Tuesday, March 19, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

print
‘கடவுள் Vs கர்மா’ தொடரில் விதியை வெல்ல நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த கடைசி பகுதியை நாம் இன்னும் அளிக்கவில்லை. “அந்த தொடரின் கடைசி பகுதியை சீக்கிரம் போடுங்கள் சார். விதியை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்டு அதன் படி செய்ய உத்தேசித்திருக்கிறேன். அப்போதாவது என் நிலைமை சரியாகிறதா பார்க்கலாம்” என்று தொழிலில் கடும் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் வாசகர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

இத்தனை காலம் நமது தளத்தையும் நமது செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தீர்களானால் உங்களுக்கே புரியும். விதியை வெல்லும் மார்க்கத்தை தான் பெரும்பாலான பதிவுகளில் கூறிவருகிறோம். அவற்றை நடைமுறைப் படுத்தியும் வருகிறோம்.

உதாரணத்துக்கு: கோவில் உழவாரப்பணி, கோ சேவை, ஏழை குழந்தைகளின் கல்விப் பணிகளில் உதவுவது, ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவுவது, கூட்டுப் பிரார்த்தனை இத்யாதி இத்யாதி… இவையனைத்துமே விதியையே மாற்றும் வல்லமை கொண்டவை என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் வேண்டாம்.

(கடவுள் Vs கர்மா தொடரில் இன்னொரு பகுதியை அளிக்கவிருக்கிறேன். அதற்கு பிறகு விதியை வெல்லும் வழிகள் குறித்த இறுதி பகுதி வெளியிடப்படும். எண்ணற்ற தகவல்களை திரட்டிவருவதால் அந்த பதிவு தாமதப்படுகிறது. சற்று பொறுத்திருக்கவும்.)

இதே போன்று விதியை மாற்றுவதில் மனித குலத்திற்கே தீர்வாக இருந்து மிகவும் துணைபுரிவது தான் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணம்.

இராமாயணம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பெரும் பொக்கிஷம் என்றால் அதில் ‘சுந்தரகாண்டம்’ விலைமதிப்பற்ற மாணிக்கமாகும்.

சுந்தரகாண்டத்திற்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என்றால் சுந்தரகாண்டம் முழுவதும் அனுமனின் பராக்கிரமத்தை விளக்குவதாகும். அனுமன் பிரவேசித்த பின்னர் தான் இராமாயணத்தின் போக்கிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இராமருக்கும் சரி…. அன்னை சீதா தேவிக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்க துவங்கும்.

ராமநாமம் ஒன்றையே சதா ஜெபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.

சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்ற ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் முழுமையாக வெளிப்படுகின்றன. அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!

சுந்தரகாண்டம் படித்தால் தீராத பிரச்னைகளே இல்லை. சகல காரிய சித்தி, தீர்க்க முடியாத நோய்களினின்றும் விடுதலை, சுபகாரியத் தடை நீங்குதல், தனலாபம், தரித்திரம் முடிவுக்கு வந்து அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகுதல் என சுந்தரகாண்டம் தரும் பயன்கள் எண்ணற்றவை.

ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் முதலியவற்றை தீர்க்கும் சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம் தொடர்ந்து படிப்பதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமல்லாது ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை தீர்க்கும் சக்தி உண்டு.

(பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் உங்களுடன் சேர்ந்து வரும் 21/06/2103 வெள்ளிக்கிழமை  முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவக்குகிறேன். சற்று பொறுத்திருந்து பாருங்களேன்…..அது நமக்கு குவிக்கப்போகும் நன்மைகளை!)

இதன் பொருள் இங்கு தளத்தில் நான் அதை அளிக்கப்போகிறேன் என்பதல்ல. அவரவர் வீட்டில் 21 ஜூன் வெள்ளிக்கிழமை முதல் பாராயணனத்தை துவக்கவேண்டும். நானும் அன்று உங்களுடன் சேர்ந்து துவக்குகிறேன். நூல் தேவைப்படுகிறவர்கள் கூறவும்.

கடலில் சில துளிகள் போல இப்போதைக்கு சுந்தரகாண்டத்தின் எண்ணற்ற நன்மைகளில் சில துளிகளை பட்டியலிட்டுள்ளேன்.

பாராயண விதிமுறைகள், என்ன புத்தகம் வாங்குவது, எங்கு வாங்குவது, எப்படி துவக்குவது எந்த பிரச்னைக்கு எந்த அத்தியாயத்தை  படிக்கவேண்டும், வால்மீகி ராமாயணத்திலிருந்து படிப்பதா அல்லது கம்பராமாயணத்திலிருந்து படிப்பதா போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வரும். அது பற்றி இரண்டொரு நாளில் தனி பதிவு அளிக்கிறேன். இப்போதைக்கு சுந்தரகாண்டத்தை படிக்க உங்களை மனரீதியில் தயாபடுத்திக்கொள்ளுங்கள்.

ஏதாவது ஆலயம் சென்று அனுமனை சில முறை தரிசித்துவிட்டு வாருங்கள்.

புத்தகம் வேண்டுவோர் உங்கள் மொபைல் எண் + முகவரியுடன் நம்மை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும். வாங்கி அனுப்பி வைக்கிறேன்.

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம்  முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்”  என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம்  24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா?  அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை  வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

(தயாரிப்பில் உதவி : லிப்கோவின் சகலகாரிய சித்தி தரும் சுந்தர காண்ட பாராயணம், வால்மீகியின் சுந்தர காண்டம்)

==============================================================
உழவாரப்பணி அறிவிப்பு : வரும் ஞாயிறு 16/06/2013 அன்று திருமழிசை அருள்மிகு குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலில் (காலை 7 முதல் 12 வரை) நம் உழவாரப்பணி நடைபெறும். பங்குபெற விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி.
==============================================================

16 thoughts on “உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

 1. மிக அருமையான கட்டுரை . சுந்தர காண்டத்தின் மகிமயை ஒன்றிரண்டு மட்டும் அறிந்தவர்களுக்கும் ,அதை பாராயணம் செய்வதால் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் ஒரே இடத்தில பட்டியல் இட்டதற்கு நன்றி,சுந்தர்ஜி .

 2. சுந்தரகாண்டத்திற்கு இத்தனை சிறப்புகள் இருக்கிறது என்பது இப்போதுதான் எனக்கு தெரியும். அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் முயற்சி எடுத்து திரட்டி கொடுத்துள்ள பயனுள்ள தகல்வல்களுக்கு மிக்க நன்றி சுந்தர்.

 3. இதிகாசங்களும் புராணங்களும் எத்தையோ யுகங்களுக்கு முன்னாள் நடந்திருந்தாலும் இன்றைக்கும் அவை நமக்கு உணர்த்தும் பாடங்கள் பல !!!

  வாழ்க்கை தத்துவத்தையும் தனி மனித ஒழுக்கத்தையும் பறை சாற்றும் ராமாயணம், அரசியலுக்கே ஆசான் என்று சொல்லும் அளவுக்கு அக்கால அரசியல் முதல் இக்கால அரசியல் வரை அன்றே அலசி ஆராய்ந்த அரசியல் கருவூலம் மகாபாரதம் இப்படி பல்வேறு நூல்கள் பல்வேறு கால கட்டத்தில் நமக்கு உணர்த்தும் செய்திகள் ஏராளம் !!!

  அவ்வகையில் சுந்தர காண்டம் நமக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் !!! இந்த நூலை பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அதன் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து ஆனந்தபடும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டி இருக்குமா என்பது சந்தேகமே !!!

  அத்தகைய ஒரு மகத்தான வாய்ப்பை நமக்கு நல்க காத்திருக்கும் சுந்தர் அவர்களை எப்படி பாராட்டுவது !!! பல்வேறு பணிகளுக்கு நடுவில் பக்கத்தில் இருப்பவரின் பெயர் கூட கேட்க நேரமில்லாத இந்த கால கட்டத்தில் தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற வேண்டும் என்று நினைப்பது எத்துனை புண்ணியம் !!! அவ்வகையில் நாம் எல்லோரும் அதிஷ்டசாளிகளே !!!

  சுந்தர் அவர்களே உங்கள் சுந்தர காண்ட பாராயண பயணம் இனிதே தொடங்கி நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் !!!

  சுந்தர காண்டத்தின் பெருமைகளை அறிந்த நாம் அதன் முழு அனுபவத்தையும் “சுந்தர்” வாய் மொழியில் கேட்க ஆவலோடு உள்ளோம் !!!

  என்றென்றும் அந்த பரம்பொருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் துணை நின்று காத்து அருள் புரிவாராக !!!

  வாழ்க வளமுடன் !!!

  1. நன்றி முருகன். நான் கூறியதன் பொருள் இங்கு தளத்தில் நான் அதை அளிக்கப்போகிறேன் என்பதல்ல. அவரவர் வீட்டில் 21 ஜூன் வெள்ளிக்கிழமை முதல் பாராயணத்தை துவக்கவேண்டும். நானும் அன்று உங்களுடன் சேர்ந்து துவக்குகிறேன். நூல் தேவைப்படுகிறவர்கள் கூறவும். தளத்தில் வெளியிட முடியுமா என்று யோசிக்கிறேன்.

   – சுந்தர்

 4. சுந்தர்ஜி,
  சுந்தர காண்டத்தின் பெருமைகள் ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் சரியாக எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்று தெரியாது.21.06.13 முதல் தங்களின் உதவியோடு பாராயணம் செய்ய காத்திரிகின்றோம். வயதில் சிறியவனாக இருந்தாலும் எங்களுக்கு தாங்கள்தான் குரு. எனக்கு ஒருவர் கீழ்கண்ட தமிழ் சுலோகம் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த பலன் என்று கொடுத்தார். கீழே
  கொடுத்து உள்ளேன். முடிந்தவர்கள் பாராயணம் செய்யலாம். எளிமையாக உள்ளது.

  “வில்லது ஏந்தி வந்தாய்!

  வன் பகை தன்னை வென்றாய்!

  கல்லது பெண்ணாய்ச் செய்தாய்!

  கனிந்ததோர் அன்பில் நின்றாய்!

  வில்லது வளைத்து அங்கே

  மிதிலையின் மகளை மணந்தாய்!

  சொல்லது ஒன்றே யென்றாய்!

  தந்தையின் வாக்கு ஏற்றாய்!

  தம்பிக்கு தேசம் தந்தாய்!

  தியாகமே உருவாயானாய்!

  பஞ்சென பாதமமைந்த

  நங்கையாம் சீதையுடனே

  தம்பியாம் இலக்குவன் தொடர

  கடுவனம் விரும்பிப் புகுந்தாய்!

  ராவணன் கவர்ந்து சென்ற

  பைந்தொடி சீதை தன்னை

  அஞ்சனை புத்ரன் துணையால்

  செரு வென்று மீட்டு வந்தாய்!

  சிவனவன் பாதம் தொழுது

  சிந்தையில் மகிழ்வு கொண்டு

  அயோத்தி மீண்டு வந்து

  பட்டத்து அரசனானாய்!

  பார் புகழ் சீதாராமா!

  பரிவுடை பரந்தாமா!

  சீருடன் எம்மைக் காப்பாய்!

  சிந்தையைத் தெளியச் செய்வாய்!

  கார் பொழி வெள்ளம் போலக்

  கருணையும் மிகுத்துத் தருவாய்!’

 5. டியர் மிஸ்டர் சுந்தர்,

  உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் இதன் இங்கிலீஷ் translation அனுப்ப முடியுமா. உடன் வேலை பார்க்கும் மற்ற state காரர்களுக்கு சொல்ல உதவியாக இருக்கும்.

 6. சுந்தர்,

  மிக அருமையான பதிவு / செய்தி. எங்கள் வீட்டில் இந்த வாரம் முதல் படிக்க உள்ளோம் .

  32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

  அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.

  ஆனந்த்.

 7. சார்,

  ராமாயணம் ஒரு நாளில் படிப்பது பற்றி அறிய உங்கள் அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறோம்

 8. கடந்த இரண்டு நாளாக rightmantra.com பார்க்காமல் இருந்த எனக்கு திருப்பதி லட்டு கிடைத்த திருப்தி ……..

 9. சார், வணக்கம்.தங்கள் சுந்த்ரகாண்டம் பற்றிய பதிவு அருமை..உங்களோடு சேர்ந்து படிக்க ஆவலாக உள்ளோம்.புத்தகம் எங்கு கிடைக்கும்.உங்கள் மின்னஞசல் முகவரி தாருங்கள்.நன்றி

  1. simplesundar@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் விலாசம், தொடர்பு எண் இவற்றறை மின்னஞ்சல் அனுப்பவும். சுந்தரகாண்டம் நூலை அனுப்புகிறேன்.

   மிகப் பெரிய ஒரு சேவைக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

   – சுந்தர்

 10. சுந்தரகாண்டம் பற்றி இரண்டொரு நாளில் தனி பதிவு அளிக்கிறேன். இப்போதைக்கு சுந்தரகாண்டத்தை படிக்க உங்களை மனரீதியில் தயாபடுத்திக்கொள்ளுங்கள். – இதற்கு ஆர்டிகல் எங்கே???

  1. மன்னிக்கவும். இரண்டொரு நாளில் நிச்சயம் அளிக்கிறேன். கிடைக்கும் சொற்ப நேரத்தில் அனைத்தையும் எழுத வேண்டியுள்ளது.

   பதிவை முழுமையாகவும் சிறப்பாகவும் அளிக்கவேண்டியே தாமதம் ஏற்படுகிறது.

   – சுந்தர்

 11. ஜஸ்ட் நொவ் இ read திஸ் அர்டிச்லே, தங்க யு sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *