எப்படியும் வீட்டுக்கு போரூர் வழியாகத் தான் செல்லவேண்டும் என்பதால் “முடிந்தால் நிச்சயம் வருகிறேன் சார். திருப்புகழ் பாடுவதை கேட்பதைவிட வேறு என்ன முக்கியமாக இருக்கமுடியும்?” என்றோம்.
சொன்னபடியே சரியாக 8.10 மணியளவில் காரம்பாக்கம் சென்றுவிட்டோம். குழந்தைகள் பாடிக்கொண்டிருக்க, அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகரை தரிசித்துவிட்டு, வள்ளி லோச்சனா பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தோம்.
குழந்தைகள் பாடி முடித்ததும் விழா குழுவினர் சார்பாக பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். தேவாரம் திருப்புகழ் பாடுபவர்களை கௌரவிக்க கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாம் தவறவிடுவதில்லை. எனவே சபை நடுவே இருவரையும் கௌரவிக்க நமது விருப்பத்தை குழந்தைகளின் தாத்தா திரு.சுவாமிநாதனிடம் தெரிவித்தோம். முருகனருளால் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
“உங்கள் பாடலால் இந்த பகுதி பவித்திரம் பெற்றது. உங்கள் தேவார, திருப்புகழ் தொண்டு மேன்மேலும் வளர ஆனைமுகனும் முருகப் பெருமானும் துனையிருப்பார்களாக.” என்று குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி குழுமியிருந்த பக்தர்களின் கரகோஷத்துக்கு நடுவே பொன்னாடை அணிவித்தோம்.
மேடையைவிட்டு இறங்கியதும், சிறுவர் பட்டாளம் ஒன்று குதூகலத்துடன் எதற்கோ காத்திருந்ததை கவனித்தோம். அருகே ஒரு பெரிய ஸ்டாண்டில் வெண் திறை வேறு காணப்பட்டது. என்ன ஏதென்று விசாரித்ததில், நிகழ்ச்சி முடிந்தவுடன் ப்ரொஜெக்டரில் ‘அகத்தியர்’ திரைப்படம் காட்டப்படவிருப்பதாக கூறினார்கள். கேட்கவே அத்தனை சந்தோஷமாக இருந்தது. ‘அகத்தியர்’, ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர், ‘தசாவதாரம்’ போன்ற பக்தி திரைப்படங்களை நாம் டி.வி.டி.யிலோ அரிதாக ஏதோ தொலைக்காட்சியிலோ பார்க்க நேரும்போதெல்லாம், இந்த கால சந்ததியினருக்கு இந்த படங்கள் பற்றி தெரியாமலே போகும் அபாயம் இருக்கிறதே என்று அச்சப்படுவது உண்டு.
நாம் வளர்ந்த காலகட்டங்களில் எங்கள் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், நிகழ்ச்சிகளில், இரவு இது போன்ற படங்களை ப்ரொஜெக்டரில் காட்டுவார்கள். (அப்போதெல்லாம் பிலிம் சுருள் தான். டி.வி.டி. கிடையாது.). மேற்படி திரைப்படங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டவர்கள் பலர் உண்டு. நற்சிந்தனை சிறுவயதிலேயே விதைக்கப்பட அது ஒரு காரணமாக அமைந்தது. ஆனால்… இப்போது? இந்த வழக்கமே முற்றிலும் நீங்கிவிட்டதொரு சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன், நமது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
விழா அமைப்பாளரை நமக்கு திரு.சுவாமிநாதன் அறிமுகம் செய்துவைத்தார். அவரிடம் இது பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தோம். எதிர்காலத்தில் இது போன்ற பக்தி திரைப்படங்களை ப்ரொஜக்டரில் ஒளிபரப்பினால், நமக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அந்தப் பணியில் நம்மையும் ஈடுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் கூறியிருக்கிறோம். அவருடன் மேற்கொண்டு மும்முரமாக நாம் பேசிக்கொண்டிருக்க, சுவாமிநாதன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
இங்கே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு இளம்பெண், தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து, அவரிடம் “சார்… சார்… குழந்தை ஒரே அழுகை. அந்த பாட்டை கொஞ்சம் போடுங்க சார்… இதோ இந்த பென் ட்ரைவ்ல கூட இருக்கு சார். ஏழாவது பாட்டு சார்.” என்று சொன்னார்.
“இப்போ முடியாதும்மா.. நான் வேற வேலையில இருக்கேன்” சற்று எரிந்து விழுவது போல அவர்களிடம் பதில் கூறினார்.
“சார் ப்ளீஸ் சார்… குழந்தை என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா… அழுவுறா… ப்ளீஸ் சார்… ஒரே ஒரு முறை ப்ளே பண்ணீங்கன்னா போதும்” அந்த பெண்மணியின் கெஞ்சல் அதிகமாக, நமக்கு பார்க்க பாவமாக இருந்தது.
நம்முடன் பேசிக்கொண்டிருப்பதால் தான் அவர்கள் கேட்பதை மறுக்கிறார் என்று கருதி, “சார்… அவங்க கேட்கிற பாட்டை போடுங்க… குழந்தை தானே… பாவம்… நான் வேணும்னா வெயிட் பண்றேன்” என்று நாம் அவரிடம் கூற, அவர் “இதான் லாஸ்ட் இனிமே தொந்தரவு செய்யாதீங்க” என்று கூறி, அந்த பென்டிரைவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.
அப்படி என்ன பாட்டு அது என்று அறிந்துகொள்ள, நாம் இங்கு ஆவலாக காத்திருந்தோம்.
பென்டிரைவை ஆம்ப்ளிபையரில் அவர் சொருக, இங்கே அந்த குழந்தையை மேடையில் ஏற்றிவிட்டார் அந்த பெண்.
சற்றைக்கெல்லாம்….
“ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை”
என்கிற பாட்டு ஒலிக்க அந்த குழந்தை மேடையில் தனக்கு தெரிந்த மழலை நடையில் அபிநயம் பிடித்து ஆட ஆரம்பித்தது. (அந்த பாடலின் வரிகள் போகப் போக மாறும்.) அடுத்த சில வினாடிகளில் அங்கிருந்த மற்ற குழந்தைகள் அனைவரும் மேடைக்கு ஏறிவிட்டார்கள். அனைவரும் சேர்ந்து அந்த பாட்டுக்கு ஆட ஆரம்பிக்க, நாம் ஒரு பக்கம் அதிர்ச்சி மறு பக்கம் அசடு வழிய நின்று கொண்டிருந்தோம். பரிதாபமாக!
“இந்த பாட்டுக்கா குழந்தை அடம்பிடிக்குதுன்னு சொன்னாங்க… கலிகாலம்டா சாமி… இது தெரியாம நாம ரெகமண்டேஷன்லாம் வேற பண்ணிட்டோம்…” என்று மிகவும் ஃபீல் செய்தோம். ஏற்கனவே அந்த பாடலை அங்கு ஒலிக்கவைத்திருப்பார்கள் போல… அதான் குழந்தை கப்பென்று பிடித்துக்கொண்டுவிட்டது.
மேடையில் அந்த குழந்தை ஆடுவதை அதன் அம்மா, ஆனந்தமாக பெருமை பொங்க மொபைலில் போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாம் முடியட்டும் என்று பொறுமையாக காத்திருந்தோம்.
பாடல் முடிந்ததும் அந்த அம்மா, குழந்தையை தூக்கிக்கொண்டு நகர, “மேடம்.. ஒரு நிமிஷம் வர்றீங்களா?”
என்ன ஏது என்பது போல பார்த்துக்கொண்டே நம்மிடம் வந்தார்கள்.
“என்ன சார்… ?”
‘குழந்தை அழறா, பாட்டு போடுங்க’ன்னு நீங்க சொன்னப்போ எனக்கு நீங்க இந்த பாட்டை தான் பிளே பண்ணச் சொல்றீங்கன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா, நான் இதுல தலையிட்டிருக்க மாட்டேன். தேவாரம் திருவாசகம் பாடின மேடையில் இந்த பாட்டை பிளே செய்ய சொல்லியிருக்க மாட்டேன்”
“இல்லே சார்… குழந்தை ரொம்ப அடம் பிடிச்சா அதான்”
“தப்புமா…தப்பு…. இப்போவே அந்த குழந்தை மனசுல நஞ்சை விதைக்காதீங்க”
நாம் பேசுவதை மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“குழந்தைகளுக்கு இது போன்ற சினிமா பாடல்கள் மீது மோகத்தை திணிக்காதீங்க. இந்த மாதிரி பாட்டுக்கு குழந்தைங்க ஆடுறதை பெருமையாவும் நினைக்காதீங்க..”
“பெருமையால்லாம் நினைக்கேலே… அவ அழுதா அதான் போடச் சொன்னேன்”
“குழந்தைக்கு என்ன தெரியும்? நாம தான் நல்லது கெட்டது சொல்லித் தரனும்”
“உங்க குழந்தைக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுங்க, தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாட கத்துக்கொடுங்க, மியூசிக்ல இண்டரஸ்ட் இருந்தா வயலின், வீணை இந்த மாதிரி மியூசிக் கத்துக்கொடுங்க… பாட்டு கிளாஸ் அனுப்புங்க.. ஓரளவு கத்துகிட்டதும் இதே மேடையில அவங்களை பெர்பார்ம் பண்ண வெச்சு அதை ஃபோட்டோ எடுத்து சந்தோஷப்படுங்க… ஆனா, இந்த மாதிரி சினிமா பாட்டுக்கு அவங்களை டான்ஸ் ஆட என்கரேஜ் பண்ணாதீங்க… அது அவர்களுக்கு நல்லதில்லே”
“இப்போவே காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு… அந்த குழந்தை வளர்ற காலகட்டத்துல இன்னும் மோசமா இருக்கும்… நம்ம குழந்தைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கிறது அத்தனை சுலபமா இருக்காது! எனவே பெற்றோர்கள் பிஞ்சு மனங்களில் எதை விதைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.”
“யாரோ முன்பின் தெரியாதவர் புத்திமதி சொல்வதாக நினைக்காதீங்க… என்னோட தங்கைக்கும் இதே போல ஒரு குழந்தை இருக்கிறாள். அவளுக்கும் இதையே தான் நான் சொல்வேன்…”
“டி.வி.யில் இதை செய்கிறார்கள், ஏதோ சம்பந்தப்பட்ட குழந்தையின் மிகப் பெரிய சாதனை போல சித்தரிக்கிறார்கள், காட்டுகிறார்கள் என்றால், அவர்கள் நோக்கம் வணிகம். பணம் சம்பாதிப்பது. நமது குழந்தைகள் மனதில் வக்கிரங்களை திணித்து அவர்கள் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். நாம் ஏன் அதற்கு துணை போகவேண்டும்? நம் கையை வைத்தே நம் கண்ணை குத்த அனுமதிக்க வேண்டுமா?”
நான் சொல்வதை அங்கிருந்த மற்ற இரண்டு மூன்று பெண்களும் ஆமோதிப்பது போல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“சினிமா சாங்ஸ், டி.வி. இதெல்லாம் குழந்தைங்க பார்க்கவே கூடாதுன்னு நான் சொல்லலே… ஆனா, அது மேல் ஒரு ஆழமான மோகத்தை (a craze) நீங்களே உங்க குழந்தைகளுக்கு ஏற்படுத்திடாதீங்க. பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்துக்கும் சினிமா சாங்க்ஸ் ரொம்ப முக்கியம் அப்படிங்கிற IMPRESSION உங்கள் குழந்தைகளுக்கு வரவேகூடாது!”
“இதே மேடையில, இந்த குழந்தை பரதநாட்டியம் ஆடுறதை நான் பார்க்கணும். அது தான் என்னோட ஆசை!!” என்று முடித்துக்கொண்டோம்.
நாம் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று நமக்கு தெரியாது. நாம் சொல்வதை நின்று கேட்டுக்கொடிருந்ததே பெரிய விஷயம் என்று கருதுகிறோம். நிச்சயம் சிந்திப்பார்கள். அது போதும் நமக்கு.
இதுவே அந்த குழந்தையின் பர்த்டே பார்ட்டியிலோ அல்லது ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியிலோ நடந்திருந்தால் கூட ஒன்றுமில்லை. ஆனால் ஒரு கோவில் விழா மேடையில் அதுவும் வற்புறுத்தி கேட்டு நடைபெற்றபடியால் இந்த குமுறல்… நம் ஆதங்கத்தில் நியாயம் உள்ளதாக கருதுகிறோம்…!
ஊரைத் திருத்துவது நம் நோக்கமல்ல. குறைந்தபட்சம் நமது தள வாசகர்களாவது அவரவர் குழந்தைகளை நல்ல முறையில், நற்பண்புகளோடு வளர்த்து … சவால்கள் தீயவைகள் நிறைந்த எதிர்கால சூழ்நிலைக்கு அவர்களை தயார் படுத்தவேண்டும் என்பதே நமது நோக்கம்.
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்…!
===================================================================
பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இப்படிப்பட்ட விஷயங்களில் ஈர்க்கப்படுவதன் காரணம் என்ன?
நிச்சயம்… 90% காரணம் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களால் தான்.
இது தொடர்பாக முகநூளில் காரசாரமாக பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் பதிவு ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
4.தனியார் சேனல்களும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி எந்த தனியார் டி.வி.யோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள், விரச வரிகள் – சே… ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.
1.நேத்து ராத்திரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.
இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை. இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும்.
[END]
சரியாக சொன்னீர்கள் சுந்தர்.. நான் இது போன்ற நிகழ்சிகளை அறவே வெறுப்பவன். வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபட பெற்றோரே துணை போவது வேதனையிலும் வேதனை. எல்லாம் அந்த தொலைக்காட்சி நிறுவனமும் ஸ்பான்சர்களும் மக்களை இப்படி மாய வலையில் சிக்க வைக்கிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றால் 50-60 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய வீடு என்னும் பொழுது பேராசை வந்துவிடுகிறது. பிள்ளைகள் கேட்டு போவதற்கு பெற்றோர்களே 60% காரணம் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.
நன்றி
ofcourse this is reality. we get absirbed by reality shows and serials in tvs. This only leads us to destroy our tradition. good that atleast u have taken a step bt simple advice
ஆரம்பத்தில் அழகாக போய்க் கொண்டிருந்த பதிவு பின்னால் விரும்பத்தகாத சூழ்நிலைகளை தாங்கள் சித்தரித்ததை படிக்கும் பொழுது என்னவோ போலிருந்தது. தங்கள் குழந்தைகளை ஆக்கப்பூர்வமான பாதைக்கே பெற்றோர் அழைத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் கடமையை செவ்வனே உணர்ந்தது செயல்பட்டால் குழந்தைகள் நல்ல விதமாக வளர்வார்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் சிறுவயதில் நல்லதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் பின்னால் எப்படி ஒழுக்க முடையவர்களாக இருப்பார்கள். முடிந்தவரை குழந்தைகளை டிவி பார்க்க allow பண்ணக்கூடாது. அதற்கு பதில் நன்கு விளையாட அனுமதிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு நல்லது கற்றுக் கொடுக்கும் குருவாகவும் ஆசானாகவும் நாம் இருப்போம்.
நன்றி
உமா
வணக்கம்…….
தங்கள் மனக்குமுறல் சரிதான்……….
எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாட்டு மற்றும் பரதநாட்டியம் கற்றுத்தரும் பள்ளியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்……
அண்ணா
மிகவும் சரியாக சொன்னிர்கள் .குழந்தைகளை ஆட வைத்து வியாபாரம் செய்யும் டிவி சேனல்களை பெற்றோர்கள் முழுவதுமாக வீட்டிற்குள் தடை செய்ய வேண்டும்.
சுபா
சுந்தர் அய்யா,
ஆணி தரமான உண்மை. காசு சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கும் போது, கேவலம் கீழ்த்தரமான நெடுந்தொடர்களையும், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பாலியல் வன்மங்களை திணித்து பணம் சம்பாதிக்கும் மனிதர்களை திருத்தவே முடியாது.
சங்கரநாராயணன்.கு
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவை புகட்டுவதை விட ஆபாச சினிமா பாடல்களை பாடுவதை பெருமையாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்
அந்த காலத்தில் பாட்டு என்றால் கர்நாடக சங்கீதமும் ,நடனம் என்றால் பரத நாட்டியமும் இருந்தது போக இன்று சினிமா பாடல்களையும் ,சினிமா நடனங்களையும் கற்று கொடுத்து தொலைகாட்சியில் விரசம் மிகுந்த பாடல்களை அதன் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் பாடுவதை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது
நியாயமான ஆதங்கம் சுந்தர் சார். நம் பிள்ளைகளை நாம் தான் வழி நடத்தணும். நல்லது, கேட்டது புரிய வைக்கணும். அதுவும் ஒரு கோயிலின் விழாவில், இந்த மாதிரி கேளிக்கை பொழுதுபோக்கு விசயங்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது.
மிக மிக அருமையான பயனுள்ள பதிவு..
கொடுமையான பாலியல் செய்திகளையும் கீழ்த்தரமான செய்திகளையும் வெளியிடும் ஊடகங்கள் இந்த தலைமுறை இளைஞர்களிடம் நஞ்சை விதைக்கும் நிலை மாறவேண்டும்..
விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்ற விசயங்கள் வீட்டின் வரவேற்ப்பு அறைக்கே வருவது எவ்வளவு கொடுமை?
கோயில் தவிர வேறு இல்லையா என குழந்தைகளைக் கேட்க வைக்கும் அளவுக்கு பால்பட்டுப்போன சமுதாய சீரழிவு மாறவேண்டும் ….
நாம் பெற்ற தோல்விகள் நம் குழந்தைகள் பெறக்கூடாது என்று செல்லம் கொடுத்து சீரழிக்கும் பெற்றோர்கள் மனம் நல்வழியில் திரும்பவேண்டும்..
நடை உடை மாற்றுவதா நாகரீகம்?
பக்தியும் நல்ல பண்புகளும் குறைவது அழிவின் ஆரம்பம்…
நமக்கு முன் வாழ்ந்தோர் அனைவரும் நாகரீகத்தின் உச்சியில் வாழ்ந்தவர்கள் …
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!
சினிமாவில் நடிப்பவர்கள், பாட்டு எழுதுபவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே தொழிலாக(!?) கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் எல்லாம் இந்த சமூகத்தை கெடுத்து ஒன்றுக்கும் உதவாதவர்களாக, குடிகாரர்களாக, கொலைகாரர்களாக மாற்றுவது மட்டுமே. சில நடிகர்கள் அடையாளப்படுத்தப் பட வேண்டியவர்களே இந்த சமூகம் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். (சிம்பு, தனுஷ் (ராகவேந்திரா!) , சிவகர்த்திகேயன் (சிவ, சிவ!) கார்த்தி (இவங்க அப்பாதான் அப்பப்போ நல்ல விஷயங்கள் கூறி நடிப்பார்) விமல், பரோட்டா சூரி (சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை), தாடி வெச்ச நடிகர், இன்னும் பேர் தெரியாத புது புது நடிகர்கள். இவர்கள் சமூகத்திற்கு சொல்லித் தருவது என்னவென்றால், வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றுவது எப்படி? எப்படி தண்ணி அடிக்கலாம்? எப்படி பொண்ணுகளை சைட் அடிக்கலாம்? எப்படி ஊரை கெடுக்கலாம்? இதற்குதான் கோடி கோடியாக பணம் கொட்டுகிறார்கள். போதக் குறைக்கு காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வார்த்தைகள். இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? பொழுதுபோக்கு என்பது மறைந்து இன்று முழு தினமும் பாட்டு கூத்து என ஆகி விட்டது. சட்டம் தனியே இயற்றினாலே இந்த நாடு மேலோங்கும்.
உங்களுக்கு தெரியுமா? அரபு நாடுகளில் இதுபோல நடிக்கவும் முடியாது, படம் எடுக்கவும் முடியாது. தண்டனை தான். இங்கே யார் இவர்களை கேட்கப் போகிறார்கள்? அரசாங்கமா? தனி மனிதர்களா? சமூகமா?
நல்ல பல படங்கள், நடிகர் நடிகைகள், பாடலாசிரியர்கள் என சமூகத்தில் இருந்த நிலை இன்று மாறி, தறி கெட்டுப போயுள்ளதற்கு காரணம் நம் மக்கள் தான். திரு. சுந்தர் அவர்களே, கோயில் உழவாரப் பணியுடன் இந்த நல்ல அரப் பணி நீங்கள் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தொடங்குவோம்…… இந்த அரப் பணியில், சமூகத்தின் அணைத்து மட்டத்தைச் சேர்ந்தவர்களும் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லாவிட்டால் கோயில் உழவாரப் பணி முடிந்தவுடன், பந்தல் போட்டு ஒலி பெருக்கியில் அந்த சினிமா பாடல்களை போட்டு சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
நீங்கள் கூறுவது உண்மையிலும் உண்மை. இளைஞர்களிடையே, பள்ளி மாணவர்களிடையே இன்று குடிப்பழக்கம், புகைப்பழக்கம் சர்வசாதாரணமாக காணப்படுகிறது. அதற்கு காரணம், மேற்படி திரைப்படங்களே என்றால மிகையாகாது. ‘கதாநாயகன் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுபவன்’ என்றே முடிவு செய்துவிட்டார்கள். அவனையும் நேசிக்க, கதாநாயகி என்ற ஒருத்தி. எங்கே போய் முட்டிக்கொள்வது? நிழலை பார்த்து நிஜத்தில் இளைஞர்கள் சீரழிந்து போகிறார்கள். அவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க, இவர்கள் கடைசியில் தெருக்கோடிக்கு வந்துவிடுகிறார்கள்.
நீங்கள் கூறுவது போல, உழவாரப்பணியை விட இந்த பணியே இப்போது சமுதாயத்துக்கு தேவை. என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பது குறித்த உங்கள் கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். என்னால் முடிந்தால் செயல்வடிவம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
– சுந்தர்
summa nachunnu solli irukkinga mr. senthilkur…
இன்று அனைத்துமே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது…கல்வி கூட…இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கய நோக்கமே பணம் சம்பாதிப்பது தான்…கலந்து கொள்பவர்களுக்கும் பணம்…நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் பணம்…மற்றபடி இத்தகைய நிகழ்ச்சிகளின் நோக்கம் வேறு எதுவும் இல்லை….அவர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்க நம்மவர்கள் தங்கள் குழந்தைகளை அடகு வைக்கிறார்கள்..இந்த உண்மை எப்போது தான் புரியப் போகிறதோ?
—
தாலாட்டுக் கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் மலையேறி விட்டது…இப்போது எந்த வீட்டிலும் தாலாட்டு என்பதே கேட்பதில்லை..வெறும் மியூசிக் சானல்கள் தான்….!
—
நெஞ்சு பொறுக்குதில்லையே……………….
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
கொடுமை வேற என்ன சொல்றது
இன்னும் வரும் காலத்தில் இனி பிறக்க போகும் குழந்தையின் நிலைமை நினைக்கவே கதி கலங்குகிறது
பெற்றோர் மட்டும் மாறினால் பத்தாது
பள்ளிக்கூடமும் அதே நிலைமை தான்
இப்போ எதுமே தப்பில (அளவுக்கு மிகாமல்)
அது என்ன அளவு தெரியவில்லை
எல்லாம் பண்ணிட்டு நல்ல மார்க் வாங்கின பெற்றோரும் கண்டுக்க மாட்டாங்க போல
செந்தில்குமார் அவர்களின் கருத்தை அப்படியே வார்த்தை மாறாமல் ஒப்புக்கொள்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எதிராக ஒரு புதிய போராட்டம் தேவை என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் விழிப்புணர்வு பிரசாரம்போல் ஏதாவது செய்யவேண்டும். எந்த டிவி சானல் போட்டாலும் குத்தாட்டம். எல்லோரும் சேர்ந்துகொண்டு சமூகத்தை சீரழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டால், மாற்றம் கொண்டு வருவது சற்றே கடினம்தான். நம் முயற்சியுடன் சேர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
வாழ்க வளமுடன்
என்னத்த சொல்ல , கொடும கொடும அப்படீன்னு சொல்லி கோவிலுக்கு போன அங்க ரெண்டு கொடும ஜங்கு ஜங்குனு ஆடுச்சுன்னு கிராமதில சொல்லுவாங்க அதுதான் நினைவு வருது.
Proud of u sundar………
We’re bothered only by the things directly related to money – cursing politicians for raising petrol prices, inflation; and other things.
But least bothered about our children and their bringing up way.
**
What’s not in our world – to destroy our children’s mind? fully tv, cinema etc.
**
People say, “good things which we don’t learn at age of 5, can’t be learned at the age of 50” – such an importance was given a decade earlier.
**
This cinema alone – teaches them the violence, sexual harassment, etc. but not teaching what ought to be taught – to raise from failures & poverty, facing criticisms, stress management, courage to raise from thoughts of non sense like suicide etc.
**
I’m certainly sure that I will do my part to my best to rectify this problematic way of bringing up the children with as many child as possible after the completion of some of my ambitions. 🙂
**
**Chitti**.
இந்த பதிவை படித்தவுடன் சமீபத்தில் நடந்த இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. எனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கே இரண்டாம் வகுப்பு படிக்கும் அவர்களது பெண் குழந்தை தனது பள்ளியில் வாங்கிய பரிசுகளை காட்டினாள். படிப்பிலும், விளையாட்டிலும் முதல் பரிசு பெற்ற சான்றிதழ்களை காண்பித்தாள். அவளை பாராட்டி விட்டு உனக்கு வேறு என்ன வெல்லாம் தெரியும் என்று கேட்டேன். எனக்கு பாட்டு பாட தெரியும் அங்கிள் என்று சொல்லி ஒரு பாட்டு பாடினாள். அந்த பாட்டு நீங்கள் பதிவில் குறிப்பிட்ட அதே “வை பை” பாட்டுதான். இரண்டு வரி பாடியதும் போதும் என்று சொல்லியும் நிறுத்தாமல் பாடிகொண்டே இருந்தாள். அந்த பாடலை முழுவதும் மனப்பாடம் செய்து வைத்து உள்ளால். அந்த பாடல் வரிகள் அனைத்தும் எவ்வளவு விரசம் என்று அனைவருக்கும் தெரியும். அவள் அம்மா அதை பெருமையாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக அவளை பாதியில் பாட்டை நிறுத்த சொல்லி விளையாட அனுப்பி விட்டு அவள் அம்மாவிடம் இது பற்றி கேட்டேன். அவர்கள் டிவி யில் அடிக்கடி இந்த பாட்டை தான் போடுறாங்க. அத பாத்து பாத்து அவளுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு. நாங்க என்ன பண்றது என்று சொன்னார்கள். அவ சின்ன பொண்ணு தானே பாட்டுக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது. மியூசிக் கேக்க நல்லா இருக்கு எதோ பாடிட்டு போறா, இதுல என்ன தப்பு என்று சொன்னார்கள். சரி அவர்களிடம் பேசி பயனில்லை என்று வந்து விட்டோம்.
2. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று எங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடினார்கள். அப்பொழுது பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சிகள் ஒலி பெருக்கியில் கேட்டது. அதில் டான்ஸ் போட்டி அறிவித்து மேலே குறிப்பிட்ட அதே பாடலை ஒலி பரப்பினார்கள். ஒரே கை தட்டல், விசில். நமது சுதந்திர தின பதிவிலேயே குறிப்பிட எண்ணினேன். எங்கே போய் கொண்டு இருக்கிறது நம் சமூகம்?
வீடு மற்றும் பள்ளி இரண்டு இடங்களில் தான் வளரும் குழந்தைகள் நிறைய கட்டரு கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் சூழ்நிலை இவ்வாறு இருந்தால் நல்ல விசயங்களை அவர்கள் எங்கிருந்து கற்று கொள்வார்கள்?