Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…!

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…!

print
மது ஆலய தரிசனங்களின் போது கோவில் உண்டியல்களில் பணம் போடுவதை விட கோவில் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் கோவில் உற்சவங்களில் இன்னபிற பணிகளிலும் உறுதுணையாக இருக்கும் ஆலய ஊழியர்கள் – இவர்களுக்கு தான் உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள்.

பொதுவாக கோவில்களில் பூஜை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. ஒவ்வொரு கோவிலிலும் ஆறு கால பூஜை நைவேத்தியங்கள் இவையெல்லாம் முறையாக நடக்கவேண்டும். அப்படி நடந்தால் தான் நாடு செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். மாடுகட்டி போரடித்து மாளாது யானை கட்டி போரடித்த தமிழகம் இன்று தண்ணீருக்கு கூட அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலையில் இருப்பதற்கு கோவில்களில் முறைப்படி பூஜை நடக்காததும் ஒரு காரணம். அப்படியே பூஜை நடந்தாலும் பல கோவில்களில் அர்ச்சகர்களுக்கு போதிய வருவாய் கிடையாது. அவர்கள் எப்படி மனநிறைவுடன், மகிழ்ச்சியுடன் பூஜை செய்வார்கள்? பல பிரசித்தி பெற்ற கோவில்களில் அர்ச்சகர்களின் மாதச் சம்பளம் மூவாயிரத்துக்கும் கீழே தான்.

dsc07737

அறநிலையத்துறையின் சார்பாக பராமரிக்கப்படும் கோவில்களில் உண்டியல் வருவாயில் அரசு காட்டும் ஆர்வத்தை கோவில் வளர்ச்சிகளிலோ அர்ச்சகர்கள் சம்பளத்திலோ காட்டுவதில்லை. வருவாய் அதிகம் உள்ள ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய கோவில்களைத் தவிர மற்ற கோவில்களில் உள்ள அர்ச்சகர்களும் கஷ்ட ஜீவனம் தான். மேலும் குருக்கள் மற்றும் சிவாச்சாரியர்களுக்கு பெண் கொடுக்க பலர் மறுப்பதால் பரம்பரை பரம்பரையாக பெருமிதத்தோடு அவர்கள் அந்த தொண்டை செய்து வந்த நிலை மாறி, பலர் தங்கள் பிள்ளைகளை வேதக் கல்வி தவிர்த்து வேறு படிப்பு படிக்க வைத்து வேறு உத்தியோகத்துக்கு அனுப்பிவிட்டனர். இதன் விளைவாக பல கோவில்களில் ஆறுகால பூஜை இல்லை. ஒரே குருக்களை கொண்டு நான்கைந்து கோவில்களுக்கு பூஜை செய்யும் பரிதாப நிலையே நிலவுகிறது.

pulivalam-subramaniya-swamy

சொற்ப சம்பளத்தில் ஒரு ஏழை அர்ச்சகர் இன்றைய காலகட்டங்களில் எப்படி குடும்பம் நடத்தமுடியும்? பிள்ளை குட்டிகளுக்கு நல்லது செய்து பார்க்கமுடியும்? எனவே கோவில்களில் வரும் பக்தர்கள் தட்டில் போடும் தட்சணையையே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் நம்பியிருக்கின்றனர். எனவே தட்டில் தட்சணை போடுவது குறித்து எந்த வகையிலும் அசௌகரியப்படவேண்டாம். அவர்கள் எதிர்பார்க்கும் முன்னரே தாராளமாக கொடுங்கள். இவர்களுக்கு இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து அந்த ஒரு காரணத்திற்காகவாவது அந்த தொண்டை விட்டு அவர்கள் போகாமல் இருக்கட்டுமே. மேலும் தட்சணை போடும்போது நமது கர்மாவை அவர் பெற்றுக்கொள்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நாம் நமது ஆலய தரிசனங்களிலும் உழவாரப்பணிகளிலும் சம்பந்தப்பட்ட ஆலய அர்ச்சகர்களையும் அவர்களது உதவியாளர்களையும் உரிய சம்பவானையுடன் கௌரவிக்க தயங்குவதில்லை.

dsc00742

ஜூலை மாத துவக்கத்தில் பெற்றோருடன் வயலூர் சென்றபோது, புலிவலம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கும் (குழுமணி அருகே) சென்றிருந்தோம். மிகப் பழமையான கோவில் அது. ஒரு வகையில் எங்கள் முன்னோர்களுடன் தொடர்புடைய கோவில். நாம் சென்றபோது முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து குருக்களையும் அவருக்கு உதவியாளராக இருக்கும் ராமன் குருக்களையும் கௌரவித்தோம். கோவில் உண்டியலில் பணம் போடுவதைவிட இதைத் தான் நாம் செய்துவருகிறோம். கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு வஸ்திரமும், தாம்பூலமும், இனிப்பும் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

pulivalam-siva-temple-2

இங்கு ஈஸ்வரன் பெயர் அகத்தீஸ்வரர். வியாக்ரபாதர் முருகனை பூஜித்த தலம். அவசியம் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. கிராமத்து கோவில் என்பதால் வருவாய் எதுவும் பெரிதாக இல்லை. கோவிலில் குருக்களாக இருக்கும் சாமிநாத குருக்கள் என்பவர் முன்னின்று திருப்பணிக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. என திருப்பணி நடந்து வருகிறது.

dsc00743-copy
சமீபத்திய (11/09/2016) திருச்சி பயணத்தின்போது…

சென்ற வார இறுதியில் ஒரு திருமண வரவேற்புக்கு சென்றபோது வயலூர் சென்றுவிட்டு அப்படியே மேற்கூறிய புலிவலம் (குழுமணி), வயலூர், திருப்பராய்த்துறை இங்கெல்லாம் சென்றோம். புலிவலத்தில் திருப்பணிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடை கொடுத்துவிட்டு சாமிநாத குருக்களையும் ராமன் குருக்களையும் இந்த முறையும் கௌரவித்தோம்.

இது போன்ற பல தொன்மையான கிராமத்து கோவில்களில் மூன்று கால பூஜை செய்ய குருக்கள் கிடையாது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் புலிவலத்தில் சாமிநாத குருக்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவியாக வலது கரம் போல இருப்பது ராமன் குருக்கள் தான். இவர்கள் இருவர் தான் இந்த கோவிலை பார்த்துக்கொள்கிறார்கள்.

அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுப்பது, பிரசாதம் தயார் செய்வது, நைவேத்தியம் செய்வது, கோவிலை திறப்பது என இவர் அங்கு தவிர்க்க இயலாத நபர் உதவி குருக்கள் ராமன் தான்.

ராமனின் உழைப்பு அவரை பார்த்தாலே புரிந்துவிடும். சென்ற முறை போலவே இந்த முறையும் ராமன் அவர்களை கௌரவிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

தமிழகம் முழுதும் பல கோவில்களில் இப்படி ஆதார சுருதியாக விளங்கும் கண்ணுக்கு தெரியாத ராமன்கள் இருக்கிறார்கள். தெய்வத்தை பார்க்கும் நாம் தொண்டு செய்பவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்!

உங்கள் சொந்த ஊர் கோவில்களுக்கு அடிக்கடி செல்லுங்கள். அங்கு தொண்டு செய்பவர்களுக்கும் கோவிலுக்கும் வேண்டிய உதவிகளை உங்கள் தகுதிக்கேற்ப செய்யுங்கள். (அதுமட்டுமல்ல உங்கள் சொந்த ஊரில் உள்ள பள்ளி கிராமத்து பள்ளியாக அரசு பள்ளியாக இருப்பின் அப்பள்ளிக்கு நீர்த்தொட்டி, கரும்பலகைகள், பெஞ்ச்கள், WATER PURIFIERகள் இவற்றை வாங்கிக்கொடுங்கள்.)

தட்சணை போடுவதன் மூலம் நம் பாபம் கரைகிறது… உடையாளூர் கல்யானராமன் அவர்கள் சொல்வதை கேளுங்கள்… 

The significance of Dhatchanai – by Sri Udayalur Kalyanaraman – Speech (6 minute video)

சரி… துவங்கிய விஷயத்திற்கு வருகிறோம்.

நிலைமை இப்படி இருக்க ஆலயங்களில் அர்ச்சகர்கள் தட்டுக்காசை எதிர்நோக்குவது குறித்து பரவலான கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இது குறித்து பிரபல எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தனது இணையதளத்தில் அளித்துள்ள அற்புதமான கேள்வி-பதில் ஒன்றை இங்கே பகிர்கிறோம். அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று!

************************************************************

dsc09697-22

கோயில்களில் கைநீட்டுவது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

நான் உங்கள் இணயதள வாசகன். தொடர்ந்து உங்கள் இணயத்தில் வரும் கட்டுரைகளை வாசித்துவருகிறேன். உங்கள் கட்டுரைகள் என்வாழ்வில் படிநிலை அறிவை ஏற்படுத்தி உள்ளது. வாசகர்களின் கேள்விக்கு உங்கள் பதில்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது. அதில் பயனடைவதில் நானும் ஒருவன். உங்களிடம், சில கேள்விகள் ஊடாக நானும் எனது நண்பர்களும் சில அறிவைப் பெறுவதற்கு முற்படுகின்றோம்.

இங்குள்ள கோவில்களில் அர்ச்சனை பற்றுச்சீட்டு வேண்டித்தான் பூசை செய்யவேண்டும் ஏனெனில் இங்கு ஒரு கோவில் இயங்குவதற்கு பல செலவுகள்(அந்தணர்/பூசாரி சம்பளம், கோவில் நடை முறை செலவு) உண்டு. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றது. குறிப்பாக அந்தணர்/பூசாரி அர்ச்சனை/பூசை செய்து முடிய தட்சணையை மக்கள் இடம் இருந்து எதிர்பார்ப்பது, இது பல மக்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றது. குறிப்பாக வசதி படைத்தவர் தட்சணையை(பணத்தை) கொடுக்கும் போது வசதி குறைந்தவனையும் அவனுடைய சக்திக்கு மீறிப் பணம் கொடுக்கவேண்டிய இக்கட்டான சந்தர்ப்பத்துக்குத் தள்ளுகின்றது. பூசகர்/அந்தணர் கூடுதலாக தட்சணை கொடுக்கின்றவர்களுக்கு அதிகமாக ஏதாவது மந்திரங்கள் செய்வதையும் கண்கூடாகக் கவனிக்கக் கூடியதாக உள்ளது. கனடாவில் இன்று இவர்கள் கோவிலை வைத்துத் தொழில் செய்வது மாதிரி எனக்குத் தென்படுகிறது. இதனால் இங்குவாழும் மக்கள் மூடநம்பிக்கையின் பின் செல்கிறார்கள் என்பது என் எண்ணம். இளம் சந்ததியினர் பலவகையான கேள்விகளைக்கேட்கும் போது எங்களிடம் தகுந்த பதில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

உங்கள் நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்வதற்கு முதலில் நன்றியைக் கூறிக்கொண்டு எங்கள் கேள்வியை முன் வைக்கின்றோம்.

1. சைவர்கள்/இந்துக்கள் இறை வழிபாட்டில் எமக்கும் இறைவனுக்கும் இடையில் பூசாரி/குருக்கள்மார்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள்? எக்காலப்பகுதியில் இவர்கள் இந்து மதத்தில் உருவாக்கப்பட்டார்கள்? இவர்களின் உண்மையான தொழில் என்ன?

2. இவர்களுக்கு குருதட்சணை அவசியம் வழங்க வேண்டுமா?

3. தட்சணை வழங்குகின்ற இந்த சடங்கு சைவர்களின் ஒரு மதவழிபாட்டு முறையா? அல்லது இடையில் செருகப்பட்ட சடங்கா?

நன்றி,
க.சிவகுமார்

***************

jeyamohan-copyஅன்புள்ள சிவக்குமார்,

பழைய கோயில் ஆவணங்களைப்பார்த்தால் தட்சிணை வழங்கும் மரபு இருந்திருப்பதாகத் தெரியவில்லை. அன்று மன்னர்களாலும் பிரபுக்களாலும் கோயில்கள் பேணப்பட்டன. கோயில் ஊழியர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அந்த மானியத்தால் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் சமூக இடம் மிக முக்கியமானதாக இருந்தது. பெருமதிப்புடன் அதிகாரத்துடன் இருந்தார்கள்.

திருவனந்தபுரம் கோயில் பூசாரியை நம்பி என்பார்கள். அவர் குஞ்சன் நம்பியார் என்ற கவிஞரிடம் ‘ஆரு?’ என்று கேட்டார். ’நம்பி ஆர்?’ என்று அவர் சொன்னார். நம்பியை அவமதித்ததாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நம்பியார் ஒரு விகடகவியாக மன்னிப்புக்கவிதை பாடினார். இந்தக்கதை பூசாரிக்கிருந்த அதிகாரத்தைக் காட்டுகிறது.

ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே இருந்த பேரரரசுகள் அழிந்தன. அவற்றைத் தாங்கி நின்ற பிரபுக்கள் மறைந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் உக்கிரமான சுரண்டலால் . நம் நாட்டிலிருந்த உபரி முழுமையாகக் கொள்ளைபோனதன் விளைவாக பெரும் பஞ்சங்கள் வந்தன. ஆலயநிலங்கள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டன. கோயிலையும் பிரபுக்களையும் நம்பிவாழ்ந்த மரபுக்கலைகளும் தொழில்களும் அறிஞர்களும் அழிந்தனர்.

அதன்விளைவாகவே கோயில் ஊழியர்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் கைநீட்டி தட்சிணை பெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்றும் அந்நிலைதான் நீடிக்கிறது. ஒரு கிறித்தவ மதபோதகர் இன்று அரசு உயரதிகாரி போல இங்கே வாழமுடியும். இஸ்லாமிய மதபோதகர் கௌரவமாக வாழ அந்த மதத்தவர் அவருக்கு வீடும் ஊதியமும் அளிக்கின்றனர். இந்துமதத்தினரின் பூசாரிகளுக்கு இன்றும் மாதம் ஆயிரம் ரூபாய்தான் சம்பளம், ஒரு டீ எட்டு ரூபாய் விற்கும் நாட்டில். அவர்கள் கைநீட்டித்தான் வாழவேண்டியிருக்கிறது.

இந்துக்கள் பிராயச்சித்தங்களுக்கும் பூசைகளுக்கும் சாமியார்களுக்கும் கோடிகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பூசாரிகளின் தட்டுகளில் இன்றும் ஐந்துரூபாய்க்குமேல் போடமாட்டார்கள். கூடவே அந்தப் பூசாரிகள் கைநீட்டுவதாகக் கரித்துக்கொட்டவும் செய்வார்கள். அவர்களைப் ‘பணப்பேய்கள்’ என்று வசைபாடுபவர்களைக்கூடக் கண்டிருக்கிறேன்

ஒப்புநோக்க கேரளத்தில் பூசாரிகள் அவர்களுக்குரிய கௌரவத்துடன் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் அவர்கள் அங்கே அரசூழியர்களாகக் கருதப்படுகிறார்கள். அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர் இரு கோயில்களின் வருமானம் மட்டுமே போதும் ஊழியர்களுக்கு கௌரவமான ஊதியம் வழங்க. ஆனால் நம் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கோயில் கொள்ளையடிப்பதற்கான இடம். நமக்கு அது உலகியல் லாபங்களுக்காக கடவுளிடம் பேரம்பேசும் இடம்.

முதலில் மதிக்கத்தக்க ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதன் பின் கைநீட்டக்கூடாது என அர்ச்சகர்களை விலக்குவோம். அவர்கள் தட்டை நீட்டுவதென்பது நம் மதத்துக்கு நாமே இழைக்கும் மாபெரும் அவமதிப்பு. நம் சுயமரியாதையை அது இன்னும் சீண்டவில்லை.

– ஜெ @ http://www.jeyamohan.in

=========================================================

இந்த தளம் தொடர உங்கள் உதவி  தேவை…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check :

“எல்லாம் அவ பாத்துப்பா!”

சுந்தரர் அவதரித்த தலத்தில் ஒரு சுகானுபவம்!

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

பாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

=========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *