Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

print

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நம்முடைய நான்கு நாள் குமரி – ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுப் பயணம் மிக மிக இனிமையாக, வெற்றிகரமாக நடந்தேறியது. திருவருள் துணைக்கொண்டு அனைத்தையும் நல்லபடியாக முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பனிலிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து திங்கள் அதிகாலை  சென்னை வந்து சேர்ந்தோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அசாதாரண சூழ்நிலையால் நமது பயணம் மற்றும் பாதுகாப்பை பற்றி பலர் அக்கறையுடன் விசாரித்தனர். அவர்களுக்கு நன்றி.

(நமது இந்தப் பயணம் குறித்த அப்டேட்டுகளை நமது பர்சனல் முகநூலில் அளித்திருக்கிறோம். நண்பர்கள் பார்த்திருக்கலாம்.)

தேரூர் கருப்பக்கோட்டைகைலாய மகாதேவர் ஆலயம், குமரி மாவட்டம்
தேரூர் கருப்பக்கோட்டை கைலாய மகாதேவர் ஆலயம், குமரி மாவட்டம்

இந்த நான்கு நாட்கள் பயணத்தில் நாகர்கோவில் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மற்றும் வடிவீஸ்வரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களையும் பின்னர் தேரூர் கருப்பக்கோட்டை கயிலாய மகாதேவர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன் மற்றும் விவேகானந்தர் கண்காட்சி உள்ளிட்ட பல இடங்களை தரிசித்தோம். பின்னர் மறுநாள் ராமேஸ்வரம் புறப்பட்டு வந்து அக்னி தீர்த்தம் உள்ளிட்ட அத்தனை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து முக்கிய இடங்களை பார்த்துவிட்டு ஒரு நாள் போதாமல் மறுநாளும் ராமேஸ்வரத்தில் தங்கி, (இது போன்ற தலங்களில் ஒரு நாள் தங்குவது என்பது சிறப்பு) மறுநாளும் சில இடங்களை பார்த்துவிட்டு திங்கள் அதிகாலை தான் சென்னை திரும்பினோம். புகைப்படங்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு கல்வெட்டு என்றால் மிகையாகாது. பதிவுகளில் அவ்வப்போது பயன்படுத்துகிறோம். இந்தப் பதிவில் சாம்பிளுக்கு ஒன்றிரண்டு புகைப்படங்கள் தந்திருக்கிறோம்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் முதல்வரின் உடல்நிலை குறித்த செய்திகளால்  அசாதாரண சூழல் நிலவியது. மக்கள் குழம்பித் தவித்தனர். பலர் அலுவலங்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு பாதியில் வீடு திரும்பிவிட்டனர். நேற்று அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்துகொண்டிருந்த நாம் பெற்றோர் வற்புறுத்தலால் மாலை வீடு திரும்பினோம். தளத்தில் பதிவளித்து ஆறு நாட்களாகிவிட்ட நிலையில் இன்று ஒரு பதிவையேனும் அளித்தால் மனம் அமைதி பெறும் என்பதால் இந்த சிறு பதிவை அளிக்கிறோம். (முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவு குறித்த நம் இரங்கல் செய்தியை தளத்தின் ஸ்க்ராலிங்கில் அளித்திருக்கிறோம்.)

இந்த பிரயாணத்தில் படிக்க உ.வே.சா. அவர்களின் நூல்களைத் தான் எடுத்துச் சென்றோம். அவற்றில் நம்மை கவர்ந்த கட்டுரை ஒன்றை தருகிறோம்.

சொற்சுவை, பொருட்சுவை, பக்திச்சுவை என அனைத்தும் நிரம்பி வழியும் சம்பவம் (கட்டுரை) இது. இதைப் படித்தால் சிவபுண்ணியமும் கிடைக்கும் என்பதால் கருத்தூன்றி படிக்கவும். ஒப்புக்கு படிக்காமல் அந்தக் காலகட்டத்துக்கே அந்த பாத்திரங்கள் உடனே நீங்களும் செல்லவேண்டும். இறுதியில் நெகிழ்ச்சியில் ஒரு துளி கண்ணீராவது துளிர்க்கும் என நம்புகிறோம்.

இந்த பதிவை நமது தளத்தின் ஓவியர் பெரியவர் சசி அவர்களைக் கொண்டு ஒரு விசேஷ ஓவியம் வரைந்து பின்னர் அளிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நமக்கு பட்ஜெட் என்ற ஒன்று இருக்கிறதே. என்ன செய்ய? ஒரு மாதத்திற்கு இத்தனை ஓவியத்துக்கு தான் நம்மால் பணம் தரமுடியும். அதற்கு மேல் நமக்கு சக்தியில்லை. மேலும் தளத்தின் வருவாய் ஆதாரங்கள் அதிகரிக்காமல் மேற்கொண்டு தொடர இயலாது. ஏற்கனவே செய்தவர்கள் தான் செய்து வருகின்றனார். புதியவர்களை உதவி செய்ய வைப்பது மிகவும் கடினமாக உள்ளது. பார்ப்போம். ஈசனருளால் நினைப்பது நடக்கட்டும். அசத்திவிடலாம்.

களவு போன உற்சவரை மீட்டு வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

by டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்

திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள சங்கர நயினார் (சங்கர நாராயணர்) கோயிலென்னும் ஸ்தலம் மிக்க பெருமை வாய்ந்தது. சங்கரன் கோயிலென்றும் அதன் பெயர் வழங்கும். சிவபெருமானும் திருமாலும் ஒரு திரு உருவமாகக் கலந்தமைந்த சங்கர நாராயணமூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார். அந்த ஸ்தலத்தில் பல வகையான நோயுள்ளவர்கள் வழிபட்டுத் தங்கள் தங்கள் நோய் தீரப் பெறுவர். ஸ்தல விருக்ஷம் புன்னையாதலின் அந்த ஸ்தலத்திற்குப் புன்னைவனமென்பது ஒரு பெயர். இறைவன் புற்றிலிருந்து எழுந்ததாகப் புராணம் கூறும். அங்கே நாகசுனையென்னும் தீர்த்தம் ஒன்று உண்டு. நித்திய பூஜைகளும் நைமித்தியங்களும் அந்த ஸ்தலத்தில் விசேஷமாக நடைபெறும்.

சற்றேறக்குறைய 200 வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அங்கிருந்த உத்சவ மூர்த்தி திடீரென்று காணப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக அந்த ஸ்தலத்தில் எழுந்தருளியிருந்த மூர்த்தி காணவில்லை யென்ற அச்செய்தி யாவருக்கும் பெருங்கலக்கத்தை உண்டாக்கிற்று. திருநெல்வேலிச் சீமையிலுள்ளார் மிக்க வருத்தமுற்றனர். எங்கும் சங்கரன்கோயில் நாயகரைக் காணவில்லை என்பதே பேச்சாக இருந்தது.

sankaran-kovil1-copy
சங்கரன் கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில்

அக்காலத்தில் நாயக்க அரசர்களுடைய பிரிதிநிதியாகத் திருநெல்வேலிச் சீமையை ஆண்டு வந்தவர் ஆறைஅழகப்ப முதலியாரென்பவர். அவர் நல்ல அறிவாளி. தம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் அந்த நிகழ்ச்சி நேர்ந்ததை அறிந்து அவர் ஆத்திரங் கொண்டார். திருநெல்வேலிச் சீமையின் பெருமைக்கும், பல நாடுகளிலிருந்து தங்கள் தங்கள் நோய் தீரும்பொருட்டுப் பக்தர்கள் வருவதற்கும் காரணமாகிய அந்தத் திவ்ய ஸ்தலத்தில் அத்தகைய கொடுமை நேர்ந்தது தம்முடைய அதிகாரத்திற்கு ஒரு பெரிய இழுக்கு என்று எண்ணினார்.

சிவபக்தராதலின் அவர் மனம் கசிந்து உருகினார். “நாயகரை மீண்டும் வருவித்துப் பழையபடியே பிரதிஷ்டிக்கும் வரையின் நான் அன்னம் உண்ணேன். என் உயிர் போனாலும் குற்றம் இல்லை. அவன் அருள் அதுவானால் அதை நான் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வேன். இந்த க்ஷணமுதல் இரவுபகலாக இந்த முயற்சியிலேதான் ஈடுபட்டிருப்பேன்” என்று சங்கற்பம் செய்துகொண்டார். கடுமையான அச்சபதத்தைக் கேட்டோர் அஞ்சினர். அப்பால் சில அன்பர்கள், “உங்கள் சங்கற்பத்தைக் கேட்டு அஞ்சுகிறோம். தவம் செய்வோருக்கு இது தகுதியேயல்லாமல் தங்களைப்போல ராஜ்ய நிர்வாகம் செய்பவர்களுக்குத் தக்கதன்று. அன்றியும் இந்த முயற்சியில் ஈடுபடுவதற்கு உடம்பில் பலம் வேண்டாமா? சிவபெருமான் இதை ஒரு சோதனையாக உண்டாக்கியிருக்கலாமேயன்றி வேறன்று. தங்கள் விரதத்தின் கடுமையைத் தளர்த்த வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

அவர், “நம் நாட்டுக்கு உயிர் நிலை அந்த ஸ்தலம். அங்கே இத்தகைய களவு நேராமற் பாதுகாக்கக் கடமைப்பட்டவன் நான். அதில் நான் தவறினேன். ஆதலால் இந்த விரதத்தால் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதை நான் அனுபவிக்க வேண்டியவனே” என்றார். பின்னும் அன்பர்கள் வற்புறுத்தவே அழகப்ப முதலியார் சுத்த உபவாஸத்தை நிறுத்திவிட்டுப் பாற்கஞ்சி மாத்திரம் உட்கொள்வதாகக் கூறினார்.

அவருக்கு இரவில் தூக்கம் வரவில்லை. எப்பொழுதுமே அதே கவலையாக இருந்தார். தம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட ஸமஸ்தானத்து ஸ்தானாதிபதிகளையெல்லாம் வருவித்து, ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தனர். ஒருவருக்கும் இன்னது செய்வதென்று தோன்றவில்லை.

நாயகர் மறைந்த நாள் முதல் சங்கர நயினார் கோயில் அர்ச்சகருள் ஒருவராகிய சண்பகக்கண் நம்பியென்பவரையும் காணவில்லையென்ற ஒரு செய்தி கிடைத்தது. அந்த நம்பியே நாயகரைக் கொண்டு சென்றிருக்க வேண்டுமென்று யாவரும் நிச்சயம் செய்தனர்.

சண்பகக்கண் நம்பியாரே அந்தக களவைச் செய்தவர். அவர் ஒரு நாள் இரவு நாயகரைக் கைக்கொண்டு இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கைக்குச் சென்று ஒருவரிடம் அந்த மூர்த்தியை அடகு வைத்தார். அங்கே ஆறைஅழகப்ப முதலியாரது அதிகாரம் செல்லாது. அந்த விஷயம் சேது வேந்தருக்குத் தெரியவே அவர் அம்மூர்த்தியைப் பெறச்செய்து உத்தரகோச மங்கைக் கோயிலிலே வைத்துப் பூஜை முதலியன நடைபெறும்படி ஏற்பாடு செய்தார்.

சங்கரநயினார் கோயில் நாயகர் சேதுபதியினது பாதுகாப்பில் உத்தரகோசமங்கைக் கோயிலில் இருப்பது ஆறை அழகப்ப முதலியாருக்கு ஒற்றர் மூலம் தெரிய வந்தது. ‘அங்கிருந்து எவ்வாறு பெறுவது?’ என்று அவர் யோசிக்கலானார். தாம் சேதுபதிக்கு எழுதினால் நட்பு முறையில் இல்லாத அரசர், “தம் ஊரில் இருந்த மூர்த்தியைக் காப்பாற்றத் தெரியாமல் களவுபோகும்படி விட்டவருக்கு மறுபடியும் அம்மூர்த்தி எதற்கு?” என்று விடையனுப்பினால் தம் மானம் குலைந்து விடுமேயென்று எண்ணினார். தம் கீழுள்ள ஸமஸ்தானத்து மந்திரிமார்களுள் யாரையேனும் அனுப்பலாமென்று எண்ணினாலோ, அவர்களுள் யாரும் சேதுபதியைப் போய்ப் பார்ப்பதென்பது இயலாத காரியம். ‘நாயகர் இருக்கும் இடம் தெரிந்தும் கொண்டுவர வழியில்லையே!’ என்று முதலியார் வருந்தினார்.

அக்காலத்தில் சொக்கம்பட்டி ஸமஸ்தானமும் அவரது ஆட்சிக்கு அடங்கியிருந்தது. மற்ற ஸமஸ்தானங்களிலிருந்து ஸ்தானாதிபதிகள் அடிக்கடி திருநெல்வேலி வந்து அழகப்ப முதலியாரைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் வரும்போது முதலியாருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது வழக்கம். அவ்வாறு வணங்க வேண்டுமென்று முதலியாரே விரும்பினார். சொக்கம்பட்டி ஸ்தானாதிபதியாகிய பொன்னம்பலம் பிள்ளை மாத்திரம் அவ்வாறு செய்வதில்லை. தம் ஸமஸ்தானத்திற்குரிய கப்பத்தை மாத்திரம் அனுப்பிவந்தாரே ஒழிய நேரிற் சென்று முதலியாரை அவர் பார்ப்பதில்லை. அதனால் அழகப்ப முதலியார், ‘இவன் மட்டும் என்ன பெரியவனோ?’ என்று நினைத்திருந்தார்.

எல்லா ஸமஸ்தானத்து மந்திரிகளும் அழகப்ப முதலியார் முன் கூடி யோசித்தபோது எல்லோரும் ஒருமுகமாக ஒரே அபிப்பிராயத்தைக் கூறினர். “இந்தக் கஷ்டத்தை நீக்குவதற்கு நாங்கள் சிறிதும் பயன்படமாட்டோம்; எத்தகைய தீரராக இருந்தாலும் முடியாது. சொக்கம்பட்டி ஸ்தானாதிபதிப் பிள்ளையவர்கள் மனம் வைத்தால் எப்படியாவது காரியத்தைச் சாதித்து விடுவார்கள்” என்று அவர்கள் பன்முறை சொன்னார்கள். “சமுகத்தில் அவர்களை வருவித்து விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சீமையின் கௌரவமே போனமாதிரிதான்” என்று வற்புறுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம், ‘இவர் நம்மை வணங்கச் செய்கிறாரே யொழிய அவரைச் செய்ய முடியவில்லை. இப்பொழுது அகப்பட்டுக்கொண்டார்’ என்று மனத்துக்குள் ஒரு மகிழ்ச்சி வேறு இருந்தது.

sankaran-kovil-2-copy

முதலியார் பெரிய தர்மசங்கடத்தில் அகப்பட்டார். ‘அந்த இறுமாப்புக் கொண்ட மனிதனிடமா உதவியை வேண்டுவது? என்று அவர் நினைத்தார்.

தம்முடைய இறுமாப்பே அந்த மதியூகியைத் தம் பால் வரவொட்டாமல் தடுத்ததென்பதை அவர் உணரவில்லை. ‘இந்த விபத்து எல்லாவற்றைக் காட்டிலும் பெரியதாகையால், இப்போது நம் கௌரவத்தைப் பார்ப்பது அழகன்று’ என்ற முடிவிற்கு வருவதற்குள் அவர் எவ்வளவோ சஞ்சலத்துக்கு ஆளானார். ‘வேறு வழியில்லை’ என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அவர் பின்பு பொன்னம்பலம் பிள்ளையை அழைத்து வரவேண்டுமென்று தக்க மனிதர்களை அனுப்பினார்.

சிறந்த அறிவாளியும் சிவபக்தருமாகிய பொன்னம்பலம் பிள்ளை உடனே திருநெல்வேலிக்கு வந்தார். அவருக்கும் அந்த விஷயத்திற் கவலை இருந்தே வந்தது. முதலியார் அவரைக் கண்டவுடன் மரியாதையாக வரவேற்று உபசரித்தார்; தம் கவலையை எடுத்துரைத்தார்.

“சமூகத்தில் உண்டாயிருக்கும் கவலையை நான் முன்பே அறிந்திருக்கிறேன். ஆனாலும் ‘அவ்விடத்து அதிகாரத்துக்கு எதுதான் கைகூடாது? விரைவில் நாயகர் எழுந்தருள்வார்; போய்த் தரிசிக்கலாம்’ என்ற எண்ணத்தோடு இருந்தேன்” என்றார் பொன்னம்பலம் பிள்ளை.

“நான் அன்றுமுதல் அன்னம் உண்ணவில்லை. உம்மால்தான் இந்தக் காரியம் நிறைவேறுமென்று எல்லோரும் கூறுகிறார்கள். நம் சீமையின் கௌரவத்தைக் காப்பதில் உமக்கும் பங்கு உண்டல்லவா?” என்றார் முதலியார்.

“உத்தரவுப்படியே செய்யக் காத்திருக்கிறேன். சங்கரன் திருவருள் துணைசெய்யு மென்றே நம்புகிறேன்” என்று பொன்னம்பலம் பிள்ளை அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். அப்போது அழகப்பா முதலியாருக்குச் சிறிது தைரியம் வந்தது.

“உத்தரகோச மங்கையிலிருந்து எப்படிக் கொண்டு வருவது? அங்கே யார் போவார்கள்? நாமும் திருட்டு நடத்துவதா?” என்று கவலையோடு கேட்டார் முதலியார்.

“அந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சமூகத்திற் கவலையே கொள்ள வேண்டாம். என் விருப்பத்தின்படியே நடக்க வேண்டுமென்று கூறிச் சில தக்க மனிதர்களை என்னுடன் அனுப்பினால் போதும். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.”

அங்கே இருந்த ஸ்தானாதிபதிகளும் வித்துவான்களும், “நான் வருகிறேன்; நான் வருகிறேன்” என்றார்கள்; ‘இந்தக் கைங்கரியத்தில் பொன்னம்பலம் பிள்ளைக்கு ஏவல் புரிவதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா?’ என்பது அவர்கள் எண்ணம்.

சேது வேந்தருக்கும் சொக்கம்பட்டியாருக்கும் பகைமை இருந்து வந்தது. ஒருமுறை சொக்கம்பட்டியாரைச் சேதுபதி அடக்கத் தலைப்பட்டபோது அவரால் முடியவில்லை.

அந்த நிலையில் ‘பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியின் ராஜ்யத்திலிருக்கும் மூர்த்தியை எப்படிக் கொண்டு வர முடியும்?’ என்றே யாவரும் மயங்கினர்.

“அவர் சமர்த்தர்; ஒருவருக்கும் தெரியாத தந்திரம் அவருக்குத் தெரியும்” என்று சிலர் கூறினர்.

சில ஸ்தானாதிபதிகளும் வித்துவான்களும் வேறு சிலருமாக நூறு பேர்களைப் பொன்னம்பலம் பிள்ளை அழைத்துக் கொண்டார். மேள வாத்தியக்காரர் சிலரையும் கூட்டிக்கொண்டு எல்லோருடனும் இராமனாதபுரத்தை நோக்கிப் புறப்பட்டார். இராமநாதபுரம் எல்லைக்கருகில் ஓர் ஊரில் தங்கி முன் ஏற்பாட்டின்படி அங்கே வந்திருந்த காவடியொன்றை பொன்னம்பலம்பிள்ளை எடுத்துக் கொண்டார். வாத்தியக்காரர்களை அவர் வாத்திய கோஷம் செய்யச் சொன்னார்; மற்றவர்களைப் பழனிக்கு ஒரு கோஷ்டியாகச் செல்பவரைப்போல வேடம் புனையச் செய்தார். தாம் காவடி யெடுத்துக் கொண்டு ஆவேசம் வந்தவர்போல நடந்தார். அந்த நூறு பேரும் ‘அரோஹரா! அரோஹரா!’ என்று முழக்கம் செய்தனர். சிலர் சேகண்டி தட்டினர். சிலர் பழங்களைச் சும்ந்து வந்தனர். சிலர் தேங்காய் மூட்டையைத் தாங்கினர். சிலர் பெரிய விபூதிப் பைகளைக் கொணர்ந்தனர். சிலர் தூபமுட்டிகளில் அடிக்கடி சாம்பிராணியைத் தூவிப் புகைத்தனர். சிலர் திருப்புகழ் பாடினர். அடிக்கடி காவடிக்குத் தீபாராதனை செய்தனர். அத்தகைய பெருமுழக்கத்தோடு அக்கூட்டம் இராமநாதபுரத்து எல்லையிற் புகுந்தது.

சேதுவேந்தரை ஒருவர் பார்ப்பதென்பது மிகவும் கடினமான காரியம். அரண்மனை வாயிலைக் கடந்து செல்வதே அரிது. ஆயினும் பழனிக்குச் செல்லும் காவடிகளை மாத்திரம் யாரும் தடைசெய்வதில்லை. காவடி கொணர்வோர் நேரே உள்ளே செல்வார்கள். சேதுபதியரசர் எழுந்து வந்து வணங்கி ஆவேசம் வந்தவர்கள் கூறும் உத்த ரவுகளைக் கேட்டுப் பழனி ஆண்டவருக்குக் காணிக்கைகளை அனுப்புவார். மகா மேதாவியாகிய பொன்னம்பலம் பிள்ளை அவற்றையெல்லாம் விசாரித்து அறிந்து வைத்திருந்தவராதலின், “பழனியாண்டவா! உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரை உரிய இடத்திலே மீட்டும் ஸ்தாபிக்க உன் திருவருள்தான் துணைசெய்ய வேண்டும். நான் செய்வது அபசார மானாலும் க்ஷமிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டே அந்த நாடகத்தைத் தொடங்கினர்.

காவடியோடு வந்தவர்கள் நூறு பேரே எனினும் வரவர ஊரிலுள்ளோரும் கூடிக்கொண்டனர். அவரவர்கள் பக்தியினால் உந்தப்பட்டு, ‘அரோஹரா’ என்று முழக்கம் செய்தனர். பெரிய கோஷத்துடன் அந்தக் கூட்டம் இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள இராமலிங்க விலாசத்திற் புகுந்தது. வருவோரை அந்த மண்டபத்திலேதான் அரசர் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

‘பழனிக்குக் காவடி கொண்டுசெல்லும் கூட்டம் ஒன்று வருகிறது; இதுகாறும் இவ்வளவு சிறப்பாகவும் பக்தியாகவும் பிரார்த்தனை செலுத்துவோர்களைக் கண்டதில்லை’ என்று அரண்மனை உத்தியோகஸ்தர்கள் பிரமித்தனர். சேதுபதியரசர் கூட்டம் வருவதை உணர்ந்து வழக்கப்படியே எதிர்சென்று வரவேற்க முன்வந்தார்.

கூட்டம் பெரிதாகிவிட்டமையால் பலர் வெளி முற்றத்திலே நின்றுவிட்டனர். முக்கியமானவர்கள் மட்டும் உள்ளே சென்றனர். காவடி வந்தவுடன் சேதுவேந்தர் பொன்னம்பலம் பிள்ளைக்கு அருகில் வந்தார். அப்போது ஒருவர் காவடிக்குத் தீபாராதனை செய்தார். மன்னர் இரு கைகளையும் குவித்தனர். அந்தச் சமயத்தில் பொன்னம்பலம் பிள்ளை திடீரென்று அருகில் நின்ற ஒருவரிடம் காவடியைக் கொடுத்துவிட்டுச் சேதுபதியை நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்.

உடனே,

“சேதுபதி யென்றுநர சென்ம்மெடுத் தாய்கமல
மாதுபதிக் குன்னையன்றி வாயாதே-நீதிபதி
நீயே விசயரகு நாத னினையீன்ற
தாயே யருட்கோ சலை”

என்ற செய்யுளையும் கூறினார்.

அரசர் அவர் நிலையைக் கண்டும் கூறிய செய்யுளைக் கேட்டும் ஒன்றும் விளங்காமல் நின்றனர்; காவடி கொண்டு வருவோர் நம்மை வணங்குகிறாரே; இவர் இந்தப் பாட்டை எதற்காகச் சொல்லுகிறார்?” என்று ஆச்சரியமடைந்தார்.

“அடியேன் சொக்கம்பட்டி ஸ்தானாதிபதி பொன்னம்பலம்; மகாராஜா அவர்களுடைய பெருமையை அறிந்து தரிசிக்க வேண்டுமென்று நெடுங்காலமாக எண்ணியிருந்தேன். ராஜ தரிசனம் சுலபமாகக் கிடைக்கக்கூடியதாக இல்லை. அதனால் இந்த மாதிரி செய்யலானேன். பழனியாண்டவன் தரிசனத்தைக் காட்டிலும் மகாராஜா தரிசனந்தான் எனக்கு முக்கியமாக வேண்டும்” என்றார்.

பொன்னம்பலம் பிள்ளையின் புத்தி சாதுர்யத்தையும் பராக்கிரமத்தையும்பற்றி அரசர் முன்பே கேள்விப்பட்டிருந்தார். அப்போது அவரை நேரே கண்டபோது திடுக்கிட்டார்.

“அப்படியா! சந்தோஷம். நாம் உம்மைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். நீர் சொல்லிய செய்யுளில் நம்முடைய பெயரைச் சொன்னது சரியே; தாயாருடைய பெயர் உமக்கு எப்படித் தெரியவந்தது?” என்று அரசர் கேட்டார்.

அரசரது பெயர் விஜயரகுநாத சேதுபதியென்பது அவர் தாயார் பெயர் கோசலை நாச்சியாரென்பது பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியை இராமராகப் புகழ்ந்து சொல்ல வந்தவர், ‘நீதான் விஜயத்தையுடைய ரகுநாதன்; நின் அன்னையே கோசலைக்கு ஒப்பானவள்’ என்னும் பொருள்படப் பாடினார். அவருக்கு உண்மையில் சேதுபதியின் அன்னையார் பெயர் தெரியாது. அந்தப் பெயரும் பாட்டில் வெறும் உவமையாகமட்டும் நில்லாமல் உண்மைக்கும் பொருத்தமாக அமைந்துவிடவே மன்னர் வியப்படைந்தார்.

‘பொன்னம்பலம் பிள்ளை சிறந்த கவிஞர்; தெய்வபக்தியுடையவர்; கடாக்ஷ வித்துவான்’ என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். ‘அதற்கு இதைவிட வேறு சாக்ஷியம் என்ன வேண்டும்?’ என்று அவர் அப்போது எண்ணினார்.

பொன்னம்பலம்பிள்ளை, “ஏதோ அடியேனுக்குத் தோன்றியது” என்று பணிவாகக் கூறினார். சேதுபதியரசருக்கு அவரிடம் பெருமதிப்பு உண்டாயிற்று. அவரை நிற்கவைத்துப் பேசுவது தவறு என்று உள்ளத்திற் பட்டது. உடனே தாம் ஓர் ஆசனத்தில் அமர்ந்து தமக்கு அருகில் ஓர் ஆசனத்தில் பொன்னம்பலம்பிள்ளையை இருக்கச் சொன்னார்.

தம்முடன் வந்திருக்கும் அன்பர்கள் நிற்கும் போது தாம் மட்டும் ஆசனத்தில் அமர்வதை அவர் விரும்பவில்லை. தம் கருத்தை அவர் அரசருக்குத் தெரிவித்தார். அது கேட்ட அரசர், ‘இவரல்லவோ மனிதர்! தமக்கு மாத்திரம் நன்மையைத் தேடிக் கொள்வோரே மலிந்திருக்கும் இவ்வுலகத்தில் பிறரது மரியாதையையும் பாதுகாப்போர் மிகவும் அரியர்’ என்று எண்ணி அவரை மனத்திற்குள் பாராட்டினார். அப்பால் அங்கு வந்திருந்த ஸ்தானாதிபதிகளுள்ளும் வித்துவான்களுள்ளும் முக்கியமான மூவருக்கு ஆசனம் அளிக்கச் செய்து அமரும்படி கூறினார். அரசருக்கு முன் சமஆசனத்தில் இருப்பதென்பது அக்காலத்தில் அரசபதவியையே பெறுவதற்கு ஒப்பானது.

சேதுபதியும் பொன்னம்பலம்பிள்ளையும் நெடுநேரம் சல்லாபம் செய்து கொண்டிருந்தனர். பிள்ளையினுடைய பேச்சில் அவருடைய சிறந்த குணங்களும் புத்தி வன்மையும் வெளிப்பட்டன; ‘உலகத்தார் இவரைப்பற்றிக் கூறும் புகழுரை பொய்யல்ல; மெய்யே’ என்பதைச் சேதுபதியரசர் தெளிந்தார்.

பொன்னம்பலம்பிள்ளை தம் நண்பர் கூட்டத்துடன் இராமநாதபுரத்தில் சிலநாள் தங்கினார்; இடையில் ஒருமுறை பழனிக்குப் போய் முருகக்கடவுளைத் தரிசித்து மீண்டும் இராமநாதபுரத்துக்கு வந்தார். பின்பு தம்முடன் வந்தோர்களிற் சிலரை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை அவரவர் இடங்களுக்கு அனுப்பிவிட்டார்.

ஒருநாள் பொன்னம்பலம்பிள்ளை சேதுபதியோடு பேசிக்கொண்டிருக்கையில், “இந்த ஸமஸ்தானத்தில் பல பெரிய ஸ்தலங்கள் இருக்கின்றன. அவ்விடங்களுக்கெல்லாம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வரவேண்டுமென்பது நெடுநாளாக எனக்கு உள்ள அவா. அதற்குத் தக்க காலம் வரவில்லை. இப்போது மகாராஜா அவர்களின் கடாக்ஷத்திற்குப் பாத்திரனாகிவிட்டமையால் அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாமென்று தோன்றுகிறது. முதலில் உத்தரகோசமங்கையைத் தரிசிக்க வேண்டும். மணிவாசகப் பெருமான் திருவாக்கால் உருகிப் பாடிய திருப்பாடல்கள் பல அந்த ஸ்தலத்தைப்பற்றி உள்ளன. அவற்றைப் படிக்கும்போதெல்லாம், இவ்வளவு அருகிலுள்ள அந்தத் திவ்ய ஸ்தலத்தைப் பார்க்க முடியவில்லையேயென்ற வருத்தம் உண்டாகும். மகாராஜாவுடைய திருவுள்ளக்குறிப்பு எனக்குத் துணையாக இருந்தால் அந்த ஸ்தல தரிசனத்தைச் செய்து பெறப்பேறு பெற்றவனாவேன்” என்றார்.

“இந்தக் காரியம் பெரிதல்லவே. நீர் உமது விருப்பப்படியே ஸ்தல தரிசனம் செய்யலாம். தக்க மனிதர்களை அனுப்புகிறோம்” என்றார் மன்னர்.

அரசர் ஏற்பாடு செய்யும்போது காரியம் கைகூடுவதில் தடை ஏது? பொன்னம்பலம்பிள்ளை தம் அன்பர்களுடன் அரண்மனை அதிகாரி ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டார். உத்தரகோசமங்கையின் எல்லையில் அடிவைக்கும்போது அவர் உள்ளம் துடித்தது. ‘நாம் மேற்கொண்ட காரியம் முற்றும் நிறைவேறவேண்டுமே’ என்ற கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது. அவர் உண்மையில் உத்தரகோசமங்கையில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளையா பார்க்கச் சென்றார்? இல்லை. சங்கர நயினார் கோயில் நாயகரையே தேடிச் சென்றார். அவர் தம் மனத்திலிருந்த விரைவை வெளியிலே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

ஆலயத்துக்குட் சென்று முறையாகத் தரிசனம் செய்யத் தொடங்கினர். பூஜகர்களிடம், “இந்த ஸ்தலம் மிகவும் புராதனமானது. இங்கே உள்ள மூர்த்தி பேதங்களின் வரலாறுகளையெல்லாம் விவரமாக நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு மூர்த்தியையும் நன்றாகத் தரிசனம் செய்ய வேண்டும்” என்றார்.

அவ்வாறே ஒவ்வொரு மூர்த்திக்கும் மெல்லத் தீபாராதனை செய்து முதிய பூஜகரொருவர் அவ்வம்மூர்த்தியின் திருநாமம், அவற்றின் சம்பந்தமான உத்ஸவம், வரலாறு முதலியவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லிவந்தார்.

“இவர் சங்கர நயினார் கோயில் நாயகர்” என்று குருக்கள் சொன்னபோது பொன்னம்பலம்பிள்ளையின் உடல் பதறியது; “ஆ! அவர் இங்கே எப்படி எழுந்தருளினார்?” என்று கேட்டார்.

sankaran-kovil-3

குருக்கள் விஷயத்தை விரிவாகச் சொன்னார். அதைக் கேட்ட போது பொன்னம்பலம்பிள்ளைக்கு, ‘இப்படியே இந்தப் பெருமானை எடுத்து அணைத்துக் கொண்டு போய்விடவேண்டும்’ என்ற வேகம் உண்டாயிற்று. அவர் அமைதி பெறுவதற்குச் சிறிது நேரம் சென்றது. அவர் கண்களில் நீர் ததும்பியது. உள்ளம் உருகியது. ஓர் அரசர் தம் அரசை இழந்துவிட்டு மற்றோர் அரசன் கைக்கீழ் மறைந்து வாசம் செய்வதைக் காண்பது போன்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அவர் அந்த மூர்த்தியைப் பார்த்தபோது சங்கர நயினார் கோயிற் காட்சி அவர் அகக்கண்முன் நின்றது; “எம்பெருமானே, தேவரீருக்குரிய சிறப்பெல்லாம் அங்கே இருக்க அவற்றை விட்டுவிட்டு இங்கே எழுந்தருளியதற்கு என்ன காரணம்? தேவரீருக்குரிய புற்று இங்கே இல்லையே; புன்னைவனம் இல்லையே; நாகசுனையும் இல்லையே” என்று நைந்தார். கவிஞராகிய அவரது வருத்தம் ஒரு வெண்பாவாக வெளிப்பட்டது:

“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”

கோயிற்பரிவாரங்களும் பிறரும் அவர் நெடுநேரம் அந்த மூர்த்தியைத் தரிசித்துக்கொண்டே நின்றதையும் மனமுருகிச் செய்யுள் ஒன்றைக் கூறியதையும் கண்டு அவருடைய அன்பை வியந்தார்கள்.

ஒருவாறு தரிசனம் செய்துகொண்டு பொன்னம்பலம்பிள்ளை மீண்டும் இராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவருக்கு முன்பே சென்ற ஓர் அதிகாரி அரசரிடம் உத்தரகோசமங்கையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லிவிட்டார்.

பொன்னம்பலம்பிள்ளையைக் கண்ட அரசர், “திருப்தியாகத் தரிசனம் ஆயிற்றோ?” என்று வினவினார்.

“மகாராஜாவின் கிருபை இருக்கும்போது அதற்கு என்ன தடை?”

“தாங்கள் கவிஞரல்லவா? அங்கே ஏதேனும் புதிய தோத்திரப் பாடல் சொன்னதுண்டோ?”

அதுதான் தம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற சமயமென்று பொன்னம்பலம்பிள்ளை உணர்ந்தார்;

“அங்கே சில காலமாக உள்ள ஒரு புதிய மூர்த்தியைத் தரிசித்தேன். அப்போது நான் ஒரு செய்யுள் இயற்றிச் சொன்னேன். அதற்கு விடையாக ஒரு செய்யுளும் கிடைத்தது” என்றார்.

“என்ன ஆச்சரியம்! எங்கே அவற்றைச் சொல்லுங்கள்.”

பொன்னம்பலம் பிள்ளை “புற்றெங்கே” என்ற வெண்பாவைச் சொல்லிவிட்டு, “இதற்கு விடையாக அம்மூர்த்தியினிடமிருந்து கிடைத்த வெண்பாவையும் கேட்டருள வேண்டும்:

விள்ளுவமோ *சீராசை வீடுவீட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற்
காடுதொறு மேயிழுத்தக் கால்”

என்று சொல்லி நிறுத்தினார்.

(*சீராசை – சங்கர நயினார் கோயில்)

சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கைக்கு வந்த வரலாறு தமக்குத் தெரியுமென்பதைச் சாதுர்யமாக அந்த வெண்பா மூலம் பொன்னம்பலம் பிள்ளை புலப்படுத்தினார். அந்த மூர்த்தியை மீட்டும் சங்கர நயினார் கோயிலிலேயே எழுந்தருளச் செய்விக்க வேண்டுமென்ற குறிப்பையும் அவர் கூறிய வெண்பாக்களால் அரசர் அறிந்து கொண்டார். “உமது பக்தியையும் சாமர்த்தியத்தையும் பாராட்டுகிறோம். அந்த நாயகர் கரிசற்காட்டிலே வந்து அவஸ்தைப்பட்டாலும், இங்கே வந்த பிறகு அவருக்கு ஒரு குறைவும் இல்லை” என்றார் அரசர்.

“இங்கே குறைவு இருப்பதாக யாரேனும் சொல்லுவாரா? ஆனாலும் அவரவர் இடத்தில் அவரவர் இருப்பதுதானே சிறப்பு !” என்றார் பொன்னம்பலம்பிள்ளை.

nayagar

அரசர் புன்னகை பூத்தார். “உம்முடைய விருப்பப்படியே அந்த மூர்த்தியை அவருக்குரிய இடத்திலே சேர்த்துவிடச் செய்யலாம்” என்று அவர் கூறியபோது பொன்னம்பலம்பிள்ளைக்குச் சந்தோஷம் பொங்கியது.

அரசர் உத்தரவுப்படி தக்க உபசாரங்களுடன் உத்தரகோசமங்கையிலிருந்த மூர்த்தி எழுந்தருளினார். பொன்னம்பலம்பிள்ளை அரசரிடம் விடை பெற்றுக்கொண்டு அன்பர்களுடன் அம்மூர்த்தியைத் தொடர்ந்து சென்றார். செல்லுகையில் தாம் நாயகருடன் வரும் செய்தியையும், திருமங்கலத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்பதையும் ஆறைஅழகப்ப முதலியாருக்கு அறிவிக்கும் வண்ணம் ஒருவரை முன்னதாக அனுப்பியிருந்தார். ஒவ்வொரு நாளும் மிக்க ஆவலுடன் ‘என்ன செய்தி வருமோ!’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலியார் தம் அதிகாரத்தை மறந்தார். பொன்னம்பலம்பிள்ளையை வாழ்த்தி அவரை எதிர்கொள்ளப் புறப்பட்டு விட்டார். அவருடன் பல பக்தர்கள் புறப்பட்டனர்.

திருமங்கலத்தில் முதலியார் பிள்ளையைச் சந்தித்தனர். எல்லோரும் நாயகரைத் தரிசித்து ஆராமை மீதூர விம்மி விம்மி நைந்து உருகினர். பொன்னம்பலம் பிள்ளையை வாயார வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டினர்.

நாயகர் சங்கரன் கோயிலில் மீண்டும் தமக்குரிய இடத்தில் எழுந்தருளினார். அந்தச் செயலால் ஆறை அழகப்ப முதலியாரும் பொன்னம்பலம்பிள்ளையும் அதிகாரி, ஏவலரென்னும் முறை மாறி நட்பு முறையிற் பழகலாயினார்.

செய்யுட்களிலும் கீர்த்தனங்களிலும் அந்தப் பட்டப் பெயரைக் காணலாம்.

  • டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்

என்ன வாசகர்களே, இந்த ஒரு பதிவில் தான் எத்தனை நீதி பார்த்தீர்களா? ஒரு பெரிய திருவிளையாடல் மூலம் ஆறை அழகப்பா முதலியாருக்கு இருந்த கர்வத்தை பங்கம் செய்து, அவருக்கும் பொன்னம்பலம் பிள்ளைக்கும் இடையே நட்பை துளிர்க்கச் செய்து, இதன் மூலம் பக்தர்களின் உண்மையான இலக்கணங்களையும் புரியவைத்து அப்பப்பா…

அது மட்டுமா… சமயோசித அறிவுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய பொன்னம்பலம் பிள்ளை உண்மையில் நமக்கெல்லாம் ஒரு மானசீக வழிகாட்டி. அரசரிடம் தான் வந்த நோக்கத்தை எத்தனை அழகாக எடுத்துக்கூறினார் பாருங்கள். ஒரு வார்த்தை மாறியிருந்தால் கூட போன காரியம் கைகூடியிருக்கது.

அடுத்து இந்த சிவபுண்ணியத்தில் தாங்களும் ஈடுபட மற்றவர்கள் நான் நான் என்று போட்டிப்போட்டுக்கொண்டு பொன்னம்பலம் பிள்ளை அவர்களுடன் காவடி எடுத்துச் சென்றது சிலிரிக்க வைத்தது. 

மேலும் பொன்னம்பலம் பிள்ளை அவர்களின் இந்த பணி வெற்றிபெற்றதற்கு மிக முக்கிய காரணம் முருகப் பெருமானும் தான். அவர் இராமநாதபுரத்திற்கு செல்லுகையில் அடியார்களுடன் திருப்புகழ் பாடிக்கொண்டே சென்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, பழனி என்று தண்டாயுதபாணியை தரிசித்து விண்ணப்பம் வைத்துவிட்டு வந்ததும் நினைவுகூரத்தக்கது.

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check :

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *