Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

print
மிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்த நாளன்று (பிப்ரவரி 19) கும்பகோணம் – தஞ்சை மார்க்கத்தில் பாபநாசம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு சென்று நாமும் நண்பர் சிட்டியும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது நினைவிருக்கலாம்.

19 காலை கும்பகோணம் சென்றதும் குளித்து முடித்து தயாராகி பாபநாசம் புறப்பட்டோம். பாபநாசம் கும்பகோணம் – தஞ்சை சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ளது. பாபநாசத்தில் இறங்கியதும் கடைவீதியில் தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்கு அணிவிக்க மாலை வாங்கிக்கொண்டோம்.

உத்தமாதனபுரத்திற்கு அங்கிருந்து போக்குவரத்து வசதி இல்லை. மினி பஸ் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அரைமணி நேரம் காத்திருந்தும் பயனில்லை. எனவே ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம்.

தார் சாலைகளும் மண்சாலைகளும் மாறி மாறி வந்தன. ஒரு வழியாக உத்தமதானபுரம் சென்று சேர்ந்து உ.வே.சா. நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உ.வே.சா அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு சென்னையிலிருந்து நாம் வந்திருப்பதாக சொன்னதும் அந்த ஊர் பிரமுகர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். நம்மை பலவாறு உபசரித்தவர்கள், நினைவு இல்லத்தை சுற்றிப் பார்க்கும்படியும், அரை மணிநேரத்தில் தஞ்சையிலிருந்து தமிழ் பல்கலைகழக துணைவேந்தர் திரு.பாஸ்கரன் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலையிட வருகை தரவிருப்பதாகவும் அது சமயம் நாம் உடனிருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

Uththamadhanapuram 8

நாமும் அதற்குள் நினைவு இல்லத்தை பார்வையிட்டுவிட்டு அப்படியே உத்தமதானபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு வருவதாகவும் சொன்னோம்.

பின்னர் நாமும் நண்பர் சிட்டியும் நினைவு இல்லத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆற அமற ரசித்துவிட்டு பின்னர் உத்தமதானபுரம் அக்ரஹாரத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

பழமை மாறாத அக்ரஹாரம். ஆள் அரவமற்ற தெருக்கள். மண் சாலையாக இருந்தாலும் புழுதி பறக்காத அடக்கமான சாலைகள். கண்ணை விற்று சித்திரம் வாங்கச் சென்ற கதையை உணர்த்தும் சிதிலமடைந்த வீடுகள்.

Uththamadhanapuram 1
சிதிலமடைந்த நிலையிலும் அழகாக காணப்படும் வீடு!

நாம் சென்ற நேரம் அந்த ஊரிலிருந்து இரண்டு கோவில்களும் நடை சாத்தப்பட்டிருந்தன. கேட்டபோது, காலையே குருக்கள் வந்துவிட்டு போய்விட்டதாக கூறினார்கள்.

இந்த கோவில்கள் மிக பழமையானவையாகத் தான் இருந்தன. ஆனால் காலமாற்றத்தில் மிகவும் சிதிலமடைந்துவிட, முழுமையாக இடித்துவிட்டு ஊர்மக்கள் புனரமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டையும் நின்று ரசித்தோம். காடு, கழனி, வாய்க்கால், வரப்பு என அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் நினைவு இல்லம் வந்தோம்.

எதிரே ஒரு முதியவர் சைக்கிளில் இளநீர் கட்டிக்கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார். வெயிலில் நடந்ததால் நல்ல தாகம் வேறு. உடனே இளநீர் வாங்கி நாமும் நண்பர் சிட்டியும் சாப்பிட… நாம் மட்டும் அதன் சுவையில் கிறங்கி இன்னொரு இளநீர் வாங்கி குடித்தோம். இங்கே ரூ.40/- மதிப்புள்ள காய் அங்கே ரூ.20/- தான்.

Uththamadhanapuram 12

இளநீர் இயற்கை தந்த அருங்கொடை. தாகமெடுக்கும்போது கண்ட கண்ட குளிர்பானங்களை காசு கொடுத்து வாங்கி உடலை கெடுத்துக்கொள்வதற்கு பதில் இளநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

Uththamadhanapuram 2ஊர் பிரமுகர்களுடன் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கரன் அவர்கள் வந்துவிட நினைவு இல்லத்தில் உ.வே.சா அவர்களின் பிறந்த நாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பாஸ்கரன் அவர்கள் உ.வே.சா. உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், தமிழாராய்ச்சி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உத்தமதானபுரம் உ.வே.சா. தமிழ்ச் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் ஆசிரியர் சுந்தர்ராமன், ஊராட்சித் தலைவர் க.முருகானந்தம் உள்ளிட்டோர் உவேசா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் உவேசா தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உ.வே.சா. நற்பணி மன்றத் தலைவர் சுதா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Uththamadhanapuram 10

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரை நம் தளம் சார்பாக கௌரவிக்க உ.வே.சா. தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் நம் விருப்பத்தை தெரிவித்தோம். அதற்கு அனுமதி கிடைத்தது.

நிகழ்ச்சியில் சிறிது பேசவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது. உ.வே.சா. அவர்களின் இல்லத்தில் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அதுவும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்.

Uththamadhanapuram 5
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரை கௌரவித்தபோது….

“இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். அடியேன் பெயர் சுந்தர். ரைட்மந்த்ரா என்னும் ஆன்மீக, சுயமுன்னேற்ற இணையதளத்தை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.

உங்கள் மத்தியில் அதுவும் இங்கு சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

கற்றுத் தெரிந்து கொள்வது ஒரு வகை. பட்டுத் தெரிந்து கொள்வது ஒரு வகை. நான் இரண்டாம் வகை. அதனால் தான் இன்று இங்கே வந்திருக்கிறேன்.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா அவர்களை பற்றியும் இந்த உத்தமதானபுரத்தை பற்றியும் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து கும்பகோணம் மகாமகம் வந்தவன் அங்கு செல்லாமல் இங்கு முதலில் வந்தேன். காரணம் மகாமக திருக்குளத்தை விட இந்த இடம் புனிதமானது. (அனைவரும் கைதட்டுகிறார்கள்).

Uththamadhanapuram 6

சில்லறைக் காசுகளை தேடியவனுக்கு, தங்கப் புதையல் கிடைத்ததைப் போல அவரை பற்றிய செய்திகளை அறிந்து பிரமித்துப் போனேன். அவர் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய தன்னலம் கருதா தொண்டினால் தான் இன்று சிலப்பதிகாரம், சீவ சிந்தாமணி, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல பொக்கிஷங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. கரையானுக்கு இரையாகவிருந்த பல சைவ, வைணவ நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அரும்பணியில் தன்னை அவர் ஈடுபடுத்திக்கொண்ட போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார், போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலகட்டங்களில் எங்கெல்லாம் சுவடிகள் தேடி அலைந்தார், யார் யார் வீட்டுத் திண்ணைகளில் எல்லாம் காத்திருந்தார் என்பதை அறியும்போது கண்கள் கலங்குகிறது.

அவர் பிறந்த பூமியை அவர் வாழ்ந்த இல்லத்தை அவர் பிறந்த நாளன்று அவசியம் காணவேண்டும் அன்னாருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று இந்த இடத்தை தேடி வந்தேன். ஏதோ மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

இது ஒரு தனிப்பட்ட நபர் தமிழ்த் தாத்தாவுக்கு செய்யும் மரியாதை அல்ல. எம் தளத்தை தினசரி படிக்கும் சுமார் 5,000 தேடல் உள்ள தேனீக்களின் பிரதிநிதியாக இங்கு இந்த மரியாதையை உ.வே.சா அவர்களுக்கு செலுத்தினேன். (மீண்டும் கைத்தட்டல்).

Uththamadhanapuram 9

‘தமிழ்த் தாத்தா’ அவர்களின் பெருமையை நம்மால் இயன்ற வரை இந்த உலகிற்கு எடுத்து கூறுவோம். அடுத்த தலைமுறைக்கு இவர் நமக்கு விட்டுச் சென்ற பாடங்களை போதிப்போம்.

அவரது பிறந்த நாளன்று இங்கு வந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கும் துணைவேந்தர் ஐயா அவர்களுக்கும், தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருக்கும் உ.வே.சா. தமிழ் சங்க நிர்வாகிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த வருடம் பிப்ரவரி 19 அன்றும் திருவருளால் மீண்டும் இங்கு வருவேன். அடுத்த வருடம் மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 19 அன்று உத்தமதானபுரம் வந்து அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.

வாழ்க தமிழ். வளர்க தாய்த் திருநாடு.” (அனைவரும் கைதட்டுகிறார்கள்)

– இதுவே நாம் உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் ஆற்றிய உரை.

பேசுவதற்கு எதுவும் தயார் செய்யாத நிலையில் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்தது. சரியாக பயன்படுத்திக்கொண்டோமா என்று தெரியவில்லை.

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் அவர்ககள் பேசுகையில், மகாமகத்தை விட இந்த இடத்தை புனிதமாக கருதி இங்கு முதலில் வந்ததாக நாம் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார்.

நமது உத்தமதானபுரம் அனுபவத்தை பார்ப்போம்…!

***************************************************************

மிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் சொந்த ஊரான உத்தமதானபுரம் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. அவர் சுயசரிதையில் இது வரை படித்த பக்கங்கள் அதைவிட பசுமையாக இருக்கிறது.

வாழ்க்கை என்றால் என்ன, எப்படி வாழவேண்டும், எதன் பொருட்டு வாழவேண்டும், எங்கு வாழவேண்டும் என்பதற்க்கெல்லாம் விடை அந்த நூலில் இருக்கிறது.

இந்தக் காலத்தில் நமக்கிருக்கும் பல வசதிகள் அந்தக் காலத்தில் இல்லை. மின்விசிறி இல்லை, மின்விளக்குகள் இல்லை, டெலிவிஷன் ரேடியோ இல்லை, ஃபோன் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். ஆனால், எத்தனையோ ‘இல்லை’களுக்கு நடுவே அவர்களுக்கு இருந்தது என்ன தெரியுமா? நிம்மதி, ஆரோக்கியம்.

Uththamadhanapuram 11

இன்று அனைத்து சௌகரியங்களும் நமக்கு இருந்தாலும் இந்த இரண்டும் தான் பெரும்பாலான கிரகங்களில் இல்லை. வீட்டுக்கு வீடு நீரிழிவு நோயாளிகளும், இதய நோயாளிகளும் ரத்தக்கொதிப்பு நோயாளிகளும்தான் இருக்கின்றனர். வாழ்க்கையை சுலபமாக்க வந்தவைகளால் நாம் இன்றியமையாத ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறோம். வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி, அல்லும்பகலும் சம்பாதித்த பணம் கடைசியில் மருத்துவமனைகளில் போய் தஞ்சமடைகின்றது.

திருக்குறளும், தேவாரமும் மனனம் செய்த குழந்தைகள் இன்று அன்றாட வாழ்க்கைக்கு சிறிதும் உதவாத துளியும் புரியாத பாடங்களை மனனம் செய்கின்றனர். விளைவு மனநோய் தான் வருகிறது. (ஆனால் திருமுறைகள் கற்பவர்களுக்கு மனநோய் வராது தெரியுமா?)

**************************************************************

வாசகர்கள் கவனத்திற்கு…

நமக்கு ‘விருப்ப சந்தா’ செலுத்திவரும் வாசகர்கள் உடனடியாக தங்கள் பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை அலட்சியப்படுத்தவேண்டாம். நன்றி!

**************************************************************

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

– உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலிருந்து சில பக்கங்கள்

வாழ்நாள் முழுவதும் சிவ பூஜையும் ஜபம் முதலிய கர்மானுஷடானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகஸ்தர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருஷ்ண சாஸ்திரிகளென்பது.

அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் ஸ்தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரிய மூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்; சிவ பக்தியிற் சிறந்தவர். ஹரதத்த சிவாசாரியார், அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், திருவிசைநல்லூர் ஐயா அவர்களென்னும் ஸ்ரீதர வேங்கடேசர் முதலிய பெரியோர்கள் இயற்றிய சிவ ஸ்தோத்திரங்களிலும் நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எப்பொழுதும் அவருடைய வாயிலிருந்து சிவநாமம் இனிய மெல்லிய தொனியிலே வெளிவந்து கொண்டிருக்கும். வண்டின் ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவ நாமத்திலே நான் இளமையிலே ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ அந்த ஜபத்தைச் செய்து கொண்டு வருகிறேன்.

இளமையில், கிருஷ்ண சாஸ்திரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமத்தான்; அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகளே யாவர். புதுக்கோட்டையைச் சார்ந்த ஆரணப்பட்டி என்னும் ஊரில் அவர் இருந்தார்; பதினான்கு பிராயத்தில் தம் தந்தையாரிடம் பார்த்திப பூஜையும் ஸ்படிக லிங்க பூஜையும் பெற்றுக் கொண்டனர். அந்த ஸ்படிக லிங்கமாகிய மூர்த்திக்குச் சிதம்பரேசரென்பது திருநாமம். அவர் நாள்தோறும் லக்ஷம் சிவநாம ஜபம் செய்வார். ஆருணம் சொல்லி 124 சூரிய நமஸ்காரம் செய்து ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணுவார். விடிய நான்கு நாழிகை தொடங்கி இரவு பத்து நாழிகை வரையில் பெரும்பாலும் வைதிக மார்க்கத்திலேயே அவருடைய காலம் செல்லும்.

Sivalinga Beautiful

தம்முடைய தந்தையார் காலஞ்சென்ற பிறகு ஆரணப்பட்டியிலே இருந்து வருகையில், அவருடைய மூத்த-சகோதரியார், புருஷர் காலஞ் சென்றதனால் தம் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அது முதல் அவரே குடும்பத்தின் பொறுப்பை வகித்து நடத்தத் தொடங்கினார். சிவ பூஜா துரந்தரராகிய கிருஷ்ண சாஸ்திரிகள் தம்முடைய தமக்கையார் அடைந்த கோலத்தைக் கண்டு வருந்தினாலும், ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று எண்ணுபவராதலால் ‘‘நமக்குக் குடும்பத் தொல்லை இராவண்ணம் திருவருள் இவ்வாறு செய்வித்தது போலும்’’ என்று ஒருவாறு ஆறுதலுற்றார். சில காலம் அங்கே இருந்து வந்தபோது தம்முடைய பந்துக்கள் நிறைந்துள்ள சோழ நாட்டில் காவிரிக் கரையை அடுத்துள்ள ஊர்களில் ஈசுவர ஆராதனம் செய்து கொண்டு காலங் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. குடும்ப நிர்வாகத்தில் தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாமையால் எந்தச் சமயத்திலும் புறப்படும் நிலையில்தான் அவர் இருந்தார்.

அவருக்குத் தம் நிலங்கள் முதலியவற்றைப் பற்றியே ஞாபகம் இல்லை. வீடு, நிலம் எல்லாவற்றையும் தமக்கையாரிடமே ஒப்பித்து விட்டு அவற்றிற்கு ஈடாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு செல்லலாமென்று எண்ணித் தமக்கையாரிடம் தம் கருத்தைச் சொன்னார். அவர் தம் தம்பியாருடைய மனோபாவத்தை உணர்ந்து ஐந்நூறு ரூபாயை அவரிடம் கொடுத்து அவர் விருப்பப்படியே செல்லும்படி கூறினர். கிருஷ்ண சாஸ்திரிகள் அத்தொகையில் செலவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு எஞ்சியதைக் காவிரியின் வடபாலுள்ள கோட்டூரென்னும் ஊரில் இருந்த தம் முதல் மைத்துனி குமாரர்களுக்கு அனுப்பிவிட்டு ஆரணப்பட்டியை விட்டுப் புறப்பட்டார். தம்முடைய பூஜையுடன் மனைவியாரை அழைத்துக்கொண்டு சோழ நாட்டை நோக்கி வருகையில் இடையிடையே பல ஊர்களில் தங்கினர். சிவ பூஜையும் வைதிக ஒழுக்கமும் உடைய அவரை அங்கங்கே உள்ளவர்கள் ஆதரித்து உபசரித்தனர்.

அக்கிரகாரங்களில் அத்தகைய பக்தரைக் கண்டுவிட்டால் சிவகணத்தைச் சேர்ந்த ஒருவரே வந்ததாகக் கருதி அவரை உபசரித்துப் பாராட்டுதல் அக்காலத்து வழக்கம். தெய்வ பக்தியும் உபகார சிந்தையும் உடையவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தனர். எல்லா வகை வருணத்தினரும் பக்தியுடையவர்களிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆதலின் கிருஷ்ண சாஸ்திரிகளுக்குப் பிரயாணத்தில் எந்த விதமான இடையூறும் நேரவில்லை. அவருக்கு உலக வியாபாரம் ஒன்றும் தெரியாது. செல்வம், அதிகாரம், கல்வி முதலியன அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சிவபக்தி நிறைந்த மனமும், கவலையின் தோற்றம் இல்லாமல் கடவுள் திருவருளையே நம்பியிருக்கும் தெளிவைக் காட்டும் முகமும், சாந்த நடையும் அவருக்கு மதிப்பை உண்டாக்கின. அவர் ஒரு முயற்சியும் செய்யாமலே பெருமையை அடைந்தார்; அவருடைய மௌனமே புலவர் பேச்சைவிடக் கவர்ச்சி தந்தது; அலங்காரமற்ற அவரது உருவத்தின் தூய்மையே அவருக்கு மிக்க அழகை அளித்தது.

இடையிடையே சில ஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு கிருஷ்ண சாஸ்திரிகள் உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். அங்கே அப்பொழுது கச்சிக் கலியாண ரங்கப்ப உடையார் ஸமஸ்தானாதிபதியாக இருந்தார். தானாதிகாரியாக இருந்த ஸ்ரீ சுப்பராய சாஸ்திரிகளென்பவர் என் மாதாமகருடைய இயல்பை அறிந்து அவரைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அப்பால் அந்த ஸமஸ்தானத்தைச் சார்ந்த இடத்தில்அவரைச் சௌக்கியமாக இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணிய தானாதிகாரி அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருஷ்ண சாஸ்திரிகள், “பரமசிவனது கைங்கரியம் கிடைத்தது ஈசுவர கிருபையே” என்று எண்ணி அங்கே இருந்து வரலானார்.

கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயம் இராஜேந்திரனென்னும் சோழ சக்கரவர்த்தியால் அமைக்கப் பெற்றது. அந்த ஆலயத்தின் பெயர் கங்கை கொண்ட சோழீச்சுரமென்பது கோயில் மிகப் பெரியது. அந்தப் பெரிய கோவிலுக்கு ஏற்றபடி சிவலிங்கப் பெருமானும் மிகப் பெரிய திருவுருவத்தை உடையவர். அங்கே சாரத்தில் ஏறித்தான் அபிஷேகம் முதலியன செய்வார்கள். அரிய சிற்பத் திறன் அமைந்த அவ்வாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. வட நாட்டுக்குச் சென்று வெற்றி கொண்ட இராஜேந்திரசோழன் வட நாட்டு அரசர்கள் தலையில் கங்கா ஜலத்தை ஏற்றிக் கொணர்ந்தானென்றும் அதனால் அவனுக்குக் கங்கைகொண்ட சோழனென்னும் சிறப்புப் பெயர் வந்ததென்றும் சொல்வர். தனது வடநாட்டு வெற்றிக்குப் பின் அச்சக்கரவர்த்தி கங்கை கொண்ட சோழபுரத்தை நிருமாணம் செய்து அங்கே சிவாலயத்தையும் அரண்மனையையும் அமைத்தான். பழைய காலத்தில் சோழ ராஜதானியாக இருந்த அந்நகரம் இப்போது சிற்றூராக இருக்கிறது. ஆலயம் பழைய நிலை மாறிப் பல இடங்களில் குலைந்து காணப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் சிங்கக் கிணறு என்ற ஒரு தீர்த்தம் உண்டு. சிங்கத்தின் வாய்க்குள் புகுந்து செல்வதுபோல அதன் படிகள் அமைந்துள்ளன. வட நாட்டு அரசர்களால் எடுப்பித்து வந்த கங்கா ஜலத்தை அந்தக் கிணற்றில் விடும்படி அரசன் கட்டளையிட்டான். அதனால் அதனைக் கங்கையென்றே கூறுவார்கள். பிற்காலத்தில் கங்கை அதில் ஆவிர்ப்பவித்தாக ஓர் ஐதிஹ்யம் ஏற்பட்டு விட்டது.

கிருஷ்ண சாஸ்திரிகள் தமக்கு அளிக்கப் பெற்ற ஒரு வீட்டில் இருந்து தமக்குரிய வருவாயைப் பெற்றுத் திருப்தியுற்றார். தம்முடைய நித்திய கர்மங்களைத் தவறாமல் முடித்துக்கொண்டும், ஆலயத்திற்குச் சென்று தம்முடைய கடமையைச் செய்து கொண்டும் வாழ்ந்து வந்தார். சிங்கக் கிணற்றில் விடியற் காலம் ஸ்நானம் செய்வது அவர் வழக்கம். ஆலயத்தின் தேவகோஷ்டத்தைச் சூழ்ந்து சுவரில் அமைந்துள்ள சிவபெருமானுடைய அறுபத்து நான்கு மூர்த்தங்களையும் தரிசித்து இன்புறுவர். தேவகோஷ்டத்தின் முன்பு தெற்கும் வடக்கு முள்ள வாயில்களில் கீழ்ப்பக்கத்துச் சுவரில் மேற்கு முகமாக மிகப் பெரியனவாகவும் அழகுடையனவாகவும் லக்ஷ்மி வடிவமும், ஸரஸ்வதி வடிவமும் உள்ளன. அவ்விரண்டு தேவிகளிடத்தும் அவருக்கு அன்பும் ஈடுபாடும் அதிகம். கங்கை கொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே லக்ஷ்மி பாகீரதி, ஸரஸ்வதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோஷ்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின.

மூன்றாம் பெண்ணாகிய ஸரஸ்வதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டை (chin)யில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும் பொழுது அங்கே சுவரிற் சார்ந்திருந்த காசாங் கட்டையின் நுனி கிழித்து விட்டதாம். அதனால் காயம் உண்டாகிச் சில காலம் இருந்ததாம் அந்தத் தழும்பே அது. சில வருஷங்கள் கிருஷ்ண சாஸ்திரிகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து வருகையில் ஒரு நாள் அங்கிருந்த பிராமணர் ஒருவர் இறந்தனர். அவரை ஸ்மசானத்துக்குக் கொண்டு போவதற்குப் பிராமணர் நால்வர் வேண்டுமல்லவா? கிருஷ்ண சாஸ்திரிகள் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதாக முன் வந்தார். மற்றொருவரும் உடன்பட்டார். பின்னும் இருவர் வேண்டுமே; அகப்படவில்லை. வேறு வழியின்மையால், வேறு ஜாதியினராகிய இருவரைப் பிடிக்கச் செய்து நால்வராகக் காரியத்தை நிறைவேற்றினர்.

வைதிக சிரத்தை மிக்க கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய கவலையை உண்டாக்கியது “நமக்கும் இவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது?” என்று அவர் யோசித்தார். “இத்தகைய இடத்தில் இருப்பது தவறு” என்று நினைத்துக் கோயிலதிகாரியிடம் விடைபெற்று அவ்வூரைவிட்டுப் புறப்பட்டார். அப்பால் அவர் தம்முடைய மைத்துனி குமாரர்களாகிய இருவர் உள்ள கோட்டூருக்கு வந்து சேர்ந்தார்.அக்கினீச்சுவர ஐயர், குருசாமி ஐயர் என்னும் பெயருடைய அவ்விருவரும் நிரம்பிய செல்வர்கள். மிகுதியான பூஸ்திதியையுடையவர்கள்; வைதிக சிரத்தையும் தெய்வ பக்தியும் பொருந்தியவர்கள். யார் வந்தாலும் அன்னமளித்து உபசரிப்பார்கள். எந்த ஜாதியினரானாலும் உபகாரம் செய்வார்சள். அவர்கள் பலருக்கு விவாகங்களும் உபநயனங்களும் செய்து வைத்தார்கள். உத்யோகஸ்தர்களும் வித்துவான்களும் மிராசுதார்களும் அவர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள்.

கிருஷ்ண சாஸ்திரிகளைக் கண்டவுடன் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. “எங்கள் தகப்பனாருடைய ஸ்தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் நீங்கள் ஏன் அலைய வேண்டும்? இங்கேயே இருந்து உங்கள் பூஜை முதலியவற்றைக் கவலையில்லாமல் செய்து கொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார்கள். அவர்கள் விருப்பப்படியே அவர் சில காலம் அங்கே தங்கியிருந்தார். ஆயினும், அவருடைய மனம் தனியே இருத்தலை நாடியது. கவலையற்றுத் தனியே வாழவேண்டுமென்று விரும்பினார். தம் கருத்தை அச்சகோதரர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் முன்பே தம்மிடம் கிருஷ்ண சாஸ்திரிகள் அனுப்பியிருந்த தொகையோடு தாமும் சிறிது பொருள் சேர்த்துச் சூரியமூலையில் நன்செய் புன்செய்கள் அடங்கிய முப்பதுமா நிலம் வாங்கி அளித்துத் தமக்குரிய வீடொன்றையும் உதவி அங்கே சுகமாக வசித்து வரும்படி கேட்டுக் கொண்டனர். “பரமேசுவரனது கிருபை இந்த இடத்தில் சாந்தியோடு வாழ வைத்தது” என்ற எண்ணத்தோடு கிருஷ்ண சாஸ்திரிகள் சூரிய மூலையில் தனியே வாழ்ந்து வரலானார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சிவ பூஜையிலும் மந்திர ஜபங்களிலும் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கிச் சிவ கிருபையை துணையாகக்கொண்டு திருப்தியோடு இருந்து வந்தார்.

நிலங்களைக் குத்தகை எடுத்த குடியானவர்கள் அவருக்குக் கவலை வைக்காமல் அவற்றைப் பாதுகாத்தும் அவருக்கு வேண்டியவற்றைக் கவனித்து அளித்தும் வந்தனர். சூரியமூலை இப்போது சூரியமலை யென்று வழங்குகிறது. கஞ்சனூருக்கு ஈசானிய மூலையில் அவ்வூர் இருக்கின்றது. ஈசானிய மூலைக்குச் சூரியமூலை யென்பது ஒரு பெயர். அதனால் இப்பெயர் வந்தது. இதனைச் சூரிய கோடி யென்று வடமொழியில் வழங்குவர். அவ்வூர்ச் சிவாலயத்திலுள்ள சிவபெருமானுக்குச் சூரிய கோடீசுவரரென்பது திருநாமம். சூரிய மூலை பெரிய ஊரன்று; பெரிய ஸ்தலமுமன்று. ஆனால் அடக்கமாக வாழ விரும்பிய கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு அந்த மூலை ஊரே சிறந்ததாகத் தோன்றியது.

சூரிய மூலைக்கு வடபால் பழவாறு என்ற நதி ஓடுகிறது. காவிரியிலிருந்து வயல்களுக்குப் பாய்ந்த கழிவு நீரோடை அது. அது முதலில் ஓட்டை வாய்க்காலென்னும் பெயரோடு வருகிறது. அதுவே பழவாறாகிப் பிறகு விநாயகநதி யென்ற பெயரைப் பெறுகிறது. திருவெண்காட்டுக்கருகில் மணி கர்ணிகை என்னும் தீர்த்தமாகிப் புராணத்தாற் பாராட்டப்படும் பெருமையை உடையதாக விளங்குகின்றது.

கிருஷ்ண சாஸ்திரிகள் அந்தப் பழவாற்று ஸ்நானத்தையே கங்கா ஸ்நானத்திலும் பெரியதாக நினைத்தார். தம்முடைய வீட்டின் பின்புறத்திலும் மேல் பக்கத்திலும் உள்ள விசாலமான இடங்களில் பலவகையான புஷ்ப மரங்களும் செடிகளும் கொடிகளும் பஞ்ச பில்வங்களும் வைத்துப் பயிர் செய்தார். அவற்றிலிருந்து நாள் தோறும் மிகுதியான புஷ்பங்களையும் பத்திரங்களையும் பறித்துப் பூஜை செய்வார். அபிஷேகத்திற்குப் பசுவின் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமல் பூஜை செய்யமாட்டார். அருச்சனைக்கு மலர் தரும் பூஞ்செடிகளை வைத்துப் பாதுகாத்தது போலவே அபிஷேகத் துக்குப் பால் தரும் பசுக்களையும் அவர் அன்போடு வளர்த்து வந்தார். மாலை வேளையில் தாமே புல் பறித்து எடுத்து வந்து பசுக்களுக்குப் போடுவார். அவர் நினைத்திருந்தால் தம் நிலங்களில் பயிர் செய்து பொழுது போக்கலாம். அவர் கருத்து அதில் ஊன்றவில்லை. தம்முடைய பூஜைக்கு வேண்டிய மலர்களை உதவும் மலர் வனத்தைப் பயிர் செய்வதில்தான் அவருடைய விருப்பம் சென்றது. மகா கைலாச அஷ்டோத்தரம் சொல்லி அம்மலர்களால் அருச்சனை புரிவதே அவருக்கு இன்பத்தைத் தந்தது. விடியற் காலையில் எழுந்திருப்பதும் பழவாற்றில் ஸ்நானம் செய்வதும் அனுஷ்டானங்கள் செய்வதும் விரிவாகப் பூஜை செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறப் பிற்பகல் இரண்டு மணி வரையில் ஆகும். அப்பால் போஜனம் செய்வார். பிறகு சிவநாமம் செய்து கொண்டே இருப்பார். மாலையில் சென்று பசுவுக்குப் புல் எடுத்து வருவார். சந்தியா காலத்தில் சந்தியா வந்தனம் செய்து விட்டுத் தம்முடைய ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிதம்பரேசருக்கு அர்ச்சனையும் நிவேதனமும் கற்பூர ஹாரத்தியும் செய்வார். பிறகு உண்பார். எப்போதும் சிவநாமஸ்மரணையை மறவார்.

சூரிய மூலைக்கு வந்த பிறகு அவருக்குச் சுப்பலக்ஷ்மியென்னும் பெண்ணும் சிவராமையர் என்னும் குமாரரும் மீனாக்ஷி யென்னும் குமாரியும் பிறந்தார்கள். என் தந்தையாருக்கு விவாகம் செய்விக்க ஏற்ற பெண்ணைத் தேடிக் கொண்டிருந்த என் பாட்டனாரும் பாட்டியாரும் கிருஷ்ண சாஸ்திரிகளின் இயல்பை உண்ர்ந்து அவருடைய மூன்றாம் குமாரியாகிய ஸரஸ்வதியைத் தம் குமாரனுக்கு மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தனர். விவாகம் நிச்சயமானது தெரிந்து உடையார் பாளையம் ஜமீன்தார் பொருளுதவி செய்ய, என் தந்தையாருடைய விவாகம் இனிது நிறைவேறியது. ¶’

…. டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் “என் சரித்திரம்” நூலிலிருந்து

========================================================

Also check :

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

========================================================

[END]

2 thoughts on “‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

  1. நீங்கள் கொடுத்து வைத்தவர் சார். இது ஒன்று தான் பதிவை படித்த பின்பு தோன்றியது.

    தேனியாய் தேடித் தேடி எங்களுக்காக செய்திகளை சேகரித்து தருவதற்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

    தமிழ்த் தாத்தாவின் நினைவு இல்லத்தில் நீங்கள் ஆற்றிய உரை அபாரம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதில் எங்களையும் இணைத்து கௌரவப்படுத்திவிட்டீர்கள். நாங்கள் செய்ய நினைக்கும் பல விஷயங்களை நீங்கள் செய்து வருவது எங்களுக்கெல்லாம் உண்மையில் பெரிய வரப்பிரசாதம்.

    பதிவின் ஒரு வார்த்தையை தவறவிட்டால் கூட இழப்பு எங்களுக்கு தான் என்னும் வகையில் கல்வெட்டு போல பதிவு உள்ளது.

    சிவலிங்கத்தின் படம் கொள்ளை அழகு. அதை பெரிய போஸ்டராக பிரிண்ட் கலர் பிரிண்ட் எடுத்து வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

    மற்றபடி கிருஷ்ண சாஸ்திரிகளின் வைராக்கிய பக்தி சிலிரிக்க வைக்கிறது.

    உவேசா அவர்களின் வரலாறு நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.

    தொடரட்டும் உங்கள் தொண்டு. வளரட்டும் வையகம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *