பெருமையும் பழமையும் வாய்ந்த ஒரு மொழியை கட்டிக்காப்பது நமது கடமை. நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது பிரிட்டிஷார் மட்டுமல்ல. இங்குள்ள, திராவிடக் கட்சிகளும் தான். வெள்ளையனாவது நம்மை பிரித்தாண்டது அவனிடம் அடிமைப்பட்டு கிடக்கும்போது தான். ஆனால் திராவிடக் கட்சிகள் இன்றளவும் ஆரியம், திராவிடம் என்ற போர்வையில் அதைத் தான் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். தமிழுக்கு ஆதரவு என்றால் சமஸ்கிருதத்தை எதிர்க்க வேண்டும் என்பது முட்டாள்தனமான வாதம். ஒரு வகையில் அறியாமை. தமிழ் நமது தாய்மொழி. ஆனால், சமஸ்கிருதம் தந்தை மொழி. தமிழ் ஒரு கண் என்றால் சமஸ்கிருதம் மற்றொரு கண் என்பதை பல சான்றோர்களே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். ஆனால் சமஸ்கிருதத்திற்கு எதிராக இன்று சிலர் ஓட்டுப்பொறுக்கும் பேராசையில் கொடி பிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் அறியாமையை நினைத்து நம்மால் சிரிக்கத்தான் முடிகிறது.
அழியும் நிலையில் உள்ள அந்த மொழி முற்றிலும் அழிந்துவிடக்கூடாதே என்ற நோக்கில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுகிறது. இது இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இது தெரியாமல் சிலர் சமஸ்கிருத திணிப்பு ஆ… ஊ… என்று கூப்பாடு போடுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கும், அவர்களது பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதில் இங்கே யாருக்கும் போட்டியில்லை. மக்களின் இன, மொழி உணர்வுகளை தூண்டி விடும் அறிக்கைகளை யார் முதலில் விடுவது என்கிற போட்டி தான் நிலவுகிறது. “நாம் பேசாமல் இருந்தால் எங்கே அவர் பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவாரோ…. இவர் பெயரை தட்டிக்கொண்டு போய்விடுவாரோ…” என்கிற ஒரு வித குருட்டுத்தனமான பயத்தில் தான் இப்பொதெல்லாம அறிக்கைகள் விடப்படுகின்றன. லெட்டர்பேட் கட்சி தலைவர்கள் அறிக்கை விடுவது இருக்கட்டும். ஆனால், சமஸ்கிருதத்தை கட்டிக் காத்து அதை அழியாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் சகல வலிமையையும் படைத்த ஒருவரே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் எனும்போது, எங்கே போய் முட்டிக்கொள்வது? தட்டிக்கேட்கவும் சுட்டிக்காட்டவும் மகா பெரியவரோ வாரியார் சுவாமிகளோ இல்லாதை தைரியம் தான் இது…!
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சமஸ்கிருதம் பயின்றவர். பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் முன்னுரையில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
“இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்தும் அதன் மக்களும் கடைப்பிடித்தால் நிச்சயம் மேன்மையுறலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆங்கில கவர்னர் ஜெனரல் சமஸ்கிருதத்தை மதித்த அளவிற்கு கூட நம்மவர்கள் மதிப்பதில்லையே..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்து வைத்தியர் கற்கக்கூடிய அளவு இந்த நாட்டு பண்பாட்டோடு ஒன்றிப்போயிருந்த ஒரு மொழி நமக்கு அன்னியமாம். கரிகாலன் போன்ற தமிழ் மன்னர்களால் அவர்கள் குடும்பத்துடன் செய்யப்பட்ட வேத வேள்விகள் அன்னியமாம். ஆனால் வரலாற்றடிப்படையற்ற ஒரு இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட போலி தனித்துவத்தை நம் வரலாறென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். சமஸ்கிருதம் அன்னியம் என்னும் எண்ணப்போக்குதான் அன்னியமே ஒழிய சமஸ்கிருதம் அன்னியமல்ல.
தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவை இல்லை.
தமிழர் பண்பாட்டில் சமயம் பண்டை காலம் முதல் முக்கிய பகுதி பெற்றிருந்ததல்லவா? அப்பகுதியில் சமஸ்கிருதத்தை அந்நியமாக தமிழ் என்றென்றும் கருதியதில்லை ஏனெனில் வேதநெறியும் சமஸ்கிருதமும் தமிழருடையது தமிழ் பண்பாட்டில் ஒரு பங்கு.
இதோ ஒரு புறப்பாடல்:
“நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது,
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ-ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!” (புறம் 166:1-9)
வேதநெறிக்கு மாறுபட்டார் வலிமை குன்றும் படியாக, அவர்கள் மெய்போலக் கூறும் பொய் மொழிகளை அடையாளம் கண்டு உண்மையை உணர்ந்து வேத வேள்வித்துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழ் அரசனான பூஞ்சாற்றுர்க் கௌணியன் விண்ணந்தாயனை வியக்கிறது புறநானூறு. இது ஆவூர் மூலங்கிழார் பாடல். ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள். (‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி.)
யானையைப் பழக்கும் தமிழக பாகர் சமஸ்கிருத மொழியில் யானையைப் பழக்கியது குறித்து கூறுகிறது முல்லைப்பாட்டு.
நமது ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு உண்மையாக இருப்பின் குதிரையைப் பயிற்றுவிப்பவர்கள் அல்லவா சமஸ்கிருத மொழி பயன்படுத்த வேண்டும்? இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நிய மொழியையா பயன்படுத்துவார்கள்? செங்காட்டங்குடி கிராமத்து அந்தணனல்லாத இளைஞனுக்கும் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. தமிழரசர்களின் யானைப் பாகர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கேற்ற அளவில் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது.
இராமாயணத்தை ‘தெரிந்து’ வைத்துக் கொள்ள செவிவழி அறிவு போதும் தான். ஆனால் கம்ப இராமாயணம் போன்ற காவியத்தை படைக்க சமஸ்கிருத மூலத்தை படிக்கவே செய்யாமல் செவிவழி இராமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மைப்படுத்த வேண்டாமே.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதி ‘வருகின்ற ஹிந்துஸ்தான’த்தைப் பாடுவார்,
“மெய்மை கொண்ட நூலையே – அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்களெற்றுவாய் வா வா வா”
புறநானூறு முதல் பாரதி காலம் வரை எதை தமிழ் சமுதாயம் அந்நியமென உணர்ந்தது என்பது புரியும். யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என பாரதி கூறும் சமய ஒருமை ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத சிந்தனை மரபிலிருந்தே நம் அனைவருள்ளும் ஊறிப்போயிருக்கும் விஷயம்.
சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்களின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்றிருக்கலாம். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்கள் கூட சாதியத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சமஸ்கிருத அறிவு கொண்டு சாதியம் வேரறுக்கப்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணங்களாக நம்முன் திகழ்பவர்கள் டாக்டர்.அம்பேத்காரும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும். மாறாக சமஸ்கிருத வெறுப்பை வைத்து சமுதாய முன்னேற்ற பாவ்லாக்கள் காட்டி பிழைப்பு நடத்தும் தெருக்கூத்து கும்பல்களால் ஏற்படும் இறுதிவிளைவு திண்ணிய நிகழ்வுகள்தான் என்பதும் உண்மை.
டாக்டர் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ நாராயணகுரு ஆகிய மூவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கரும், ஸ்ரீ நாராயண குருவும் சாதியத்தின் விளைவுகளை மிகக்கடுமையாக தங்கள் வாழ்வில் அனுபவித்தவர்கள். இம்மூவருமே பாரத தத்துவ மரபுகளையும், வரலாற்றையும் நன்கு ஆராய்ந்தறிந்தவர்கள். இவர்களது பாரத சமுதாயம் மற்றும் மரபுகள் குறித்த ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் வடமொழிக்கு அளித்த ஏற்பு குறிப்பிடத்தக்க விஷயம்.
மிகத்தெளிவாகவே சுவாமி விவேகானந்தர், சமூக நீதிக்கான வழிமுறையாக சமஸ்கிருதம் படிப்பதை முன்வைக்கிறார். தாழ்த்தப்பட்ட அந்தணரல்லாதவர்களுக்கு அவர் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள்; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி.‘
ஸ்ரீ நாராயணகுருவின் பிரத்யட்ச உதாரணம் நம்முன் உள்ளது. நினைத்துப்பாருங்கள். ஒரு மிகவும் தாழ்த்தப்பட்டு தம் சாதியின் பெயரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மேதை உள்ளம் டாக்டர்.அம்பேத்கரது. இந்த தேசத்தில் சமுதாய தாழ்விற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்தறிந்தவர் அவர். ஹிந்து மதத்தின் மீது மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர் டாக்டர்.அம்பேத்கர். புராணங்களை மிகக் கேவலமானவையாக காட்டி அவர் எழுதிய எழுத்துக்களை நாம் அனைவரும் அறிவோம். அதே டாக்டர்.அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராகவும், அதற்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் போராளியாகவும் சமஸ்கிருதத்தை ஏன் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றார் ?
அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) “இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்.” என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு – அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் ‘எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி’ கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பாரத தேச ஒற்றுமையின் அடையாளமாகவும் அதன் உள்ளீடாகவும் சமஸ்கிருதம் விளங்குகிறது” என்று கூறிய K.R.நாராயணன் பிறப்பால் அந்தணரல்ல. அல்லது “சம்ஸ்கிருதம் ஒரு இனத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ சொந்தமான மொழியல்ல மாறாக அனைத்து பாரதத்திற்கும் பொதுவான மொழி” என்று கூறிய பக்ருதீன் அலி அகமது நிச்சயமாக பிறப்பால் அந்தணரல்ல.
சமஸ்க்ருதத்தின் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி காளிதாசன் அந்தணன் அல்ல. மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மறைகளை தொகுத்தளித்தவர். சமஸ்கிருதம் இந்த தேசத்தின் மொழி. சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும்.
சமஸ்கிருதம் ஒரு ஞானமொழி – சாலமன் பாப்பையா!
அவ்வளவு ஏன்… பட்டிமன்றங்களில் வெளுத்து வாங்கும், திருக்குறளுக்கு தினமும் விளக்கம் தரும்.. பேராசிரியர் சாலமன் பாப்பைய்யா அவர்கள் சமஸ்கிருதம் பற்றி சொல்வதை கேளுங்கள்…
டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.
எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.
தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.
எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.
அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!
ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.
தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன். – 2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து.
பல செல்வங்கள் அடங்கியது சமஸ்கிருதம் – டாக்டர் அப்துல் கலாம்
இந்திய விண்வெளி விஞ்ஞானத்தின் தந்தையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர்.அப்துல் கலாம் சமஸ்கிருதம் பற்றி கூறுவது என்ன தெரியுமா?
தொடக்கப் பள்ளியிலும் செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் ஒரு சமஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்று முறை சந்தியாவந்தனம் செய்வார். பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளக்ஸ் எண்களின் கோட்பாடுகளை கற்றுக் கொடுத்த தோதாத்ரி அய்யங்காரும் ஒரு சமஸ்கிருத அறிஞரே.
இந்த இரு ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும் அறிவியலும்தான். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சமஸ்கிருத புலமை. இயற்கை, விவசாயம் உட்பட பல விஷயங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்துவரும் கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சமஸ்கிருத அகடமியை சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்து சமஸ்கிருதம் பற்றி அறிந்திருக்கிறேன்.
நான் சமஸ்கிருத நிபுணர் அல்ல. ஆனால் என் நண்பர்களில் பலர் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்கள். நமது பண்டைய சமஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம்.
குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படை பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வண வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சமஸ்கிருதம் சரளமாக பயன்படுத்தப்படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (கிரிப்டாலஜி). இப்படி பல செல்வங்கள் அடங்கியது சமஸ்கிருதம்.
நாட்டின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் சமஸ்கிருத இலக்கியங்களை கண்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டும். இந்த நூல்களை ஒலி, ஒளி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும் நீண்ட காலங்களுக்கும் இந்த செல்வத்தை பாதுகாக்கலாம்.
வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள் இதிகாசங்களை உருவாக்கியவர்கள். இவர்களது வாழ்க்கை வரலாறுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மகரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சமஸ்கிருதத்தில் மதிப்பு சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கி கலந்துரையாடுமாறு செய்ய வேண்டும். இது மாணவர்கள் சமஸ்கிருதத்திலும் வேதத்திலும் புலமையை வளர்த்துக் கொள்ள துணை புரியும்.
பால்ய வயதில் நாம் சமஸ்கிருதம் கற்றதுண்டு. ஆனால் அதற்கு பிறகு தொடர்பு விட்டுப்போய்விட்டது. தற்போது மீண்டும் முழு மூச்சில் சமஸ்கிருதம் கற்க முடிவு செய்திருக்கிறோம். நீங்களும் சமஸ்கிருதம் கற்க விரும்பினால் இம்மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகியுள்ள மேற்கண்ட விளம்பரம் உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். மிக மிக குறைந்த செலவில் ரூ.300/-க்கு சமஸ்கிருதம் கற்கலாம்.
சமஸ்கிருதம் மட்டுமல்ல, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அரபி, என எத்தனை மொழிகளை கற்று கொள்ளமுடியுமோ அத்தனை மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புத்தாண்டும், “இந்த வருடம் நான் ஒரு புதுமொழியை கற்றுக்கொள்வேன்” என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இருமொழி கற்றவன் இரு மனிதனுக்கு சமம். இன, மொழி ரீதியான துவேஷ கருத்துக்களை பரப்பி, தங்கள் வாரிசுகளை பல மொழிகளை படிக்கவைத்துக்கொண்டு சராசரித் தமிழன் மட்டும் நொண்டி நொண்டி நடக்கவேண்டும் என்று விரும்பும் அரசியல்வியாதிகளிடமிருந்து விலகி நில்லுங்கள்.
தயாரிப்பில் உதவி : அரவிந்தன் நீலகண்டன் > திண்ணை.காம், vijayastreasure.blogspot.in > விஜயபாரதம் 07.09.2012, தினமலர் – கல்விமலர்
END
சமஸ்க்ருத மொழி பற்றி அக்க்ஷர சுத்தமாக ஏகப்பட்ட மேற்கோள் காட்டி பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி. நமக்கு சமஸ்க்ருதம் தெரிந்தால் ஸ்லோகங்களை அழகாக சொல்லலாம். ஹிந்தியும் சம்ஸ்க்ருதமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும்.
எனக்கு ஹிந்தி தெரியும் என்பதால் சமஸ்க்ருத சுலோகம் சொல்வதற்கு எளிதாக இருக்கும்.
நாம் பல மொழிகளை கற்று வைப்பதால் ஒன்றும் தப்பில்லை. எனக்கும் சமஸ்க்ருதத்தில் ஒரு டிப்ளோமோ வாங்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் உள்ளது.
இந்த பதிவு அழகிய உயிரோட்டமுள்ள பதிவு.
நன்றி
உமா
நன்றி சுந்தர்
நல்ல சமஸ்காரங்கள் உருவாகிட ……….நமக்கு சிறு வயதிலிருந்தே பள்ளியில் சொல்லிதந்திருக்க வேண்டும். சரி, இனியாவது நாமும் கற்று, முக்கியமாக இனிவரும் குழந்தைகள்
கண்டீப்பாக கற்க ஆவன செய்தல் வேண்டும்.
பூமிநாதன்
பிறமொழி கற்பதில் ஒரு தவறும் இல்லை ….ஆனால் அதற்கு முன் அவர்கலொட்ய தாய் மொழியை பிழை இல்லாமல் ஏலதுவும் , படிக்கவும் , பேசவும் புலன் பெற்று இருக்க வேண்டும் ….
கடவுள் படைப்பில் எதவும் தளந்து / உய்ரிந்துது இல்லை …ஒவ்வுன்ற்கும் ஒரு காரணம் இற்கும் …..நம் மொழியில் இந்த இலக்கியம் / படைப்பு இல்லை அதுநாள் நம் மொழி குறைந்ததில்லை அந்த மொழி உயிர்ந்ததுமில்லை ….உலகில் எவளோ இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளது அதில் அல்லிந்திகில்லாம் …..தற்போது நமோட உள்ள சைவ திருமுறைகள் கிடைத்து வெறும் கொஞ்சம் தான் மிதி எல்லாம் கரயன் அரித்விட்டது இது போல் எத்தனை நம் தமிழ் மொழி படைப்புகள் அழிந்து விட்டது ….குமரி கண்டம் கடல் கொண்டு போனது போல் ……
மற்ற மொழிகள் கற்பதில் தவறேதும் இல்லை..
எட்டு மொழிகள் தெரிந்த பாரதி தமிழ் போல் அமுதமொழி வேறில்லை என பரிந்துரை செய்கிறார்..
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
எது எப்படியோ ….? தன்னை, வாழ்வை, வரலாற்றை அறிவதற்கு பல மொழி கற்பது கை கொடுக்கும்…. !