கலியுகத்தில் தீமைகள் மலிந்திருக்கும் சூழ்நிலையில் கோ-சம்ரட்சணமானது கைமேல் புண்ணியத்தை தரக்கூடிய ஒரு பரம ஔஷதம். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கிரக லட்சணம்… கோ சம்ரட்சணம் என்று ஒரு சொல்வழக்கே உள்ளது. தற்போதைய காலகட்டங்களில் இந்த உயர்ந்த தொண்டில் அரசியல் புகுந்து இதை சிறுமைப்படுத்தி வரும் வேலையை சிலர் செய்துவருகிறார்கள். பசுவை மற்ற விலங்கோடு ஒப்பிடுவதே பெரும் பாவம் என்று நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். பிரம்மஹத்தி தோஷத்தை கூட போக்கிக்கொள்ள வழியுண்டு. ஆனால் கோ-ஹத்தி தோஷத்தை போக்கிக்கொள்வது அத்தனை எளிதல்ல.
நமது ரைட்மந்த்ரா தளத்தை பொறுத்தவரை மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதர் கோவில் கோ சாலைக்கும், தி.நகர் சுப்ரமணி தெருவில் உள்ள வேத பாடசாலையில் உள்ள கோ சாலைக்கும் பிரதி மாதம் தீவனம் அளிக்கப்பட்டு வருகிறது. நூம்பல் கோவில் கோ-சாலைக்கு தீவனம் அளித்து வந்தது சில பல காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. நமது தொடர் கண்காணிப்பில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் தான் எங்குமே கோ-சம்ரட்சணம் தொடர்ந்து செய்யப்படும்.
மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் பசுக்கள் பெருகி இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த சில பசுக்கள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த கோ சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மூன்று பசுக்கள் உள்ளன. இருப்பினும் இங்கு பசுக்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதால் இங்கு முன்பு செய்த அளவிலேயே தொடர்ந்து கோ-சம்ரட்சணம் செய்யப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.
இதற்கிடையே நூம்பல் கோவில் நிறுத்தப்பட்டதால் கோ-சம்ரட்சணம் செய்ய மற்றுமொரு இடத்தை தேடி வந்தோம். தொடர் தேடலின் பயனாக சரியானதொரு கோ-சாலை இறைவன் அருளால் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இந்த மாதத்திலிருந்து அங்கு கோ-சம்ரட்சணம் துவங்குகிறது. சுமார் 25 க்கும் மேற்பட்ட பசுக்களும், கன்றுகளும் அங்கு உள்ளன. அவை சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன.
சென்ற நவம்பர் மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் வள்ளி என்று ஒரு கன்று பிறந்ததும் அதையொட்டி பணியாளர்களை கௌரவித்து ஒரு விசேஷ கோ சம்ரட்சணம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னையில் பெருமழை பெய்து, அந்த சிறப்பு கோ-சம்ரட்சணம் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கு பிறகு நாம் அக்கோசாலைக்கு தீவனம் அளித்துவந்தாலும் விசேஷ கோ சம்ரட்சணம் செய்ய (பணியாளர்களுக்கு வஸ்திரம் முதலானவைகள் அளித்து) சூழ்நிலை அமையவில்லை. ஆனால் தை-அமாவாசை, ராகு-கேது பெயர்ச்சி ஆகிய விஷேட நாட்களின் போது சுவாமிக்கு அர்ச்சனை செய்து, அனைத்து பசுக்களுக்கும் தளம் சார்பாக சிறப்பு உணவு வழங்கிவிட்டோம்.
மேற்கூறிய இரண்டு கோ-சாலைகள் தவிர மூன்றாவதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய கோ சாலையில் நமது வாசக தம்பதியினர் ஒருவர் முன்னிலையில் கோ சம்ரட்சணம் சில நாட்களில் துவங்கவிருக்கிறது.
எந்த இடம்? அப்படி என்ன இங்கு விசேஷம்…? இவை அனைத்தும் விரிவாக வேறொரு பதிவில்.
இதற்கிடையே சமீபத்தில் நமது வாசகர் ஒருவரின் கோ-சம்ரட்சணம் தொடர்பான ஒரு நெகிழ வைக்கும் அனுபவம் நமக்கு கிடைத்தது. அதை தனிப்பதிவாக தயார் செய்து வருகிறோம். அந்தப் பதிவை அளிக்கும் முன், பசுவுக்கு சிஸ்ருக்ஷைகள் செய்வதால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அற்புதமான ஒரு புராணக் கதையை இங்கே தருகிறோம். இதைப் படித்துவிட்டு அதை படித்தால் தான் அதன் அருமை நமக்கு புரியும். எனவே இதை முதலில் அளிக்கிறோம்!
கோ-சேவையால் துளிர்த்த ரகுகுலம் !
சூரிய (இஷ்வாகு) வம்சத்து மன்னனான திலீபன் – ஸுதக்ஷிணை தம்பதியினருக்கு நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லை. தமக்குப் பிறகு இந்த பூமியை ஆள்வதற்கு இஷ்வாகு வம்சத்தினர் யாருமே இல்லாமல் போய் விடுவார்களே என்ற கவலை கொண்ட திலீபன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ராஜகுரு வசிஷ்டரை சந்தித்தார்.
மனைவி அருந்ததியுடன் ஆஸ்ரமத்தில் இருந்த வசிஷ்டர் திலீபனை வாழ்த்தி விட்டு அவர் தன்னைத் தேடி வந்ததின் காரணத்தைக் கேட்க, திலீபன் “ஸ்வாமி தங்கள் ஆசியினால் எனக்கு எல்லாம் இருக்கிறது. ஒன்றே ஒன்றைத் தவிர. கண்ணே என்று கொஞ்சி மகிழ எங்களுக்கு குழந்தை இல்லை. நாங்கள் அப்படி என்ன பாபம் செய்து விட்டோம்? தானங்கள் தரவில்லையா, தர்மம் செய்யவில்லையா? நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்” என அழுது புலம்பினார்கள்.
அதைக் கேட்ட வசிஷ்டர் “திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் காமதேனுவின் சாபம் தான். ஒரு முறை நீ இந்திரலோகத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் கற்பக மரத்தடியில் காமதேனு சயனத்திருந்ததைப் பார்த்தும் பார்க்காதது போல அலட்சியப்படுத்தினாய். காமதேனு வருத்தம் அடைந்து “அரசனே, என்னை அவமதித்து விட்டு உன் மனைவியைக் காண ஓடிக்கொண்டிருக்கும் உனக்கு, என் சந்ததியை நீ வந்தனம் செய்யாதவரை, எந்த சந்ததியும் கிடைக்காது” என மனதார ஒரு சாபம் கொடுத்தது. உன் மனைவி கருத்தரிக்கவிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு நீ அவசரமாக அப்போது சென்றுகொண்டிருந்தாய். இருந்தாலும் அவள் கருத்தரிக்கவில்லை என்பதை பின்னர் உணர்ந்துகொண்டாய். காமதேனு கொடுத்த சாபத்தின் விளைவே இன்றுவரை உன் மனைவி கருத்தரிக்கவில்லை” என்று கூறினார்.
அதைக் கேட்ட திலீபன் வருந்தி, “நான் செய்தது தவறு தான். அதற்கு இப்போது என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டும் குருவே?” என்று கேட்டான்.
“திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுவும் தேவலோகத்தில் இல்லை. அது வருண பகவான் செய்யும் ஒரு யாகத்தில் கலந்து கொள்ள பாதாள லோகம் சென்றுள்ளது. இப்போது அதன் மகளான, கன்றுக் குட்டியாக உள்ள நந்தினி தனது தாய் இன்றி அங்கும் இங்கும் அலைந்தவாறு தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது. எனவே நீ தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனு திரும்பி வரும்வரை நந்தினிக்கு சேவை செய்து அதற்கு பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது தானாகவே காமதேனுவின் மனம் குளிர்ந்துவிடும். நீ அங்கிருக்கும்வரை தினம் தினம் நந்தினியை வனத்துக்கு அழைத்துச் சென்று அங்கு புல்லை மேய விட வேண்டும். நந்தினி புனிதமான காமதேனுவின் மகள் என்பதால் இந்த காலகட்டங்களில் நீ அகமும் புறமும் தூயமையாக இருக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்!” என்றார்.
திலீபனும் குருவுக்கு நன்றி கூறி அவரை வணங்கிவிட்டு தனது மனைவியுடன் புறப்பட்டான். தேவலோகம் அடைந்தவன் அங்கு நந்தினிக்கு பல பணிவிடைகள் செய்து அதனுடனேயே வசித்து வந்தான். அதை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, கோகண்டூயனம் செய்வது (சொறிந்துகொடுப்பது) இவையெல்லாம் செய்து வந்தான். ருசியுள்ள உணவை உண்ணாமல் காடுகளில் மேய்ச்சல் நிலங்களில் கிடைக்கும் காய், கனி வகைகளை உண்டு, தர்ப்பை பாயில் தான் படுத்து உறங்கி வந்தான். மொத்தத்தில் ஒரு மிகப் பெரிய சக்கரவர்த்தி ஒரு மாடு மேய்ப்பவன் போல வாழ்ந்து வந்தான்.
ஸுதக்ஷிணையும் தன் பங்கிற்கு நந்தினி மீது அன்பு செலுத்தினாள். மாலை குடிலுக்கு திரும்பி வந்தவுடன் நந்தினியை எதிர்கொண்டு வரவேற்று நீர் வைப்பாள். தடவிக்கொடுப்பாள். இப்படியாக 21 நாட்கள் தம்பதியினருக்கு நந்தினியுடனேயே கழிந்தது.
ஒருநாள் நந்தினி பசு இமயமலையை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் மேயச் சென்றது. அதை பின்தொடர்ந்து அதை ஓட்டிக் கொண்டு சென்ற திலீபன் அதை புல் மேய விட்டப்பின் தான் சற்று இளைப்பாறினான்.
நந்தினி புல் மேய்ந்துகொண்டிருக்கும்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக அருகே இருந்த குகையொன்றிலிருந்து வெளிப்பட்ட சிங்கமொன்று நந்தினி மீது பாய்ந்து அதைக் கவ்வியது. தன் கண்ணெதிரே ஒரு சிங்கம் நந்தினியை வேட்டையாடுவதை செய்வதறியாது திகைத்த திலீபன் உடனே தன்னிடமிருந்த வில்லில் அம்பைப் பூட்டி சிங்கத்தை குறிபார்க்க, அடுத்த நொடி அவன் கை அசையாது நின்றுவிட்டது.
சிங்கம் கூறியது, “மன்னா நான் சிங்கமில்லை. சிவகணங்களுள் ஒருவன். என் பெயர் கும்போதரன். சிவபெருமான் நந்தி மீது ஏறும்போது, முதலில் பாதபீடமான என் மீது காலை வைத்துத் தான் ஏறுவார். இந்த மரம் தேவதாரு என்னும் அரிய வகை மரம். பார்வதி தேவி இதை ஆசையுடன் வளர்த்துவருகிறார். ஒரு முறை யானைக்கூட்டம் ஒன்று இந்த மரத்தை மோதி சேதப்படுத்திவிட்டது. தான் ஆசையாக வளர்த்த மரம் சேதப்படுத்தப்பட்டாதை அறிந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் கண்ணீருடன் முறையிட்டார். எனவே ஈசன் கணங்களில் ஒருவனான என்னை, சிங்கத்தின் உருவத்துடன் இதை காத்து வருவாய், யார் இங்கு அத்துமீறி பிரவேசித்தாலும் அவர்களை உன் இறையைக்கொள்ளலாம் என்று எனக்கு ஆணையிட்டார். இந்த பிரதேசம் முழுதும் என் கட்டுப்பாட்டில் உள்ளது. சிங்கத்தின் உருவம் எடுத்துள்ளபடியால் நான் சிங்கம் உணவாக உட்கொள்பவற்றை தான் உட்கொள்ளமுடியும். நானோ சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. இந்த பிரதேசத்தை தாண்டி வெளியே சென்று வேட்டையாடி, மறுபடியும் இந்த மரத்திற்கு ஏதாவது ஒன்று என்றால் உமா மகேஸ்வரனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே நான் இருக்கும் இடமாக என்னைத் தேடி வந்திருக்கும் இந்த பசுக்கன்றை நான் கொன்று புசித்தால் தான் எனது பசியடங்கும். இந்த சூழ்நிலையில் நீ என்னை கொல்ல எப்படி அனுமதிக்க முடியும்? மேலும் நான் சிவகணம் என்பதால் உன் அஸ்திரமோ மந்திரப் பிரயோகமோ என்னிடம் பலிக்காது. இந்த கன்றை என்னிடம் விட்டுவிட்டு நீ உயிர் பிழைக்க உடனே ஓடிவிடு” என்றது.
“சிவபெருமானின் உத்தரவுக்கு நானும் கட்டுப்படுகிறேன். அதே சமயம் என் பொறுப்பில் என்னை நம்பி என் குருநாதரால் விடப்பட்டுள்ள இந்த கன்றை நீ வேட்டையாட நான் எப்படி அனுமதிக்கமுடியும்? மேலும் என் குருநாதரின் பூஜைக்கு இதன் மூலமாகவே இவள் தாய் பால் தருகிறாள். சிவகணம் என்று நீ கூறியபிறகு உன்னுடன் வாதம் செய்யவோ மோதவோ நான் விரும்பவில்லை. இந்த கன்றுக்கு பதில் வேண்டுமானால் என் உயிரை எடுத்துக்கொள்” என்று மன்றாடினான்.
சிங்கமோ, “மன்னா நீ ஏன் புத்தியில்லாமல் பேசுகிறாய்? இந்த பசு இறந்தால் உன் குரு ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் இழப்பு இல்லை. அவருக்கு அந்த பசுவிற்கு பதிலாக நீ ஆயிரம் பசுக்களை தானமாகக் கொடுத்துவிடலாம். ஆனால் நீ இறந்தால் உன் மனைவியின் கதி என்ன என்று யோசித்துப் பார்? மேலும் உன் நாடும் உன் மக்களும் உன்னை நம்பித் தானே இருக்கின்றனர்… பேசாமல் இத்தோடு போய்விடு…”
“இந்த கன்றை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது என் குருவுக்கு நான் செய்யும் நம்பிக்கை துரோகமல்லவா? இந்த பசுவுக்கு பதிலாக நான் வேறு எத்தனை பசுக்கள் தந்தாலும் என் குருநாதர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இல்லை மற்றப் பசுக்கள் தான் இதற்கு ஈடாகிவிடுமா? உனக்கு பசிக்கிறதென்றால் நீ என்னை உணவாகக் கொள். இந்த கன்றை விட்டுவிடு. சிவனின் சேவகனான உன்னை ஒரு நண்பனாக கருதி இதை கேட்கிறேன்…”
அதைக் கேட்ட சிங்கமும் “சரி, அப்படி என்றால் உன் ஆயுதங்களை போட்டுவிட்டு, நிராயுதபாணியாக நீ என் அருகில் வந்து நில், இந்தக் கன்றை விட்டுவிடுகிறேன்’ என்று கூற திலீபனின் கைகள் அதன் பின்னர் இயக்கத்தை பெற்றது.
திலீபனும் சற்றும் தயங்காமல் தனது ஆயுதங்கள் அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு நிராயுதபாணியாக சிங்கத்தின் முன்னால் சென்று “என்னை உணவாக்கிக் கொள்” என்று அதை பணிந்து மண்டியிட்டான்.
அடுத்தகணம் தேவலோகத்தில் இருந்து அவன் மீது பூமாரி பொழிந்தது.
“திலீபா எழுந்திரு” என்றக் குரலைக் கேட்ட திலீபன் திகைத்துப் போய் எழுந்திருக்க அவன் முன் சிங்கம் காணப்படவில்லை. மாறாக அங்கே ஒளிவட்டம் பின்னணியில் தோன்ற, பிரகாசமான தேஜஸான தோற்றத்துடன் பலவித அலங்காரத்துடன் நின்று கொண்டு இருந்த நந்தினி கூறியது “திலீபா, உன்னை சோதிக்கவே இந்த நாடகத்தை நான் நடத்தினேன். உன்னுடைய குரு பக்தியும், என்னிடம் நீ காட்டிய அக்கறையும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. என் தாயின் சாபத்தை நான் விலக்குகிறேன். காமதேனுவின் மகளான எனக்கும் வரமளிக்கும் சக்தி உண்டு. உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்…” என்றது.
மன்னன் நந்தினியை பலவாறு பணிந்து “தாயே உருவில் சிறியவள் என்றாலும் குணத்திலும் மகிமையிலும் நீ பெரியவள். என் குலம் தழைக்க, எனக்கு ஒரு மகன் வேண்டும். இது தானம்மா நான் கேட்பது” என்றான்.
அதைக் கேட்ட நந்தினி “அப்படியே ஆகட்டும். உன் குலத்தை காக்க, அதன் பெருமையை பறைசாற்ற உனக்கு ஒரு மகன் பிறப்பான். கவலைப்படாதே. என் மடியில் இருந்து சுரக்கும் பாலை ஒரு தொன்னையில் பிடித்துக்கொண்டு சென்று அதை நீயும் உன் மனைவியும் அருந்துங்கள். நல்லதே நடக்கும்!” என்று கூறியதும் நந்தினியின் மடியில் இருந்து பால் சொரிய ஆரம்பித்தது.
திலீபனும் சற்றும் தயங்காமல் இலையால் அவசரவசரமாக ஒரு தொன்னை செய்து அதில் அந்தப் பாலைப் பிடித்துக் கொண்டான். நந்தினியை தேவலோகத்தில் சேர்பித்துவிட்டு அதனிடம் விடைபெற்றுக்கொண்டு திலீபனும் ஸுதக்ஷிணையும் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள்.
வசிஷ்டரை வணங்கிய திலீபன் நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி அந்தப் பாலை அருந்த அவரிடம் அனுமதி கேட்டான். இது அவனது குருபக்தியை மேலும் பறைசாற்றியது. இதனால் வசிஷ்டர் மிகவும் மகிழ்ந்து திலீபனையும் ஸுதக்ஷிணையையும் ஆசிர்வதித்து அவர்களை மகிழ்ச்சியோடு அவர்கள் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.
அரண்மனைக்கு திரும்பிய திலீபனும் ஸுதக்ஷிணையும் பூஜை முதலானவற்றை செய்து சூரிய தேவனை வணங்கிய பின்னர் அந்தப் பாலைக் குடித்தார்கள்.
இதன் பயனாக ஸுதக்ஷிணை கருத்தரித்து ஒரு அழகான ஆண் மகவை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தை தான் ரகு. ராமபிரானின் ரகுவம்சம் துவங்கியது இதிலிருந்து தான். இவரின் கொள்ளுப்பேரன் தான் ஸ்ரீராமர். ஸ்ரீராமர் மூலம் ரகுகுலத்தின் புகழ் திக்கெட்டும் பரவி, ‘ரகுகுல திலகம்’ என்று அவர் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது!
ஆக, கோ-சேவையின் பயனாக ஒரு வம்சத்தில் சாட்சாத் மகாவிஷ்ணுவே ஸ்ரீ ராமராக அவதரித்தார் என்றால் அதன் மகத்துவம் தான் என்ன!
=========================================================
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
=========================================================
Also check :
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
=========================================================
[END]
படிக்க படிக்க திகட்டாத கதை. இதுவரை நான்கைந்து முறை படித்துவிட்டேன்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரத்யேக ஓவியம் சூப்பர். காமதேனுவின் படம் கொள்ளை அழகு. காமதேனுவிடம் நந்தினி பால் குடிக்கும் படம் அதைவிட அழகு. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல இருக்கிறது.
திலீபன் பசுவை காப்பாற்றினார் என்று மட்டும் தெரியும். அதன் பின்னனனியில் நடந்த விஷயம்,அவர் செய்த கோ சேவை, அதன் பயனாக அவர் சந்ததியில் ராமர் தோன்றியது இதெல்லாம் புதிது. பதிவில் கூடுதல் தகவலாக கும்போதரன் பற்றிய செய்தி அற்புதம்.
தளம் சார்பாக புதிதாக தொடங்கவிருக்கும் கோ சம்ரட்சணம் தொடர்ந்து நடைபெற்று எங்கள் அனைவரது கர்மாக்களும் கரைந்து நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன். மேலும் பல பல கோ சாலைகளில் நமது தளம் சார்பாக கோ சம்ரட்சணம் நடைபெறவேண்டும்.
பதிவின் தொடர்ச்சியை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
சிறந்ததொரு பதிவுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
கடன் தீரவே மாட்டேங்குது sir நல்ல சிறந்த விரைவில் பலன் தர கூடிய பரிகாரம் சொல்லுங்க sir. ரொம்ப கஷ்டப்படறோம். please sir. replay பண்ணுங்க.
நான் ஜோதிடரோ இல்லை பரிகாரம் சொல்பவனோ அல்ல. கஷ்டப்படும் நபர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் வழிகாட்டவேண்டும் என்று நம்புகிறவன்.
நீங்கள் கேட்டீர்கள் என்பதால் சொல்கிறேன்…
1) செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். 2) சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்.
நமது பிரார்த்தனை கிளப்புக்கு உங்கள் கோரிக்கையை அனுப்பவும். விபரங்களுக்கு http://rightmantra.com/?p=26491 பதிவை பார்க்கவும்.
வாழ்த்துக்கள்!