நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த தீபாவளிக்கு வெளியானது. தமிழகத்தைப்போல கேரளாவிலும் நடிகர்களின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதுண்டு. தங்கள் அபிமான நடிகர்கள் படம் வெளியாகும்போது தியேட்டர்கள் முன்பு பிரமாண்ட கட்–அவுட்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
கத்தி படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வெளியானதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த படத்திற்கு எதிரான பிரச்சாரம் அந்த படத்தை எள்ளளவும் பாதிக்கவில்லை. மாறாக, அதற்கு வலுவான விளம்பரமாக அமைந்துவிட்டது தான் வேடிக்கை.
பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் தியேட்டரில் கத்தி படம் வெளியானது. இதையொட்டி அப்பகுதி ரசிகர்கள் தியேட்டர் முன்பு விஜய்யின் பிரமாண்ட கட்–அவுட் வைத்திருந்தனர்.
படம் முடிந்ததும், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 28) என்ற ரசிகர் ஆர்வ மிகுதியில் கட்–அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கட்–அவுட்டில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். உன்னிகிருஷ்ணன் வெல்டிங் தொழிலாளி ஆவார். அவரது தந்தை சிவதாசன் மகனின் சடலத்தை பார்த்து அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது. அவரது இதர குடும்ப உறுப்பினர்களை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
சம்பவம் 2
தீபாவளிக்கு ‘கத்தி’ படத்தை எடுத்திருந்தார் திருநின்றவூரை சேர்ந்த கிருஷ்ணன். தன்னுடைய 75 வயதிலும் அசராமல் திரையரங்குக்கு வந்து வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். காலை முதல் காட்சி 11.30 மணிக்குத் தொடங்கவிருந்தது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பே விஜய் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. பண்டிகை உற்சாகம், சினிமா மோகம். கூடவே, பலருக்கு உள்ளே போதையும் புகுந்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் அரங்குக்குள் புகும் ஆவேசத்தில் இருந்தனர்.
கடும் கூச்சலைக் கேட்ட கிருஷ்ணன் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். “யப்பா, கொஞ்சம் நிதானமா இருங்கப்பா… பொறுமையா வந்தா எல்லாரும் சந்தோஷமா படம் பார்க்கலாம். இப்பிடி அடிச்சிப்புடிச்சிக்கிட்டு வந்தா, ஒருத்தர் மேல ஒருத்தர் மோதி அடிகிடி பட்டுற போதுப்பா” என்று சொல்லியவாறே அரங்கம் உள்ளே நுழையும் கதவைத் திறக்கச் சொன்னார்.
ஆவேசக் கூட்டத்தின் காதில் இதெல்லாம் விழவே இல்லை. கதவு திறந்தது. கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் ஏறிச் செல்லும் வகையில் உள்ளே புகுந்தது. கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, தடுப்புகளைத் தாண்டிக் குதித்துக்கொண்டு பாய்ந்த கூட்டத்தில் நெரிபட்டு, சுவரோரமாய்த் தள்ளப்பட்டார் பெரியவர் கிருஷ்ணன். உடைந்த கண்ணாடிகளில் ஒரு பெரும் துண்டு கிருஷ்ணன் தலையில் விழுந்தது. ரத்தச் சகதியில் விழுந்த கிருஷ்ணன் அலறினார். இதெல்லாம் சினிமா வெறி கொண்ட கூட்டத்தின் காதில் விழுமா?
அந்தப் பெரியவரைக் கீழே போட்டு மிதித்து, மேலேறித் திரையை நோக்கி ஓடியது ரசிகர்கள் கூட்டம். திரையரங்க ஊழியர்கள் கிருஷ்ணனை மீட்கும்போது, உயிர் மட்டும் உடலில் ஒட்டிக்கொண்டிருக்க அவர் நைந்துபோயிருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சில மணி நேரங்களில் அதுவும் பறிபோனது.
செய்தியாளர்கள் மறுநாள் திரையரங்கம் சென்றபோது திரையரங்கம் அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே மறுநாள் காட்சிக்காகச் சீரமைத்துக்கொண்டிருக் கிறார்கள் ஊழியர்கள். கிருஷ்ணனின் ரத்தத்தைக் கழுவிக் கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர். இந்த ரத்தத்துக்கு யார் காரணம் என்பதை யோசிக்கும் நிலையில்கூட நம் ரசிகர்கள் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்!
==================================================================
ஒரு மனிதனின் மரண ஓலத்தைவிட ஒரு நடிகன் இவர்களை ஈர்க்கிறான் என்றால் இந்த சமுதாயத்தை வைத்து என்ன செய்ய முடியும்? லஞ்சம், ஊழல், வறுமை, சுரண்டல் , கொத்தடிமை , கல்விக் கொள்ளை போல் இதுவும் நம்மை பிடித்த ஒரு நோய்.
ஆண்டு முழுவதும் சாராயக் கடை, அவ்வப்போது சாமி & கோயில், சினிமாக் கதாநாயகனுக்கும் சாதித் தலைவனுக்கும் கட்-அவுட் வைப்பது , மற்ற நேரங்களில் வீண் அரட்டையும் விடலைப் பெண்களைச் சீண்டுவதும் என வெகு சிறப்பாகக் கழிந்துகொண்டிருக்கிறது எம் இளைஞர்களின் பொழுதுகள் ! இதிலிருந்து விலகி நிற்க வேண்டுகிற இளைஞர் அமைப்புகளை என்றுதான் இவர்கள் ஏறெடுத்து பார்க்கப்போகிறார்கள் ?
பாலாபிஷேகம் செய்த ரசிகருக்கு “பால் ” ஊற்றும் நிலை வந்தது யாரால்?? வீட்டுக்கு வீடு பால் ஊற்றியிருந்தால் கூட சம்பாதித்து குடும்பத்தை முன்னேற்றி இருக்கலாம். ஒவ்வொரு நடிகரும் பணத்திற்காக நடித்து விட்டு வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று விடுகிறார்கள். நமது நிலை என்ன ….படம் பார்த்து விட்டு நாமும் அவர்களுடன் வெளிநாடு செல்ல முடியுமா?? நம் நடிகர்கள் இவர்களால் தான் படம் ஒட்டியது என்று வீட்டு வீடு வந்து நன்றி சொல்வதோ இல்லை ஒரு மாதத்திற்குரிய பலசரக்கை இலவசமாகவோ வாங்கித் தரவோ போவதில்லை. இது தெரியாமல் பால் ஊற்றுகிறேன்,மோர் ஊற்றுகிறேன் என அலையும் கூட்டம் இந்த நாகரிக காலத்திலும் இருக்கிறார்களா?? . நடிகர்கள் எல்லாம் வருமான வரி கட்டுபவர்கள்….நாம் நம் வருமானத்திற்கே வழி தேடும் சூழலில் இருக்கிறோம் என்பதை நினைத்துப்பாருங்கள்.
நீங்கள் எந்த நடிகருக்காகவும் படம் பாருங்கள், ரசியுங்கள் தவறில்லை. அவர்களை நடிகராக மட்டும் பாருங்கள். அவர்கள் தொழிலை அவர்கள் செய்கிறார்கள், உங்கள் தொழிலை நீங்கள் செய்தால் நாட்டுக்கும், குடும்பத்திற்கும் நல்லது. நாம் ஏற்கனவே கூறியபடி, ஒரு நடிகனுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான பந்தம் திரையரங்க வாசலோடு முடிந்துவிடவேண்டும். அதையும் தாண்டி தொடர்ந்தால் அது நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு.
நடிகருக்காக அடிதடியில் இறங்கி போலீஸ் கேஸ் என அழியும் ரசிகர்களே உங்களுக்காக எந்த நடிகர் போலீசிடம் வந்து உங்களுக்கு ஜாமீன் வாங்கித் தந்துள்ளார்?? உங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள் மருத்துவ குடும்ப செலவை எந்த நடிகரும் செய்வார்களா??
நடிகர்கள் திரைப்படத்திற்காக நடிக்கிறார்கள் …. ஆனால் நாம் அவர்களை நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கை நமது கையில் என்பது மட்டுமே உண்மை.
==================================================================
(ஆக்கத்தில் உதவி : மாலைமலர் | தமிழ்.ஹிந்து.காம் | தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் | விகடன்.காம் | திரு.அசோக் எஸ் & திரு.சுந்தரமூர்த்தி, திரு.ஏ.வி.சாமிக்கண்ணு)
==================================================================
Also check :
உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?
இந்த வெற்றி உங்கள் வெற்றி! Quick Update on Righmantra Awards 2013 & Annual Day!
==================================================================
[END]
படிக்கும் பொழுதே நெஞ்சு பதறுகிறது. சினிமா வந்த முதல் முதல் ஷோ பார்த்தாலே ஜன்ம சாபல்யம் அடைந்த மாதிரி நினைக்கிறார்கள் நம் மக்கள். என்று தான் திருந்துமோ நம் நாடு
படம் பார்ப்பதில் தவறில்லை . ஆனால் இப்படி முண்டி அடித்து அடுத்தவர்கள் உயிருக்கு உலை வைக்கும் போக்கு மாற வேண்டும். நடிகர்கள் பணத்துக்காக நடிக்கிறார்கள். நாம் நம் பணந்த்தை செலவழித்து இப்படி நமது நேரத்தை வீணடிக்கிறோம்
நன்றி
உமா
இதுவும் கடந்து போகும் என்று சொல்ல முடியாத நிலை இது. தனி மனித ஒழுக்கமும், கண்டிப்பான சட்ட திட்டங்களும் மட்டுமே இந்த சமுதாயத்தைக் காப்பற்றும்.
உண்மையிலேயே நெஞ்சு பொறுக்குதில்லைதான்………
பாவம் அந்த முதியவர் அவரதும் குடும்பமும்
யோசிக்கவைகிறது
வெறும் படம்
அதற்கு பலி உயிரா ?
திரைப்படத்தின் பெயரால் கொடுமைகள் தான் அரங்கேறுகின்றன. இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட சினிமா வெறியர்கள் இருப்பது நாட்டிற்கு ஆபத்து. இந்நிலை நிச்சயம் மாறவேண்டும்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நடிகர் விஜய் தலா 3,00,000/- கொடுத்து விட்டார்!! இதற்கு நடிகர்களை குறை சொல்ல முடியாது! கண்மூடி தனமான ரசிகர்களை தான் சொல்ல வேண்டும்! நீங்கள் கூறியதை போல் வெறியனாக இல்லாமல் ரசிகனாக இருக்க வேண்டும்!
ஐயா என்ன சொன்னீங்க ???? நீங்க சொன்னதை அப்படியே தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல எழுதி வெச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துகோங்க. உங்களுக்கு பின்னால வரக்கூடிய சந்ததிகள் பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க.