ஒரு முறை சதாசிவ பிரம்மேந்திரர் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, நெல்லும் வைக்கோலும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை கடக்க நேர்ந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை… அந்த வைக்கோல் போரின் மீது சாய்ந்து அமர்ந்தார் பிரம்மேந்திரர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நெற்களத்து காவலாளி பிரம்மேந்திரரை திருடன் என்று நினைத்து தடியை எடுத்து அடிக்க ஓங்கினான்.
ஓங்கிய அடுத்த நொடி, அப்படியே ஓங்கிய கையோடு சிலையாக நின்றுவிட்டான். ஆனால், அதில் அவன் துன்பப்படவில்லை. மாறாக, ஒரு பேரின்ப நிலையை எய்துவிட்டான். அதாவது சிலையாய் நிற்பது அத்தனை சுகமாய் இருந்தது அவனுக்கு. விடிய விடிய அப்படியே ஓங்கிய கையோடு நின்ற போதிலும் கை வலிக்கவில்லை. அசதி ஏற்படவில்லை. ஏதோ பெரும் விருந்து சாப்பிட்டுவிட்டு பட்டுமெத்தையில் படுத்திருப்பது போன்றிருந்தது அவனுக்கு. பின்னே ஞானிகள் அளிக்கும் தண்டனையிலும் இன்பம் உண்டு அல்லவா?
பொழுது விடிந்தபோது, நிலத்தின் உரிமையாளரான மிராசுதார் நெற்களத்தை பார்வையிட வந்தார். சிலையை போல நிற்கும் காவலாளியை கண்டு திகைத்தார். மறுப்பக்கம் வைக்கோல் போரில் பிரம்மேந்திரர் சாய்ந்துகொண்டிருப்பதையும் பார்த்துவிட்டார். இவரை பார்த்ததும் பிரம்மேந்திரர் நகர், இந்த பக்கம் காவலாளி முன்பிருந்த நிலையை அடைந்தான். மிராசுதாருக்கு நடந்தது புரிந்துவிட்டது. ஒரு மாபெரும் ஞானியை தனது வேலைக்காரன் அடிக்க எத்தனித்திருக்கிறான் என்று புரிந்துகொண்டார். தனது வேலைக்காரனை அழைத்து பிரம்மேந்திரரிடம் மன்னிப்பு கேட்குமாறு சொன்னார். ஆனால், அதற்குள் பிரம்மேந்திரர் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார்.
மற்றொரு சம்பவத்தை பார்ப்போம்.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரப்பிரம்மம்!
கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் வேரூன்ற தொடங்கிய காலம் அது. தென் தமிழகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பெரிய படையை மதுரை, ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அனுப்பியது.
அப்படி வந்த படைகளுள் இத்தாலியை பூர்வீகமாக கொண்ட ஒரு ராணுவ வீரன் இருந்தான். அவன் தினமும் சாலை வழியே தனது குதிரையில் பல மைல் தூரம் பயணம் செல்வது வழக்கம். ஒரு முறை அவன் அப்படி செல்லும்போது, சாலையோரம் ஒரு திகம்பர (நிர்வாண) சந்நியாசி பிச்சைக்காரன் போல அமர்ந்திருப்பதை பார்த்தான். அவனுக்கு அது புதுமையாக இருந்தது. இந்தியாவில் இன்னும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டான்.
சில மைல் தூரம் சென்றபோது, அங்கேயும் இதே பிச்சைக்காரரை கண்டான். அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்போது தானே அங்கே பார்த்தோம். அதற்குள் இங்கே எப்படி? என்று சிந்தித்தவாறே, அந்த பிச்சைக்காரனுக்கு அருகே சென்றான். நிச்சயம் இது அவனாக இருக்கமுடியாது என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டபடி சென்றுவிட்டான்.
மேலும் சில மைல் சென்றபிறகு, அங்கேயும் இதே பிச்சைக்காரனை சாலையோரத்தில் கண்டான். அதே உருவம், அதே சடைமுடி.. அதே அதே பிச்சைக்காரன் தான். ஆனால், இங்கே எப்படி? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பிச்சைகாரனை இவன் பார்க்க, பிச்சைக்காரனோ இவனை பார்க்காமல் ஒரு வித ஆழ்ந்த சிந்தனையில் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் காண்பது கனவா நனவா? நான் முந்தி பார்த்த பிச்சைக்காரனா இவன்? சே.. சே… இருக்கமுடியாது… இவன் வேறு யாரோ ஒரு பைத்தியம். இந்தியாவில் பித்து பிடித்த நிலையில் சுற்றித் திரியும் சாதுக்கள் நிறைய பேர் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் வேறு இவன் வேறு… நான் தான் குழம்பிவிட்டேன்” என்று தனக்குள் கூறியவாறு குதிரை மீது ஏறிச் சென்றான்.
மேலும் பல மைல் சென்ற பிறகு, மூன்றாம் முறையும் அதே பிச்சைக்காரன் தென்பட, இந்த முறை அவன் சந்தேகம் தீர்ந்தது. மூன்று இடத்தில பார்த்ததும் ஒரே ஒரு நபரைத் தான் என்ற முடிவுக்கு வந்தான். இந்த முறை பிச்சைக்காரனை அவன் பார்த்த பார்வை வேறு மாதிரி இருந்தது. பக்தியும் மரியாதையும் கலந்த பார்வை அது.
அவர் பிச்சைக்காரன் அல்ல. ஒரு மகான் என்பதை புரிந்துகொண்டான். அருகே சென்றவன், என்ன நினைத்தனோ ஒரு சல்யூட் அடித்தான். அவரது பார்வையே இவனுக்கு அத்தனை இனிமையாக இருந்தது. இவன் குறைகள் எல்லாம் நீங்கிவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவரிடம் ஏதோ பேச முற்பட்டான். ஆனால், அவர் எதுவும் பேசாமல் எழுந்து சென்று அப்படியே இவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். கண்ணெதிரே அவர் மறைந்ததை கண்டு இவனுக்கு அப்படியே விதிர் விதிர்த்துப்போய்விட்டது.
தனது கூடாரத்திற்கு திரும்பியவன், பார்க்கும் அனைவரிடமும் இந்த அதிசயத்தை சொல்லியவண்ணமிருந்தான். அதுமட்டுமல்ல தன் சொந்த நாட்டிற்கு திரும்பியவுடன் கூட இதை பற்றி தனது உற்றார் உறவினர் குடும்பத்தினர் என அனைவருக்கும் சொல்லி மகிழ்ந்தான்.
அதுமட்டுமில்லாமல், ஒரு முறை இவன் தனது நாட்டில் தோட்டத்தில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் அதே மகானின் தரிசனம், முன்பு பார்த்த அதே தோற்றத்தில் கிடைத்தது. இம்முறையும் ஒரு சல்யூட் அடித்தான். ஆனால், தற்போது மகான் மறையவில்லை. சற்று வேகமாக இவனை கடந்து போனார்.
இந்த ஆத்மானுபவத்தை அந்த அதிகாரி தனது தாய்மொழியில் (இத்தாலி) எழுதிய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அதை தற்செயலாக பார்த்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், அந்த மகான் சம்பந்தப்பட்ட பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்து இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தார்.
அவர் அனுப்பிய தகவலை பார்த்த அப்போதைய ஆங்கிலேய அரசு, அதை திருச்சி கஜெட்டில் (அரசிதழ்) வெளியிட உத்தரவிட்டது. அப்போதெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அரசாங்க கஜெட்டில் வெளியிடுவார்கள். 1887 – 1889 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான ஏதோ ஒரு கஜெட்டில் அது வெளியிடப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் வரும் மகான் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?
பஞ்ச பூதங்களை குறிப்பிடும் வகையில் சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானம் மொத்தம் ஐந்து இடங்களில் உள்ளது. நெரூர், மானாமதுரை, பூரி, காசி, கராச்சி ஆகிய ஊர்கள் தான் அவை.
திருவெண்காட்டில் அமைந்துள்ள சதாசிவ பிரம்மேந்திரரின் குரு பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் உள்ள ஒரு வில்வ மரத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் அருவ நிலையில் தங்கியிருப்பதாக ஐதீகம். எனவே அந்த புனித விருட்சத்திற்கு காஷாய வஸ்திரம் அணிவிக்கப்படுவதுண்டு. அந்த வஸ்திரம் நெரூரில் ஆராதனை நடைபெறும்போது எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரம்மேந்திரருக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார். 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி நெரூரில் ஜீவ சமாதி ஆனார்.
பரிகாரத் தலம்
சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானம் அமைந்துள்ள நெரூர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் விருச்சிக ராசி & கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு அருமையான பரிகாரத் தலமாகும்.
உச்சிஷ்ட இலை அங்க பிரதட்சிணம்
நெரூரில் உச்சிஷ்ட இலை அங்க பிரதட்சிணம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டாண்டு காலமாக இங்கு அது நடந்துவருகிறது.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் ஆராதனையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பக்தி இசை நிகழ்ச்சி, சதாசிவ பிரம்மேந்திரர் உற்சவம் ஆகியவை நடக்கும். பூஜைகள் முடிந்தவுடன் மதியம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். சாப்பிட்டு முடித்த பக்தர்கள் யாரும் இலையை எடுக்கமாட்டார்கள்.
நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் காவிரியில் குளித்து விட்டு ஈர உடையுடன் சாப்பிட்டு முடித்த எச்சில் இலையில் உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். ஏதாவது ஒரு இலையில் பிரம்மேந்திரர் அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய திரண்டு வருவார்கள். அங்கபிரதட்சணம் முடிந்ததும் அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படும். ஏதேனும் ஒரு வேண்டுதலை உத்தேசித்து இதை செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For more details : CLICK HERE
================================================================
Also check from our archives….
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் ஒரு நாள்!
================================================================
[END]
சதாசிவ பிரம்மேந்திரரின் ஜெயந்தி நாளில் அவரது மகிமைகளைப் படித்து நான் சிலை ஆனது போல் உணர்ந்தேன், தாங்கள் பதிவு செய்த இரண்டு நிகழ்வுகளும் நான் கேள்விப்படாத ஒன்று.
நன்றி
உமா வெங்கட்
சதாசிவ பிரமேந்திரரைக் குறித்து பல தகவல்களை அறிந்து கொண்டோம். உச்சிஷ்ட இலை அங்கபிரதட்சனத்திற்கு இவ்வாண்டு நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது.
நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த எச்சில் இலை அங்கப் பிரதட்சிணம் நிகழ்ச்சிக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்ததாகவும், ஆனால் அதற்குள் நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டதாகவும் இன்று (29/04) நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மத நம்பிக்கைகள், சடங்குகள் என்ற பெயரில் என்னென்னவோ நடைபெறும் நம் நாட்டில், யாருக்கும் எந்த வித தீங்கும் இன்றி ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் ஒரு புனித சடங்கிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மேற்படி சடங்கில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு சாப்பிடலாம். யார் வேண்டுமானாலும் எச்சில் இலை அங்கப் பிரதட்சிணம் செய்யலாம் என்பது தான் உண்மை. இதில் சாதி என்பதே கிடையாது. நெரூர் பகுதி வாசிகளை கேட்டுப்பாருங்கள் புரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதில் சாதியை புகுத்தி தடை பெற முயற்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அவனவன், வழிபாடு என்கிற பெயரில் என்னென்னவோ செய்கிறான். ஆனால் யாருக்கும் எந்த வித ஆபத்தும் இல்லாமல் நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது ஏன்? பிறருக்கு தீங்கற்ற மத நடவடிக்கைகளை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.
அடுத்த ஆண்டு, நான் பங்குபெற்று உச்சிஷ்ட இலை அங்கபிரதட்சிணம் செய்யவிருக்கிறேன். பிரம்மேந்திரர் அருளவேண்டும்.
சுந்தர்ஜி,
அருமையான பதிவுவ். புது விஷகளயயும் தெரிந்து கொண்டேன். தெய்வம் உங்கள்ல்கு துணை நிற்கும்.
வாழ்க வளமுடடுடன், நன்றி பதிவிறக்க.
நாராயணன்.
சுந்தர் அண்ணா.
இன்று மகான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி உணர்ந்து கொண்டேன். தாங்கள் பதிவு செய்த இரு நிகழ்வுகளும் மிக அருமை மற்றும் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை அண்ணா..தாங்கள் மேற்கோள் இட்டது போல் இவை அனைத்தும் அதிசயமே.
உச்சிஷ்ட இலை அங்க பிரதட்சிணம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை அண்ணா..மெய் சிலிர்க்கவைத்து விட்டது இந்த பதிவு.
மிக்க நன்றி அண்ணா.
அருமையான பதிவு
சதாசிவ பிரமேந்திரரின் மகிமைமகள் அற்புதம்
மகானின் ஆசி வேண்டி நாமும் பிரார்த்திப்போம்
நன்றி
பிரியதர்சினி
வணக்கம் சுந்தர். நல்ல பதிவு. ஒரு முறை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் சமாதியை .அங்கப்ரத்சணம் கேள்விபடாத ஒன்று . அறிய தந்தமைக்கு நன்றி. குருவே சரணம். என் அம்மா இபோதுதான் சென்று தரிசித்து விட்டு வந்தார்கள். நன்றி.
ANNA! Sadasiva Brahmendral oru arputham. Ivaraal uruvaakkappattathu thaan THANJAVUR SRI PUNNAINALLUR MARIAMMAN KOIL. THE TWO EPISODES STATED BY YOU IS VERYMUCH SUPERB.
Sir,
I am your thambi. Not anna.
thanks.
நெரூரில் அமைந்துள்ள சுவாமி பிரம்மேந்திரர் அதிஷ்டானம் நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்லவேண்டிய ஒரு முக்கியமான இடமாகும்.
ஆசிரியர் அளித்த பிரம்மேந்திரர் முதல் பதிவு, எனக்கு அவ்விடம் செல்லுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
பசுமை மிகுந்த இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள இவ்விடத்தில் அடி எடுத்து வைக்கும் போதே மனதில் பரவசத்தை உண்டாக்க கூடிய ஒரு தெய்வீக சூழ்நிலையை உணரமுடியும்.
அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி
ஒருமுறை சென்றால், மறுபடியும் மறுபடியும் செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டும் ஒரு அற்புதமான இடமாகும்.
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் இதுவரை அறிந்திராது ஒன்று.
இந்த வருடமும் குருவருளால் அங்கு செல்ல உத்தேசித்துள்ளேன்.