இதை நீங்கள் ஏற்கனவே எங்காவது படித்திருக்கலாம். குருவைப் பற்றி நாம் அறிந்தது கையளவு. அறியாதது கடலளவு. மூழ்காமலே கிடைத்த முத்துக்களில் ஒன்று இது. இருப்பினும், மறுபடியும் படித்தால் சலிக்குமா என்ன?
(காஞ்சியில் நாம் சந்தித்த பெரியவாவின் மாணவருடனான அந்த சந்திப்பை இன்னும் சற்று மெருகூட்டி அடுத்த வாரம் அளிக்கிறோம். பொறுத்தருள்க!)
=============================================================
“பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து. கையிலே எவ்வளவு சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?”
பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்; ஒரே மகள் காமாட்சி.
அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவில்லை. உபன்யாசம் பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்து அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வார். ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்!
இருபத்திரண்டு வயதான காமாட்சிக்கு திடீரெனத் திருமணம் நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம்.மணமகன், ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.
தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள்: ‘‘பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து. கையிலே எவ்வளவு சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?’’
கனபாடிகள் பவ்யமாக, ‘‘தர்மு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன். சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே!’’ என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.
“அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்? நகைநட்டு, சீர்செனத்தி, பொடவை, துணிமணி வாங்கி, சாப்பாடு போட்டு எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும் பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடு பண்ணுங்கோ!” _ இது தர்மாம்பாள்.
இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.
உடனே தர்மாம்பாள், “ஒரு வழி இருக்கு! சொல்றேன், கேளுங்கோ. கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ. கொஞ்சம் பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ. அங்கே ஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு, கல்யாணப் பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ… ஒங்களுக்கு ‘இல்லே’னு சொல்ல மாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன்.
அவ்வளவுதான்… ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது. “என்ன சொன்னே… என்ன சொன்னே நீ! பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது… என்ன வார்த்த பேசறே நீ!” என்று கனபாடிகள் முடிப்பதற்குள்,
“ஏன் என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குருதானே! குருவிடம் யாசகம் கேட்டால் என்ன தப்பு?”’ என்று கேட்டாள் தர்மாம்பாள்.
“என்ன பேசறே தர்மு! அவர் ஜகத்குரு! குருவிடம் நாம ‘ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ‘தான’த்தை (பணத்தை) யாசிக்கப்படாது” என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள் ‘மடிசஞ்சி’யில் (ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளிப் பை) தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார் கனபாடிகள்.
ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்! ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார் ராமநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின் கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்தை கனபாடிகள் அடைந்ததும், அவர் கையிலிருந்த பழத் தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்து விட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், “ஐயா.. ஐயா… அந்த தட்டிலே கல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்டி எடுங்கோ!” என்று சொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.
அதற்குள் மகா ஸ்வாமிகள், கனபாடிகளைப் பார்த்து விட்டார்! ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், “அடடே! நம்ம கரூர் ராமநாத கனபாடிகளா! வரணும்.. வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?” என்று விசாரித்துக் கொண்டே போனார்.
“எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது” என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “ஆத்திலே… பேரு என்ன… ம்… தர்மாம்பாள்தானே? சௌக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோட அப்பா சுப்ரமண்ய கனபாடிகள்! என்ன, நான் சொல்ற பேரெல்லாம் சரிதானே?”’ என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள், ‘‘சரிதான் பெரியவா. என் ஆம்படையா (மனைவி) தர்முதான் பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா…”’ என்று குழறினார்.
“அப்போ, நீயா வரல்லே?!”- இது பெரியவா.
“அப்படி இல்லே பெரியவா. பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சுருக்கு. தர்முதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு, பத்திரிகையை சமர்ப்பிச்சு…” என்று கனபாடிகள் முடிப்பதற்குள், “ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா” என்று பூர்த்தி பண்ணி விட்டார் ஸ்வாமிகள்.
பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா, “ஒனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக் கொடுப்பியா?” என்று கேட்டார்.
“அஸைன்மெண்டுன்னா பெரியவா?” – இது கனபாடிகள்.
“செய்து முடிக்க வேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம். எனக்காகப் பண்ணுவியா?”
பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தை விட்டு விட்டார் கனபாடிகள்! குதூகலத்தோடு, “சொல்லுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்!” என்றார்.
உடனே பெரியவா, ‘‘ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட் கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலி கடையநல்லூர் பக்கத்துலே ஒரு அக்ரஹாரம்! ரொம்ப மோசமான நிலையில இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம செத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பாத்ததுல பெருமாள் கோயில்ல ‘பாகவத உபன்யாசம்’ பண்ணச் சொன்னாளாம். ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் இங்கே வந்தார். விஷயத்தைச் சொல்லிட்டு, ‘நீங்கதான் ஸ்வாமி ‘பாகவத உபன்யாசம்’ பண்ண ஒருத்தரை அனுப்பி உதவி பண்ணணும்’னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார். நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணிட்டு வரணும். விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும். கேட்டுக்கோ. சிலவுக்கு மடத்துல பணம் வாங்கிக்கோ. இன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை (வெகுமானம்) எல்லாம் அவா பாத்துப் பண்ணுவா. போ… போ. போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ!’’ என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம் பேச ஆரம்பித்து விட்டார் ஸ்வாமிகள்.
அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள் மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.
ஊருக்கு சற்றுத் தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள் கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஒரு ஈ காக்காகூட கனபாடிகளை வந்து பார்க்கவில்லை! ‘உபன்யாசத்தின்போது எல்லோரும் வருவா’ என அவரே தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
மாலை வேளை. வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து ஸ்ரீமத்பாகவத உபன்யாசத்தை காஞ்சி ஆசார்யாளை நினைத்துக் கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே _ ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்!
உபன்யாசம் முடிந்ததும், ‘‘ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரல்லே?’’ என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.
அதற்கு பட்டர், ‘‘ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டு பட்டுக் கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை. அதை முடிவு கட்டிண்டுதான் ‘கோயிலுக்குள்ளே நுழைவோம்’னு சொல்லிட்டா. உபன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல ஊர் இப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்’’ என்று கனபாடிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினார்.
பட்டரும், மெய்க்காவலரும், பெருமாளும் மாத்திரம் கேட்க ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார் ராமநாத கனபாடிகள். பட்டாசார்யார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார்! மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம் சில்லறையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார்! பட்டர் ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக் கனபாடிகளிடம் அளித்து, ‘‘ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிடுத்து! மன்னிக்கணும்! ரொம்ப நன்னா ஏழு நாளும் கதை சொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனை பண்ணலாம்! பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்தி விட்டுடறேன்’’ என கண்களில் நீர் மல்க உருகினார்!
திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலும் வந்து வழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் கனபாடிகள்.
அன்றும் மடத்தில் ஆசார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள்.
‘‘வா ராமநாதா! உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா? பேஷ்… பேஷ்! உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோ? சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?’’ என்று உற்சாகமாகக் கேட்டார் ஸ்வாமிகள்.
கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், ‘‘இல்லே பெரியவா. அப்படி எல்லாம் கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே ஏதோ பிரச்னையாம் பெரியவா. அதனாலே கோயில் பக்கம் ஏழு நாளும் யாருமே வல்லே’’ என்று ஆதங்கப்பட்டார் கனபாடிகள்!
‘‘சரி… பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?’’
‘‘ரெண்டே ரெண்டு பேர்தான் பெரியவா! அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு’’ _ இது கனபாடிகள்.
உடனே பெரியவா, ‘‘இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்’’ என்றார்.
‘‘வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா! ஒண்ணு, அந்தக் கோயில் பட்டர். இன்னொண்ணு கோயில் மெய்க்காவல்காரர்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்று வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
‘‘ராமநாதா.. நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன்தான் கேட்டான்! ஒனக்கு பாரு. ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனைவிட நீ பரம பாக்யசாலி’’ என்று பெரியவா சொன்னவுடன், கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
‘‘அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லை, என்ன?’’ என்றார் பெரியவா.
‘‘அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர் ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவா கெடச்சுது பெரியவா’’ _ கனபாடிகள் தெரிவித்தார்.
‘‘ராமநாதா! நான் சொன்னதுக்காக நீ அங்கே போயிட்டு வந்தே. உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணணும். இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு!’’ என்று கூறி, காரியஸ்தரைக் கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளுக்கு சால்வை போர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்!
‘‘இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒன் குடும்பமும் பரம சௌக்கியமா இருப்பேள்’’ என்று உத்தரவும் கொடுத்தார் ஸ்வாமிகள்.
கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது! ‘‘பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை.. பெண் கல்யாணம் நன்னா நடக்கணும். அதுக்கு… அதுக்கு…’’ என்று அவர் தயங்கவும், ‘‘என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு! விவாகத்தை சந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்! ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா!’’ என்று விடை கொடுத்தார் ஆசார்யாள்!
ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டு வாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்!
‘‘இருங்கோ, இருங்கோ.. வந்துட்டேன்..’’ _ உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்.
வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள். காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு, ‘‘இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோ’’ என்று கனபாடிகளை அழைத்துப் போனாள்.
பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள். அங்கே ஸ்வாமிக்கு முன் ஒரு பெரிய மூங்கில் தட்டில், பழ வகைகளுடன் புடவை, வேஷ்டி, இரண்டு திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது!
‘‘தர்மு… இதெல்லாம்…’’ என்று அவர் முடிப்பதற்குள், ‘‘காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதா இன்னிக்குக் கார்த்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்து வெச்சுட்டுப் போறா! ‘எதுக்கு?’னு கேட்டேன். ‘ஒங்காத்து பொண் கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச் சொன்னா’னு சொன்னா!’’ என்று முடித்தாள் அவர் மனைவி!
கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது! ‘‘தர்மு, பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்து ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்த தெய்வம் இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு!’’ என்று நா தழுதழுத்தவர், ‘‘கட்டுலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ?’’ என்று கேட்டார். ‘‘நான் எண்ணிப் பார்க்கலே’’ என்றாள் அவர் மனைவி.
கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.
பதினைந்தாயிரம் ரூபாய்!
அந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ‘ஹோ’வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்!
(நன்றி : சக்தி விகடன் | எஸ்.ரமணி அண்ணா)
=============================================================
இறைவனை நீங்கள் பார்ப்பது இருக்கட்டும். இறைவன் உங்களை பார்க்கவேண்டுமா?
நாம் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நம்மை சுற்றி இன்றும் எத்தனையோ கோவில்களில் தினசரி சொற்பொழிவுகளும், உபன்யாசங்களும் நடந்துகொண்டு தானிருக்கிறது. ஒரு வகையில் அது நாம் செய்த பாக்கியம். அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை.
நீங்கள் ஏதேனும் கோவிலுக்கு போகிறீர்கள் என்றால், அந்தக் கோவிலில் சொற்பொழிவோ அல்லது நாமசங்கீர்த்தனமோ நடந்துகொண்டிருந்தால், சன்னதிக்கு சென்று சுவாமியை தரிசிப்பதற்கு பதில் தயவு செய்து அந்த சொற்பொழிவை அமர்ந்து கேளுங்கள். குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது அமர்ந்து கேளுங்கள். அதற்கு பிறகு நீங்கள் சுவாமியை தரிசிக்காமல் வீட்டுக்கு புறப்பட்டால் கூட பரவாயில்லை. கருவறையில் நீங்கள் சுவாமியை தரிசனம் செய்யும்போது கிடைக்கும் அருளை விட பன் மடங்கு உங்களுக்கு அருள் கிடைக்கும். சுவாமியை தரிசனம் செய்தால் நீங்கள் தான் சுவாமியை பார்க்கிறீர்கள். ஆனால் சொற்பொழிவு கேட்கும்போது சுவாமி உங்களை பார்ப்பார்.
சன்னதிக்கு சென்று சுவாமியை தரிசிக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சொற்பொழிவை கேட்பதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? நாம் தொடர்ந்து ஆதரவளித்தால் தானே இது தழைக்கும்? சொற்பொழிவை செய்துகொண்டிருக்கும் அந்த அடியவருக்கு நாம் கொடுக்கும் சம்பவானையைவிட சற்று பொறுமையாக அமர்ந்து கேட்டு நாம் அளிக்கும் ஆதரவு தான் மிக மிக முக்கியம்.
இங்கெல்லாம் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட்டால் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும், இன்னும் அமரக்கூடாத இடங்களிலும் அமரவேண்டிய நிலை வராது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் நாம் சைதை காரணீஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது, அங்கே ஏதோ சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சன்னதிக்குள்ளும் பிரகாரத்திலும் அத்தனை கூட்டம். நெருக்கியடித்து, முட்டிமோதி… அட சுவாமி தரிசனம் செய்கிறார்களாம்…!
ஆனால் வெளி பிரகாரத்தில் யாரோ ஒருவர் ‘பெரியபுராணம்’ சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். எத்தனை பேர் அதை அமர்ந்து கேட்கிறார்கள் என்று நீங்களே பாருங்களேன்….
அடுத்த முறை இப்படி ஒரு காட்சியை நீங்கள் கண்டால், சன்னதிக்கு சென்று சுவாமியிடம் அப்ளிகேஷன்கள் போடுவதை விடுத்து இங்கே அமர்ந்து ஒரு அரைமணி நேரம் சொற்பொழிவு கேளுங்கள். நீங்கள் இறைவனிடம் என்ன கோரிக்கை வைக்கவிருந்தீர்களோ அது தானாக நிறைவேறும்.
பல சொற்பொழிவுகளில் ஒரு நபர் ஆடியன்ஸாக நாம் அமர்ந்து கேட்டு ரசித்து அந்த சொற்பொழிவு முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட சொற்பொழிவாளரை உற்சாகப்படுத்தி இருக்கிறோம். (இது தொடர்பாக நாம் கார்த்திகை தீபத்தின் போது அளித்த பதிவை அவசியம் பார்க்கவும். ஒரு மாலைக்கு கிடைத்த மரியாதை!)
மேற்கூறிய கனபாடிகள் பெண்ணுக்கு திருமண உதவி கிடைத்த சம்பவத்தில் மகா பெரியவா கடையநல்லூர் பக்கம் சென்று அந்த கனபாடிகளை பாகவதம் சொல்லச் சொன்னதற்கு காரணம் இருக்கிறது. பாகவதம் சொல்வது மிக மிகப் பெரிய புண்ணியம். அதை கேட்பது அதை விட பெரிய புண்ணியம். நிச்சயம் அந்த ஊரில் அதற்கு பின்னர் பட்டர் குறிப்பிட்ட பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். கனபாடிகள் பாகவத ப்ரவசனம் செய்த புண்ணியம் தான் அவரது பெண்ணின் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்த உதவியது. அதற்கு தேவையான பொருளுதவியை வீடு தேடி வரவழைத்தது. மேற்கூறிய சம்பவத்தில் வரதராஜ பெருமாளுக்கும் பாகவத ப்ரவசனம் செய்த அந்த கனபாடிகளுக்கும் இடையே ‘மகா பெரியவா’ ஒரு பாலம் என்பதே நம் கருத்து.
======================================================================
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
======================================================================
Also check from our archives…
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=================================================================
‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
================================================================
Also check :
Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
=================================================================
[END]
குரு வாரத்தில் குருவின் மகிமையைப் படிக்க படிக்க கண்கள் குளமாயின . சுவாமிகள் நம்மிடம் நேரில் பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மிகவும் உயிரோட்டமான பதிவு. நடமாடும் தெய்வத்திற்கு தெரியாதா தனது அடியவருக்கு எப்பொழுது என்ன கொடுக்க வேண்டும் என்று.
உபன்யாசம் என்று படிக்கும் பொழுதே எனக்கு, தாங்கள் குன்றத்தூரில் கார்த்திகை தீபமன்று உபன்யாசம் கேட்டு அவரை கௌரவித்தது என் ஞாபகத்திற்கு வந்தது.
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு
நாமும் எங்கேனும் உபன்யாசம் நடந்தால் கேட்டு நன்மை பெறுவோம் மகா பெரியவா படத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அருமை.
குருவே சரணம்
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ .. மகா பெரியவா கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
மகா பெரியவா கருணையே கருணை! இந்த பதிவை படித்தவுடன் மெய் சிலிர்த்து விட்டது. குருவே சரணம்!
பதிவிட்டைமைக்கு மிக்க நன்றி சுந்தர் சார்.
நம் மஹா சுவாமிகள் கருணை நம் பாரத தேசம் நன்றாக இருக்க காரணம். அவர் திரு பாதம் பணிந்தால் போதும். நம் குறை எல்லாம் தீரும்.
குரு தரிசனம் காண கோடி கண் வேண்டும்.
என் தாய் என்னை விட்டு கைலாசம் சென்று விட்டார். மஹா சுவாமிகள் தரிசனம் காண என் தாய் தரிசனம் கண்ட நிம்மதி.
நன்றி.
குருவே துணை.
கே. சிவசுப்ரமணியன்
நமசிவாயம்.உண்மை உண்மை கண்ணீரோடுதான் படித்து முடித்தேன்.
குருவே சரணம்……. குருவின் மகிமையைப் படிக்கும் போது தாங்கள் கூறியது போலவே கண்கள் குளமாகின்றன………. இன்றும் அவரை சரணடைந்தவர்களை குரு காத்துக் கொண்டிருக்கிறார்………
குரு உபன்யாசம் செய்யும் படம் அருமை….. என்ன நம்மால்தான் அவர்களின் உபன்யாசத்தைக் கேட்க முடியவில்லை………..
இனிமேல் உபன்யாசம் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் நாங்கள் இயன்றவரை உபன்யாசம் கேட்கிறோம்………..
குரு சரணம் சரணம்
குரு தரிசனம் திவ்ய தரிசனம்.
அற்புதம்
அப்பழுக்கற்ற,நிர்மலமான மனதுடன் குருவின் திருவடி சரணடைந்தால், அவர் அருள் நிச்சயம்.
சிறு வயதில் என் பாட்டியுடன் கோயிலில் நடைபெறும் கதாகலாட்சபம் மற்றும் சொற்பொழிவிற்கு சென்று வந்த நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாக உள்ளன.
புண்ணியம் சேர்ப்பதற்கு மேலும் ஒரு வழி காட்டிய
தங்களுக்கு மிக்க நன்றி .
gurunadharukku நான் என்றென்றும் adimai guvarathil இதை படிக்க வாய்த்த sandharpathukku gurunadharukku அனந்த கோடி நமஸ்காரம்
உண்மையாகவே கண்களில் நீர்
ஸத்குருவின் கருணையே கருணை. கண்களில் பரவசத்துடன் கண்ணீர் துளி…….
சுந்தர் அண்ணா..
குருவே சரணம்!
இந்த பதிவை படித்தவுடன் மெய் சிலிர்த்து விட்டது.
மகா பெரியவா கருணையே கருணை!
மிக்க நன்றி அண்ணா.
கண்களில் கண்ணீர்.
குருவின் திருவடி சரணம்
வாழ்க வளமுடன்
நன்றி
வாழ்க வளமுடன்
சுந்தர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சமயம் கிடைக்கும்போது சொற்பொழிவினை ஒலி, ஒளியாக அல்லது ஒலியாக மட்டுமாகவாவது பதிவு செய்து தளத்தில் பதிவிட்டால் அனைவருக்கும் சேரும். தளத்திற்கும் வாசகர் பெருகுவர்.
நன்றி
வணக்கம் சுந்தர். இந்த கதை விஜய் டிவியில் மகா பெரியவா என்ற தொடரில் போட்டார்கள்.ஆனாலும் மீண்டும் படிப்பது சந்தோசமே.அந்த சூரியனுக்கு தெரியாத எப்போது எதை கொடுக்கவேண்டுமென்று . குருவின் திருவடிகளுக்கு சரணம். நன்றி