துவக்கவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வரம் தவில் முழங்க மங்கள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் பாடப்பட்டது.
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான், புத்தமத துறவி கென்டிங் தாய் ஸ்தூபா, தில்லி மாணவர் மந்திர் மிஷன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆச்சார்ய ரூப்சந்திர மகராஜ், சென்னை ஸ்ரீகுருநானக் சத்சங் சபாவின் பொதுச் செயலாளர் பல்பீர்சிங் லோதா ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, கண்காட்சி அமைப்புக் குழுவின் துணைத் தலைவர்கள் பத்மா சுப்பிரமணியம், ஆர். ராஜலட்சுமி, பி. சுரேஷ், வனிதா மோகன், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டம்- மேம்பாட்டுத் துறை தலைவர் வைத்தியசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில் கண்காட்சி அமைப்புக் குழுவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியது ஹைலைட்டாக அமைந்தது.
7-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை இந்தியாவில் தோன்றி உலகெங்கும் வியாபித்துள்ள ஹிந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களின் தலைவர்கள் தொடங்கி வைத்துள்ளனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு வாழும் கலாசாரத்தின் வாரிசுகள் என்ற உண்மையை நாம் மறந்து விட்டோம். அதனால் ஹிந்து மதம் என்றாலே வெறும் பூஜைகள், சடங்குகள், மூட நம்பிக்கைகள், திருவிழாக்கள் மட்டுமே எனத் தவறாக நினைத்து விட்டோம்.
நமது பலம் என்ன என்பதை நாம் உணரவில்லை. அது தான் நமது பலவீனம். தேசம், தெய்வீகம், தர்மம் ஆகியவை ஹிந்து மதத்தின் பலம். தேசத்தைப் பற்றி பேசுபவர்கள் தெய்வீகம், தர்மத்தை மறந்து விடுகிறார்கள். தெய்வீகம், தர்மத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் தேசம் குறித்துக் கவலைப்படுவதில்லை. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதுதான் நமது பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம். இந்த மூன்றையும் இணைத்தால் நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும். இந்த மூன்றையும் இணைப்பதன் மூலம் இந்தியாவை இணைக்கும் சக்தியாக ஆன்மிகம் விளங்குகிறது.
அனைத்து மதங்களும் சமுதாய முன்னேற்றத்தையே வலியுறுத்துகின்றன.
சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாத எந்தவொரு மதமும் இதுவரை தோன்றவில்லை. முற்போக்கு சிந்தனை, அறிவியல் பார்வை, நாத்திகர்களுக்கும் சம அந்தஸ்து, பழம் பெருமைகளை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை ஏற்றுக் கொள்வது என ஹிந்து மதத்தின் சிறப்புகளை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
நீ உன்னை உயர்த்திக் கொள். அதன் பிறகு உன் உயர்வுக்கு காரணமான சமுதாயத்தை உயர்த்து. இதுதான் ஹிந்து மதம் நமக்குச் சொல்லும் பாடம். இதை நாம் உணர வேண்டும். இந்தியாவில் பிறந்ததற்காக பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் பேசியதாவது :
இறை சிந்தனையோடு சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும். அப்படி தொண்டு செய்தவர்களை உலகறியச் செய்வதற்காக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் பெருமைப்பட வேண்டிய எண்ணற்ற விஷயங்களைக் கொண்ட மதம் ஹிந்து மதம். எங்களது திருப்பனந்தாள் காசி மடத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது 100 ஆண்டுகளுக்கு முன்பே மசூதி கட்ட இடம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அனைத்துத் தரப்பினரையும், மாற்றுக் கொள்கை உடையவர்களையும் ஏற்றுக் கொள்வது ஹிந்து மதத்தின் சிறப்பு.
அரசியல்வாதிகளின் செயல்பாடுகளினால் ஆன்மிகவாதிகளும், உண்மையாகச் சேவை செய்பவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஹிந்து அமைப்புகள், கோயில்கள், மடங்களின் சேவைப் பணிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
கண்காட்சிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹிந்து மதத்தை மரமாகவும், ஹிந்து ஆன்மிக, சேவை அமைப்புகளை விழுதுகளாகவும் சித்திரிக்கும் மிகப் பெரிய செயற்கை ஆலமரம் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
காடுகள், விலங்குகள் பாதுகாப்பு, அனைத்து உயிரினங்களையும் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்பம், மனிதப் பண்புகளைப் பாதுகாத்தல், பெண்களுக்கு மரியாதை அளித்தல், நாட்டுப்பற்றை வளர்த்தல் என ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.
காலை முதல் இரவு பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
கண்காட்சியில் ஆன்மிக புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒலிப் பேழைகள், மூலிகைச் செடிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. இவற்றை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும் அரச இலையில் வரையப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஆயில், அகர்லிக் பெயிண்ட் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்களை மறைமலை நகரைச் சேர்ந்த அச்சுதன் பார்வைக்கு வைத்துள்ளார்.
பசு, துளசி பூஜை மனித வாழ்வுக்கு மற்ற உயிர்களின் உதவி தேவை என்பதை உணர்த்தும் வகையில் மற்ற ஜீவராசிகளை நமது முன்னோர் போற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே ஜீவராசிகளைப் போற்றும் வகையில் “கோ பூஜை’ (பசுவைப் பூஜித்தல்), துளசி வந்தனம் (துளசி பூஜை) ஆகியவை ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்றது. பசுக்கள், 1,008 துளசிச் செடிகளை பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் புதன்கிழமை பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் பூஜை செய்யப்பட்ட துளசிச் செடிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கலாசாரப் போட்டிகள்: காடு, வன விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம், பஜனை, நடனம் போன்ற பல்வேறு கலாசார போட்டிகளும் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றன. இதில், 350-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நமது தளம் சார்பாக விரிவான கவரேஜ் இரண்டொரு நாளில் இடம்பெறும். வாசகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் இந்த கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
=============================================================
Also check :
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது எப்படி? வழிகாட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!
சென்னையில் 6 வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி – MUST VISIT
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!
இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1
=============================================================
[END]
இந்து ஆன்மிக கண்காட்சியின் துவக்க விழா போடோக்கள் மிக அருமையாக உள்ளது. இந்த கண்காட்சியை அனைவரும் காண வேண்டும்/ போன முறை நான் சென்ற ஆன்மிக கண்காட்சி நிகழ்ச்சியை நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. ஸ்டால் இற்கு செல்லும் பொழுது அனைவரும் மறக்காமல் ஒரு bag கொண்டு செல்லவும் ஏனெனில் நிறைய pamphlet மற்றும் போடோஸ் ஸ்டாலில் போன முறை விநியோகித்தார்கள் . கையில் பை இல்லாதால் எடுத்து வர கஷ்டமாக இருந்தது
நம் தளம் சார்பாக அடுத்த வருடம் குருவருளாலும் திருவருளாலும் ரைட் மந்த்ரா ஸ்டால் இடம் பெற வேண்டும்.
வாழ்க இந்து தர்மம் … வளர்க அதன் புகழ் உலகமெங்கும் ….
நன்றி
உமா வெங்கட்
நன்றி ஜீ.
நாளை நான் விஜயம் செய்கிறேன். மீண்டும் ஞாயிறு அன்றும் செல்வேன்.
சுந்தர்ஜி
வளரும் நம் சந்ததிகளுக்கு ஒரு நல்ல வழி காட்டி. போட்டோ அனைத்தும் அருமை. இந்த சேவை நம் தளம் மூலம் அறிய மிகவும் சந்தோஷம்.
நன்றி
நன்றி சுந்தர்ஜி
நம் தளம் சார்பாக அடுத்த வருடம் குருவருளாலும் திருவருளாலும் ரைட் மந்த்ரா ஸ்டால் இடம் பெற வேண்டும்