Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

print
‘செந்தமிழ் அரசு’ ஐயா திரு.கி.சிவக்குமார் அவர்களின் ‘பெரிய புராணம்’ விரிவுரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோடம்பாக்கம் சாமியார் மடத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சில வாரங்கள் கலந்துகொள்ளும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. மற்ற சைவ நூல்களிலிருந்து பெரிய புராணம் எந்தவகையில் சிறப்பு பெற்று விளங்குகிறது என்று திரு.சிவக்குமார் அவர்கள் கூறிய தகவல் சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு பாடலாக அவர் அவர் பொருள் விளக்கி விரிவுரை கூறுவதை நாளெல்லாம் அமர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். அத்தனை இனிமை. பெரியபுராணத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அறிந்தபோது பெரியபுராணத்தின் மீது அளவற்ற தாகம் நமக்கு தோன்றியது.

DSC03426

அப்போது அவர் கூறிய ஒரு தகவல் மிகவும் முக்கியமான ஒன்று. பெரியபுராணத்திற்கு ‘மங்கள நூல்’ என்றொரு பெயர் உண்டு. காரணம், எந்த இடத்திலும் அமங்களச் சொற்களை பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மங்களமான சொற்களையே சேக்கிழார் பெருமான் பயன்படுத்தி இருக்கிறாராம். மெய்ப்பொருள் நாயனார், ஏனாதி நாத நாயனார் போன்றவர்கள் பகைவர்களின் சூழ்ச்சி காரணமாக உயிர்த் தியாகம் செய்யும் தருணத்தே கூட அவர் அதை நேரடியாக கூறாமல் மங்களமாகவே கூறியிருப்பார். இந்த சொல்லாட்சி சேக்கிழார் பெருமான் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம். எனவ ‘பெரிய புராணம்’ நூலை வீட்டில் தினசரி ஓதி வந்தால் மங்களகரமான விஷயங்கள் அம்மனையில் தொடர்ந்து நடைபெறும் என்கிற தகவலையும் அவர் சொன்னார்.

சிவனடியார்களின் திவ்யசரிதத்தை கூறும் பெரியபுராணத்தின் மீது இயல்பாகவே நமக்கு பெரும் பற்று உண்டு. இப்போது பன்மடங்கு அதிமாகிவிட்டது. இதன் விளைவாக சேக்கிழாரின் பெரியபுராண பாடல்களுக்கு சிறப்பான விரிவுரை யார் எழுதியிருக்கிறார்கள், அது எங்கு கிடைக்கும் என்ற தேடலில் நாம் இறங்கியபோது நண்பர் திருவாசகம் பிச்சையா அவர்கள் மூலம், அமரர் சிவகவிமணி சி.கே.சுப்ரமணிய முதலியார் அவர்களின் பெரியபுராண உரையே மிகச் சிறந்த உரை என்கிற தகவல் கிடைத்தது. (சுப்ரமணிய முதலியார் தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் சமகாலத்தவர்!) தொடர்ந்து நடைபெற்ற தேடலில் SHAIVAM.ORG தளம் மூலமாக சி.கே.சுப்ரமணிய முதலியார் அவர்களின் பெரியபுராண உரை கோவை சேக்கிழார் நிலையத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.

C K Subramaniya Mudaliarமொத்தம் ஏழு தொகுதிகள் அடங்கிய அம்மாபெரும் பொக்கிஷத்தில் தற்போது மூன்று தொகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன என்றும் பாக்கி நான்கு தொகுதிகள் அச்சில் இருக்கின்றன என்ற தகவலும் கிடைத்தது. (ஒரு தொகுதியின் விலை ரூ.600/-)

கோவையிலிருக்கும் நண்பர் விஜய் ஆனந்த்தின் கணக்கில் பணம் செலுத்தி அவரை அந்த புத்தகங்களை வாங்கி கே.பி.என். பார்ஸல் மூலம் அனுப்பச் சொன்னோம். சொன்னபடி வாங்கி அனுப்பிவிட்டார்.

அந்த நூல்களில் ஒன்றான திரு.சி.கே.சுப்ரமணிய முதலியார் அவர்களின் ‘பித்தன் ஒருவனின் சுயசரிதம்’ நூலை தற்போது படித்துக்கொண்டிருக்கிறோம்.  என்ன சொல்ல…. இது உ.வே.சா அவர்களின் ‘என் சரிதம்’ போலவே அத்தனை சுவாரசியம். பிரமிப்பு.

1935 முதல் 1955 வரை சுமார் இருபதாண்டு காலம் பெரியபுராணத்திற்கு உரை எழுதும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறார் திரு.சுப்ரமணிய முதலியார். ஒரு தனிமனிதரின் வாழ்வில் ஏறக்குறைய இருபது ஆண்டுகாலம் பெரியபுராணத்திற்கு உரைசெய்யும் பணி நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சாதனை!

இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் கடல் போல் கருத்துக்கள் நிரம்பியன. வேறு எந்த இந்திய மொழிகளில் இத்துணைப் பெரிய விரிவுரை இதுவரை வெளியாகவில்லை என்பதே இவரின் உரைக்குக் கிடைத்த பெருமையாகும். அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர். வழக்கு மன்றப் பணிகளோடு சைவப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் அயாராது ஆற்றி வந்தவர். இவரது உரையின் சிறப்பு அது தற்கால நடைமுறைக்கு ஏற்றவகையில் அமைக்கப் பெற்றிருப்பது தான். இந்த நூலைத் தவிர பல நூல்களையும் இவர் படைத்தளித்துள்ளார். சைவ இலக்கியங்களுக்கு தகுந்த உரையாசிரியர் அமையவில்லை என்ற குறை இவரால் நீங்கியது.

அவரின் சுயசரிதை நூலில் நாம் படித்த சுவாரசியமான ஒரு பகுதியை பார்ப்போம்.

இதை படித்தவுடன் உங்களுக்கு தோன்றும் கருத்து என்ன என்று பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியடைவோம். நம் கருத்தை இறுதியில் தந்திருக்கிறோம்.

இது போன்ற பதிவுகளை படிப்பதே சிவபுண்ணியம் தான். சிவபுண்ணியம் சாதாரண விஷயம் அல்ல. சிவபுண்ணியம் குறித்து பிரத்யேக ஓவியங்களுடன் ஒரு பிரம்மாண்ட தொடரே நம் தளத்தில் விரைவில் துவங்கவிருக்கிறது. (“ஏற்கனவே ஆரம்பிச்ச தொடர்களை முதல்ல முடிங்க” – என்கிற சிலரின் மைண்ட்வாய்ஸ் நமக்கு கேட்கிறது 🙂 🙂 நான் என்னங்க பண்ணட்டும்…. தலைவர் கிட்டே சொல்லி 24 மணிநேரத்துல நமக்கு மட்டும் கொஞ்சம் EXTENSION வாங்கிக்கொடுங்க!)

நன்றி!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

பேரூர்க் கோயிலில் இப்போது ஒரு யானை இருக்கிறது. அது கோயிலுக்கு வந்து இப்போது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது கோயிலுக்கு வந்து சேர்ந்தது ஒரு சரிதம். அதற்கு நான் ஒரு கருவியாயிருந்தேன்.

கோயம்புத்தூருக்கு பக்கத்தில் ‘எட்டிமடை’ என்றொரு கிராமம் உண்டு. அதில் திரு.நா.வேலப்ப கவுண்டர் என்ற மிராசுதார் ஒருவர் இருந்தார். அவ்வூருக்குப் பக்கத்தில் சின்னையாக் கவுண்டன்புதூர் என்னும் கிராமத்தில் திரு.சுப்பராய கவுண்டர் என்ற பெரிய நிலக்கிழார் ஒருவர் இருந்தார். அவருக்கும் வேலப்பக்கவுண்டருக்கும் மனவருத்தம் உண்டு. சுப்பராய கவுண்டருக்கு ஏராளமான விளைநிலங்கள் உண்டு. அவை சர்க்கார் காடுகளை அடுத்திருந்தன. அக்காடுகளில் இருந்து சில சமயங்களில் யானைகள் வந்து அவருடைய பயிர்களை அழித்து நாசம் செய்யும். அதற்காக அவர் காடுகளின் ஓரத்தில் தம்முடைய நிலங்களில் யானைப்படுகுழிகள் வெட்டி வைப்பதுண்டு. அந்தக் குழிகளுக்கு ”கொப்பங்கள்” என்று பெயர். அக்குழியில் யானைகள் விழும். அவற்றை மேலேற்றி பழக்கி விற்பதுமுண்டு.

ஒரு சமயம் ஒரு பெண்யானையும் அதன் கன்றும் விழுந்துவிட்டன. அதில் தாய் யானை இறந்து விட்டது. அவர் கன்றை மட்டும் கொண்டு வந்து தன் வீட்டு முற்றத்தில் வளர்த்து வந்தார். தாய் இறந்து விட்டபடியால் அதன் கன்றுக்கு தாழியில் எருமைப்பாலை வார்த்து ஊட்டி அன்பாய் வளர்த்தார். கன்றும் சில காலத்தில் வளர்ந்து பெரியதாயிற்று. இவர் யானையை வீட்டு முற்றத்தில் வளர்த்து வந்தார். அதில் திரு.வேலப்பக்கவுண்டருக்கு சிறிது பொறாமை உண்டாயிற்று. முன் இருந்த மன வருத்தங்களை அஃது அதிகரிக்கச் செய்தது. அவருக்கு சுப்பராய கவுண்டரிடமிருந்து வரவேண்டிய சில கடன்களும் இருந்தன. ஒரு கடனுக்காக யானையை கோர்ட்டு மூலம் ஜப்தி செய்தார்.

DSC02046-3

ஆனால் சுப்பராயக்கவுண்டர் யானையை இவர் கைக்கு அகப்படாமல் அவிழ்த்துக் காட்டுக்குள் துரத்திவிட்டார். பழகிய யானைகள் காட்டுக்குள் போய்விட்டால் பழக்கம்விட்டுக் காட்டுயானையாக மாறும் என்பர். திரு.வேலப்பக்கவுண்டர் கொச்சியிலிருந்து 10, 20 கைதேர்ந்த ஆட்களை வரவழைத்து அதனைத் தேடிப்பிடித்து வந்து கோர்ட்டில் நிறுத்தி விட்டார். யானைக்குத் தீனிச்செலவு நிச்சயிப்பதில் கோர்ட்டாருக்கும் சிறிது சிரமம் ஏற்பட்டது. எதோ ஒரு விதமாக நிச்சயிக்கப்பட்டு யானை கோர்ட்டார் வசமாக இருந்து வந்தது. அதை ஏலம் போட நடவடிக்கைகள் நடந்து வந்தன. இவர்கள் இருவரும் எனக்கு வேண்டிய நண்பர்கள். இரண்டு பேரையும் வரவழைத்துப் பேசினேன். இவர்களுடைய சண்டைக்கிடையில் யானையை பேரூர்க் கோயிலுக்குச் சேர்த்துவிடவேண்டும், என்ற எண்ணம் திருவருளால் எனக்கு உருவாயிற்று. ”அவரிடம் யானை இருக்கக்கூடாது என்பதுதானே உமது கருத்து” என்று வேலப்பக்கவுண்டரைக் கேட்டேன். அவர், ”ஆம்” என்றார். ”இவர் யானையைக் கடனுக்காக ஜப்தி செய்து ஏலம் போட்டார் என்ற கெட்ட பேர் வரலாகாது, என்பதுதானே உமது எண்ணம்” என்று சுப்பராயக்கவுண்டரைக் கேட்டேன். அவரும், ”ஆம்” என்றார்.

இருவருக்கும் இல்லாமல் யானையை பேரூர்க் கோயிலுக்குச் சேர்த்து விடலாம். ”யானை பேரூர்க் கோயிலுக்கு பாத்தியப்பட்டது. சுப்பராயக் கவுண்டரிடம் தீனிப்போட்டு பாதுகாத்து வரும்படி ஒப்படைக்கப்பட்டிருந்தது” என்று கோர்ட்டில் பேரூர்க் கோயில் தர்மகர்த்தாவைக் கொண்டு ”பாத்திய மனு” போடும்படி செய்கிறேன். நீங்கள் இருவரும் சரியென்று ஒப்புக்கொள்ளுங்கள்” என்றேன். இருவரும் அப்படியே ஒப்புக்கொண்டார்கள். திரு. வேலப்பக்கவுண்டர் மட்டும் இந்த கோர்ட்டு நடவடிக்கையில் தனக்கு ரூ.400/- செலவாயிருக்கிறது. அதைத் தரவேண்டுமென்று கேட்டார். கோயிலிலிருந்து தரச் சொல்கிறேன் என்று சொல்ல அவரும் ஒப்புக்கொண்டார். அக்காலத்தில் நான் பேரூர்க் கோயில் தர்மகர்த்தாவைக் கொண்டு பாத்தியத்தை மனுப்போடச் செய்தேன். இரு தரப்பார்களும் அதனை ஒப்புக்கொள்ளவே, கோர்ட்டார் ஜப்தியை விடுதலை செய்து கோர்ட்டு அமீனா மூலம் யானையைக் கொண்டு வந்து கோயில் வாசலில் ஒப்புவித்தார்கள்.

இது யானை பேரூர்க்கு வந்து சேர்ந்த கதை. அது பெண் யானை. அதற்கு ”ஜானகி” என்று பெயர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ பட்டீசுவரருக்கு பணிசெய்து வருகிறது. மக்களுடன் மிகவும் பழகிவிட்டது. அது காட்டில் இருந்திருந்தால் காட்டானையாகத் திரிந்து கொண்டிருக்கும். வேறுமக்கள் கையில் அகப்பட்டிருந்தால் மரம் இழுத்தல் முதலிய வேலைகள் செய்யும் பாட்டானையாக இருந்திருக்கும். ஆனால் அஃது அவ்வாறெல்லாம் போகாமல் இறைவன் பணி செய்யும் பேறுபெற்ற பூர்வபுண்ணியமுள்ள யானை.

இந்த யானை செய்த புண்ணியம் என்ன?

காயப்பாக்கம் சதாசிவசெட்டியார் அவர்கள் கோவை நகரில் சிவக்கவிமணி அவர்கள் இயக்கி வந்த வித்துவான் கந்தசாமி முதலியார் சைவப்பிரசங்க சாலையில் 1919 ஆம் ஆண்டு முதல் 1922 முடிய நாள்தோறும் பெரியபுராணத்தை ஒவ்வொரு பாடலாக விரித்து விளங்கிப் படனம் செய்து நிறைவு செய்தார்கள். சிவக்கவிமணி அவர்கள் கையேடு வாசித்தார்கள். நிறைவுநாளில் பெரியபுராணம் உட்பட பன்னிரு திருமுறைகளையும் இந்த யானை மீது ஏற்றிக் கோவை நகரில் தேரோடும் நான்கு வீதிகளிலும் திருவுலாச் செய்து சிறப்பித்தார்கள்.

அப்பொழுது சிவக்கவிமணி அவர்கள் எடுத்த குறிப்புகள் பெரியப்புராண பேருரையாக எழு பகுதிகளில் அச்சாகி வெளிவந்த 20 – 05 – 1954 -ல் பேரூரில் பெருமக்கள் சூழ இதேயானை மீது அவ்வுரை சுவடிகளை ஏற்றிப் பேரூரின் நான்கு திருவீதிகளிலும் நாயன்மார்கள் மூர்த்தங்களுடன் திருவுலாச் செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த ”ஜானகி” என்ற யானை 1975ல் முக்தி அடைந்தது. அதன்பின் ஓர் யானைக்கன்று வந்து சில ஆண்டுகளில் காலமானது. அதனையடுத்து வந்துள்ளதுதான் இப்பொழுதுள்ள யானை.

யானை முதலிய பிராணிகளுக்குப் பூர்வ புண்ணியங்களும் அவற்றிற்குத் தக்கபடி இன்பதுன்பங்களு முண்டோ எனின்….? ‘உண்டு…!’ மக்களைப் போலத்தான் அவையும் பூர்வ கர்மங்களின்படி இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. ”எல்லா மண்ணுயிர்க்கும் இந்த வழக்கேயாய்” என்பது ஞானசாத்திரம். பெரிய மனிதர்கள் வீடுகளில் இருக்கும் குதிரைகள் நன்றாய்ப் புல்லும், கொள்ளும், போஷணைகளும், பாதுகாப்புகளும், போர்வைகளும் பெற்றுச் சுகமாய் வாழ்கின்றன. வாடகை வண்டிகளில் ஆயுள் முழுவதும் ஓய்வில்லாமல் அரைவயிற்றுப் புல்லுக்கும் கொள்ளுக்கும் கூட வகையில்லாமல் எலும்பும் தோலுமாய் வருந்தும் குதிரைகளையும் பார்க்கிறோம். இவ்வேறுபாடுகள் அவற்றின் கர்மத்தால் ஆவன.

யானைகள் மிகுந்த புத்தி நுட்பமுடையன. யானைகள் படுகுழிகளில் விழுந்து விழாதபடி குழிகளா? தரையா? என்று பார்த்துச் செல்லும் புத்திக் கூர்மையுடையன. குழிகளின்மேல் குழித் தெரியாமல் இருக்கும்படி சிறுக்குச்சிகளை பரப்பி மேலே மண்ணைத் தூவித் தரைபோல் செய்வார்கள். அதுகண்டு பெரிய மரக்கிளைகளைத் தண்டுபோல ஒடித்து ஊன்றிப்பார்த்துக் கொண்டு செல்லுமாம் யானைகள்….

”கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமற்
படுகுழிகள் கல்லுதல் பார்த்தஞ்சி​ – நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே…

என்று பதினோறாம் திருமுறையில் ஈங்கோய் மலைஎழுபதில் நக்கீரர் பாடியிருக்கிறார்.

ஆம்! பொய்யாய்ப் பிரமாணப் பத்திரிக்கையும் மனுவும் கோர்ட்டில் போடுவித்தது சரியா? பொய் சொன்னாலும் சொல்வித்தாலும் ஒன்று போலவே பாவந்தானே? என்று கேட்பீர்களானால் நான் சொல்வித்தது பொய்யன்று, வாய்மையாகும். இவ்விருவருக்கும் உள்ள பூசலும், பொறாமையும் தீர்ந்ததும் யானைக்கு சிவப் புண்ணிய பேறு கிடைத்ததும் குற்றமற்ற நன்மைகளேயாம். இந்தப் பொய்யினால் ஒருவருக்கும் தீங்கில்லை.

வாய்மை எனப்படுவ தியாதெனில் யாதொன்றும்
தீமை யிலாத சொலல் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

என்றும்  அருளினார் திருவள்ளுவராகிய பொய்யா மொழியார். அன்றியும் ”எல்லாமுன் உடைமையே எல்லாமுன் அடிமையே” என்றபடி எல்லா உடைமைகளும் இறைவனுடையனவேயாம் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. சிவனுடைமையாகிய யானையைச் சிவனுடைய தென்று சொல்வதிலும் சிவனிடம் சேர்ப்பதிலும் என்ன தவறு இருக்கிறது?

==========================================================

இந்த சம்பவம் குறித்து நம் கருத்து என்ன என்று இறுதியில் தெரிவிப்பதாக கூறியிருந்தோம் அல்லவா?

எந்த பிறவி கிடைத்தாலும் மேற்கூறிய யானையை போல, சிவத்தொண்டு செய்யும் பேறு நமக்கு கிடைக்கவேண்டும். அது போதும்!

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்

என்று தன்னிகரற்ற சிவத்தொண்டு செய்த அப்பர் பெருமானே புழுவாய் பிறக்க நேர்ந்தாலும் உன்னடியை மறவாதிருக்க ஈசனிடம் வரம் தர வேண்டும் என்று கேட்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்…?  ¶¶

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை…

We need your SUPPORT. Donate Rightmantra for it’s functioning. Click here!

==========================================================

Also check :

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

5 thoughts on “ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

  1. கோவை சேக்கிழார் நிலையம் முகவரி
    தேவை
    நன்றி அய்யா

  2. அருமையான அற்புதமான பதிவு. நம் தளத்தில் மட்டுமே இது போன்ற பதிவுகளை பார்க்க முடியும்.

    2013 ஆம் ஆண்டு நம் தளத்தின் பாரதி விழாவில் சிவக்குமார் ஐயா அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்ப்ரையை நமது யூ ட்யூபில் கேட்டிருக்கிறேன். அருமை. அதே போல, சைவ விழாக்களில் கலந்துகொள்வோ பலரும் அவர் உரையை சிலாகித்து கூறுவதை கேட்டிருக்கிறேன். நேரில் கேட்டதில்லை. மற்றபடி யூ ட்யூப்பில் அவர் திருவாசகம், திருமந்திரம் உரையை கேட்டிருக்கிறேன். அவற்றின் மேல் அதுமுதலே பெரிய ஆர்வம் வந்துவிட்டது. எனக்கே இப்படி என்றால் உங்களுக்கு எப்படி என்று யூகிக்க முடிகிறது.

    சி.கே.சுப்ரமணிய முதலியார் அவர்களின் நூல் உங்களுக்கு கிடைத்த விதமே ஒரு திரில்லர் போல உள்ளது. அவரது படம் அருமை. சிவப்பழம் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணார்.

    யானை பேரூர் கோவிலுக்கு வந்துள்ளது பற்றி அவர் விளக்கியிருக்கும் விதமும், விலங்குகளுக்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் உண்டு என்று கூறி அதற்கு அவர் கூறியிருக்கும் உதாரணங்கள், தேவார பாடல்கள் அபாரம்.

    சைவக்கடலில் மூழ்கி எங்களுக்காக நீங்கள் தேடித்தரும் முத்துக்களின் மதிப்பை நாங்கள் மட்டுமே அறிவோம்.

    தொடரட்டும் உங்கள் சிவத்தொண்டு.

    வாழ்க வளமுடன், அறமுடன்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. சுந்தர்ஜி அய்யா இனிய வணக்கம் . பெரியபுராணம் விரிவுரை கேட்டு அதன் பால்
    ஈர்க்கபட்டு அதை நண்பர் மூலம் வரவழைத்து படித்து அதில் கிடைக்க ஒரு சிறப்பான பகுதியை அனைவரும் அறியும் பொருட்டு மிக தெய்ளிவாக சொல்லியிருக்கும் விதம் மிக அருமை . யானையின் சிவத் தொண்டு யானை செய்த பாக்கியம் . மிக சிறப்பான பதிவு . வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *