Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

print
நாளை (19/03/2015) பங்குனி சதயம். 63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகளின் குருபூஜை. (அவர் இறைவனோடு கலந்த நாள்.) எந்த நாயன்மாருக்கும் இல்லாத சிறப்பு தண்டியடிகளுக்கு உண்டு. இவர் பார்வையற்றவர். (காலம் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி). நாம் ஏற்கனவே கூறியது போல உண்மையான ‘சமூகநீதிக் காவலர்’ நம் தலைவர் சிவபெருமான் தான்.

63 MOOVAR

எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் அனைத்து வர்க்கத்தினருக்கும் தனது அருளை வாரி வாரி வழங்கி அவர்களை ஆட்கொண்டு, இந்த உலகையே அவர்களை வணங்கச் செய்திருக்கிறான் என்றால் அவன் பெருந்தன்மையை என்ன சொல்ல? வேதம் ஓதும் அந்தணர் முதல் மீன் பிடிக்கும் மீனவர் வரை அனைத்து வர்க்கத்தினரும் அவர் மீது பக்தி செலுத்தி அவனது அருளை பெற்றதோடு நாயன்மார்களாகவும் உயர்ந்து சிவாலயங்களில் இடம் பிடித்துவிட்டார்களே! சிவனை வணங்குவோர் என்ற பெருமிதம் ஒன்றே போதும் நம் அனைவருக்கும் இந்த வாழ்வில்!!

தண்டியடிகளின் தூர் வாரும் தொண்டும் – இறைவன் புரிந்த திருவிளையாடலும்!

திருவாரூர் என்றாலே அதன் கமலாலயத் திருக்குளம் தான் நம் கண்முன்னே நிற்கும். இந்தக் குளத்தை, தூர்த்து விடத் துணிந்தனர் துட்டச் சமணர்கள். இந்த நிலை மாற்ற திருவாரூரில் யாருமே முன் வராத போது, செங்குந்தர் இனத்தை சேர்ந்த பிறவிக் குருடர் ஒருவர் அதற்கு முற்பட்டார். அவரே தண்டியடிகள்.

சிவச் சின்னமாம் திருக்குளம் அழிவது மட்டும் அல்லாது ஊரின் நீர் ஆதாரம் அற்றுப் போகும் அவல நிலையை பிறர் சொல்லக் கேட்கும் தண்டியடிகள், குளத்தைத் தூர் வாரும் முயற்சியைத் தனியொருவனாகத் தானே மேற்கொண்டார்.

Dandi Adigal F

பிறவியிலேயே கண்ணிலாத இவர் எடுத்த முயற்சியைக் காணுங்களேன். குளத்தில் ஒரு கொம்பை நடுவார். அதில் ஓர் நீளமான வலுவுடைய கயிறைக் கட்டி அந்தக் கயிற்றின் மறுமுனையைக் கரை மேட்டில் நட்ட இன்னொரு கொம்பில் கட்டுவார். மண்வெட்டியால் குளத்தை வெட்டி, அந்த மண்ணை கூடையில் கொட்டி, அதைத் தலை சுமந்து, கயிற்றின் வழி கைபிடித்து, கரையேறி மண்ணை வெளிக் கொட்டுவார். இப்படிக் காலை முதல் மாலை வரை  கொம்புகளை இடம் மாற்றி நட்டு குளம் முழுமையும் தூர் வாரும் திருப்பணியை, அயர்வின்றி, அஞ்செழுத்தின் துணையோடு, எடுத்த பணியில் ஈர்ப்போடு செய்வார். இவ்வாறு பல நாட்கள் செய்து வந்தார்.

இவரது பணி எங்கே தொடரப் போகிறது என்று ஆரம்பத்தில் எண்ணிய சமணர்கள், சீராய், தெளிவாய், தடங்கலின்றி இப்பணி நாளும் தொடர, தாம் ஏற்படுத்திய சமணப் பாழிகள் (தங்கும் மண்டபங்கள்) நீரேறி அழிந்து விடும் என்று அஞ்சித் திருப்பணி புரியும் தண்டியடிகளை ஒருநாள் தடுத்தனர்.

Thiruvarur Kamalalayam 2+

சமணர்கள் எள்ளி நகையாடி, “வெட்டும் மண்ணால் உயிரிழக்கும் மண்புழுவும் மற்றைய பூச்சிகளுமாய் உயிர்க் கொலை புரிகிறாய். நாளும் இறக்கும் பூச்சி புழுக்களை பற்றி எண்ணாது, இந்த வேலையைத் தொடர்கிறாய். இப்பணி எங்கள் சமயத்துக்கு எதிரானது” எனப் பல்வேறு பட்ட திறத்தில் பலர் சேர்ந்து தடுத்தனர்.

Thiruvarur Kamalalayam 1

“இறைவனுக்கு செய்தொண்டு திருக்குளம் தூர் வாருதல். தூர்வாரும் குளத்தில் நீர் பிடித்திறன் அதிகமாகும். சுற்றியுள்ள ஊர்களுக்கு நீராதாரம் தரும். இச்செயல் மகேசனுக்கும், மக்களுக்கு உவப்பானது. என்னைத் தடுக்கிறார்களே நான் என் செய்வேன். இறைவா நீ எனக்கு உதவ மாட்டாயா” என்று கலங்கி இறைவனிடம் முறையிட்டார்.

தான் கொண்ட முயற்சியில் தளராத தண்டியைத் தாக்கிய சமணர்கள். மண்வெட்டி, கூடை, தறிக்கொம்பு, கயிறு இவைகளைப் பறித்துத் தூர எறிந்தனர். தண்டியடிகளுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. “நான் எம்பெருமானுடைய திருவருளினால் கண் ஒளி பெற்று நீங்கள் அனைவரும் ஒளி இழந்தீர்களானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“அங்ஙனம், நீர் கண் பெற்று நாங்கள் கண்ணை இழக்க நேர்ந்தால் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம். ஊரைவிட்டே ஓடிவிடுகிறோம் என்று ஆத்திரம் மேலிடக் கூறினர்!”

தண்டியார் தன் இருப்பிடம் சென்றார். களைப்பில் கண்ணயர்ந்தார்.

தூங்கிய தண்டியார் கனவில் இறைவன் தோன்றினான். அவரது கலக்கத்தை நீக்கி “உம்மைப் பழித்தது எம்மை பழித்தது போலவே! எமக்கு நீவிர் செய்யும் திருத்தொண்டு இடையறாது நடக்க உமது கண்களுக்கு ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம்” என்று கூறி மறைந்தான்.

இது போன்றே சோழ மன்னன் கனவில் காட்சி தந்த இறைவன் அரசனுக்குத் தண்டியாரையும் அவரது செயலையும், அதன் பயனையும், இது தடுக்கும் சமணர் நிலையையும் கூறி அடியருக்கு உதவப் பணித்தான்.

இறைவனது ஆணை கேட்டுத் திடுக்கிட்ட அரசன், உடன் எழுந்து தண்டியார் தேடி அவர் இல்லம் வந்தான். தண்டியடிகளைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி அவரது பணியை தானே தொடர்வேன் என்று சொல்லி இருவருமாய் குளத்திற்குச் சென்றனர்.

Thiruvarur Kamalalayam 11

Thiruvarur Kamalalayam 4

மன்னன், தவநெறிமிக்க தண்டியடிகளை பார்த்து, “நீர் எம்மிடம் மொழிந்ததுபோல் எம்பெருமான் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராகுக!” என்று பயபக்தியுடன் கேட்டான்.

குளமிறங்கிய தண்டியடிகள், இறைவனை நோக்கி “எனது வாழ்நாளில் சிவனாகிய உன்னை வணங்கியதும், மனதார நான் செய்த திருப்பணியும் உலகோர்க்கும், இறைவனாம் உனக்கும் சரியென்றால், இதில் தவறேதும் இல்லை என்பது உண்மையானால், எனக்கு கண் தருவாய்” எனக் கூறித் திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார்.

என்ன அதிசயம்! சுற்றி நிற்கும் அரசன், அவனது பரிவாரங்கள் வேடிக்கை பார்க்கும் மக்கள், மயிர் பறித் தலையுடன், சூழ்ந்து நிற்கும் அம்மணச் சமணர்கள் என இவர்கள் துணுக்குறவும், திடுக்கிடவும், தண்டியடிகள் “கண்ணொளியைப் பெற்றேன்” என்ற களிப்பில் கரம் கூப்பி இறைவனை வணங்கி, கால் வீழ்ந்து கூத்தாடினார்.

தண்டியார் கண் பெற்ற நிலையறி சமணர்கள், அஞ்சி வீழ்ந்து, அதிர எழுந்து நாற்புறமாய் சிதறி நகர் விட்டே ஓடினார்கள். மேலும் அவர்கள் பார்வை பறிபோனது. அரசனும் திருப்பணி சிறக்க மிக்க மகிழ்வுடன், ஆங்கிருந்த பாழிகளை அகற்றி, அழகுக் குளமாக, கமலாலயம் காலமெலாம் விளங்கச் செய்தான்.

Thiruvarur Kamalalayam 6

இறைவனது தண் கருணை, தண்டியடிகளுக்கு கண்ணைப் பெற்றுத் தந்தது. மக்களுக்கு கமலாலயத்தைத் தந்தது. இன்றும் இதைப் பேசும் மகிழ்வை நமக்குத் தந்தது. நாட்டமிகு தண்டியை என்றும் நாட்டமுடன் நினைவு வைக்க நல்லதே நாடெங்கும் ஆகும்!

உலகம் வெப்பமாகிறது என்ற ஓலம் நாளும் ஓங்குகிறது. மக்கள் கூட்டம் மிகப் பெருக, நிலத்தடி நீரும், மழை வளமும் குறைய காடுகள் காணாமல் போக, மக்கள் இயற்கையை மறந்ததே காரணம் என்றாலும், மீறும் வகையில் இறைவனை எண்ணி இப்படிப்பட்ட திருப்பணிகளால் நீராதாரம் பெருக்கி, நிலத்தடி நீரைக் கூட்டினால் இது இறைவனுக்கும், இயற்கைக்கும், வாழும் நமக்கும் வளம் கூட்டும். புதிதாகக் குளங்களை வெட்டாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கும் குளங்களையேனும், தூர்க்காதீர்கள். அவைகளை வாழும் குடியிருப்புகளாய் மாற்றாதீர்கள் என்ற செய்தியைத் தான் தண்டியடிகள் வரலாறு நமக்குச் சொல்ல வருகிறது.

Thiruvarur Kamalalayam 9

ஒவ்வொரு தனிமனிதனும், அவரவர் பாங்காக இப்படியாம், முயல்வுகளில் ஈடுபட, இவ்வுலகம் நல்லெண்ணத் தோப்பாகும், நாடும் மலர்க் காவாகும். மனிதம் பூத்துக் குலுங்கும், இறை நேயம் எங்கும் விளங்கும். அறுபத்து மூவரில் தண்டியார் நாம் பின்பற்ற நல்ல ஓர் வழிகாட்டி. இச்செய்திகளை நாம் உலகில் விரிப்போம்!

(தண்டியடிகள் சரிதம் முற்றும்)

===================================================

தான் எழுதிய அறுபத்துமூவர் வரலாறு + கவிதை நூலை நமக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவ.முத்துராமலிங்கம் அவர்கள்
தான் எழுதிய அறுபத்துமூவர் வரலாறு + கவிதை நூலை நமக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவ.முத்துராமலிங்கம் அவர்கள்

மேற்படி தண்டியடிகளின் வரலாறும் கடைசியில் நாம் அளித்திருக்கும் இரண்டு பாடலும், அறுபத்து மூவர் வரலாற்றினை நாட்டிய நாடகங்கள் வாயிலாக பரவச் செய்து வரும் (குறிப்பாக கிராமப்புறங்களில்) கவிஞர் சிவ.முத்துராமலிங்கம் அவர்களின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை.

சமீபத்தில் இவருடனான சந்திப்பு நமது அலுவலகத்தில் நடைபெற்றபோது நமக்கு மேற்படி நூலை பரிசளித்தவர், நூலிலிருந்து எந்த பகுதியை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நம்மிடம் பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். திரு.சிவ.முத்துராமலிங்கம் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!

==============================================================

அடியார்களை இகழ்ந்தவர்களை காலில் விழச்செய்வான் எந்தை ஈசன்!

பக்தனை தூக்கி விடுவது மட்டுமின்றி அவன் புகழை உலகறியச் செய்து அவனை இகழ்ந்தவர் அனைவரையும் அவன் காலில் விழச் செய்து வேடிக்கை பார்ப்பதே சிவபெருமானின் வழக்கம்.

தண்டியடிகளின் தொண்டை பற்றி படிக்கும்போது, உடலெல்லாம் சிலிர்க்கிறது. திருக்கோவில் குளங்கள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் சென்ற பிரார்த்தனை பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம் என்பது நினைவிருக்கலாம். தண்டியடிகள் ஒற்றை ஆளாய், கமலாலயக் குளத்தை சுத்தம் செய்ய எடுய்த்துக்கொண்ட முயற்சிகள், உண்மையில் நம் அனைவரையும் வெட்கப்படவைக்கும் ஒன்றாகும்.

கண்ணிருந்தும் குருடராய் இந்த உலகில் நாம் வாழும்நிலையில், கண்கள் அற்ற நிலையிலும் சிவாலய திருக்குளத்தை சீர்திருத்தும் அவர் தொண்டை பற்றி படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

Thiruvarur Kamalalayam 7

திருவாரூரின் திருஞானசம்பந்தன் என போற்றப்படும் குறள்மகனை நமது தளத்தின் ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்காக நாம் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திக்க சென்றபோது, திருவாரூர் தியாகேசர் ஆலயத்தையும் கமலாலய குளத்தையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Thiruvarur Kamalalayam 5

இறைவன் தண்டியடிகளுக்கு காட்சி கொடுத்ததாக கூறப்படும் இடத்தை பற்றிய அறிவிப்பை பார்த்தவுடன், நமக்கு உடலெல்லாம் சிலிர்த்தது. அந்த இடத்தில் ஒரு கணம் நின்று பிரார்த்தித்துவிட்டு பின்னர் குளத்தில் இறங்கி, சுற்றிப் பார்த்து பரவசமானோம்.

Thiruvarur Kamalalayam 10

கமலாயல குளத்தின் சிறப்புக்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அது பற்றி தனிப் பதிவே போடவேண்டும். மிக மிக பெரிய குளம் இது. ஒற்றை மனிதராக பார்வையற்ற தண்டியடிகள் இதில் இறங்கி தூர் வாரும் பணியை செய்தார் என்றால் அவரது வைராக்கியமும் சிவத்தொண்டுக்கு என்று தன்னை அற்பணித்த அந்த தியாக உணர்வையும் என்ன சொல்லி பாராட்டுவது?

அவரின் புனித சரிதத்தை இன்று படிக்க நேர்ந்த நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் என்று மட்டும் நம்மால் சொல்லமுடியும்.

எதையும்  அடையலாம் எழுச்சியில் உயிர்த்து
இதயத்து என்றும் வாழ ஏற்ற நிலை எய்தி,
சதயப் பங்குனியில் சகம் விட்டுச் சாதித்த,
கதையிதனைக் காதுறல் மிக நன்று!   

நோட்பது சிவனென்றால் கேட்பது பெறலாமே!
நாட்டமிலாத் தண்டிக்கு நாடியது தந்து,
வாட்டமிலா வாழ்வுதனை வல்லவனே வகுத்தான்!
நாட்டமிகு தண்டிக்கு நாளும் நான் அடியன்!

==============================================================

Also check :

அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்த கதை!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

==============================================================

[END]

15 thoughts on “தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

  1. நம் எல்லாம் ஒன்றும் இல்லை. தண்டி அடிகள் அவர்கள் திரு பாதம் போற்றி.

    இனி முடிந்த வரை நம்மால் ஆன உதவி என்ற வார்த்தை வேண்டாம். கைங்கர்யம் சைய்வோம்.

    நன்று.

    கே. சிவசுப்ரமணியன்

  2. தண்டி அடிகளின் குரு பூஜை அன்று அவரைப் பற்றிய சரிதத்தை நான் படித்தது நான் செய்த புண்ணியம். கண்ணிலாமலே அவர் இறைவன் மேல் உள்ள பற்றால் குளத்தை தனி ஒருவாறாக செய்து இருப்பதை படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.

    நாமெல்லாம் கண்ணிருந்தும் குருடர்கள்.

    கமலாலய குளம் தண்ணீருடன் பார்க்க கொள்ளை அழகு.
    கடைசி இரண்டு பாடல்களும் அருமை. திரு சிவமுத்து ராமலிங்கம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அவரை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    நம் சென்னையில் பல குளங்கள் காணமல் போய் விட்டது. 10 வருடத்துக்கு முன் வேங்கீஸ்வரர் வடபழனி கோவிலுக்கு முன் ஒரு பெரிய குளம் பார்த்த ஞாபகம். இப்பொழுது அந்த குளம் எங்கே என்று தெரியவில்லை இது மிகவும் வருத்தற்குரிய விஷயம்.

    நாமும் நம் உழவாரப் பணியின் பொழுது எதாவது ஓர் குளத்தை தூர் வார்வதற்கு ஏற்பாடு செய்யவும்

    //நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும்அடியேன் //

    நன்றி

    உமா வெங்கட்

  3. தண்டியடிகளாரின் பெருமையை சமீபத்தில் வேறொரு தளத்தில் படிக்க நேர்ந்தது.ஆனால் நம் தளத்தில் படிக்கும் போது தான் பதிவின் உயிரோட்டத்தை உணரமுடிகிறது.
    எவவளவு வித்தியாசம்.

    திரு சீதாராம் அவர்கள் கூறியது போல், தங்கள் பதிவுகள்
    ஒவ்வொன்றும், ஒன்றை ஒன்று மிஞ்சூம் வகையில் மெருகு கூடி கொண்டே செல்கின்றன.

    தங்களக்கு கலைமகள் சரஸ்வதியின் அனுகிரகம் பரிபூரணமாக உள்ளது. வாழ்த்துகள்.

    தங்கள் பதிவு போல தாங்களும் ஸ்மார்ட்டாக உள்ளீர்கள்.

  4. ஒவ்வொரு நாயன்மாயர்களின் குரு பூஜை அன்றும் அவர்களது சரிதத்தை நம் தளம் மூலம் படிக்க மிகுந்த ஆவல்/ தயவு செய்து பதிவாக எழுதவும்.

    ”நாயன்மார்கள் வரலாறு ” என்றே ஒரு தலைப்பு உருவாக்கவும். ஆன்மிகம், சுயமுன்னேற்றம்,…. என்பது போல் . இது என் தாழ்மையான வேண்டுகோள்.

    இந்த பதிவை படித்த பிறகு திருவாரூர் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மிகவும் அருமையான நடை

    நன்றி
    உமா வெங்கட்

  5. சுந்தர்ஜி
    இந்த கால குழந்தைகள் இந்த வரலாறு படித்து நாயன்மார்களின் சிறப்பை தெரிந்துகொளவேண்டும்

    பதிவு மிகவும் சூப்பர்

    நன்றி

  6. சுந்தர் அண்ணா..

    தண்டியடிகள் பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி..

  7. தண்டியடிகள் பதிவு மிக அருமை.
    உங்கள் பதிவு மட்டுமல்ல எந்த ஒரு வாசிப்பும், பேச்சும் என்னிடம் உள்ளத்தில் இருந்து தான் வரும்.
    எல்லா பதிவுமே ஒரு நாடககாட்சி போல ஒரு பார்வையாளராக இருந்து படிப்பேன்.
    அதிலும் இந்த பதிவு தண்டியடிகள் அவர்களின் காலத்திற்கே போய் படிக்கும் உணர்வை ஏற்படுத்தியது.
    குருங்கலீஸ்வரர் கோவில் 63 நாயன்மார்கள் படம் முதல் எல்லா படங்களும் அருமை.
    தண்ணீர் நிறைந்த குளத்தை பார்க்கும் போது மனம் சந்தோசம் மிக அடைகிறது.
    தனி ஒருவராக அவர் தூர் வாரிய நிகழ்ச்சியை கற்பனை பண்ணி நம் மன கண்ணால் காணும் போது அதுதான் சிவபக்தி என் நம் கண்ணில் நீர் நிறைகிறது.
    அவர் பணி செய்த குளத்தை நாம் காணும் பாக்கியம் கொடுத்ததே நம் அப்பன் நமக்கு கொடுத்த பெருமிதம்.
    சிவனுக்கு காத்திருந்தால் வேறு எதற்கும் காத்திருக்க தேவை இல்லை என்பார்கள் எனவே நாம் காத்திருப்போம் கமலாலய குளம் காணுவதற்கு.
    விரைவில் நம் ஆசிரியர் ஒரு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்வர் என வாசகர்கள் சார்பில் உறுதி கொடுக்கிறேன்.
    நன்றி

    1. மேலே உள்ள நாயன்மார்கள் படத்தை பார்க்கும் பொழுது, நாம் அங்கு உழவாரப்பணி செய்தது என் கண் முன்னே நிற்கிறது

      நன்றி
      உமா வெங்கட்

  8. சுந்தர் ஜி
    அருமயான தகவல் தங்களின் எழுத்தில் இறைவனை கண் முன் நிற்பது போன்று உள்ளது . உங்களது பணி சிறக்க என் வாழ்துக்கள்

  9. இது ஏதோ சாதாரண பதிவல்ல ….இந்த நேரத்தில் யாருக்கோ இறைவன் கொடுத்திருக்கும் முக்கிய உத்தரவு அல்லது சாட்சி …இதை உணரமட்டுமே முடியும் ….அவர்களுக்கு இது சேரும் . நன்றி

  10. Very inspiring article showcasing the need for conserving the water bodies and the greatness of selfless service and true bhakthi,

    Even if each one of us can take 3 handful of sand from waterbodies whenever we go on pilgrimage that is a great service, This is something that is mentioned in our sasthras and was insisted by Sri Sri Sri Mahaperiyaval, which is not being followed by us.

  11. தண்டியடிகள் திருப்பாதங்கள் சரணம்…….. நாமும் நம்மால் இயன்றவரை திருக்குளங்களைத் தூர்வாரும் பணியை மேற்கொள்வோம்……..

  12. வாழ்க வளமுடன்

    கண்ணிள்ளதவருக்கு உள்ள தொலைநோக்கு பார்வை கண்ணிருந்தும் நம்மிடம் இல்லை

    வெட்கபட வேண்டிய செயல்

    நீரின்றி அமையாது உலகு

    கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்று சொல்வதின் அர்த்தம் இதுதான் , கோவில் இருந்தால் அங்கு குளம் இருக்கும் என்பதால்தான் , அனால் இன்று குளம் எல்லாம் குப்பை மேடாக இருகின்றது , மக்களும் , அரசும் முயன்றால்தான் இதனை காப்பாற்ற முடியும் .

    நன்றி

  13. வணக்கம் சுந்தர். இதுவரை படித்தறியாத கதை அறியதந்தமைக்கு நன்றி .நீர் நிலைகளை நாம் பாதுகாக்கும் விதம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை . நன்றி

  14. தண்டி அடிகள் பார்வை இல்லாவிட்டாலும் தனி ஒருவராக தூர் வாரி நல்லது செய்தார். இந்த தலைமுறை ….(படத்தை பார்த்தாலே தெரியும்). நீர் நிலைகளில் எதெல்லாம் செய்யக்கூடாதோ, அது அனைத்தையும் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *