Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

print
ம் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது ‘சொல்ல துடிக்குது மனசு’ நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் இது. இறைவனையும் இறைவனது செயல்பாடுகளையும் குறைவாக மதிப்பிட்டு அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து அதையும் பெருமையடித்து கொள்வோர் அவசியம் உணரவேண்டிய உண்மை இது.

“தன் தெய்வமே உயர்ந்தது மற்ற தெய்வங்கள் தாழ்ந்தது என்று கருதுவது அறிவிலிகளின் செயல்” என்று கூறுகிறார் பாரதியார்.

பேதங்கள் மனிதரிடமேயன்றி தெய்வத்திடம் ஒரு போதும் இருப்பதில்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் நீதியாகும்.

தலைப்பில் நாம் கேட்ட கேள்விக்கு பதில் என்ன தெரியுமா ?

‘மனிதநேயம்’!

நமது புண்ணியச் செயல்கள் வேண்டுமானால் இறைவனை நம்மை நோக்கி பார்க்க செய்யலாம். ஆனால் இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது தெரியுமா? நம் மனித நேயமே!

==================================================

சுவாமியே சரணம் ஏசப்பா…!

அன்று இரவு எட்டு மணிக்கு 26 வது முறையாகச் சபரி மலைக்குச் செல்ல பூஜை செய்துவிட்டு, இருமுடி கட்ட  இரயிலைப் பிடிக்கும் தறுவாயில் தாகம் ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு. டிசம்பர் இதழுக்கான கட்டுரை வேண்டும் என்று. நினைத்துப் பார்க்கிறேன். 1981ஆம் ஆண்டு ஒரே ஆடையுடன் சென்னையில் அலைந்து திரிந்துகொண்டிருந்த நான், முதலில் கிடைத்த வருமானத்தில் மாற்றுடை வாங்கும் நிலையில் துணிக் கடைகளில் ஏறி இறங்கினேன். நான் கடைகளிலிருந்து இறங்கக் காரணம், துணிகளின் விலை ஏற்றம் தான். தேடிப்பிடித்து, எட்டு ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டேன்.

DSC_6295

இரவு பத்து மணியிருக்கும், தூங்கிப் போயிருந்த என்னை எழுப்பினர் சிலர். “என்ன?” என்ற கேள்வியுடன் விழித்து, விழிப்போடு கேட்டேன். “பக்கத்துத் தெருவில் அய்யப்பசாமி பூஜை நடக்கிறது, வந்து கலந்து கொள்ளுங்க சாமி” என்றொரு அழைப்பு. அழைத்தவர்கள் கூட்டத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கருப்பு, காவி, நீல நிற உடையணிந்து கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தாடியும், நெற்றியைச் சந்தனமும் குங்குமமும் நிரப்பியிருந்தன.

அவர்கள் கூப்பிட்ட தோரணையில் “சரி, போய்த்தான் பார்ப்போமே” என்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று, அங்கு நடந்து கொண்டிருந்த அய்யப்பபூஜையில் கலந்து கொண்டேன்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/11/SollaThudikkudhu-Manasu-VKT-Balan.jpgபூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன்தான் புரிந்தது… அவர்கள் ஏன் என்னை பூஜைக்கு அழைத்தார்கள்..? என்ற கேள்விக்குப்  பதில் அளித்தது என் வேட்டி.  மாற்றுடையாக நான் வாங்கிய வேட்டியின் நிறம் காவியாக அமைந்து போயிருந்தது மாத்திரமே அழைப்பிற்கான  காரணம். அவர்கள் நடத்திய பூஜையோ, அதற்குரிய ஐதீகங்களோ, திட்டமிடலோ இல்லாமல் நான் அங்கு அமர்ந்திருந்ததுதான் உண்மை. ஆனாலும் அங்கு களைகட்டிய இசையும் சங்கீதமும், அனைத்திற்கும் மேலாக அங்கு பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், சாப்பாடு எல்லாம் எனக்கு விருந்தாக அமைந்திருந்தன. பன்னும்  வடையுமே கிடைப்பதற் கரிய உணவுகளாக இருந்த எனக்கு, இந்தப் பூஜை சாப்பாடு எப்படியிருந்திருக்கும் என்றுசொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அக்கூட்டத்தில் பேச்சுக் கொடுத்ததில் அய்யப்பன்கோவில் செல்வதற்கான பூஜை புனஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தன. மறுநாள் விடியற்காலை  50 – க்கும் மேற்பட்ட “சாமிகள்‘ சபரி மலை செல்லக்  கிளம்பினர். சபரி மலை செல்வதற்கான மற்றச்  சடங்குகளையும் புரிந்து கொண்டேன். அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது ஒரு குரல் , “சாமிமாரே, இன்னைக்குச் சாயங்காலம் வெள்ளாளத் தெருவுல மணி வீட்டுல அய்யப்பபூஜை … வந்து கலந்துக்குங்க” கூவிய சத்தத்தில் மனதில் குளிர் மழை பெய்தது. “ஆகா! இன்றிரவும் ஒரு பிடிபிடிக்கலாம்.”

அந்த கார்த்திகை மார்கழி இரு மாதங்களிலும் இருபதிற்கும் மேற்பட்ட அய்யப்ப பூஜைகளில் கலந்து கொண்டு, பூஜை விருந்தினை உண்ணக் கூடிய வாய்ப்பினை அந்த எட்டு ரூபாய்க் காவி  வேட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.

DSC_6332

1982 ஆம் ஆண்டு, மீண்டும் அந்தக் கார்த்திகை மார்கழி மாதங்கள் வந்தன. அப்போது நான் மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வருமானம் கொண்டிருந்தேன். கருப்புடை, காவியுடைச் சாமிகள் தெரியத் தொடங்கினாலும் இப்போது அய்யப்பபூஜைகளில் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனது.

ஆனாலும், ஒரு வருடத்திற்கு முன்பு சப்புக் கொட்டிக் கொண்டு உண்ட உணவுகள் என் மனதில் நிழலாடத் தொடங்கின. என்னையறியாமலே என் தலை குனிந்தது. மாற்றுடைக்காக நான் பயன்படுத்திய காவியுடை, அய்யப்பசாமிகளை, என்னையும் சாமியாக நினைத்து எனக்கு விருந்திட்ட சமயங்கள் என் மனதை வெட்கப்பட வைத்தது.

“இதற்குப்  பிராயச்சித்தமாக ஏதாவது செய்யலாமே… என்ன செய்யலாம்?” உடன் முடிவு செய்தேன் . நேராகப்போய் , ஒரு வேட்டி, மாலை வாங்கிக் கொண்டு  குளித்துவிட்டு, எனக்கு நானே மாலை போட்டுக் கொண்டு, அய்யப்ப சாமியாகி, விரதமிருந்து கன்னி சாமியாக முந்நூறு ரூபாய்ச்செலவில் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வணங்கி விட்டு வந்தேன்.

DSC_6365

ஆத்திகம் அறியாத மனசு. நாத்திகம் புரியாத வயசு. சூழ்நிலை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நான் ஆத்திகனா? நாத்திகனா? புரியாமலே புனிதப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

3 ஆவது வருடம் சபரி மலைக்கு மாலைபோட வேண்டியிருந்த போது, நான் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். தங்கியிருப்பவர்களுக்கு ஆதியோடு அந்தமாக அத்தனை வேலைகளையும் செய்யக் கூடியவராக இருபது வயது நிரம்பிய பழனி என்பவர் இருந்தார். எவ்வித உறவுகளுமற்ற அவரை அன்புத் தம்பியாகவே நான் பார்த்தேன், அவரையும் நம் செலவிலேயே சபரி மலைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து, அவ்வருடத்தில்  வேட்டி , மாலை அணிவித்து, அவரையும் சாமி ஆக்கி விட்டேன்.

ஐயப்பன்45 நாள்கள் விரதமிருந்து கிளம்புவது என்று திட்டம். மாலை போட்டு இருபது நாட்களிருக்கும். என் அறைக்கு அடிக்கடி வந்து செல்லும் என் இஸ்லாமிய நண்பன் உபயதுல்லா அவர்களின் ஆறு மாதக் கைக்குழந்தை இறந்துபோன செய்தி எனக்கெட்டியது. அவரின் மனைவி, தம்பி மற்றும் குடும்ப உறவினர்களைக்கூட நான் நன்கு அறிவேன்.

“சபரிமலைக்கு மாலை போட்டு விட்டால் மரணச் சம்பவங்களிலோ அவர்களின் வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாது‘ என்பதை அப்போது நான் அறிந்திருந்தேன்.” என்ன செய்வது?’ ஒரு பரிதவிப்பு. கழுத்திலிருந்த மாலையைப் போலவே, இதயத்திலும் ஏதோவோர் மாலை தொங்குவது போன்றதோர் உணர்வு. கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அறையில் வைத்து விட்டு, மரண வீட்டிற்குச் சென்றேன். இறந்த குழந்தையின் உடலைத் தூக்கிச் சென்ற தோள்களில் என் தோளும் ஒன்று.

அவர்களின்  துக்கத்தில் பங்கேற்றது, எனக்கோர் ஆத்ம திருப்தியைத் தந்தது. மீண்டும் அறைக்கு வந்து, குளித்துவிட்டு, மாலையைப் போட்டுக் கொண்டேன். அப்போது அறைக்குள் நுழைந்தான் நான் “தம்பி” என்று பழகிய பழனி.

“ஐயோ ! இதென்ன அநியாயம் ? சாமிகுத்தம் பொல்லாதது” என்று சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறிவிட்டான். பிறகு இரண்டு,மூன்று தினங்களாக என் அறைப் பக்கமே அவன் தென்படவில்லை. நானே ஒரு நாள் சத்தமெழுப்பிய பிறகு என் முன் வந்தான்.

“என்னடா… ஆளையே காணலை” என்று நான் கேட்க, “கோயில்ல போய் ஒரு பூசாரிகிட்ட இப்படி மாலையக் கழற்றி வெச்சுட்டு மரண வீட்டுக்குப் போய்வந்துட்டு மறுபடியும் மாலையப்  போட்டுக்கலாமான்னு” கேட்டேன். அவரு,”அப்படி பண்ற ஆளு பெரிய பாவி. அவனுக்கு என்னாகும்னு பாரு…நீ அவனோட மலைக்குப் போனா, உனக்கும் அந்தப்  பாவம் வந்துடும்” னு சொன்னாரு. அதனால நான் உங்களோட சபரிமலைக்கு வரலை” என்று சொல்லிவிட்டு, அனல் உலையில் அகப்பட்டு வெளியேறுபவனைப் போல விறு விறு வென்று என்னறையிலிருந்து வெளியேறி விட்டான்.

DSC06318

சும்மா கெடந்தவனை மாலையும் போட்டு, என் சொந்தச்  செலவிலேயே மலைக்குக் கூட்டிச் செல்லலாமென்றிருந்தவனின் மனத்தில் ஐதீகத்தின் ஆளுமை எந்த அளவு இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நினைத்துத் திடுக்கிட்டேன்.

எனக்கே தெரியாது, நான் செய்தது சரியா… பிழையா என்று. இதில் அவனெடுத்த முடிவைப் பற்றி நானென்ன பிழை சொல்வது?

என் குழுவினர் பத்து பேரும் சேர்ந்துகொள்ள ஒரு வேனில் சபரிமலை செல்ல ஆயத்தமானோம். புறப்படும் நாளும் வந்தது. வரிசையாகக் குருசாமி முன்னால் சாமிகள் இருமுடிகள் கட்டிக் கொண்டிருந்தனர். என் முறையும் வந்தது. என் இருமுடியில் தேங்காயில் நெய் ஊற்றி, உள்ளே வைத்து இறுகக்கட்டி,”சாமியே சரணம் அய்யப்பா” என்ற சரண கோஷத்துடன் இருமுடியை என் தலையில் வைத்தபோது, இடி விழுந்தது போலொரு முழக்கம். நான் தங்கியிருந்த லாட்ஜின் நுழைவாயிலில் போட்டிருந்த தகரக்கூரை உடைந்து விழுந்திருந்தது.
அனைவரும் இருமுடிகளைக் கீழே வைத்து விட்டு என்ன நடந்ததென்று பார்க்க ஓடினோம். “நம்ம பழனி‘ தகர கொட்டாயின் கீழே விழுந்து கிடக்கிறான். அவனுடைய கை உடைந்திருக்க, உடம்பெங்கும் இரத்தச் சிராய்ப்புகள்.அவன் உடம்பில் ஆங்காங்கேயிருந்து இரத்தம் பீறிட்டு வர, ஓடிப்போய் அவனை நான் தூக்கினேன். நாங்கள் மலைக்குச் செல்ல இருந்த வேனிலேயே அவனை ஏற்றிக் கொண்டுபோய்ச்  சைதாப்பேட்டையிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.முதலுதவி அளிக்கப்பட்டது. லேசான மயக்கத்தில் இருந்த அவனிடம் கேட்டேன்… “என்னாச்சு பழனி?”

“நீங்க சபரிமலைக்குப் போக மாட்டீங்கன்னு அந்த பூசாரி சொன்னதை நினைச்சுகிட்டு.. இன்னமும் உங்களுக்கு ஒண்ணுமே ஆகலையேன்னு ரெண்டாவது மாடியிலிருந்து, எட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாகக் குனிஞ்சிட்டேன் போலிருக்கு.. அப்படியே விழுந்திட்டேன்..” என்று அவன் சொல்ல, எனக்கு அழுவதா… சிரிப்பதா…? பெருமைப்பட்டுக் கொள்வதா? அல்லது அவனின் செய்கை சிறுமையானதா? என் அறிவுக்கு எட்டவில்லை.

“சரி, நடந்து விட்டது. உனக்கு நான் சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறேன், உன் சிகிச்சைக்கும் சேர்த்து. நீ நினைக்கறபடி நல்ல சாமியாரோட மலைக்கு வா” என்று, அவன் மருந்து, மாத்திரைக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு, நாங்கள் மலைக்குக் கிளம்பினோம்.

சென்று விட்டு சுகமாகத் திரும்பினோம். ஆனால் காயங்களின் கடும் தன்மை காரணமாக, பழனியால் அப்போது சபரி மலைக்குச் செல்ல முடியாமல் போனது.

இப்போதும் குழந்தை குட்டிகளோடு என் வீட்டிற்கு அவனும், அவன் வீட்டிற்கு நானும் வந்து செல்லக் கூடிய குடும்ப நண்பர்கள் நாங்கள். தற்போது, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. இராஜீவ் மேனன் அவர்களிடம் பழனி ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார்.

அப்புறம், எனக்குத்  திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்துவிட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம்.மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள்போலப் பழகிக் கொண்டிருந்தோம்.

1991ஆம் ஆண்டு நான் 10 வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று… கிறிஸ்துமஸ் நாள்.  வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்குள் வந்திறங்கும்.

அவ்வருடம் நான் விரதமிருந்து கொண்டிருந்த வேளையிலும் அச் சிறுவனை நோக்கி விளையாட்டாக, “இன்னைக்கு எங்க வீட்டுக்குச் சிக்கன் பிரியாணியா… மட்டனா?” என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், “நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்துடுவீங்க… நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ண வேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க.”

“சாமியே சரணம் அய்யப்பா!” என்று கோஷமிட வேண்டிய இதயம், “சாமியே சரணம் ஏசப்பா!”என்று கோஷமிட்டது.

எப்போதும் என் நெற்றியில் இடம்பெற்றிருக்கும் சந்தனமும் குங்குமமும் சிறு வயது முதல் உள்ள பழக்கத்தினால் வைத்துக் கொள்கிறேனே தவிர, வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

எனக்கும் கடவுள் உண்டு. ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது !

[END]

12 thoughts on “இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

  1. சாமியே சரணம் இயேசப்பா! இவரல்லவோ உண்மையான ஆன்மிகவாதி. இல்லை இல்லை உண்மையான மனிதநேயர். திரு பாலன் அவர்களைபற்றி நம் தளத்தின்மூலம் தெரிந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகத்தைபற்றி தெளிவை கொடுக்கும் அற்புதமான பதிவு. நன்றி சுந்தர்.

  2. சுந்தர் ஜி .

    மனம் கனக்கிறது.

    இந்த பதிவை அளித்தமைக்கு என் கண்ணீரை சமர்பிக்கிறேன்.

    என்னை நான் மீண்டும் மீண்டும் செதுக்கிகொள்கிறேன் .

    நன்றி .திரு.வீ.கே.டி பாலன் ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவித்துகொள்கிறேன் .

    -நட்புடன்
    மனோகர்

  3. சுந்தர்ஜி

    ஹாட்ஸ் ஆப் டு பாலன் சார். வெரி நைஸ். பக்தி என்பது தூய்மையான இதயத்தில் உள்ள மனித நேயத்தில் தான் இருக்கிறது. வெளியில் இல்லை என்பதற்கு இதைவிட சிறந்த சம்பவங்கள் ஏது?
    பக்தி என்பது பகல்வேசம் ஆன இந்த நாளில் இந்த உண்மை சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. பாராட்டுக்கள் சுந்தர்ஜி

  4. சுந்தர்ஜி
    திரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது ‘சொல்ல துடிக்குது மனசு’ நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் உணரவேண்டிய உண்மை. மிக பெரிய தத்துவம் . உண்மை . வாழ்க்கையின் எதார்த்தம் மிக அருமை.

    மனித நேயம் நாமக்கு இருந்தால் கடவுளின் அருகில் செல்லாம்.

    நமது புண்ணியச் செயல்கள் வேண்டுமானால் இறைவனை நம்மை நோக்கி பார்க்க செய்யாலாம். ஆனால் இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது தெரியுமா? நம் மனித நேயமே! -இந்த வரிகளில் தான் எத்தனனை எத்தனனை உண்மைகள் .

    ஆயிரம் ஊடகங்களின் நாடுவில் ஒரு அருமையன் பொக்கிஷம் தான் நம் தளம் rightmantra . திஸ் இச் ரைட் சாயிஸ் .

  5. “சாமியே சரணம் ஏசப்பா!..நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மைகள் ..
    நன்றி ..

  6. Dear sundarji,

    Very touching story of Mr.Balan.

    I am very much interested to read the full book .

    Thanks & Regards

    Harish.V

  7. Dear Sundarji
    Happy Morning. Thank you for publishing Mr. Balans’s real sotry of solla thudikudu manasu’. ‘ Thank you so much.
    Regards
    Uma

  8. திரு.வீ.கே.டி.பாலன் அவர்கள் நம் பாரதி விழாவிற்கு வருகை தந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
    அவரின் சுவாமியே சரணம் ஏசப்பா மனதை மிகவும் நெகிழ வைத்தது,
    ஒரு உண்மையான ஆன்மிகவதியிடம் மனித நேயத்தை பற்றி தெரிந்து கொண்டோம் .
    புண்ணிய செயல்களை விட மனித நேயமே நம்மை கடவுள் அருகில் கொண்டு செல்லும் என்று தெளிவு பட கூறியுள்ளார்.

  9. Balan sir—a role model to today’s youth!!
    Very Intellectual person else he couldn’t have done such an act!!
    Proud to have known about him—
    Though I couldn’t make it to our function—ur article ensures that I don miss out on anything !!great—
    ORU virtual effect iruku—could recollect how the event would have happened!! Thats ur strength and RIGHTMANTRA’s strength!!
    Event took place after lots of hardships—everything is for good—lets learn our lessons and ensure we don repeat dem!!

    “SODANAY VANDA DAN SADANAY!!”—How true!!
    Again u have shown that “WHEN THERE IS A WILL—THERE IS A WAY”.
    Awesome stuff—lets keep rocking
    Regards,
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  10. அன்பு சார்,

    படித்த உடன் கண்ணீர் தான் வந்தது. நல்ல உள்ளங்கள் உள்ளவரை நல்லது தான் நடக்கும். நன்றி.

    அன்புடன்
    ஜீவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *