சமுதாயத்தில் மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை செய்யும் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், செருப்பு தைப்பவர்கள், நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள், உழைத்து உண்ண முடியாத வயது முதிர்ந்தோர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிணம் எரிக்கும் வெட்டியான்கள், நமக்கு சோறிடும் விவசாயிகள், இவர்களுக்கு செய்யப்படும் அன்னதானம் சிகரம் போன்றது. சராசரி அன்னதானத்தைவிட பலநூறு மடங்கு பலன் தரவல்லது.
சமீபத்தில் நடைபெற்ற நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் இது. சென்ற வாரம் ஒரு நாள் நம் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி, சாக்கடை அடைத்து சாலையெங்கும் கழிவு நீர் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதை சுத்தம் செய்ய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 12 பேர் வந்து சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். (கவனிக்க… ஒப்பந்த தொழிலாளர்கள்!)
நாம் காலை சுமார் 11.30 அளவில் வழக்கமான டீ – பிரேக்கிற்க்காக வெளியே வந்த நேரம் அது. தொழிலாளர்கள் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புக்களை பக்கெட்டுக்களில் அள்ளி அள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்தனர். அந்த பகுதியே துர்நாற்றத்தால் திணறியது. அந்த வழியே சென்றவர்கள் அனைவரும் மூக்கை பிடித்தபடி சென்றுகொண்டிருந்தனர். அந்த வழி சென்றவர்களுக்கே அப்படி என்றால் இறங்கி கழிவுகளை அள்ளி, சுத்தம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
“சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு, நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு” என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
அந்த தெரு முழுக்க இரண்டு இரண்டு பேராக பிரிந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். நம் எதிரே வேலை செய்து கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் அருகே சென்று, “டீ வாங்கித் தந்தா சாப்பிடுறீங்களா எல்லாரும்?” என்றோம்.
“தாராளமா சார்!” என்றார்கள்.
மொத்தம் 13 பேர் இருப்பதாக தெரிந்தது.
“டீக்கடையில பணம் கொடுத்துடுறேன்… போய் சாப்பிட்டுக்கோங்க” என்றோம்.
“அப்புறம் மதிய சாப்பாடு எப்படி?” மெல்ல விசாரித்தோம்.
“இங்கே பக்கத்துல எங்கேயாச்சும் போய் தான் சாப்பிடனும்” என்றனர்.
“பக்கத்து தெருவுல ஒரு கடை இருக்கு. நான் போய் உங்க 13 பேர் சாப்பாட்டுக்கும் இப்போ பணம் கொடுத்துட்டு போய்டுறேன். நீங்க மதியம் அங்கே போய் சாப்பிட்டுக்கோங்க” என்று பக்கத்து தெருவில் உள்ள ஒரு சைவ உணவகத்தை குறிப்பிட்டோம்.
முகம் நிறைய மகிழ்ச்சியுடன் “சரி!” என்றார்கள்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம், “ஏய்… நீ போய் அவங்க எல்லார்கிட்டேயும் சார் சாப்பாடு வாங்கி தர்றாராம்னு சொல்லிடு” என்று கூறி மற்ற தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கச் சொன்னார்.
அவரிடம் விடைபெற்று, அருகே இருந்த ஏ.டி.எம். சென்று நம் தளத்தின் கணக்கில் இருந்து பணம் வித்ட்ரா செய்து அந்த உணவகத்தில் விபரத்தை கூறி பணம் கட்டினோம். “அவங்க இங்கயே சாப்பிடுறதா இருந்தா சாப்பிடட்டும். பார்ஸல் கேட்டாலும் கொடுத்துடுங்க. எக்ஸ்ட்ரா ஏதாவது தரவேண்டியிருந்தா நான் தந்துடுறேன்” என்று கூறிவிட்டு வந்தோம்.
மதியம் உணவு இடைவேளையின் போது வெளியே வந்தோம்… அனைவரும் ஒரு மரத்தடியில் நிழலில் அமர்ந்து பார்சலை பிரித்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். நாம் பேசிய நபர் நம்மை பார்த்ததும் கைகூப்பியபடி எழுந்து நின்றார்.
நாம் பதறிப்போய் “உட்காருங்க.. உட்காருங்க… சாப்பிட்டீங்களா?”
“இதோ இப்போ தான் சார் வாங்கிட்டு வந்தோம். இதோ சாப்பிடப்போறோம்!” என்றார்.
அவர் கண்களில் தெரிந்த அந்த நெகிழ்ச்சியில் அந்த ஆண்டவனையே நாம் பார்த்ததை சொல்லவும் வேண்டுமா என்ன.
கருவறையில் மட்டுமே நீங்கள் கடவுளை பார்க்கும் வழக்கமுடையவர் என்றால் எந்தக் காலத்திலும் உங்களால் இறைவனை பார்க்க முடியாது.
மேற்கூறிய சம்பவத்தை நாம் இங்கு பகிர்ந்துகொள்வதற்கு காரணம், இதை உங்கள் பிரதிநிதியாக செய்ததால் தான். மற்றொன்று, அடுத்த முறை துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்த்தால், மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லாமல் அவர்கள் மனமும் வயிறும் குளிரும்படி ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் உதவவேண்டும் என்பதற்காகத் தான். பரபரப்பான இந்த உலகில், புண்ணியம் சேர்ப்பதை தவிர மற்ற அனைத்திற்கும் மனிதர்களுக்கு நேரம் இருக்கிறது. எனவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… நீங்கள் செலவழிப்பது சில நிமிடங்களாகவோ சில நூறு ரூபாய்களாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நீங்கள் பெறும் புண்ணியம் மலையளவு என்றால் மிகையாகாது.
இன்றும்…. நாள், கிழமை, விஷேடங்களின் போது நம் தளம் சார்பாக தகுதி உடையோருக்கு அன்னதானம் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆடிகிருத்திகைக்கு மிக மிக மிக தகுதி உடையவர்களுக்கு அன்னதானம் செய்யும் வாய்ப்பை நம் அனைவருக்கும் இறைவன் வழங்கினான். (ஆடிகிருத்திகை தரிசனம் பற்றிய பதிவில் அது குறித்த விரிவான தகவல் இடம்பெறும்!)
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)
பொருள் : பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
மஹா பெரியவா அருள்வாக்கு : –
* அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.
* சொந்தக் குடும்பத்துக்கு மட்டும் சேர்க்காமல் வெளியார் இருவர் வயிறும் குளிரப் பண்ணுங்கள்.
* பசியோடு இருப்பவர்களுக்கு அன்னமிட்டு வந்தால், பஞ்சமே வராது.
* தானங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது அன்னதானம்.
* அன்னதானத்தில் தான் ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
* நீங்கள் சாப்பிடுவதைவிட, ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் உங்களுக்கு இன்னும் அதிகமாக இன்பம் உண்டாகும்.
[END]
வணக்கம்
உங்களை பசிப்பிணி மருத்துவர் என்று அழைக்க தோன்றுகிறது.
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நம் தளத்தின் வாசகர்களாக இருப்பதில் பெருமிதம் அடைகிறோம்.
நன்றி
தாமரை வெங்கட்
கருவறையில் மட்டுமே நீங்கள் கடவுளை பார்க்கும் வழக்கமுடையவர் என்றால் எந்தக் காலத்திலும் உங்களால் இறைவனை பார்க்க முடியாது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
அன்ன தானத்தின் சிறப்பை இதைவிட யாராலும் உணர்த்த முடியாது. நச் என்று இருக்கிறது பதிவு. இந்த பதிவை படித்த பின் நாமும் தொழு நோயாளிகளை களையோ, துப்புரவு தொழிலாலர்களையோ, விவசாயி களையோ, பார்த்தல் நம் மால் முடிந்த உணவை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம் தளத்தின் பிரதிநிதியாக அன்னதானம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்
மேலும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் கொடுமை நம் நாட்டில் ஒழிய வேண்டும். இதற்காக , human resources department ஒரு சட்டம் இயற்றி இருக்கிறது என்று நினைக்கிறோம். அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும்
நாமும் ரைட் மந்த்ரா வாசகி ஆனபிறகு நம்ம முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் . இதற்கு ரைட் மந்த்ரா விற்கு நன்றி சொல்லி கொள்கிறோம்
நன்றி
உமா
வணக்கம் சார்,
வயதனாவர்களுக்கும்,கஷ்டத்தில் இருப்பவருக்கும் என்னால் முடிந்தவரை செய்து வருகிறேன் எனக்கு சில நேரம் ஒரு சந்தேகம் வரும் சிலர் நல்ல உடல் நிலையோடு இருப்பார்கள்.அவர்களும் என்னிடம் உதவி கேட்டு உள்ளனர்.செய்து.உள்ளேன்.எங்கள் வீட்டின் அருகில் கால்வாய் சுத்தம் செய்யும் நபரிடம் டீ சாப்புடுங்க என்று 10 ரூபா கொடுப்பேன்.பணமாக கொடுத்தால். அது தவறா ? அப்படி கொடுக்கலாமா ?
பசிக்கு உணவு கொடுப்பது பாரினிலே நல்ல செயல்…
இன்டர்நெட்டில் நல்லது நாலாயிரம் வந்தால், கெட்டது ஐயாயிரம் வருகிறது… நம் தளம் நல்ல செய்திகளை விதைக்கிற ஊடகமாக வளர வாழ்த்துக்கள்!!!
பசிப்பிணியை பேசாத தமிழ் இலக்கியங்களே இல்லை..
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார்..
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…
என்று சொல்லும் மணிமேகலை..
தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
பசியின் அருமை அதை உணர்ந்தவர்களுக்கே தெரியும்…
உணவை வீணாக்கும் செயலை செய்யக்கூடாது. குழந்தைகளிடம் இதை சொல்லி வளர்க்க வேண்டும்.
விசேச விழாக் காலங்களில் முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கும் அன்ன தானம் செய்ய வேண்டும்.
Hands that help are holier than lips that pray
நம் தளம் நல்ல செய்திகளை விதைக்கிற தொலைக்காட்சி ஊடகமாக வளர வாழ்த்துக்கள்!!!
குறைந்தபட்சம் விசேச விழாக் காலங்களில் முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கும் அன்ன தானம் செய்ய வேண்டும்.
நெகிழ வைக்கும் செயல்.
“பரபரப்பான இந்த உலகில், புண்ணியம் சேர்ப்பதை தவிர மற்ற அனைத்திற்கும் மனிதர்களுக்கு நேரம் இருக்கிறது .”, நிதர்சனமான உண்மை. நாங்களும் புண்ணியம் சேர்க்க எங்களால் இயன்ற காரியங்களைச் செய்ய முயலுகிறோம்.
அண்ணா
உங்களை பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது.மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா நாங்கள் உங்கள் தலதின் வாசகி என்று கூற.
சுபா
என்னை பற்றிய உயர்வான எண்ணத்தை தோற்றுவிப்பது என் நோக்கமல்ல சகோதரி. இதையெல்லாம் நீங்களும் செய்து புண்ணியத்தை தேடிக்கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கம். இனி சாக்கடை சுத்தம் செய்பவர்களை பார்க்கும்போதெல்லாம் நாம் விளக்கிய இந்த சம்பவம் நினைவுக்கு வந்து அவர்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்வீர்கள் அல்லவா?
சுந்தர் அண்ணா ..
மிகவும் அருமை. கண்டிப்பாக முடிந்ததை செய்வோம் அண்ணா..
ELLAPUGAZUM Rightmanthra kudumbathirkke.
~manohar.
சார்
உங்களை பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது. பெருமையாக உள்ளது. நான் கள் உங்கள் தளத்தின் வாசகி என்று பெருமையாக சொல்வேன்.
selvi
சுந்தர் சார் காலை வணக்கம்
நெகிழ்ச்சியூட்டும் பதிவு அனைவருக்கும் ஒரு பாடம்
நன்றி
மிகவும் புனிதமான காரியம் செய்துள்ளீர்கள் அண்ணா…..கண்டிப்பாக இனி நானும் இதைப் பின்பற்றுவேன் ….! இதோ போன்று உங்களிடம் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன்..
–சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு புத்தாண்டன்று நாம் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்குச் சென்றோம்..இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, லாரியில் அடிபட்டு நாய் ஒன்று இறந்து கிடந்தது. சாலையில் சென்ற வாகனங்களில் நாயின் இறந்த உடல் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. உங்களுக்கு முன்னாள் சென்ற நான், அதைக் கண்டும் காணாமல் சென்று விட்டேன். ஆனால் நீங்களோ, வண்டியை நிறுத்தி இறங்கி, நாயின் உடலை ஒரு குச்சியின் மூலம் சாலையின் ஓரத்தில் தள்ளி விட்டீர்கள். எனக்கு பொட்டில் அடித்தால் போல் ஆயிற்று. மனதில் ஒரு தாக்கத்தை தந்தது. அன்று மனதில் நினைத்து கொண்டேன் இது போன்று நடந்து கொள்ள வேண்டுமென்று. ..!
நேற்று மாலை அலுவலகம் முடிந்து வரும் வழியில் குட்டி நாய் ஒன்று காரில் சிக்கி துடித்துக் கொண்டிருந்தது. எனக்கு உங்கள் செயல் ஞாபகத்திற்கு வந்தது. உடனே நானும் என் நண்பரும் நாயின் உடலை சாலியின் ஓரத்திற்கு தூக்கிச் சென்று விட்டு, அருகில் ஏதாவது கால்நடை மருத்துவமனை இருக்கிறதா என்று விசாரித்தோம். ஆனால் அதற்குள் அந்த நாய்க்குட்டி இறந்துவிட்டது. மனதிற்கு வேதனையாக இருந்தாலும், ஒரு நல்ல செயலை செய்த சிறு சந்தோசம் கிடைத்தது.
அதே போல் நீங்கள் செய்த இந்த விசயமும், என்னுள் மிகப்ப பெரிய தாக்கத்தை தரும்…..நன்றி..
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
இன்றைய நாளிதழில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு நமது அரசாங்கம் தடை விதித்து சட்டம் கொண்டு வந்து உள்ளது. இது மிகவும் பாராட்டத் தக்க விஷயம்.
நன்றி
உமா வெங்கட்
மிக அருமையான ஒரு பதிவு. மனதை தொட்டது சார்,
முடிந்த வரையில் அடியேனும் சிறு சிறு காரியங்கள் இது மாதுரி செய்கிறேன். இதை விடாமல் முடிந்த வரையில் செய்வேன் // என்றும் சொல்லிகொள்கிறேன் சார்,
தங்களின் வாசகர் அளித்த பதிவும் அருமை இதோ:
பசிப்பிணியை பேசாத தமிழ் இலக்கியங்களே இல்லை..
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார்..
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…
என்று சொல்லும் மணிமேகலை..
தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
பசியின் அருமை அதை உணர்ந்தவர்களுக்கே தெரியும்…
உணவை வீணாக்கும் செயலை செய்யக்கூடாது. குழந்தைகளிடம் இதை சொல்லி வளர்க்க வேண்டும்.
விசேச விழாக் காலங்களில் முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கும் அன்ன தானம் செய்ய வேண்டும்.
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்