சரி விஷயத்திற்கு வருகிறோம்…..
வாழ்வில் சகலத்தையும் இழந்து நின்று, உடல்நலமும் கெட்டுப்போய் இனி இருந்து என்ன பயன் என்ற ரீதியில் வாழ்ந்த ஒருவர், ராம நாமத்தை அவரையறியாமல் உச்சரித்ததன் பலனாகவும் தொடர்ந்து சுந்தரகாண்டம் படித்ததன் பலனாகவும் பெற்ற ஏற்றத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
சில மாதங்களுக்கு முன்பு (உத்திர பிரதேஷ்) நொய்டாவை சேர்ந்த வாசகர் ஒருவருக்கு அவர் கேட்டுக்கொண்ட படி சுந்தரகாண்டம் நூல்கள் அனுப்பியிருந்தோம். பிறகு வழக்கம் போல நமது பணிகளில் மூழ்கிவிட்டோம். சமீபத்தில் நம்மை தொடர்பு அவர் சுந்தரகாண்டம் தனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து மிகவும் சிலாகித்து கூறினார். இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டு வரும் நமக்கு நன்றியும் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்க கேட்க நாம் பரவசத்தின் உச்சிக்கே சென்றோம்.
அவரிடம் பேசியதில் சுந்தரகாண்டம் அவரை பெருமளவு மாற்றியிருப்பதும் பக்குவப்படுத்தியிருப்பதும் புரிந்தது.
“உங்களுக்கு நிகழ்ந்துள்ள அனுபவம் மற்றவர்களுக்கு தெரிந்தால் அது சுந்தர காண்டம் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு அதிகப்படுத்தும். எனவே நீங்கள் விரும்பும் பட்சத்தில், அனுமதிக்கும் பட்சத்தில் இதை நம் தளத்தில் வெளியிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்!” என்று நம் விருப்பத்தை தெரிவித்தோம்.
“தாராளமாக. நான் உங்களிடம் இதை கூறிய நோக்கமே நீங்கள் இதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். என் அனுபவம் மற்றவர்களுக்கு சுந்தரகாண்டம் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி மேலும் சிலர் அதை படிக்க ஆரம்பித்தால் அதை விட எனக்கு வேறு ஒரு பக்கியம் என்ன வேண்டும்?” என்றார்.
“மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறியதை தமிழில் டைப் செய்து அனுப்ப முடியுமா?” என்று கேட்டோம்.
“எனக்கு தமிழில் டைப் செய்ய தெரியாதே… வேண்டுமானால் என் கைப்பட கடிதம் எழுதி கூரியர் அனுப்புகிறேன். நீங்கள் அதை தட்டச்சு செய்துகொள்ளுங்கள்!” என்றார்.
“சரி…அனுப்புங்கள். நாம் பார்த்துக்கொள்கிறோம்!”
சொன்னபடியே அனுப்பியும் விட்டார். அவர் எழுத்தில் இருந்த பிழைகளை திருத்தி, ஆங்காங்க அவர் கூற நினைத்து விடுபட்டவைகளை (அவர் நம்மிட பேசியதை வைத்து) சேர்த்து இந்த கடிதத்தை தட்டச்சு செய்திருக்கிறோம்.
அந்த நண்பர் தனது பெயரை வெளியிட எந்த வித தயக்கமும் காட்டவில்லை என்ற போதும் நாம் அதை மாற்றி வெளியிட்டிருக்கிறோம்.
========================================================
வாழ்க்கையையே மாற்றிய சுந்தரகாண்டம்!
ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும், சக வாசகர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.
நான் கடந்த சில மாதங்களாக ரைட்மந்த்ரா.காம் தளத்தை தொடர்ந்து பார்த்துவருகிறேன். நான் நொய்டாவில் ஒரு கம்பெனியில் PURCHASE MANAGER ஆக உள்ளேன். ஏற்கனவே தொழில் செய்து நல்லபடியாக நடந்துகொண்டிருந்த வேளையில், தொழில் நொடித்து பலபேரின் ஏமாற்று வேலைக்கு பின்னர் தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் என் பார்ட்னரின் வீடும் ஏலம் விடப்பட்டது. அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்ற நேரம், டெல்லியில் ஒரு வேலை கிடைத்தது. எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என்று பல நாட்கள் வருத்தப்பட்டு தூக்கம் இல்லாது இருந்திருக்கிறேன்.
2001 ஆம் ஆண்டு தொழில் தொடங்கியபோது WORK PRESSURE மற்றும் தொழில் சார்ந்த சங்கடங்களால் தூக்கம் குறைய ஆரம்பித்தது. தூக்கம் வேண்டி குடிப்பழக்கத்திற்கு ஆளானேன். தொடர்ந்து 2013 வரை அப்பழக்கம் என்னை ஆட்கொண்டிருந்தது. இதனால் எல்லாம் தலைகீழாக செயல்பட ஆரம்பித்தது. தூக்கம் இல்லாத நேரத்தில் உணவருந்தியும் உணவருந்தும் நேரத்தில் குடித்தும் என என் 12 வருட வாழ்க்கையில் நான் இழந்ததை தவிர வேறு ஒன்றுமில்லை.
இதை தொடர்ந்து உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. டெல்லியில் வேலையில் இருந்த நேரத்தில் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டேன். மூளைக்கு செல்லும் நரம்பில் நான்கு இடங்களில் இரத்த அடைப்பும், ஒரு இடத்தில் இரத்தக் கசிவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே வேளையில் வலது கை செயலிழந்துவிட்டது. பேசும் திறனும் போய்விட்டது. போதாகுறைக்கு நினைவாற்றலும் குறைந்து போனது. கம்பெனியில் அவர்கள் செலவில் எனக்கு தரமான சிகிச்சை ஏற்பாடு செய்தார்கள். சிகிச்சைக்கு பின்னர் நார்மலாகிவிட்டேன். இருப்பினும் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து மருந்து உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மேலும் கண்டிப்பாக நான் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து, மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கும்பகோணம் வந்தேன்.
எனக்கு ஏற்பட்ட கதி குறித்து என் பெற்றோர் மிகவும் வருந்தினார்கள். வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து ஒரு வித சூன்யத்தில் இருப்பதை போலத் தான் உணர்ந்தேன். சிகிச்சைக்கு பிறகு ரெஸ்டில் இருக்கும்போது தான் RIGHTMANTRA.COM தளத்தை பார்க்க ஆரம்பித்தேன். அப்போது தான் ஒரு உண்மை புரிந்தது. நாம் கடவுளை தேர்ந்தெடுப்பதில்லை. கடவுள் தான் நம்மை அதாவது தனது பக்தனை தேர்ந்தெடுக்கிறார் என்பது. ஏனெனில் அந்த நேரம் பார்த்து இங்கு ரைட் மந்த்ரா தளத்தில் சுந்தர காண்டம் நூல்களை வாசகர்களுக்கு அனுப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் திருப்பதி சென்று வந்த கந்தன் என்ற வாசகரின் அனுபவத்தை அவர் புகைப்படம் மற்றும் அவரது மொபைல் நம்பருடன் சுந்தர் வெளியிட்டிருந்தார். ஏனோ அவரை தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவரை தொடர்பு கொண்டு அவரது அனுபவம் பற்றி பேசிவிட்டு தற்செயலாக என் கதையை அவரிடம் கூறினேன். அவர் சுந்தர காண்டம் பற்றிய நம் ஆசிரியரின் பதிவை கூறி என்னை அந்த நூலை படிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் இருந்த நான், உடனே சுந்தரகாண்டம் நூலை எனக்கும் அனுப்பும்படி ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் கொஞ்சத்தில் அனுப்பவில்லை. நானும் விடாமல் பலமுறை மின்னஞ்சல் மூலம் நினைவூட்டி வந்தேன். பின்னர் தான் அனுப்பினார். அது ஏன் என்று பின்னர் தான் எனக்கு புரிந்தது. சுந்தரகாண்டம் நமக்கு வேண்டும் என்பதில் நாம் எந்தளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை அவர் உறுதி செய்து கொண்டார் என்று புரிந்துகொண்டேன். ஒரு வழியாக எனக்கு நூல்கள் வந்து சேர்ந்த பின்னர் 01/09/2013 முதல் படிக்க ஆரம்பித்தேன்.
சுந்தரகாண்டம் படிக்க படிக்க மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். மருந்து மாத்திரைகள் மற்றும் தொடர் சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருந்த உடல் நலம் திரும்ப பழைய நிலைக்கு வரத்துவங்கியது.
மகாபெரியவர் குஞ்சித பாதத்துடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றையும் அந்த நூல்களுடன் சுந்தர் அவர்கள் அனுப்பியிருந்தார். அதன் மகத்துவம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படம் வந்த பிறகு, அதை நான் தரிசித்த பிறகு, அடுத்த முறை நான் செக்கப்புக்கு சென்றபோது மருத்துவர்கள் அதுவரை நான் உட்கொண்டு வந்த விலை உயர்ந்த மாத்திரை ஒன்றை ‘இனி உட்கொள்ளவேண்டாம். அதற்கு அவசியமில்லை’ என்று கூறிவிட்டார்கள். பொருளாதார ரீதியிலும் சரி… உடல் ரீதியிலும் சரி… எனக்கு அது மிகப் பெரிய RELIEF ஃபை தந்தது என்றால் மிகையாகாது.
மற்றபடி தொடர் சிகிச்சையில் இருந்தபடியால் என்னால் மதுவை நெருங்க முடியவில்லை. டாக்டர்களும் மதுவை தொடரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்கள். சுந்தரகாண்டம் வேறு படிக்க ஆரம்பித்ததால் மனம் குடியை நினைக்க மறுத்தது. அந்த எண்ணமே எனக்குள் எழவில்லை. ஒரு காலத்தில் மதுக்கடைகளை பார்த்தால் சப்புக்கொட்டிக்கொண்டு ஓடிய எனக்கு நாளடைவில் மதுக்கடைகளை பார்க்கவே கண்கள் கூசின.
சிகிச்சைக்காக குடிப்பதை நிறுத்தியவன், சிகிச்சை முடிந்த பிறகும் குடியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றால் அதற்கு காரணம் சுந்தரகாண்டம் தான். ஏனெனில், நம் உடல்நிலை சீரானவுடன் மீண்டும் குடித்து மகிழவேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன்.
எனக்கு 38 வயதாகிறது. தனியாக டெல்லியில் இருக்கிறேன். இங்கு பெண்கள் ஆடையணியும் கலாச்சாரமே வேறு. பெண்களை போகப் பொருளாக பார்த்துவந்த என் பார்வை சுந்தரகாண்டம் படிக்க துவங்கியது முதல் மாறத்துவங்கியது. மனம் தவறாக ஏதேனும் நினைக்கும்போது அஞ்சனை மைந்தனின் முகம் தான் நினைவுக்கு வருகிறது.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு கனவுகள் வந்ததில்லை. வந்தாலும் அவை நினைவில் நின்றதில்லை. ஆனால் இதற்கு பிறகு நல்ல நல்ல கனவுகளாக வருகின்றன. நிச்சயம் அவை தெய்வீகமானவை என்று மட்டும் என்னால் கூறமுடியும். உதாரணத்திற்கு ஒரு சித்தர் ஒருவர் என்னிடம் சிவலிங்கம் தருகிறார். அடுத்த நாள் முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் காட்சி தருவதை போல உணர்ந்தேன்.
இதை நண்பர்களிடம் கூறியபோது, நம்ப மறுத்தனர். குன்றத்தூர் முருகனை பற்றிய பதிவை பார்த்தவுடன் அதே நினைவில் நீ இருந்திருப்பாய் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.
ஆனால் மேற்கூறிய கனவுகள் வந்ததிலிருந்து சுப சகுனங்கள் என் வாழ்வில் தென்பட ஆரம்பித்திருக்கிறது.
சுந்தர காண்டத்தை கடந்த சில மாதங்களாகத் தான் படித்து வருகிறேன். அதற்கே எண்ணற்ற பலன்கள். மனதில் தைரியம், புத்துணர்வு, சிகிச்சையில் முன்னேற்றம்… என ஏகப்பட்ட மாறுதல்கள். எனவே சுந்தரகாண்டத்தை நம்பிக்கையுடன் தவறாமல் பாராயணம் செய்துவருபவர்கள் நிச்சயம் அனுமனின் அருளை பெறுவார்கள்.
எனக்கு உடல் நலம் குன்றியபோது நான் இறைவனை நொந்துகொண்டேன். ஆனால் உடல் நலம் குன்றியதால் தான் சுந்தரகாண்டம் என் கைகளுக்கு வந்தது. விடவே முடியாது என்று நான் நினைத்த குடிப்பழக்கத்தையும் விட்டொழிக்க முடிந்தது.
சுந்தர் அவர்கள் என்னை பற்றிய தனிப்பட்ட விபரங்களை எனது ப்ரைவசிக்காக வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும் உங்களுக்காக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்தபோது போது, நொய்டாவில் நான் சிகிச்சை பெற்று வந்த காலங்கள் மனதில் நிழலாடியது. என்னை காக்க அனுமன் தனது பிரபுவையே அட்வான்ஸாக அனுப்பிவிட்டார் என்று தெரிந்துகொண்டேன்.
எப்படி என்றால்…. என் உயிரை காப்பாற்றிய மருத்துவரின் பெயர் தெரியுமா? சாய்ராம் நடராஜா!
என் பர்சனல் செக்யூரிட்டி கார்டின் பெயர் பலராம்.
எனக்கென்று என் கம்பெனியில் துப்பாக்கியுடன் ஒரு பர்சனல் செக்யூரிட்டி கம் அசிஸ்டென்ட்டை நியமித்திருந்தார்கள். ஏனெனில் கம்பெனியில் நான் வகிக்கும் பொறுப்பு பர்ச்சேஸ் சம்பந்தப்பட்டது. சமயங்களில் பொருட்களை ஏற்றி வரும் லாரியையே எங்கள் பகுதிகளில் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள். மேலும் நொய்டாவில் எங்கள் பகுதி ஒரு புறநகர்ப் பகுதி. இங்கு மனித உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாக்கெட்டில் இருக்கும் ஐம்பது ரூபாய்க்காகவெல்லாம் இங்கு கொலை நடப்பது சர்வசகஜம். எனவே என் கம்பெனி சார்பில் என்னை கவனித்துக்கொள்ள பலராம் என்ற ஒரு செக்யூரிட்டியை நியமித்திருந்தனர். நான் இங்கு சிகிச்சை பெறும்போது அவன் தான் உடனிருப்பான். (இப்போதும் அவன் என் கூடவே தான் இருப்பான்!)
சிகிச்சையில் இருக்கும்போது அடிக்கடி அவன் பெயரை உச்சரிக்க நேர்ந்தது. “ராம்…” “ராம்…” “ராமை கூப்பிடுங்கள்…” “பலராமை கூப்பிடுங்கள்…” “ராம் இங்கே வா..” “ராம் அங்கே அதை வை…” என்று அடிக்கடி அவன் பெயரை கூறினேன். எனவே என்னையுமறியாமல் ராமநாமத்தை அடிக்கடி உச்சரிக்கும் பேறு எனக்கு கிடைத்தது.
தவிர எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் சாய்ராம்! கேட்கவேண்டுமா….
ராமநாமத்தை என்னையுமறியாமல் உச்சரித்ததன் பலன்…. அருமருந்தான சுந்தரகாண்டம் என்னை தேடி வந்தது. என் வாழ்க்கையே மாறியது.
ஆஞ்சநேயா… என்று அழைத்தால் அனுமன் தன் ஒரு கையால் ஓடி வந்து தாங்குவானாம்…. ஆனால் ராமா என்றால் தன் இரு கைகளாலும் தாங்கி பிடிப்பானாம்… எனக்கு நிகழ்ந்தது அது தான்.
என் மனதில் உள்ளவற்றை வடித்துவிட்டேன். தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். முகமறியா இந்த மனிதனின் புலம்பல்களை சற்று செவிமெடுத்து கேட்டு நீங்களும் பாராயணம் செய்து பலன் பெறவேண்டும் என்றே இதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இதைக் கூட நான் கந்தன் அவர்களிடம் தான் முதலில் பகிர்ந்துகொண்டேன். அவர் தான் தளத்தின் ஆசிரியர் சுந்தர் அவர்களிடம் இதை கூறுங்கள், அவர் மிகவும் சந்தோஷப்படுவார் என்றும் சுந்தரகாண்டத்தை அனைவருக்கும் அனுப்ப அவர் மேகொண்ட முயற்சிகளுக்கு அவர் மகிழ்ச்சியடைவார் என்றும் கூறினார்.
ரைட்மந்த்ரா தளத்திற்கும், சுந்தர் அவர்களுக்கும், அவர் பணிகளில் உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை யாரென்றே தெரியாத போதும் தொலைபேசியில் என்னிடம் தொடர்ந்து பேசி, எனக்கு மனம், உடல் இரண்டிற்கும் ஆறுதல் தந்த மனதைரியத்தை ஊட்டிய சுந்தர் அவர்களுக்கும் என்றென்றும் நான் கடன்பட்டுள்ளேன்.
பொங்கும் மங்களம் எங்கும் பெருகுக!
நன்றி…
ஸ்ரீநாத்,
நொய்டா
========================================================
சுந்தரகாண்டம் நூலை பெற விரும்புகிறவர்கள் கவனத்திற்கு…
சுந்தரகாண்ட நூல் தொகுப்பை வேண்டுவோர், தங்கள் விலாசத்தை simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய மெயில் ஐ.டி.களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். மறக்காமல் உங்கள் மொபைல் எண்ணையும் அனுப்பவும். நூல்கள் கிடைத்த பிறகு பணம் செலுத்தினால் போதும்.
இதை ஒரு கைங்கரியமாக கருதியே செய்து வருகிறோம். இந்த நூலை நாம் இலவசமாகத் தான் அனுப்புகிறோம். எப்படியெனில் நூலுக்கும் கூரியர் செலவுக்கும் சேர்த்து நீங்கள் தரும் தொகை, கோவில் பசுக்கள் தீவனத்திற்கு அப்படியே அளிக்கப்பட்டுவிடும். எனவே கூடுதல் தொகை அனுப்ப விரும்புகிறவர்கள் நம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பலாம். அவை கோ-சம்ரோக்ஷனத்திற்கு அளிக்கப்படும்.
நூலை வேண்டுவோர் தொடர்ந்து நினைவூட்டுதல் அவசியம். இந்த தொகுப்பை நாம் இதுவரை கேட்ட அனைவருக்கும் அனுப்பிவிட்டாலும் ஒரு சிலருக்கு விடுபட்டுள்ளது தெரியும். அவர்களுக்கு விரைவில் அனுப்பட்டுவிடும். நாம் மூன்று நூல்கள் அனுப்புகிறோம். எம்மால் அதில் பெரிய தொகையை முதலீடு செய்து வாங்கி வைக்க முடியாது. எனவே அவ்வப்போது தான் வாங்கி அனுப்ப முடிகிறது. ஏற்கனவே கேட்டு நாம் அனுப்பாமல் எவருக்கேனும் விடுபட்டிருந்தால் மீண்டும் நினைவூட்டவும். மின்னஞ்சல் மூலம் நினைவூட்டினாலே போதும்.
நன்றி!!
========================================================
Also check :
திவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…
உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!
குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!
நாடும் வீடும் நலம் பெற உடனே சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்குவோம்! (பாராயண வழிமுறைகள்)
========================================================
நீங்க அடிக்கடி அழ வைக்கறீங்க. நானும் பக்தியில் அதிகமா விழகூடாதுன்னு பார்க்கறேன், விட மாட்டேங்கறீங்களே…
டியர் சுந்தர்ஜி,
நல்ல அனுபவாமம். ராமரையும், அஞ்சயநேயரையும் வனுகபவற்கு, வாழ்வில் எந்த துன்பமும் இருக்காது.
நன்றி,
நாராயணன்.
சுந்தர் சார்வணக்கம்
மிக மிக அருமையான பதிவு அனைவரும் தவறாமல் படிக்கச் வேண்டிய பதிவு, சொல்வதற்கு வார்தைகள் இல்லை. சுந்தரகாண்டம் இருக்க பயம் ஏன் சார்..
நன்றி
சுந்தர காண்டம் என்ற அறிய நூலை படித்து பலன் அடைந்தவர்கள் பலபேர்; தம் அனுபவத்தை தெரியபடுதியவர்கள் சிலபேர்.
என்னை போன்ற பலபேர் வாழ்கையிலும் அனுமன் ஒரு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
துன்பங்கள் வந்தபோதும் படிப்பதை விடக்கூடாது என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை.
படிப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள் நிச்சயம் ஒரு நாள் விடியும்.
டியர் சுந்தர்ஜி
ஹாப்பி morning
இந்த பதிவை படித்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். மதுவிற்கு அடிமையானவர்களை திருத்துவது மிக கடினம். நீங்கள் அனுப்பிய சுந்தரகாண்டம் பாராயனத்தால் அவர் வாழ்வில் ஓளி விளக்கேற்றிய உங்களுக்கு ஒரு ராயல் salute
உங்கள் மூலமாக அனுமார் அண்ட் ராமர் அவரை திருத்தி நல்வழி படுத்தி இருக்கிறார். இந்த தளம் மூலமாக நீங்கள் தன்னலம் கருதாமல் தொண்டு செய்கிறீர்கள். கடவுள் உங்கள் மூலமாக மற்றவற்கு நல்லது செய்கிறார். உங்களுக்கு என்றைக்கும் கடவுள் நல்லதே செய்வார்
நன்றி
உமா
சுந்தர்ஜி
நானும் கூட சுந்தர காண்டம் படித்து மிகபெரிய மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்து கடவுள் வேறு மாதிரி கொடுக்கும் சிறு சிறு மாற்றங்களை உணர முடியாது தான் இருக்கிறேன். ஆனாலும் இந்த பதிவை படித்ததும் எனக்கு இன்று இல்லாவிட்டாலும் நாளை விடியும் என்ற நம்பிக்கை வருகிறது. ராம நாமம் ஒருபோதும் தோற்றுவிடாது. ரைட் மந்திராவும் இது போல் பல சாட்சிகளை இன்னும் வெளிப்படுத்தும் என்ற நம்புவோம்.
பல முறை சுந்தரகாண்டம் கேட்ட வர்களுள் நானும் ஒன்று. இன்னும் கிடைக்க பெறவில்லை. நான் வேறு பதிப்புகள் வைத்து உள்ளேன். உங்களுடைய பதிப்புகளும் வேண்டும். மற்றும் கோதண்ட ராமர் கோவில் ஆயில் விஷயத்தயும் தெரியபடுத்தவும். நன்றி சுந்தர் அவர்களே.
நோ வோர்ட்ஸ் டு எக்ஸ்பிரஸ்
நல்ல செய்தி. நல்லவர்களுக்கு நன்மை எப்படியும் கிடைக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.