Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

print
வாசக அன்பர்களுக்கு வணக்கம். ‘திருப்பராய்த்துறை தாருகவனேஸ்வரர்’ சென்ற மாதம் தான் நமக்கு அறிமுகமானார். அதற்குள் இரண்டு முறை அங்கு சென்றுவந்துவிட்டோம். இனி திருச்சி சென்றால் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரரை தரிசிக்காமல் நம்மால் இருக்கவேமுடியாது. நமக்கு அத்தனை நெருக்கமாகிவிட்டார் இத்தலத்து இறைவன். இந்த ஆலய தரிசன பதிவை படியுங்கள். உங்களுக்கும் நெருக்கமாகிவிடுவார்.

dsc00665-23

dsc00891பராய்த்துறைநாதர் நமக்கு எப்படி அறிமுகமானார்?

நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பான். அது தான் தெய்வ குணம்.

செப்டம்பர் மாதம் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள திருச்சிக்கு சென்றிருந்தபோது வயலூர் சென்று சுப்ரமணிய சுவாமியை தரிசித்துவிட்டு பின்னர் குழுமணி அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் உள்ள வியாக்ரபாதீஸ்வரரை தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது, குருக்களிடம் “அருகே ஏதேனும் சிவத்தலம் இருக்கிறதா? தரிசிக்க ஆவலாக உள்ளேன்” என்றோம். அப்போது நேரம் சுமார் முற்பகல் 11.30 இருக்கும். அருகே சுமார் எட்டு கி.மீ. தொலைவில் ‘திருப்பராய்த்துறை’ என்னும் பாடல் பெற்ற தலம் இருப்பதாகவும் நாம் விரைந்து சென்றால் தரிசித்துவிடலாம் என்றும் குருக்கள் கூறினார்.

dsc00885

dsc00875

உடனே ‘திருப்பராய்த்துறை’ விரைந்தோம். நாம் ஒரு ஆட்டோவை பேசிக்கொண்டபடியால் சற்று சௌகரியமாக இருந்தது. கோவில் நடைசாற்றியிருக்கக் கூடாதே என்று வேண்டியபடி தான் சென்றோம்.

திருப்பராய்த்துறை கோவிலை கண்டவுடன் அதன் அழகில் சொக்கிப்போய்விட்டோம். ராஜகோபுரம் முதல் முன்மண்டபம், வெளிப் பிரகாரம், உள் பிரகாரம் வரை அனைத்தும் அத்தனை அழகு.

dsc00665-23

பொதுவாக தில்லை நடராஜர், மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற ஆலயங்களை பார்க்கும்போது நமக்கு அதன் பிரம்மாண்டத்தை பார்த்து பிரமிப்பு தான் ஏற்படும். ஆனால், திருப்பராய்த்துறையை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு வித நெருக்கமான உணர்வு அதாவது அன்னியோன்யம் ஏற்படும் என்பது உறுதி. அவிநாசி அவிநாசியப்பர் கோவிலை அடுத்து “இது நம்ம கோவில்பா…” என்கிற ஒரு நெருக்கம் திருப்பராய்த்துறையில் தான் எழுந்தது.

dsc00665-23

இப்படி ஒரு கோவிலை இத்தனை நாள் தரிசிக்காமல் எப்படி இருந்தோம் என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொண்டோம். என்ன செய்ய ஆன்மீகத்தில் இந்த குழந்தைக்கு வயது ஐந்து தானே. இன்னும் நிறைய பார்க்கவேண்டியிருக்கிறதே என்று தேற்றிக்கொண்டோம்.

Exif_JPEG_420கோபுரத்தை பார்த்து கையெடுத்து வணங்கி, பின் ஒவ்வொரு வாயிலாக ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி சென்றோம். இங்கு யாரையும் நமக்கு தெரியாது. “நீ தான் முன் சென்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித் தரவேண்டும்….” என்று பராய்த்துறைநாதரிடம் பிரார்த்தித்தபடி தான் சென்றோம்.

முன் மண்டபத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரின் தத்ரூப திருவுருவச் சிலைகள் உண்டு. பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.

(சென்ற திங்கள் துலா ஸ்நானத்திற்கு சென்றிருந்த போது தாருகவனேஸ்வரரையும் பசும்பொன் மயிலாம்பிகையையும் தரிசித்துவிட்டு வரும்போது மண்டபத்தில் இருந்த சம்பந்தர் திருவுருவச் சிலையின் திருப்பாதத்தில் நமது பிரார்த்தனை கிளப் கோரிக்கைகளை வைத்து பிரார்த்தனை செய்தோம்.)

சம்பந்தர் திருப்பாதத்தில் நமது பிரார்த்தனைகள்!

நமது ஆலய தரிசனம் யாவும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆலய தரிசனம் அல்ல. செல்வது ஒரு தனி நபரும் அல்ல. ஒரு பத்திரிகை அலுவலகம். இது போன்ற ஆலயங்களுக்கு செல்ல முடியாத, நடைமுறை சிரமங்கள் மிக்க பல்வேறு வாசக வாசகியரின் சார்பாக ஆத்மார்த்தமாக செய்யப்படும் ஒரு தரிசனம். எனவே தான் யாரையும் நமக்கு தெரியாத போதும் ஈஸ்வரன் அனைத்தையும் இலகுவாக்கி பின் தரிசன அனுபவத்தையும் சிறப்பாக தருகிறான். எனவே இந்த ஆலய தரிசனங்கள் அற்புதமாக அமைய காரணம் அடியேன் அல்ல. இது போன்ற பதிவுகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நீங்கள் தான். உங்களை மகிழ்விக்கவே ஈசன் இந்த எளியோனை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான். அது தான் உண்மை.

dsc00665-23

திருப்பராய்த்துறையின் தல வரலாற்றையும், ஆலய அமைப்பையும் பார்ப்போம்…

கங்கையை விடப் புனிதமானது என்று போற்றப்படும் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ளது திருப்பராய்த்துறை. திருச்சியிலிருந்து கரூர், குளித்தலை செல்லும் சாலையில், 16 ஆவது கிலோ மீட்டரில் உள்ளது இத்தலம். அருள்மிகு பராய்த்துறை நாதர் திருக்கோயிலுக்கு அருகில் காவிரி அகண்ட காவிரியாக ஓடுகிறது. இவ்வூரையடுத்த முக்கொம்பில் மூன்றாகப் பிரிந்து செல்கிறது.

dsc00773

dsc00825பாடல் பெற்ற திருத்தலம்

காவிரியாற்றின் தென் கரையில் உள்ள பாடல் பெற்ற 127 சிவத்தலங்களில் திருப்பராய்த்துறை குறிப்பிடத்தக்க திருத்தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியிருக்கின்றனர். திருவருட்பாவில் இராமலிங்க வள்ளலார் திருப்பராய்துறையைக் குறிப்பிடுகிறார்.

தல விருட்சம் – பராய் மரம்

பராய்த்துறை – பெயர்க்காரணம்

பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதாலும், காவிரித் துறையில் இருப்பதாலும் பராய்த்துறை எனப் பெயர் பெற்றது. வேதநெறி, மிகு சைவத் துறையில் தழைத் தோங்குவது போலச் சிவநெறி காவிரித் துறையில் செழித் தோங்குகிறது. இத்தலத்தில் பராய்மரமே தல விருட்சமாகும். பராய் மரப்பட்டைகள் மருந்தாகப் பயன்படுபவை. இவற்றை மஞ்சளொடு சேர்த்து அரைத்துத் தோல் நோய் உள்ள இடங்களில் பூசினால் நோய் தீர்ப்பார். பராய் மரப்பட்டையும் நோய் தீர்க்கும். பராய் மரம் வடமொழியில் ‘தாருகா விருட்சம்’ எனப்படுவதால் இத்தலம் ‘தாருகா வனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பரிகாரத் தலங்களை தரிசிப்பது தான் விசேஷம் என்று நினைப்பது கூடாது. (இதுவும் ஒரு வகையில் தோல் நோய் உள்ளவர்களுக்கும், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கும் பரிகாரத் தலம் தான்). திருப்பராய்த்துறை போன்ற தேவாரப் பாடல் பெற்ற தலங்களை தரிசிப்பதும் கூட விசேஷம் தான். சாதாரண விசேஷம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அது. பாடல்பெற்ற தலமோ, வைப்புத் தலமோ, அல்லது தொன்மையான  தலமோ எப்படியிருப்பினும் சிவதரிசனம் மிகப் பெரிய பாக்கியங்களுள், வரங்களுள் ஒன்று என்பதை எந்நாளும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

dsc00854

தலவரலாறு

இத்தலத்தில் தவம் செய்த முனிவர்கள், கடவுளைப் பற்றிய சிந்தனையின்றிக் கடமை செய்வதே போதுமானது என்றெண்ணி வாழ்ந்தனர். இதனால் அகந்தை (ஆணவம்) வளர்ந்தது. இவர்களைத் தடுத்தாட்கொள்ள நினைத்த சிவபெருமான், பேரழகுப் பிழம்பாகப் பிச்சை ஏற்கும் பிட்சாடனக் கோலத்தில் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார். அன்புப் பிச்சை ஏற்று அருட்பிச்சை போடும் அப்பனை முனிவர்கள் உணரவில்லை.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே

என்ற திருமந்திரக் கருத்துப்படி, வாயிலில் நிற்கும் இறைவனைக் கலந்தறியும்பேறு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

முனிவர்களின் மனைவிமார் இறைவனுடைய பிட்சாடனக் கோலத்தில் மயங்கினர். தன்னை மறந்து தன் நாமம் கேட்டுத் தலைவன் பின்னால் செல்லத் தொடங்கினார். இதையறிந்த முனிவர்கள் பிட்சாடன மூர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகம் செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். அவர் புலியைக் கொண்டு புலித்தோலை ஆடையாகக் கட்டிக் கொண்டார். அவருடைய பொன்னார் திருமேனிக்குப் புலித்தோல் ஆடை மிகப் பொருத்தமாக இருந்தது. மானை ஏவினர். இறைவன் அதை அடக்கி இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். பெண் மானாகிய உமாதேவிக்கு இடம் கொடுத்தவர் இந்த மானுக்கும் இடம் கொடுத்தார். முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றைத் தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும் கழுத்திலும் ஏற்றுக் கொண்டார்.

dsc00774

dsc00776சிவபெருமான் திருவருளால் மயிலாகிய அம்பிகைக்கருகில் பாம்புகளும் இருக்கும் பக்குவம் பெற்றன. அதன் பின் முனிவர்கள் பூதகணங்களை ஏவினர். பெருமான் அவற்றைத் தன் படையில் சேர்த்துக் கொண்டார். காட்டில் தனியாக ஆடும் கடவுளோடு சேர்ந்து ஆடப் பூதங்களும் பழகிக் கொண்டன. இறுதியாக, மிகப் பெரிய யானையை ஏவி விட, இறைவன் அந்த யானையை உரித்துத் தோலைப் போர்த்திக் கொண்டு கரியுரி போர்த்த செஞ்சேவகனாகக் காட்சியளித்தார். பகையாக வந்தவை உறவாயின. யானையும் புலியும் எம்பெருமான் திருவடிப் பேறு பெற்றன. இதன் பிறகு முனிவர்கள் ஆணவம் அடங்கியது. பக்திக் கண்களால் பரமனைத் தேடினர். இறைவன் தாருகவனேஸ்வரராகக் காட்சியளித்தது தருக்குற்ற முனிவர் செருக்கை மாற்றித் தடுத்தாட்கொண்டார். இந்தத் தலத்தில் இது நிகழ்ந்தது.

dsc00874

பாடல் பெற்ற பராய் மரம்

சிவனை எழுதிப் பார்த்தது தேவாரம். சிவனே எழுதிப் பார்த்தது திருவாசகம். இந்த இரண்டிலும் பாடப்பெற்ற திருத்தலம் திருப்பராய்த்துறை.

பராய்த்துறை நாதர் பாடல் பெற்றவர். இது வியப்பில்லை. ஆனால் அந்தப் பராய் மரப் பட்டையும் திருவாசகப் பாடல் பெற்றது என்பது மிகச் சிறப்பல்லவா?

dsc00832

திருவாசகத்தில் செத்திலாப் பத்து என்ற தலைப்பில் நான்காவது பாடலில் இறைவனை நோக்கி மணிவாசகர் கேட்கிறார். திருப்பெருந்துறைப் பெருமானே! உன்னருள் பெறுவதற்காக அருந்தவம் புரியும் அன்பர்களும், நான்முகனும், திருமாலும், தீயிடைப்பட்ட மெழுகு போல, உன்னை நினைத்தும் உருகும் சான்றோர்களும் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு ஒன்றும் போதா என்னை ஆட்கொண்டாயே! இது என்ன விந்தை? என் மனம் பராய் மரக் கட்டைபோல் வலுவானது. என் கண் மரம் போன்றது. என் காது இரும்பை விட வலுவானது. தென்பராய்த்துறைப்! உன் செயல் வியக்கத் தக்கதல்லவா என்கிறார்.

அன்பர் ஆகிமற்று அருந்தவம் முயல்வார்
அயனும் மாலும் மற்று அழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்?
வன்பராய் முருடு ஒக்குமென் சிந்தை;
மரக்கண்; என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறையாய் சிவலோகா!
திருப்பெருந்துறை மேவிய சிவனே.

என்பது திருவாசகம். மரத்தையும் பாடி இடத்தையும் பாடுகிறார் மாணிக்கவாசகர். தென்பராய்த்துறை சிவலோகம் எனப் பொருள் கொள்ளுமாறு பாடி இருப்பது அறிந்து இன்புறத் தக்கது.

மயிலாய் இருக்கும் வளமுடை அன்னை

இத்தலத்தில் இறைவியின் திருநாமம் பசும்பொன் மயிலாம்பிகை என்பது. வடமொழியில் ”ஹேம வர்ணாம்பிகை” என்று அழைக்கப்படுகிறாள். ”கோலவியல் மயிலாயிருக்கும் இமயாசலத்திடை” என்ற அபிராமி அந்தாதியின் பாடல் பொருளாக, தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை எழுந்தருளிய இருக்கிறாள். மானைத் தாங்கிய பெருமான் இந்த மயிலைத் தாங்கி வளம் அருள்கிறார்.
ஆலயசிறப்பு

முன் மண்டப வாயிலில் சுதையால் ஆன ரிஷபாரூடர் அருள் பொழியும் முகத்தோடு காட்சியளிக்கிறார். உள்கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இடப்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. நந்தி மண்டபத்தில் உள்ள தூண்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் மூவர் திருவுருவங்களும் உள்ளன. திருப்பணி செய்யும் புண்ணியம் பெற்ற நாட்டுக் கோட்டைச் செட்டியாரின் திருமேனியும் உள்ளது. இவை பார்ப்பதற்கு தத்ரூபமாக உள்ளன. சம்பந்தப் பெருமானையும், திருநாவுக்கரசரையும் நேரில் பார்க்கமுடியவில்லையே, அக்காலத்தில் நாம் இல்லையே என்று ஏங்குபவர்கள் இதைப் பார்த்தால் அவர்களையே நேரில் பார்த்தது போல உணர்வார்கள்.

மூலவர் அழகான திருமேனியோடு கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி அளிக்கிறார். கோஷ்ட மூத்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் இலிங்கோற்பவர் இருக்க வேண்டிய இடத்தில் அர்தநாரீஸ்வரரும், நான்முகனும் காட்சி தருகின்றனர். சிங்கங்கள் தாங்கி நிற்கும் தூண்களும் கல்லாலான மரமும் அழகிய வேலைப் பாடமைந்தவை.

dsc00827

dsc00847உள் சுவற்றில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்துமூவர், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சலிங்கம், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலெட்சுமி, சண்முகர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களில் சனீஸ்வரர் மட்டும் காக்கை வாகனத்தோடு காட்சியளிக்கிறார். நடராசர் சந்நிதி சிறப்பாய் உள்ளது.

முதல் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு பழுது பார்த்தவர் கானாடுகாத்தான் வெ.வீர. நாகப்ப செட்டியார் ஆவார். இவர் நாட்டுக் கோட்டை நகரத்தார். இளையாற்றங்குடிக் கோயிலைச் சேர்ந்தவர். சுமார் ஆறாண்டுகள் திருப்பணி நடைபெற்றது. 3.12.1904ல் திருக்குட நன்னீராட்டுச் செய்யப்பட்டது. அவர் குடும்பத்தார் வெளி ராஜகோபுரம், மதில்சுவர்கள், திருக்குளம், நூற்றுக்கால் மண்டபம் ஆகியவற்றைப் புதுப்பித்து மீண்டும் 26.5.1940ல் திருக்குட நன்னீராட்டுச் செய்தனர். பின்னர் 1988, 2013 ஆண்டுகளில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் செலவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

dsc00778

பூஜை முறைகளும் திருவிழாக்களும்

இத்தலத்துக்குரிய தீர்த்தம் காவிரி. காலையில் காவிரியிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்துடன் திருமஞ்சன பூஜை நடைபெறுகிறது.காமிகா ஆகம முறைப்படி நாடோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஆறாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் தீர்த்தவாரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

dsc00863

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் காலையில் கதிரவன் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. இது சூரிய வழிபாடு எனப்படுகிறது.

ஐப்பசி முதல் நாள் துலாஸ்நானத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இது ‘முதல் முழுக்கு’ எனப்படும் அதிகாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் அம்மையும் அப்பனும் எழுந்தருளித் திருவீதி உலாவாகக் காவிரிக்கு வந்து தீர்த்தம் கொடுப்பர். அஸ்திர தேவர் காவிரியில் திருமுழுக்காடுவார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடுவர். முதல் முழுக்குத் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு மயிலாடுதுறையிலும் சிறப்பானவை.

இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற திருத்தலம் இது. இறைவர் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கிறார்.

குளத்தில் இரையைப் போட்டதும் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், மிக வேகமாக ஒடி வருகின்றன. பக்தியும் சிரத்தையும். உடைய பக்தனிடம் இறைவன் மிக வேகமாக வருகிறான். நமக்காகக் காவிரிக்கரையில் பராய்த்துறைநாதர் காலங்காலமாகக் காத்திருக்கிறார். கண்டு வழிபட வேண்டாமா?

திருவானைக்காவல், திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, திருச்செந்துறை, திருப்பாச்சிலாச்சிரமம், திருவேதிக்குடி, திருஆலந்துறை ஆகிய ஏழு திருத்தலங்களும் சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவன் நம்மை ஏழு பிறவிகளிலும் காப்பாற்ற ஏழு திருத்தலங்களில் எளிமையாக விளங்கி நம்மை அழைக்கிறான். பாதக்கமலம் போக இறைவன் பாத கமலங்களைப் பற்றிக் கொள்வோம்.

முகவரி : அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி-கரூர் சாலை, திருப்பராய்த்துறை, திருச்சி – 639 115.

திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 – 11.30, மாலை 4.00 – 8.00

ஆலய ஊழியர்களை, அர்ச்சகரை கௌரவித்தது பற்றி பார்ப்போம்…

நாம் சென்ற நேரம் நடைசாத்தும் நேரம். இருப்பினும் குருக்கள் பொறுமையாக சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி இரண்டிலும் தரிசனம் செய்வித்தார். பின்னர் சென்னையிலிருந்து நாம் வந்திருக்கும் விபரத்தையும் நமது தளத்தை பற்றியும் அதன் பணிகள் பற்றியும் எடுத்துக்கூறினோம்.

dsc04494

சில நிமிடங்கள் நம்மிடம் பேசியதும் முழுமையாக நம்மை புரிந்துகொண்டார். (அனுபவம்!) இவர் பெயர் ஸ்ரீனிவாச குருக்கள். (சிவாலயத்தில் ஸ்ரீனிவாசன். அடடா…!)

நமது தளத்தின் பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட்டை கொடுத்து பராய்த்துறை நாதரின் பாதத்தில் வைத்துத் தரச் சொல்லி கேட்டுக்கொண்டோம். தொடர்ந்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களிலும் நமது நண்பர்கள் நலம்விரும்பிகள் சிலரது பெயர்களிலும் அர்ச்சனை செய்தோம். அடுத்து அம்பாள் பசும்பொன் மயிலாம்பிகையை தரிசித்தோம். இங்கும் பிரார்த்தனை பதிவு அம்பாள் பாதத்தில் வைக்கப்பட்டது.

dsc04497

பிரசாதத்தை கண்களில் ஒற்றி பெற்றுக்கொண்டோம்.

தொடர்ந்து ஆலயத்தில் பணிபுரியும் ராமச்சந்திரன் என்ற இளைஞரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராமச்சந்திரன் தான் ஸ்ரீனிவாச குருக்களுக்கு எல்லாமே. முன்பு குருக்களாக இருந்த ஒருவர் அயல்நாட்டில் குருக்கள் பணி கிடைத்து திடீரெனெ சென்றுவிட பராய்த்துறை நாதருக்கு நித்ய பூஜைகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது ராமச்சந்திரன் பெருமுயற்சி மேற்கொண்டு இவரை இந்த அருந்தொண்டுக்கு அழைத்து வந்தார். அவருக்கு தங்குவது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்து தனது தந்தையை போல பார்த்துக்கொள்கிறார்.

dsc04505

அடுத்தவர் பெரியவர் வீரமலை. கோவிலில் அர்ச்சனை டிக்கெட் கொடுப்பது முதல் எல்லாம் இவர் தான். மேலும் கோவிலின் மூத்த பணியாளர்.

மூவருடனும் திருப்பராய்த்துறை பற்றி கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பின்னர் நமது தளம் சார்பாக மூவரையும் கௌரவித்தோம். நல்லவேளை வஸ்த்திரம், துண்டு, இனிப்புக்கள் எல்லாம் இருந்தது. வெற்றிலை பாக்கு மற்றும் பழம் பூ உள்ளிட்ட தாம்பூலப் பொருட்களை மட்டும் வெளியே சென்று வாங்கி வந்தோம்.

“உங்கள் சிவத்தொண்டு மேன்மேலும் செம்மையடையவேண்டும். அடியேனையும் எம் நண்பர்களையும் வாசக அன்பர்களையும் ஆசீர்வதிகக்வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு,

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

பாடலைப் பாடி கௌரவித்தோம். தொடர்ந்து நமது தளத்தின் பிரார்த்தனை படத்தை ஆலயத்திற்கு பரிசளித்தோம்.

dsc00809

தொடர்ந்து மற்ற இருவரையும் தேவாரப் பாடல்கள் பாடி கௌரவித்தோம். அவர்களுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி…!

அவர்களை கௌரவிக்கும்போது “ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புப் நல்கி, ஆலயத்தின் பணிகள் செம்மையாக நடக்க உறுதுணையாக இருக்கவேண்டும். உங்கள் வீட்டைப் போல இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் உங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்வான். உங்களை தலைமுறை தழைக்கும். சிவத்தொண்டு என்றும் வீண்போகாது” என்று ஏதோ நமக்கு தெரிந்த சில நீதிகளை அவர்களுக்கு கூறினோம்.

அப்போது தான் மூவரும் நம்மிடம் கேட்டுக்கொண்டார்கள்… வரும் அக்டோபர் 17 ஐப்பசி முதல் நாள், துலா ஸ்நானம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலயத்தில் அது மிகவும் விசேஷம். நீங்கள் அவசியம் வந்து அதில் கலந்துகொள்ளவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார்கள்.

தொடர்ந்து ஆலயத்தின் நடைபெறும் அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். தமிழக அரசின் அன்னதான திட்டம் இங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

dsc00812

இங்கு பரிமாறியவர்கள் அன்பும் கலந்து பரிமாறி அதை அறுசுவை உணவாக்கிவிட்டார்கள். மறக்கமுடியாத அனுபவம். அடுத்த முறை செல்லும்போது நம் தளம் சார்பாக இங்கு சிறப்பு அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அனைவரிடமும் பிரியா விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

(துலா ஸ்நான அனுபவம் விரைவில்…!)

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

========================================================

Related posts…

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

Also Check :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

========================================================

[END]

5 thoughts on “திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

  1. அருமையான பதிவு ஜி!

    இப்போதே சென்று தரிசனம் செய்ய வேண்டும் போல் உள்ளது.

    அடுத்த முறை செல்லும்போது எங்களையும் அழைத்து செல்லுங்கள்.

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

  2. இப்பொழுதே திருப்பராய்த்துறை கோவிலுக்கு போக வேண்டும் என்கிற ஆவல் எழுகின்றது.

    அருமையான பதிவிற்கு நன்றி ஜி

    சிவ சிவ

  3. பதிவு மிக மிக அருமை. நேரில் கண்டது போன்ற உணர்வை கொடுத்துள்ளீர்கள். நன்றி சுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *