புடலங்காய் கூட்டு அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் சரியான சோம்பேறியான அவனுக்கு சந்தைக்கு போய் அதை வாங்கி வரவேண்டுமே என்கிற அலுப்பு ஏற்பட்டது. இருப்பினும் சொன்னதை செய்யவில்லை என்றால் பலர் வீட்டில் உள்ள வழக்கத்தைப் போல அவன் மனைவியின் பூரிக்கட்டைக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால், வேறு வழியின்றி சந்தைக்கு கிளம்பினான்.
போகும் வழியில் கந்தன் என்கிற விவசாயின் புடலங்காய் தோட்டம் கண்ணில் பட்டது. பெரிய பெரிய புடலங்காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன.
கண் எதிரே இங்கே புடலங்காய்கள் காய்த்து தொங்கும் போதும் நாம் எதற்கு சந்தைக்கு போய் வாங்கிவரவேண்டும், இதிலேயே ஒன்றிரண்டை பறித்துக்கொண்டு போய் விடலாமே என்று கருதி அந்த தோட்டத்துக்குள் புகுந்தான்.
அடிப்படையில் அவன் நேர்மை தவறாதவன் என்பதால் புடலங்காய் கொடியிடம் சென்று மெதுவாக, “கொடியே கொடியே உன்னிடமிருந்து ஒரு புடலங்காயை பறித்துக்கொண்டு செல்லலாமா?” என்று கேட்டான்.
கொடிக்கு பதிலாக இவனே அதற்கு பதில் கூறிக்கொண்டான். “ஒன்றென்ன நான்கு கூட பறித்துப் போ… யார் வேண்டாம் என்று சொல்வது?”
நான்கு புடலங்காய்களை பறித்து ஒரு கோணிப்பையில் போட்டுக்கொண்டு நைஸாக நழுவினான்.
அவன் மனைவியும் அவனுக்கு கூட்டு சமைத்து பறிமாறினாள்.
திருட்டுப் புடலங்காய் என்றால் ருசிக்காதா என்ன?
அதன் சுவை அவனுக்கு மிகவும் பிடித்துவிடவே யாருமில்லாத நேரமாக பார்த்து அடிக்கடி கந்தனின் தோட்டத்துக்கு சென்று புடலங்காய்களை திருடி வந்தான்.
அந்த தோட்டத்திற்கு சொந்தமான கந்தனோ அந்த கிராமத்திலேயே மிகவும் உழைப்பாளி. தன்னுடைய தோட்டத்திலிருந்து யாரோ அடிக்கடி புடலங்காய்களை திருடிச் செல்வதை கண்டுபிடித்தான். திருடனை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்து, ஒரு நாள் காத்திருந்தான்.
ராமு வழக்கம்போல, யாருமில்லாத நேரத்தில் தோட்டத்துள் நுழைவதை கந்தன் கவனித்து அவனுக்கே தெரியாமல் அவன் பின்னே சென்றான். புடலங்காய் கொடியிடம் அவனே அனுமதி கேட்டு அவனே பதில் சொல்லிக்கொண்டு திருடியதை கவனித்து அவனை கையும் களவுமாக பிடித்தான்.
அவனை பிடித்துக்கொண்டு போய் அருகிலிருந்த குளத்தில் முக்கினான்.
“குளமே குளமே இந்த திருடனை எத்தனை தடவை உனக்குள் முக்கி எடுக்க?” என்று கேட்டான். பிறகு அவனே, “இவனை நூறு முறை முக்கி எடு” என்றான்.
தொடர்ந்து நூறு முறை ராமுவை கந்தன் குளத்தில் முக்கி முக்கி எடுத்து பின்பு தனது பிடியிலிருந்து விடுவித்தான்.
உடல் முழுதும் நனைந்தபடி வீட்டுக்குள் வெறுங்கையுடன் கணவன் திரும்பியதை கண்ட ராமுவின் மனைவி, “என்ன ஆச்சு? ஏன் உடம்பெல்லாம் ஈரமாயிருக்கு?” என்று கேட்டாள்.
“புடலங்காய் சாப்பிட்டதுக்கு கூலி கொடுத்துட்டு வந்தேன்” என்றான் முகத்தில் அசடு வழிந்தபடி.
அதற்கு பிறகு அவன் மறுபடியும் புடலங்காய் பறிக்க தோட்டம் பக்கம் செல்வான் என்று நினைக்கிறீர்கள்?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். அவமானப்படுவான்.
===============================================================
காப்பி & பேஸ்ட் பேர்வழிகளுக்கு இறுதி எச்சரிக்கை!
மேற்படி கதையில் வரும் புடலங்காய் திருடன் போலவே சமீபத்தில் ஒரு திருடன் நம்மிடம் வகையாக சிக்கியிருக்கிறான்.
நம் தளம் வளர வளர பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் காப்பி & பேஸ்ட் பிரச்னையும் ஒன்று.
நம் தளத்திலிருந்து பதிவுகளை கொஞ்சம் கூட வெட்கமின்றி திருடி திருடி அதை தன்னுடைய BLOGSPOT ல் ஏதோ தானே எழுதியதை போல ஒருவர் வெளியிட்டு தம்பட்டம் அடித்துகொள்வதை பார்த்த போது நமக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
நம்முடைய பதிவுகளை எடுத்தாள விரும்பினால் தாரளமாக அதை செய்யலாம். நமது தளத்தின் முகவரியை வெளியிட்டால் போதுமானது. ஆனால் அதை விடுத்து நம்முடைய படைப்புக்களை தன்னுடைய படைப்பு போல வெளியிடுவது எந்த வகையில் நியாயம்?
ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் என்றால் பரவாயில்லை. அதை நாம் பொருட்படுத்த மாட்டோம். நூற்றுக்கணக்கான பதிவுகள்!!!
பதிவுகள் பலவற்றை (சாதனையாளர் சந்திப்பு உட்பட) திருடி நமது பெயரையோ தளத்தின் பெயரையோ வெளியிடாமல் தனது தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அந்த நபர். (புகைப்படங்களை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார்). நம் தளம் மட்டுமல்ல, பல்வேறு தளங்களில் இருந்து படைப்புக்களை உருவி அவர்கள் பெயரையோ முகவரியையோ போடாமல் அந்த நபர் வெளியிட்டு வருகிறார். பல்லாண்டுகளாக அவர் இதை செய்து வருகிறார் என்பது அவர் தளத்தை அலசியபோது புரிந்தது.
காப்பி பேஸ்ட் செய்து இப்படி ஒரு தளம் நடத்தவேண்டும் என்று என்ன அவசியம்? இதெல்லாம் ஒரு பிழைப்பா?
அவருக்கு முறைப்படி எச்சரிக்கை விடுக்க ஏற்பாடு செய்துவருகிறோம். மேலும் வழங்கறிஞருடனும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்படும். அவர் இனி காப்பி பேஸ்ட் செய்வதை நிறுத்தவில்லை என்றால், GOOGLE க்கு புகார் அனுப்பி அவர் தளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் ஒருவர் மட்டுமல்ல… வேறு சிலரும் இதை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் இத்தோடு எச்சரிக்கிறேன்.
முகநூலிலும் இந்த போக்கு அதிகரித்து வருகிறது. யாருக்கு தெரியப்போவுது என்று கருதி, யாருடைய உழைப்பையோ காப்பி பேஸ்ட் செய்து தங்கள் பதிவுகள் போல வெளியிட்டு தங்கள் நட்பு வட்டங்களிடம் சிலர் சபாஷ் வாங்கி வருகின்றனர். அனைத்தும் நாம் அறிவோம். இது எப்படி தெரியுமா இருக்கு? யார் பெத்த புள்ளையையோ வீட்டுக்குள்ள கொண்டு வந்து வெச்சி இது என் பிள்ளைன்னு ஊராருக்கு காட்டுற மாதிரி இருக்கு.
நாலு இடம் போங்க, சுத்துங்க, அலைங்க, நிறைய புக்ஸ் படிங்க… எழுதுங்க. யார் வேண்டாம்னு சொல்றது? கம்ப்யூட்டரும், பிராட்பேண்டும் இருந்தா போதும் சில வெண்ணை வெட்டிகள் எழுத்தாளர் அவதாரம் எடுத்துடுறாங்க.
நாளிதழ்கள், மற்றும் வார மாத இதழ்களில் இருந்து நாம் ஏதேனும் எடுத்தாள நேர்ந்தால் கூட ‘நன்றி’ என்று குறிப்பிட்டு அவர்கள் பெயரை முறைப்படி அளித்து வருவதை நீங்களே அறிவீர்கள். சொற்பொழிவுகளில் கேட்க நேர்ந்தால், இன்னார் தான் அதை சொன்னார் என்று குறிப்பிடுகிறோம். அதே போல, இணையத்தில் ஏதேனும் சுவாரஸ்யமான பயனுள்ள பதிவுகளை கண்டால் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று, அவர்கள் பெயரை இருட்டடிப்பு செய்யாமல் நமது தளத்தில் வெளியிட்டு வருகிறோம். இதன்மூலம் நமக்கு ஒரு வாசகர் கிடைப்பது மட்டுமின்றி ஒரு நல்ல நண்பரும் கிடைக்கிறார்.
எங்கோ முகநூலிலும் பார்வேர்ட் மெயிலிலும் வரும் பதிவுகளை எடுத்தாள நேர்ந்தால் கூட, நமக்கு நேரமில்லாத நிலையிலும் அதை உண்மையாக எழுதியது யார் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அவர்கள் பெயரை மறக்காமல் அளிக்கும் வழக்கத்தை நாம் கடைபிடித்துவருகிறோம்.
(அப்படி நாம் அளித்த பதிவுகளில் ஒன்று இந்த பதிவு : ‘கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!’ இதை முதன்முறை முகநூலில் கண்டபோது சம்பந்தப்பட்டவர் பெயரை வெளியிடாமல் ஜஸ்ட் முகநூலில் படித்தது என்று கூறி நாம் அளித்திருக்கமுடியும். ஆனால் உண்மையில் இப்படி ஒரு அருமையான பதிவை எழுதியது யார் என்று கண்டுபிடித்து தொடர்புகொண்டு, பின்னர் தளத்தில் வெளியிட்டோம். அவர் நமக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி, “உங்கள் வார்த்தைகளும் எழுத்துக்களும், என்னை மீண்டும் எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி!” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.)
அதே போல இந்த தளத்தில் அரும்பாடுபட்டு நாம் வெளியிடும் பதிவுகளை குறிப்பாக MONDAY MORNING SPECIAL மற்றும் பக்தி கதைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து தங்கள் இலவச இணைப்பு வெளியீட்டில் வெளியிட்டு பொருளீட்டி வருகிறது ஒரு முன்னணி நாளிதழ். இதுவரை 30க்கும் மேற்பட்ட இணைப்புக்களில் வரிக்கு வரி மாறாமல் நமது படைப்புக்களை சுருட்டியிருக்கின்றனர். நமது பெயரையோ தளத்தின் பெயரையோ வெளியிடவில்லை. அவர்களுக்கு இது குறித்து முறைப்படி கடிதம் எழுதவிருக்கிறேன்.
நமது பதிவுகளை எடுத்தாளுவது தொடர்பாக நமது தளத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிப்புக்கள் வெளியிடப்படும்.
நம் தளத்தில் நமது உழைப்பில் வெளியாகியுள்ள பெரும்பாலான பதிவுகள் புத்தகங்களாக வெளியிடப்படவிருக்கின்றன. நம் அனுமதியின்றி நமது தளத்தின் படைப்புக்களை எடுத்தாளுவது தடை செய்யப்படுகிறது. (எடுத்தாளுபவர்கள் தளத்தின் முகவரியை நிச்சயம் அளிக்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!)
முகநூலில் நமது பதிவுகளை ஷேர் செய்வதோ அல்லது காப்பி பேஸ்ட் செய்து நமது தளத்தின் முகவரியை / லின்க்கை அளிப்பதோ தவறல்ல. நமது தளத்தின் பெயரை குறிப்பிடாமல் எடுத்தாள்வது தான் தவறு. மற்றபடி நமது பதிவுகளை நட்பு வட்டங்கள், நண்பர்கள் முகநூலிலும் மின்னஞ்சலிலும் பகிர்வதை என்றும் வரவேற்கிறோம்.
உணவுக்கு ஓடுபவர்கள் மத்தியில் உயிருக்கு ஓடுபவன் நான். THIS IS A JOURNEY OF SURVIVAL. NOT PASSION.
இனி காப்பி பேஸ்ட் பேர்வழிகளை கண்டால் வாசகர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
திருட்டில் மிகப் பெரிய திருட்டு பிறர் உழைப்பை திருடுவது தான்.
சமூகத்தில் அங்கீகாரத்திற்காக போராடி வரும் ஒரு சாமானியன் நான். என் எழுத்தை வைத்து நான் பணம் பண்ணவில்லை. என்னை வளரவிடுங்கள். வாழ விடுங்கள். என் படைப்பை எடுத்தாள நேர்ந்தால் இந்த தளத்தின் பெயரை அவசியம் குறிப்பிடுங்கள். உணவு, உறக்கம் தொலைத்து கடும் தேடலிலும், உழைப்பிலும் விளைவது இந்த தளத்தின் பதிவுகள்.
திருட்டு என்பது வெறும் பொருள் சார்ந்ததாக மட்டும் இங்கே பார்க்ககூடாது. பொன், பெண், நிலம், எண்ணம், உழைப்பு இவை அனைத்தும் அதில் அடக்கம். ஒருவர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் கூட திருட்டு தான்.
திருடாமை ஒரு மனிதன் பின்பற்றியே தீரவேண்டிய குணங்களுள் ஒன்று என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
பதஞ்சலி மகரிஷி வலியுறுத்தும் ஐந்து குணங்களுள் இதுவும் ஒன்று. திருவள்ளுவர் கூட ‘வெஃகாமை’ என்று இதற்கு தனி அதிகாரமே வைத்திருக்கிறார்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (குறள் 177)
(பொருள் : பிறர் பொருளை கவர்வதால் வரும் பயனை விரும்பவேண்டாம். ஏனெனில் அதனால் நன்மை விளையாது. துன்பமே விளையும்.)
ஒருவரிடமிருந்து ஒரு பொருள் தேவை என்றால் அதை தாராளமாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கேட்காமல் எடுப்பது திருட்டேயன்றி வேறு ஒன்றுமில்லை.
காப்பி பேஸ்ட் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு அந்த குணத்தை மாற்றுவது கடினம் தான். ஆனால், சொந்தமாக சிந்தித்து எழுதினால் அறிவு வளர்வது மட்டுமின்றி, எழுத்தும் விரிவடையும்.
பிறர் உழைப்பின் மூலம் ஒருவர் பெறும் புகழ் நிலையானது அல்ல.
உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு
அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா
ஏய்
கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு
இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார்
பிறர் பொருளை விரும்பாமல் இருப்பது ஆரம்பத்தில் கடினம் தான். ஆனால் பழகிவிட்டால் அதைவிட இனிமை வேறு எதுவுமில்லை. நம் மீது நமக்கே மதிப்பு வந்துவிடும்.
=================================================================
Also check :
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
இந்த பதிவை படிக்கும்போது தாங்கள் உழைப்பு திருடப்பட்டுஇருக்கிரது என்பது புரிகிறது ..இது நடக்காமல் இருக்க ஏதாவது செய்யவேண்டும் …
காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணுபவர்களுக்கு இந்த பதிவு ஒரு சவுக்கடி. நானே ஒரு முன்னணி நாளிதழில் நிறைய முறை தங்கள் பதிவை காப்பி பண்ணி தங்கள் தளம் பெயரிடாமல் போட்டு இருக்கிறார்கள், அடுத்தவர்கள் உழைப்பை உறிஞ்சுவதால் என்ன பயன்.
இந்த பதிவை படித்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்
நன்றி
உமா V
Perfect shot ji. I went through an article (Monday morning special) in one of the famous newspaper attachment book. People well knew that the way each and every article is written.Let them observe and write on their own.
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ …..
மனோகர்.
இந்த பதிவை படிக்கும் போது உங்கள் மனம் எந்த அளவு காயபட்டுள்ளது நன்றாக தெரிகிறது.
இனிமேலாவது உங்கள் பதிவுகளை எடுதாள்பவர்கள் திருந்தட்டும்.
திருடாதே மனிதா திருடாதே i
திருடிய நீயா திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
அதனால் உனக்கு பயன் இல்லை உனக்குத்தான் அவமானம் தலைகுனிவு திருந்தி விடு இது எச்சரிக்கை மணி
திருடி நல்ல காரியத்தை நீ சொன்னதாக சொன்னால் நீ திருந்ததவன் என்று தானே அர்த்தம் அது உண்மையாக அடுத்தவரை போய் சேராது