Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

print
ண்பர் ஒருவர் சமீபத்தில் நம்மிடம் பேசும்போது, “எத்தனையோ ஆலயங்கள் இருக்க குறிப்பிட்ட சில ஆலயங்களை மட்டும் பரிகாரத் தலங்கள் என்று கூறக் காரணம் என்ன? அந்த இடத்தில் மட்டும் இறைவனுக்கு அந்த சக்தி வந்துவிடுமா…?” என்று கேட்டார். இந்த பரிகாரத் தலங்கள் என்கிற கான்செப்டே ஏமாற்று வேலை என்பது அவர் வாதம். ஏதோ நமக்குள்ள சிற்றறிவைக் கொண்டு அவருக்கு சிறு விளக்கமளித்தோம். ஆனால் தளத்தில் இது பற்றி ஒரு பதிவை அளித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இங்கே ஒரு தனி பதிவாக அளிக்கிறோம்.

பதிவை எழுத கணினி முன்பு அமர்ந்தபோது, மேலோட்டமாக எழுத முடியவில்லை. எழுத எழுத விரிந்துகொண்டே சென்றது. சரி என்று அதன் போக்கிலேயே சென்று எழுதினோம். பதிவை சுவாரஸ்யமாக தர கூடுமானவரை தக்க புகைப்படங்களை அளித்திருக்கிறோம்.

நண்பர் கேட்டபடி பரிகாரத் தலங்கள் விஷயத்தில் உண்மை என்ன? பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையிலேயே அந்தந்த பரிகாரங்களை நாடி வந்து தரிசிப்பவர்களுக்கு அளிக்கின்றனவா?

Parigaram

(பரிகாரத் தலங்களோடு பலன் தரும் தலங்களை போட்டு குழப்பிக்கொள்ளகூடாது. பரிகாரம் என்பது வேறு பலன் தரும் தலங்கள் என்பது வேறு. இறுதியில் விளக்கியிருக்கிறோம்.)

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பக்தியினாலே ஆலயங்களுக்கு வருவது போய் பயத்தினாலே தான் அதிகளவு வருகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த கோயிலை ப்ரமோட் செய்ய, மக்களை பெருமளவில் ஈர்க்க ‘பரிகாரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் தொன்மையான தலங்கள் பல உண்டு. ஆனால் அனைத்துமே பரிகாரத் தலங்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது.

ஒரு தலம் பரிகாரத் தலமாக திகழ்வதற்கு சில காரணங்கள் தான் இருக்க முடியும்.

ஒன்று அந்தந்த ‘தல வரலாறு’ தொடர்பான நிகழ்வுகள்.

இரண்டாவது ‘புராணம்’ தொடர்புடையது.

மூன்றாவது தேவாரம் பாடிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் தொடர்புடையது.

நான்காவது பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ‘திவ்ய பிரபந்தங்கள்’ தொடர்புடையது.

சரி… ஓ.கே. பரிகாரத் தலங்களின் அவசியம் என்ன?

நோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போது சாதாரண ஜெனரல் டாக்டரே போதும். ஆனால், நோயானது முற்றி தீரா நோயாக மாறும்போதோ அல்லது உயிருக்கே ஆபத்து எனும்போதோ நாம் அந்த நோய்க்கென்று உள்ள ஸ்பெஷலிஸ்ட்களிடம் தான் செல்கிறோம். பொது மருத்தவரிடமே சென்றாலும் அவர் ஸ்பெஷலிஸ்ட்களிடம் தான் நம்மை அனுப்புகிறார். அது போல நமது வினையால் ஏற்படும் பிறவிப் பிணிகளை தீர்த்துக்கொள்ள இத்தகு பரிகாரத் தலங்களுக்கு அவசியம் செல்லவேண்டும்.

மேற்படி ஆலயங்களுக்கு மட்டும் எப்படி இத்தகு பரிகார சக்தி கிடைக்கிறது? எத்தனையோ ஆலயங்கள் இருக்க, சில குறிப்பிட்ட ஆலயங்கள் மட்டும் பரிகாரத் தலங்கள் என்று வழங்கப்படுவது ஏன்?

பூமியை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் எனும்போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தண்ணீர் மிகச் சுலபமாக சில அடி ஆழத்திலேயே கிடைத்துவிடுகிறது. சில இடங்களில் பலநூறு அடி ஆழம் தோண்ட வேண்டியிருக்கிறதே… ஏன்?

பரிகாரத் தலங்களும் அப்படித் தான்! அவை INSTANT SOURCE OF திருவருள்!!

சம்பந்தப்பட்ட தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் யாரேனும், “இந்த ஆலயத்திற்கு இந்த பிரச்னைக்கு வருபவர்களுக்கு நீங்கள் அருள்புரியவேண்டும்” என்று வரம் பெற்றிருப்பார்கள். இறைவனும் அப்படியே வரம் தந்திருப்பார். அப்போது அது பரிகாரத் தலம் ஆகிவிடுகிறது.

மேற்படி சம்பவங்கள் பெரும்பாலும் புராண தொடர்புடையவை. புராணம் என்றால் ஏதோ கற்பனைக் கதை என்று நினைக்கவேண்டாம். முன்னொரு காலத்தில் நடந்தவை அவை. புராணம் என்ற சொல்லிற்கே ‘பழமை வாய்ந்தது’ என்று தான் பொருள்.

உதாரணத்திற்கு திருமணஞ்சேரியை எடுத்துக்கொண்டால் அது ஏன் திருமண பரிகாரத் தலமாக விளங்குகிறது தெரியுமா?

Thirumananjeri
திருமணஞ்சேரி

ஒரு முறை அன்னை உமாதேவிக்கு இறைவன் கையால் மீண்டும் மங்கல நாண் சூட்டி திருமணம் செய்து கொள்ள ஆசை ஏற்பட, அதை நிறைவேற்றுவதாக சிவபெருமான் வாக்களித்தார். இறைவன் அதை தாமதப்படுத்த அன்னை அதிருப்தியுற்று இறைவன் ஒரு முறை கூப்பிட்டபோது கேட்டும் கேளாமல் இருந்தார். எனவே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி பசுவாக பிறக்க நேர்ந்து, பின்னர் இறைவன் சமாதானமடைந்து பரதமகரிஷி நடத்திய யாகவேள்விக் குண்டத்தில் சுயஉருவம் பெற்று தோன்றிய அன்னை உமாதேவியை திருமணஞ்சேரியில் மணஞ்செய்து கொண்டார். அன்னையின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் நித்தமும் மாலை மாற்றி கல்யாணம் நடக்கிறது. இது நித்திய கல்யாண ஷேத்திரம். எனவே ‘திருமணஞ்சேரி’ சிறந்த திருமண பரிகாரத் தலம் ஆகியது.

இதே போல கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோவில் ஒரு சிறந்த நவக்கிரக பரிகாரத் தலம். எப்படி தெரியுமா?

Suriyanar Koil
சூரியனார் கோவில்

இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பீடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு நவக்கிரகங்களும் அவருக்கு காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர்.

படைப்பின் கடவுளாகிய பிரம்மா ஒன்பது கோள்களையும் அழைத்து “உயிர்களாய் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அதை மாற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்” என்று சாபம் கொடுத்தார். அவர்கள் மனம்வருந்தி தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டு, சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர்.

பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் மும்மூர்த்திகளும் காட்சி தந்தனர். “உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் மறைந்துவிட்டது. இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே. துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்!” என்று வரம் தந்தனர்.

ஈஸ்வரன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாயிற்று. சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.

புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத் தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.

மற்றொன்று பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் திருவிடைமருதூர்!

Thiruvidaimarudhur
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில்

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த அந்தணர் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டார். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு பிராமணரை கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணனின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.

Thiruvidaimarudhur2
திருவிடைமருதூர் – உட்புறத்திலிருந்து

எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு பாண்டிய மன்னன் தான் எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது  திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான்.

Brahmmahaththi Dosha Nivarthi Parigaram copyவரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் ‘பிரம்மஹத்தி’ தோஷ நிவாரண தலம் இது.

இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

திருவிடைமருதூர் எப்படிப்பட்ட அற்புதமான பிரம்மாண்டமான ஒரு கோவில் தெரியுமா? வாழ்க்கையில் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய தலங்களுள் அவசியம் இடம்பெறவேண்டிய தலம் இது.

திருவெள்ளியங்குடி – சுக்கிரனுக்கு பரிகாரத் தலமானது எப்படி?

அடுத்து சுக்கிர பரிகாரத் தலங்களில் ஒன்றான திருவெள்ளியங்குடி 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. இங்கு சுவாமியின் பெயர் கோலவில்லி ராமர். மகாவிஷ்ணு வாமனாவதரத்தின் போது மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். சிறுவன் வேடத்தில் வந்திருப்பது சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனே என்பதை உணர்ந்து கொண்ட அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்), மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் மகாபலியோ சுக்கிரனின் பேச்சை கேட்காமல் கமண்டலத்திலிருந்து நீரை தாரை வார்த்து தானம் செய்ய முற்பட்டதால் சுக்கிரசாரியர் வண்டாக உருவெடுத்து கமண்டலத்தின் துவாரத்தில் நீர் வெளியேறாதவாறு அடைத்துக்கொண்டார். வாமனர் வேடத்தில் வந்த மகாவிஷ்ணு தர்ப்பைப்புல்லை விட்டு அடைப்பை நீக்க முயற்சிக்க வண்டின் உருவத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண்ணில் தர்ப்பை புல் குத்தி ஒரு கண்ணில் அவர் பார்வையை இழந்தார்.

Thiruvelliyangudi kolavilli ramar

அப்படி பார்வையிழந்த சுக்கிரன் மீண்டும் பார்வை பெற்றது இந்த தலத்தில் கோலவில்லி ராமரை தரிசித்த பிறகு தான். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து கோலவில்லி ராமரை தரிசிப்போருக்கு சுக்கிரன் பலம் பெறுவதுடன் சுக்கிர தோஷம் இருந்தால் அகன்றுவிடும். தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது.

(இங்கே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். இங்கே வந்து மூலவர் கோலவில்லி ராமரைத் தான் வழிபடவேண்டும். மூலவரை புறக்கணித்துவிட்டு உபதேவதையான சுக்கிரனை இங்கே வழிபடுவதால் எந்த பயனும் இல்லை! போனஸ் கொடுக்குற முதலாளியை விட்டுவிட்டு வேலைக்காரனை தாஜா செய்து என்ன பயன்? இங்கே மட்டுமல்ல பெரும்பாலான பரிகாரத் தலங்களிலும் இது தான் நடக்கிறது. திருநள்ளாறு கேட்கவே வேண்டாம். அங்கே தர்பாரண்யேஸ்வரர் தான் முக்கியம். சனி அவரிடம் வரம் பெற்று அங்கே அவரை தரிசிக்க வருபவர்க்கு அருள்பவர். அதை மறக்கவேகூடாது.)

அங்காரகன் முருகனை பூஜித்த திருக்கடம்பூர்!

thirukadambur

இதே போன்று நாம் சமீபத்தில் சென்று வந்த திருக்கடம்பூர். சூரனை வதைக்கச் சென்ற முருகன் இந்த தலத்தில் தான் அம்பாளிடம் வில் பெற்றுச் சென்றதாக ஐதீகம். எனவே இங்கு முருகன் வில்லுடன் காட்சியளிக்கிறார். செவ்வாய் தனக்கு அதிபதியான முருகனை இங்கு வந்து வழிபட்டு அருள்பெற்றமையால் இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மேலும் நவக்கிரகங்கள் ஒவ்வொருவரும் தத்தங்களுக்கு உரிய நாளில் இங்கு வழிபடுகின்றனர். (இந்த தலம் மேலும் பல சிறப்புக்களை உடையது. நமது சிவராத்திரி நிறைவு பதிவில் அதை பற்றி விரிவாக பார்ப்போம்!)

இப்படி பரிகாரத் தலங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் புராண தொடர்புடைய விஷயங்கள் இருக்கும்.

இது தவிர நமது தேவார மூவர், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோர் அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் பல்வேறு தலங்களுக்கு சென்று பாடிய பதிகங்களில் /பாசுரங்களில் காணப்படும் குறிப்புக்கள் மற்றும் அவர்கள் பாடல்களில் கூறியுள்ள செய்திகள், உறுதிமொழிகளை கொண்டு பரிகாரத் தலங்களை உணரலாம். மூவரும் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நடந்தே சென்று பாடிய பாடல்களின் எண்ணிக்கை மட்டும் எட்டாயிரத்துக்கும் மேல்.

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
திங்களூர் – திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

அப்படி அவர்கள் செல்லும்போது பல அற்புதங்களை செய்திருக்கிறார்கள். (இதை விளக்கவேண்டும் என்றால் தனியாக ஒரு தொடரே அளிக்கவேண்டும்). எலும்பை பெண்ணாக்கியது, பாம்பு கடித்து மாண்டவரை உயிர்ப்பித்தது, வெப்பு நோய் தீர்த்தது, முதலையுண்ட பாலகனை மீட்டது, இழந்த பொருளை பெற்றது, ஆண் பனையை பெண் பனையாக்கியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கூறிய பிரச்னைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட பதிகம் பாடல்பெற்ற தலங்கள் சிறந்த பரிகாரத் தலங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

பெரியபுராணத்தில் மூவரின் வரலாற்றை சேக்கிழார் கூறி வரும் போது, இன்ன பதிகம் – ஊர் எல்லையில் / இறைவன் திருமுன் / வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறி வருவதை அறியலாம்.

(ஒரு விஷயம் தெரியுமா… சம்பந்தர் மூன்று வயது தொடங்கி பதினாறு வயதிற்குள் பாடிய பதிகங்கள் மொத்தம் பதினாறாயிரம். நமக்குக் கிடைத்தவையோ வெறும் 384. ஒரு பதிகம் எனப்படுவது பத்துப் பாடல்களைக் கொண்டது. பதினோறாவது பாடல் பதிகம் பாடினால் ஏற்படும் பயனைச் சொல்வது. ஆக பதினாறாயிரம் பதிகங்கள் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் பாடல்களைக் கொண்டிருக்கும். இன்று நம்மிடம் உள்ள பாடல்களோ எண்ணிக்கையில் சுமார் 4147 தான்! இதையே படிக்க நமக்கு நேரமில்லை என்று அங்கலாய்த்துக்கொள்கிறோம்!)

Kanchi Maha Periyava

காஞ்சி பெரியவர்

இவற்றை விட முக்கியமாக நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பெரியவர் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் அருள்பாலிக்கும்போது, அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு சில தலங்களுக்கு போகச் சொல்வதுண்டு. அவற்றில் பரிகாரத் தலங்களும் இருக்கும் பாடல் பெற்ற பெறாத தலங்களும் இருக்கும். யாருக்கும் தெரியாத ஏன் அந்தக் கோவில் தொடர்புடையவர்களே கூட அறிந்திராத தகவல்களை அவர் அறிந்து வைத்திருப்பார். தம்மை நாடிவருவோரில் சிலரை அத்தகு தலங்களுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்யச் சொல்வார். அப்படி அவர் சொன்ன நிகழ்வுகள் பல உண்டு. இவை எந்தக் காலகட்டத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் அவை பரிகாரத் தலங்கள் தான்.

சுருங்கச் சொன்னால்…

276 பாடல்பெற்ற தலங்கள், 267 வைப்புத் தலங்கள், 106 வைணவ திவ்யதேசங்கள், அபிமானத் தலங்கள், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள், காஞ்சி மகா பெரியவர் வாக்கினின்று வெளிப்பட்ட தலங்கள் – இவை அனைத்துமே பரிகாரத் தலங்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் பரிகாரத் தலங்கள் இவற்றுள் அடங்கிவிடும்.

மேற்கூறிய ஆலயங்களில் பொதுவான அம்சமாக இவை அனைத்தும் குறைந்தது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்டவை என்பது தான். (வடதிருநள்ளாறு போன்ற அரிதான சில விதிவிலக்குகள் உண்டு!)

இன்னும் சில தொன்மையான தலங்கள் அவை பரிகாரத் தலங்கள் என்பதே வெளியே தெரியாமல் இருக்கின்றன. காலப்போக்கில் கல்வெட்டு முதலான ஆதாரங்களை கொண்டு அவற்றை கண்டுபிடித்தால் தான் உண்டு.

(பரிகாரத் தலங்களோடு பலன் தரும் தலங்களை போட்டு குழப்பிக்கொள்ளகூடாது. பரிகாரம் என்பது வேறு பலன் தரும் தலங்கள் என்பது வேறு. பரிகாரம் என்பது நமது ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்கு பிராயச்சித்தம் தேடுவது. குறிப்பிட்ட சில தலங்களுக்கு மேற்கூறிய காரணங்களினால் அந்த பரிகார சக்தி இருக்கும். ஆனால் சில தலங்களை யார் எப்போது தரிசித்தாலும் விசேஷம் தான். உதாரணத்திற்கு : காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவிலை தரிசித்தால் 108 திவ்ய தேசங்களை கண்ட பலன் உண்டு.)

மற்றபடி இதற்கு மேல் பரிகாரத் தலம் என்பது இருக்க முடியாது. குறிப்பாக சுதந்திரத்துக்கு பிந்தைய காலகட்டங்களில் கட்டப்பட்ட எந்தக் கோவிலுமே பரிகாரத் தலம் கிடையாது என்பது நமது கணிப்பு. அதுவும் ‘பக்தி’ என்பது ‘பிஸினஸ்’ ஆகிவிட்ட கடந்த 20 – 30 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட எந்தக் கோவிலும் நிச்சயம் பரிகாரத் தலம் அல்ல. அப்படி ஏதேனும் இருந்தால் அது உண்மை அல்ல. புனைவு செய்தது என்பதை அறிந்துகொள்க.

பரிகாரத் தலங்கள் தவிர மற்ற கோவில்களுக்கும் செல்லலாம். அவரவவர் பக்தியின் தன்மையை பொறுத்து அங்கும் அருளைப் பெறலாம். ஆனால் பரிகாரத் தலங்களை பற்றிய சரியான புரிதலுக்காகவே இந்த பதிவு அளிக்கப்படுகிறது.

பரிகாரத் தலங்கள் குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தை இந்த பதிவு அளித்திருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி!!

=========================================================

We need your support. Help Rightmantra in its functioning. Click here!

=========================================================

Also check :

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன? 

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

=========================================================

[END]

4 thoughts on “பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

  1. பதிவு மிக அற்புதம். இதை விட யாராலும் பரிகார தலங்களை பற்றி இத்தனை விரிவாகும், அழகாகவும் எழுதுவது கடினம். தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

  2. பரிகார ஸ்தலங்கள் பற்றிய உங்கள் கட்டுரை வழக்கம் போல அருமையாய் அமைந்தது .நன்றி சுந்தர்ஜி
    தி .செந்தில்சிகாமணி

  3. சுந்தர்ஜி
    புரியாத பல விசயங்கள் பல புரிந்துகொண்டோம் . ஓவவரு கட்டுரையும் ஒரு சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *