Wednesday, August 15, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

print
ரபரப்பான உலகில் சுயநலத்தையே சுவாசித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவே, நம் தளம் சார்பாக நடைபெறும் எத்தனையோ அறப்பணிகளுக்கும், ஆன்மீக காரியங்களுக்கும் உறுதுணையாக இருந்து உதவி செய்பவர்கள் நம் வாசகர்கள். தங்களுக்கும் சரி தங்கள் குடும்பத்தினருக்கும் சரி…. புண்ணியம் தேடிக்கொள்வதில் அலாதி ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு புண்ணியம் சேர்ப்பது குறித்து மேலும் ஒரு பரிமாணத்தை விளக்கவேண்டியே இந்த பதிவை அளிக்கிறோம்.

புண்ணியம் என்பது ஏதோ அடுத்த ஜென்மத்திற்கும், இறுதியில் இறைவனடி சேர்வதற்கும் மட்டுமே உதவும் விஷயம் அல்ல. இந்த ஜென்மத்திலே கூட பல சந்தர்ப்பங்களில் அவை நமக்கு அரணாக இருந்து இக்கட்டான தருணத்தில் நம்மை காக்கும் தன்மை கொண்டவை.

ஆகவே தான் கவியரசர், ‘செய்த தர்மம் தலை காக்கும்…. தக்க சமயத்தில் உயிர் காக்கும்’ என்று எழுதினார். ஆகவே சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைக்கும் போதெல்லாம் புண்ணியத்தை சேர்த்துக்கொண்டே போகவேண்டும். இதன் மூலம் உங்கள் வம்சத்திற்கே ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு  வேலியை நீங்கள் போட்டுவிடுகிறீர்கள்.

என்ன நடக்குமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த வேளையில் நம் பாரதி விழா பல்வேறு தடைகளை தாண்டி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தபோது, உண்மையில் ஒரு கணம் நம் கண்கள் கலங்கிவிட்டது. அப்போது நம்மருகே இருந்த நண்பர் சிட்டி, நம் தோளில் தட்டி, “உங்கள் அச்சத்திற்கு மாறாக இந்த விழா இத்தனை சிறப்பாக நடந்து முடிந்ததன் காரணம் தெரியுமா? நீங்கள் செய்த புண்ணியம் தான்!” என்றார்.

உண்மை தான். என்ன தான் குருவையும் கடவுளையும் நாம் வேண்டிக்கொண்டாலும், நமது அக்கவுண்ட்டில் கொஞ்சமாவது புண்ணியம் இருந்தால் தான் அவர்கள் கண் திறந்து பார்ப்பார்கள். ஏதோ நம்மையும் அறியாமல் கொஞ்சம் புண்ணியம் சேர்த்திருப்போம் போல… என்று எண்ணிக்கொண்டோம்.

புண்ணியம் சேர்ப்பதில் சுயநலம் கூடவே கூடாது. அதே சமயம் எதைவிட எது அதிகம் புண்ணியம் தருவது என்று தெரிந்துகொள்வதும் அவசியம்.

என்னது புண்ணியம் சேர்ப்பதிலும் சுயநலம் என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்டீர்களானால், இருக்கிறது என்பதே நம் பதில். அதை நாம் விளக்க முற்பட்டால் சிலர் மனம் புண்படக்கூடும் என்பதால் அதை விட்டுவிடுகிறோம். காலப்போக்கில் அவர்களாக புரிந்துகொள்வார்கள்.

உதாரணத்திற்கு ஒரு அன்ன சத்திரத்திற்கு உதவுவது பொதுநலம். ஆனால் பணத்தை கொடுத்துவிட்டு மிகவும் விசேஷமான ஒரு நேரத்தை, புண்ணிய காலத்தை தேர்ந்தெடுத்து,  குறிப்பிட்ட நாளில்,  குறிப்பிட்ட நேரத்தில் இந்த பணத்தை பயன்படுத்தி உணவிடுங்கள் என்று கூறி அந்த உதவியை செய்யும்போது அங்கே சுயநலம் புகுந்து விடுகிறது.

எனவே தொண்டு செய்யும்போது மிக மிக கவனத்துடன் செய்யவேண்டும். நம்மையுமறியாமல் சுயநலம் புகுந்து அந்த தொண்டின் பலனை குறைத்துவிடும்.

கீழே சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை விளக்குகிறோம். அதற்கு பிறகு ஒரு கதையையும் தருகிறோம். இவை உங்களுக்கு புண்ணியம் சேர்ப்பது குறித்து ஒரு தெளிவான கருத்தை தரும்.

==================================================================

ஒரு டஜன் வாழைப்பழம் Vs ஒரு வண்டி வைக்கோல்!

திருவேற்காட்டில் கோவிலுக்கு செல்லும் சாலையில், உள்ள பசு மடத்திற்கு நம் தளம் சார்பாக அடிக்கடி தீவனம் வாங்கித் தருவது வழக்கம். அங்கு மேற்படி தீவனம் மற்றும் வைக்கோலை உபயம் செய்ய புரவலர்கள் இருந்தாலும், எப்போதெல்லாம் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நமக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறோம்.

இதையடுத்து அவ்வப்போது நமக்கு தீவனத்தின் தேவை குறித்து அழைப்பு வரும். நாமும் சற்று சீக்கிரம் அன்று கிளம்பி, தீவனத்திற்கான  பணத்தை மளிகை கடையில் கட்டிவிட்டு அது இறக்கப்படுவதையும் உறுதி செய்து கொண்டே கிளம்புவோம். இப்படி அடிக்கடி நடந்துள்ளது. நீங்களும் நம் தளத்தில் பார்த்திருப்பீர்கள்.

DSCN0177

சென்ற வாரத்தில் ஒரு நாள், அங்கிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. வைக்கோல் சுத்தமாக இல்லை என்றும், ஒரு வண்டி வைக்கோல் தேவைப்படுவதாகும் சொன்னார்கள்.

ஒரு வண்டி வைக்கோல் குறைந்தது ரூ.3000/- வரும். (அதாவது 300 பிரி).

நம் தளத்தின் கணக்கில் அப்போது பணமில்லை. வைக்கோல் சுத்தமாக இல்லை என்று கேட்பதால், மேலும் அவகாசம் கேட்க இயலாது. என்ன செய்வது என்று யோசித்தபோது, அப்படி இப்படி கொஞ்சம் பணத்தை புரட்டி ரூ.2000/- தயார் செய்துவிட்டோம். அதைவைத்து 200 பிரி வைக்கோலை தருவித்துவிடலாம் என்று முடிவு செய்து அங்கு ரெகுலராக வைக்கோல் கொண்டு வருபவரிடம் ஆர்டர் செய்தபோது, அவர் 250 பிரிக்கு குறைந்து கொண்டுவர இயலாது என்று கூறவே, என்ன செய்வதென்று தெரியவில்லை. இது போன்ற கைங்கரியங்களுக்கு உதவுவதாக கூறிய நண்பர் ஒருவரிடம் பேசி நிலைமையை விளக்கியதும் அவர் நாளை தாம் தொகையை வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதாக கூறினார். இதையடுத்து 250 பிரி கொண்டு வரச்சொல்லிவிட்டோம்.

DSCN0186

நாமும் வண்டி வரக்கூடிய குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு சென்றுவிட்டோம். பெரிய உதவியானாலும் சரி. சிறிய உதவியானாலும் சரி. உதவிகளை செய்வதோடு நின்றுவிடாமல், அது உரிய பயனாளியை சென்று சேர்கிறதா என்று கடைசிவரை இருந்து பார்த்துகொள்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம்.

வைக்கோல் வந்தவுடன் அனைத்தையும் இறக்கிவிட்டு, புறப்படும்போது, வைக்கோலை ஏற்றிவந்த அந்த வண்டியின் மாட்டை பார்த்தோம். வெயிலில் வண்டியை இழுத்து வந்ததால் மிகவும் களைப்புடன் காணப்பட்டது. அதற்கு ஏதேனும் கொடுக்கவேண்டும் என்று தோன்றியது.  பின்னே… கோ-சாலை பசுக்களுக்கு உணவை சுமந்து வந்த மாடாயிற்றே… அதற்கு உணவிடுவது எத்தனை பெரிய கைங்கரியம்….

கோ சாலை பசுக்களாவது இந்த வைக்கோலை தவிர தவிடு, உளுந்து, பட்டாணி தோல் ஆகிய தீவனத்தை வேறு சாப்பிடும் வாய்ப்புள்ளது. ஆனால் அவற்றுக்கெல்லாம் வைக்கோலை சுமந்து வரும் இந்த மாடு? வைக்கோலை தவிர வேறு எதையும் சாப்பிட்டறியாதே…

வண்டியை ஒட்டிவந்தவரிடம், “ஐயா… ஒரு நிமிஷம் இருங்க. இதோ வந்துடுறேன்…” என்று கூறிவிட்டு சற்று தொலைவில் இருந்த பழக்கடைக்கு சென்றோம்.

அங்கே ஒரு டஜன் வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டோம். மாட்டுக்கு என்று கூறியவுடன் அந்த கடையில், மேலும் கொஞ்சம் பழங்கள் இலவசமாகவே தந்தார்கள்.

“நாம பாட்டுக்கு பழம் வாங்கிட்டு போறோம்… இந்த மாடு சாப்பிடுமான்னு தெரியலியே…” என்ற யோசனையுடன் தான் சென்றோம். ஆனால் மாட்டிடம் வந்து பழத்தை காட்டியது தான் தாமதம், ஒரே வினாடியில் அனைத்து பழங்களையும் லபக்கென்று விழுங்கிவிட்டது. பயங்கர பசி போல… பாவம்…

வைக்கோலை சுமந்து வந்த வந்த காளை
வைக்கோலை சுமந்து வந்த வந்த காளை

பழம் சாப்பிட்டவுடன் நன்றி பெருக்குடன் நம்மை ஒரு பார்வை பார்த்தது. தன் மாட்டை பற்றி கவலைப்பட்டு அதுக்கு பழம் கூட ஒருத்தர் வாங்கித் தர்றாரே என்று வண்டியோட்டிக்கு ஒரு புறம் சந்தோஷம்.

200 பசுக்களுக்கு உணவளிப்பதால் கிடைக்கும் புண்ணியத்தை விட, அந்த உணவை சுமந்து வரும் மாட்டிற்கு நான்கைந்து வாழைப்பழங்கள் கொடுத்ததன் மூலம் பெற்ற புண்ணியமே அதிகம்.

நிச்சயம் ‘இப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்’ என்று கருதி நாம் செய்யவில்லை. இது நம் கடமை என்று கருதியே செய்தோம். பசுக்களுக்கு உணவை சுமந்து வரும் காளைக்கு பசியாற கொஞ்சம் பழம் ஊட்டும் வாய்ப்பு நமக்கு கிடைத்த ஒரு பாக்கியம் என்றே நாம் கருதுகிறோம்.

தொண்டு செய்வதில் மற்றவர்கள் பார்க்கத் தவறும் இடத்தை நாம் பார்க்கவேண்டும் என்பதை வழக்கமாக  கொண்டுள்ளோம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

===================================================================

நம் முகநூல் நண்பராக உள்ள திரு.குமார் ஈசன் (www.facebook.com/kumaresanra) சமீபத்தில் தனது முகநூலில் ஒரு அற்புதமான கதை ஒன்றை பகிர்ந்திருந்தார். புண்ணியம் சேர்ப்பது குறித்து நமது கருத்து என்னவாக இருக்கிறதோ அதே கருத்து தான் அந்த கதையும் சொன்னது என்பதால் வியந்து போய், நம் தளத்தில் வெளியிட விரும்புவதாக கூறினோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டவர் அதற்கு காத்திருப்பதாக கூறினார்.

தொண்டு செய்வதை விட தொண்டு செய்பவருக்கு உதவுவது அதிக புண்ணியம் தரும்!

ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா… என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்… என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்…என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்… என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே… என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்… என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்… என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்… என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!  (நன்றி: f/b kumaresanra, f/b nan kadavul)

===================================================================

(திருவருளாலும் குருவருளாலும் புத்தாண்டிற்கு நாம் செய்ய நினைத்த அனைத்தையும் குறைவில்லாமல் செய்து முடித்துவிட்டோம். நண்பர்கள் பலர் வந்திருந்து கைங்கரியங்களில் ஆலய தரிசனத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். அனைவருக்கும் நன்றி. விரைவில் படங்களுடன் முழு விபரங்கள்!)

[END]

15 thoughts on “புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

 1. அன்பு சகோதரா
  நலமா, புத்தாண்டு கைங்கர்யங்கள் சிறப்பாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன்…உங்களுக்கு என்ன சகோதரா….மஹா பெரியவா முதல் அனைத்து தெய்வங்களும் உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றன…உங்களது இன்றைய பதிவில் எனக்கு ஒரு சிறு கருத்து வேறுபாடு உள்ளது….முதல் பாராவில் சுய நல நோக்குடன் பொது நலம் என கூறி உள்ளீர்கள்…ஆனால்…மேற் கொடு இட்டு காட்டப்பட்ட கதையில் புண்ணியத்திற்கு துணை சென்ற ஒரு உதவியின் பெருமையை விளக்கி உள்ளீர்கள்….உங்கள் தொண்டுள்ளம் குறித்து நான் பல நேரம் நினைத்து ஆச்சரியப் பட்டதுண்டு ….உங்களைப் போல் எங்களால் நிச்சயமாக சுய நலமின்றி உடல் உழைப்பை தர முடியாது…ஆனால் நெஞ்சார வாழ்த்தவும் இயன்றால் பொருள் உதவி தர மட்டுமே முடியும்…இந்த ஜென்மத்தில் மானிடராய்ப் பிறந்த யாரும் சுய நலம் இன்றி வாழ்வது கடினம் …உங்களைப் போன்றோர் இருப்பது லக்ஷத்தில் ஒருவர்தான்….எனவே எங்களைப் போன்ற சராசரி மனிதர்களின் பிரார்த்தனையையும் பொருளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்…உங்கள் உயரத்திற்கு வர சிறிது முயல்கிறோம்….பொதி சுமந்த மாட்டின் சோர்வை உணர்ந்த உங்கள் உள்ளம்….கருணா மூர்த்தி மஹா பெரியவாவின் மறு உருவமே…அந்த வரிகளைப் படிக்கையில் என்னை அறியாமல் நான் அழுதது நிஜம்…சர்வேஸ்வரா….
  நான் மேற் கூறிய கருத்துக்களில் தவறு இருப்பின் மன்னிக்கவும்…

  1. காளைக்கு பழமளித்த சம்பவம் மூலமும் சரி, அதற்கு பிறகு கூறிய கதையின் மூலமும் சரி… நாம் கூற வருவது ஒன்றே ஒன்று தான். தொண்டு செய்பவர்களுக்கு உதவவேண்டும். அதுவே புண்ணியத்திலும் பெரிய புண்ணியம். ஆனால் அதில் சுயநலம் இருக்க கூடாது என்பதே.

   எவர் மனமும் புண்படக்கூடாது என்று நாம் கருதியாதால் CONTENT சற்று கண்டின்யூட்டி இல்லாமல் தெரிகிறது. அவ்வளவே.

   – சுந்தர்

   1. புண்ணியம் nammuku வரும் என உதவுவதும் ஒரு சுயநலம் தானே சுந்தர்,,
    எனது தாழ்மையான் கருத்து,,,உதவி அது பயன் பட்டால் போதும்
    பொதுனலமொ சுயநலமோ

    1. நிச்சயம். புண்ணியம் வரும் என்று கருதி செய்வது ஜஸ்ட் ஒரு நல்ல செயல். அவ்வளவே. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல் செய்யும்போது அதன் பெயர் தான் தொண்டு.

     தொண்டு மனப்பான்மையுடன் செய்பவர்களுக்கு எல்லாமே தாமே வந்துவிடும். அவர்கள் பலாபலன்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

     – சுந்தர்

 2. மாடுகளிடம் கரிசனம் தங்களுக்கு அதிகம் தான் ,என்பது எங்களுக்கு தெரியும் . மாட்டை பற்றி கவலைப்பட்டு அதுக்கு பழம் கொடுத்து உபசரித்த தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி அளவில்லாதது .

  -தங்களுடன் பயணிப்பதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம் .
  மனோகர் .

 3. பதிவு அருமை
  இறைவனின் கோ சாலைக்கு உணவு கொண்டுவந்த மாட்டின் பார்வை உணர்ந்து வாழைபழம் வாங்கி கொடுத்த உங்கள் உள்ளம் யாருக்கு வரும்.
  கோவில் கும்பாபிசேகத்தை விட கோவில் பணிகளில் பங்கேற்பது அளவற்ற புண்ணியத்தை தரும் என்று குறிபிட்டுள்ளது அருமை.
  புண்ணிய காரியங்களில் சுயநலம் கலந்த புண்ணியம் என்று குறிப்பிட்டு உள்ளது உங்கள் மனவேதனையை காட்டுகிறது.
  எங்களில் யாராவது உங்களை மனகஷ்டத்தை கொடுத்து இருந்தால் எங்களை பொறுத்தருளுங்கள்.
  நம் வாசகர்கள் எல்லோரும் உங்களுக்கு பிடித்தமனவர்களே.
  நீங்கள் சுட்டிகாட்டியுள்ள குறை நிச்சயம் புரிகிறது. இனி ஒருமுறை இப்படி அல்லாமல் எல்லோருமே பொது நல நோக்குடன் உங்கள் பின்நிர்போம்.
  சொல்வது யாவர்க்கும் எளிது. அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்பதற்கேற்ப உங்கள் கஷ்டம் பாராமல் எங்களுக்காக எவ்வளவோ அறிய பல புன்னியாகரியங்களை செய்துள்ளிர்கள்.
  நேரம் காலம் பார்க்காமல் பொது நலநோக்குடன் செயலாற்ற உங்கள் தவிர யாராலும் முடியாது.
  எங்களுக்காக உழைக்கும் நீங்கள் குருவருளும் திருவருளும் பெற்று நீடூடி வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் நாங்கள்.

 4. சுந்தர்ஜி,

  தாங்கள் நேற்று புத்தாண்டை வெகு விமரிசையாக எல்லா கோவில்களுக்கும் சென்று நிறைவேற்றி இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். வாழ்த்துக்கள் பல.

  காளை மாடு உண்மையிலேயே மிகுந்த சோர்வுடன் காணப்டுகின்றது.அதற்கு வாழைபழம் கொடுத்து……….. உண்மையிலேயே கண்கள் பனிகின்றது. நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், காளை மாட்டை பற்றி யோசித்திருப்போமே என்று தெரியாது. ஆனால் நீங்கள் யோசித்தீர்கள். காளைக்கு நீங்கள் உணவளித்தது உண்மையில் தொண்டின் தொண்டு. எங்களுக்கு உணர்த்த விரும்புவதும் அது தான் என்பது புரிகிறது.

  நாங்கள் புண்ணியம் சேர்க்க ஒய்வு இன்றி ஓடி கொண்டு இருக்கும் தங்களின் மனம் சோர்ந்து போகாமல் இருக்க தள வாசகர்கள்ளகிய நாங்கள் என்றென்றும் துணை இருப்போம். அதுதான் நாங்கள் செய்யும் பிரதி உபகாரமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

 5. உங்கள் தொண்டு மேல் மேலும் தொடரட்டும்
  நாங்கள் புண்ணியம் சேர்க்க ஒய்வு இன்றி ஓடி கொண்டு இருக்கும் தங்களின் மனம் சோர்ந்து போகாமல் இருக்க தள வாசகர்கள்ளகிய நாங்கள் என்றென்றும் துணை இருப்போம். அதுதான் நாங்கள் செய்யும் பிரதி உபகாரமாக இருக்கும் என்று நம்புகின்றோம்

 6. அன்பு சார்,

  உங்கள் பதிவு நன்றாக உள்ளது. செய்வதை திருந்த செய்கிறிர்கள். கடவுள் உங்களுக்கு என்றும் துணையாக இருப்பர். நன்றி.

  ஜீவன்.

 7. எனென்னமோ செய்கிறார்கள் (கிறேன்) புத்தாண்டை வரவேற்க
  அனால் நீங்க செய்வது முற்றிலும் வித்தியாசமான அதுவும் இவளோ அர்பணிப்பு, இதை புரிந்துகொள்ளவே தகுதி வேண்டும் போல
  சேவை செய்பவர்களுக்கு தோள் கொடுக்கும் பாக்கியமே கிட்டுவதே பெரிய விஷயம்
  …அதற்கான என்னத்தை ஆண்டவன் தான் தர வேண்டும் எல்லோருக்கும்

 8. வணக்கம் சுந்தர் சார்

  மிகவும் அருமையான பதிவு

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *