பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச் செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று கேட்டார் சிற்பி.
இதைக் கேட்ட பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. “என் பாரதத் தாயை ஏழை என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என் பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச் செய்யுங்கள்” என்று கர்ஜித்தாராம் பாரதி.
பாரதத் தாயின் மீது பாரதியார் வைத்திருந்த மதிப்பைக் கண்டு பாரதிதாசன் சிறிது நேரம் மெய்சிலிர்த்துப் போனார். இன்று நாம் காணும் பாரதத் தாய் பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகிறாள்.
வாசலில் வந்து நின்ற குடுகுடுப்பைக்காரன் உடுக்கையடித்து “நாட்டுக்கு நல்லகாலம் பொறக்குது” என குறி சொன்னதற்காக, தான் அணிந்திருந்த வேட்டியைக் கூட சிறிதும் யோசிக்காமல் அவிழ்த்துக் கொடுத்த வள்ளல்தான் பாரதி. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!, அச்சமில்லை, அச்சமில்லை என்பன போன்ற பல பாடல்களைப் பாடி, சோர்ந்து கிடந்த இளைஞர்களையும் எழுந்து உட்கார வைத்து சுதந்திர தாகத்தைத் தூண்டி அவர்களது மனங்களை உழுதவர் மகாகவி.
வறுமை, தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை கூடவே கைகோர்த்துக் கொண்டே வந்தபோதும்கூட சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடத் தயங்காத மாமனிதன். கூனாதே, குனியாதே! என்று தன்னுடன் இருந்த இளைஞர்களைக் கூட வளைய விடாமல் இருந்து ஒரு ராணுவ வீரனைப் போல நடந்து வந்த புரட்சியாளன்.
“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாப்பா பாடல்கள் மூலம் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைக் கூடப் பாட்டால் உழுத விவசாயி.
ஒருமுறை சுதந்திரப் போராட்டத்துக்காக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார் பாரதி. “”உங்கள் வீரம் செறிந்த உரைவீச்சு என்னை மிகவும் புத்துணர்ச்சி உடையவனாக்கி விட்டது. தங்களுக்கு ஏதேனும் பலகாரம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்?” என்றார் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர். அதற்கு பாரதியோ, “”எனக்கு வீரப் பலகாரம்தான் வேண்டும்” என்றார்.
அது என்ன வீரப் பலகாரம்? இதுவரை அப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லையே! என்று குழம்பி அவரிடமே அதற்கான விளக்கத்தைக் கேட்டார். “”பஜ்ஜி, மெதுவடை, இட்லி இதெல்லாம் கோழைப் பலகாரங்கள்.
பக்கோடா, காராபூந்தி, முறுக்கு இதெல்லாம்தான் வீரப் பலகாரங்கள். வாய்க்குள் இவற்றைப் போட்டதும் “”நொறுக்கு, நொறுக்கு” என்றும் “”கடக்கு, முடக்கு” என்றும் பல்லுக்கு வீரமான வேலை கொடுக்கும். அதனால் தான் இவற்றை வீரப் பலகாரம் என்று சொன்னேன். வெள்ளைக்காரனை நம் நாட்டைவிட்டே ஓட, ஓட விரட்டுறதுக்கு வீரம் தானே அவசியம்” என்றாராம் பாரதி.
ஒருமுறை ராஜாஜி வீட்டில் அண்ணல் காந்தியடிகள் தங்கி இருந்தபோது, அவரது அறைக்குள் தலைப் பாகையுடன் கோட்டும் அணிந்து நிமிர்ந்த நடையுடன் அண்ணலின் அருகில் சென்று அமர்ந்தார் பாரதி. “”இன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் சுதந்திரப் போராட்டப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசப் போகிறேன். நீங்கள் தலைமை தாங்க வர முடியுமா?” என்று கேட்டார் பாரதி. “”இன்று எனக்கு வேறொரு இடத்தில் கூட்டம் இருக்கிறது. நாளை வேண்டுமானால் வருகிறேன்” என்றார் காந்தி.
“எனது நிகழ்ச்சியை உங்களுக்காக நான் மாற்றிக் கொள்ள முடியாது. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பாரதி.
கூட்டத்துக்கு வரச் சொன்ன அந்த வித்தியாசமான மனிதர் யாரென்று காந்தி, ராஜாஜியிடம் கேட்டபோது, அவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்றாராம். வியப்பில் ஆழ்ந்த காந்தியடிகளோ, “”இந்த மாமனிதரை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள்” என்றாராம்.
நம் நாடு, நம் தேசம் என்றே வாழ்ந்து எழுத்துகளாலும், பாடல்களாலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான மாமனிதர் பாரதியின் நினைவு தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம்!
கடைசிச் சொட்டு ஈரப்பசை இருக்கும் வரை மரங்கள் மலர்களைத் தருவது போல நாமும் பாரதி புகழ் பரப்புவோம்! வாருங்கள்!
நன்றி : எஸ்.வி.எஸ். ஜெகஜோதி | தினமணி
இன்று செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு நாள்!
=============================================================
பாரதியின் இறுதிக் காலம் ……
வாழ்ந்தபோது பாரதியைச் சமூகம் ஓரளவு அங்கீகரித்ததெல்லாம் சரி, இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பாரதியை அங்கீகரிக்காததன் அடையாளம் அல்லவா எனப் பல முனைகளிலிருந்தும் வினாக்கள் எழக்கூடும். இதற்கு விடை அளிப்பதுபோல பாரதியின் மகள் சகுந்தலா பாரதி அந்தச் சூழலை விளக்கியிருக்கிறார். பாரதியின் மூத்த மகளும் மருமகனும், பாரதியின் தம்பியும் பாரதி இறந்து ஓரிருநாள் கழித்தே வந்துசேர்கிறார்கள். சென்னையிலேயே இருந்த பாரதியின் புதுவைச் சீடர் ரா. கனகலிங்கம் மறுநாள் பத்திரிகையின் வாயிலாகத்தான் மறைவை அறிந்து துடித்துப்போகிறார். இன்று இருப்பதுபோல உடலைப் பாதுகாக்கும் வசதிகளோ, செய்தியைப் பரவலாகத் தெரிவிக்கும் ஊடக வசதிகளோ அன்றில்லை. மேலும், பிராமண சமூக வழக்கம், ஒண்டுக்குடித்தனச் சூழல் முதலியனவெல்லாம் பலர் வரும் முன்னே உடலை எரியூட்டச் செய்துவிட்டன என்பதே உண்மை.
நன்றி : tamil.thehindu.com
=============================================================
Also Check :
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
=============================================================
நம் நாட்டுக்கு பாடு பட்டு சுதந்திரம் வாங்கிகொடுத்த தன்னுடைய கவிதையால் விடுதலை வேட்கையை ஏற்படுத்தி நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க பல கஷ்டங்களை அனுபவித்த பாரதியின் நினைவு நாளில் அவரை நினைவும் கூர்வோம்.
காந்தியடிகளே மா மனிதர் என்று போற்றிய உத்தம ஒழுக்க சீலர். தனக்கு என எதையும் சேர்த்து வைக்காமல் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடு பட்ட உத்தமர். நம் நாட்டின் இன்றைய நிலைமையை பாரதி இப்பொழுது பார்த்தால் அவர் இரத்தக் கண்ணீரே சிந்தித்திருப்பார். பாரதியின் ஒவொரு பாடலும் இப்பொழுதும் எப்பொழுதும் கேட்டாலும் மனதிற்குள் உற்சாகம் குடி கொள்ளும்
பாரதியின் இறுதி காலத்தை பற்றி படிக்கும் பொழுது நம் கண்கள் கலங்குகின்றது
ஜெய் ஹிந்த்
நன்றி
உமா
கவிராஜன் கதையில் மீண்டும் மீண்டும் வாசிக்கும் வரிகள்…
அவன் நாவுக்கு
அவனை விட வயது
அதிகம் போலும் …
கலைமகள் எழுதிய
மனிதப் புத்தகமா
இவன்?…
புரட்சி என்பதை
அவன்
பேனாவில்மட்டும்
பேசிவிடவில்லை..
பார்த்தாயா தேசமே
சேரிக்குச் சென்று வந்ததால்
அக்கிரகாரத்து நெருப்பொன்று
அழுக்காகி விட்டதாம் …
கவிஞனும்
காற்றும்
மரித்ததாய் ஏது
சரித்திரம்?
கவிராஜன் கதை – வைரமுத்து படிக்க வேண்டிய புத்தகம்..
நிச்சயம் பார்க்க/கேட்க வேண்டிய பேச்சு..
http://www.youtube.com/watch?v=f6l82KZUqac
பாரதத் தாய்க்கு ஆடை அலங்காரங்கள் பூணச் செய்த பாரதியின் நாட்டுப்பற்று அனைவருக்கும் தேவை. பல புதிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி.