts on “ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

  1. சுந்தர்ஜி

    பிச்சை இடுவதை பற்றி இவ்வளவு detail ஆக எழுதி இருக்கிறீர்கள். நானும் நடுவில் ஒரு நாள் அபிஷேகத்திற்கு வந்தபோது நீங்கள் சில்லறை இடுவதை ராம நாதீஸ்வரர் கோவிலில் பார்த்தேன். உங்களை போன்று எனக்கு சிந்திக்க தோன்றவில்லை.,

    அந்த சிவன் நாமம் உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்

    //சொற்றுணை வேதியன் சோதி யானவன்
    பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணையாவது நமச்சிவாயவே //

    நமச்சிவாய பதிகம் by திருநாவுக்கரசர்

    நன்றி
    உமா

  2. சுந்தர்ஜி
    பிச்சையினை பற்றி சும்மா பிச்சுட்டீங்க போங்க! நல்ல தெளிவான பதிவு பிச்சையினை பற்றி! கூடவே சிவநாம மகிமை! நாமும் ஒரு வகையில் பிச்சைக்காரர்கள் தான்! அருள் வேண்டும் பிச்சைகாரர்கள்! நமக்கு பிச்சை கிடைக்க உதவுவது ரைட் மந்திரா பதிவுகள் வழியாக திரு சுந்தர். நன்றி

  3. சுந்தர் சார்.
    பிச்சை இடுவதை பற்றி ஒரு பதிவே போட்டுவிட்டிர்கள்.
    விரிவான விளக்கம்.நெத்தியடி.
    கோவில் வாசலில் இருப்பவர்களை விட ஆண்டவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் நாம் தான் மிகப்பெரிய பிச்சை காரர்கள் என்றும் அத்துடன் இதில் பேரம் பேசுவது வேறு நடக்கும். எப்பேர்பட்ட உண்மை.
    சுயநலமில்லாமல் வேண்டுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
    சிவ சிவ என்று சொல்ல ஆரம்பித்தாலே நாளடைவில் நம்மை அறியாமலே அது சிவயநம என்று வந்துவிடும்.
    சிவநாம மகிமை பற்றி சொல்லிஉல்லது அருமை.கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம்.
    அன்னை இட்ட அட்சய பாத்திரம் மாதிரி படிக்க படிக்க குறையாமல் மேலும் மேலும் புத்துணர்ச்சி கொடுப்பது ரைட் மந்த்ரா தான்.
    எங்கள் நன்றிகள் பல உங்களுக்கு உரித்தாகுக

  4. நீ ஒருவனுக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ பிறருக்குத் தீங்கு செய்யும்போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு நீ வேறல்ல.

    –பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

  5. தர்மம் தலை காக்கும் ….தக சமயத்தில் உயிர் காக்கும் …கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் ………..

    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்………
    ……………..சிவ சிவ…..சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *