Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, July 21, 2024
Please specify the group
Home > Featured > தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

print
டவுள் என்பவர் கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல. தன்னலமற்ற சேவை, தியாகம், பிறரை காக்கும் வீரம், தாய்மை, தேசபக்தி, மழலை, பணிவு, வாய்மை, எளிமை, தூய்மை, இரக்கம், ஏழைகளின் சிரிப்பு, உண்மையாக உழைப்பவனின் வியர்வை – இவை இருக்கும் இடங்களில் கூட கடவுள் இருக்கிறார். சற்று உறுதியாகவே.

கோவில் கருவறையில் மட்டும் அவரை பார்த்துவிட்டு மற்ற இடங்களில் அவரை புறக்கணிப்பவர்களை கண்டு அவர் சிரிக்கவே செய்கிறார். (பலர் இப்படித் தான் செய்கிறார்கள்.) மேலே பட்டியலிட்டுள்ள உன்னதமான விஷயங்களில் என் வாழ்வில் நான் கடவுளை கண்ட பல்வேறு தருணங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதே இந்த ‘இந்தோ எந்தன் தெய்வம்’ பகுதியின் நோக்கம்.

படித்து முடிக்கும்போது உண்மையில் கடவுளை கண்டதாகவே உணர்வீர்கள்!

======================================================

பிரமிக்க வைத்த சேவை!

சென்னை வந்திருக்கும் நம் புலம் பெயர் சகோதரிகள் நம்முடன் பாலம் திரு.கலியாண சுந்தரம் ஐயாவை நேரில் சந்தித்த அனுபவம்….

மாங்காட்டில் நம் ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்பின் முதல் பிரார்த்தனையை முடித்துவிட்டு அம்மனை தரிசித்த பிறகு அடுத்து பாலம் ஐயாவை சந்திக்க கிளம்பினோம். சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள, திருவள்ளுவர் குருகுலத்தில் இருப்பதாகவும் அங்கு வருமாறும் கூறினார் ஐயா.

மெயின்ரோட்டில் இருந்து சற்று உட்புறம் அந்த பள்ளி இருந்தமையால் எங்களால் முதலில் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் சொன்ன முகவரி புரியவில்லை. சைதாப்பேட்டையையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாக கண்டுபிடித்து பள்ளிக்கூடத்தை அடைந்துவிட்டோம்.

வாசல் வரை வந்து எங்களை வரவேற்றார் பாலம் ஐயா. சகோதரிகளை அறிமுகம் செய்துவைத்தேன். அவர்கள் குடும்ப நலன் மற்ற இதர விஷயங்களை விசாரித்தார்.

ஐயாவை பற்றி நம் தளத்தில் படித்தது முதல் அவரை சந்திக்கவேண்டும் என்கிற ஆவல் எழுந்ததாகவும் எனவே சென்னை பயணத்தில் ஆரம்பத்திலேயே அவரை பார்க்க வந்துவிட்டதாகவும் அவரிடம் கூறினார்கள் சகோதரிகள்.

பாலம் கலியாண சுந்தரம் ஐயா நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

‘பாலம்’ ஐயாவுக்கு நாம் ஏதாவது செய்ய விரும்பினால் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அது, அவர் நடத்தி வரும் ‘பாலம்’ என்கிற மாத இதழுக்கான சந்தா தொகையை மட்டுமே. ஏனெனில் அதில் வரும் வருவாய் முழுவதும் ஏழைக் குழந்தைகளின் கல்வி பணிக்கே செலவிடப்பட்டு வருகிறது. (வருட சந்த ரூ.240/-). சகோதரிகள் இரண்டு ஆண்டுக்கான சந்தாவை செலுத்தினார்கள்.

மேலும் அவரிடம் நம் சகோதரிகள் கூறும்போது, “உங்களைப்பற்றி அறிந்துகொண்டபோது அவசியம் உங்களை சந்திக்கவேண்டும் என்று தோன்றியது. சென்னை வந்தால் உங்களை அவசியம் சந்தித்துவிடவேண்டும் என்று விரும்பி சுந்தரிடம் சொன்னோம்… இன்று காலை முதல் பல்வேறு கோவில்களை பார்த்துவிட்டு இங்கு வருகிறோம் ” என்றார்கள்.

எந்தெந்த கோவில்கள் தரிசனம் எப்படி இருந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டார்கள் ஐயா.

(இடமிருந்து வலம் : பாலம் திரு.கலியாண சுந்தரம் ஐயா, திரு.வேலு காந்தி, திரு.ரகுபதி)

கற்றாரை காற்றாரே காமுறுவர்

பாலம் ஐயாவின் தொண்டை பற்றி நாங்கள் சிலாகித்து பேசும்போது, அவர் குறுக்கிட்டு “இவர்கள் செய்துவரும் தொண்டோடு ஒப்பிட்டால் நான் செய்வதெல்லாம் ஒன்றுமேயில்லை” என்று தன்னருகே அமர்ந்திருந்த இருவரை சுட்டிக்காட்டி கூறினார் ஐயா.

அவருடன் அங்கு இருந்த மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். கற்றாரை காற்றாரே காமுறுவர் அல்லவா? பாலம் ஐயாவைப் போலவே அவர்களும் சமுதாயத்திற்கு மிக பெரும் தொண்டு செய்பவர்களாக இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் சுதந்திர போராட்ட தியாகி திரு.வேலு காந்தி. இவர் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர் தான். (புத்தகக் கண்காட்சியில் ‘பாலம்’ அரங்க துவக்கவிழா தொடர்பான பதிவில் இவரைப் பற்றி கூறியிருக்கிறேன்.). ‘காந்தி சாதி’ என்னும் சாதி மறுப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.

அடுத்தவர்… இவர் பெயர் டாக்டர்.கே.ரகுபதி. அடிப்படையில் இவர் ஒரு NATUROPATHY மருத்துவர். (நேச்சுரோபதி = உணவு பழக்கத்தை மாற்றி கொள்வதன் மூலம் நோய் நீக்குதல்).

எங்களை மிரளவைத்த சேவை!

இவர் செய்து வரும் சேவைகள் இருக்கிறதே…. அப்பப்பா…. மிரண்டுவிட்டோம்.

நரிக்குறவர் இன குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் தன்னையே அற்பணித்துக் கொண்டவர் இவர். சைதாப்பேட்டையில் அண்ணாசாலைக்கு வெகு அருகில் இவருக்கு உரிமையும் அனுபவப் பாத்யதையும் உள்ள ஒரு பிரதான இடத்தில், நரிக்குறவர் இன  குழந்தைகளுக்காக ஒரு பிரம்மாண்ட கட்டிடம் எழுப்பி அதில் நரிக்குறவ இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார். பலவித சிரமங்களுக்கு இடையே இந்த பணியை திரு.ரகுபதி செய்து வருவதாக தெரிகிறது.

இங்கு கல்வி பயிலும் நரிக்குறவ இன குழந்தைகளுக்கு உண்ண உணவும், தங்குமிடமும் இலவசம். பல மாணவர்கள் இங்கு தங்கி படிக்கிறார்கள். சில நரிக்குறவ மாணவர்கள் கல்வி பயில மட்டும் வந்து செல்வதுண்டு.

சென்னை தவிர மேலும் பல பல மாவட்டங்களில் இவருக்கு இது போன்ற பள்ளிகள் இருக்கின்றன.  வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள இவரது இந்த சீர்த்திருத்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 650 க்கு மேல் இருக்கும்.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு கல்வியறிவே இல்லாமல் போய்விடக்கூடிய ஒரு சமூகத்தின் பால் அக்கறைகொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு உணவுடன் தங்க இடம் கொடுத்து ஒருவர் இலவசக் கல்வி கற்பிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒருவரை பார்த்ததே நாம் செய்த பாக்கியம் தான்.

திரு.ரகுபதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கூட்டமைப்பு தலைவராக உள்ள திரு.ரகுபதி இது தவிர மேலும் முதியோர் இல்லம், கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம், பால் பண்ணை, பசுமைத் தோட்டம், என பலவற்றை நடத்தி வருகிறார்.

திருவள்ளுவர் பால் மிகவும் ஈடுபாடு கொண்ட திரு.ரகுபதி தனது கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கு திருவள்ளுவர் பெயரையே வைத்திருக்கிறார்.

நரிக்குறவர் இன குழந்தைகளின் கல்வி மேம்பாடுக்காக தம்மை அற்பணித்துக்கொண்ட திரு.ரகுபதி, அந்த இன பெண் ஒருவரையே திருமணம் செய்துகொண்டார்.

அரசியல்வாதிகளின் தொல்லை

“சார்… அண்ணாசாலைல இப்படி ஒரு பிரதான இடத்துல இருக்குற இந்த நிலமும் கட்டிடமும் அரசியல்வாதிங்க கண்ணை உறுத்துமே…. அவங்க கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறீங்க?” என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

“அதை ஏன் கேக்குறீங்க தம்பி… என்னென்னவோ செஞ்சி இந்த இடத்தை பாதுக்காத்துட்டு வர்றேன் ” என்றார். அவர் சொன்னதிலிருந்து பல அரசியல்வாதிகள் அவருக்கு தொல்லைகள் தந்திருப்பது புரிந்தது.

“கவலைப்படாதீங்க சார்… எங்க முருகப் பெருமான் கல்யாணம் பண்ணிகிட்ட வள்ளி கூட நரிக்குறவ பெண் தான். அவன் என்றென்றும் உங்களுக்கு துணை இருந்து வழிநடத்துவான்!” என்றேன்.

அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானோம்.

“கொஞ்சம் பள்ளிக்கூடத்தை ஹாஸ்டலை எல்லாம் சுத்தி காட்டுறேன் வாங்க….” என்று கூறி எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார். மிகப் பெரிய வளாகம் அது. DORMITORY எனப்படும் தங்குமிடம், சமையல் கூடம், வகுப்பறை என அனைத்தையும் சுற்றி காண்பித்தார்.

கிடைச்சா கஞ்சி தண்ணி…! இல்லேன்னா….?

குழந்தைகளின் உணவிற்கான செலவை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கேட்டபோது அரசாங்கம் அரிசி ஓரளவுக்கு உதவுகிறது என்றும் முக்கிய மளிகை பொருட்கள், சமையல்காரர்கள் கூலி, எரிபொருள் உள்ளிட்ட மற்ற முக்கிய செலவுகளை தாம் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கு எப்படி என்ன மாதிரியான சாப்பாடு என்று கேட்டபோது, “கிடைச்சா கஞ்சி தண்ணி…இல்லேன்னா குழாய் தண்ணி” என்றார். அவர் சொன்னதிலிருந்து அக்குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்க செய்ய அவர் போராடுவது புரிந்தது.

“யாராவது DONORS அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாட்கள் மற்றும் பண்டிகைகள் விசேஷங்களின் போது இந்த குழந்தைகளின் உணவுக்காக ஸ்பான்ஸர் செய்வதுண்டு என்றும் அப்போது அனைத்து குழந்தைகளுக்கும் (இப்போதைக்கு 120 குழந்தைகள்) வடை, பாயசம், கேசரியுடன் அறுசுவை உணவு கிடைக்கும் என்றும் மற்ற நாட்களில் சாதாரண எளிமையான ஒரு ரூபாய் அரிசி உணவு தான் என்றும் கூறினார்.

நம் சகோதரி செய்த மிக பெரிய சேவை!

அனைத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு, விடைபெறும்போது, சகோதரி மனோன்மணி அவர்கள், தன் தந்தையின் தெவசம் அடுத்த மாதம் வரவிருப்பதாக கூறி, அன்று இக்குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் கூடிய உணவு வழங்குமாறு திரு,ரகுபதியிடம் கூறி அதற்கான செலவை உடனே நன்கொடையாக கொடுத்தார்கள். உடனே அதற்க்கு ரசீதும் தரப்பட்டது. என்னை அன்று இங்கு வந்து கொஞ்சம் ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்துக்கொள்ளுமாறு மனோன்மணி கூறியிருக்கிறார்கள். இதுவும் ஒரு வகை உழவாரப்பணி தான் என்பதால் நானும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.

திரு.ரகுபதியிடம், “சார்…. ஒரு லீவ் நாளன்னைக்கு வர்றேன். நம்ம ரைட்மந்த்ராவுக்கு நீங்க ஒரு விரிவான பேட்டி தரனும். இதன் மூலம் உங்கள் தொண்டு பரவுவது மட்டுமல்லாமல், உங்கள் பணிகளில் எங்கள் வாசகர்கள் நிச்சயம் தங்களையும் இயன்றளவு இணைத்துக்கொள்வார்கள்…!” என்றேன்.

மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

விரைவில் திரு.ரகுபதி அவர்களின் விரிவான பேட்டி நம் தளத்தில் இடம்பெறும்.

நாங்கள் மீண்டும் புறப்படத் தயாரானபோது, சில குழந்தைகள் அங்கு வர, அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். எல்லாக் குழந்தைகளிடமும் அந்த கலைவாணியின் பரிபூரண கடாட்சம் தெரிந்தது.

பாலம் ஐயா உட்பட அனைவரும் மீண்டும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

திரு.ரகுபதி அவர்கள் செய்து வரும் சேவையை பார்த்த பிரமிப்பு அதற்க்கு பிறகு கூட எங்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்

ஓர் ஏழைக்கு கல்வியறிவு ஊட்டுவதே புண்ணியம் கோடி என்றால் நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு உணவும் ஊட்டி கல்வியறிவும் ஊட்டுகிறாரே…. எப்பேற்ப்பட்ட புண்ணியாத்மா இவர்…. இவரை பார்க்க நேர்ந்தது நாம் செய்த பாக்கியம் என்று நாம் சொன்னதில் வியப்பில்லை தானே?

[END]

9 thoughts on “தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

 1. மிக அருமையான சேவை ,நான் ஒரு ஏழு வருடம் சைதாபேட்டையில் இருந்தேன் ,அப்பொழுது இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டுள்ளேன் ஆனால் நான் நினைத்தது அது அரசாங்கம் நடத்தும் பள்ளி என்று

  அதே போல் ஒரு வேலை உணவுக்கு எவ்வளவு செலவு என்று குறிப்பிட்டு இருந்தீர்களானால் நம் உறுபினர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்களே

  1. 120 குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் சாப்பாடு ரூ.3000/-

   அவரின் விரிவான பேட்டி நம் தளத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதில் இது தவிர மேலும் நாம் அக்குழந்தைகளுக்கு செய்யக்கூடிய அனைத்து உதவிகள் பற்றிய விபரங்களும் இடம்பெறும்.

   – சுந்தர்

 2. \\கடவுள் என்பவர் கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல. தன்னலமற்ற சேவை, தியாகம், பிறரை காக்கும் வீரம், தாய்மை, தேசபக்தி, மழலை, பணிவு, வாய்மை, எளிமை, தூய்மை, இரக்கம், ஏழைகளின் சிரிப்பு, உண்மையாக உழைப்பவனின் வியர்வை – இவை இருக்கும் இடங்களில் கூட கடவுள் இருக்கிறார்\\

  \\ படித்து முடிக்கும்போது உண்மையில் கடவுளை கண்டதாகவே உணர்வீர்கள்! \\

  தெய்வம் இருப்பது எங்கே…? அது இங்கே….!

  எல்லாவற்றையும் தாங்களே எழுதிவிட்டீர்கள்.

  என்னால் முடிந்த உதவிகள் செய்து அவர்கள் பதங்களில் சிரம் பதித்து ஆசீர்வாதம் பெறும்நாள் வெகு விரைவில்…

  இந்த சீர்மிகு பனியில் நமது வாசகர்கள் இணைந்து சிறு சிறு உதவிகள் செய்து கடைதேற இறைவனை வேண்டிஅழைக்கிறேன் .

 3. படித்து முடிக்கும் போது கடவுளை கண்டதாகவே
  உணர்ந்தேன். நிச்சயம் உங்கள் பணிகளில் எங்கள் கடமையும் கண்டிப்பாக இருக்கும்.

 4. பிரமிப்பு!!!

  திரு.ரகுபதி போன்றவர்கள் தான் கடவுளின் அன்புக்கு உண்மையில் பாத்திரமானவர்கள். உண்மையான தொண்டர்கள். இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே இந்த ஜென்ம பயன். நாமும் அவர்களுடன் பணி புரிந்தால் அது நம் ஜென்ம புண்ணியம்தான்.

  நிச்சயமாக அனைவருக்குள்ளும் கண்டிப்பாக ஒரு மாற்றம் உருவாகவேண்டும்.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 5. தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே

  ஏதோ ஒரு ரூபத்தில் தங்களை போன்ற புண்ணியவான் தயவால் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நானும் என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக அந்த குழந்தைகளுக்கு செய்கின்றேன். மனம் மிகவும் பெரியதாகத்தான் உள்ளது. ஆனால் தற்சமயம் கிள்ளி கொடுக்கும் அளவுக்குத்தான் பகவான் வைத்து உள்ளான். அள்ளி கொடுக்கும் நாள் விரைவில் …………

  நன்றி

  1. எவ்வளவு செய்கிறோம் என்பதை விட எந்த சூழ்நிலையில் செய்கிறோம் என்று தான் இறைவன் பார்ப்பான். எனவே, சங்கடப்படாது இயன்றதை செய்யுங்கள்.
   – சுந்தர்

 6. தங்களை போன்ற புண்ணியவான்கள் இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை நானும் என்னால் முடிந்த உதவி செய்ய கடமை பட்டுள்ளேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *