தொடரை கூடுமானவரை சுவாரஸ்யமாக / பயனுள்ளதாக தர முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.
ஒரு திருமணத்தின் மாண்பு எங்கே இருக்கிறது?
சென்ற வருட மத்தியில் நண்பர் ஒருவரது திருமணத்திற்கு சென்றிருந்தோம். சென்னைப் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த அந்த திருமண மண்டபத்தை டூ-வீலரில் சென்று அடையவே நமக்கு இரண்டரை மணிநேரம் பிடித்தது.
அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டபம் அது. நன்கு செலவு செய்து மிக ஆடம்பரமாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நாம் சென்ற நேரம் ரிசப்ஷன் நடந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய ஹாலில் நடந்துகொண்டிருந்த அந்த வரவேற்பை பெரிய ஸ்டேண்டுகளில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து டி.வி.க்கள் ரிலே செய்தவண்ணமிருந்தன. மணமக்களின் உறவினர்கள அனைவரும் வரவேற்பு நடைபெறும் ஹாலிலேயே குழுமியிருந்தார்கள். ஹாலின் ஒரு ஓரத்தில் சிறிய மேடை போட்டு அங்கு லைட் மியூசிக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதை கேட்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகவும் பொருட்செலவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஒவ்வொரு அம்சத்திலும் புரிந்தது.
மணமக்களை வாழ்த்திவிட்டு பரிசு கொடுத்துவிட்டு மேடையைவிட்டு இறங்கினோம்.
மணமக்கள், அடுத்து வந்தவர்களை வரவேற்பதில் பிஸியானார்கள். நாம் மேடையைவிட்டு இறங்கியதும் மணமகளோ அல்லது மணமகனோ யாரோ ஒருவருடைய தம்பி என்று நினைக்கிறோம், “அவசியம் சாப்பிட்டுட்டு போங்க சார்!” என்று நம்மை கேட்டுக்கொண்டார்கள்.
மிக நீண்ட தூரத்திலிருந்து பைக்கை ஓட்டி வந்தபடியால் நமக்கும் சரியான பசி.
நேரே டைனிங் ஹால் எதுவென்று விசாரித்து சென்று அமர்ந்தோம்.
மிகப் பெரிய கேட்டரிங்கில் கான்ட்ராக்ட் போல. ஏகப்பட்ட ஐட்டங்கள்.
நாம் அமர்ந்திருந்தது இரண்டாவது வரிசை.
இரண்டு வரிசையில் பந்தி பரிமாறிக்கொண்டிருக்கும்போதே மேலும் மூன்று, நான்கு வரிசைகள் போட்டு வந்தவர்களை உட்காரவைத்துவிட்டு பரிமாறத் துவங்கினார்கள்.
எங்கள் வரிசைக்கு ஒரு முறை பரிமாறிவிட்டுச் சென்றவர்கள் அடுத்து புதிதாக போடப்பட்ட வரிசைகளை கவனிக்க போய்விட்டார்கள். நாம் சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கூட்டு, பொரியல் காலியாகிவிட்டது. என்ன வேண்டும் என்று கேட்கவோ, தேவையறிந்து கூட்டு பொரியல் போன்ற பதார்த்தங்கள் கொண்டு வரவோ ஆள் இல்லை. பக்கத்து வரிசையில் பரிமாறிக்கொண்டிருந்த யாரிடமாவது கொஞ்சம் வெட்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சத்தமாக கேட்டால், “அங்கே கூட்டு, பொரியல் கேட்கிறாங்க பாரு…” என்று அவர் பதிலுக்கு யாரையோ கூப்பிட “இதோ இதை முடிச்சிட்டு வர்றேன்… ஒரே நேரத்துல எல்லாரும் கூப்பிட்டா எப்படி?” என்று வேறு யாரோ கூற, கடைசி வரை கூட்டுப் பொரியல் கொண்டு வரவில்லை.
(முன்பெல்லாம் சாப்பிடும்போது ஏதாவது கேட்டால், ஒருவர் கேட்டால் கூட கேட்டரிங் பணியாளர்கள், உடனே போய் அதை கொண்டு வந்து போடுவார்கள். இப்போதெல்லாம் கேட்டால், போய் கொண்டுவருவது போல பாசாங்கு செய்துவிட்டு, அடுத்த வரிசையை கவனிக்க போய்விடுகிறார்கள். அவர்கள் கொண்டுவரும்போதே கேட்டு வாங்கிக்கொண்டால் உண்டு.)
காண்டராக்டர்கள் சார்பாக பரிமாறுவதற்கு எட்டு பேரோ பத்து பேரோ இருந்தார்கள். ஆறு வரிசைக்கு எப்படி இத்தனை பேர் பரிமாற போதும்?
இதற்கிடையே நமது வரிசைக்கு வத்தல் குழம்பை விட்டுக்கொண்டே வந்தார்கள். சாம்பார் சாதத்தையே நாம் சாப்பிட்டு முடிக்கவில்லை. அதற்குள் வத்தல்குழம்பா…?
‘பேசாம வாங்கிக்கலாம். அப்புறம் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க…’ என்று முடிவு செய்து பாதி சாப்பிட்ட சாம்பார் சாதத்தை நமது இலையில் சற்று ஓரமாக ஒதுக்கிவிட்டு, இருக்கும் ரைஸை இலைக்கு நடுவே தள்ளி, வத்தல் குழம்பை ஊத்தச் சொன்னோம்.
வத்தல் குழம்பு ஊத்தியவரிடம் “சார்… கொஞ்சம் கூட்டு பொரியல் வேணும்” என்றோம்.
“வருவாங்க சார்…” என்று கூறிக்கொண்டு, அவர் வத்தல் குழம்பை பரிமாறுவதில் தான் கவனம் செலுத்தினார்.
கூட்டு பொரியல் வரும் வரும் என்று காத்திருந்து, கடைசியில் ஒருவர் பக்கத்தில் இரண்டு சேர்கள் தள்ளி யாருக்கோ பொரியல் மட்டும் பரிமாற, நாம் “சார்… சார்… இங்கே கொஞ்சம் பொரியல்” என்று கேட்டதும், நமக்கு ஏதோ கொஞ்சம் ஒப்புக்கு வைத்துவிட்டு போனார்.
கடைசி வரை கூட்டு வரவில்லை. ஆனால் ரைஸ் வந்தது. இவங்களை விட்டால் திரும்ப வரமாட்டார்கள் என்று கருதி, ரைஸை போடச் சொன்னோம். வாங்கிய ரைஸை ரசத்துக்கும் மோருக்கும் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு கிடைத்த கொஞ்சம் பொரியலை தொட்டுக்கொண்டு ஒரு வழியாக வத்தல்குழம்பை பிசைந்து சாப்பிட துவங்கினோம். அதற்குள் ரசம் பரிமாற ஆரம்பித்தார்கள். அடுத்து கொஞ்ச நேரத்துக்குள் மோர் ஊற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
நாம் வத்தல் குழம்பு சாதத்தை சாப்பிட்டுவிட்டு, ரசம் கேட்டால் ரசம் கொண்டு வர ஆளேயில்லை. புதிதாக போடப்பட்ட வரிசையை அனைவரும் கவனித்துகொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே நமக்கருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பலர் சாப்பிட்டுவிட்டு எழ ஆரம்பித்துவிட்டார்கள். பலர் இலைகளில் சுவீட்கள் உள்ளிட்ட பல ஐட்டங்கள் அப்படியே இருந்தன. கேட்டரிங்கில் ஒரு சாப்பாடு எப்படியும் ரூ.350/- சார்ஜ் செய்திருப்பார்கள். ஒவ்வொரு இலையிலும் வீணடிக்கப்பட்ட பொருட்களின் (ஜாங்கிரி, போண்டா, கட்லெட் இப்படி) மதிப்பு மட்டுமே ரூ.200/-க்கும் மேல் இருக்கும்.
நமது வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்துவிட்ட நிலையில், ரசத்துக்கு காத்திருந்த நமக்கு கடைசி வரை யாருமே ரசம் கொண்டுவரவில்லை. அதற்குள் டேபிள் பேப்பரை சுருட்ட பணிப்பெண்கள் வந்துவிட்டனர். நமது டேபிளில் இருந்த இலைகளை அகற்றி கூடையில் போட்டுக்கொண்டே பேப்பரை சுருட்டிக்கொண்டு வந்தவர்கள், நமக்கு அருகில் வந்ததும் சுருட்டுவதை நிறுத்திவிட்டு, நாம் எப்போடா எழுந்திருப்போம் என்று நமக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள். “அண்ணன் எப்போடா கிளம்புவான், சேர் எப்போ காலியாகும்.. நாம் எப்போ சுருட்டலாம்?” என்று நம்மையே பார்க்க ஆரம்பித்தனர். இதற்கிடையே அடுத்த பந்திக்கு இடம் பிடிக்க உள்ள நுழைந்தவர்கள் நமக்கு பின்னே வந்து நின்றுகொள்ள நமக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும்?
“ஒரே நிமிஷம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்…” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டு, இனிப்புக்களை மட்டும் எடுத்து அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தோம். (அவற்றை வீணாக்க மனம் வரவில்லை! இதெல்லாம் பொண்ணோட அப்பன், அண்ணன் ரத்தம்யா !!)
நேரே கையை கழுவிவிட்டு, வரவேற்பில் இருந்த நண்பரை பார்த்து சொல்லிவிட்டு விடைபெற்றுச் செல்ல நினைத்து மேடையேறினோம்…!
“சாப்ட்டீங்களா ஜி? ” என்றார்.
“ஜஸ்ட் இப்போ தான். சாப்பாடு… ரொம்ப பிரமாதம். இது மாதிரி என் லைஃப்ல இதுவரைக்கும் சாப்பிட்டதேயில்லை! இனியும் சாப்பிடப்போறதில்லை!” என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
நண்பரின் திருமணத்தில் நமக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்திற்கு பிறகு திருமணங்களுக்கு சென்றால் – உடனிருந்து கவனிக்க யாரும் இல்லாத பட்சத்தில் – நாம் சாப்பிடுவதில்லை. நேரே மணமக்களை சந்தித்து வாழ்த்து கூறி பரிசு கொடுத்துவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவோம். மணமக்களின் பெற்றோரோ நெருங்கிய உறவினரோ யாரேனும் கூடவே டைனிங் ஹால் வந்தாலும் அவர்கள் இருக்கும்போது உட்காருவது போல பாசாங்கு செய்துவிட்டு அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அடுத்த நொடி எழுந்து வந்துவிடுவோம். சிலர் வீட்டு திருமணங்களில் தவிர்க்க இயலாத பட்சத்தில் லைட்டாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவோம். எதையும் கேட்டு வாங்கி சாப்பிட மாட்டோம்.
(இங்கே சிலரோட மைண்ட் வாய்ஸ் என்ன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்திருந்து பாருங்கள்….!)
ஒரு காலத்தில் மணமக்களின் சகோதரர்கள், மாமன் மச்சான்கள், உற்ற நண்பர்கள் திருமணம் போன்ற விசேஷங்களில் பந்தியை பார்த்துக்கொண்டனர். வந்தவர்களுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்பதை அருகே இருந்து கவனித்தனர். ஏதாவது வேண்டும் என்றால் அவர்கள் ஓடிச் சென்று அதை கொண்டு வந்து பரிமாறினர். சுவையை விட அங்கே உபசரிப்பே மேலானதாக இருந்தது. ஆனால் இன்று ? உறவுகள் இருந்த இடத்தில கீ கொடுத்தால் வேலை செய்யும் பொம்மைகள் போல, பணம் கொடுத்தால் வேலை செய்யும் காண்டிராக்டர்கள்! இது எத்தனை பெரிய அபத்தம்? (இது வரை பல விசேஷங்கள் பார்த்துவிட்டோம்… 99% கேட்டரிங் காண்டிராக்ட்டர்கள் உரிய முறையில் நிறைவாக பந்தியை பரிமாறுவதில் கவனம் செலுத்துவதில்லை!)
திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங் ஆர்டர் கொடுப்பதில் தவறில்லை. நமது டென்ஷனை அது பெருமளவு குறைக்கும். ஆனால், பரிமாறும்போது நாமோ நம்மைச் சார்ந்தவர்களோ அருகே இருந்து சாப்பிடுபவர்களை கவனிக்கவேண்டும். மூன்று வரிசைகளுக்கு மேல் பரிமாற கேட்டரிங்காரர்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால் பந்தியை சரியாக கவனிக்க முடியாது.
ஒருவர் திருமணத்தில் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய இடம் பந்தி போஜனம் தான். திருமணத்தில் ஆயிரம் நிறைகுறைகள் இருந்தாலும் அது சரிசெய்யப்படுவது சாப்பாட்டில் தான். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்று இங்கே எல்லோருக்கும் புரிகிறதா?
எங்கு கவனம் செலுத்தவேண்டுமோ… எங்கு உறவினர்கள் இருந்து பார்த்துக்கொள்ளவேண்டுமோ அங்கு யாரும் இருப்பதில்லை. கோட்டைவிட்டுவிடுகிறார்கள். ஆடம்பரத்தை பறைசாற்றும் ரிசப்ஷன் மேடையில் அத்தனை பேரும் அட்டை போல ஒட்டிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? மணமக்களின் நெருங்கிய நண்பர்கள், தோழிகள் கூட மேடையில் அவர்கள் அருகிலே அவர்கள் பார்வையிலேயே இருப்பதை தான் பெருமையாக நினைக்கிறார்கள். அவர்களும் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஒரு திருமணத்தின் மாண்பு என்பது ஒரு இலைக்கு எவ்ளோ செலவாச்சு, சாப்பாட்டில் எத்தனை ஐட்டங்கள் போட்டார்கள், எவ்ளோ பெரிய கேட்டரிங் கம்பெனி தயார் செய்தார்கள், எத்தனை எல்.சி.டி. டி.வி. மண்டபத்தில் வைத்தார்கள், என்ன மிக்சர் போட்டு லைவ் செய்தார்கள், லைட்டிங்கிற்கோ ஆர்கெஸ்ட்ராவுக்கோ எவ்ளோ செலவு செய்தார்கள் என்பதில் எல்லாம் இல்லை.
வந்தவர்கள் வயிறார உண்டு, அகமும் புறமும் குளிர வாழ்த்திவிட்டு செல்வதில் தான் இருக்கிறது. ஆனால், இப்போது நடைபெறும் திருமணங்களில் இதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா? மனசாட்சியை தொட்டுவிட்டு சொல்லுங்களேன்…
இதே போன்ற அனுபவம் அண்மையில் நடைபெற்ற சேக்கிழார் விழாவிலும் நமக்கு கிடைத்தது… அப்போது நாம் என்ன செய்தோம்?
படியுங்கள்!
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை குன்றத்தூர் அடிவாரத்தில் சேக்கிழார் கோவிலில் அவரது குருபூஜையையொட்டி தமிழ்நாடு தெய்வச் சேக்கிழார் மன்றம் சார்பாக சிறப்பு நிகழ்சிகள் நடைபெற்றன. அதற்கு காலை சுமார் 8.30 அளவில் புறப்பட்டு கொண்டிருந்தோம். அப்போது மதுரையை சேர்ந்த ஒரு வாசகி திருமதி. லதா அம்மா என்பவர் நம்மை தொடர்புகொண்டு தாம் சென்னை வந்திருப்பதாகவும் நம்மை பார்க்கவேண்டும் என்றும் சொன்னார். இதற்கு முன்பு அவர் ஓரிருமுறை நம்மிடம் பேசியிருக்கிறார்.
நாம் குன்றத்தூரில் நடைபெறும் சேக்கிழார் விழாவுக்கு சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தோம்.
“குன்றத்தூரா? ஆஹா… நான் அங்கே வரலாமா சுந்தர்?” என்றார்.
“தாராளமா வாங்கம்மா…. நான் இன்னைக்கு முழுக்க அங்கே தான் இருப்பேன்” என்றோம்.
குன்றத்தூருக்கு எப்படி வரவேண்டும், என்ன ரூட் பஸ் என்றெல்லாம் சொன்னோம். சொன்னபடி அவர் நிகழ்ச்சி துவங்கிய அரைமணிநேரத்தில் வந்துவிட்டார். வரும்போதே இதே நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருந்த வேறு ஒரு பெண்மணியிடம் நட்பு ஏற்பட்டு அவர் இவரை சரியாக நிகழ்ச்சி நடைபெற்ற சேக்கிழார் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.
நிகழ்ச்சிகள் சும்மா சொல்லக்கூடாது… பட்டையை கிளப்பிவிட்டார்கள்!
மழலையர்கள் பலர் பங்கு கொண்டு, தேவாரம், திருப்புகழ், உள்ளிட்ட சைவத் திருமுறைகளை பாடினர். பெரிய புராண முற்றோதல், பல்வேறு அறிஞர் பெருமக்களை பாராட்டி சான்றிதழ் வழங்குவது, கௌரவிப்பது, என நிகழ்ச்சி களை கட்டியது. இடையிடையே பல்வேறு அறிஞர் பெருமக்களை அறிமுகப்படுத்தி அவர்கள் செய்து வரும் திருமுறை மற்றும் சேக்கிழார் பெருமான் தொண்டை எடுத்துக்கூறி, அவர்களும் உரையாற்றுவது என திகட்ட திகட்ட செவிக்கு விருந்து தான்.
(அங்கிருந்தபோது இது பற்றி நமது முகநூலில் கூட நாம் பின்வருமாறு ஒரு அப்டேட் செய்தோம்.)
…………………………………………………………………………………………………………..
//புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்…..
குன்றத்தூரில் சேக்கிழார் திருத்தலத்தில் தற்போது சேக்கிழார் விழா நடைபெற்று வருகிறது. தேவாரம், திருப்புகழ் என பட்டை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். 4 வயது குழந்தை காமாக்ஷி, வாரியாரின் வாரிசுகள் மழலையர்கள் வள்ளி, லோச்சனா, திருவலிதாய சகோதரிகள் மஹாலஷ்மி, மகேஸ்வரி என ஒவ்வொருவரும் பிரமாதப்படுத்திவிட்டார்கள். திருவலிதாய சகோதரிகள் அடுத்த சூலமங்கலம் சகோதரிகள் என்பதில் ஐயமில்லை. ஊனை உருக்கும் குரல். இப்படியெல்லாம் கூட இந்த செவிக்கு நற்கதி கிடைக்குமா…
தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி திரிந்துகொண்டிருந்த என் சிந்தை சிவன்பால் சென்றது எந்த பிறவியில் நான் செய்த புண்ணியமோ தெரியாது. இதற்கே பல பிறவிகள் எடுத்து நான் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுக்கின்றன….
சிவாய நம… !//
…………………………………………………………………………………………………………..
நிகழ்ச்சி மதிய நேரத்தை நெருங்குகையில் ஒரு சிறிய பிரேக் விடப்பட்டது. பக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அனைவரும் அங்கு சென்று உணவருந்திவிட்டு வரலாம் என்றும் மீண்டும் பிற்பகல் 2.30 அளவில் நிகழ்ச்சிகள் தொடரும் என்றும் மைக்கில் அறிவித்தார்கள். நமது வாசகியை தேடினோம். அந்நேரம் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒலிப்பெருக்கி சத்தத்தில் அலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எப்படியும் டைனிங் ஹால் வருவார். அங்கே பார்த்துக்கொள்ளலாம் என்று நாம் உடனே இரண்டு தெரு தள்ளி உணவு ஏற்பாடு செய்ப்பட்டிருந்த மண்டபம் விரைந்தோம்.
நாம் செல்லும்போது ஏற்கனவே மூன்று வரிசைகள் போய்கொண்டிருந்தது. ‘அட… மைக்ல சொல்றதுக்கு முன்னாலேயே இங்கே வரிசையில ஆளுங்க வந்து உட்கார்ந்திருக்காங்களே… உஷார் தான்’ என்று நினைத்துக்கொண்டோம்.
நாம் அமர்ந்த சற்று நேரத்தில் நம் வாசகி லதா அம்மாவும் அவருடன் வந்திருந்த வேறொரு அம்மாவும் வந்துவிட்டார்கள். மூவரும் அருகருகே அமர்ந்தோம்.
இங்கும் கேட்டரிங் காண்டிராக்ட் தான். சுமார் ஆறேழு பணியாளர்கள் அனைவருக்கும் பறிமாறிக்கொண்டிருந்தார்கள். இது தவிர சேக்கிழார் மன்றத்தை சேர்ந்த ஒரு பெரியவர் அனைவருக்கும் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
முன்பு நண்பர் திருமணத்தில் நடைபெற்ற அதே அனுபவம் தான் இங்கும் நமக்கு கிடைத்தது.
ரசமோ, காரக்குழம்போ கொண்டு வர ஆள் இல்லை. நாம் ஒன்று கேட்டால் அவர்கள் ஒன்று கொண்டு வந்தார்கள். கடைசி வரை நமக்கு ரசம் வரவில்லை. கூட்டு பொரியலும் வரவில்லை. நண்பர் சீத்தாராமன் சாப்பிட்டுவிட்டு எழுந்தார். அப்போது அவரிடம் சொல்லி, “மோராவது கொண்டு வாங்க சார்…” என்றோம். அவர் போய் உடனே மோர் வந்தது. இருந்த சாதத்தில் மோரை ஊற்றி சாப்பிட ஆரம்பிக்கிறோம், அதற்கு பிறகு பணியாளர்கள் ரசம் கொண்டு வந்தனர். மோர் சாப்பிட்டுவிட்டு எப்படி ரசம் சாப்பிடுவது? “வேண்டாம் பரவாயில்லை…தேங்க்ஸ்!” என்று கூறிவிட்டு கடைசியில் ஒருவழியாக அட்ஜெஸ்ட் செய்து சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தோம். கையை அலம்பிய பிறகு நாம் செய்தது என்ன தெரியுமா?
அடுத்து நடைபெற்ற பந்தியில் நாம் களமிறங்கி பரிமாறியது தான்.
சாம்பார் வாளியை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு ரவுண்டு வந்து, “சாம்பார், சாம்பார்… யாருக்கு வேணும் சாம்பார்?” என்று கேட்டுக்கொண்டே கேட்டவர்களுக்கு சாம்பார் பரிமாறினோம். நாம் பரிமாறிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் ரசம் கேட்க, இதோ உடனே கொண்டு வர்றேன் சார் என்று கூறி, வேறொருவரிடம் சாம்பார் வாளியை கொடுத்துவிட்டு ரசத்தை கொண்டு வந்து அவருக்கு பரிமாறினோம். அனைவரிடமும் ‘ரசம் வேணுமா ரசம் வேணுமா?’ என்று கேட்டபடி பரிமாறினோம்.
கேட்டரிங் குரூப்பில் இருந்த ஒருவர், “சார் நீங்க யாரு?” என்றார்.
“சார்… நான் ப்ரோக்ராமுக்கு வந்தவன். நான் சாப்பிடும்போது என்னை கவனிக்க ஆள் இல்லை. நீங்களும் ஆள் இல்லாம கஷ்டப்படுறீங்கன்னு புரிஞ்சுது… அதனால, உங்களுக்கு ஹெல்ப் பண்ண நானே வாலண்டியரா பரிமாறுறேன்” என்றோம்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றார்.
நண்பர் திருமணத்தில் நடந்ததை நினைத்து பார்த்து நாம் அப்படியே எழுந்து வந்துவிடுவோம் என்று உங்களில் சிலர் நினைத்திருக்கலாம்.
இது விருந்தல்ல. பிரசாதம். யாரோ சில புண்ணியவான்கள் எடுத்துப்போட்டு சேக்கிழார் பெருமானுக்கு விழா எடுக்கிறார்கள். அடியவர்களுக்கு அன்னம்பாலிக்க விரும்பி, இப்படி ஒரு மகத்தான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் குறை கண்டுபிடிப்பதற்கு பதில் நமது பங்கை செலுத்துவது தானே முறை?
திருமண விருந்தில் உபசரிப்பு என்பது கட்டாயம். ஆனால் இது போன்ற சமய விழாக்களில் அதை நாம் எதிர்பார்க்கக்கூடாது. இது ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர்….! எத்தனையோ சிரமங்களுக்கு இடையே சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அரும்பாடுபட்டு விழா எடுக்கிறார்கள். வருபவர்களுக்கு அவர்கள் சக்திக்கு ஏற்றவாறு அன்னம்பாலிப்பும் செய்கிறார்கள்.
இதற்கும் தங்கள ஆடம்பரத்தை பறைசாற்றும் விதம் நடைபெறும் திருமண விருந்துகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நம் வாசகர்களை நாம் கேட்டுகொள்வது இது தான். உங்கள் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெற்றால், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்று நான்கு பேராவது டைனிங் ஹாலில் கட்டாயம் இருக்கவேண்டும். வருபவர்களுக்கு குறிப்பறிந்து உணவு பரிமாறவேண்டும். பரிமாறாவிட்டாலும் கேட்டரிங் பணியாளர்களை அருகே இருந்து வேலை வாங்கவேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, புறக்கணித்துவிட்டு, ஏதோ மிகப் பிரமாண்டமாக திருமணத்தை நடத்திவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அர்த்தமே இல்லை.
அதே போல நீங்களும் எங்காவது விஷேஷங்களுக்கு சாப்பிட சென்றால் சாப்பிடுபவர்கள் பின்னால் போய் இடம் பிடிக்க நிற்கும் அநாகரீகமான செயலை ஒருபோதும் செய்யாதீர்கள். (சரவண பவன் கிளைகளில் இது சர்வ சாதாரண காட்சி!)
அடுத்து சேக்கிழார் விழா போன்ற சமய விழாக்கள், பக்தி நிகழ்ச்சிகளுக்கு சென்றால், நீங்கள் உணவருந்தியதும், களத்தில் இறங்கி பக்தர்கள் அனைவருக்கும் பரிமாறுங்கள். அல்லது கேட்பவர்களுக்கு கேட்கும் பதார்த்தங்களை கொண்டு வந்து போடுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஜக்கில் தண்ணீராவது கொண்டு கொடுங்கள். பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுங்கள். அதைவிட புண்ணியம் வேறு எதுவும் கிடையாது!
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)
=====================================================================
அனைவரும் படிக்கவேண்டியதொடு மட்டுமின்றி, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய செய்திகள்
அனைத்தும் ஒருங்கே படித்தோம். மாற்றத்தை நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். rightmantra வாசகர்கள் அனைவரும் மேற்சொன்ன வழிகளை நடைமுறை படுத்த நம்மை தயார் செய்வோம்.
பதிவிற்கும், தங்களுக்கும் ஒரு ராயல் “சல்யூட்”
நன்றி அண்ணா..
ஒரு திருமணத்தின் மாண்பு, விருந்தோம்பல் நிகழ்ச்சியில் இருக்கிறது என்பதை மிகவும் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள்.
இந்த காலத்தில் திருமண விழாவில் ஏகப்பட்ட பதார்த்தங்களை போட்டு வீணாக்குவதற்கு பதிலாக லிமிட்டாக ஐட்டம் போட்டு, ஆனாதை ஆஸ்ரமதிற்கு உதவலாம். அவர்களும் மனதார சாப்பிட்டு வாழ்த்துவார்கள்
எந்த திருமண வைபவங்களுக்கு சென்றாலும் சாப்பிடுபவர்கள் பின்னால் போய் நின்று இடம் பிடிக்கும் அநாகரீக செயலைச் செய்யக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்.
மேலும் சமய விழாக்களுக்கு செல்லும் பொழுது நம்முடைய டிக்னிட்டியை தூர எரிந்து விட்டு , நாமே முன் நின்று விருந்து உபசரிக்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதி விட்டீர்கள் .
நன்றி
உமா வெங்கட்
டியர் சுந்தர்ஜி,
தாங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் முற்றிலும் உண்மை. இது போன்ற அனுபவம் எனக்கும் நிறைய கிடைத்திருக்கிறது. இதை விட மோசம் நான் சென்ற ஒரு தோழியின் திருமணத்தில் முதல் பந்தி உணவு அருந்தி கொண்டிருக்கும் பொது அடுத்தவர்கள் அங்கே நுழையும் நேரத்தில் கதவை சாற்றி விட்டார்கள். வந்தவர்கள் கோபித்து கொண்டு சாப்பிடாமலே சென்று விட்டார்கள். திருமண வீட்டார் அழைப்பின் பேரிலேயே தங்கள் நேரத்தை ஒதுக்கி மதிப்பளித்து செல்லுகின்றோம். மணமக்களின் பெற்றோர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கும். ஆதலால் உறவுக்காரர்கள் பந்தி விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். மாறாக அவர்களும் மூன்றாவது மனிதர்களைப்போல் நடந்து கொள்கிறார்கள்.
இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
வணக்கம் சுந்தர். இப்பொது எல்லாம் கடமைக்காக வந்து வாழ்த்திவிட்டு பிறகு பேருக்கு சாப்பிடுவது நடக்கிறது.இலையில் வைத்த உணவு பண்டங்களை வீணடிப்பது பேசன் ஆகிவிட்டது.ஆனால் எங்கள் வீட்டு கல்யாணங்களில் கடைசிவரை பரிமாறும் இடத்தைவிட்டு நகரமாட்டர்கள்.தாலி கட்டும் நேரம் மேலே நிற்பார்கள்,சற்று நேரம் அவளவுதான். சேகிழார் குருபூஜையில் நீங்கள் செய்தது அற்புதம்.பக்குவப்பட்ட மனது.வாழ்த்துக்கள் . நன்றி.
பாராட்டப்படவேண்டிய வழக்கம் உங்கள் வீட்டில் இருப்பது. வாழ்த்துக்கள்.
மேலும் இப்போதெல்லாம் கேட்டரிங்காரர்கள் இன்னொரு உபாயத்தை கையாளுகிறார்கள். “கல்யாணத்தன்னைக்கு உங்க சாப்பாட்டு கணக்குலே இருந்து கம்பல்ஸரியா ORPHANAGE / OLD AGE HOME க்கு நாங்க 25 சாப்பாடு கொடுத்துடுவோம்!” என்பார்கள். (இது மகா புரூடா!) இதில் வழுக்கும் மணமக்கள் வீட்டார் அவர்களுக்கே ஆர்டர் கொடுத்துவிடுவார்கள்.
“ஐயா… புண்ணியவான்களே… நீங்கள் மணமக்களின் கணக்கில் இருந்து தான தர்மம் செய்வது இருக்கட்டும். முதலில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு சரியாக பந்தி பரிமாறுங்கள். அவர்களை அனாதைகள் போல நடத்தாதீர்கள்!”
இது போன்ற கசப்பான அனுபவம் பெறும் பலர், இதை எதுக்கு போய் பொண்ணு மாப்பிள்ளைகிட்டே சொல்லிகிட்டிருக்கணும் என்று பேசாமல் விட்டுவிடுவார்கள். அவர்கள் திருமணத்தில் இப்படி நடந்தது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.
(நான் பதிவில் கூறியது போல 100 ல் ஓரிரண்டு கேட்டரிங் கம்பெனியினர் மட்டும் நன்றாக பரிமாறுவார்கள். அது மிகவும் அரிதான ஒன்று!)
திரு விஜி, எங்கள் அப்பா 5 பேருக்கு திருமணம் செய்து இருக்கிறார் . கேட்டரிங் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமால், தானே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கி , ஒவ்வொரு கல்யாண சாப்பாடும் அவ்வளவு நன்றாகவும், வந்தவர்கள் அனைவரும் சாப்பாடு அருமை என்று வாழ்த்தி விட்டு சென்றது எனக்கு நினைவில் இருக்கிறது. இன்று கூட மதுரையில் எங்கள் வீட்டிற்கு யார் சென்றால் என் அம்மா செய்யும் விருந்தோம்பலுக்கு ஈடு இணை கிடையாது.
நன்றி
உமா வெங்கட்
வணக்கம்…… ஏற்கனவே பந்தி வஞ்சனையின் தீமையைப் பற்றி நம் தளத்தின் மூலம் அறிந்திருந்தோம்……. இப்போது விருந்தோம்பலில் ஏற்படும் குறைபாடுகளை பற்றியும் தெரிந்து கொண்டோம்…… இந்த தவறுகள் நம் தள வாசகர்களின் இல்ல விழாக்களில் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை செய்த தங்களுக்கு நன்றிகள்……
இன்று பெரும்பான்மையான திருமண பந்திகளில் தாங்கள் விவரித்த வண்ணம்தான் நடைபெருகின்றன, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் இன்று அதனை புரந்தள்ளுவது மிக பெரிய அவமானம்.
சேக்கிழார் விழா பந்தியில் தங்கள் செயல் ஒரு சிறந்த பாராட்டுக்குரிய முன்னுதாரணம்.
பெரும்பான்மையான கோயில்களில் நடைபெறும் அன்னதானததை கவனித்தால் கண்ணில் இரத்தம் வரும்..
Sponsor இருக்கும் நாள்களில் ஓரளவு நன்றாக இருக்கும்.
மற்ற நாட்களில் உணவின் தரம், உபசரிப்பு மற்றும் அளவு இவைகளை கவனித்தால் நமக்கு ரத்தஅழுத்தம் நிச்சயம் எகுறும்.
செம…