Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

print

சிவபுண்ணியம் பற்றி நம் தளத்தில் பல்வேறு கதைகளை படித்து வந்த வாசகர்கள், சிவாபராதம் பற்றி நேற்றைய பதிவில் அறிந்துகொண்டிருப்பீர்கள். சைவ மடத்தில் எச்சில் துப்பிய காரணத்தினால் துப்பியவர்களுக்கு நரகம் கிடைத்த கதையை பார்த்தீர்கள். நடைமுறையில் இதெல்லாம் சாத்தியம் தானா? இப்படியெல்லாம் வாழமுடியுமா என்று தோன்றும். முடியும். நிச்சயம் முடியும். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் திருவிடைமருதூருக்கு சென்றபோது அவருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டது. அதை அவர் எப்படி கையாண்டார் என்று படித்துப் பாருங்கள். ‘மேன்மக்கள் மேன்மக்களே’ என்று புரியும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூல் ஓர் அரும்பெரும் பொக்கிஷம். 19, 20 ஆம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்தது, மக்களின் பக்தி எப்படி இருந்தது, அவர்கள் பழக்கவழக்கங்கள், பேச்சு, கலாச்சாரம், கல்வி இவையெல்லாம் எப்படி இருந்தன என்பதை தமிழ்த் தாத்தாவின் வார்த்தைகளால் படிக்க படிக்க அத்தனை சுகம். பேசாமல் அவர் வாழ்ந்த காலகட்டதிற்கே போய்விடலாமா என்று தோன்றும்.

திருவிடைமருதூரில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இந்த பதிவில் தந்திருக்கிறோம்.

இந்த பதிவை படிக்கும் முன் நேற்று நாம் அளித்த கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)  பதிவை அவசியம் படிக்கவேண்டும். அப்போது தான் இந்தப் பதிவை ரசிக்க முடியும்.

(உ.வே.சா. அவர்களை பற்றி நம் தளத்தில் வெளியான முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் அவசியம் படியுங்கள். ஒவ்வொன்றும் முத்துக்கள். இறுதியில் அப்பதிவுகளின் சுட்டியை தந்திருக்கிறோம்!)

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம் – யாருக்கு, ஏன்?

– உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலிருந்து சில பக்கங்கள்

திருவிடைமருதூரில் கட்டளை விசாரணையில் முன்பு சுப்பிரமணியத் தம்பிரானென்பவர் இருந்தார்; அவர் ஆலய நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காக நடத்தி வந்ததோடு பல திருத்தங்களைச் செய்து நல்ல பெயர் பெற்றார். திருவாவடுதுறை யாதீனத்தின் விசாரணைக்கு உட்பட்டுப் பல ஆலயங்கள் இருப்பதால் ஓர் ஆலயத்தில் இருந்து நிர்வாகம் செய்த தம்பிரானை வேறோர் ஆலயத்துக்கு மாற்றுவதும் சிலரை மடத்தின் அதிகாரிகளாக்கி அவர்கள் ஸ்தானத்திற் புதிய தம்பிரான்களை நியமிப்பதும் ஆதீனத்து வழக்கம். திருவிடைமருதூரில் கட்டளைத் தம்பிரானாக இருந்த முற்கூறிய சுப்பிரமணியத் தம்பிரானை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தைச் சேர்ந்த ஆளுடையார் கோயிலின் நிர்வாக அதிகாரியாக மாற்றினார். அவர் அங்கே சென்றபின் இடையே சில காலம் ஒரு தம்பிரான் இருந்து திருவிடைமருதூர் ஆலய விசாரணையைக் கவனித்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் பூஜை, போஜனம் செய்துகொண்டும் படித்துக்கொண்டும் இருந்துவரும் சில தம்பிரான்களுக்கு மடத்தில் ஏதேனும் உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகும். அதனை அறிந்து ஆதீனத் தலைவர் இடையிடையே சமயம் நேரும்போது சில மாதங்கள் அவர்களைக் கட்டளை முதலிய வேலைகளில் நியமிப்பது வழக்கம். நாங்கள் போனபோது திருவிடைமருதூரில் இருந்த தம்பிரான் அத்தகையவர்களில் ஒருவர்.

சுப்பையா பண்டாரம் என்னை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் கொட்டாரத்தின் முகப்புத் திண்ணையில் கட்டளைத் தம்பிரான் ஒரு திண்டின் மேல் சாய்ந்தபடி வீற்றிருந்தார். கொட்டாரமென்து நெல் முதலிய தானியங்கள் சேர்த்து வைக்குமிடம். அவருக்கு ஒரு புறத்தில் உத்தியோகஸ்தர்கள் நின்றிருந்தனர். கணக்கெழுதும் ஏடுகளுடன் சில காரியஸ்தர்கள் பணிவோடு நின்றனர்.

thiruvidaimarudhur-uvesa

தம்பிரானுடைய விபூதி ருத்திராட்ச தாரணமும் காவி உடையும் தோற்றப் பொலியும் அவர்பால் ஒரு மதிப்பை உண்டாக்கின. அவர் சடை மிகவும் பெரிதாக இருந்தது. கட்டளை, காறுபாறு முதலிய உத்தியோகங்களைப் பார்க்க விரும்பிச் சில தம்பிரான்கள் மிக்க நிர்வாகத் திறமையுடையவர்கள்போலக் காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வர்க்கத்தைச் சேர்ந்த அத்தம்பிரான் அடிக்கடி தமது மார்பைப் பார்த்துக்கொண்டும் நிமிர்ந்த முகத்திலும் உரத்த குரலிலும் அதிகார முடுக்கைக் காட்டிக்கொண்டும் இருந்தனர்.

சுப்பையா பண்டாரம் என்னை அழைத்துச் சென்று தம்பிரான் முன்னேவிட்டு அஞ்சலி செய்தார். தம்பிரான், “எங்கே வந்தீர்? இவர் யார்?” என்று கேட்டபோது, “பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள். என் ஜாகையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இவர் படித்து வருகிறார். இவருக்கு இங்கே மடைப்பள்ளியில் ஏதேனும் பிரசாதம் கொடுக்கும்படி சாமியிடம் சொல்ல வேண்டுமென்று என்னை அனுப்பினார்கள்” என்று விடை அளித்தார்.

தம்பிரான் எங்களை நிமிர்ந்து பார்த்தார். “பிள்ளையவர்களா வந்திருக்கிறார்கள்? அவர்கள் கட்டளை மடத்துக்கு வரக் கூடாதா?” என்று கேட்டார்.

“அவர்கள் தளர்ச்சியாக இருக்கிறார்கள். என் ஜாகையில் இருந்தால் படுத்துக்கொண்டே இருக்கலாம். யாரேனும் கால் பிடிப்பார்கள். மடத்துக்கு வந்தால் சாமிக்கு முன் படுத்துக்கொள்வதும் கால், கை பிடிக்கச் சொல்வதும் உசிதமாக இருக்குமா? அதனால்தான் என் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்” என்று சுப்பையா பண்டாரம் விடையளித்தார்.

“சரிதான். மடத்திலே பழகினவர்களுக்குந்தான் மரியாதை தெரியும். அவர்கள் நம்மிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறார்களென்பது நமக்குத் தெரியாதா?” என்று தம்பிரான் சொன்னார்.

பிறகு அங்கே நின்ற மடைப்பள்ளிக் காரியஸ்தரைப் பார்த்தார்; ‘சாமி” என்று வாயைப் பொத்திக்கொண்டே அந்தப் பிராமணர் முன்னே வந்தார்.

“என்ன?” என்று தம்பிரான் கேட்டார்.

“இவர் வந்திருக்கிறார்; இவருக்கு உபசாரத்துடன் பிரசாதம் கொடுக்க வேண்டும்” என்ற அர்த்தம் அந்தக் கேள்வியின் தொனியிலேயே அடங்கியிருந்தது.

“சாமி” என்று காரியஸ்தர் மறுபடியும் சொன்னார். “சரியாகக் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்ற அர்த்தத்தை அவர் குரல் உள்ளடக்கியிருந்தது.

“ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்; தெரியுமா?” என்று தம்பிரான் விளக்கமாக உத்தரவிட்டார்.

காரியஸ்தர் அதனை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக மீட்டும், “சாமி” என்று சொல்லிவிட்டு என்னை அழைத்துச் சென்றார்.

அர்த்தஜாம பூஜை நடப்பதற்குச் சிறிது முன்பு நான் போனேன். ஆதலால், ஆலயத்தினுள்ளே சென்று சுவாமிக்கு முன் நமஸ்காரம் செய்தேன். காரியஸ்தர்

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

==========================================================

அவசரப்படுத்தினார். தரிசனத்தை நான் சுருக்கமாகச் செய்துகொண்டு மடைப்பள்ளிக்குள் அவருடன் புகுந்தேன்.

பசியும் ஆவலும்

இரவு பத்துமணி ஆகிவிட்டமையாலும் திருவாவடுதுறையிலிருந்து வந்த சிரமத்தாலும் எனக்குப் பசி அதிகமாகத்தான் இருந்தது. கோவில் பிரசாதங்கள் மிகவும் சுவையாகவும் பரிசுத்தமாகவும் இருக்குமென்ற எண்ணத்தால் என் நாக்கில் ஜலம் ஊறியது. காரியஸ்தர் மிக்க விநயத்தோடு என்னை அழைத்துச் செல்லும்போதே, நம்முடைய பசிக்கும் ருசிக்கும் ஏற்ற உணவு கிடைக்கும் என்ற ஆவலோடு சென்றேன்.

மடைப்பள்ளியில் வழிதெரியாதபடி இருட்டாக இருந்தது. தட்டுத்தடுமாறி உள்ளே போனவுடன், காரியஸ்தர் என்னை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி அருகில் ஒரு கைவிளக்கைக் கொணர்ந்து வைத்தார். அவர் உத்தரவுப்படி ஒருவர் ஒரு பெரிய தட்டில் பலவகையான பிரசாதங்களை எடுத்து வந்து என் முன்னே வைத்தார்.

அந்தத் தட்டைப் பார்த்து மலைத்துப் போனேன். “இவ்வளவு எதற்கு?” என்று கேட்டேன்.

“ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியஸ்தர் சொன்னார்.

“என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன்.

“சர்க்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரஸம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்; பசியும் சேர்ந்ததால் அவர் சொல்லச் சொல்ல உடனே சாப்பிட வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று.

thiruvidaimarudhur-14

தெய்வப் பிரசாதம்

மடைப்பள்ளியில் இலைபோட்டு உண்பதும் எச்சில்செய்வதும் அனாசாரம்; ஆகையால் கையில் கொடுத்தால் எச்சில் பண்ணாமலே உண்பேனென்று நான் சொல்லிவிட்டு முதலில் புளியோரையைக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே காரியஸ்தர் என் கையில் சிறிது புளியோரையை எடுத்து வைத்தார். மிக்க ஆவலோடு கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்கொண்டேன். வெறும் புளிப்பு மாத்திரம் சிறிது இருந்தது; உப்பு இல்லை; காரமோ, எண்ணெயின் மணமோ தெரியவில்லை.

“என்ன இது?” என்றுகேட்டேன்.

“இதுவா? இதுதான் புளியோரை” என்றார் அவர்.

நான் வாயில்போட்ட பிரசாதத்தில் கல் இருந்தது; உமியும் இருந்தது. அவற்றை வெளியே துப்புவதற்கு வழியில்லை. மடைப்பள்ளியில் துப்பலாமா? உடனே எழுந்திருந்து வெளியே வந்து துப்புவதும் சுலபமன்று. பல இடங்களைத் தாண்டிக்கொண்டு ஆலயத்துக்கு வெளியே வரவேண்டும்.

புளியோரையென்று அவர் சொன்ன பிரசாதத்தை ஒருவாறு கடித்துமென்று விழுங்கினேன். அடுத்தபடியாக அவர் சர்க்கரைப் பொங்கலை அளித்தார். அதில் தீசல் நாற்றமும் சிறிது வெல்லப் பசையும் இருந்தன. வாயில் இடுவதற்கு முன் வெளியே வந்துவிடும்போல் தோற்றியது. பிறகு வெண்பொங்கல் கிடைத்தது. அதில் இருந்த உமியையும் கல்லையும் மென்று விழுங்குவதற்கே அரை மணிநேரம் ஆகிவிட்டது. என் பசி இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது. கண்ணையும் காதையும் கவர்ந்த அப்பிரசாதங்கள் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வதற்கு மாத்திரம் ஏற்றவையாக இருந்தன. ஜனங்கள் வீண் சபலப்பட்டு அவற்றை உண்ணப் புகுவது சரியன்றென்பதை வற்புறுத்தின. தேங்குழலும் அதிரசமும் வடையும் ஒருவிதமாகத் தங்கள் பெயர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தன. மற்றப் பிரசாதங்களை நோக்க அவை சிலாக்கியமாகப்பட்டன. அவற்றில் சிலவற்றை வயிற்றுக்குள் செலுத்திவிட்டுக் கையைச் சுத்தம் செய்துகொண்டு எழுந்தேன்.

‘ஒரு வரம் கொடுங்கள்’

இருட்டில் தட்டுத்தடுமாறி வந்தபோது என் காலில் ஜில்லென்று ஏதோ ஒரு வஸ்து தட்டுப்பட்து. கயிறோ, பாம்போ அல்லது வேறு பிராணியோ என்று திடுக்கிட்டுப் பயந்து காலை உதறினேன். “இங்கே வெளிச்சம் கொண்டு வாருங்கள்” என்று கத்தினேன். ஒருவர் விளக்கை எடுத்து வந்தார். காலின் கீழ் நோக்கினேன்; ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன்.

என்னை அழைத்து வந்த காரியஸ்தர் என் காலைப் பிடித்துக்கொண்டு நமஸ்காரம் பண்ணியபடியே கிடந்தார். ஈரமுள்ள அவர் கை எதிர்பாராதபடி என் காலிற்பட்டதுதான் என் பயத்துக்குக் காரணம்.

காரியஸ்தருக்கு அறுபது பிராயத்துக்கு மேலிருக்கும். அவர் என்னை வணங்கியதற்குக் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. “இதுவும் ஒரு சம்பிரதாயமோ?” என்று நான் சந்தேகப்பட்டேன்.

“ஏன் ஐயா இப்படிப் பண்ணுகிறீர்?” என்று படபடப்புடன் கேட்டேன்.

“தங்களை ஒரு வரம் கேட்கிறேன். அதைத் தாங்கள் கொடுத்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என் தலை போய்விடும்! நான் காலை விடமாட்டேன். கேட்ட வரத்தைக் கொடுப்பதாக வாக்குத் தத்தம் செய்தால் எழுந்திருப்பேன்.

எனக்கு விஷயம் புரியவேயில்லை; ஒரே மயக்கமாக இருந்தது; “இவர் இன்றைக்கு நம்மைத் தெய்வமாகவே எண்ணிவிட்டாரா என்ன? இவர் கொடுத்த பிரசாதம் தெய்வர்களுக்கே ஏற்றவை. இப்போது நம்மை இவர் நமஸ்கரிக்கிறார்; வரம் கேட்கிறார். இவையெல்லாம் நாடகம் மாதிரி இருக்கின்றனவே!” என்று எண்ணி, “எழுந்திரும் ஐயா, எழுந்திரும்! வரமாவது கொடுக்கவாவது!” என்று கூறினேன். அவர் விட்டபாடில்லை.

“நீங்கள் வாக்களித்தாலொழிய விடமாட்டேன்.”

“சரி, நீர் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று நான் சொன்னவுடன் அவர் மெல்ல எழுந்திருந்தார்; கை கட்டி, வாய் புதைத்து அழாக்குறையாகச் சொல்லத் தொடங்கினார்.

“இன்று பிரசாதமொன்றும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. கிரமமாக வரவேண்டிய சமையற்காரன் இன்று வரவில்லை. அதனால் ஒன்றும் நேராகச் செய்ய முடியவில்லை. இந்த விஷயம் சாமிக்கு (கட்டளைத் தம்பிரானுக்கு)த் தெரிந்தால் என் தலை போய்விடும். சாமிக்கு இவ்விஷயத்தைத் தாங்கள் தெரிவிக்கக் கூடாது. தெரிவித்தால் என் குடும்பமே கெட்டுப்போய்விடும். நான் பிள்ளைகுட்டிக்காரன் மகாலிங்கத்தின் பேரைச் சொல்லிப் பிழைத்து வருகிறேன். என் வாயில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்” என்று என் வாயில் உமியையும் கல்லையும் பிரசாதமாகப் போட்ட அந்த மனுஷ்யர் வேண்டிக்கொண்டார்.

“சரி, அப்படியே செய்கிறேன்; நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று நான் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.

‘இந்த மாதிரி எங்கும் இல்லை’

ஜாக்கிரதையாக அம்மடைப்பள்ளியிலிருந்து விடுபட்டுக் கொட்டாரத்துக்கு வந்து தம்பிரானைப் பார்த்தேன்.

“என்ன? வெகுநேரமாகிவிட்டதே; காரியஸ்தர் அதிக நாழிகை காக்க வைத்துவிட்டாரோ?” என்று அவர் கேட்டார்.

“இல்லை; பிரசாதங்கள் பலவகையான இருந்தன; ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்கே நேரமாகிவிட்டது.”

உமியையும் கல்லையும் மெல்லுவதற்கு அந்த இரவு முழுவதும் வேண்டியிருக்குமென்பது எனக்கல்லவா தெரியும்?

“எப்படி இருந்தன?”

“இந்த மாதிரி எங்கும் கண்டதில்லை.”

“எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இதற்கு முன் ஒழுங்கீனமாக இருந்தது. நாம் வந்த பிறகு திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் கவனிப்பவர் கவனித்தால் நன்றாகத்தானிருக்கும், நிர்வாகமென்றால் லேசானதா?”

தம்பிரான் தம்மைப் புகழ்ந்துகொண்டபோது, “இன்னும் இவர் தம் பிரதாபத்தை விவரிக்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது!” என்ற பயமும் மெல்ல முடியாமல் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த கற்களை ஆலயத்துக்கு வெளியே துப்ப வேண்டுமென்ற வேகமும் என்னை உந்தின.

“பிள்ளையவர்கள் நான் வரவில்லையென்று காத்திருப்பார்கள். போய் வருகிறேன். விடை தரவேண்டும்” என்று நான் சொல்ல, “சரி, பிள்ளையவர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்லும். அவர்களுக்கும் ஒரு நாள் பிரசாதங்களை அனுப்புவதாக எண்ணியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“இந்தத் தண்டனை அவர்களுக்கு வேண்டாமே” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு நான் வந்துவிட்டேன். தம்பிரானிடம் நான் பேசியதைக் கவனித்த காரியஸ்தர் மீண்டும் உயிர் பெற்றவர் போலவே மகிழ்ச்சியுற்றார்.

பிள்ளையவர்களிடம் வந்தவுடன் “சாப்பிட்டீரா? இங்கெல்லாம் உமக்கு ஆகாரம் திருப்தியாக இராது” என்று அவர் சொன்னார். நான் நிகழ்ந்ததைச் சொல்லாமல், “போதுமானது கிடைத்தது” என்று சொல்லிவிட்டுப் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

…. டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் “என் சரித்திரம்” நூலிலிருந்து

========================================================

திருச்சி பயணம்!

எல்லாம்வல்ல முருகப் பெருமானின் கருணையினாலே ஞாயிறு (11/09/2016) மாலை திருச்சியில் நடைபெறவுள்ள நம் வாசகி ஒருவரின் இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்க நாளை இரவு திருச்சி புறப்படுகிறோம். ஞாயிறு காலை வயலூர் முருகன் தரிசனம். சூழலை பொறுத்து ஓரிரு தொன்மையான இதுவரை செல்லாத ஆலயங்களை தரிசிக்க திட்டமிட்டுள்ளோம். மாலை திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு மணமக்களை வாழ்த்திய பிறகு இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை வந்துவிடுவோம். திருவருளும் குருவருளும் துணைநின்று பயணம் சிறக்க உதவவேண்டும்!

சிவாய நம!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

========================================================

நரம்பு பிரச்சனைகள் சம்பந்தமான பிரார்த்தனை கோரிக்கைகள் மேலும் பல வந்துள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து இன்று ஒரு பிரார்த்தனை பதிவை அளிக்கிறோம். புதிய கோரிக்கைகள் மற்றும் பட்டியலுடன் நாளை பேரம்பாக்கம் சோளீஸ்வரரை  தரிசிக்க செல்லவிருக்கிறோம். இன்றைய பிரார்த்தனை பதிவு மாலை வெளியாகும்.

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check :

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *