Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > கொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி!

கொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி!

print
ந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு மிக மிகப் பெரியது. சுமார் 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய விடுதலைப் போர் ஒரு மாபெரும் இயக்கமாக மாறி சுதந்திரம் மலர்ந்ததன் காரணமான வித்து இங்கு ஊன்றப்பட்டது தான்.

ஆம்…. 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சி இதே நாளில் தான் வெடித்தது. சிப்பாய் புரட்சி என்றால் ஏதோ சாதாரண போராட்டம் என்று நினைக்கவேண்டாம். நூற்றுகணக்கான இந்திய வீரர்கள் இந்த புரட்சியில் கொல்லப்பட்டனர். நீர் மூழ்கடிக்கப்பட்டு பல நியாயுதபானிகள் சாகடிக்கப்பட்டனர். அந்நியன் கைகளில் சிக்கக் கூடாது என்று மானமே பிரதானம் என கருதி நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

வேலூர் சிப்பாய் புரட்சி குறித்து தினமலர் இணையத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றை இங்கு தருகிறேன். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்கக்கூடாத ஒரு மாபெரும் நிகழ்வை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

ஜெய் ஹிந்த்!

==================================================

வேலூர் சிப்பாய் புரட்சி !

கி.பி. 1806ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப்போருக்கு முன்னேடியாக விளங்கியது.

கி.பி. 1760ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் வேலூர் மாவட்டம் ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் நடந்த போரில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்றனர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ஹைதர் அலி கி.பி., 1782ம் ஆண்டு வேலூர் அடுத்த கண்ணமங்கலத்தில் நடத்திய போரின் போது, அவர் நோய் வாய்ப்பட்டு இறந்தார். ஹைதர் அலிக்கு பின் அவரது மகன் திப்பு சுல்தான் மட்டுமே தென்னகத்தில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து வந்தார்.

கடந்த 1801ம் ஆண்டு வட ஆற்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் கொண்ட சென்னை மாகாணம் அமைக்கப்பட்டது. நாட்டில் இருந்த ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள் ஆகியோரிடையே பிரிட்டிஷ்காரர்கள் மீது பகை வளர்ந்தது. இந்த நேரத்தில் திப்புசுல்தானின் குடும்பத்தினர், அவரது வேலையாட்கள் என 10 ஆயிரத்து 200 பேர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டு, அங்கிருந்த திப்பு மஹால், ஹைதர் அலி மஹாலில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 1806ம் ஆண்டு மதராஸ் படைக்கு முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சர் ஜான் கிரடேக் என்பவர் ராணுவ வீரர்களிடம் பல விதிமுறைகளைப் புகுத்தினார். ராணுவ அணி வகுப்புக்கு வரும் ஹிந்துக்கள் காதில் கடுக்கண் அணியக்கூடாது. சமயச் சின்னங்கள் நெற்றியில் இடக்கூடாது. முகமதியர்கள் தாடியை அகற்றி மீசை வைத்துக் கொள்ள வேண்டும். தலையில் பசுத் தோல் சுங்கு தொங்கும் குல்லாய் அணிய வேண்டும். மார்பருகில் சிலுவை சின்னம் அணிய வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்தனர்.

வேலூர் கோட்டை – அமைதியாக தெரியும் இந்த கோட்டைக்கும் அகழிக்கும் பின்னணியில் எத்தனை பெரிய போராட்டமும் தியாகங்களும் இருக்கிறது தெரியுமா?

தங்களை மதம் மாற்ற வைக்கிறார்கள் என்ற எண்ணம் இந்திய படை வீரர்களுக்கு ஏற்பட்டது. இவை அனைத்தும் தங்கள் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என கருதி இதை எதிர்த்தனர். 1806ம் ஆண்டு மே மாதம் லெப்டினென்ட் கர்னல் டேர்லி, “இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய அணிகலன்களில் மாற்றங்களில் மன நிறைவு இல்லை’ என மதராஸ் படைக்கு தகவல் தெரிவித்தார். புது ஆணையை எதிர்ப்பவர்கள் மதராஸுக்கு அனுப்பப்பட்டு, விசாரணை செய்த பின்னர் 500க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கோட்டையில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் போடப்பட்டனர்.

2,000 பேர் கோல்கத்தாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதை அறிந்து புரட்சி செய்த ராணுவ வீரர்களை தற்காலிகமாக நீக்கி 23வது ரெஜிமெண்டில் சேர்க்கப்பட்டனர். இது போன்ற கடுமையான தண்டனைகள் இந்திய சிப்பாய்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த கடுமைகளே வேலூர் சிப்பாய் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர் அது புரட்சியாக வெடித்தது. வேலூர் கோட்டையில் இருந்த இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்ய ஜூலை 14ம் தேதியை தேர்ந்தெடுத்தனர்.

இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்யும் திட்டத்தை முஸ்தபா பேக் என்ற சிப்பாய் கர்னல் போர்ப்ஸ் என்ற ராணுவ அதிகாரியிடம் தெரிவித்து விட்டார். இதை அறிந்த சிப்பாய்கள் புரட்சியை திப்பு சுல்தானில் மகளுக்கு திருமணம் நடக்கும் ஜூலை 10ம் தேதிக்கு திடீரென மாற்றினர்.

கி.பி., 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இந்திய வீரர்கள் அணி வகுப்பு மரியாதை நடக்கும் இடத்துக்கு வந்தனர். பிரிட்டிஷ் வீரர்கள் இந்திய வீரர்களைச் சுடுகின்றனர் என்ற தவறான தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷார் இருப்பிடங்களுக்குச் சென்று 250 அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், 500 பிரிட்டிஷ் வீரர்களை சுட்டுக் கொன்றனர். கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கில அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கி, திப்பு சுல்தானில் புலிக் கொடியை ஏற்றினர்.

கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் என்பவர் அப்போது ராணிப்பேட்டையில் இருந்த பிரிட்டிஷார் குதிரை படைக்கு தகவல் கொடுத்தார். அரை மணி நேரத்தில் 5,000 பேர் கொண்ட குதிரை படைகள் வேலூருக்கு வந்து கோட்டையின் தலைவாயில் கதவுகளைத் தகர்த்து உள்ளே சென்றது. தலைமை அற்ற நிலையில் புரட்சி செய்த 850 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். அப்போது, கோட்டை திப்பு மஹாலில் திப்பு சுல்தானின் மகளுக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் சிப்பாய்கள் கோட்டை தகர்த்ததை அறிந்து திப்புவின் குடும்பத்தினர் திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டனர்.

பிரிட்டிஷ் சிப்பாய்கள் தங்களை பிடித்து மானபங்க படுத்தி விடுவர் என்று பயந்து அங்கிருந்த கிணற்றில் 500க்கும் மேற்பட்ட திப்புவின் உறவுப் பெண்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நேரத்தில் அங்கு வந்த பிரிட்டிஷ் வீரர்கள் 125 திப்புவின் உறவினர்களை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றனர். பின்னர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த திப்பு சுல்தானின் புலிக்கொடி இறக்கப்பட்டு யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டது. கோட்டையில் பல இடங்களில் இருந்த 600 இந்திய சிப்பாய்களை பிடித்து வேலூர், திருச்சி சிறைகளில் அடைத்தனர். 17 இந்திய அதிகாரிகள் வேலூர் கோட்டைக்கு மேற்கில் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். புரட்சியை தூண்டிய 750 இந்திய சிப்பாய்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கோட்டைக்கு மேற்கு பகுதியில் இருந்த புளிய மரத்தில் தூக்கில் போட்டனர்.

1806ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் நடந்த ஒரு நாள் சிப்பாய் புரட்சி தான் பின்னாளில் இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னோடியாக அமைந்தது.

(நன்றி : Dinamalar.com)

3 thoughts on “கொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி!

  1. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்த தமிழகம் இப்போது எப்படி இருக்கிறது என்று நினைக்கும்போது, வரலாற்றை நினைத்து பெருமைப்படும் அதே நேரம், பேராசையின் உச்சத்தில் உள்ள தமிழகத்தை நினைத்து வருத்தப்பட வேண்டியுள்ளது. இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வை மனதில் கொண்டு அதை எங்களுக்கு நினைவூட்டி அளித்த பதிவுக்கு நன்றி சுந்தர்.

  2. ஜாதி மத அடையாளத்திற்கு 207 வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் 850 க்கும் மேற்பட்டோர் மாண்டுள்ளர்கள் .திருமணம் நிறுத்தப்பட்டு 500 மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளர்கள் .

    மானம் ,மரியாதையை , எந்த அளவிற்கு மதித்துலார்கள் என்பது புரிகிறது .

    மாண்டவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதே.

    -மனோகர்

  3. எத்தனை வலி, வேதனை, சித்தரவதை , உயிர்பலி கொடுத்து பேட்டர சுதந்திரத்தின் இன்றைய நிலையை நினைத்தால் மனம் ரணமாகிறது !!!

    ஈவு இரக்கமற்ற ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம் இப்போதோ சுயநலத்தின் சிகரமாக விளங்கும் அரசியல் வாதிகளை எதிர்த்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளோம் !!!

    தன்னலமற்ற தலைவரை அடையாளம் கண்டு அவரிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் நாள் தான் உண்மையான சுதந்திரமாக அமையும் !!!

    விடியலை நோக்கி
    வேதனையுடன் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *