Sunday, January 20, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

print
ருவரின் சுபிட்சத்திற்கும் சந்தோஷத்திற்கும் தன்னிறைவான பொருளாதார வாழ்க்கை மிகவும் அவசியம். பணம். இன்றைய உலகம் இயங்குவது இதை சுற்றி தான். அடிப்படை தேவைகளுள் ஒன்றான தண்ணீரை கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு இன்றைக்கு அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். இதை எழுதும் நாம் படிக்கும் நம் வாசகர்கள் உட்பட அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று இந்த வையம் தழைக்க வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு உங்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) வழிகாட்டுவது தான் இந்த தொடர்.

பெட்ரோல் பங்கில் நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுபவர்களையே கொஞ்சம் ஏக்கத்தோடு பார்ப்பவன் நான். எனவே இந்த தொடரை எழுத எனக்கு தகுதி இருப்பதாக கருதவில்லை. ஆனால் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணி தான் இந்த முயற்சியை துவக்குகிறேன். எனவே பொருளாதார தன்னிறைவை நோக்கி செல்லும் இந்த பயணத்தில் உங்களுடன் நானும் வருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த தன்னிறைவை நோக்கிய பயணத்தில் பண விஷயத்தில் நான் வாழ்க்கையில் படித்த, படிக்கும் பாடங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு உங்களுடன் சேர்ந்து நானும் புறப்படுகிறேன். கடுமையான பயணம் செல்பவர்கள் துணைக்கு சிலரை கூட்டிச் செல்வதில்லையா அது போலத் தான் இது.

நிம்மதியான பொருளாதார வாழ்க்கை வேண்டும் என பலர் கடவுளை வேண்டுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் நமது பொருளாதாரப் பிரச்னை தீரவேண்டும் எனில் நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் பணம் குறித்த நமது அணுகுமுறையும் மாறவேண்டியது மிகவும் அவசியம். பணத்தை வசீகரிக்கும் விதிகளையும் தெரிந்துகொள்வது அவசியம்.

நாம் கேட்கும் அனைத்தையும் அள்ளித் தர இந்த பிரபஞ்சம் தயாராக இருக்கிறது. ஆனால் கைகளையும் மனதையும் மூடிக்கொண்டு கேட்பதில் தான் பிரச்னையே.

மாதம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் இந்த தொடரில் இடம்பெறும். இதில் இடம்பெறும் விஷயங்களை செயல்படுத்தி வாருங்கள். தொடர் முடிவு பெறும் சமயம் என்றால் (சுமார் பத்து மாதங்கள் கழித்து) உங்கள் பொருளாதார நிலையை பரிசீலனை செய்தீர்கள் என்றால் நிச்சயம் இப்போது இருப்பதை விட மிக சிறப்பாக இருக்கும்.

பணத்தை ஈர்க்கும் இந்த எளிய விதிகளை பாடங்களை தெரிந்துகொண்டு உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தினீர்கள் என்றால் பணத்தை இழுக்கும் காந்தமாக மாறி நிச்சயம் நீங்களும் விரைவில் ஒரு தன்னிறைவு பெற்ற மனிதராக உயர்வீர்கள் என்பது உறுதி.

அப்படி உயரும் காலத்தில் வந்த வழி மறக்காது,

‘தாளாற்றி  தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு’

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப இல்லாதோர்க்கு வாரி வழங்கி இன்பம் காண்போமாக.

நமது தேவை என்ன என்பது பற்றி நாம் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். நம்மிடம் வரும் ஒவ்வொரு ரூபாயையும் போற்றவேண்டும். நாம் அடைய நினைப்பவற்றை நோக்கி உழைக்கத் துவங்கவேண்டும். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கவேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் பணம் நிச்சயம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பது உறுதி. எல்லாவற்றுக்கும் மேல், நேரத்தின் அருமை தெரிந்துகொள்ளவேண்டும்.

நாம் இழந்தால் மீண்டும் பெற முடியாத பெருஞ்செல்வம் எது தெரியுமா? நமது ஆரோக்கியமும் நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் தான்.

எனவே பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற விரும்புகிறவர்கள், “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்று கருதி உழைக்கவேண்டும். நேரத்தை வீணடிக்ககூடாது. தங்களது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளக்கூடிய எதையும் செய்யக்கூடாது.

விதி 1 : தேவை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

உண்மையில் நீங்கள் பணத்தை வசீகரிக்கும் ஒரு காந்தமாக மாறி செழிப்புடன் வாழ விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு என்ன வேண்டும் ஏன் வேண்டும் என்பது பற்றி நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இந்த பிரபஞ்சம் நாம் கேட்பதை தர தயாராக இருக்கிறது. கேட்கும் விதத்தில் கேட்டால்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்க ரூ.20,00,000/- தேவை என்று வைத்துக்கொள்வோம். அதை துல்லியமாக குறிப்பிட்டு கேட்கவேண்டும். நான் வீடு வாங்கவேண்டும் என்று வெறுமனே பொத்தாம் பொதுவாக கேட்க கூடாது. ‘துல்லியம்’ என்பது பண விதிகளில் அடிப்படையான ஒன்று.

அதே போல நமக்கு என்ன தேவை ஏன் தேவை என்பது பற்றி சரியான புரிதல் அவசியம். நீங்கள் எந்தளவு ஏன் என்று கேட்கிறீர்களோ அந்தளவு வரும் வழி சுலபமாகும்.

எனவே ஏன் தேவை என்பது பற்றி மிகப் பெரிய காரணம் ஒன்றை கண்டு பிடியுங்கள். உதாரணத்திற்கு “நான் தான் கஷ்டப்படுறேன். என் பிள்ளைகளாவது நல்லாயிருக்கனும். சௌகரியமா இருக்கணும். அதனால் எனக்கு தேவை!

“ஏன் தேவை?” – பண விதிகளில் மிக மிக முக்கியமான வினா.

விதி 2 : வரும் ஒவ்வொரு ரூபாயையும் கொண்டாடவேண்டும்

நல்ல பண மேலாண்மைக்கு மோசமான பண மேலாண்மைக்கும் இது ஒரு அடிப்படை காரணம். சிலருக்கு மட்டும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதென்றால் காரணம் அவர்கள் எப்போதும் நன்றிமிக்கவர்களாகவும் பாசிடிவ்வாகவும் இருப்பதும் தான் (அடிமை அல்ல). வீண் செலவு செயம் ஒவ்வொரு ரூபாயும் மதிப்பு மிக்கது. ஒரு ரூபாயில் என்ன ஆகிவிடப்போகிறது… பத்து ரூபாய் தானே என்கிற எண்ணம் கூடவே கூடாது. நம்மை தேடி வரும் ஒவ்வொரு ரூபாயும் நாம் கொண்டாட வேண்டும். அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவது வேறு நம்மை தேடி வரும் பணத்தை கொண்டாடுவது என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

விதி 3 :உங்கள் விருப்பங்கள் ஈடேற செயலாற்ற வேண்டும்

Universe helps those who help themselves. நேர்மறையான உயர்ந்த லட்சியங்களை வாழ்வில் வைத்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும். இது உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போல. உழைக்கவேண்டும். அதற்க்கு ஊதியத்தை எதிர்பார்க்கவேண்டும். அதைவிடுத்துவிட்டு குறுக்குவழிகளில் முயற்சித்துவிட்டு மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று எதிர்பார்க்க கூடாது.

இவர்களை போன்றோரை தான் பட்டுக்கோட்டையார் “சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென அலட்டிக்கொள்வார்” என்று கூறினார்.

எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றுவோர் நிச்சயம் பணத்தை ஈர்க்கும் காந்தங்களாக இருப்பார்கள்.

விதி 4 : என்ன தேவையோ அதை கேளுங்கள்

தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள பண விதிகளில் இதுவும் ஒன்று. நாம் மிகுந்த பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் அல்லது சேவையை பெறுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதில் கூடுதல் சலுகைகளை கேட்டுப் பெறுவதில் தயங்கக்கூடாது. ஏனெனில் அது நம் உரிமை. உதாரணத்திற்கு தங்கம் வாங்கும்போது, கடைகளில் டிஸ்கவுன்ட் கேட்கவேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் நிச்சயம் டிஸ்கவுன்ட் கேட்கவேண்டும். கேட்டு அவர்கள் இல்லையென மறுப்பதால் நமக்கு என்ன இழப்பு நேர்ந்துவிடப்போகிறது? ஆனால் ஒருவேளை நாம் கேட்கும் தள்ளுபடி கிடைத்தால் அது ஒரு வகையில் வரவு தானே? ரிஸ்க் என்கிற எதுவும் இன்றி வரக்கூடிய இத்தகைய மறைமுக வருவாய்களை ஒரு போதும் உதாசீனம் செய்யக்கூடாது. அப்படி அது கிடைக்கும்போது அதை நாம் மகிழ்ச்சியுடன் நன்றியுடன் ஏற்றுக்கொண்டு கொண்டாடவேண்டும்.

விதி 5 : எதிர்பார்ப்பின்றி உதவுங்கள்

எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பிறருக்கு உதவேண்டும். (Give back to people without any expectation of recognition). எந்த வித பிரதிபலனும், அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் உங்கள் உதவி இருக்க வேண்டும்.

தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை என்று சொல்வார்கள். ஆனால் பண விதிப்படி உண்மை என்னவென்றால் “தரும் கைகள் தேடி பொருள் வராது… கொட்டும்” என்பது தான். அனுபவப்பூர்வமாக் உணர்ந்தவர்களிடம் கேட்டு பாருங்கள்.

பிரபஞ்சத்தில் அதிகம் கொடுப்பவரே அதிகம் பெறுகிறார். கொடுப்பதில் ஆனந்தம் காண்பவர்களே அதிகம் பெற்று அதில் ஆனந்தப்படமுடியும்.

எந்தளவு நல்ல காரியங்களுக்கும் நல்ல விஷயங்களுக்கும் தகுதி உடையோர்க்கும் கொடுக்கிறோமோ அந்தளவு நன்மைகள் நாம் கேட்காமலே நம்மை தேடி வரும். அந்த நன்மைகளை பெற்று போற்ற தயாராக இருங்கள். எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் வருவாயில் 5% – 10% வரை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

மேற்கூறிய அடிப்படை பணவிதிகளை பயன்படுத்துங்கள். பணம் உங்களை தேடி வரும் காந்தம் போல நீங்கள் மாறுவதை உணர்வீர்கள்.

(முதல் பகுதி முற்றும்)

அடுத்த பகுதியில் பணத்தை மேன்மேலும் ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வேறு பலப் பல புது விஷயங்களுடன் சந்திப்போம்.

 

20 thoughts on “அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

 1. சுந்தர்ஜி,

  உங்களுடைய கடுமையான பயணத்தில் நாங்களும் பங்கேற்கின்றோம்.

  நன்றி.

 2. அருமையான உபயோகமான புதிய தொடர். நம் வாசகர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இதை படித்தபிறகு பலருக்கும் பணத்தை பற்றிய கண்ணோட்டம் மாறும். பொருளாதார தன்னிறைவு என்றால் என்ன என்பதில் தெளிவு கிடைக்கும். பாராட்டுக்கள் சுந்தர்.

 3. சார், மிக நல்ல முயற்சி .உங்களின் வலையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . மற்றவர்களையும் தன்னை போல என்னும் உங்களை வாழ்த்துகிறேன் .வாழ்க உங்கள் சேவை .ஓம் ஸ்ரீ சாய் ராம் உங்களுக்கு துணை இருப்பாராக .- ரேவதி வெங்கடேஷ்பாபு .

 4. நல்ல அருமையான தொடர்.
  ஏதோ ஒரு புது பாதையில் அடி எடுத்து வைப்பது போல உள்ளது.
  உங்கள் பயணத்தில் நாங்கள் என்றும் துணை இருப்போம்.

 5. காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா
  கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே..

  நாம் கேட்கும் அனைத்தையும் அள்ளித் தர இந்த பிரபஞ்சம் தயாராக இருக்கிறது. ஆனால் கைகளையும் மனதையும் மூடிக்கொண்டு கேட்பதில் தான் பிரச்னையே. – சுந்தர் சார் கைகளையும் மனதையும் என்ற வரிகளை சற்று விளக்கமாக அடுத்த பதிவில் எதிர்பார்க்கின்றேன்
  உலகமே இந்த பணத்தை நோக்கிதான் ஓடிக்கொன்றிருக்கிறது ஆனால் அந்த பணமே நம்மை நோக்கி ஓடிவர வழி சொல்லியுள்ளீர்கள் ..
  நன்றி..

 6. சுந்தர் அண்ணா பதிவு அருமையாக உள்ளது .மனம் தரும் மனம் என்ற புத்தகம் படித்தீர்களா அருமையாக இருக்கும் அந்த புத்தகம் மூலம் நம் நினைக்கும் இலட்சியத்தை அடையலாம் எனக்கும் வெற்றி கிடைத்தது

  1. மிக்க மகிழ்ச்சி. அந்த நூல் எந்த பதிப்பகம், விலை என்ன என்பது குறித்த தகவல்களை அளித்தால் வாங்குவதற்கு எனக்கு உபயோகமாக இருக்கும்.

   ‘நல்ல நூல் ஒன்று நல்ல நண்பனை போன்றது’

   – சுந்தர்

 7. சுந்தர் அண்ணா மன்னிக்கவும் எழுத்துப்பிழை செய்துவிட்டேன் புத்தகத்தின் பெயர் :மனம் தரும் பணம் : கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும் .அண்ணா இந்த வார ஞாயிறு அன்று எங்கள் உரில் உள்ள சிவன் கோவிலில் (புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஸ்ரீ உறுமநாதர் ) உலவரபணி நடைபெறுகிறது நானும் கலந்துகொள்ள அனுமதிகேட்டுள்ளேன் வரசொல்லிருக்கிரர்கள் . உங்கள் மூலமாகத்தான் எனக்கு ஆர்வம் வந்தது உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா உங்கள் செல் நம்பர் வேணும் .

  1. நன்றி. என் மொபைல் எண் ஒவ்வொரு பிரார்த்தனை கிளப் பதிவிலும் இடம்பெறுகிறதே.. கவனிக்கவில்லையா?
   http://rightmantra.com/?p=5454
   – சுந்தர்

 8. மிகவும் அருமையான பதிவு. நீங்கள் கட்டுரையில் சொன்னதை பலமுறை எங்கள் குருமகான் இக்கருத்தினை கூறியுள்ளார்கள். வேண்டும் பொருளை சரியக வேண்டவேண்டும்.

  ‘துல்லியம்’ என்பது பண விதிகளில் அடிப்படையான ஒன்று.

  எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பிறருக்கு உதவேண்டும். (Give back to people without any expectation of recognition). எந்த வித பிரதிபலனும், அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் உங்கள் உதவி இருக்க வேண்டும்.

  மேலே சொன்ன இந்த இரு விஷயமும் மிகவும் அவசியமானது.

  இந்த தொடர் மூலம் நமது தள நண்பர்கள் வாழ்வில் பொருளாதார தன்னிறைவு பெற்று, சமுததில் தன்னிறைவு பெற்று மாபெரும் நல் மற்றம் ஏற்பட எல்லாம் வல்ல அந்த பிரபஞ்ச பேராற்றலை பிரார்த்திப்போம்.

  சந்தோசம்

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 9. சுந்தர் ஜி அவர்களிடம் பேசும் போது ,நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துவதை மறக்கமாட்டார்.
  பணகாந்த விதிகள் என்று புதிய விதியை நமக்காக கண்டுபிடித்துள்ளார் .இந்த வார்த்தை தமிழ் அகராதி தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.google அம்மாவிடம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை .
  பணகாந்த விதிகள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக உள்ளது .

  பணத்தை,நேரத்தை வீண் விரயத்தை தவிர்க்க ஜி பயன்படுத்தும் வரிகளும் ,ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளக்கூடிய எதையும் செய்யக்கூடாது .என்று நம் தல வாசகர்களை தட்டி எழுப்பும் வரிகளும்,மிக மிக அருமை .

  “” பணகாந்த விதிகள் பயன்படுத்த ஏற்ற்றது “””

  இந்தவார பதிகளில் நான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது ..

  பாராட்டுக்கள் ….

  -மனோகர்

 10. சிந்திக்கதூண்டும் சிறப்பான பதிவு !!!

  பொருளாதாரத்தில் தன்னிறைவு என்பது நமது நாட்டுக்கும் சரி சாமானியனுக்கும் சரி எட்டாக்கனியாகவே உள்ளது !!!

  பணவரவை திட்டமிடுதல்
  கிடைக்கும் வரவை அத்த்யாவச்யத்தின் அடிப்படையில் முறையாக செலவு செய்தல்
  மீதம் (இருந்தால்???!!!) உள்ள தொகையை தேவைகளின் தன்மைக்கு ஏற்ப செலவு செய்வது அல்லது சேமித்துவைப்பது
  குறிப்பிட்ட தொகையை உதவி செய்வதற்கும் தர்ம காரியங்களுக்கும் ஒதுக்கி வைப்பது
  கூடுமானவரை கடன் வாங்காமல் இருப்பது

  இவைகளே இன்றைய சராசரி நடுத்தரவர்கத்தின் பொருளாதாரம் பற்றிய அளவுகோலாக இருக்கிறது !!!

  சுந்தர் அவர்களே தங்களின் இந்த பதிவும் முயற்சியும் நிச்சயம் பொருளாதாரத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும் ஒரு புதிய அணுகுமுறையையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை !!!

  வாழ்த்துக்கள் – உங்கள் பணி சிறக்க
  வாழ்க வளமுடன் !!!

  1. நேரம் எடுத்துக்கொண்டு பல பதிவுகளை படித்ததோடுமட்டுமல்லாமல் அவற்றுக்கும் பின்னூட்டமும் இட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி முருகன் அவர்களே.

   – சுந்தர்

 11. அருமையான பதிவு.

  தங்களின் அடுத்த பதிவுக்கு காத்து
  கொண்டு இருக்கிறேன் .

  நன்றி

 12. நான் TNPSC கு
  படித்து கொண்டு இருக்கிறேன். கவெர்மெண்ட்
  ஜாப் கிடைக்க
  ஒரு நல்ல மந்திரம்
  இருந்தால் சொல்லுங்க சார்.
  தங்களின் பதிலிக்கு காத்து
  இருக்கிறேன்.
  நன்றி.

  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *