அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்னத்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது நிச்சயமாக உண்மை.
எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கிறோம் அல்லவா?
அந்த முறைப்படி ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்து, அதை முழுமையாக சுவாமிக்கு சாத்துவது, இந்த ஐதீகத்தின் முறை என்றும் காரண காரியம் கூறப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தில் உலகளாவிய தத்துவம் ஒன்றும் உள்ளடங்கிக் கிடக்கிறது.
அதாவது சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான விளக்கம், ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட சமஸ்கிருத கந்த புராணத்திலும், தமிழில் 3 ஆயிரம் பாடல்களைக் கொண்ட திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா? சிவலிங்கம் என்பது ஆகாயம்.
ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.
இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.
அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான– தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.
அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்திய அன்னாபிஷேகம் நடைபெறும்.
அதை செய்பவர்களும், தரிசிப்பவர்களும் அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது நிதர்சனமான உண்மை. அந்த ஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது.
சிவனுக்கு அபிஷேகித்த சாதப் பிரசாதத்தை காக்கைக்கு சிறிதளவு வழங்கிவிட்டுச் சாப்பிட்டால், பித்ருக்களின் ஆசீர்வாதமும் இறைவனின் பேரருளும் ஒருசேரப் பெறலாம் என்பது ஐதீகம். இந்தப் பிரசாதத்தைப் பெறுவதற்காகவே, அன்னாபிஷேக நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவாலயங்களுக்கு படையெடுக்கின்றனர். இந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டால், இல்லத்தில் தரித்திரம் வெளியேறும்; சகல ஐஸ்வரியங்களும் குடியேறும்.
இன்று நம் தளம் சார்பாக மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சில சிவாலயங்களுக்கு அன்னாபிஷேகம் செய்ய அரிசி வாங்கித் தரப்படவுள்ளது. மாலை பல சிவாலயங்களுக்கு சென்று தரிசிக்கவிருக்கிறோம்.
வாசகர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கும் இதே போன்று அரிசி (பச்சரிசி) வாங்கித் தந்து அன்னாபிஷேகத்தில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்று தவறாமல் நமக்கெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனை தரிசனம் செய்து அளவற்ற பலன்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
======================================================
Also check :
அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
======================================================
[END]
நல்லது நண்பரே. இன்று பூஜையின்போது நான் நினைத்தேன், இன்று அன்னாபிஷேகம் அன்று தங்கள் கட்டுரை ஒன்று வந்தால் நன்றாக இருக்குமே என்று. நான் இன்னும் தங்கள் படிக்கக் கூட இல்லை. ஆனால் மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம். என் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டீர்கள். மிக்க நன்றி.
ராஜ்குமார் அவர்கள் சொல்வதைப் போல, இன்று நம் தலத்தில் அன்னாபிஷேகம் பற்றி போடுவீர்களா என்று சிந்தித்துக்கொண்டே ஒப்பன் செய்தேன். பார்த்தால், காலையே போட்டுவிட்டீர்கள். மகிழ்ச்சி.
பதிவை படித்ததிலிருந்து இன்று நிச்சயம் சிவபெருமானை தரிசிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். கோடி தரிசன பலனை விட யாருக்கும் மனம் வரும்?
நன்றி!
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
உலகத்துக்கே படியளப்பவனின் இன்றைய அன்னாபிஷேகத் தினத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்க அப்பரம்பொருளை வேண்டுவோம்.
– வெங்கட்
அன்னாபிஷேகம் பற்றியும் அதன் சிறப்பையும் அறிந்துகொண்டோம்
அழகான பதிவு
நன்றி …….
அன்னாபிஷேக பதிவிற்கு nandrigal பல . இறைவனை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. இறைவன் எல்லோருக்கும் அருள் puriyattum.
நன்றி
uma
இறைவனின் அருளால், இன்று கோடி லிங்க தரிசனம் திருத்தொண்டீஸ்வரப் பெருமான் ஆலயத்தில் கண்டேன். பதிவிற்கு நன்றி. அண்ணாபிசேகத்தில் அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபம் கொள்ளை அழகு. மீண்டும் நன்றிகள்.