திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக் கொண்டிருந்தது.
முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !
“பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
“ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!”
“உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.
பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.
பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்… அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
(மேற்படி சம்பவத்தை முதன்முதலில் வெளியுலகிற்கு சொன்னவர் ‘மகா பெரியவா மகிமை’ புகழ் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள். அவருடைய ‘மகா பெரியவா’ நூலில் புகைப்படத்துடன் இந்த நிகழ்ச்சி அற்புதமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 19 வது அத்தியாயமாக இது வருகிறது. இந்த நூலை வேண்டுவோர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இங்கு வெளியிடப்பட்டிருப்பது சற்று சுருக்கப்பட்ட பதிவு. எழுத்துரு உதவி : balhanuman.wordpress.com)
====================================================================
படித்து முடித்ததும் இந்த சம்பவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சீதேவைப் போல உங்களில் எத்தனை பேருக்கு கண்ணீர் பெருகி ஓடியது என்று நமக்கு தெரியாது. ஆனால் நாம் இதற்கு முன்பு முதன்முதலில் இணையத்தில் இதை படித்தபோது நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. மீண்டும் பால்ஹனுமானில் படிக்கும்போதும் அப்படித் தான்.
எத்தனை முறை இந்த பதிவை படித்திருப்போம் என்று தெரியாது. குறைந்தது ஒரு நூறு முறையாவது இருக்கும்.
மேற்கூறிய இந்த நிகழ்வு தான் நமக்கு உணர்த்தும் பாடங்கள் எத்தனை. மீண்டும் மீண்டும் படியுங்கள். புரியும். தெளிந்த நீரோடை போல வாழ்க்கையிருந்தால், எந்த சூழ்நிலையிலும் மாறாத கடவுள் பக்தியும், குருபக்தியும் இருந்தால் அற்புதத்துக்கு அங்கே குறைவேது?
மஹா பெரியவா அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒவ்வொன்றும் நமது உள்ளத்தை உருக்கி அழவைத்துவிடும் என்பது அவரது அடியவர்கள் அனைவருக்கும் தெரியும். “நாமெல்லாம் என்ன பக்தி செய்கிறோம்? இப்படி ஒரு அருளுக்கு என்றைக்கு பாத்திரமாகப் போகிறோம்?” என்கிற ஏக்கம் வந்துவிடும்.
அடுத்து இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருக்கும் நடுக்காவேரிக்கு சென்று பெரியவாவின் ஞானதிருஷ்டியில் உதயமாகி அருள்பாளித்துவரும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது அல்லவா?
நமக்கும் அதே ஆவல் தோன்றியது. “இவர் தான் அந்த காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!” என்று உங்களிடம் அந்த கோவிலின் புகைப்படத்தை காட்டினால் உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும்? அந்த மகிழ்ச்சியை நாமும் அனுபவித்து உங்களுக்கு அதை தரவிரும்பினோம். நடுக்காவேரி கணபதியை உடனே தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் பொங்கி வழிய உடனடியாக அதை செயல்படுத்தியும் விட்டோம்.
இதோ பெரியாவாவின் கருணா கடாக்ஷத்துக்கு சாட்சியாக நிற்கும் இது தான் அந்த கோவில். இந்த காவிரிக்கரை காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் தோன்றிய இந்த நிகழ்வு இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த கோவிலின் புகைப்படம் இதுவரை எங்கும் வெளியானதில்லை.
இதோ நம் வாசகர்களுக்காக நாமே நேரில் சென்று எடுத்தது.
ஆம்…நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பெற்றோருடன் கிளம்பி, மறுநாள் நடுக்காவேரிக்கு சென்று அங்கு காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசித்துவிட்டு அப்படியே திருவையாறு சென்று ஐயாறப்பரையும், அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்தோம்.
மகாபெரியவா தொடர்புடைய ஆலய தரிசனம் என்றால் அற்புதத்துக்கு குறைவிருக்குமா என்ன?
காவிரிக்கரை கணபதியை நாம் சந்திக்க சென்ற போது நடந்தது உண்மையில் சிலிர்க்க வைப்பது. நம்மையெல்லாம் நெகிழ்ச்சியில் கதறி அழவைப்பது. மிகையில்லை. உண்மையிலும் உண்மை என்பதை இந்த பதிவின் தொடர்ச்சியில் பார்க்கப்போகிறீர்கள்.
(Please check the continuation in below article Part II)
==========================================================
Part II :
நடுக்காவேரியில் அன்னையும் பிள்ளையும் குருவும் நமக்காக நடத்திய ஒரு திருவிளையாடல்!
==========================================================
[END]
டியர் சுந்தர்ஜி
இன்றைய really superb. நிஜமாகவே கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.
டியர் சுந்தர்ஜி
இன்றைய really superb. நிஜமாகவே கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.
///மஹா பெரியவா அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒவ்வொன்றும் நமது உள்ளத்தை உருக்கி அழவைத்துவிடும் என்பது அவரது அடியவர்கள் அனைவருக்கும் தெரியும். “நாமெல்லாம் என்ன பக்தி செய்கிறோம்? இப்படி ஒரு அருளுக்கு என்றைக்கு பாத்திரமாகப் போகிறோம்?” என்கிற ஏக்கம் வந்துவிடும்.//
எங்களுக்கும் நடுக்காவேரிக்கு சென்று பெரியவாவின் ஞானதிருஷ்டியில் உதயமாகி அருள்பாளித்துவரும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகிறது.
உங்கள் அடுத்த பதிவை வெகு விரைவில் எதிர்பார்கிறோம்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா
காலை வணக்கம் உமா மேடம் .
நான் T N P S C ( குரூப் 2 ) டெஸ்ட் கு படித்து வருகிறேன்.
( மே 18 டெஸ்ட் எழுத போகிறேன் ).
வரும் வெள்ளி முதல் செய்ய போகிறேன். குரு சரித்திர பற்றி
விபரம் கொஞ்சம் தேவை படுகிறது. தயவு செய்து
எந்த மாத கட்டுரை ல் வந்து உள்ளது என கூறினால்
நல்லா இருக்கும்.
1 ) லக்ஷ்மி பூஜா செய்வது எப்படி ?
2 ) நான் தினமும் வேலைக்கு சென்று இரவு 8.00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன். லக்ஷ்மி பூஜா இரவு 8.00 மணிக்கு செய்யலாமா ?
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
ரொம்ப ரொம்ப நன்றி.
– ராஜா
மகா பெரியவாளின் அருளைதவிர வேறு என்ன வேண்டும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் சாட்சாத் பரமேஸ்வரனின் அம்சம் அல்லவா மகா பெரியவர். எப்போதும்போல் இந்தமுறையும் படித்தவுடன் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர். எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் சீதாலக்ஷ்மி ராமச்சந்திரன் தம்பதியர். காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் புகைப்படம் மற்றும் தகவல்கள் அருமை. மீண்டுமொரு நற்பதிவிர்க்கு நன்றி சுந்தர்.
சுந்தர் சார் வணக்கம்
மெய்சிலிருக்கும் நிஜம் சார்
அடுத்த பதிவை எதிர்பார்கிறோம்
நன்றி
தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – அது மஹா பெரியவ அவர்களை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
மஹா பெரியவா அவர்களின் ஒவ்வொரு அற்புதமும் நமக்கு பாடம்.
கடவுள் இல்லையோ என்று நாம் மனம் நொந்து இருக்கும் நேரத்தில் கூட மஹா பெரியவா அவர்களை பார்க்கும் போது நடமாடும் தெய்வம் அவர் ரூபத்தில் உள்ளது நமக்கு தெரியும்.
அவர் தலைப்பில் வரும் அவரை பற்றிய எல்லா பதிவுகளும் நமக்கு கண்ணில் நீரை வரவைத்துவிடும்.
இந்த பதிவும் அது போல கண்ணில் நீரை வர வைத்தது.
சீதாலக்ஷ்மி அவர்களுக்கு பிள்ளை வரம் கொடுத்த கடவுள்.காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் புகைப்படம் மற்றும் தகவல்கள் அருமை. நன்றி சார்.
சுந்தர் சார் மாலை வணக்கம் …… மகாகணபதி கோவில்கள் மற்றும் புகை படங்கள் மிக அருமை …..எங்களுக்கும் நடுக்காவேரிக்கு சென்று பெரியவாவின் ஞானதிருஷ்டியில் உதயமாகி அருள்பாளித்துவரும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகிறது…….உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்கிறோம்……… நன்றி தனலட்சுமி …….
கருணைக் கடல் …கற்பகத் தரு
மானுடம் உய்யவந்த உத்தமர்
எளிமைக் கோலம்
பார்த்தவருக்கு ஏற்றம் தரும் பார்வை
நினைப்பவர் நெஞ்சில் நின்று அருளும் தெய்வம்
குறை அறிந்து கொடுக்கும் தெய்வம்
குருவே சரணம் ! இறைவா சரணம்!!
சுந்தர்ஜி,
அருமையான படைப்பு. நம்மையும் அறியாமல் எபோதும் போல் கண்ணீர் வழிகின்றது. காவிரிக்கரை கோயில்
மிகவும் அருமை.
ரொம்பவும் sunspense வைகின்றீர்கள். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.
இன்று காலையில் விநாயகர் கோவிலில் விநாயகப்பெருமானை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள் நைவேத்யம் மற்றும் பூஜை செய்யாமல் ஒருநாளும் இருக்கலாகாது என குருக்கள் சொன்னார். உங்களின் பதிவை படித்தவுடன் விநாயகப்பெருமான் மறுபடி எனக்கு சொன்னதுபோல் தோன்றியது.
\\ மகாபெரியவா தொடர்புடைய ஆலய தரிசனம் என்றால் அற்புதத்துக்கு குறைவிருக்குமா என்ன? \\
ஆலய தரிசனம் தொடரில் ஆலயத்தின் தோற்றம் & தகுந்த புகைப்படங்களின் அணிவகுப்பு .எழுத்து நடை அருமை .
நிச்சயம் அடுத்தமுறை தங்களுடன் நானும் ,இந்த புன்னியமிகுந்த நடுக்காவேரி கணேசனை தரிசிக்க அந்த பெரியவா எனக்கும் அருள் புரிய வேண்டிக்கொள்ளவும் .
-நன்றிகளுடன்
மனோகர் .