* மயிலை கும்பாபிஷேகம் குறித்த பதிவும், சம்பந்தர் பூம்பாவையை உயிர்பித்த நிகழ்வின் இரண்டாம் பாகமும் அளிக்க வேண்டியுள்ளது. விரைவில் அளிக்கிறோம். இப்போதைக்கு புத்தாண்டு தரிசனத்தை பார்ப்போம் வாருங்கள்!
புத்தாண்டு தினமான கடந்த வியாழன் (14/04/2016) பிற்பகல் வரை அலுவலகத்தில் பணிகளில் இருந்தோம். அதற்கு மேல் வேலை ஓடவில்லை. பொதுவாக விடுமுறை நாட்களில் வேலை ஓடாது. ஆனால் நாம் ஒரு நொடியை கூட நாம் வீணடிப்பதில்லை. ஆண்டின் துவக்க நாளான அன்று அவசியம் தலைவரை தரிசிக்கவேண்டுமே…. எனவே புத்தாண்டு தரிசனத்திற்காக மாலை மயிலை சென்று கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசிக்க முடிவுசெய்தோம்.
முதலில் மயிலையின் தளவரலாற்றையும் பெயர்க் காரணத்தையும் பார்ப்போம்.
பார்வதி தேவி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.
சிவபெருமானிடம் அன்னை உமையவள் ஒருமுறை ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, “பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய்” என்று சாபம் கொடுத்தார்.
அன்னை ஒரு நொடி கலங்கினாலும், தன் மக்கள் தன்னை வந்து தொழுவதற்கு இது ஒரு வாய்ப்பு என்று கருதி, “இதற்கு விமோசனம் என்ன சுவாமி?” என்று உமையவள் கேட்டபோது, “தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய்” என்று சிவபெருமான் கூறினார்.
அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக ‘கற்பகவல்லி’ என்று பெயர் சூட்டினார்.
உமையவள் இறைவனிடம் “சுவாமி, நான் மயில் உருவில் உங்களை நோக்கி தவம் செய்து உங்கள் கரம் பற்றியதால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும். மேலும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இது தான் திருமயிலை தல வரலாறு.
இனி தரிசன அனுபவத்துக்குள் செல்வோம்…
நாம் சென்ற போது தலைவரை சுலபத்தில் தரிசிக்க முடியவில்லை. கும்பாபிஷேகம் நிறைவுபெற்று மண்டலாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் சரியான கூட்டம். தமிழ் புத்தாண்டு வேறு. கேட்கவேண்டுமா? அவரை பார்க்க சாரை சாரையாக மக்கள் படையெடுத்த வண்ணமிருந்தனர்.
சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.100/- அந்த டிக்கெட்டை வாங்குவதற்க்கே ஒரு க்யூ நின்றுகொண்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
வரிசையில் காத்திருந்த தருணம் யாகசாலை மண்டபங்களில் பொதுமக்கள் கற்களை அடுக்கி வைத்து வீடு கட்டியிருந்ததை காண முடிந்தது. ஆலயங்களில் இது போன்று கற்களை அடுக்கினால் வீடு கட்டலாம் என்று யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஆட்டுமந்தை கணக்காக எதைப் பார்த்தாலும் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை.
ஏதோவொரு ஆலயத்தில் திருப்பணியின்போது அலங்கோலமாக கிடந்த கற்களை அடுக்கிவைக்க, இதை யாரோ எப்போதோ கிளப்பிவிட்டிருக்கவேண்டும். அதை தற்போது கெட்டியாக பிடித்துக்கொண்டு ஆலய செயல்பாட்டுக்கு இடையூறு செய்துவருகிறார்கள். நம் வாசகர்கள் யாரும் இதை செய்யவேண்டாம்.
நாம் வரிசையில் நிற்பதற்கு முன்னதாக ஒரு முறை கோவிலை சுற்றி வந்தோம். பொதுவாக இது போன்ற ஆலயத்திற்கு செல்லும்போது தரிசன முறைகள் விதிகள் இவற்றையெல்லாம் சற்று ஒதுக்கிட்டு புது இடத்தை ஒரு குழந்தை எப்படி பரவசத்துடன் சுற்றி சுற்றி வந்து ரசிக்குமோ அது போல கோவிலை அங்குலம் அங்குலமாக ரசிப்போம்.
கோ-சாலையை பார்க்க நேர்ந்தது. உடனே அங்கு சென்று அங்குள்ள பசுக்களிடம் கொஞ்சம் நேரத்தை செலவிட்டோம். பசுக்களுக்கு ஆளாளுக்கு அகத்திக் கீரை பிஸ்கட், பழங்கள் போன்றவற்றை கொடுத்துக்கொண்டிருந்தனர். நாம் ரெகுலராக செல்லும் கோ-சாலை என்றால் பசுக்களுக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியும். இங்கே எப்போதாவது ஒரு முறை வருகிறபடியால் கோ-சாலைப் பணியாளர்களிடம் கேட்டுவிட்டே எதையும் வாங்கித் தரவேண்டும் என்று விரும்பினோம். அவர்களுக்குத் தான் அவைகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் ஒவ்வாமை இவை பற்றி தெரியும்.
அங்கே ஒரு பணியாளர், ஹோஸ் பைப்பில் தண்ணீர் அடித்து கோ-சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்தார். பார்த்தவுடனே புரிந்தது இவர் ஒருவர் தான் கோ-சாலையை பார்த்துக்கொள்கிறார் என்று. அவரிடம் சென்று “பசுவுக்கு என்ன தரலாம்?” என்று கேட்டபோது, “அகத்திக்கீரை தரலாம்” என்றார்.
“எங்கே கிடைக்கும்? இங்கே வாசல்ல கிடைக்குமா?” என்றபோது “இங்கேயே என்னிடமே இருக்கிறது” என்று உள்ளே அழைத்துச் சென்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த கீரைக்கட்டுக்களை காண்பித்தார். பரவாயில்லை. யாரிடமோ கீரை வாங்கி அவர்களுக்கு லாபத்தை கொடுப்பதைவிட பசுக்களை பார்த்துக்கொள்ளும் இவரிடமே வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி, அவரிடம் இரண்டு கட்டுக்கள் வாங்கி அங்கே சில பசுக்களுக்கு கொடுத்தோம்.
பசுக்களுடன் கொஞ்ச நேரம் கழித்துவிட்டு பின்னர் அவைகளுடன் படம் எடுத்துக்கொண்டோம். ஒரு வகையில் இவர்கள் நம் நண்பர்கள் போல. பரம சாதுக்கள். பசுக்களுடன் நாம் நெருங்கி பழகுவதால் இவைகளுக்கு நம் மீது கொஞ்ச நேரத்திலேயே ஒரு அன்னியோன்யம் வந்துவிடும். (மற்றவர்கள் இவ்வாறு செய்ய முயற்சிப்பது ஆபத்து!)
சில நிமிடங்கள் பசுக்களுடன் கழிந்தது. புறப்படுவதற்கு முன்னர் மீண்டும் அந்த ஊழியரிடம் சென்று “இவங்களை நல்லாப் பார்த்துக்கோங்க” என்று கூறி அவரை உற்சாகப்படுத்திவிட்டு மீண்டும் ஒரு முறை ஆலயத்தை சுற்றி வந்துவிட்டு வரிசையில் இணைந்துகொண்டோம்.
நீண்ட நெடிய வரிசை என்பதால் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. அதனாலென்ன, இந்த கால்கள் எது எதற்கோ காத்திருந்தனவே… சிவனுக்காக சில மணித்துளிகள் காத்திருந்தால் என்னவாகிவிடப்போகிறது… மேலும் சிவதரிசனதிற்காக காத்திருப்பவர்கள், கால் கடுக்க வரிசையில் நிற்பவர்கள் வாழ்க்கையில் தேவையற்ற விஷயங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை வரவே வராது. எனவே கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் வரிசையில் காத்திருந்து தலைவரை தரிசித்தோம். அவ்வளவு நேரம் வரிசையில் நின்ற களைப்பு சோர்வு எல்லாம் அன்னையையும் ஐயனையும் தரிசித்த அந்த தருணம் பறந்தே போய்விட்டது. காத்திருந்து தரிசிப்பதில் உள்ள சுகம் அது. ஆயிரம் சொல்லுங்கள்… சிவதரிசனம் தரும் அந்த மகிழ்ச்சியை மனநிறைவை பிரபஞ்சத்தில் வேறு எதுவும் தரமுடியுமா என்ன? அனுபவித்தவர்களுக்கே அது தெரியும்.
உள்ளே சரியாக அம்பாள் சன்னதிக்கு எதிரே அனைத்து வரிசைகளும் ஒன்று சேரும் இடம் என்பதால் அங்கு கூட்டம் நெருக்கியடித்தது. ஆளாளுக்கு அங்கிருந்தே ஒரே ஒரு செக்யூரிட்டியை அதிகாரம் செய்துகொண்டிருந்தனர். அவர் என்ன செய்வார் பாவம்? இருபது இருபது பேராக உள்ளே விடச் சொல்லி INSTRUCTIONS போல. அவர் கடமையை அவர் செய்துகொண்டிருந்தார். சிலர் அவரிடம் சென்று தங்கள் கோபத்தை காட்டினார்கள்.
பேசும்போது தான் தெரிந்தது… தண்ணீர் குடிக்கவோ இயற்கை உபாதையை தணிக்கவோ கூட அந்த இடத்தை விட்டு நகராமல் காலையிலிருந்து அவர் அங்கு நின்று வரிசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறார் என்பது.
“நான் வேணும்னா தண்ணீர், பிஸ்கட் ஏதாவது வாங்கிட்டு வரவா சார்?” என்றோம்.
“வேணாம்… சார் பரவாயில்லை. நீங்க அப்புறம் மறுபடியும் உள்ளே வரமுடியாது…. நான் சமாளிச்சிக்குறேன்” என்றார். அவர் மட்டுமல்ல, அங்கே நிற்கும் அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்திகள் நிலைமையும் இது தான்.
நாம் நிம்மதியாக நன்றாக இறைவனை தரிசிக்க எத்தனை பேர் எத்தனை விதமான தியாகங்களை செய்கிறார்கள் பாருங்கள்…
தலைவருக்கு என்ன ஒரு அற்புதமான அலங்காரம் தெரியுமா? உள்ளே சென்று தலைவரை அருகே இருந்து தரிசித்த தருணத்தில் சம்பந்தப்பெருமான் இங்கே வந்து கபாலீஸ்வரரை தரிசித்திருக்கிறார், கபாலீஸ்வரரின் அருளால் பூம்பாவையை உயிர்பித்திருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தபோது பரவசம் அதிகரித்தது.
மூலஸ்தானத்தில் நாம் கண்டு ரசித்த அந்த அழகை உங்களுக்கு எப்படி காண்பிப்பது என்று புரியாமல் வெளியே வந்தோம்.
நமது ஆலய தரிசன பதிவுகளை படித்தே சிவதரிசனம் செய்பவர்கள் பலர் உண்டு. Things we are enjoying are mere dreams of many people. Lets thank the ALMIGHTY for his blessings on us. எனக்கு தெரிந்த ஒரு வாசகி. வெளியே செல்ல முடியாத குடும்ப சூழல். தளத்தை பார்க்கமுடியாத தருணங்களில் மொபைலில் கூகுள் மேப்பை பார்த்து அதில் தலங்களின் பெயர்களை பார்த்து தரிசிப்பது போன்று நினைத்துக் கொள்வாராம். இப்படி ஒருவரல்ல பலர் உண்டு. அவர்களுக்காகவே இது போன்ற ஆலய தரிசன அனுபவங்களை பதிவுகளாக அளிக்கிறோம்.
நாம் சர்வசாதரணமாக துய்க்கும் விஷயங்கள் பலருக்கு எட்டாக்கனி. எனவே நாம் அனுபவித்து வரும் விஷயங்களுக்கு ஆலய தரிசனங்களுக்கு இறைவனுக்கு முதலில் நன்றி கூறுவோம்.
எனவே தலைவரின் படத்தை அளிக்காமல் எப்படி நமது தரிசன அனுபவத்தை பதிவாக வடிப்பது என்று புரியவில்லை. யோசித்துக்கொண்டே வெளியே வந்தோம்.
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று அப்பர் பெருமான் கூறியிருப்பதைப் போன்று நமக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
பிரகாரத்தில் பிரதட்சிணம் வந்தபோது நவக்கிரக சன்னதிக்கு நேரெதிரே (சனீஸ்வரர் அருகில்) உள்ள பெரிய மண்டபத்தில் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் உற்சவ மூர்த்தங்களை நன்கு அலங்காரம் செய்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். உற்சவ சிலா மூர்த்தங்கள் என்பதால் கட்டுப்பாடு எதுவிமின்ரி இங்கே பலர் மொபைலில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர். உடனே நாம் நமது காமிராவில் ஆசை தீர புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஹப்பாடா… ஒரு வழி கிடைத்துவிட்டது என்று தோன்றியது.
அடுத்து நண்பர் சுவாமிநாதன் அவர்களின் ‘அம்பாள் மகிமை’ சொற்பொழிவு அங்கு வசந்த மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. புத்தாண்டு அன்று ஒரு நல்ல விஷயம் செய்வோம் என்று கருதி ‘அம்பாள் மகிமை’யை சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து சிரவணம் செய்துவிட்டு திரு.சுவாமிநாதன் அவர்களையும் இறுதியில் சந்தித்து வாழ்த்து கூறி விடைபெற்றோம். பல நல்ல விஷயங்களை சொற்பொழிவில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக புத்தாண்டு அன்று அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்தது போக, அம்மையப்பனை தரிசிக்கும் பாக்கியமும், கோ-சாலையில் சில நிமிடங்கள் செலவிடும் வாய்ப்பும், அம்பாள் மகிமையை சிரவணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
– திருநாவுக்கரசர்
==========================================================
* ஒரு முக்கியமான விஷயம். இந்த மாதம் பல வாசகர்கள் இன்னும் விருப்ப சந்தா (VOLUNTARY SUBSCRIPTION) செலுத்தவில்லை. இந்த ஆன்மீக எக்ஸ்ப்ரெஸ் உங்களை நம்பித் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே வாசகர்கள் மறக்காமல் விருப்ப சந்தாவை நமது கணக்கில் செலுத்தி பணி சிறக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை செலுத்தாத மற்றவர்களும் தளத்திற்கு உதவுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?
லட்சக்கணக்கானோர் திரண்ட மயிலை அறுபத்து மூவர் திருவிழா 2015 – ஒரு புகைப்பட தொகுப்பு!
மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா 2014 – ஒரு புகைப்பட தொகுப்பு!
==========================================================
Similar articles :
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
தமிழ் புத்தாண்டு பதிவு அமர்களம்.
என்னை போன்ற சில பேர் கோவிலுக்கே செல்ல தேவை இல்லாமல் சாமி தரிசனம் செய்தது போல இருந்தது.
அதனால் வரும் எல்லா புண்ணியங்களையும் உங்களுக்கே சமர்ப்பிக்கிறோம்.
தலைவர் படங்களுடன் கோ மாதா படங்களும் அருமை.
தமிழ் புத்தாண்டின் முதல் ஆலய தரிசன பதிவு.
சிறப்பான தொடக்கம். கோபுர தரிசனம் மூலம் அனைவருக்கும் கோடி புண்ணியம் தந்து விட்டது நம் தளம்.
நடைமுறை அளவில் யோசித்து பார்த்தல், மயிலை கும்பாபிஷேகம் செல்ல முடியவில்லை. மண்டலாபிஷேகம் முடிவதற்குள் தரிசனம் கிட்டுமா? என்று ஏங்கியவர்களுக்கு, இந்த பதிவு மூலம் ஏக்கத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள் அண்ணா .
தங்களின் காமிரா கண்களின் மூலம் கோபுர அழகு..பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.
தித்திக்கும் திரு மயிலை தல வரலாறு. நம் தமிழ் நாட்டு மண்ணை என்ன வென்று சொல்வது.? தமிழ் மண்ணில் பிறப்பதற்கே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
தரிசன அனுபவம் எங்களை கட்டி போட்டு விட்டது.கோ – சாலை பதிவும் சேர்த்தது கோடி புண்ணியம் தான்.ஆலய தரிசன பதிவின் சூட்சுமம் பதிவின் இறுதியில் சொன்னது அருமை அண்ணா ..
மொத்தத்தில் சிறப்பான ஆலய தரிசன …ஆன்ம தரிசன பதிவை அளித்து விட்டர்கள் அண்ணா ..
மிக்க நன்றி அண்ணா ..
டியர் சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம்
தமிழ் புத்தாண்டில் மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் தரிசனம் கிடைக்கபெற்று மகிழ்ந்தோம் .எல்லா புண்ணியமும் உங்களையே சேரும் .
ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு போல இருக்கிறது.
கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு பார்க்க முடியவில்லை என்கிற ஏக்கம் தீர்ந்துவிட்டது. கோவில் கோபுரம், பக்தர்களின் கூட்டம், கோ-சாலை, உற்சவ விக்ரகங்கள் என இந்த பதிவு எங்களுக்கு புத்தாண்டு விருந்து.
கோ மாதாவுடன் நீங்கள் இருக்கும் புகைப்படம் அற்புதம். பசுக்கள் தான் உங்களுடன் எவ்வளவு அன்புடன் பழகுகின்றன.. இதெல்லாம் உண்மையில் ஒரு வரம் தான்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்