கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யாருடைய பிரார்த்தனை வலிமையானது என்று பார்ப்பதற்காக அந்த தீவை இரு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியின் ஓரத்தில் ஒருவனும் மற்றொரு பகுதியின் ஓரத்தில் இன்னொருவனும் இருப்பது என்று முடிவானது.
அடுத்த நாள் முதலாமவன் செய்த முதல் பிரார்த்தனை என்ன தெரியுமா? சாப்பிட ஏதாவது உணவு வேண்டும் என்பது தான்.
என்ன அதிசயம் அடுத்த நாள் காலை இவன் இருந்த பகுதியில் பழங்கள் காய்த்து தொங்கும் மரம் ஒன்று காணப்பட்டது. தீவின் மற்றொரு பகுதி வெறிச்சோடி இருந்தது.
ஒரு வாரம் சென்ற பிறகு, தனிமை அவனை கொல்லவே, “எனக்கொரு ஒரு அழகான பெண் மனைவியாக வரவேண்டும்” என்று பிரார்தித்துக்கொண்டான். அடுத்த நாள் மொற்றொரு கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து தப்பித்த ஒரு பெண் இவன் இருந்த தீவில் கரை ஒதுங்குகிறாள். மற்றொருவன் இருக்கும் தீவின் அடுத்த பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது.
இவன் அடுத்து வீடு, உடைகள், என அனைத்தையும் கேட்க, என்ன அதிசயம் ஒவ்வொன்றாக இவன் பகுதியில் தோன்றியது.
தனது பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்துகொண்ட இவன், கடைசீயாக ஒரு கப்பல் வந்து எங்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
என்ன அதிசயம், ஒரு கப்பல் இவன் இருந்த தீவின் அருகே நங்கூரம் இட்டு நின்றுகொண்டிருந்தது.
கப்பலில் மனைவியுடன் ஏறிக்கொண்டவன் தீவில் மற்றொரு பாதியில் இருந்த இவன் நண்பனை மறந்தேவிட்டான்.
திடீரென வானில் இருந்து அசரீரி கேட்டது.
“ஏன் உன் நண்பனை விட்டுவிட்டு செல்கிறாய்?”
“எனக்கு கிடைத்தவை கடவுள் எனக்கென்றே என் பிரார்த்தனைக்காக கொடுத்தது. அவன் பிரார்த்தனைகளை கடவுள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே அவன் இத்தகு உதவிகளுக்கு தகுதியற்றவன்.”
“நீ கூறுவது தவறு! அவன் ஒரே ஒரு கோரிக்கையை தான் என்னிடம் வைத்தான். அதை நான் ஏற்றுக்கொண்டேன். இல்லையேல் உனக்கு ஒன்றும் கிடைத்திருக்காது!” அசரீரி சொன்னது.
“அவனுக்கு நான் கடன்படும் அளவிற்கு அவன் அப்படி என்ன கேட்டுவிட்டான்?”
“உனது பிரார்த்தனைகளை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தான் அவன் பிரார்த்தித்தான்!” என்கிறார் அசரீரியின் வடிவில் இருந்த கடவுள்.
தனது சுயநலத்தை நினைத்தும் செயலை நினைத்தும் வெட்கப்பட்டான் இவன்.
நமக்கு கிடைத்துள்ள முன்னேற்றம் மற்றும் ஆசிகள் நம் பிரார்த்தனையால் மட்டுமே கிடைத்தவை அல்ல. நமக்காக பிரார்த்திக்கும் மற்றவர்களினால் தான் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.
இன்று என்னை சுற்றிலும் இறையருள் பரிபூரணமாக விரவியிருப்பதை காண்கிறேன். ஒவ்வொரு கணமும் அனுபவிக்கிறேன். உணர்கிறேன். இதற்கு காரணம் என்ன தெரியுமா? என் மீதும் கொண்ட அன்பு கொண்டு எனது நலனை வேண்டி பிரார்த்திக்கும் உங்களை போன்ற அன்பு உள்ளங்கள் தான். நிச்சயம் நானல்ல. ஏனெனில் எனக்காக நான் பிரார்த்தித்து வந்தவரை இறைவன் என்னை கண்டுகொண்டதேயில்லை.
எப்போது மற்றவர்களின் நலன் குறித்து நான் நினைக்க ஆரம்பித்தேனோ அப்போதோ என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. என்னுடைய துன்பம் கடுகாகிவிட்டது.
உங்களுக்காக நீங்கள் வேண்டும் போது எந்தளவு மனமுருகி பிரார்த்திக்கிறீர்களோ அதே அளவு மற்றவர்களுக்காகவும் உங்கள் மனம் உருகவேண்டும். அத்தகையோரை இறைவன் மிகவும் விரும்புவான்.
எனவே மற்றவர்களுக்காக பிரார்த்திப்போம்.
பிறர் நலனுக்காக நாம் செய்யும் கூட்டுப் பிரார்த்தனையின் ஒவ்வொரு கணமும் மகத்துவம் மிக்கது.
============================================
இந்த வாரம் கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் யார் தெரியுமா?
மகா பெரியவா அவர்களின் மகிமைகளை, பக்தர்கள் வாழ்வில் அவர் நிகழ்த்தி வரும் அற்புதங்களை அனுதினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று சொற்பொழிவு செய்து வரும் திரு. பி.சுவாமிநாதன்.
இவரின் ‘மகா பெரியவா மகிமைகள்’ சொற்பொழிவு நிகழ்ச்சி நம் தளம் சார்பாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். நம் வாசகர்கள் பெருந்திரளாக திரண்டு வந்த இனிமையான நிகழ்வு அது.
திரு. பி.சுவாமிநாதன் பழகுதற்கு இனிய பண்பாளர். நல்லவர். பிறர்நலன் விழையும் ஒரு அன்பு உள்ளம். சக்தி விகடன், திரிசக்தி உள்ளிட்ட ஆன்மீக இதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி தற்போது மகா பெரியவா அவர்களை பற்றி சொற்பொழிவு செய்வதை பிரதானமாக கொண்டு செயல்பட்டுவருகிறார். பல ஆன்மீக நூல்களை எழுதியிருக்கிறார். எழுதி வருகிறார்.
(இவர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தும் நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் நம் தளத்தில் இனி ரெகுலராக இடம்பெறும். அந்தந்த பகுதிகளில் இருக்கும் வாசகர்கள் நேரில் சென்று குருவின் பெருமையை கேட்டு இருவினையை தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.)
நமது தளத்தின் பிரார்த்தனை கிளபிற்கு இந்த வாரம் தலைமையேற்க வேண்டும் என்று சொன்னவுடன் நம் வாசகர்களுக்காக நிச்சயம் இதை செய்வதாக கூறி ஒப்புக்கொண்டார்.
நமது ஒவ்வொரு பிரார்த்தனையும் மகா பெரியவாவின் திருவடிகளிலேயே சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் பெருமையையே அனுதினமும் பேசும் அவரது உண்மைத் தொண்டர் ஒருவர் நமது பிரார்த்தனைக்கு தலைமையேற்றிருப்பது நமது தளத்திற்கு குருவருள் பரிபூரணமாக உண்டு என்பதையே காட்டுகிறது.
திரு.சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்ட நமது தளத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சி குறித்த பதிவுக்கு…
மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!
============================================
சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து நமது தள வாசகி அனுராதா என்பவர் நம்மை தொடர்பு கொண்டார். நமது தளத்தையும் நமது பணிகளையும் பாராட்டியவர் எத்தனையோ துன்பங்களுக்கிடையே நமது தளம் தான் அவருக்கு ஆறுதலாக விளங்குவதாக கூறினார். மேலும் சுந்தரகாண்டம் நூலை தமக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார். அவரை பற்றி விசாரித்தபோது திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பு காரணமாக கணவன், மனைவி, குழந்தை என மூவரும் ஆளுக்கொரு திக்காக பிரிந்துவிட்டதாகவும் தாம் உயிரே வைத்திருக்கும் தமது மூன்று வயது மகளை பார்க்க கூட முடியாது தவிப்பதாகவும் கூறினார். அவரிடம் பேசியதிலிருந்து, இப்படிப்பட்ட ஒரு நல்லுள்ளத்திற்கு ஏன் இந்த சோதனை என்று தான் நம் மனம் வேதனைப்பட்டது. பக்குவமும், அன்பும், கருணையும், பாசமும் மிக்க அவருக்கு பிரச்னைகள் தீர்ந்து குழந்தையுடன் அவர் சேரவேண்டும். இனியதொரு எதிர்காலம் அவருக்கு அமையவேண்டும்.
நமது பிரார்த்தனை கிளப்பிற்கு மனு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதையடுத்து தனது குழந்தையின் ஏக்கமாக நமக்கு மின்னஞ்சலில் பிரார்த்தனை கோரிக்கையை அனுப்பியிருக்கிறார்.
அடுத்து, மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவில் குருக்கள். பழகுதற்கு மிகவும் இனிமையான நபர் இவர். நம் தளத்தின் ரெகுலர் வாசகர்.
நமது நிகழ்சிகளுக்கு பதட்டத்தில் நான் அழைக்க மறந்தால் கூட அதை பெரிதுபடுத்தாமல் தவறாமல் ஆஜராகி, ஒரு ஓரமாக அமர்ந்து ரசித்துவிட்டு செல்லும் பண்பாளர் இவர். அந்த வகையில் இவர் சமீபத்தில் நாம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய போது வந்திருந்து நம்மை கௌரவித்தார்.
இவரைப் பற்றி நான் நிறைய எழுத வேண்டும். விரைவில் தனிப்பதிவாக எழுதுகிறேன். அதில் மற்றவர்கள் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு எதேச்சையாக இவரை தொடர்புகொண்டபோது தான் எனக்கு தெரிந்தது ஹார்ட் அட்டாக் வந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயம். அவரது துணைவியார் விஷயத்தை என்னிடம் சொன்னதும் பதறிப்போனேன்.
நேற்று இரவு பணி முடிந்ததும் மயிலை கல்யாணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருக்கிறேன். ஐ.சி.யூ.வில் இருந்து தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனை செலவுகளுக்கு கடன் வாங்கவேண்டிய நிர்பந்தத்தில் அக்குடும்பம் இருக்கிறது. இவருக்கு உதவவேண்டியது நமது கடமை. நண்பர்களுடன் கலந்து பேசி விரைவில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும். டிஸ்சார்ஜ் ஆனவுடன் அடுத்த வாரம் வீட்டில் வந்து சந்திப்பதாக கூறியிருக்கிறேன்.
திருவள்ளுவர் கோவிலுக்கு நாம் ஆலய தரிசனத்திற்கு சென்று வந்தது பற்றிய பதிவுகளுக்கு:
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்
சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2
============================================
பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
அம்மா… உன்னை பார்க்கவேண்டும்….உன்னுடன் சேரவேண்டும்!
நல்ல படிப்பு, தேவையான வருமானம் எல்லா வசதிகளையும் பெற்று, சிங்கப்பூரில் வசிக்கும் என் தாய் தந்தைக்கு மகளாய் பிறந்தும், பெற்றோரை பிரிந்து சென்னையில் வாழும் மூன்று வயது குழந்தை நான்.
என் தந்தை, என் மேல் உரிமை கோரி சிங்கப்பூர் நீதிமன்திறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பேசி தீர்க்கும்படி என் அம்மா எடுத்த எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய, இரண்டு வருட காலமாக வழக்கு தொடர்வதால்,
என் அம்மாவுடன் சேர முடியாத நிலை தொடர்கிறது.
வழக்கை நடத்த வேண்டி என் அம்மா வேலை துறந்து வரமுடியாமல், என்னை பிரிந்து, என் அம்மா மீளா துயரத்தில் சிங்கப்பூரில் இருக்கிறார். நாங்கள் வழக்கிலிருந்து மீண்டு, நான், என் தாயுடன் விரைவில் சேர எனக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்குறிய,
தர்ஷ்னா
============================================
வள்ளுவருக்கு தொண்டு செய்பவர் வாழ்வாங்கு வாழவேண்டும்
என்னுடைய நண்பர் நம் தளத்தின் வாசகர் திருவள்ளுவர் கோவிலின் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்கள் அவர்கள் மாரடைப்பு காரணமாக சென்னை மயிலையில் உள்ள கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
அவர் பரிபூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவேண்டும். அவருக்கு இல்லறத்தில் பிரதான கடமைகள் பாக்கியிருக்கிறது. மகன் தற்போது தான் தலையெடுத்து பணிக்கு சென்று வருகிறார். மகள் கல்லூரியில் படித்துவருகிறார்.
அவரை நம்பியே அவரது குடும்பம் உள்ளபடியால் அவர் நலம் பெற்று திரும்ப பிரார்த்திப்போம்.
============================================
திருமதி.அனுராதா அவர்கள் தன் குழந்தை தர்ஷ்னாவுடன் சேரவும், போர்க்களமாக திகழும் அவரது வாழ்வில் விரைவில் வசந்தம் வீசவும் ஐயன் வள்ளுவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திருவள்ளுவர் கோவிலின் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவும், எதிர்கால கடமைகளை அவர் இனிதே நிறைவேற்ற எல்லா வலிமையையும் அவருக்கு தரவேண்டியும் இறைவனை பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 04, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘ராகவேந்திர மகிமை’ புகழ் திரு.அம்மன் சத்தியநாதன்
//”நமக்கு கிடைத்துள்ள முன்னேற்றம் மற்றும் ஆசிகள் நம் பிரார்த்தனையால் மட்டுமே கிடைத்தவை அல்ல. நமக்காக பிரார்த்திக்கும் மற்றவர்களினால் தான் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.”//
//”உங்களுக்காக நீங்கள் வேண்டும் போது எந்தளவு மனமுருகி பிரார்த்திக்கிறீர்களோ அதே அளவு மற்றவர்களுக்காகவும் உங்கள் மனம் உருகவேண்டும். அத்தகையோரை இறைவன் மிகவும் விரும்புவான்.// ”
முற்றிலும் உண்மை சுந்தர் அண்ணா. இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்தவன்.
திருமதி.அனுராதா அவர்கள் தன் குழந்தை தர்ஷ்னாவுடன் சேரவும், அவரது வாழ்வில் விரைவில் இன்பம் பொங்கவும் வள்ளுவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திருவள்ளுவர் கோவிலின் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவும் நமது தளத்தின் சார்பாக இறைவனை பிரார்த்திப்போம்.
சார் , மிகவும் சத்தியமான உண்மை . நாம் பிறருக்காக வேண்டும் போது அது உடனே நடந்து விடும் என்பது .
திருமதி.அனுராதா அவர்கள் தன் குழந்தை தர்ஷ்னாவுடன் சேரவும், அவரது வாழ்வில் விரைவில் இன்பம் பொங்கவும் வள்ளுவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திருவள்ளுவர் கோவிலின் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவும் நமது தளத்தின் சார்பாக இறைவனை பிரார்த்திப்பேன்
சுந்தர், என் முக நூலில் ஏற்றி விட்டேன். சரியாக இருக்கிறது. பிரார்த்திப்போம்.
ஒரு அருமையான கதையுடன் பிரார்த்தனை பதிவிட்டது நல்ல துவக்கம் .அய்யா திரு. பி.சுவாமிநாதன் தலைமை ஏற்று நடத்தும் பிரார்த்தனை என்பதால் மேலும் ,பல புதிய உள்ளங்கள் பங்கு அதிகம் இருக்கும் .
மேலும் முக நூலில் பகிர்ந்து உலகம்யாவிலும் நண்பர்கள் அழைதுல்லார்.
திரு. பி.சுவாமிநாதன் தலைமைக்கு எனது நன்றியை நமது தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
திருமதி.அனுராதா அவர்கள் தன் குழந்தை தர்ஷ்னாவுடன் சேரவும், அவரது வாழ்வில் விரைவில் இன்பம் பொங்கவும் வள்ளுவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திருவள்ளுவர் கோவிலின் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவும் நமது தளத்தின் சார்பாக இறைவனை பிரார்திக்கிறேன் .
இந்த வார பிரார்த்தனை மிகுந்த,வலிமை வாய்ந்த்ததாக அமையும் .
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர..
-மனோகர் .
வாரா வாரம் பிரார்த்தனைகளை மஹா பெரியவா அவகளிடம் சமர்ப்பித்து விடிகின்றோம் . இந்த வாரம் அவரின் பெருமையையே அனுதினமும் பேசும் அவரது உண்மைத் தொண்டர் திரு சுவாமிநாதன் அவர்கள் நமது பிரார்த்தனைக்கு தலைமையேற்றிருப்பது நாம் செய்த புண்ணியம் அன்றி வேறு எதுவும் இல்லை.
திருமதி.அனுராதா அவர்கள் தன் குழந்தை தர்ஷ்னாவுடன் சேரவும், போர்க்களமாக திகழும் அவரது வாழ்வில் விரைவில் வசந்தம் வீசவும் ஐயன் வள்ளுவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திருவள்ளுவர் கோவிலின் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவும், எதிர்கால கடமைகளை அவர் இனிதே நிறைவேற்ற எல்லா வலிமையையும் அவருக்கு தரவேண்டியும் இறைவனை பிரார்த்திப்போம். மஹா பெரியவாளிடம் பிரார்த்தனை செய்தவர்கள் எவரும் வீண் போனதில்லை.
நான் படித்து தெரிந்ததை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
ஒருசமயம் காஞ்சி மகா சுவாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒருவர் ஒரு சிறுமியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அழுது கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்தவுடன் தன் உதவியாளர் மூலம் அவர் ஏன் அழுகிறார் என்று கேட்டு வரச் சொன்னார். வந்தவர், தன் பெண் குழந்தைக்கு இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதைக்கேட்ட மகா பெரியவர் ஒரு மாம்பழத்தை கொண்டு வரச் சொல்லி அதில் இருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டி அந்தக் கு ழந்தைக்கு தரச் சொன்னார். அத்துடன் ஆசீர்வாதம் செய்து, பிரசாதமும் கொடுத்தனுப்பினார். சில நாட்கள் சென்றபின் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்கள். அப்போது மருத்துவர்கள் இந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இதயத்தில் இருந்த ஓட்டை தானாகவே மூடிக்கொண்டு விட்டது என்று கூறினார்கள். இது காஞ்சி மகா சுவாமிகளின் அருளாசியால் நடந்த அற்புதமா கும்.
நன்றி.
நமது அனைத்து பிரார்த்தனைகளும் வலிமையானது என்றாலும் மகா பெரியவாவின் உண்மைத் தொண்டர் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடக்கும் இந்த பிரார்த்தனை மிகவும் வலிமையானதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
.
திரு.சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவை பற்றி கேள்விபட்டிருந்தாலும் நேரில் கேட்கவும் அவரை நேரில் பார்க்கவும் ஒரு அருமையான சந்தர்பத்தை நம் தளம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்ததை மறக்கமுடியாது.
.
தோழி அனுராதா அவர்களுக்கும், நமது நலம்விரும்பி திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் அந்த எல்லவல்ல இறைவன் அருள்புரிவானாக…
.
மாரீஸ் கண்ணன்
குழந்தை தர்சனா அவரது தாயார் அனுராதவோடு சேர்ந்து சந்தோசமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
——————————————————————————————————–
உலக பொதுமறையாம் திருக்குறள் ,அந்த திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவர் ,அவரின் கோவிலில் சேவையாக பூஜை செய்து வரும் அய்யா ஆறுமுகம் அவர்கள் சீக்கிரம் உடல் நலம் தேறி மீண்டும் அய்யன் வள்ளுவருக்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன் ,அவருக்கு நம்முடைய பிராத்தனையோடு ,வள்ளுவன் வாசுகி அவர்களின் பரிபூரண ஆசி இருக்கிறது அதனால் மீண்டும் புத்துணர்வோடு வருவார்
அன்பு மிக்க சுந்தர்க்கு,
காஞ்சி மகா பெரியவாளின் குரு அருளால் நேற்றைய பிரார்த்தனை நன்றாக நடந்தது. என் இல்லத்தில் பூஜை அறையில் இந்த பிரார்த்தனை வைக்கப்பட்டது. தெய்வத்தின் அருளால் எல்லாமே சுபமாக நடக்கும்.
இதே பிரார்த்தனை வேளையில் என் மனைவி நேற்று ஒரிருக்கை சென்றிருந்தார். அவர் சென்ற நேரம் சரியாக 5.30 மணிக்கு திவ்ய அலங்காரத்துடன் விநாயகப் பெருமானின் தரிசனம் கிடைத்தது. மகா பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான அந்த இடத்தில் பிரார்த்தனையை அவரது திருச்சந்நிதியில் வைத்திருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவியின் இந்த ஒரிருக்கை விசிட் தற்செயலாக அமைந்தது ஒரு சுப சகுனமாகப் படுகிறது.
ரைட் மந்த்ராவின் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற வேண்டும் என்று மனமார விரும்புகிறேன். வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
அன்புடன்,
பி.சுவாமிநாதன்
ரொம்ப நன்றி சார். படிக்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் ஆசியும் மகாப் பெரியவாவின் அனுக்ரஹமும் எங்களுக்கு என்றும் வேண்டும்.
நேற்றைக்கு என் பிரார்த்தனை அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு அலுவலகத்தில் முடிக்க வேண்டிய பணி ஒன்று இருந்தபடியால் நேற்றைக்கு மதியம் அலுவலகம் சென்றிருந்தேன். மாலை 5.15 மணிக்கு வேலைமுடித்துவிட்டு வெளியே வந்தேன். பிரார்த்தனை நேரத்தில் நான் வெளியே எங்காவது இருந்தால் அருகில் உள்ள ஏதாவது ஆலயத்திற்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
எனவே அருகில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு சென்றுவிட்டேன். பிரதோஷம் என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். நான் சென்ற நேரம் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று முடிந்து திரையை விலக்கினார்கள். மேல தாளம் முழங்க இங்கும் விக்னேஸ்வரன் தரிசனம் கிடைத்தது. பிரகாரத்தை வலம் வந்து பின்னர் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டேன். கருணைக்கடல் நிச்சயம் செவி சாய்ப்பான் என்று நம்புகிறேன்.
– சுந்தர்
எனக்காகவும், என் குழந்தை தர்சனாவுக்காகவும் பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். பிரார்த்தனைக்கு தலைமை தாங்கிய சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கும், அவர்கள் துணைவியாருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். மகா பெரியவாளின் ஆசியுடனும், உங்கள் அனைவரின் ஆதரவோடும் விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறோம். திருவள்ளுவர் கோவில் குருக்கள் ஆறுமுகம் அவர்களும் விரைவில் நலமுடன் தன் பணியை சிறப்புடன் செய்வார். பிரார்த்தனையின் பொழுது நடந்த நிகழ்வுகள் நெகிழ்ச்சியாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.
We should not give up and we should not allow the problem to defeat us.
– Abdul Kalaam
Everything will be alright very soon with your support and prayers.
Thanks a lot.
Regards,
Anuradha & Baby Dharznah
எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் கருணையினால் துன்பங்கள் நீங்கி தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட மனமுருகி வேண்டுவோம் !!!