மண்ணில் நல்ல வண்ணம் வாழ, ஜென்மம் கடைத்தேற இது ஒன்றே போதும் என்கிற எண்ணம் சரியானதா?
உடலை தாக்கும் ஒரு நோய்க்கு எப்படி பலவித மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதோ அப்படித் தான் பிறவிப்பிணியை தீர்க்கவும் பலவித வழிகளை கையாளவேண்டும். திருமலை, திருவண்ணாமலை தரிசனம் ஒன்றே போதும் என்று கருதுவது தவறு. (நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்று ஏன் சொன்னார்கள் என்று சிலர் கேட்பது புரிகிறது. முக்தி என்பது இந்த பிறவி முடிந்தவுடன் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால், வாழ்க்கை என்பது இந்த உடலில் ஜீவனிருக்கும்பொது நாம் அனுபவிப்பது. எனவே நல்ல வாழ்க்கை வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பார்வையை சற்று விரிவுபடுத்தவேண்டும்!)
அந்தக் காலத்தில் திருமலை, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்கு ஷேத்ராடனங்கள் செல்லும்போது மாட்டுவண்டி கட்டிக்கொண்டோ பாதயாத்திரையாகவோ நாள்கணக்கில், வாரக்கணக்கில் செல்வார்கள். அப்படி செல்லும்போது நாமசங்கீர்த்தனம், பஜனை உள்ளிட்டவைகளை செய்துகொண்டே செல்வார்கள். மேலும் செல்லும் வழியில் உள்ள கோவில்களை எல்லாம் தரிசித்து தங்கி இளைப்பாறுவார்கள். ஒரு தலத்திற்கு புறப்பட்டால் நான்கைந்து தலங்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். எனவே அது ஒன்றே போதுமானது. நாமசங்கீர்த்தனத்தின் பலனோடு திருத்தல யாத்திரை பலனும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.
மேலும் அப்போதெல்லாம் கட்டண தரிசனம் போன்றவை நடைமுறைகளில் இல்லை. எல்லாருக்கும் பொதுவான தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருந்தது.
ஆனால், இன்றோ காலை கிளம்பி தரிசனம் முடித்து அன்று இரவுக்குள் வீடு திரும்பிவிடுகிறார்கள். பெரும்பாலானோர் தர்ம தரிசனத்திலும் நிற்பதில்லை. அதற்கு நேரமோ பொறுமையோ இருப்பதில்லை. கட்டண தரிசனத்தில் சென்று சுவாமியை பார்த்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது?
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்… உங்கள் பிரச்னைகள் தீர இது போதுமா?
திருமலை, திருவண்ணாமலை செல்வது மிகவும் அவசியம். அதே நேரம் இது தவிர ஆன்மீகத்தில் நம்மைச் சுற்றி மகத்தான விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதற்கும் உங்கள் நேரத்தை சற்று ஒதுக்குங்கள். அற்புதமான பல விஷயங்கள் உங்கள் கவனத்தை வேண்டி காத்திருக்கின்றன. (ஒவ்வொன்றாக அவற்றின் மீது உங்கள் கவனத்தை திருப்புவதே நம் நோக்கம். ஒரே பதிவில் அத்தனை விஷயத்தையும் திணிக்க முடியாது. எனவே ஒவ்வொன்றாக பதிவிடுகிறோம்.) ஆன்மீகத்தில் உங்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி நாமும் உயர்வதே நம் வேட்கை.
நவபக்திகளுள் முதன்மையானது எது தெரியுமா? சிரவண பக்தி. சிரவணம் என்றால் ‘கேட்டல்’ என்று பொருள். பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.
சிரவணத்தை பொருத்தவரை சொல்பவரைவிட கேட்பவருக்கே புண்ணியம் அதிகம்.
நாம் ஆலய தரிசனத்திற்கு எங்கேனும் சென்றால் அங்கே பக்தி சொற்பொழிவு நடைபெற்றுகொண்டிருந்தால் சுவாமியை தரிசிப்பதைவிட சொற்பொழிவை கேட்பதற்கே முக்கியத்துவம் கொடுப்போம். குறைந்தது ஒரு அரை மணிநேரமாவது அமர்ந்து சொற்பொழிவாளர் சொல்வதை கேட்போம். இறையருளை பெற இது மிக முக்கிய ஷார்ட் கட்களில் ஒன்று. “நம்மைப் பற்றி தானே பேசுகிறார்கள்… நாம் உட்கார்ந்து கேட்போம்” என்று கருதி சொற்பொழிவு நடக்கும் இடத்தில் இறைவன் முதல் ஆளாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பானாம்.
தினசரி பல கோவில்களில் சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் நடக்கின்றன. நவநாகரீக சென்னையிலேயே தினசரி குறைந்தது பத்து இடங்களில், கோவில்களில் சிறிதும் பெரிதுமான பக்தி சொற்பொழிவுகள் பல நடக்கின்றன என்றால் மதுரை, திருச்சி போன்ற ஊர்களை பற்றி சொல்லவேண்டுமா?
எனவே நேரமிருக்கும்போதெல்லாம் சொற்பொழிவுக்கு சென்று அமர்ந்து இறைவனின் பெருமையை கேளுங்கள். (செய்தித்தாள்களில் ‘இன்றைய நிகழ்சிகள்’ பகுதியில் இதுகுறித்த விபரங்கள் இடம்பெறுகின்றன.)
ஹரிகதை கேட்பது எத்தனை பெரிய புண்ணியம் தெரியுமா? அதுவும் தனது கடமைகளை சரிவர செய்துகொண்டு நேரமிருக்கும்போது ஹரிகதை கேட்பது என்றால் அதைவிட பெரிய விஷயம் வேறு ஒன்றுமில்லை.
இது பற்றி ஒரு அருமையான கதை உண்டு.
கங்காதேவி தவமிருந்து காத்திருந்தது யாருக்காக?
கங்கைக்கு சற்று தொலைவில் பிருஹத்தபா என்கிற ஞானி வாழ்ந்து வந்தார். தினசரி ஊராருக்கு ஹரிகதைகளை சொல்வது இவர் வழக்கம். அதே ஊரில் புண்ணியதாமா என்கிற ஏழை பிராம்மணர் ஒருவர் வசித்து வந்தார். பிருஹத்தபா சொல்லும் ஹரிகதைகளை நாள் தவறாமல் சென்று கேட்பது, அதிதிகள் யாரேனும் வந்தால் அவர்களை உபசரிப்பது இது தான் புண்ணியதாமவுக்கு தெரியும். வேறு எதுவும் தெரியாது.
கங்கைக்கு சமீபமாக வசித்தும் ஒரு நாள் கூட கங்கைக்கு சென்று அவர் நீராடியதில்லை. கங்கை எப்படி இருக்கும் என்று கூட அவருக்கு தெரியாது.
அது ஒரு மழைக்காலம். ஒரு நாள் காசிக்கு யாத்திரை செல்லும் இரண்டு யாத்ரீகர்கள் சற்று திடீர் மழையால் புண்ணியதாமாவின் குடிசையில் சற்று இளைப்பாறி, பசியாறி செல்லலாம் என்று கருதி அவர் குடிசையில் தங்கினர்.
புண்ணியதாமாவிடம் அவர்கள், “நாங்கள் உடுப்பியிலிருந்து வருகிறோம். கங்கையில் எப்போது நீராடி எங்கள் பாபங்களை தொலைப்போம் என்றிருக்கிறது. கங்கை இன்னும் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கிறது? அதில் தண்ணீர் எவ்வளவு போகிறது?” என்று கேட்டனர்.
திருதிருவென விழித்த புண்ணியதாமா, “கங்கையா? அது சரியாக இங்கிருந்து எத்தனை தூரத்தில் இருக்கிறதென்று எனக்கு தெரியாது. சில காத தூரம் என்பது மட்டும் தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் இங்கே தான் இருக்கிறேன். நான் அதில் இதுவரை நீராடியதுமில்லை!” என்றார்.
உடனே அதைக் கேட்டு முகம்சுளித்த யாத்ரீகர்கள், “அடப்பாவி… எங்கோ பல தூரதேசங்களில் இருந்தெல்லாம் வாழ்வில் ஒருமுறையேனும் கங்கையில் நீராடவேண்டும் என்று வருகின்றனர். நீயோ அதன் அருகில் இருந்தும் அதன் அருமை தெரியாமல் இருக்கிறாய். உன் வீட்டில் ஒதுங்கியதே பாவம். ” என்று கூறி புண்ணியதாமாவின் வீட்டிலிருந்து அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்.
ஆனால், இவர்கள் கங்கையை அடைந்து, அதில் நீராட முயன்றபோது இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இவர்கள் நீராட இறங்கிய இடத்தில் மட்டும் கங்கை சாக்கடை நீர் போன்று மாறி புழுக்கள் நெளிந்தது. மேலும் முடை நாற்றம் அடித்தது. சரி, வேறு இடத்தில குளிக்கலாம் என்று வேறு படித்துறைக்கு சென்றால் அங்கும் இதே தான். இவர்கள் காலை வைத்த அடுத்த நிமிடம் கங்கை நிறம் கருப்பாகி கழிவு நீர் போல மாறியது. இப்படியே இவர்கள் சென்ற இடமெல்லாம் கங்கை அசுத்தமாகி காட்சி தர… இவர்களுக்கு தாங்கள் ஏதோ குற்றம் செய்துவிட்டோம்… எனவே தான் கங்கா மாதா இப்படி நமக்கு காட்சி தருகிறாள் என்று உணர்ந்து, கண்களை மூடி கங்கா தேவியை “அம்மா… கங்கா மாதா, நாங்கள் ஏதேனும் அபச்சாரம் செய்திருந்தால் பொருத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள்.
அடுத்த நாடி அவர்கள் முன்னர் பிரத்யட்சமான கங்கா தேவி, “நீங்கள் மகா புண்ணியசாலியான புண்ணியதாமாவை நிந்தித்து விட்டீர்கள். அவரது பாதத்துளி என் மீது படாதா என்று நான் இங்கே தவம் செய்துகொண்டிருக்கிறேன். நீங்களோ அவரை நிந்தித்து என்னிடம் நீராட வந்திருக்கிறீர்கள். எங்கு ஹரி கதை நடக்கிறதோ, அங்கு எல்லாத் தீர்த்தங்களும் இருக்கின்றன. கோடி பிரம்மஹத்தி தோஷத்துக்குக்கூட பரிகாரம் உண்டு. ஆனால், ஆத்யந்த பக்தர்களை நிந்தனை செய்த பாவத்துக்கு பரிகாரமே கிடையாது. ஹரிகதை கேட்பதைப் போன்ற சிறந்த புண்ணியம் வேறு கிடையாது. ஆகவே, நீங்கள் அந்தப் புண்ணியதாமாவின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பைக் கோருங்கள். அதுவரையில் நான் உங்களுக்கு சுத்த கங்கையாக காட்சி தரமாட்டேன்’’ என்று கூறி மறைந்தாள்.
தங்கள் தவறை உணர்ந்த இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். புண்ணியதாமா, அவர்கள் இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று ஹரிகதைகள் கேட்கும்படியாக செய்தார். பின்னர் கங்கையில் நீராட இருவரும் சென்றனர். இம்முறை கங்கை மலர்களின் நறுமணத்தோடு பன்னீரில் குளிப்பது போன்று இவர்களை உணரச் செய்தாள்.
இதன்மூலம் ஹரிகதையை கேட்பது எத்தனை பெரிய புண்ணியம் என்பது விளங்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘சிரவண பக்தி’ என்று சொல்லப்படும், இறைவனின் பெருமைகளை கேட்டு பக்தி செய்துவரவேண்டும்.
=======================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
==========================================================
நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 25
பட்டுப் போன வாழ்க்கை பூத்துக் குலுங்க!
இந்தப் பதிவே ஒரு டிப்ஸ் தான். இருப்பினும் டிப்ஸுக்காக ஆவலோடு காத்திருப்பவர்களுக்காக ஒரு டிப்ஸ்.
‘பூர்ண ப்ரக்ஞர்’ என்ற பட்டம் பெற்ற ஒரு மகான், சங்கீதம் அறிந்தவர். இவர் ஹரிகதை சொல்லும் போது இவர் பாடி, பேசினால், மரங்கள் அதைக் கேட்டு பூத்துக் குலுங்குமாம். சிரவணத்தின் மகிமை அப்படிப்பட்டது.
பலவித பரிகாரங்கள் செய்தும் தங்கள் பிரச்சனைகள் தீரவில்லை – குறிப்பாக சந்தான பாக்கியம், தாரித்திர்ய நிவர்த்தி – என்று கருதுபவர்கள், கடமைகளுக்கு நேரம் ஒதுக்கியது போக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் (மனமிருந்தால் மார்க்கமுண்டு!) கோவில்களுக்கு சென்று சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் ஹரிகதை கேட்டுவந்தால் பிரமிக்கத்தக்க முன்னேற்றங்கள் வாழ்வில் ஏற்படும்.
மரங்களே ஹரிகதை கேட்டு பூத்துக் குலுங்கும்போது மனிதர்களின் வாழ்க்கை பூத்துக் குலுங்காதா என்ன?
வாழ்த்துகள்!
டிப்ஸ் தொடரும்…
============================================================
Also check…
ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!
நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!
தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்
யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!!
========================================================
[END]
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ‘அருமை’. யாரும் சிந்திக்காத கோணங்களில் எல்லாம் சிந்திக்கிறீர்கள்.
ஆன்மிகம் என்பது மிகப் பெரிய கடல். நீங்கள் சொல்வது போல, ஒரு சிலர் திருப்பதி, திருவண்ணாமளையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். நிச்சயம் அத்தகையவர்கள் மாறவேண்டும்.
நம் தளம் படிக்க ஆரம்பித்ததிலிருந்து நானும் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் ஏதேனும் கச்சேரியோ அல்லது சொற்பொழிவோ நடந்தால் அங்கு அமர்ந்து கேட்டுவிட்டு பிறகே சுவாமியை தரிசிக்க செல்கிறேன்.
இதே கோணத்தில் மேலும் பல பதிவுகளை எங்களுக்கு தந்து எங்களை பக்குவப்படுத்தவேண்டும்.
டிப்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ள மாமரம் பூத்துக்குலுங்கும் படம் அருமை. டிப்ஸ் வெகு அருமை.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சுந்தர் ஜி மிகவும் அருமயான கதை ஹரி கதை பற்றி தகவல் கிடைத்தால் சொல்லவும்
நன்றி .
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
ஹரி கதாகாலட்சேபம் கேட்பதால் உண்டான பலனை புன்னியதாமா கதை மூலம் விளக்கி பதிவை புண்ணியத்தன்மை வாய்ந்ததாக ஆக்கி விட்டீர்கள். மதுரையில் நான் மீனாக்ஷி அம்மன் கோவிலில் வாரியார் சுவாமிகளின் ஹரிகதா காலட்சேபம் கேட்டதை இப்பொழுது நினைவு கூறுகிறேன். கோவிலில் அடிக்கடி எதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும். சென்னைக்கு வந்த பிறகு அந்த பழக்கம் போய் விட்டது, இனிமேல் எங்கு நடந்தாலும் சென்று கேட்கிறேன். டிப்ஸ் மிகவும் அருமை. எங்கள் மனமும் மா மரம் போல பூத்து குலுங்குகிறது இந்த பதிவை படித்து