Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

print
வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றமும், ஸ்ரீராம் கல்சுரல் அகாடமியும் கிருஷ்ண கான சபாவுடன் இணைந்து சென்னையில் 8ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழாவை சிறப்பாக நடத்தின. மொத்த எட்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இந்த இசை விழாவில் தேவராம், திருவாசகம், கந்தபுராணம் உள்ளிட்டவைகளில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன. ‘ஆழ்வார்கள் பாடிய நாயன்மார்கள்’ என்ற தலைப்பில் கூட நிகழ்ச்சி இருந்தது. (நாயன்மார்கள் = சிவனடியார்கள், ஆழ்வார்கள் = விஷ்ணு அடியார்கள்).

இந்த இந்த பக்தி இசை விழாவை பற்றிய முழு விபரங்களை நிகழ்ச்சி நிரல்களுடன் நமது தளத்தில் நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

=========================================================
நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!
=========================================================

மிகப் பெரும் ஓதுவார்களும், தமிழ் அறிஞர்களும், சிவாச்சாரியர்களும், ஆன்மீக சொற்பொழிவாளர்களும் பங்கு பெற்ற இந்த அரிய நிகழ்ச்சியின் துவக்க விழாவை பதிவு செய்யவும், புகைப்படமெடுக்கவும் நம் தளத்திற்கு விசேஷ அனுமதி கிடைத்திருந்தது. எனவே நமக்கு தெரிந்த PHOTOGRAPHER ஒருவரை அழைத்து சென்றிருந்தோம்.

தெய்வத் தமிழிசை, பக்தி இசை, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளின் முக்கியத்துவங்கள் தெரியாமல் அவற்றை கேட்பவர்களும் பாடுபவர்களும் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், மேற்படி பக்தி இலக்கியங்களுக்காகவும் திருமுறைகளுக்காகவும் – சிறப்பான ஒரு விழாவை ஏற்பாடு செய்து – ஒரு அரங்கை புக் செய்து – அதில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு பதக்கங்களும் பாராட்டுக்களும் கூடவே சன்மானமும் கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. மிகப் பெரிய தொண்டு. அந்த பரமேஸ்வரனுக்கே செய்யும் தொண்டு. இத்தனைக்கும் தலைசிறந்த பாடகர்களும் சொற்பொழிவாளர்களும் பங்கு பெற்ற நிலையிலும் இந்த எட்டு நாள் நிகழ்சிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். எத்தனை பெரிய சேவை இது?

இதற்கு முழு முதற்காரணம் வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றத்தின் தலைவர் திரு.என் சுவாமிநாதன் அவர்கள் தான். அவர்களையே இதற்கான பெருமை போய் சேரும். மேலும் இது தொடர்பாக அவருக்கு பல உதவிகள் புரிந்த திரு.ராம்குமார் அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நமது தளத்தில் பதிவு செய்து உலகம் முழுவதிலுமுள்ள ஆன்மீக அன்பர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமையல்லவா?

உங்களுக்காகவும் இந்நிகழ்ச்சிக்கு வந்த இசை கலைஞர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் நாம் அளிக்கும் முதல் நிலை பதிவு இது.

இந்த நிகழ்ச்சியை நமது தளத்தில் அளிக்கவேண்டி நாம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவு தான் இதோ நீங்கள் பார்க்கும் பதிவு. இது தொடர்பாக தடங்கல்கள் ஏற்பட்டு நான் சோர்வடையும் போதேல்லாம் என் நினைவுக்கு மலையை பிளந்த ஒற்றை மனிதன் திரு.தசரத் மஞ்சி அவர்கள் நினைவுக்கு வருவார். உடனே மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும். இப்படியாக மேற்கொண்ட தொடர் முயற்சியினால் கிடைத்த பலன் இந்த நிகழ்ச்சியை கவர் செய்ய நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!

நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும், நினைத்து நினைத்து உருகவேண்டியவை. இசையறிவு இல்லாத எனக்கே அத்துணை இனிமையாக இந்த விழா இருந்ததென்றால் இசையறிவு நிரம்பிய இசை ஆர்வலர்களுக்கும், ஆன்மிக ஆர்வமும் தாகமும் கொண்ட இறை அன்பர்களுக்கும் இது எப்படிப்பட்ட அனுபவத்தை தந்திருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். அந்த அனுபவம் நீங்களும் பெறவேண்டுமல்லவா?

………………………………………………………………………………………………………………..

சில முக்கிய சொற்பொழிவாளர்கள் கூறிய கருத்துக்கள் சிந்தனையை தூண்டுபவை. இவைகளை நீங்கள் எந்த நூலிலும் படிக்க முடியாதவை. இது போன்ற நிகழ்சிகளை நேரில் சென்று ‘ஸ்ரவணம்’ செய்தால் மட்டுமே கிடைக்ககூடியவை.

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

உதாரணத்திற்கு ஒரு சொற்பொழிவாளர் கூறிய அரிய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

திருமதி. தேச மங்கையர்க்கரசி

“சமயக் குறவர்களுள் மற்றவர்களுக்கு கிடைக்காத பெரும் சிறப்பு மாணிக்கவாசகருக்கு உண்டு. அவருக்கு மட்டும் தான் சிவன் குரு வடிவாக காட்சி தந்தார். அப்படிப்பட்ட மாணிக்க வாசகர் சொல்கிறார்….

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச
சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பொருள் : நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த இறைவனும்,பேய்த்தன்மை யுடையவனான என் மனக்குற்றங்களை மன்னிக்கும் பெருமையுடையவனும், சிறிதளவும் இல்லாத யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற தாயானவனுமாகிய இறைவனிடமே போய் ஊதுவாயாக அரச வண்டே!

இறைவனையே குருவாக கொள்ளும் பாக்கியம் பெற்ற மாணிக்கவாசகர் ஏன் தன்னை நாயேனை என்று கூறிக்கொள்கிறார்?

ஏன் என்றால் நாய் தான் தேவையில்லாமல் தன மூச்சை செலவு செய்யக்கூடிய விலங்கு. நானும் அதுபோல தேவையில்லாத செயல் மூலமும் தேவையில்லாத பேச்சு மூலமும் மூச்சை செலவு செய்துகொண்டிருக்கின்றேன். இவற்றிலிருந்து நீ தான் என்னை மீட்கவேண்டும் என்று சிவனை கோருகிறார் மாணிக்கவாசகர்.

உண்மை தான். மூச்சை அடக்கினால் பல நூறு வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.” என்று அந்த சொற்பொழிவாளர் கூறியபோது நம் சுவாசத்தை நமக்கு கவனிக்க தோன்றியது. (தேவையில்லாம பெருமூச்சு விடாதீங்கப்பா…!)

(மனிதன் விடும் மூச்சுக்கும் அவன் ‘தலையெழுத்து’ என்று கூறப்படுவதற்கும் தொடர்பு இருக்கிறது தெரியுமா? இது பற்றி தனி பதிவே அளிக்கலாம். பெரிய டாபிக் அது. அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. விரைவில் அளிக்கிறோம்!).

மேலே சொற்பொழிவாளர் திருமுறையில் உள்ள ஒரு சிறு பாடலை வெச்சு அதுல வர்ற ‘நாய்’ என்கிற வார்த்தையை வெச்சு சொன்ன மிகப் பெரிய விஷயத்தை படிச்சீங்களா? இது போலத்தாங்க… இந்த விழா முழுக்க எமக்கு கிடைத்த முத்துக்கள் ஏராளம் ஏராளம். அத்தகைய நல்முத்துக்களை பொறுக்கியெடுத்து உங்களுக்காக இங்கு பக்தியுடன் தரவிருக்கிறோம்.  படித்து பயன்பெறுங்கள். நிச்சயம் அவை உங்கள் மனதை பக்குவப்படுத்தும்.
………………………………………………………………………………………………………………..

எட்டு நாட்களும் அரங்கு நிறைத்த பார்வையாளர்களை சொக்க வைத்த சைவ சமயக் குறவர்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகியோரின் பக்தி பாடல்கள் என்ன, கலை நயம் மிக்க முகப்பு என்ன, ஆன்மீக புத்தகங்கள் விற்க ஸ்டால்கள் என்ன, செவிக்கு உணவோடு வயிற்ருக்கும் இதமாக மாலை வேளைகளில் கிடைத்த இலவச சுண்டல் என்ன …. உண்மையில் இப்படி ஒரு ஆத்மானுபவம் வேறு எங்கும் கிடைக்காதது.

(இதுக்கெல்லாம் இவருக்கு நேரம் ஏது என்று நீங்கள் நினைக்ககூடும். அனைத்து நாட்களும் நான் செல்ல விரும்பினாலும் என்னால் முடியவில்லை என்பதே உண்மை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்றுவிடுவேன். சில நாட்கள் அலுவலகம் முடிந்தவுடன் நேரே விழாவுக்கு சென்றுவிடுவேன்.)

துவக்க நாளன்று மதியம் 3 மணிக்கு முதலில் ராமச்சந்திரன் & குழுவினரின் மங்கள இசையும், தொடர்ந்து திருமதி.சிந்துஜாவின் இசை சொற்பொழிவும் நடைபெற்றது. பின்னர் சிறு குழந்தைகளின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் மழலைக் குரலில் திருமுறைகளில் இருந்து பாடல்கள் பாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கேட்டு ரசித்தனர்.

துவக்க விழா

துவக்கவிழாவில் முந்தைய வருடங்களை போலவே இந்த ஆண்டும்  ஓதுவார் மூர்த்திகளுக்கு வேத ஆகம விற்பன்னர்களுக்கும் பட்டங்களும் பணமுடிப்பும் தந்து கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வருடம் ஆகமத்திற்கு பிரம்ம ஸ்ரீ ரவி வைத்தியநாதன் என்பவருக்கு ‘ஆகம வித்தகர்’ என்ற விருதையும், ஸ்ரீ நாக நாத ஒதுவா மூர்த்திகளுக்கும், மா.கோடிலிங்கம் அவர்களுக்கும் திருமுறை வித்தகர் என்ற விருதையும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

அனைவரும் ரூ.10,000/- பணமுடிப்பும் பட்டமும் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

‘விநாயகர் பெருமை’ நூல் வெளியீட்டு விழா

RBVS மணியன் அவர்கள் எழுதிய ‘விநாயகர் பெருமை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திரு.பாலரமணி (முதல் நிலை நிகழ்ச்சி அமைப்பாளர் தூர்தர்ஷன்) அவர்கள் முதல் பிரதியை வெளியிட, திரு.ஊரன் அடிகளும் திரு.ஒய்.பிரபுவும் பெற்றுக்கொண்டார்கள்.

திருமுறை பாடல்கள் சி.டி வெளியீடு

தொடர்ந்து திருமதி.ரேவதி & புவனேஸ்வரி பாடிய திருமுறை பாடல்கள் சி.டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

திரு.பிச்சை குருக்கள் வெளியிட திரு.திருப்பூர் கிருஷ்ணன் முதல் சி.டி.யை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக இவ்விழாவை தவத்திரு ஊரன் அடிகள் தலைமை தொடங்கி நடத்தி வைத்தார். பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிரம்ம ஸ்ரீ பிச்சை குருக்கள் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். கிருஷ்ண கான சபா செயலாளர் திரு.ஒய்.பிரபு அவர்கள் எல்லாரையும் வரவேற்று பேசினார்கள்.

‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் முதலில் தேவார இன்னிசை பாடிய குழந்தைகளை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவித்தார்கள்.

வரவேற்புரை ஆற்றிய திரு. பிரபு அவர்கள் கூறுகையில், “எவ்வளவோ நிகழ்ச்சிகள் எங்கள் சபாவில் நடந்தாலும் திருமுறை இசை இசை விழாவையும் மற்ற நிகழ்ச்சிகள் போல நடத்தவேண்டும் என அமைப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்கள் விரும்பினார்கள். நான் அதை முழு மனதுடன் ஆதரித்து எங்கள் சபாவுடன் இனைந்து நடத்தலாம் என்ற யோசனையை கூறினேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இதோ 8 ஆண்டுகள் இசை விழாவில் மூன்றாம் ஆண்டு இங்கு வெகு சிறப்பாக துவங்கியிருக்கிறது. முந்தைய ஆண்டுகள் போலவே மிக சிறப்பாக விழா நடைபெறும் என்பதில் ஐயமில்லை.” என்றார்கள்.

சிறப்புரை

பிள்ளையார்பட்டி தலைமை சிவாச்சாரியார் டாக்டர்.பிச்சை குருக்கள் இவ்வாறு திருமுறைக்காகவும் வேத ஆகமத்திற்க்காகவும் விழா எடுப்பது மிகவும் சாலச் சிறந்தது. இங்கு ஒரே மேடையில் ஆகம வேத பண்டிதர்களையும் ஒதுவா மூர்த்திகளையும் பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் ஊரன் அடிகள் தலைமை தாங்குவது பொருத்தமே. இது போன்ற விழாக்களுக்கு என்னால் ஆனா எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க நான் சித்தமாகவுல்லேன்” என்று கூறினார்கள்.

ஊரன் அடிகள்

அருட்பிரகாச வள்ளலால்ரின் வழி தோன்றலான தவத்திரு.ஊரன் அடிகள் கூறியதாவது : “தாங்கள் ஆனைவரும் இணைந்து திருமுறைக்காக விழா எடுப்பதை பார்த்து வியக்கிறேன். சந்தோஷமடைகிறேன். இவ்வளவு அன்பர்கள் ஆர்வமுடன் வந்திருப்பது மிகவும் போற்றி பாராட்டத்தக்கது.

பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் திரு.பிச்சை குருக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டிருப்பது போற்றுதலுக்குரியது. சங்கீத கச்சேரிகள் நடத்துகின்ற சபா, வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றத்துடன் இனைந்து நடத்துவது மிகவும் போற்றத்தக்கது. திருமுறையை போற்றுகின்றவர்கள் குறைந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுவதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். வள்ளலார் தன பாடல்களில் நால்வர்களையும் இதர நாயன்மார்களின் சிறப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். ஆனால் நம் நாட்டில் திருவாசகம் இறந்தவர்களின் வீட்டில் பாடப்படும் பாடலாகத் தான் இன்றும் பார்க்கப்படுவது வருத்ததிற்குரியது. இந்நிலை மாறவேண்டும்.” என்று கூறினார்.

முன்னதாக திரு.பால ரமணி (முதல் நிலை நிகழ்ச்சி அமைப்பாளர் தூர்தர்ஷன்) சிறப்புரை ஆற்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

பிறகு கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் வெகு சிறப்பாக திருமுறை பாடல்களை பாடி மக்களை மகிழ்ச்சி பிரவாகத்தில் ஆழ்த்தினார்கள். அவர்களுடன் இனைந்து நர்மதா அவர்கள் வயலின் வாசிக்க திரு.மாதேஸ்வரர்ன் மிருதங்கம் வாசித்தார்கள்.


(முக்கிய சொற்பொழிவுகள் மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சி வேறொரு பதிவில் அளிக்கப்படும்)
……………………………………………………………………………………….
அடுத்த பதிவில் :
சைவத் திருமுறைகளில் ஒளிந்திருக்கும் பீஜாக்ஷர மந்திரம். ஆச்சரிய தகவல்!

6 thoughts on “இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

  1. அருமையான பதிவு சுந்தர் !

    தமிழிசை — இதன் பெருமை சொல்ல சொல்ல தித்திக்கும் அமுதமாகும்…

    எனக்கு வரலாற்றில் , முக்கியமாக தமிழர் வரலாற்றில் பெரிய ஈடுபாடு உண்டு …. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி தமிழர் வரலாற்றை அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதிய பல வரலாற்று புத்தகங்கள் பல சேகரித்தும் படித்தும் வருகிறேன் …

    உலகிலேயே சிறந்த இசை நம் தமிழிசை என்று சொன்னால் அது மிகை ஆகாது ..அதன் தாக்கம் தான் என் அருமை புதல்விக்கு “தமிழிசை” என்று பெயரிட்டுள்ளேன் !!
    திருச்சியில் நடந்த என் மகளின் பெயர் சூட்டுவிழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு நன்றி அட்டை கொடுத்தேன் .. ஒரு பக்கம் நன்றி வாசகங்களும் , அதன் பின் பக்கம் தமிழிசை என்றால் உண்மையில் தெரியாத பல பேருக்கு ஒரு விளக்கம் தரும் விதமாக கீழ் வரும் வாசகங்களை எழுதி அச்சடித்து கொடுத்தேன் ……
    அதை படித்து பல பேர் என்னிடம் வந்து சொன்னது

    “தமிழிசை க்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா ? தமிழ் ல வர பாட்டு தான் தமிழிசை ..இத ஏன் நீ மகளுக்கு பெயரா வெச்ச னு யோசிகிச்சுட்டு இருந்தேன் !!”
    ……அதை நம் தள வாசகர்களுக்கும் தர விரும்புகிறேன் …

    நன்றி!
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    “ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி “ – அப்படி பட்ட தமிழ்க்குடியில் , தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை “தமிழிசை” ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டு முதல் தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும்.

    உலகிலேயே மிக பழமை வாய்ந்த சங்கத்தமிழானது -(அ) இயற்றமிழ் (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென , மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையான வழக்கல்ல.

    சங்கம் மருபிய நூலான சிலப்பதிகாரம் மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றி, தமிழிசைச் சொற்களுக்கு பல விரிவான விளக்கங்கள் உள்ளன. தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், காரைக்கால் அம்மையார் பாடல்களும், பன்னினு ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. பின்னாளில்தோன்றிய அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். இதில் உள்ள இசைத்தாளங்கள் தனித்தன்மை பெற்றவை.

    1. தங்களின் தமிழார்வத்துக்கு பாராட்டுக்கள்!

      நல்ல தகவலுக்கு நன்றிகள்!!

      – சுந்தர்

  2. இது போன்ற நிகழ்ச்சிகலில் பங்கேற்க எனக்கும் மிக்க ஆசை .
    ஆனால் அதற்க்கான பாக்கியம் கிடைக்கவில்லை .தங்களின் இந்த பதிவின் மூலம் நான் பாக்கியசாலி . நேரில் பார்த்து கேட்டு ரசித்தது உணர்கிறேன் .

    நன்றி ஜி .

  3. பன்னிரு திருமுறை இசை விழாக்கு நேரில் சென்றது போல உள்ளது.

    மூச்சு தலையெழுத்தை மாற்றும். எப்படி?
    பீஜாக்ஷர மந்திரம் என்றால் என்ன ?

    அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

    நன்றி.

  4. அருமையான பதிவின் மூலம் எங்கள் அனைவரையும் விழாவில் பங்கேற்க வைத்தமைக்கு மிக்க நன்றி !!!

    படிக்கும்போதே இவ்வளவு பரவசம் என்றால் நேரில் அதை அனுபவித்தவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று உணர முடிகிறது !!!

    தொடரட்டும் உங்கள் திருப்பணி !!!

    வாழ்க வளமுடன் !!!

  5. பதிவை படிக்கும் பொழுது நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தாங்கள் தொகுத்து அளித்ததது ஈசனின் சித்தம். மிகவும் பிரமாதமாக உள்ளது. அதுவும் மாணிக்க வாசகர் தன்னை நாயேன் என்று கூறியதன் விளக்கம் சுபெர்ப் . இந்த வருடம் இந்த நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறும். கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

    தேங்க்ஸ் எ lot for திஸ் article .

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *