Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!

ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!

print
ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க. நிறைய வாத்தியாருங்க ஒரே நேரத்துல வந்திருந்து பாடம் எடுத்தாங்க. பல சந்தேகங்கள் தீர்ந்திச்சி. இது போல பாடம் அடிக்கடி நடந்துகிட்டு தானிருக்கு. ஆனா பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குறதுக்கு தான் நமக்கெல்லாம் நேரம் கிடைக்க மாட்டேங்குது. நமக்கு தினம் தினம் கிடைக்கும் அனுபவங்களே கூட ஒரு வகை பாடம் தான் என்றாலும் இது போல பெரியவங்க எடுக்கும் GUEST LECTURE களில் கலந்துகொள்ளும்போது தான் பல சந்தேகங்கள் போகுதுங்க.

நான் அப்படி சமீபத்தில் ஒதுங்கிய பள்ளி எது தெரியுமா?

‘மகா பெரியவா’ தொண்டர் திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் மகா பெரியா பற்றிய சொற்பொழிவு அடங்கிய இரண்டு சி.டி.க்களின் வெளியீட்டு விழா.

அதில் கலந்துகொள்ளும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அதை தான் பாடம், பள்ளிக்கூடம்னு சொல்றேன். காரணத்தை பதிவின் இறுதியில் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

வகுப்புக்கு முன் வகுப்பு என்பது போல, பாடத்துக்கு முன் மிகப் பெரிய பாடம் வேறு நடத்தப்பட்டது. மகா பெரியவா அவர்களின் மகிமைகளை பற்றி திரு.பி.சுவாமிநாதன் நிகழ்த்திய சொற்பொழிவு தான் அது. மகா பெரியவா அவர்கள் குறித்து திரு.சுவாமிநாதன் அடிக்கடி சொற்பொழிவு நிகழ்த்தி வந்தாலும் மகா பெரியவாவுக்கு உகந்த உரிய அனுஷ நட்சத்திரத்தன்று மேற்படி சொற்பொழிவு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட வாழ்க்கையில் எனக்கு நிகழும் அனுபவங்கள் குறித்து எனக்கு அவ்வப்போது சந்தேகம் வருவதுண்டு. ஏன் இப்படி? என்ன காரணம்? என்று யோசிப்பதுண்டு. சில சமயம் விடை கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. அப்படி என்னுள் நான் வைத்துக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கு அன்று பதில் கிடைத்தது என்று சொல்லலாம். எல்லாம் உண்மையில் மகா பெரியவாவின் அனுக்ரஹம்! சொற்பொழிவை தொடர்ந்து சி.டி.க்கள் வெளியீட்டு விழா வேறு ஏற்பாடு செய்திருந்தபடியால் அன்றைக்கு சொற்பொழிவை சற்று சீக்கிரமே ஆரம்பித்துவிட்டார் சுவாமிநாதன். ஆகையால் என்னால் சற்று தாமதமாக தான் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால் அதிலேயே பல  விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

அப்போது அவர் கூறிய கதைகளில் ஒன்றைத் தான் பிரார்த்தனை பதிவில் அளித்திருந்தேன். (http://rightmantra.com/?p=6796)

சொற்பொழிவு முடிந்தவுடன் சி.டி. வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மிகப் பெரிய பிரவாகங்களின் துவக்கம் எளிமையாகத் தான் இருக்கும்  நிகழ்ச்சி அத்துணை எளிமை. ஆனால்…. ஆராயும்போது புரியும் அதன் வலிமை.

கலந்துகொண்டு உரையாற்றிய சான்றோர்கள் அனைவரும் ஒருவரையொருவர் விஞ்சும் வண்ணம் அற்புதமாக பேசினார்கள்.

‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரும் திரு.சுவாமிநாதன் அவர்களின் துணைவியாருமான திருமதி.செல்லா சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வாழ்த்தி பேசிய கிருஷ்ண கான சபாவின் செயலாளர் திரு.ஒய்.பிரபு அவர்கள் பேசும்பொழுது:

“மகா பெரியவா அவர்களின் ‘தெய்வத்தின் குரல்’ நிகழ்ச்சியை திரு.கணேச சர்மா அவர்களை வைத்து இங்கு தான் முதன் முதலில் துவக்கினோம். தற்போது திரு.சுவாமிநாதன் அவர்களின் அனுஷ நட்சத்திர சொற்பொழிவை தொடர்ந்து இந்த குறுந்தகடு வெளியீட்டு விழாவும் இங்கு நடைபெற்று வருகிறது. அரங்கத்தின் பெயரும் ‘காமகோடி ஹால்’ என்று அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. திரு.சுவாமிநாதன் அவர்களை பொருத்தவரை அவரது எழுத்துக்கள் எதையும் EXAGGERATE செய்யாது AUTHENTIC காக இருக்கும். இப்போதெல்லாம் கச்சேரிகளுக்கு கூட கூட்டம் வருவதில்லை. ஆனால் இந்த சொற்பொழிவை கேட்க இந்த அரங்கமே நிறைந்திருப்பதை பார்க்கும்போது, மஹா பெரியவா அவர்கள் வந்திருக்கும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு வகையில் தனது மகிமையை வெளிப்படுத்தியிருப்பார் என்று தோன்றுகிறது. (கைதட்டல்!).

இங்கு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெரியவர்கள் அனைவரும் மேன்மை பெற்றவர்கள். குறிப்பாக ஏ.எம்.ஆர். அவர்கள். அவர் தொட்டது துலங்கும். அது மிகப் பெரிய சக்சஸ் தான். காஞ்சி மடத்தில் சொல்லி மகேந்திர மங்கலத்தில் நான் ஒரு கோவில் கட்டி வருகிறேன். அது கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய ப்ராஜக்ட். அது தொடர்பாக திரிசக்தியில் கூட சுவாமிநாதன் எழுதியிருக்கிறார். அது பற்றி குமுதம் ஜோதிடத்தில் செய்தியும் படமும் வெளியிட்டு கொஞ்சம் உதவுங்கள் என்று திரு.ஏ.எம்.ஆர். அவர்களை சந்தித்து கேட்டேன். அவர் எழுதினார். இன்று வரை காசோலைகள் வந்துகொண்டேயிருக்கிறது.திரு.சுவாமிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த குறுந்தகடை அனைவரும் வாங்கி கேட்டு பயன்பெறவேண்டும்.”

=====================================================

WHERE IS LADDU ?

அடுத்து வாழ்த்துரை வழங்கிய திரு.ஏ.எம்.ஆர். அவர்கள் பேசியதாவது :

“எல்லோருக்கும் என் பணிவான வணக்கங்கள். சில நிமிடங்கள் பேசினாலும் நெஞ்சை தொடும்படி பேச முடியும் என்பதை பிரபு பேசி காண்பித்துவிட்டார். ஏனெனில் அது ஹிருதயத்தில் இருந்து வருகிறது. இங்கு முதலில் பேசிய பிரபு, சாதரணமாக நிகழ்சிகளுக்கு இப்போதெல்லாம் கூட்டம் வருவதில்லை. ஆனா மஹா பெரியவா அவர்களை பற்றிய சொற்பொழிவை கேட்பதற்கு இத்தனை கூட்டம் வருகிறது என்று சொன்னார். எங்கெல்லாம் ராம நாமம் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேய சுவாமி வருவார். அது போல, எங்கெல்லாம் மகா பெரியவா அவர்களின் பெருமை பேசப்படுகிறதோ அங்கெல்லாம் கூட்டம் வருவதில் ஆச்சரியமென்ன? (கைதட்டல்!)

நாமெல்லாம் மிக மிக பாக்கியசாலிகள். புண்ணிய பூமியாம் பாரதத்தில் பிறக்க புண்ணியம் செய்திருக்கவேண்டும். மன்னர்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் உலகில் எந்த நாட்டிலும் இது போல மன்னர்கள் கிடையாது. ஒரு பசுமாட்டை (நந்தினியை) புலி அடித்து சாப்பிடப்போகிறது. திலீபன் இந்த நாட்டை ஆண்ட சக்கரவர்த்தி. “பசுவை விட்டுவிடு. என்னை வேண்டுமானால் சாப்பிடு” என்று தன்னுயிரை தியாகம் செய்ய முன்வருகிறான். இது போல ஒரு ராஜா, பிரான்ஸில் உண்டா? அமெரிக்காவில் உண்டா? ஜெர்மனியில் இருக்கமுடியுமா? அதனால் தான் இது புண்ணிய பூமி.

பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள்… ஒரு சாவித்திரி போல…  வேறு எந்த நாட்டிலோ ஒரு சீதையோ, ஒரு கண்ணகியோ உண்டா?  நளாயினியை போல வேறு எங்காவது உண்டா? எமன் கேட்க்கிறான் நளாயினியிடம் “பெண்ணே… உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று. அப்போது சொல்கிறாள்… “எனக்கு ஒன்றும் வேண்டாம். பார்வையற்ற என் மாமனாருக்கு கண் தெரிந்தால் போதும் என்று.” மறுபடியும் விடாமல் தொடர்ந்து போனான்… “இன்னொரு வரமும் கேள் தருகிறேன்” என்று கூறியபோது, “என் மாமனார் இழந்த ராஜ்ஜியம் அனைத்தையும் திரும்ப பெறவேண்டும்” என்றாள்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (குறள் 54)

பொருள் : இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

கணவன் குஷ்ட ரோகியாக இருந்தாலும் அவன் தான் தெய்வம்.

துறவிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஆதிசங்கரரிலிருந்து … எனக்கு வேண்டாம் உலக சுகம்… அவன் தான் வேண்டும் என்று சொன்ன துறவிகளை இங்கு தான் இந்த பாரத பூமியில் தான் பார்க்கமுடியும்.

மகாபெரியவா அவர்களை பற்றி பேசுவது, கேட்பது இவை அனைத்து மிகப் பெரிய புண்ணிய காரியங்கள். அவை நம்மை நல்வழிப்படுத்தும்.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்தில் நடைபெற்றது இது. திருப்பதி திருமலையில் இருந்து ஒரு முறை அவருக்கு பிரசாதம் வந்தது. அந்த பிரசாதத்தை தேவஸ்தான சிப்பந்தியிடம் இருந்து கண்களில் ஒற்றிக்கொண்டு வாங்கி தன் தலையில் வைத்து ஆராதித்தார்.

கோடி புஸ்தகங்கள் தர்ம நூல்களை படிக்கும் போது கிடைக்கும் விவேகத்தை மகான்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது நாம் பெறமுடியும். அதை நாம் கவனித்தாலே போதும்.

“சார்… நான் திருப்பதி போய்ட்டு வந்தேன்.”

“ஒ.கே. where is laddu?” என்று சீட்டில் உட்கார்ந்தபடியே கேட்கிறார்கள். எத்தனை அறியாமை… எவ்வளவு தவறு?”

“போனியே…எம்பெருமானை சேவிச்சியா ? என்ன கலர்ல பீதாம்பரம் உடுத்தி இருந்தார்? என்ன கிரீடம் அணிந்துகொண்டிருந்தார்? அதில் என்ன பதிக்கப்பட்டிருந்தது?” இதையெல்லாம் யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்களே…

எப்படி ஸ்ரீமன் நாராயாணனே இராமாவதாரம் எடுத்து எப்பேர்ப்பட்ட சோதனை வந்தபோது தர்மத்தினின்று வழுவாது பற்றி நின்று வாழ்ந்து காட்டினானோ அதே போன்று ஒரு மனிதன் ஏழையாகவோ பணக்காரனாகவோ யாராக இருந்தாலும் அவன் எப்படி வாழ வேண்டும் என்று மஹா பெரியவா வாழ்ந்து காட்டினார்.  அவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் 4 ஆம் இடத்தில் கேது. மிகப் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் அரசியல் தலைவர்கள் எல்லாம் அவர் காலில் விழுந்தார்கள். அவர் காலடியில் கிடந்தார்கள். ஆனால் அவருக்கு ஏதாவது சுகம் உண்டா?

நாம காலையில் சாப்பிடுறோம். மதியம் சாப்பிடுகிறோம். இரவு சாப்பிடுகிறோம். இடையிடையே கூட சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அவர் உபவாசம் இருந்த நாட்கள் எத்தனை எத்தனை ?

இப்பேர்ப்பட்ட ஒரு அவதார புருஷனை பற்றி திரு.சுவாமிநாதனும் அவருடைய திருமதியும் இணைந்து சி.டி.வெளியிட்டிருக்கிறார்கள். வாங்கி கேட்டு பயன்பெறுங்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தை படிக்கும்போது ஒரு நாள் கோபியர், “கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ?” என்று கேட்டார்களாம். ஆனால் கண்ணன் அங்கே தான் உட்கார்ந்திருக்கிறான். அது போல மகா பெரியவா பற்றி பேசுமிடத்தில், அவரை பற்றி சிரவணம் செய்யும் இடத்தில் அவர் நிச்சயம் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார் என்பது உறுதி. எல்லோருக்கும் என் நல்லாசிகள்.”

நிகழ்ச்சியில் திரு.ஏ.எம். ராஜகோபாலன் (ஆசிரியர், குமுதம் ஜோதிடம்), திரு.ஒய். பிரபு (ஸ்ரீகிருஷ்ண கான சபா), திரு.டெக்கான் மூர்த்தி (வாணி மஹால்), திரு.சுகி. சிவம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.முரளி, மகா அவதார் பாபாஜி பக்தர் திரு.பெங்களூரு ஹரி, திரு.இசைக்கவி ரமணன், திரு.கண்ணன் விக்கிரமன், ஜோதிடர் திரு.ஆதித்ய குருஜி, திரு.ஆர். தியாகராஜன் (ஓய்வு சீஃப் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்) உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவர்கள் தவிர, மகா பெரியவாளின் அத்யந்த பக்தகோடிகள் பலர் கலந்துகொண்டனர்.

(திரு.சுகி சிவம் அவர்களின் பேச்சு கீழே தனியாக பேப்பர் கட்டிங்கில் தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் ஏனையோர் பேசிய விபரம் இரண்டாம் பாகத்தில்  அளிக்கிறேன்.)

(Double click to ZOOM and again Click to Read the text)

=============================================
குரு மகிமை சொற்பொழிவு

நாளை வியாழக்கிழமை (26/09/2013) கடைசி குருவாரம், திரு.பி,சுவாமிநாதன் அவர்களின் குரு மகிமை சொற்பொழிவு உண்டு. கலந்துகொண்டு இருவினை  குருவின்  பெருமையை கேளுங்கள்!

இடம்: ஸ்ரீகிருஷ்ண கான சபா (காமகோடி ஹால்), தி.நகர், சென்னை-17. | நேரம்: மாலை 6.30 – 8.00
=============================================

தேடி வந்த மந்த்ராலய பிரசாதம்!

குருமார்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நேற்று முன்தினம், நம் நண்பர் ஹரிஹரன் (நமது உழவாரப்பணிகளில் இவர் கைங்கரியம் அளப்பரியது), “அண்ணா உங்களை நேர்ல பார்க்கணும். எப்போ எங்கே பார்க்கிறது? என்று கேட்டார்.

(நிகழ்ச்சியில் திரு.சுவாமிநாதன் அவர்களை நமது தளம் சார்பாக கௌரவித்தபோது!)

“என் அலுவலகம் அருகே, ஈவ்னிங்  TEA BREAK ல் சந்திப்போம் வாங்க!” என்றேன்.

சொன்னபடி வந்தார். வந்தவர் கைகளில் ஒரு பார்சலை கொடுத்தார். “என்ன இது?” என்றேன் ஆவலுடன்.

“நண்பர் ஒருத்தர் சண்டே மந்த்ராலயம் போய்ட்டு வந்தார். எனக்கு அட்சதையும் மந்த்ராலயத்தில் தரப்படும் கோவா போன்ற இனிப்பும் கொண்டு வந்து தந்தார். உங்க ஞாபகம் வந்தது. அதான் உங்களுக்கு கொடுக்க எடுத்துட்டு வந்தேன்!!” என்று கூற, எனக்கு திடுக்கிட்டது.

“என்னது  இராகவேந்திர ஸ்வாமிகளோட பிரசாதமா? இதை முதலிலேயே சொல்லியிருக்க கூடாதா? நான் பாட்டுக்கு செருப்பை போட்டுக்கிட்டு ஜஸ்ட் லைக் தட் வாங்கிட்டேனே…” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, அவரிடம் திருப்பி தந்துவிட்டேன்.

காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு விட்டு, சற்று தியானித்துவிட்டு இரு கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு பிறகு தான் வாங்கிக்கொண்டேன்.

(நன்றி : திரு.ஏ.எம்.ஆர். அவர்கள். கோவில் பிரசாதத்தை ஒருவர் தந்தால் எப்படி வாங்கவேண்டும், அவர்களிடம் என்ன பேசவேண்டும் என்று மேலே திரு.ஏ.எம்.ஆர். சொல்லியிருப்பதை கவனியுங்கள்!)

அடுத்து என் கைகளை பற்றிய ஹரி “ஆண்டு விழா செலவுக்கு இதை வெச்சிக்கோங்க” என்று கூறி ஒரு தொகையை அளிக்க…. அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி. ஏனெனில், விருது பெறுபவர்களுக்கு கொடுக்க ஷீல்டு ஆர்டர் தர அட்வான்ஸ் அளிக்க பணம் தேவைப்பட்டது. சரியான நேரத்தில் ஹரி பணம் தர, எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

“உங்களை நம்பி உங்களுக்காக ஒரு விழா” என்ற பதிவை போட்டிருப்பதாகவும், உடனே குருராஜர் உங்கள் மூலம் எனக்கு தன் பிரசாதத்தை கொடுத்தனுப்பிவிட்டார்” என்றும் கூறி நெகிழ்ந்தேன்.

“மந்த்ராலயத்திலே குடிகொண்டிருக்கும் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் இல்லந்தோறும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார்” என்று திரு.மானாமதுரை சேதுராமன் அவர்கள் அடிக்கடி சொற்பொழிவில் கூறியது நினைவுக்கு வந்தது.
============================================================

…TO BE CONTINUED IN PAR T 2

சுந்தரகாண்டம் UPDATE
(நீண்ட நாட்களாக சுந்தரகாண்டம் நூல் தொகுப்பை கேட்டிருந்த அனைவருக்கும் நேற்று அனுப்பியாகிவிட்டது. எவராவது விடுபட்டிருந்தால் நினைவூட்டவும். நன்றி.)

[END]

 

 

 

8 thoughts on “ரொம்ப நாள் கழிச்சி பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேங்க!

  1. இராகவேந்திர ஸ்வாமிகளோட பிரசாதம் தேடி வருதுன்னா சும்மாவா? சுந்தர் சார் நீங்க றொம்ப கொடுத்து வச்சவர் சார்….

  2. அன்புள்ள சுந்தர் சார், எனக்கும் ஒரு சுந்தர காண்ட நூல் தொகுப்பு அனுப்பி வையுங்கள் . நமஸ்காரம் .மோகன்

    1. உங்கள் விலாசத்தை மொபைல் என்னுடன் எனக்கு மின்னஞ்சல் (simplesundar@gmail.com, rightmantra@gmail.com) அனுப்பவும்.

  3. நான் usa விற்கு அனுப்ப சொல்லி மெயில் அனுபியிருந்தேன். எனக்கும் அனுப்பி உள்ளீர்களா? நன்றி, வள்ளி

  4. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்பதற்கு ஏற்ப நீங்கள்
    கலந்துகொண்ட இந்தஅருமையான நிகழ்ச்சியை எங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள் இந்த பதிவின் மூலம். மிக்க நன்றி .

    குரு ராகவேந்தரின் அருள் நம் தளத்துக்கு எப்போதும் போல் இப்போதும் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . வாழ்த்துக்கள்!

  5. இந்த பதிவு நேரில் நிகழ்ச்சியை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் அருமையான பதிவு. நாமும் சுந்தர காண்டம் கேட்டிருந்தோம். கையில் கிடைக்கப் பெறுவது இறைவனின் சித்தம்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *