சிவனுக்கு உகந்த நாட்களில் மிக மிக முக்கியமான ஒரு நாள் ஐப்பசி அன்னாபிஷேகம். மற்ற நாட்களில் சிவனை தரிசிக்காதவர்கள் கூட அன்னாபிஷேகத்தின் போது சிவனை தரிசித்தால் போதும் பலன்களை அள்ளிக்கொண்டுவந்துவிடலாம். காரணம், அடிப்படையில் சிவன் ஒரு அபிஷேகப் பிரியன் என்பதால் அன்று மிகவும் சந்தோஷமாக இருப்பார்.
“இதுவரை எத்தனையோ சிவதரிசனம் செய்திருக்கோமே அதற்க்கெல்லாம் பலன் உண்டா? இருப்பது போல தெரியவில்லையே” என்று உங்களில் சிலர் கருதக்கூடும்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு. எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட ஈஸ்வரனை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும். பாவங்களை கழுவிக் களைவதில் ஈஸ்வரனுக்கு நிகர் ஈஸ்வரனே. ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க பரமேஸ்வரனை பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கிழைத்துவிட்டாலோ, பாவமிழைத்துவிட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும். அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது. அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், பரமேஸ்வரனை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் காணலாம்.
இந்திரன் முதலிய தேவாதி தேவர்கள் வரை தாங்கள் செய்யும் பாவங்களுக்கும் தவறுகளுக்கும் பரிகாரமாய் ஈஸ்வர பூஜை தான் செய்வார்கள். பரமேஸ்வரனைத் தான் பூஜிப்பார்கள். அவனைத் தான் தொழுவார்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறினால் அதற்கு அப்பீல் ஏது ?
அன்னாபிஷேகதன்று சிவனை தரிசிப்பதால் கோடி சிவதரிசனப் பலன் என்பதால் அன்றைய நாளுக்கு நாம் ஆவலுடன் காத்திருந்தோம். அன்றைய பணிகளை கவனிப்பதற்கு வசதியாக அலுவலகத்துக்கு லீவ் போட்டாயிற்று.
அனைத்து கோவில்களிலும் மாலை 5.00 மணி முதல் அன்னாபிஷேகம் என்பதால் காலை ஒரு முக்கிய பணி இருந்தது. அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கித் தருவது.
வியாழன் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து தயாராகி, முதல் வேலையாக மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புறப்பட்டோம்.
முந்தைய தினமே கோவிலில் அரிசி வாங்கித் தருவது குறித்து விசாரித்து வைத்துக்கொண்டோம். சுத்தமான பச்சரிசி வாங்கி காலையில் கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்தால் போதுமானது என்றார்கள்.
மேற்கு மாம்பலம் செல்லும் வழியில் ஒரு மளிகை கடையில் நம் தளத்தின் கணக்கிலிருந்து பணம் எடுத்து பச்சரிசி ஐந்து கிலோ வாங்கிக்கொண்டோம். கடைக்காரரிடம் நல்ல அரிசியாக வேண்டும் விலையை பார்த்து போடும்படி கேட்டுக்கொண்டோம். “எங்க கடையில ஒரே ரேட் தான் சார்!” என்றார். நமக்கு அப்போது வந்த அலைபேசியையடுத்து நாம் அடுத்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லப்போவதும் அரிசி அன்னாபிஷேகத்திற்கு போகிறது என்றும் தெரிந்தவுடன், “இதை முதல்லேயே சொல்லக்கூடாதா சார்?” என்று கூறி கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைத்துக் கொண்டார்.
சிவனுக்கு கைங்கரியம் என்று தெரிந்தால் இறங்கி வராதவர் எவரும் உண்டோ?
எப்படியோ ஒரு சில கைப்பிடி அரிசி பலன் அவருக்கு செல்லும்.
அரிசி வாங்கிக்கொண்டு நேராக விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றோம். கிட்டத்தட்ட மலையளவு அரிசி குவிந்திருந்தது. அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த அரசி பைகளுக்கு நடுவே நம்முடைய பையையையும் வைத்தோம்.
“தலைவருக்கு இன்னைக்கு ஜோர் தான் போல….” என்று நினைத்துகொண்டே வெளியே வந்தோம்.
கோ-சாலைக்கு சென்று ஒரு எட்டு பார்த்துவிட்டு, கோ-தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம்.
ஒரு கோவிலில் அரிசி கொடுத்தாகிவிட்டது. மற்றுமொரு தொன்மையான புராண சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு அன்னாபிஷேகதிற்கு அரிசி தர ஆசை.
அப்போது நமக்கு நினைவுக்கு வந்தது கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் தான். இராம புத்திரர்கள் ஸ்தாபித்த சிவலிங்கம் கொண்ட இந்த கோவில், சென்னையில் உள்ள சிறந்த சிவப்பதிகளுள் ஒன்று.
குறுங்காலீஸ்வரரை கடைசியாக அங்கு நடைபெற்ற உழவாரப்பணியின் போது தரிசித்தது. அதற்கு பிறகு தரிசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே அடுத்து நேரே கோயம்பேடு பயணம். அரிசியை இங்கேயிருந்து வாங்கிக்கொண்டு எடுத்துச் செல்வதற்கு பதில் அந்தப் பகுதியில் வாங்கிக்கொள்ளலாம் என்று அங்கே ஒரு மளிகை கடைக்கு சென்றோம். கடையில் விசாரித்தபோது, பச்சரிசி இரண்டு ரகம் தான் இருந்தது. சாம்பிள் வாங்கி நாம் செய்த ஆராய்ச்சியை பார்த்து, கடைக்காரர் அரிசி எதற்கு என்று கேட்டபோது, விஷயத்தை கூறியவுடன், தன் பங்கிற்கு கால் கிலோ அதிகம் கொடுத்தார். இங்கு மொத்தம் ஏழு கிலோ வாங்கிக்கொண்டோம்.
அவருக்கு நன்றி கூறி விட்டு, நேரே கோவில் அலுவலகம் சென்றோம். கோவிலுக்கு வெளியே பந்தல் அலங்காரம் செய்திருந்தார்கள். அலுவலகத்தில் பேசிவிட்டு உள்ளே சென்று அரிசியை ஒப்படைத்தோம். பலர் தத்தங்கள் பங்கை அவரவர் வசதிக்கேற்ப கொண்டு வந்து கொடுத்த வண்ணமிருந்தார்கள்.
அண்ணலை ஒரு எட்டு ஓடிப்போய் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம். வள்ளி அவர்களை தேடினோம். அப்போது தான் எங்கோ வெளியில் சென்றதாக கூறினார்கள். சரி இன்னொரு முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டோம்.
வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட மதியம் ஒன்றாகிவிட்டது. சில பதிவுகள் தயார் செய்துவிட்டு நீண்ட நாட்கள் நிலுவையிலிருந்த சில வங்கிப் பணிகளை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை பிரார்த்தனை பதிவை தயார் செய்தோம்.
நேரம் வீட்டில் இருக்கும்போது தான் எப்படி பறக்கிறது…. மூன்று மணிநேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை.
மாலை சரியாக 5.00 மணிக்கு அண்ணலை தரிசிக்க புறப்பட்டாகிவிட்டது.
முதலில் நேரே மயிலை திருவள்ளுவர் திருக்கோவில் பயணம். ஆறுமுகம் குருக்கள் அவர்கள் அன்னாபிஷேக தரிசனத்திற்கு நம்மை அழைத்திருந்தார். திருவள்ளுவர் கோவிலில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சன்னதி உண்டு.
சென்ற ஆண்டு அங்கு அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம். குருக்கள் அவர்களின் மகன், திரு.பாலா அலங்காரம் செய்வதில் எக்ஸ்பெர்ட். மயிலையின் சுற்றுப் பகுதிகளில் பல கோவில்களில் பண்டிகை நாட்களில் அலங்காரம் செய்வது அவர் தான். இந்த ஆண்டு என்ன அலங்காரம் இருக்கும் என்று சஸ்பென்சாக இருந்தது.
கோவிலுக்கு சென்று ஆனைமுகனை சேவித்துவிட்டு ஏகாம்பரேஸ்வரர் சன்னதிக்கு சென்றோம்.
இந்த முறை அன்னத்தால் காலபைரவர் அலங்காரம். பிரமாதமாக இருந்தது. வருவோர் எல்லாம் அலங்காரத்தை சிலாகித்து பாலா அவர்களிடம் கூறுவதை பார்க்க முடிந்தது. நமது பங்கிற்கும் அவரை பாராட்டினோம்.
தொடர்ந்து அண்ணலுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்துவிட்டு குருக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, நமது டூ-வீலரை அங்கேயே விட்டுவிட்டு மயிலை பஜார் வீதியில் உள்ள விருபாக்ஷீவரர் கோவிலுக்கு நடை பயணம்.
(அந்த பகுதியில் மட்டும் பிரசித்தி பெற்ற சுமார் ஆறு தொன்மையான சிவாலயங்கள் உள்ளன).
விருபாக்ஷீஸ்வரரின் சிறப்பு பற்றி சென்ற ஆண்டு அன்னாபிஷேக தரிசனத்திலேயே விளக்கியிருப்போம். விருபாக்ஷீஸ்வரர் என்றால் பக்தர்களது விருப்பங்களைத் தன் கண் பார்வையாலேயே தீர்த்து வைப்பவர் என்று பொருள். தாயார் விசாலாக்ஷி. மிகப் பெரிய லிங்கம் இங்கு. லிங்கம் முழுவதும் அன்னத்தால் மூடி, பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. கூட்டம் நெருக்கியடித்ததால் சில நிமிடங்களில் வெளியே வந்துவிட்டோம்.
துவஜஸ்தம்பம் அருகே நமஸ்கரித்துவிட்டு, அடுத்து காரணீஸ்வரர் கோவில் பயணம்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் குறிப்பிட்டாகவேண்டும். தலைவருடன் நாம் புகைப்படமெடுத்துக்கொண்ட அனுபவம் தான் அது.
தலைவருடன் புகைப்படம் எடுக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் தவறவிடுவதில்லை. அதென்னவோ அதில் அப்படி ஒரு ஆனந்தம்.
இன்று தலைவரை பார்க்க எக்கச்சக்க கூட்டம். வழக்கமாக ப்ரீயாக தலைவரை தரிசிக்கும் என்னால் இன்று அத்தனை சுலபத்தில் அவரை பார்க்கமுடியவில்லை. இன்று அவருக்கு விசேஷமான நாள் என்பதால் பிரமாதமான அலங்காரம் வேறு. கேட்கவேண்டுமா நம் மக்களை? தலைவரின் அழகில் மயங்கி அவரை தரிசித்தவர்கள் எவரும் அவ்விடத்தை விட்டு கொஞ்சத்தில் நகரவில்லை. தேனுண்ட வண்டு போல அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக தலைவரை கண்குளிர பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அங்கு வேறொரு வாகனத்தில் அமர்ந்திருந்தார் தலைவர். இன்னும் பிரமாதமான அலங்காரத்துடன். (அவர் இல்லாத இடம் ஏது?).
புறப்பாடுக்கு தயாராகிக்கொண்டிருந்த தலைவரின் வாகனத்தில் குடையை வைத்துக்கொண்டிருந்தார்கள். அது முடியட்டும் என்று காத்திருந்தோம்.
என்ன இருந்தாலும் அவருக்கு இத்தனை ஆகாதுப்பா…. அவரோட மாலை கிட்டத்தட்ட தலைவியையே மறைச்சிடுங்க! இவர் மட்டும் தான் பிரேம்ல தெரியுறார். தலைவியை கண்ல காட்டலே.
பரவாயில்லை. அங்கே இருந்த ஒரு சில கல்லூரி மாணவர்களை கூப்பிட்டு அவர்கள் உதவியுடன் ஒரு ஓரமா நின்னு தலைவர் கூட போட்டோ எடுத்துக்கொண்டோம். (தலைவரோட நிற்கும்போது தாங்க நம்ம படமே நமக்கு பிடிக்குது!!!!!!!! மிக மிக பிராமதமாக அந்தப் படம் அமைந்தது தலைவரின் வாத்சல்யத்தினால் தான்.)
யார் அந்த தலைவர்?????????? இந்த பதிவே அவரைப் பத்தி தானேங்க. அவர் நமக்கு மட்டுமில்லேங்க… உங்களுக்கும் தலைவர் தான். ஏன் இந்த உலகத்துக்கே தலைவர்.
ஒரே தலைவர்.
ஆம் ஒரே தலைவர்.
வள்ளுவர் தலைமைக்கு இலக்கணமாய் இயற்றிய குறளுக்கு உதாரணமாய் விளங்கும் தலைவர்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (குறள் 386)
பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட திரவியங்கள், செல்வங்கள் எல்லாவற்றையும் உரிமை கொண்டாடிய தேவர்கள், அது ஆலகால விஷத்தை கக்கியபோது மட்டும் ஓடி ஒளிந்துகொண்டார்களே…. அப்போது ‘இதோ நானிருக்கிறேன் உங்களை காக்க’ என்று ஓடிவந்து, தன்னைப் பற்றி கவலைப்படாது விஷத்தை அள்ளி பருகினானே அவனே எம் தலைவன். நம் தலைவன். ஒரே தலைவன்.
வெளியே மங்கள வாத்தியக்காரர்கள் தயாராக இருந்தார்கள். பார்க்கும்போதே மனதில் ஒரு வித பரவசத்தை தோற்றுவிக்க இவர்களால் மட்டுமே முடியும். அவர்களை வணங்கி, ஆளுக்கு ஒரு சிறிய தொகையை கொடுத்தோம். சந்தோஷப்பட்டாலும் ஏன் என்று புரியாதது போல பார்த்தார்கள்.
மங்கள வாத்தியக்காரர்களை எங்கு பார்த்தாலும் அவர்களுக்கு நம்மால் இயன்ற சிறிய பொருளுதவியை நாம் செய்யும் வழக்கம் கொண்டிருப்பதை கூறினோம். (நீங்களும் அவ்வாறு செய்யவேண்டும் என்பதாலேயே இதை சொல்கிறோம்.) நன்றிப் பெருக்குடன் நம்மை ஆசீர்வதித்தார்கள்.
மங்கள இசையை மெய்மறந்து கேட்டப்படி நின்றுகொண்டிருந்தோம். அடுத்து சில நிமிடங்களில் மேள தாளத்துடன் ஸ்வாமி புறப்பாடு.
தலைவர் ஆலயத்திலிருந்து வெளியே வரும் அந்த நேரம்… வாவ்…. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் காண முடியாத காட்சி இது. எத்தனை அழகு பாருங்கள்…
கருங்கூந்தலை கொண்ட ஒரு சுமங்கலியின் நெற்றியில் காணப்படும் திலகம் போல, பௌர்ணமி மாலையில், திலகம் போன்ற கோபுரமும் அதன் கீழே காரணீஸ்வரரும் பொற்கொடி அம்பாளும் எழுந்தருளியது… சிகரமாய் அமைந்தது.
ஒரே பரபரப்பு… தள்ளுமுள்ளு… அதில், நமது கேமிராவின் பவுச் எங்கோ விழுந்துவிட்டது. அது நமக்கு தெரியாது. ஆனால் கோவிலில் அப்போது தரிசனத்திற்கு வந்திருந்த ஒரு வயதான அம்மா, நம்மை தேடி வெளியே வந்து நம்மிடம் “தம்பி, இது கீழே விழுந்துடிச்சு பாருங்க…” என்று கொடுத்துவிட்டு சென்றார்கள்.
காரணீஸ்வரரருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடுத்து நேரே காசி விஸ்வநாதர் கோவில் பயணம்.
விஸ்வநாதர் கோவில், ஜெகஜோதியாய் இருந்தது. எப்பொழுதும் சுமார் எட்டு மணிக்கெல்லாம் பரபரப்பு அடங்கிவிடும் இந்த கோவில், அப்போது தான் பரபரப்பாக இருந்தது. பக்தர்கள் திரள் திரளாக வந்தவண்ணமிருந்தனர்.
கூடை கூடையாக அன்னாபிஷேகம் செய்த அன்னம் வெளியே வந்தவண்ணமிருந்தது. அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை முடிந்தபின்னர், ஒரு தொன்னையில் அன்னாபிஷேகம் செய்ய அன்னத்தை பெற்றுக்கொண்டு சன்னதியின் முன்பு யாருக்கும் தொந்தரவு இல்லாத வண்ணம் சற்று ஓரமாக நின்றுகொண்டோம்.
கண்குளிர தரிசனம். கண்களை மூடி நம் வாசகர்கள் அனைவருக்காகவும் ஒரு சில நிமிடங்கள் பிரார்த்தனை.
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கிரங்கி இருந்தருள்செய்
பாதிரிப் புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்
வைத்த தீவண்ணனே
என்ற திருநாவருக்கரசரின் பாடல் நினைவுக்கு வந்தது.
“ஐயனே.. அறிந்தோ அறியாமலோ இதுவரை நான் செய்த பாவங்களுக்கு எத்தனை பிறவி காத்திருக்கிறதோ எனக்கு தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் எந்தப் பிறவி எடுத்தாலும் உன்னை மறவாதிருக்கும் வரம் ஒன்றை மட்டும் தா போதும். உன்னை மறந்திருக்கும் நிலை எனக்கு ஒருக்கால் ஏற்பட்டால் அந்த ஜென்மத்தை அந்த நொடியே முடித்துவிடு!” என்று வேண்டிக்கொண்டோம்.
ஏனோ தெரியவில்லை…. மனதில் ஒரு இனம் புரியாத பாரம்.
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.
நம் எல்லோர் நிலையும் அவன் முன்பாக இப்படித் தானே போய்கொண்டிருக்கிறது?
தொடர்ந்து அன்னையை தரிசித்துவிட்டு அங்கும் அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு அனைத்து சன்னதிகளுக்கும் சென்று விட்டு இறுதியில் கோ-தரிசனம் செய்துவிட்டு சிறுது நேரம் அமர்ந்தோம்.
மனதில் இன்னும் அந்த பாரம் நீங்கவில்லை. (சில நேரங்களில் நமது இறுக்கத்திற்கு காரணம் நமக்கு புரியாது. அது போலத் தான் இது.)
அப்போது, கோவில் செக்யூரிட்டியிடம் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. வாசலில் பூ விற்கும் பெண்களின் குழந்தைகள் அவை என்று தெரிந்தது.
அவர் அக்குழந்தைகளை நோக்கி குனிவதும், அக்குழந்தைகள் அவர் காதுகளில் ஓடிவந்து “ஊ….” என்று கத்துவதுமாக இருந்தன. அவர் உடனே காதுகளை பொத்தி, “ஆ… கூசுதே” என்று நடிப்பதும் அக்குழந்தைகள் கைகொட்டி ஆனந்தப்படுவதுமாக இருந்தன.
இவர்கள் விளையாடுவதை வேறு ஒரு குழந்தை பார்த்துக்கொண்டிருந்தது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று அது ஏங்குவது புரிந்தது.
“என்ன.. உனக்கு காதுல கத்தனுமா? இந்தா என் காதுல கத்து பார்க்கலாம்…” என்று அந்த குழந்தையின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தோம்…. ஓடிவந்து, “ஊ….” என்று கத்திவிட்டு நாம் கூசுவதைப் போல நடிப்பதை பார்த்து அதற்கு ஒரே சந்தோஷம். மூன்று குழந்தைகளும் சேர்ந்து மாறி மாறி நம் காதில் கத்தி கத்தி விளையாடிக்கொண்டிருந்தனர்.
கள்ளம்கபடமற்ற அந்த குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறி விளையாடிக்கொண்டிருந்தோம். கருவறையில் நாம் காண முடியாது தவித்த எங்கள் தலைவனை அந்த குழந்தைகளின் கள்ளம்கபடமற்ற சிரிப்பில் கண்டோம். இல்லையில்லை உணர்ந்தோம்.
மனதில் இருந்த இனம் புரியாத பாரம் நமக்கு இறங்கியிருக்கும் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா என்ன?
இது போன்ற கோவில்களுக்கு செல்லும்போது அங்கு இருக்கும் குழந்தைகளுடன் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவறவிடவேண்டாம். கருவறையைவிட இங்கு நீங்கள் அவனை உண்மையாக உணரலாம்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
(இந்த பதிவின் நோக்கம், ஒரு ஆலய தரிசனத்தின் போது எவற்றுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது தான். நம்முடன் சேர்ந்து அண்ணலை தரிசித்த திருப்தி உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், இப்பதிவின் நோக்கம் நிறைவேறியதாக மகிழ்வோம். நன்றி!)
============================================================
Also check :
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு வாங்க – ஒரு கோடி பிரதோஷ தரிசன பலனை அள்ளுங்க!
புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா?
அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
============================================================
[END]
வணக்கம்……….
அன்னாபிஷேக தரிசன பதிவு அருமை……நாங்களும் தங்களுடன் பயணித்து இறைவனை தரிசித்து மகிழ்ந்த உணர்வு ஏற்படுகிறது………..
உங்கள் தலைவரிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பு வியக்க வைக்கிறது……….கொஞ்சம் எங்களுக்கும் அருள் புரிய சொல்லுங்கள்…….
Dear Shri Sundarji,
I cannot find out any words to express my feelings on your articles. I am sure that you are really blessed by the God, to have such niece experiences and a wonderful skill to share with us.
I pray almighty to give you all his blessings to you for a great and prosperous future.
With best regards,
Irungovel
Thank you sir for your good words and encouragement.
அன்னதான பதிவை இதைவிட சிறப்பாக யாராலும் கொடுக்க முடியாது மிக அருமையான பதிவு.
கோவில் கோபுரங்கள் மற்றும் அனைத்து படங்களும் கண் கொள்ளாக் காட்சி. நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
//கருங்கூந்தலை கொண்ட ஒரு சுமங்கலியின் நெற்றியில் காணப்படும் திலகம் போல, பௌர்ணமி மாலையில், திலகம் போன்ற கோபுரமும் அதன் கீழே காரணீஸ்வரரும் பொற்கொடி அம்பாளும் எழுந்தருளியது… சிகரமாய் அமைந்தது.// அழகான உவமை .
விருபாக்ஷீஸ்வரர் கோவில் அமைவிடம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
நமக்கு படி அளக்கும் இறைவனை அன்னாபிஷேக நன்னாளில் குளிர்வித்தது அறிய மிக்க மகிழ்ச்சி.,
அடுத்த முறை நாமும் அன்னாபிஷேக நிகழ்சிகளில் கலந்து கொள்வோம்
நன்றி
உமா
கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்திய அற்புதமான பதிவு. அன்னாபிஷேகத்தின் அருமை பெருமைகளை புரிய வைத்த பதிவுக்கு நன்றி சுந்தர்.
உண்மைதான் சுந்தர் – ஒரே தலைவர் நம் எல்லோருக்கும் தலைவர் அனைத்து உயிர்களையும் காக்க விஷத்தை உண்ட தலைவர் – நம் அண்ணாமலை அருணாசலம் லிங்கேஸ்வரன் ஒருவர்தான். அனைத்து தகுதிகளையும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர் பரமசிவம்.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமச்சிவாய!
இந்தப் பதிவிற்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தோம். நாம் முன்னரேத் தெரிவித்திருந்தபடி, தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த முறை சிவபெருமானைத் தொழ முடியவில்லை. தங்களின் விவரிப்பில், இறைவனையும் அம்பாளையும் நாமே சென்று நேரேத் தரிசிக்கும் உணர்வுகளை இப்பதிவானது ஏற்படுத்தியது.
மிக்க மகிழ்ச்சி,
வெங்கட்
அருமையான பதிவு
சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்க்கையில் மலை போன்ற கவலைகளை பொடி பொடியாக்கிவிடும் என்பதை மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் விளக்கியமைக்கு நன்றி
மனம் ஒரு குப்பைதொட்டி
அனுதினம் அதை சுத்தம் செய்யாவிடில் ஆரோக்கியத்தையும் அமைதியையும் தேடி அலையும் நிலை ஏற்ப்படும்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற கூற்றுக்கேற்ப நித்தம் ஆலைய தரிசனம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் இனம் புரியாத அமைதியையும் ஆத்மதிருப்தியையும் கொடுக்கும்
இறைவனின் சன்னதியில்
அந்த பரம்பொருளை உச்சி முதல் பொற்பாதம் வரை கண்குளிரகண்டு ரசித்து,
இருள் சூழ்ந்த அந்த கர்பக்ரஹதில் தாமரை போல் மலர்ந்த முகம், கருணை மலை பொழியும் அந்த பார்வை ,
ரோஜா இதழ் விரிந்தது போன்றதொரு புன்னைகை,
நான் இருக்கிறேன் உன்னை காப்பாற்ற என்று கூறும் அபயஹஸ்தம், ஆத்மார்த்த சரணாகதியை உணர்த்தும் பொற்பாத கமலங்கள்
இப்படி அணு அணுவாக ரசித்து மனதில் உள்ள பாரங்களை எல்லாம் அந்த பொற்பாதத்தில் இறக்கி வைத்துவிட்டு தெளிந்த மனதோடும் முழு நம்பிக்கையோடும் நமது கடமையை ஆற்றுவோமேயானால் சென்றடைவதர்க்கான வழியையும் கடந்து செல்வதற்கான பாதையும் அந்த பரம்பொருளே நமக்கு காட்டி அருள் செய்வார்
சுந்தர் அவர்களே
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும்பொழுது மேற்கூறிய அனுபவத்தை உணர்கிறோம்
ஆலயம் தொழுவோம்
இயன்றதை செய்வோம்
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க பிரார்த்திப்போம்
தலைவர் என்ற வார்த்தை பிரயோகம் சரியானதல்ல. இங்கே நம்ம ஊர் அரசியல்வியாதிகள் தங்களை தலைவர் என்றழைப்பதை விரும்பியும், தலைவா என்று அழைப்பவர் அவரை நிச்சயம் கவிழ்க்கப் போகிறார் என்பதும் நாமறிந்ததே. யாரவது, தலைவா என்றழைத்தால் அது போலி அல்லது கேலி. இன்னொன்று, தலைவா என்றழைத்தால் அவருக்கு ரொம்ப நெருக்கம் என்று காட்டிக் கொள்வதாக அர்த்தம்,
தலைவர் என்பதற்குப் பதில் “எல்லாம் வல்ல ஈசன்” அல்லது “எல்லாம் வல்ல இறைவன்” என்றழைக்கலாம். அன்பு மிகுதியால் நாம் அவனை செல்லமாக “நமக்குள்” எவ்வாறேனும் அழைக்கலாம், ஆனால் இதுபோன்ற பொது தளங்களில் வேண்டாமே. உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கலியுகத்தில் அவனது நாமத்திற்கு மகிமை அதிகம். “ராமா” “கிருஷ்ணா” , “நம சிவாய” என்ற அவனது நாமமே எங்கும் ஒலிக்க வேண்டும். அதைவிடுத்து, தலைவா, தலைவி, ஐயா, தளபதி என்ற சொற்கள் வேறொன்றை மட்டுமே நியாபகப் படுத்தும். இது தேவையா?? சிந்திபீர்.
நாமனைவரும் நமக்கு வழிகாட்டும் தலைவனாக கொண்டாடவேண்டியது இறைவன் ஒருவனையே என்பதை வலியுறுத்தவே அந்த சொல்லை பிரயோகித்தேன். மற்றபடி உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன். இனி பார்த்துக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி.
– சுந்தர்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடை யாரவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
ஒரு இல்லத்தில் மூத்தவரையே குடும்பத் தலைவர் எனும்போது இந்த அகிலத்தின் தந்தையை தலைவர் என்றழைப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது…….
தகுதியில்லாதவர்களையே தலைவா என்றழைக்கும் போது நம் தந்தையை ஏன் தலைவர் என்றழைக்கக் கூடாது?
பிழை இருப்பின் பொறுத்தருளவும்……….
அருமையான பாடல். மிகச் சரியான விளக்கம்.
நன்றி…நன்றி!
– சுந்தர்
நம் திருஞான சம்பந்தரே நன்றுடையானை என்ற பாடலை சிவனை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
// கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதின் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவரல்லாமை உரைப்பீர்கள்
நிலவரை நீல முன்டதும் வெள்ளை நிறமாமே//
ஆகையால் இறைவனை தலைவா என்று சொல்வதில் தவறு இல்லை
நன்றி
உமா
மதிப்பு மிக்க நண்பருக்கு இன்றுதான் முதல்தடவையாக ரைட் மந்திர இணைய தளத்தை பார்த்தேன். மிகவும் அருமை. பொறைமை குணம் கொள்ளக்கூடாது. அனால் இன்று நான் உங்கள் மீது பொறமை கொள்கிறேன். ஒரு அற்புதமான இணைய தளத்தை தொடங்கி அதில் எண்ணற்ற மிகவும் பயனுள்ள செய்திகளை வழங்கி மக்கள் பயனடைய செய்துளீர்கள். தொடரட்டும் உங்கள் இறைபணி. நாம் வணகுகின்ற இறைவனும், மாகன்களும் துணை இருந்து இந்த நல்ல காரியத்தை முன் நின்று வழி நடத்த பிரார்த்திகிறேன்