எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அனைவரும் அவர்களால் இயன்ற முறைகளில் வால்மீகி அருளிய சுந்தரகாண்டத்தையோ அல்லது கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய சுந்தரகாண்டத்தையோ படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமது முந்தைய சுந்தரகாண்டம் தொடர்பான பதிவுகள் அனுமன் அருளால் மிகப் பெரும் வரவேற்பு பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே தான் அதை பாராயணம் செய்யும் வழிமுறைகளை சற்று நேரம் எடுத்து தயார் செய்து தனிபதிவாக தந்திருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இந்த பதிவில் பாராயண முறைகள் மற்றும் நூல் விபரங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.
வால்மீகி இராமாயணம் & கம்ப இராமாயணம்
நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.
சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள். 24,000 சுலோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன. வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.
சமஸ்க்ருதத்தில் படிக்க சிரமப்படுபவர்கள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரகாண்டத்தை படிக்கலாம். கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு என மொத்தம் 1368 செய்யுட்கள் உள்ளன. அவற்றில் 61 செய்யுட்கள் பாராயணத்திற்கு உகந்தவை. வால்மீகி ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தில் மொத்த 67 சர்க்கங்கள் உள்ளன. இவற்றை பாராயணம் செய்துவிட்டு 68 வது சர்க்கமான ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக சர்க்கத்தை படிக்கவேண்டும்.
சுந்தரகாண்ட பாராயண முறைகள் ஏன்?
சுந்தரகாண்டம் வேத வித்துக்கள் அடங்கிய ஒரு தொகுப்பாகும். எனவே உரிய முறையில் பாராயணம் செய்யும்போது நிச்சயம் அதற்குரிய முழு பலனை அடையலாம். ஆனால் அதே சமயம் விதிமுறைகளை கண்டு மலைப்படையாது உடனடியாக பாராயணத்தை துவக்குங்கள்.
கீழ்கண்ட விதிமுறைகள் அனைத்தும் பரமேஸ்வரன் பார்வதி தேவிக்கு கூறியதாக ‘உமா சம்ஹிதை’யில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் சௌகரியத்திற்காக லிப்கோவின் நூலில் இருந்து பாராயணம் தொடர்பான பக்கங்களை மட்டும் ஸ்கேன் செய்து தந்துள்ளேன்.
நம்மிடம் ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருப்பவர்கள் அனைவருக்கும் பாராயண விதிமுறைகள் அடங்கிய லிப்கோவின் சமஸ்க்ருத மூலத்தின் தமிழ் வடிவம் அடங்கிய நூலும், வால்மீகி எழுதிய ‘சுந்தரகாண்டம்’ நூலும் கம்பராமாயணத்தில் இருந்து ஒரு சுந்தரகாண்ட நூலும் என மூன்று நூல் அனுப்பப்படும்.
இது தொடர்பாக, முன்னணி பதிப்பகங்களுக்கு நேரில் சென்று மாதிரி நூல்கள் வாங்கி வந்துள்ளேன். தற்போது ஒப்பீடு நடைபெற்று வருகிறது. விலை குறைவாகவும் அதே சமயம் தரமாகவும் இருக்கும் நூல்களை தேர்ந்தெடுத்து அவற்றை தேவைப்படும் எண்ணிக்கையில் உங்களுக்கு வாங்கி அனுப்ப உத்தேசித்திருக்கிறேன். அநேகமாக திங்கள் முதல் கேட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
சமஸ்க்ருத நூலை REFERENCE காக வைத்துக்கொண்டு மற்ற நூலில் எது உங்களுக்கு சௌகரியமாக உள்ளதோ அதை படிக்கவும்.
பாராயண விதிமுறைகள் வேத காலத்தில் வகுக்கப்பட்டவை. இன்றைய அவசர யுகத்தில் இதெல்லாம் முடியுமா என்று மலைக்கவேண்டாம். நியமங்களை சுருக்கவும் விதிமுறைகளை தளர்த்தவும் எவருக்கும் அதிகாரமில்லை. அவரவர் அவரவர் வாழ்க்கை முறைப்படி மனசாட்சிப்படி இயன்ற விதிமுறைகளை செயல்படுத்தி பலன்பெறுங்கள்.
மேலும் நமக்கு தான் மொழிப் பிரச்னை. இறைவனுக்கு அல்ல. எனவே வால்மீகியோ கம்பராமாயணமோ உங்களுக்கு பிரியமானதை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.
பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.
ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும். ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.
தினமும் காலை சீக்கிரம் குளித்து முடித்து சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு சுத்தமான இடத்தில் தனிமையில் அமர்ந்து சுந்தரகாண்டத்தை படிக்கவேண்டும். வாழ்க்கை மாறவேண்டும் விதி மாறவேண்டும் என்றால் நிச்சயம் இதை பின்பற்றித் தான் ஆகவேண்டும்.
வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன் தராத விஷயங்களில் செலவிடப்படும் நேரத்தை குறைத்துக்கொண்டு – மலிவான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய தூண்டக்கூடிய விஷயங்களில் செலவிடப்படும் நேரத்தை அறவே ஒழித்துவிட்டு – இது போன்ற வாழ்க்கையையே மாற்றக்கூடிய விஷயங்களில் நேரத்தை செலவிடுவது கஷ்டமான காரியமல்ல. செய்து பாருங்கள்; கண்கூடான பலன் கிடைக்கும்.
வரும் திங்கட்கிழமை நம்மிடம் சுந்தரகாண்டம் கேட்டிருந்த அனைவருக்கும் நூல் அனுப்பப்பட்டுவிடும்.
வரும் வெள்ளி ஜூன் 28 முதல் நமது பாராயணம் துவங்குகிறது. அது குறித்த உங்கள் கேள்விகளை, ஆலோசனைகளை, அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
நியம நிஷ்டைகளை பின்பற்ற இயலாத நிலையில் இருப்பவர்கள் காலை பொழுது புலர்வதற்குள் எழுந்து குளித்து முடித்து சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு கம்பராமாயணத்தில் இருந்து சுந்தரகாண்டத்தை தினசரி ஒரு அத்தியாயம் வீதம் படிக்கவும்.
ஆஞ்சநேயரின் புகழ்பாடும் அந்த சுந்தர காண்டம் ஒரு சர்வ ரோக நிவாரணி. சுந்தர காண்டப் பாராயணம், எல்லாத் துயரங்களையும் நீக்கி மங்களங்களை அருளும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
(அற்புதமான பாடல் இது. இந்தப் பாடலில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் முகமாக ‘அஞ்சிலே’ என்ற சொல்லை, ஐந்து முறை சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல; பஞ்ச பூதங்களையும் ஆஞ்சநேயரோடு தொடர்புபடுத்தி இருப்பதையும் உணர வேண்டும். இப்பாடலின் கருத்து;வாயு பகவானின் மகனான ஆஞ்சநேயன், கடலினை (நீரை)த்தாண்டி, ஆகாயத்தின் வழியாக ராமருக்காக இலங்கைக்குத் தூது சென்று, பூமா தேவியின் மகளான சீதாதேவியைக் கண்டு, ராவணன் நகரான லங்கா நகரத்தில் தீயை வைத்தார். அவர் நம்மைக் காப்பார்.)
எல்லாரும் எல்லா நலனும் வளமும் பெற அனுமனை வேண்டிக்கொள்கிறேன்.
சுபமஸ்து.
=====================================================
குறிப்பு : சுந்தரகாண்டம் நூல் தொகுப்புக்களை வேண்டுகிறவர்கள் எமக்கு (simplesundar@gmail.com) மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மூன்று நூல் தொகுப்புக்கள் + கூரியர் செலவு அனைத்தும் சேர்த்து ரூ.100 முதல் ரூ.150/- க்குள் வரும். அந்த தொகையை எப்படி என்னிடம் அளிப்பது என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். நூலை வேண்டுவோர் இப்போதைக்கு பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றுடன் எமக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதும். திங்கள் அல்லது செவ்வாய் அனுப்பிவிடுவேன். வெள்ளி (28/06/2013) முதல் பாராயணம் துவங்குகிறது.
=====================================================
தேங்க்ஸ் sir
அருமையான பதிவு. அனைவரும் படித்து பின்பற்ற வேண்டும்.
புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
ஹனுமான் நாமத்தை உச்சரித்தால் — புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு , அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருவார்
—————
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத!
ராமதூத க்ருபா ஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராமதூதனே! கருணை கடலே ப்ரபோ! என்னுடைய காரியங்களையெல்லாம் சாதித்து தருவீராக
மிகவும் அருமையான பதிவு, திரு A .M .ராஜகோபாலன் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் பலமுறை இதையே வலியுறுத்தி உள்ளார். மிக்க நன்றி